Friday, October 26, 2012

அக்னிப் பறவை - ஹமீது ஜாஃபரின் ஹாரிபிள் ஜோக்கோடு...

'ஒண்ணு அனுப்பியிக்கிறேன், பாருங்க' என்று நம்ம நானா சொன்னதும் மாணவி மலாலாவைச் சுட்ட தாலிபான் மடையர்களை வாரப்போகிறார் போலும் என்று நினைத்தேன். இல்லை, இது வேறு. நானா சமகாலத்தில் இல்லை. அந்தக்காலத்திற்கு போய்விட்டார், ஆபாசம் குறையாமல்.  திடீரென்று சம்பந்தமில்லாமல் வரும் அரபி மெஹ்மூது சொல்வதுபோல நீட்டி நீட்டிப் பார்த்தால் 'இவ்வளவுதான் உலகம்' என்று விளங்கிவிடுகிறது. ஆனாலும் ஆண்கள் சும்மா இருக்கிறார்களா? 'Scent of Women' சினிமாவில் அல்பசீனோ சொல்வான். ''Women! What can you say? Who made 'em? God must have been a fuckin' genius. The hair... They say the hair is everything, you know. Have you ever buried your nose in a mountain of curls... just wanted to go to sleep forever? Or lips... and when they touched, yours were like... that first swallow of wine... after you just crossed the desert. Tits. Hoo-ah! Big ones, little ones, nipples staring right out at ya, like secret searchlights. Mmm. Legs. I don't care if they're Greek columns... or secondhand Steinways. What's between 'em... passport to heaven. I need a drink. Yes, Mr Sims, there's only two syllables in this whole wide world worth hearing: pussy.'"

'அக்னிப் பறவை' என்று ஏன் தலைப்பு வைத்தார்? அடியேனுக்கு விளங்கவில்லை. இருக்கட்டும், 'ஆமீன்குல'க் குஞ்சுகளுக்கு ஹஜ்பெருநாள் பரிசாக அளிக்கிறேன் அவருடைய அனுபவங்களை. படிச்சிட்டு நல்லா உருட்டுங்க, தஸ்பீஹை! - ஆபிதீன்
***



அக்னிப் பறவை - மலரும் நினைவுகள்

ஹமீது ஜாஃபர்

தொழில் கல்வி படிச்சு முடிச்சாச்சு. அடுத்து என்ன? வேலை தேடும் படலம். 'கால் காசா இருந்தாலும் கவர்மெண்டு காசா இருக்கணுமாம்'. மத்ததெல்லாம் சிவகாசி காசு பாருங்க! இதுமட்டுமல்ல 'கப்பலுக்கு போற பரக்கத்து வேறெ எதுலையும் வாராது'. நம்ம ஜனங்க இருக்குது பாருங்க வாழவும் விடாது சாகவும் விடாது. அதுலெயும் ஸ்பெஷல் கிழவிமாருங்க. எதையாவது சொல்லி மனசை மழுங்கடிச்சுடுங்க. ஊர்லெ இருந்து கவுரவமா எதாவது ஒரு வேலை செஞ்சா.. 'இதுலென்ன பரக்கத்து வரப்போவுது?' கப்பலுக்குப் போற பரக்கத்து வெறே எதிலாவது வருமா? அதாவது சிங்கப்பூரோ மலேயாவோ போயி புலுக்கை வேலைப் பார்க்கணும். அப்படி பார்த்தா கவுரவம்.

ஒரு காலத்துலெ நாகப்பட்டினத் துறைமுகத்துலெ கப்பலை நிறுத்திக்கிட்டு "சிங்கப்பூர் மலாயா போறவங்கல்லாம் வரலாம்" னு மணி அடிச்சு கூப்பிட்டான். வூட்டுலெ சண்டைப் போட்டுக்கிட்டு அல்லது பொண்டாட்டி கொஞ்சம் திரும்பி படுத்தாலும் கோவிச்சுக்கிட்டு உடனே கப்பல் ஏறிடவேண்டியது, வெறும் பதினாறு ரூபாதானெ டிக்கட்டு, பாஸ்போர்ட்டு
மண்ணாங்கட்டி ஒண்ணும் கிடையாது. அந்த செழிப்பா இப்போதிருக்கு? பவுனு நாற்பதோ ஐம்பதோ வித்த காலம். கொஞ்ச காசு இருந்தா போதும், பை நெறைய சாமான் வாங்கிட்டு வந்தாலும் மிச்சக் காசு இருக்கும். ஆனால் இப்பொ பை நிறைய காசு கொண்டு போனால் கை நிறையக்கூட சாமான் வாங்க முடியலெ. இந்த வார்த்தயை எங்க பாட்டியாகூட அப்ப
சொன்னாக, கறி வீசை (1கி 400கிராம்) 8ரூபா வித்த காலத்துலெ விலை ஏறிப்போச்சு, வெள்ளைக்காரன் காலம் மாதிரி இல்லேன்னு சொல்லிக்கிட்டிருந்தாக.

