Thursday, October 4, 2012

தாஸ்தாயெவ்ஸ்கியின் சூதாடி

நீங்கள் பாட்டுக்கு 'த்' & 'ட்' சேர்த்து 'சூதாடி'யைப் படித்துத் தொலையாதீர்கள். 'வார்த்தைகளின் சூதாடி' என்று நண்பர் காலபைரவன் அழைக்கும் தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை எங்கள் பொன்னான நேரத்தை இழந்தபிறகுதான் 'ஷார்ஜா ஷேக்'கிடமிருந்து வாங்க முடிந்தது. ஒரு ஃபோட்டோ அனுப்பச் சொன்னதற்கே நாளைக்கு நாளைக்கு என்று நாட்களைக் கடத்தும் சுறுசுறுப்பான 'ஷேக்'கிடம் இனி எதுவும் இழப்பதாக இல்லை. போகட்டும், கல்லூரிப் பருவத்தில் படித்த நாவல். ஆங்கிலத்தில் படித்ததால் அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது , அப்போது புரிந்ததுதான் சரியென்று. தமிழாக்கம் செய்திருப்பது யார் என்ற விபரத்தை சந்தியா பதிப்பகம் ஏனோ குறிப்பிடவில்லை. ஒருவேளை தாஸ்தாயெவ்ஸ்கி தமிழில்தான் இதை எழுதியிருப்பாரோ? இருக்கும். தாடி வைத்திருப்பதால் 'தாவா' செய்துவிடுவாரோ என்று பயம் வேண்டாம். படியுங்கள் கடைசிப்பகுதியை. நன்றி - ஆபிதீன்

**

சூதாடி - தாஸ்தாயெவ்ஸ்கி

... இவை யாவும் சொற்கள், வெறும் சொற்கள்! நமக்கு வேண்டியவை செயல்கள். ஸ்விட்ஜர்லாந்து இப்பொழுது எனக்கு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது! ஆனால் நாளைக்கு, ஓ நான் புறப்பட்டு அங்கே போக முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்! மீண்டும் உயிர் பெற்றெழுவேன், புதுப்பிறவி எடுப்பேன். அவர்களுக்கு காட்டியாக வேண்டும்.. இன்னமும் நான் மனிதன்தான் என்பதைப் பலீனா தெரிந்து கொள்ளட்டும். ஒன்றே ஒன்று மட்டும்தான் வேண்டும்... இன்று நேரமாகிவிட்டது. ஆனால் நாளைக்கு.. எனக்கு ஒரு முன்னுணர்வு ஏற்படுகிறது. ஆம், அப்படியின்றி வேறு எப்படியும் நிகழ முடியாது! இப்பொழுது என்னிடம் பதினைந்து லுயிதோர் இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் பதினைந்து கூல்டினுடன் தொடங்கியிருக்கிறேனே.. கவனமாய் ஆட்டத்தைத் தொடங்கினேன் என்றால்.. நான் சிறுபிள்ளை அல்லவே! நான் போண்டியான மனிதன்தான் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டேன்! ஆனால் - ஏன் நான் உயிர் பெற்றெழ முடியாது? என் வாழ்வில் ஒரேயொரு தடவையேனும் நான் எச்சரிக்கையுடன், பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நான் செய்ய வேண்டியது! ஒரேயொரு தரம் நான் உறுதியாக இருந்தால் போதும், ஒரே மணி நேரத்தில் என் எதிர்காலத்தை மாற்றிக் கொண்டு விடுவேன். பிரதானமானது நெஞ்சழுத்தம். ஏழு மாதங்களுக்கு முன்பு ருலெட்டன்பர்கில், இறுதிக்குலைவு ஏற்படுமுன் நடைபெற்றதை நான் நினைத்துப் பார்த்தாலே போதுமே.. ஓ, நெஞ்சு உறுதிக்கு அது எவ்வளவு சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு! நான் அனைத்தையும் இழந்துவிட்டேன், ஆம், அனைத்தையும்.. காஸினோவை விட்டுப் புறப்பட்டு வெளியே போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது என் மார்புக் கோட்டின் பையில் ஏதோ நகர்வது போல இருந்தது. இன்னும் என்னிடம் ஒரு கூல்டின் எஞ்சியிருந்தது என்பதைத் திடுமெனக் கண்டேன். 'இரவு சாப்பிடலாம், கவலை இல்லை' என்று என்னுள் கூறிக்கொண்டேன். ஆனால் நூறு அடி நடந்து செல்வதற்குள் என் எண்ணம் மாறிவிடவே, உடனே திரும்பினேன். அந்த ஒரு கூல்டின்னைக் 'குறைபாட்'டில் பணயமாய் வைத்தேன் (அப்பொழுது 'குறைபாட்'டில்தான் வைக்க வேண்டுமென்று தோன்றிற்று எனக்கு.) தாயகத்தையும் நண்பர்களையும் விட்டுப் பிரிந்து அந்நிய நாட்டில் தனியே இருக்கிறோம், அன்று இரவு சாப்பிட என்ன கிடைக்கும் என்பதுகூட தெரியாத நிலையில் இருந்து கொண்டு கையிலிருக்கும் கடைசி கூல்டினைப் பணயமாய் வைக்கிறோம் என்னும் அந்த உணர்வு இருக்கிறதே அதை என்னென்பது! நான் வெற்றி பெற்றேன். இருபது நிமிடங்களுக்குப் பிற்பாடு பாக்கெட்டில் நூற்றெழுபது கூல்டின்களுடன் காஸினோவிலிருந்து வெளியே சென்றேன். ஆம், உண்மை அது! கடைசியில் எஞ்சும் கூல்டினைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு! அப்பொழுது நான் தைரியமிழந்து இம்முயற்சியில் இறங்காது இருந்திருந்தால்...

நாளைக்கு, நாளைக்குப் பார்க்கலாம்!

**
நன்றி : சந்தியா பதிப்பகம், (முகமறியாத) மொழிபெயர்ப்பாளர் , நாவலை இழந்த சென்ஷி!

**
Image Courtesy : wikipedia (Portrait of Dostoyevsky in 1872 painted by Vasily Perov )
**

Bonus :


No comments:

Post a Comment