Tuesday, October 16, 2012

மனைவிகளுக்கு சம்பளம் கொடு! - துக்ளக் சத்யாவின் கெடு

இப்போதெல்லாம் அஸ்மாவை நான் வம்பிழுப்பதில்லையாம். நண்பர் தாஜ் ரொம்பவுமே கவலைப்படுகிறார். நெருங்கிய நண்பர்கள் என்றாலே அப்படித்தான்.  குடும்பம் குலைந்தால்தான் நிம்மதி! காரணம் எல்லாம் ஒன்றுமில்லை, 'என்னயப் பத்தி இன்னமே பேசுனீங்க.. பல்லைப் பேத்துப்புடுவேன்'  என்று பண்புடன் சொன்னாள் , மன்னிக்கவும் , சொன்னார் அஸ்மா. அவருடைய ’பாட்டுக்கு’ பிள்ளைகள் அனீகாவும் நதீமும் சேர்ந்து கோரஸ் வேறு கொடுக்கிறார்கள். அதனால்தான் தைரியமாக  வம்பிழுப்பதில்லை. போதுமா ? இந்த நிலைமையில் , மனைவிகளுக்கு சம்பளம் கொடுப்பது பற்றிய (யா அல்லாஹ்!)  ’துக்ளக் சத்யா’வின் தமாஷ் கட்டுரையை வேறு அனுப்பியிருக்கிறார் நண்பர். யோவ், முதல்ல எனக்கு மூணுமாசம் சம்பளம் கொடுக்கச் சொல்லுய்யா அரபிகிட்டே. அப்புறம் யோசிக்கலாம்.

சத்யாவின் கட்டுரைக்கு முன்னர்  சத்தியமாக தாஜ் பேசியதைப் படிக்கலாமா வேண்டாமா என்று வாசகர்கள்  ’கொஞ்சக்கோனு’ யோசியுங்கள். தங்கள் தங்கள் பேய்களிடம் - சே, ’சடார்’னு உண்மை தெறிச்சிடுது - பெண்டாட்டிகளிடம் அனுமதியும் வாங்கிக்கொள்ளுங்கள்.- 

ஆமா..., இந்த ஆண் ஏன் அடிமையானான்? (என்னமோ, முன்னாலெ சொதந்திரமா சூத்தகாட்டிக்கிட்டு இர்ந்த மாதிரி!)


நான் கொஞ்சம் பேசிவிடுகிறேன் - தாஜ்

 
'பெண்விடுதலை' வேண்டும் என்பதில் மனப்பூர்வமாக சம்மதம் கொள்பவன் நான். குறிப்பிட்டு சொல்லும் அளவில் இது பெரிய விசயமில்லை. 'பெண்ணியத்தை' வரவேற்கும் எத்தனையோ கோடிகளில் நானும் இருக்கிறேன் என்பதுதான் சரி. என்றாலும் இந்த மண்ணில் இந்த ஒப்புதல் விசயம் பெரிதான சங்கதியாகத்தான் பார்க்கப்படுகிறது. காலம் காலமாக நம் பெண்கள் இந்த மண்ணில் எதிர்கொள்ளும் சங்கடங்கள் கொஞ்சமல்ல. அதனை நம்மவர்கள் சற்று பின்நோக்கிப் போய், நடப்பு நிகழ்வுகளை ஆய்ந்தறிய முற்படுவதில்லை. பாரதியையும் பெரியாரையும் படித்ததினாலோ என்னவோ பெண்ணியம் குறித்து அப்படியோர் சிந்தையும், அப்படியோர் ஈடுபாடும் எனக்குள் துளிர்த்து தழைத்ததாகக் கருதுகிறேன்.