படிச்சு முடிச்சுட்டு பார்க்காத பேப்பர் இல்லை, போடாத அப்ளிகேஷன் இல்லை. தினமும் போஸ்ட்மேன் குப்பண்ணனைப் பார்த்து "எதாச்சும் நமக்கு உண்டா?"ன்னு கேட்காத நாளுமில்லை கண்டாலே உதட்டைப் பிதுக்குவாரு. திடீரென்று ஒரு நாள் தினத்தந்தியிலெ முழுப்பக்க விளம்பரம், ஆவடி டேங்க் ஃபாக்டரியிலெ எல்லா கேட்டகிரிக்கும் வேலை காலி இருப்பதாக
விளம்பரம், நாங்க ஒரு செட்டா அப்ளிகேஷன் போட்டோம். எதிர்வீட்டு கூட்டாளிக்கு இண்டர்வியு வந்துச்சு நான் குப்பண்ணனைப் பார்த்து ஏங்கினதுதான் மிச்சம். அவரு என்னைப் பார்த்தாலெ "ஒன்னுல்லை தம்பின்னு" சொல்லிடுவாரு.

அதிர்ஷ்டம்னா சொல்லிக்கிட்டா வரும்? லூஸு மோகன் சொன்னமாதிரி அது இஷ்டத்துக்கு வர்ரதுக்குப் பேருதான் அதிர்ஷ்டம். அஷ்டலச்சுமியான அதிர்ஷடத்துக்கு என்னைக் கண்டா

பிடிக்கலைப் போலும். எதோ அட்ரஸ் மாறிப்போய் என்னிடம் வந்தாள் ஒரே ஒரு தபா. துபையிலெ, டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது குதிரைக் கொம்பா இருக்கிற காலத்திலெ(இப்பவும் அப்படித்தான்) ஒரே டெஸ்டில் லைசென்ஸ் எடுத்தேன். அவளை எப்பவும் கைலெ வச்சுக்கலாம்னு படாத பாடுபட்டேன். ஒனக்கு வேண்டியதெல்லாம் தாரேன், நீ சொல்றபடி நடக்கிறேன்,
உன் அடிமை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஊ...ஹும், எவனையோ தள்ளிக்கிட்டுப் போயிட்டா. இருபத்தொரு வருஷமா தேடிக்கிட்டு இருக்கேன். எங்கே இருக்காள்னே தெரியலெ.

நான் படுற பாட்டைப் பார்த்துட்டு வாப்பா திடீரென்று ஒரு நாள், "தம்பி, சர்ட்டிபிகேட்லாம் அட்டஸ்ட் பண்ணி வச்சிருக்கியா? இல்லைன்னா நம்ம அலாவுதீனிடம் அட்டஸ்ட் பண்ணிக்க" ன்னு ரொம்ப அக்கரையோடு சொன்னாஹ. அப்பவெல்லாம் போட்டோ காப்பி எல்லாம் கிடையாது ஈ அடிச்சான் காப்பி மாதிரி சர்ட்டிபிக்கேட்டை டைப் பண்ணி அதுலெ யாராவது ஒரு கெஜட்டட் ஆபிஸரிடம் கையெழுத்து வாங்கிட்டா போதும், அட்டஸ்ட் ஆயிடும்.

அலாவுதீன் மாமா, வாப்பாவோட க்ளாஸ் மெட், கூட்டாளி; உத்தியோகம் ஃபஸ்ட் கிளாஸ் மாஜிஸ்ட்ரேட். சைக்கிள்லெ லைட் இல்லாமெ போறது, டபுள்ஸ் போறது, இந்த மாதிரியான பெட்டி கேஸுக்கெல்லாம் அவர்தான் ஜட்ஜ். ஒரு தடவை 'போலிஸ்காரன் மகள்' செகண்டு ஷோ படம்  பார்க்கிறதுக்கு எங்க அஜரத்தை டபுள்ஸ் வச்சுக்கிட்டு லைட்டும் இல்லாமெ
வேகவேகமா சைக்கில்லெ போனபோது இருட்டுலெ ஒளிஞ்சுக்கிட்டிருந்த போலீஸ் எங்களைப் பிடிச்சுட்டான். நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். ஒண்ணு காசு கொடு இல்லைன்னா கேஸ் போடுவேன்னு ஒரே நிலையா நிண்டார். முடிவா கேஸ் போடுறதா இருந்தா போட்டுக்குங்க சார் ஆனா அங்கேயும் காசு கட்டமாட்டேன். மாமாதான் ஜட்ஜு அங்கே
பார்த்துக்கிறேண்டு தெளிவா சொன்னேன். "நீ ரொம்ப பேசுறே, டபுள் கேஸ் போடுறேன்" ன்னு எழுதிட்டார்.

கேஸு வர்ரதுக்கு மொதல் நாளே மாமாவிடம் விஷயத்தை சொல்லிட்டேன். ஏண்டா லைட்டில்லாமெ டபுள்ஸ் போனே? ன்னு சின்னதா கோவிச்சுக்கிட்டு கேஸன்னைக்கு கோர்ட்டுக்கு வராமெ இருந்திடாதே,  பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கிட்டுப் போனேன்னு மாத்திரம் அங்கே சொல்லு நான் பார்த்துக்கிறேன்" னு ஐடியா கொடுத்தாஹ. கோர்ட்டுலெ அஹ சொன்னது
மாதிரியே சொன்னேன். அவ்வளவுதான் போலிஸ்காரரை லெஃப்ட் ரைட்டுன்னு ஏறு ஏறினாஹ. வெளியே வந்த போலிஸ்காரர் "இனிமே துலுக்கப் பசங்களை புடிக்கமாட்டேன், போங்கதம்பி" அப்டீன்னார் என்னிடம் மறுவாதையா.

