Thursday, October 11, 2012

ஆபிதீன் கவிதைகள் : நான் பெய்த நாலு மூத்திரம்!

’ஒலஹ மஹா கவிஞர்’ தாஜுதீனின் வற்புறுத்தலுக்கு இணங்க உடன் வெளியிடுகிறேன்.  கிறுக்கல்களுக்கு அர்த்தம் சொன்னால் கிளுகிளுப்பாக உணர்வேன். - ஆபிதீன்

***


தாஜ் முன் குறிப்பு:

1987-ம் வருடம் பிறக்கிற தருணம்...
ஆபிதீன் சௌதி அல்-கோபரிலும்
நான் 'ரியாத்'திலும்
பஞ்சம் பிழைத்துக் கொண்டிருந்தோம்.
பிறக்கும் புத்தாண்டையொட்டி
நான் அவருக்கும், அவர் எனக்கும்
புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பி மகிழ்ந்தோம்.
இப்போதெல்லாம் புத்தாண்டுப் பிறப்பென்பது
எங்கள் இருவருக்கும்
இன்னொரு தினம் மட்டும்தான்!
ஏனாம் அப்படி?

ஆபிதீன் எனக்கு அனுப்பிவைத்த
1987-ம் வருடப் பிறப்பு வாழ்த்து அட்டையில்
இருந்ததுதான்...
அவரது இந்தக் கவிதைகள்.

என்னால் பத்திரப்படுத்தப்பட்ட
அந்தக் கவிதைகளை
வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

இதற்கு முன்
அவரது கவிதைகள் எதுவும்
வாசகர்களின் பார்வைக்கு வந்தது இல்லை.
ஏனெனில்...
அவர் கவிதைகள் எழுதுபவர் அல்ல.

இனியும் அவர் கவிதைகள் எழுதி
வாசகர்களின் பார்வைக்கு வைப்பார் என்பதற்கு
எந்த முகாந்திரமும் இல்லை.

கவிதைக்கும்/ கவிஞர்களுக்குமான எதிர் வரிசைக்கு
அவர் போய்
எத்தனையோ காலம் ஆகிவிட்டது.

அன்றைக்கு..
எனக்கு அனுப்பிவைத்த இக்கவிதைகளுக்கும் கூட
'நான் பெய்த நாலு மூத்திரம்....' என்பதாக
தலைப்பிட்டு அனுப்பி இருந்தார் என்றால்
பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஆக...
வாசர்களின் பார்வைக்கு வரும்
அவரின் கவிதைகள் என்கிற போது..
இதுவே
முதலும் கடைசியுமாக இருக்கும்!

-தாஜ்

***


ஆபிதீன் கவிதைகள்

நான் பெய்த நாலு மூத்திரம்

1. பாலையில் என் கவி

கானலும்
எண்ணெயும்
கண்டுணர் அசைவுடன்
திமிலுள்
நம்பிக்கை வைத்து
முளையில்லாக்
கூடாரம் தேடும்
அரிதான ஜீவனுக்கு
முண்டாசு கட்டினான்
பொருத்தம்
'தோப்' எனும் முழுமறைவே
என்றதாய்
பட்டது.
முறுக்கி வளர்த்தது பொசுங்கத்
தொடங்க
அந்திமத்துணி
எங்கும் கண்டானில்லை
இலக்கண நகர்
சுற்றி
திறந்த விண் துழாவி
ஒவ்வொரு
கல்லாய் நோக்கி
தன் உமிழும்
கண்கள் தீயும் வரை
முழுதும்
இலை மறந்து இலை மறைத்த
'ஷேக்'கின் கூட்டம்
காட்சியில் உறுதி கொண்டு
கனவானான் கவி
அச்சத்தோடு.
***

2. ஜீவன்

உயிர் தெறித்திடும்
புள்ளியோடு
முதல் அட்சரத்தை
ஆண்மைக்கு
வழங்கிய மாமறை
வழிவந்து
உறைந்த மனிதன்
கல்லெறிந்து
கௌரவப்படுத்துகையில்
அடிவாங்கி
புற்றில்
நுழையும்
என சர்ப்பம்
உறவைக் கொத்தி
மீட்டது
ஜீவன்.
***