அந்தக் காலத்தில் பாரதி பேசிய பெண் விடுதலை சாதாரணமானது அல்ல. அவன் எவ்வளவோ பேசி இருக்கிறான். குறிப்பாய் அவனது பாஞ்சாலி சபதத்தை சொல்லலாம். பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' வாசிப்பவனின் முன் முடிவை மாற்றி கிளர்ச்சி கொள்ள வைக்கக் கூடியது. அதில் பேசப்படும் பெண்ணுரிமை வானளவியது! பாரதியின் பாஞ்சாலி சபதம் 'நவீன பாஞ்சாலி சபதமாகவே' பார்க்கப்படுகிறது கணிக்கவும் படுகிறது. இன்றைக்கு பாரதியின் 'நவீன பாஞ்சாலி சபதம்' மறைக்கப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் உணரக் கூடுமெனில்.., புராணகாலம் தொட்டு அது பேசும் பெண்ணுரிமையின் கீர்த்தியை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

பாஞ்சாலி சபதத்தில் கைவைத்து, மறுவுருவாக்கம் செய்ய, ஏக இந்தியாவில் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி; இன்னொருவர் இல்லை! அப்படி துணியவும் முடியாது. மதம் சார்ந்த, அதன் ஐதீகம் சார்ந்த அசடுகளை அசட்டை செய்தவனாக, பாரதி துணிந்து தன் கருத்துக்களை பதிவேற்றினான். அது போலவே, நம் மண்ணில் இருந்தபடி பெரியார் அளவில் 'பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்த இன்னொரு சமுகத் தலைவரை இந்தியா பூராவும் தேடி அலசினாலும் எவரொருவரும் கிடைக்கமாட்டார்! அவரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகத்தை வாசிப்பவர்களில் பலர், முதல் வாசிப்பில் உறைந்து போவார்கள் என்றால் நான் ஆச்சரியப் படமாட்டேன். பழைய மரபுசார்ந்த நம் சிந்தனைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி நொறுக்கிவிடும் அவரது அதிரடி கருத்துக்கள். இந்த இருவரின் மாபெரும் புரட்சி, தமிழ் மண்ணுக்கே சொந்தமானது.

பெண்ணியத்திற்கு எதிரானவர்கள் நம்மில் தாராளம். பழமைவாதிகள், மதவாதிகள், ஆதிக்கச் சக்திகள் என்று பலரும் இப்பட்டியலில் முதன்மை கொண்டவர்கள். பொதுவாக ஆண்கள் பலரிடம் பெண்ணிய எதிர்ப்புணர்வு அவர்கள் அறியாமலேயே வாழும். ஆனால், பத்திரிகைத் துறையில் பெண்ணியத்திற்கு எதிரான கருத்துக்கள் வருவதென்பது பரவலாக மிகக்குறைவு. பெண்களையும் பெண்ணியத்தையும் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள்.  குறைந்தபட்சம் வியாபார நோக்கை மனதில் கொண்டேனும் அவர்கள் பெரும் போக்காகவே நடந்து கொள்வார்கள். ஆனால், பத்திரிகையாளர்களுள் பெண்ணியத்தை எதிர்ப்பதில் நான் அறிந்து 'துக்ளக் சோ' மாதிரியான இன்னொரு பத்திரிகையாளரை கண்டதில்லை. அவரது பெண்ணிய எதிர்ப்பை விசாலமாக என்னால் காட்ட முடியும். குறிப்பாக சொல்லணும் என்றால்..., பாராளுமன்றத்தில் பெண்களுக்கு '33 சதவீதப் பங்கு' என்கிற குரல் பலமாக பாராளுமன்றத்தில் எழுந்த போது, அந்த பில் அங்கே பாஸாகிவிடக் கூடாது என்பதில் 'துக்ளக் சோ' காட்டிய வேகமும், தவிப்பும் அசாதரணமானது. அந்த அளவில் மாய்ந்து மாய்ந்து எழுதினார்.   

பெண்ணியத்திற்காக தமிழகத்தில் இருந்து பாரதியும் பெரியாரையும் கொடுத்த குரல், இந்திய அளவில் முக்கியம் வாய்ந்தமாதிரியே பெண்ணியத்திற்கு எதிராக தமிழகத்தில் இருந்து, பத்திரிகையாளர் சோ எழுப்பிய - எழுப்பிக் கொண்டிருக்கும் எழுத்தின் தாக்கம், இந்திய அளவில் எந்தவொரு பத்திரிகையாளரும் நிகழ்த்தாத ஒன்று. நம்பலாம்.