நாளைக்கு தஞ்சாவூர் போகணும் ரெடியா இருன்னு வாப்பா மொதல் நாளே சொன்னாஹ. எதோ வேலை செட்டப் பண்ணி வச்சுருக்காக என்கிற நெனப்புலெ நானும் இருந்த ஒரே பேண்டை தொவச்சு அயர்ன் பண்ணி இருக்கிற சர்ட்டிபிக்கேட் ஒரிஜினல் ப்ளஸ் அட்டஸ்ட்டட் காப்பி எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தி தயாரானேன். காலை ரயிலைப் புடிச்சுப் தஞ்சாவூர் போனது வேலைக்கல்ல, எம்ப்ளாய்மெண்டு எக்சேஞ்ச். எனக்கு "சீ" ன்னு போச்சு. சீதேவி வாப்பாவாச்செ, ஒன்னும் சொல்லாமெ பதிவு பண்ணிக்கிட்டு வந்தேன்.

சும்மா சொல்லப்டாது நம்ம காங்கிரஸ் கவர்மெண்டு என்னை மாதிரி குடிமகன் மேலே அக்கரையோடு போட்டத் திட்டத்தை நம்ம அண்ணா கவர்மெண்டு ஃபாலோ பண்ணியதால், பதிவுப் பண்ணி ரெண்டுமூணு மாசத்துலெ மஞ்சக்கொல்லை மகா புத்திரனான அடியேனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வந்துச்சு. NMEP டிப்பார்ட்மெண்டிலேந்து. NMEP ன்னா National Malaria Eradication Program அதாவது பூச்சி மருந்து அடிக்கிற யாவாரம், வீடுவீடாப் போய் மருந்தடிக்கிறது. அந்த ஏரியாவுலெ எல்லாத்தையும் தெரியும்கிறதாலே லோக்கல் ஆட்களை தேர்ந்தெடுத்து அந்த பொறுப்பை ஒப்படைப்பது அவங்க வழக்கம், அந்த வகையிலெ எனக்கு இந்த சான்ஸு வந்துச்சு. இது ஒன்னும் பெப்பர்மெண்ட்(பெர்மனண்ட்) வேலை கிடையாது. டெம்ப்ரவரிதான், தினக்கூலி, மருந்தடிக்க ரெண்டுபேர் நம்மகூட வருவாங்க, நாம வீட்லெ உள்ளவங்களிடம் கன்வின்ஸ் பண்ணி மருந்தடிக்க வைக்கணும்.  'நாளைக்கு கிடைக்கிற பலாப்பழத்துக்கு இன்னைக்கு கிடைச்ச கலாப்பழமே மேல்'னு இந்த புத்தி(ர) சிகாமணியும் வேலையை ஒப்புக்கொண்டான்.
ஆனால் நல்ல எக்பீரியன்ஸ் கெடச்சுது. சின்னபுள்ளையிலெப் பார்த்து வீட்டோட அடங்கி இருந்த சிறுசுகளை மறப்புக்கிடையிலெ பார்க்கும் வாய்ப்பு கெடச்சுது. அதைவிட சில பெருசுகளிடமிருந்து கெடச்ச அட்வைஸ், உம்மா..டி....! "ஏன் வாப்பா பயணம் போவாமெ இந்த வேலைக்கு வந்திருக்கே?" ன்னு செலதுகளும், "இதுக்கு வர்றதெவிட வயலுக்கு மருந்தடிச்சா இன்னு நல்ல காசு கிடைக்கும்"னு சில எடக்குப் புடுச்சதுகளும், "ஒனக்கு ஏம்பா இந்த வேலை"ன்னு சிலதுகள் சொன்ன பரிதாப வார்த்தைகளையும் கேட்கவேண்டியிருந்துச்சு. விதி.!

குலத்தொழில்னு அந்த காலத்துலெ ராஜாஜி சட்டம் கொண்டுவந்தாராம். அல்லாஹுத்தாலா ஏற்கனவே அந்த திட்டத்தைப் போட்டுட்டான் போலும். பாட்டனார், வாப்பா எல்லத்துக்கும் ரைஸ்மில் தொழில். அவங்க எல்லாம் மொதலாளியா இருந்தாங்க, எங்க வீட்டுக்கே மில்லுக்காரர் வீடுன்னுதான் பேரு. ஒரு நாள் குப்பண்ணன் என்னை தேடிப்பிடிச்சு "தம்பி இண்டர்வியூ
வந்திருக்குன்னு ஒரு கார்டை தந்தாரு. எப்பவோ பேப்பரைப் பார்த்து போட்ட அப்ளிகேஷனுக்கு அழைப்பு வந்திருக்கு.