3. பஞ்சம்

கரு
மேகத்தில் பொதித்த
கண் பிடுங்கி
மண்பூசி
நெஞ்சிலிட்டு வேதமதில்
ஒற்றினேன்
என்
நெற்றியை
வீறிற்று மூளை
பூமிப்பேய்
எப்போதும் தலைவிரிக்காது
பொருள் காக்கும்
ரகஸ்யத்தை - எனக்கும் கூட
அதுவரை
என் அரபி சகோதரன்
காறித் தரும்
அமிழ்தை
முகத்தில் ஏற்கலாம்
கைகட்டித்
தீ
மிதிக்க
திரும்புங்கால் எனை
விட்டுப்
பறப்பவற்றை விட்டு
விடுவேனோ?
அசைகிறது நீர்
விரிமண்
விளக்குமுன் வெளுத்து
முடிந்திடும்
அகம்.
***

4. தனியன்

எங்கும்
சுடுகிற இரவி
இடம்தேடி
அலைந்த
இருள்
என்னில் நுழைந்தது
தூரம் சொல்லி....



***

நன்றி (வேறு வழி?! ) : நண்பர் தாஜ்

5 comments:

  1. 4. தனியன்

    எங்கும்
    சுடுகிற இரவி
    இடம்தேடி
    அலைந்த
    இருள்
    என்னில் நுழைந்தது
    தூரம் சொல்லி....

    தகிக்கும் வெப்பமும், தாண்டி வந்த தூரமும் சொல்லி அடைக்கலம் கேட்ட இருளுக்கு இதயம் கொடுத்த பாரி வள்ளலாக கவிஞர் தன் uniqueness ஐ claim பன்னும் விதம் கவிதைக்கு பொய்யழகு என்ற விதத்தில் மாத்திரம் ஏற்றுக் கொள்ளலாம் கவிதையின் அழகுக்கு பரிசாய்.

    இருள் என்பது துன்பம், சோகம், தீமை, அறியாமை, பாவம், தன்னிரக்கம், அகம்பாவம், கர்வம், கஞ்சத்தனம் என்ற ஒட்டுமொத்த எதிர்மறைத் தன்மைகளின் குறீயீடு.

    வெளிச்சம் ஜன்னலின் வழியாக வந்தால். இருள் வாசல், கொள்ளை என இரண்டு பக்கங்கள் வழியாகவும் எல்லா உள்ளங்களிலும் நுழைந்து கொள்கிறது.

    தமிழகத்தை விட மோசமாய் எப்போதும் கரண்ட் கட்டுடன் அகவெளிச்சத்துக்காக முட்டை விளக்கை நம்பியிருக்கும் கோடானு கோடி ஜனதிரளில் ஒட்டு மொத்த குத்தகைக்கு ஒருவர் மட்டும் உரிமை கொண்டாடவது தன்னிரக்கத்தின் மிகைப்பால் விளைந்த கவிதைப் பொய்.

    நீங்கள் தனியன் அல்ல எங்களில் ஒருவர்.

    மற்ற கவிதைகள் பிரம்மராஜன், பிரமிள் லெவலுக்கு முயன்றிருப்பதால் விளக்கம் கவிஞர் தாஜால் தான் கொடுக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அமீன்பாய், தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். நான் கவிஞன் அல்ல. எப்போது கடிதம் போட்டாலும் திருகினாற்போல் எழுதும் தாஜின் எழுத்தைக் கிண்டல் செய்வதற்காக எழுதியவை அந்தக் ’கவிதைகள்’. அவ்வளவுதான். நன்றி.

      Delete
  2. ஆபிதீன்,
    ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் பக்கங்களுக்குப் போனால், ஏன் போனோம் என்றாகி விட்டது. நல்ல நாளும் பெருநாளுமாகப் பார்த்து, உன்னுடைய வம்புக்கெல்லாம் அஸ்மாவையும் கூட இழுப்பது அவ்வளவு நல்லதாகப் படல்ல. அஸ்மா மிகவும் பொறுமைசாலியான பொண்ணு என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டேன். புள்ளைகளும் மனைவியும் சேர்ந்து இன்னும் கொஞ்ச நாளில் என்ன பாடு படுத்துவார்களோ நான் அறியேன். கவிதை பற்றிச் சொல்ல எனக்கு ஒன்றும் தெரியாது. நல்ல கவிதையை படிக்க மட்டுந்தான் தெரியும். இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அல்லாவே, நல்லநாளும் பெருநாளுமா இத ஏன் படிச்சீங்க காக்கா? அஸ்மா ரொம்ப நல்ல பொண்ணாச்சே... தெரியாதா?! பெருநாள் வாழ்த்துகள். நாளை ஃபோன் செய்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

    தம்பி

    ReplyDelete