இந்தக் கட்டுரையில் ஒரு காரணம் தொட்டு, அது பற்றிய பெண்களின் மனநிலை இங்கே கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. 'துக்ளக் சத்யா' அப்படியொரு கிண்டலும் கேலியாகவும் எழுதியிருக்கிறார். அவரது பல கட்டுரைகளை படித்து ரசித்து சிரித்தது மாதிரியே இதனையும் அனுபவித்தேன். பெண்ணியத்தையும், பெண்விடுதலையையும் வரவேற்கும் நான்தான், பெண்களைக் குறித்த இந்தக் கேலியும் கிண்டலுமான இக்கட்டுரையையும் ரசித்து சிரித்தேன் என்பது உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாகத் தோன்றும்.

ஒரு காரணத்தை முன்வைத்து விமர்சன கண்ணோட்டத்தில் எழுதப்படுவது தவிர்க்க முடியாதது. அதில் சொல்லப்படும் காரணம் சரி என்றால் அதை மறுக்கவும் முடியாது. நானே என் எழுத்தில் பல இடங்களில், தக்க காரணம் பொருட்டு பெண்களை விமர்சனத்திற்கு உட்படுத்தி இருக்கிறேன். அந்த விமர்சனத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் கூட பஞ்சம் இருந்ததில்லை. என்னைவிட 'நம்ம தலைவர்' ஆபிதீன் இன்னும் கெட்டி! அவரிடம் கிண்டலும் கேலியும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். ஆனால், அது சற்றைக்கு வித்தியாசப்பட்டது. மனைவியை வம்புக்கு இழுப்பது. அவரது அந்த வம்பு, ஏனையோரின் மனைவிமார்களையும் நேர் நிறுத்திப் பார்ப்பது. கொறைச்ச காலமாக அது அவரிடம் மட்டுப்பட்டு இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.

பெண்களை விமர்சனமே வைக்கக்கூடாது என்று சூளுரைக்கிற ஏகப்பட்ட பெண் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். பெண்னென்றால் அவர்கள் தப்பே செய்யாதவர்கள் என்பது அவர்களது நிலைப்பாடு. இதற்கு, ஆனானப்பட்ட 'அம்பை'யும் விலக்கில்லை! திரு. ஜானகிராமன், தனது படைப்புகளில் பெண்கள் மீது வைத்த விமர்சனத்தை; அம்பையால் ஜீரணிக்க முடிந்ததில்லை என்பதை அறிவேன். எனக்குப் பிடிபடாத சில இலக்கியப் புதிர்களில் இதுவும் ஒன்று!   இறைவன் மீதே மேடை போட்டு விமர்சனம் வைக்கிற பூமி இது! இங்கே பெண் மட்டும் எப்படி தப்பிக்க முடியும்? பெண்ணியத்தை ஆதரிப்பதும், அவர்களது விடுதலைக்காக குரல் கொடுப்பதும் சரி என்பது மாதிரி, அவர்கள் மீதான... நியாயமான விமர்சனம் என்பதும் சரியே. இந்தக் கட்டுரையில் துக்ளக் சத்யா பெண்கள் மீது வைத்திருக்கும் விமர்சனத்தை அப்படியொரு சரியாகத்தான் பார்க்கிறேன்.

அவ்வளவுதான். இனி நீங்கள் சத்யாவை ரசிக்கலாம். முடிந்தால்... சிரிக்கவும் சிரிக்கலாம். தப்பே இல்லை.

-தாஜ்  

*

இது பெண்களின் பக்கம் [ஆண்களும் படிக்கலாம்]
சத்யா

(வீட்டில் வேலைகளைச் செய்யும் மனைவிக்கு, கணவன் கண்டிப்பாக சம்பளம் தர வேண்டும் எனச் சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய மகளிர் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு மாநில மகளிர் நலத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டம் இப்படி நடக்குமா?)

"மனைவிக்கு, கணவன் சம்பளம் கொடுக்கணும்ன்ற திட்டம், உலகத்திலே எந்த நாட்டுலேயும் இல்லை. நமக்குத்தான் இப்படி ஒரு யோசனை வந்திருக்குது. இதுதான் நம்ம கலாச்சாரத்தோட பெருமை. இச்சட்டத்தின் மூலம் பல லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் சம்பளமும் கிடைக்குது. இதை மேலும் செம்மைப்படுத்த உங்க கருத்துகளைச் சொல்லலாம்."