மாடர்ன் ரைஸ்மில்லுக்கு மெஷின் ஆப்பரேட்டர் வேணும்னு ஒரே நேரத்தில் ரெண்டு விளம்பரம் வந்திருந்துச்சு. ஒண்ணு கல்லக்குறிச்சி இன்னொன்னு திருச்சி. ரெண்டுக்குமே அப்ளை பண்ணினேன். கல்லக்குறிச்சியிலிருந்து இண்டர்வியூ வந்திச்சு. அந்த ஊர் எங்கே இருக்குன்னே தெரியாது, கார்டை எடுத்துக்கிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் ஜீவராஜிடம் ஓடினேன். அவர்தான்
அப்பொ குரு, கூட்டாளி, அட்வைஸர் எல்லாம். பார்த்துவிட்டு போக ரூட் சொன்னார். ஆனால் ஜாக்கிரதை அது ஒரு மாதிரியான ஊர் என்றார் கூடவே.

மத்தியானம் இண்டர்வியூக்கு முதல் நாள் ராத்திரி மெட்ராஸ் மெயிலைப் பிடிச்சு சிதம்பரத்திலெ எறங்கி ஜீவராஜ் சாரோட மெஹ்ருபானி ரெக்கமண்டேஷன்லெ ஸ்டேஷன் ரிடையர் ரூமிலெ சின்ன தூக்கத்தைப் போட்டு அங்கேயே சின்ன குளியலையும் போட்டுட்டு மறு நாள் காலை விருத்தாச்சலம் பஸ்ஸை பிடித்து அங்கிருந்து உளுந்தூர்பேட்டை வழியா
கல்லக்குறிச்சியை அடைஞ்சேன்.

பஸ்ஸை விட்டு எறங்கியதும் மொதல்லெ கண்ணுலெ பட்டது AKT LODGE. பெரிய கொட்டை எழுத்துலெ லாட்ஜ்மேலே இருந்த போர்டு. மணி பத்தரையாயிடுச்சு. எங்கேயும் போவாமெ விசாரிச்சுக்கிட்டு மாடர்ன் ரைஸ் மில்லை அடஞ்சேன், பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்சதூரம்தான், எனக்கு முந்தியே அங்கே ஒரு கூட்டம் நின்னுக்கிட்டிருந்துச்சு. இண்ட்ரவியூ மதியம்
ரெண்டு மணிக்கு ஏகப்பட்ட நேரம் இருந்துச்சு, மில்லை ஒரு சுத்து சுத்திப்பார்த்துட்டு வயத்துக்கும் கொஞ்சம் இரை எடுத்துக்கிட்டு, ஒரு வேளை தங்குறதா இருந்தா லாட்ஜ் சரியாவருமான்னு விசாரிச்சப்பொ ஒரு மாதிரியா சொன்னாங்க, இருந்தாலும் ஒரு முடிவா இண்டர்வியூ அட்டண்டு பண்ணினேன். பத்து நிமிஷம்தான் "நீங்க போலாம் அழைப்பு வரும்"னு
சொன்னாங்க. எனக்கு முந்தி இண்டர்வியு அட்டண்டு பண்ணிப் போனவங்கள் சிலபேரிடம் என்ன கேட்கிறாங்கன்னு விசாரிச்சப்ப சர்ட்டிபிகேட்டைப் பார்த்தாங்கன்னாங்க, சிலர் மூஞ்சியெ தொங்கப்போட்டுக்கிட்டுப் போனாங்க. 'வந்தால் மாங்கா, போனால் கல்லு' என்கிற தத்துவத்துலெ தைரியத்தோடு இண்டர்வியு அண்டண்டு பண்ணிட்டு சின்ன நம்பிக்கையோடு பஸ்
ஸ்டாண்டு வந்தபோது திருச்சி பஸ் புறப்பட்டுக்கிட்டிருந்துச்சு அதுலெ ஏறி திருச்சி போனேன். அங்கேதானே நம்ம செட் ஜமால்லெ படிச்சிக்கிட்டிருந்தாங்க.

படிச்சதுதான் ஜமால், தங்கிருந்தது ஒண்ணு ஆரிய பவன் அப்புறம் பேர்ட்ஸ் லாட்ஜ். செம அரட்டைங்க. மறு நாள் திருச்சி மாடர்ன் ரைஸ்மில்லை தேடிப்பார்த்தா அது ரொம்ப தூரத்துலெ எங்கேயோ ஒரு கிராமத்துலெ இருக்கு. சரியா வராதுன்னு ஊருக்கு நடையெ கட்டி நேரா நம்ம ஜீவராஜ் சாரைப் பார்த்து விஷயத்தை சொன்னேன். "தம்பி, நீ பாஸாயிட்டே" ன்னார். அவர்

எந்த ஆங்கிள்லெ சென்னார்னு எனக்குத்தெரியாது, ஆனா குத்து மதிப்பா சொல்லே.குலத்தொழிலுக்கு ஆர்டர் வந்துடுச்சு. ஆர்டரை எடுத்துக்கிட்டு மறுபடியும் ஜீவராஜ் சார்கிட்டே...

"தம்பி, அது ஒரு மாதிரியான ஊருன்னு மொதல்லெ சொன்னேனே ஞாபகமிருக்கா?"

"ஆமா சார்."

"இப்பதான் நீ ஜாக்கிரதையா இருக்கனும். ஊரு புதுசு, நீ எள வட்டம், கேட்க யாருமில்லேன்னு ரிங் டென்னிஸ் வெளையாடிடாதே! நீ செய்யமாட்டே எனக்கு நம்பிக்கை இருக்கு

இருந்தாலும் சொல்லிவைக்கிறேன்".

"ஒரு மாசத்துக்கு லிமிட்டட் டிரஸ் எடுத்துக்க, காலையிலேயெ புறப்பட்டு போயிடு, போனதும் உடனே ரூம் பாரு, ஒடனே கிடைக்காதுதான், அங்கே வேலை செய்றவன் யாரையாச்சும் பிடிச்சு கூட தங்கிக்க. லாட்ஜுலெ தங்கிடாதே."

அவர் சொன்ன தீர்க்கதரிசனம், அங்கே வேலை பார்த்த ரெங்கபாஷ்யம் என்கிற தஞ்சாவூர்காரரைப் பிடிச்சு தங்கறதுக்கும் போஜனத்துக்கும் ஏற்பாடு செஞ்சுக்கிட்டேன். ரெண்டு நாள்லெ லாட்ஜைப் பத்திய விபரம் முழுசா கிடைச்சுது. அடுத்த பதினைஞ்சு நாள்லெ லாட்ஜோட ஐக்கியமாயிட்டேன்.

அதாவது அப்பதான் ரைஸ்மில் புதுசா ஸ்டார்ட் பண்ணுறாங்க. மெஷனரி எரக்சன் கமிஷனிங்கிற்காக வந்திருந்த என்ஜினியர் மாதவன் எனக்கு பழக்கமாயிட்டார். அவர் அந்த லாட்ஜிலெதான் தங்கிருந்தார். சாயந்திரம் என்னை அங்கே வர சொல்லிடுவார். மறு நாள் வேலையெப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவார். அப்புறம் என்னன்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்

எப்படி நிவர்த்திப் பண்ணுவது, மெஷினையே அலக்கலக்க பிரிச்சு எப்படி மாட்டுறது என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்பார். நல்ல மனுசன் மலையாளி, மெட்ராஸ் செட்டுல்டு.

சும்மா சொல்லப்டாது, நல்ல அருமையான லாட்ஜ். பொறக்கி எடுத்த மாதிரி பச்சைக் கிளிலேந்து பஞ்சவர்ன கிளி வரை, பொன்னாந்தட்டான், கொண்டலாத்தி, மஞ்சக்கொழுப்பான் இப்படி பல குஞ்சுக்குருவிகள். ஒன்னுரெண்டு கருங்குயில்கள் கூட இருந்துச்சு. சேலம் பெங்களூர் இப்படி நார்த்தர்ன் பார்ட்டுலேந்து வரும் குருவிக் கூட்டம் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு மெட்ராஸ் போயிடும், மெட்ராஸிலிருந்து வரும் மேப்படிக்கள் அதேமாதிரி ரெண்டு மூணு நாள் இருந்துட்டு பெங்களூர் ஏரியாவுக்குப் போயிடும். சுருக்கமா சொன்னா அது ட்ரான்ஸிட் ஹப்பு, ஃபாரீஸ்ட்டுக்கு சிங்கப்பூர் இருக்கிறமாதிரி, மிடிலீஸ்ட்டுக்கு துபை இருக்கிற மாதிரி மெட்ராஸ் பெங்களூருக்கு அது hub. எதுவுமே நிரந்திரம் கிடையாது. இதுக்கென்று தனி மாம்ஸ் குரூப் இருந்துச்சு.

குருவிகள்னா குருவிகள்தான் எதுவுமே சோடை கிடையாது, எல்லாம் தேங்காய்கீத்து. சுண்டுனா ரெத்தம் வருதோ இல்லையோ அகர்வால் கடை பாதாம் அல்வா மாதிரி கரைஞ்சிக்கிட்டு எறங்கும். அந்த கூட்டத்துலெ இந்த மனுசன் எப்படி தங்கிருக்கார்னு ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி சார் தங்கியிருக்கிங்கன்னு கேட்டேன். இப்ப பார்த்தில்ல நாம மறுநாள் வேலையைப் பத்தி டிஸ்கஸ் பண்ணும்போது ஒன்னுரெண்டு ஒரசிக்கிட்டிருந்துச்சே, இந்த ஒரசலோடு சரி தொல்லை கொடுக்காது நாம கூப்பிட்டாத்தான் வரும், மத்தபடி எந்த தொந்திரவும் கிடையாது அப்டீன்னார்.

"ஏன் சார் ரெய்டு...?"

"அது எப்பவாச்சும் நடக்கும், ராத்திரி புடிச்சுக்கிட்டுப் போனா காலையில் திரும்ப வந்துடும். AKT லாட்ஜோட மகிமை".

உண்மையும் அப்படித்தான். சங்கராபுரம் ரோட்டுலெ அஞ்சு நிமிஷ தூரத்துலெதான் போலிஸ் ஸ்டேஷன் இன்னும் பத்து தப்படித் தள்ளி கச்சேரி(கோர்ட்) இருக்கு. அவ்வளவு தூரத்துக்கு அதுக போவாது. ஒரு சில நேரங்கள்லெ மாம்ஸ்தான் கையிலெ டவலைப் போட்டு மறைச்சிக்கிட்டு வந்து நிப்பாங்க கூட ரெண்டு போலிஸ் செக்யூரிட்டி இருக்கும். இதெல்லாம்
ஏகேட்டியார் ஊர்லெ இல்லாத நேரத்துலெதான் நடக்கும்.