"இது சட்டப்படி, மனைவியின் சம்பளத்தை மனைவி நிர்ணயிக்கணுமா, கணவர் நிர்ணயிக்கணுமா?"

"இது பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விஷயமாச்சே, மனைவியே நிர்ணயிக்கலாம். இதுலே கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. கேக்கற சம்பளத்தைக் கொடுக்கிறது மட்டும்தான் கணவனோட வேலை."

"குடும்பத்திலே பெண்கள் படற கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. மெகா சீரியல் பார்த்து, முக்காவாசி நேரம் அழுதுகிட்டே வேலை பார்க்கிறாங்க, அந்தக் கஷ்டத்துக்கு வெறும் சம்பளம் மட்டும் எப்படிப் போதும்?"

"நிச்சயமாகப் போதாது. அதனாலே, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஓணம்... என்று பண்டிகைகள் வரும்போதெல்லாம் ரெண்டு மாச போனஸும் கொடுத்துடணும். அவ்வளவு வருமானம் இல்லையேன்னு புருஷன்காரன் நொண்டிச் சாக்கு சொல்லக் கூடாது. லோன் வாங்கியாவது மனைவிக்கு போனஸ் கொடுக்கணும்."

"கணவன் கொடுக்கிற சம்பளம் போதலைன்னா, தொழிற்சங்க விதிகளின்படி அதிகச் சம்பளம் கேட்டு போராட்டம் நடத்தவோ, ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுக்கவோ மனைவிக்கு உரிமை இருக்கணும் மேடம். அந்த மாதிரி சமயங்களிலே  அரசு தலையிட்டு, மனைவி பக்க நியாயத்தை கணவனுக்கு எடுத்துச் சொல்லணும்."

"வெரிகுட். சம்பளம் கொடுத்தாச்சுன்னு ஹஸ்பெண்ட் பொய்சொல்லி அரசையும் மனைவியையும் ஏமாத்திடலாம். அதனாலே சம்பளப் பட்டியல் தயாரிச்சு, ரெவின்யு ஸ்டாம்ப் ஒட்டி, மனைவியின் கையெழுத்தை வாங்க வேண்டியது கணவனோட கடமை. அரசு வருஷா வருஷம் குடும்ப இன்ஸ்பெக்சன் நடத்தி, ரிஜிஸ்டர்களைச் சரி பார்க்கும்."

"மேடம் எனக்கு ஒரு சந்தேகம். திடீர்னு மனைவிகள் சங்கம் உருவாகி, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வேணும்னு பெண்கள் போர்க் கொடி உயர்த்தினா என்ன பண்றது?"

"நியாயமான சந்தேகம். கலெக்டர் மனைவிக்குச் கிடைக்கிற சம்பளம் குப்பன் - சுப்பன்களின் மனைவிக்கும் கிடைக்கிறதுதான் சமூக நீதி, அதனாலே அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை அரசே 'மனைவிகள் சம்பள கமிஷன்' அமைத்து குறைந்தபட்ச சம்பளத்தைப் பரிந்துரைக்கும்."

"இன்னொரு முக்கியமான பாயிண்டும் இருக்கிறது மேடம். வீட்டு வேலை செய்ய முடியாத வயசான பெண்களின் உரிமையையும் நாம பாதுகாக்கணும். அப்படிப்பட்ட பெண்களுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டியதும் கணவனோட கடமை."

"மனைவிக்கு சம்பளம் கொடுக்கறதாலே, கணவன் - மனைவி உறவுக்குப் பதிலாக எம்ப்ளாயர் - எம்ப்ளாயீ உறவு மலர்ந்துட்டதா நினைச்சு கணவன் ஆட்டம் போட முடியாது. இந்த சட்டம் வந்தாலும், கணவன் மனைவி உறவிலே எந்த மாற்றமும் ஏற்படாதுன்னு புரிஞ்சுகிட்டு, கணவன் வழக்கம்போல அடக்கத்தோடுதான் நடந்துக்கணும்."