ஏ. கே. டி, ரொம்ப நல்ல மனுசன், பெரிய தரும பிரபு, ஏழைப் பங்காளன். ஏகேடி லாட்ஜ், ஏகேடி ரைஸ் மில், ஏகேடி தாணிய மண்டி இப்படி பல தொழில்கள், ஏகப்பட்ட நெல் கரும்பு விவசாய நிலங்கள். அப்போதே அவர் கோடீஸ்வரர். ஆனாலும் ரொம்ப சிம்பிள். எளிமையான வாழ்க்கை. சாயந்திர நேரத்துலெ லாட்ஜுக்கு எதிர்தார்போல் சங்கராபுரம் ரோட்டுலெ இருக்கிற தாணிய மண்டி வாசல்லெ பழைய கயத்துக்கட்டில்லெ உட்கார்ந்திருப்பார். மேலே போட்டிருக்கிற பணியன் கிழிஞ்சிருக்கும், வேஸ்டிகூட அங்கங்கே ஓட்டை இருக்கும். ஒரு முசாபர் மாதிரி உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பார். அவரை சுற்றி எடுபிடிகள் நிக்கும் அவங்கல்லாம் நல்ல சட்டைப் போட்டு நீட்டா இருப்பாங்க. ஐயான்னு யாரும் வந்தா தர்மம் பண்ணிக்கிட்டுதான் இருப்பாரு, நெறைய தர்மம் பண்ணுவாருன்னு சொல்லுவாங்க. அவருடைய கார்லேந்து, டிராக்டர், மில், லாட்ஜ், வீடு இப்படி எல்லா வஸ்துக்களும் ஒரே கலர். ஆரஞ்சு
கலர்லெதான் இருக்கும் அதான் அவரோட ஃபேவரிட் கலர்போலும், ஆனால் அவர் மட்டும் ஒயிட் அண்டு ஒயிட்லெதான் இருப்பாரு.

இது ஒரு பக்கம்னா நான் தங்கிருந்த இடம் வேறே மாதிரி. நல்ல ரூம்தான் ஆனால் பக்கத்துலேயெ ரெண்டு மூனு கெண்டைமீன் இருக்கத்தான் செய்தது. தூண்டிலே இல்லாமெ ஈசியா புடிக்கலாம். கடைசிவரை ஜீவராஜ் சாரோட நம்பிக்கைக்கு துரோகம் பண்ணக்கூடாதுன்னு ஒரு வைராக்கியம். ஊருக்குப் போனா குறிப்பா கேப்பாரு. ஏன்னா வயசு அந்தமாதிரி பருவம்.
இருபது வயசு. சும்மாவா சொன்னான் அரபி?

துபையிலெ என்கூட வேலை செஞ்ச அரபி,  மெஹ்மூது ஒரு மூடுலெ சொன்னான், "என் பொண்டாட்டி தொல்லை தாங்கமுடியலெ". செலவு நெறைய வைக்கிறாள்போலும்னு

நெனைச்சேன். அதல்லவாம் சதா ஊறல் போட்டுக்கிட்டே இருக்கணுமாம். "என்னாலெ முடியலெ" அப்டீன்னான்.

"ஏன் மெஹ்மூது பாய் அப்படி சொல்றே?"

"எனக்கு வயசாயிடுச்சு."

"என்ன உனக்கு நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். வயசுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையே நீதான் நல்லா ஜவான் மாதிரி ஆரோக்கியமா இருக்கியே.."

"அதல்ல, உன் கையெ நீட்டு."

நீட்டினேன்.

"அஞ்சு வெரலையும் நல்லா விரி."

விரிச்சேன்.

"கையை படுக்கையில் வைக்காதே, இப்படி  நிமிர்த்தி வச்சுக்க" என்று திருப்பிவிட்டான்.


கட்டை விரலைப் பிடிச்சிக்கிட்டு "இது எங்கே பார்க்குது?"


"வானத்தைப் பார்க்குது."

"வானத்தையல்ல உன் முகத்தைப் பார்க்குதுன்னு சொல்லு, இது இருபது வயசு. ஆட்காட்டி வெரல்..?"

"மேலே பார்க்குது."

"தெளிவா சொல்லு."

"கொஞ்சம் சாஞ்சு வானத்தைப் பார்க்குது...."

"ம்...., இது முப்பது வயசு. நடுவுலெ இருக்கிற பெரிய விரலு...?

"உன்னைப் பார்க்குது.."

"இது நாற்பது வயசு. மோதிர விரலு...?"

'தூரத்துலெ வர்ற காரைப் பார்க்குது.."

"இது அம்பது வயசு. சுண்டு விரலு...?"

"தரையெப் பார்க்குது.."

"இது அறுபது வயசு.."

"இப்ப சொல்லு எனக்கு எவ்வளவு தாக்கத்து இருக்கும்னு.."

"அன மாஃபி கலாம். (என்னால் ஒன்னும் சொல்லமுடியாது) அப்டீன்னு சொல்லிட்டு சில பேருக்கு ஆறவது விரல் இருக்கே, அதுக்கு என்ன சொல்றே?"

"அது ஒன்னத்துக்கும் லாயக்கு படாது, எழுபது வயசு" அப்டீன்னு ஒரு போடுபோட்டான்.

"மெஹ்மூது பாய், சூ...ப்பர். லைஃப்லெ நிறைய கத்துக்கவேண்டியிருக்கு". இப்படி ஒரு உன்னதமான உதாரணத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை.

பக்கத்து வீட்டுலெ, இல்லை பக்கத்து ரூமிலெ ஆமாம் குறுக்கே ஒரு சுவர்தான், இரண்டு வீடு. கங்காராம் அதிபுத்திசாலி ஒரு வீட்டை ரெண்டா தடுத்து ரெண்டையும் வாடகைக்கு விட்டுட்டு கொல்லைப் பக்கம் ஒரு குடிசையைப் போட்டுக்கொண்டு அதுலே தங்கிக்கொண்டான். பீபி, புள்ளை கிடையாது. 

நாங்க ஒரு ரூம், செல்வியம்மா ஒரு ரூம் அதாவது வீடு வாடகைக்குப் புடிச்சிருந்தோம். செல்வியம்மா புள்ளைப் பெத்து கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் இருந்தாள், ரெண்டாவது பிரசவம். பக்கத்து வீட்டுக்காரியாச்சேன்னு நானும் ரூம்மேட் தமிழரசனும் ஆஸ்பத்திரிக்குப் போக புறப்பட்டபோது இவள் வீட்டுக்கு வந்துட்டாள். என்ன மறு நாளேன்னு கேட்டதுக்கு, "அந்த கசம்புடிச்ச ஆஸ்பத்திரியிலெ எவ இருப்பாள். குவாட்டர் பிராந்தியெ உள்ளே ஏத்தினேன். உடம்பு கல கலன்னு ஆயிடுச்சு, வந்துட்டேன்" என்றாள். புருஷன் பாவம்.. ஹோட்டல் வச்சிருந்தார் ராத்திரி வியாபாரம்தான் களளகட்டும். சேலம் ராசிபுரத்திலேந்து வரும் பால் வண்டிகள்(milk van) அத்தனைக்கும் கல்லக்குறிச்சிதான் ஸ்டாப் ஓவர். எல்லா டிரைவர்மாரும்
அவர் கடையிலெதான் சாப்பிடுவாங்க, அத்தனை டேஸ்ட். சாயந்திரம் ஆறு மணிக்குப் போனா மறு நாள் காலை எட்டு மணிக்குத்தான் வருவார். பகல் ராத்திரி எல்லாம் இந்த அம்மாவோட ராஜ்யம்தான். அது ஒரு டைப்பு.

தண்ணீர் ஊத்த வரும் சௌராஸ்ட்ர குட்டி வேறொரு மாதிரி... குளிக்கிற நேரம் பார்த்து தண்ணீர் கொண்டு வருவாள். கேட்டால் இப்பதானே முனிசிபாலிட்டி பைப்புலெ தண்ணி வருது என்பாள். அவளை சொல்லி குத்தமில்லை. நாமதான் குளிக்கிற டையத்தை மாத்திக்கணும். ஆனால் ரெண்டையுமே மாத்தமுடியாது. "எண்ணெய் தேச்சு குளிக்கிறதா இருந்தா சொல்லுங்க
நாலு கொடம் ஜாஸ்தியா ஊத்துறேன்." என்பாள். கொஞ்சம் விட்டா முதுகும் தேச்சு விடுவாள். அவள் கங்காராமுக்கு உறவு முறையா இருந்தாலும் மனுசன் கண்டுக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனா அவர் செக்யூரிட்டி மாதிரி.

என்ன செய்யிறது? கல்லக்குறிச்சி என்ன தென் ஆற்காடு மாவட்டமே வானம் பார்த்த பூமி, தண்ணீர் கிடையாது. கிணற்று நீர் பாசனம்தான் விவசாயம். பக்கத்துலெ கோமுகி ஆறு இருக்குது. இருந்து என்ன செய்ய? திட்டுத் திட்டா அங்கெங்கே கொஞ்சம் தண்ணி கிடக்கும். கொள்ளிடத்திலெயாவது ஒரு ஓரமா கோடு கிளிச்சது மாதிரி தண்ணி ஓட்டிக்கிட்டிருக்கும், இங்கே அதுவும் கிடையாது. ஏரி இருக்கு அதுலெ நீர்ப்பூசணி வெளைஞ்சிக்கிட்டிருக்கும். அதனாலெ குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை.