"கரெக்ட், கணவன் வருமானவரி கட்டும்போது மனைவியின் சம்பளத்தைக் கழிச்சுகிட்டு கணக்கு காட்டக் கூடாது. மனைவியின் சம்பளத்துக்கும் சேர்த்து கணவன்தான் வருமானவரி கட்டணும்."

"ஆண் வர்க்கப் பிரதிநிதி ஒருத்தர் எனக்கு லெட்டர் போட்டிருந்தார் மேடம். மனைவிக்குச் சம்பளம் கொடுக்கிறதாலே, வீட்டுலே மனைவி சாப்பிடற சாப்பாடு டிஃபனுக்கெல்லாம் மார்க்கெட் ரேட்லே பில் போட்டு, சம்பளத்திலேந்து கழிச்சுக்கலாமான்னு எழுதியிருக்கார்."

"நோ... நோ... மனைவிக்கு சாப்பாடு போட்டுக் காப்பாத்த வேண்டியது கணவனோட கடமை. ஆனா, குடும்பத்தைக் காப்பாத்த வேண்டியது மனைவியோட கடமை இல்லை. அதுக்கு உரிய சம்பளத்தை மனைவிக்குக் கொடுத்துடணும். அதான் சட்டம்."

"சில குடும்பங்களிலே பையனையும் பொண்ணையும் கடைகளுக்கு அனுப்பி வேலை வாங்கற வழக்கம் இருக்குது. எதிர்கால வாக்காளர்கள்தானேன்னு அலட்சியமா நினைக்காம, அவங்களுக்கும் தந்தையாகப்பட்டவர் சம்பளம் கொடுக்கணும்னு பரிந்துரைச்சா என்ன?"

"அது சரியா வராது. குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, குழந்தைகளைப் பெற்றோர் கடைகளுக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகள் சார்பா புகார் வந்தா, அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்."

"இன்னொரு பாயிண்ட். ஆபீஸ்கள்லே வேலை நேரம் பத்துலேர்ந்து அஞ்சு மணி வரைன்னு இருக்கிற மாதிரி, குடும்ப வேலை செய்யுற பெண்களுக்கும் டூட்டி டைம் நிர்ணயிக்கலாம். எட்டுமணி நேரத்துக்கு மேலே குடும்ப வேலை செய்யற அவல நிலை எந்த மனைவிக்கும் வரக் கூடாது."

"அப்படி வேலை செய்ய வேண்டிய அவசியம் வந்தா, ஓவர் டைம் சம்பளம் கொடுக்கணும். இதுக்காக ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஓவர் டைம் ரிஜிஸ்டர் பராமரிக்க வேண்டியது கணவனோட கடமை."

"குடும்ப வேலை செய்யற பெண்களுக்கு கண்டிப்பா லீவ் வேணும் மேடம். வருஷத்துக்கு 12 நாள் கேஷுவல் லீவ், பிராவிடண்ட் ஃபண்ட், வருஷா வருஷம் இன்கிரிமெண்ட், டி.ஏ. - எல்லாத்தையும் சட்டத்திலேயே குறிப்பிடலாம்."

"அது மட்டுமில்லை. அரசு விடுமுறை நாட்களிலே பெண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த நாட்களிளிலே கணவன்மார்கள் ஹோட்டல்லே சாப்பிட்டுட்டு, மனைவிக்கும் பார்சல் கொண்டு வந்துடணும்."

"சம்பளம் கொடுக்கிறோம்ங்கற ஆணவத்திலே, சமையல்லே இது சரியில்லை, அது சரியில்லைன்னு குற்றம் சொல்ல கணவனுக்கு உரிமை இல்லை. 'நீ கொடுக்கிற சம்பளத்துக்கு இதுக்கு மேலே சமைக்க முடியாது'ன்னு சொல்ற உரிமை மனைவிக்கு உண்டு."

"அரசியல்வாதிகள், தங்கள் மனைவிகளை ஏமாத்திடக் கூடிய அபாயத்தையும் நாம கவனிக்கணும். அவங்க வெறும் சம்பளம் மட்டும் கொடுத்துட்டு வீட்டு வேலையைச் செய்யும்படி மனையிடம் சொல்ல முடியாது. ஊழல் பணத்திலேயும் ஐம்பது சதவிகிதம் மனைவிக்கு கொடுத்தாகணும்."

"மேடம், பல குடும்பங்களிலே பெண்கள் வேலைக்குப் போயிட்டு, ஆண்கள் குடும்ப வேலையைக் கவனிக்கிறாங்களே. அந்தக் கணவன்களுக்கு மனைவி சம்பளம் கொடுக்கணுமா?"

"அது ஆண்கள் நலத் துறை எடுக்க வேண்டிய நடவடிக்கை. கணவன் - மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போற குடும்பங்களிலே, மனைவி தன் சம்பளத்தை தானே வெச்சுக்கலாம். புருஷன் மட்டும்தான் மனைவிக்கு சம்பளம் கொடுக்கணும்."

"இன்னொரு சந்தேகம். மனைவிக்கு கணவன் சம்பளம் கொடுக்கிறது சரி. ஆனா, கல்யாணம் ஆகாத மகள் வீட்டு வேலை செஞ்சா, அவளுக்கு யார் சம்பளம் கொடுக்கிறது?"

"பெண்ணுக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், அவளோட அப்பாதான் சம்பளம் கொடுக்கணும். முடியாதுன்னா அந்தப் பெண் வீட்டுலே எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் பேசும்போதே, அவளுக்கு புகுந்த வீட்டிலே மாசம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு இரு வீட்டார் ஒப்பந்தம் போட்டு சப்-ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்லே பதிவு பண்ணிடணும்."

"பெண்ணுக்கு கல்யாணம் பண்ணும்போதோ, பையனை காலேஜ்லே சேர்க்கும்போதோ, மனைவிதான் நம்ம கிட்ட சம்பளம் வாங்கிறாளேன்னு அவளோட உதவியைக் கேட்டு கணவன் கொடுமைப்படுத்த கூடாது. அந்த முழுச் செலவையும் கணவன்தான் ஏத்துக்கணும்."

"சம்பளம் கொடுக்கிறதாலே, தான்தான் பாஸ்னு நினைச்சுக்கிட்டு, மனைவியை எந்தக் கணவனும் அதிகாரம் பண்ண முடியாது. அது ஈவ்டீஸிங் சட்டப்படி குற்றம். மனைவியை சம்பளம் பெறுகிற மேலதிகாரியாகத்தான் நினைக்கணும்னு சட்டம் தெளிவாச் சொல்லுது."  

"வீட்டுக்கு திடீர்னு விருந்தாளிகள் வந்தா, மனைவிக்கு கூடுதல் சம்பளம் தரணும். மனைவிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டா, மெடிக்கல் லீவ்லே அவங்களை உட்கார வெச்சுட்டு, கணவனே இலவசமா வீட்டு வேலை செய்யணும்."

"மனை டெலிஃபோன்லே மணிக்கணக்கா பேசினா, அந்தச் செலவை குரூரமா மனைவி சம்பளத்திலேர்ந்து கழிச்சுடக் கூடாது. அதுவும் வேலையின் ஒரு பகுதிதான். அந்தச் செலவை மேனேஜ்மெண்ட்டே அதாவது கணவனே ஏத்துக்கணும்."

"சட்டம் அருமையா வந்திருக்குது மேடம். எப்போதிருந்து இதை அமல்படுத்தறோம்?"

"மத்திய அரசு ஆட்சிக்கு வந்த மே 2009-லேர்ந்து முன் தேதியிட்டு அமல்படுத்தறதாலே, தேர்தலுக்கு முன்னாலே மனைவிக்கு கணவன் அரியர்ஸும் செட்டில் பண்ணிடனும்னு சட்டம் போடப் போறோம்."

"இந்தச் சட்டம் பார்லிமெண்டுலே எப்ப நிறைவேறும்?"

"இது மகளிர் விஷயமாச்சே! மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மாதிரிதான். அது நிறைவேறினதும், இதுவும் நிறைவேறிடும்."

***
நன்றி: சத்யா / துக்ளக் (26.9.2012)
தட்டச்சும் - வடிவமும்: தாஜ் (satajdeen@gmail.com )

**
மேலும் :
துக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்

No comments:

Post a Comment