நாலு வீடு தள்ளி இருந்த பாலக்காட்டு ஐயர். ரொம்ப ஆச்சாரமான ஃபேமிலி, ஹோட்டல் பிஸினஸ் கடை AKT லாட்ஜ் பில்டிங்கிலெதான். ரொம்ப டீஸண்டான சாப்பாடு கிடைக்கும். அங்கேதான் எங்களுக்கு அக்கவுண்ட். நாங்க பக்கத்துவீட்டுக்காரங்க என்பதால் எங்களுக்கு சலுகை. அவருக்கு ரெண்டு மகள் ஒண்ணு கல்யாணம் ஆகி புருஷனோடு இருந்துச்சு. அதுக்கு
லதான்னு ஒரு மவள் மூணு வயசு பார்க்க என் லாத்தா மகளை உரிச்சு வச்சமாதிரி இருப்பாள். அதனாலெ அவமேலே எனக்கு அலாதிப் பிரியம், போட்டா எடுத்து லாத்தாவிடம் காட்டியப்ப "என்ன தம்பி நம்ம சேத்தான் மாதிரி அப்படியே இருக்காள்" ண்டு ஆச்சரியப்பட்டாஹ. வேலைவிட்டு வரும்போது மிட்டாயெல்லாம் வாங்கிக்கொடுப்பேன் அதனாலெ என்னை கண்டால் ஒட்டிக்கொள்வாள். இதை சாக்காவச்சு என்கூட இருந்த தமிழரசன் சின்னவள் சரஸ்வதியை கணக்குப் பண்ணிட்டான். அவளைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தகால்லெ நிண்டான்.

தமிழரசனுக்கு தஞ்சாவூர், வேளாளப்பிள்ளை வம்சம். வீடுகூட கீழ வாசல்லெ இருந்துச்சு. ரொம்ப கௌரவமான குடும்பம். ஒருமுறை அவன் வீட்டுக்குப் போயிருந்தப்ப அவன் அண்ணன், அப்பா, அக்கா எல்லோரும் முன்பின் பார்த்திராத என்னிடம் ரொம்ப சோஷியலாப் பழகினாங்க, அவங்க வீட்டுலெ கை நனைச்சப் பிறகுதான் என்னை விட்டாங்க.

இத்தனை நல்ல குடும்பத்துலெ பொறந்த இவன் செய்வது எனக்குப் பிடிக்கவே இல்லை. நான் சொன்னேன், "டேய் தமிழு, நீ தஞ்சாவூர் பச்சைத் தமிழன், வேளாளக் குடும்பம், அந்த ஏரியாவுலெ உள்ள எல்லாரும் உங்களை மதிக்கிறாங்க, அவள் மலையாளி, பாலக்காட்டு பிராமின், படிச்சிக்கிட்டிருக்கா சின்னப்பொண்ணு, ரெண்டுக்கும் ஒத்தே வராது, நீ எதாவது ஏடாகூடமாப் பண்ணி குடும்ப கௌரவத்தை கெடுத்துக்கொள்ளாதே". ம்ம்......... காதல் வேகம் எங்கே என் அட்வைஸ் ஏறுனுச்சு?

கல்லக்குறிச்சியில் வேலை கிடைச்சிருக்குன்னு சொன்னவுடனேயே சிலபேர் அங்கேயாப்பா அது ஒரு மாதிரியாச்சேன்னாங்க. அங்கே இருக்கிறவங்கல்லாம் மனுசங்களே இல்லை...? பஸ் ஸ்டாண்டை ஒட்டி பள்ளிவாசல் இருக்கு, நிறைய முஸ்லிம்கள் இருக்காங்க, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வாழும் பெரிய ஊராக தெரியும்போது ஏன் ஒரு மாதிரியா பேசுறாங்கன்னு சந்தேகப்பட்டதுண்டு. ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துட்டு சொல்வது எனக்கு தப்பா பட்டுச்சு. இருந்தாலும் ஒரு ஏரியாவுலெ மட்டும் நெருடல் இருக்கத்தான் செஞ்சதுன்னு இங்கே வந்தபிறகுதான் தெரிஞ்சுது. வேலை கெடச்சுட்டுதேன்னு ஆண்டவனை மறந்துடாமல் தொடர்ந்து தொழுதுக்கொண்டுதானிருந்தேன். காலையிலெ சுபுஹுலையும் சாயந்திரம் மஃரிபுலையும் குழந்தைக்குட்டிகளோடு பள்ளிவாசல் வாசல்லெ வருசையா சிலபேர் நிப்பாங்க. தொழுதுட்டு வர்றவங்க அவங்க மேலே ஊதிட்டுப் போவாங்க. எங்க பக்கம் இது இல்லாததால் எனக்கு இது புதுமையா இருந்துச்சு, அதனாலெ நானும் ஊதிட்டுப் போவேன். ஆனால் கொஞ்சம் வித்தியாசம். தினம் வர்றவங்க வராமலிருந்தால் விசாரிப்பேன். அதாவது தொழுதுட்டு வர்றவங்க ஊதினால் வியாதி குணமாகும்னு அவங்களுக்கு நம்பிக்கை. எல்லாம் நம்பிக்கையிலெதானே இருக்கு. நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ முடியுமா?

அதுலெ ஒரு பாட்டிக்கு மட்டும் நல்லா ஊதணும் ஏன்னா நான் நாகூராண்டவர் ஊர்க்காரனாம். நான் அவ்லியாக் குஞ்சுன்னு அதுக்கு நெனப்பு போலிருக்கு. தொழுதுட்டு வர்ற சிலபேர் சீனஞ்சாடையிலெ போவாங்க. அப்படிப் போறவங்களைப் பார்க்கும்போது எனக்கு வருத்தம் வரும். எதோ அவங்க எதிர்பார்த்து வேலைவெட்டியெ விட்டுட்டு வந்து நிக்கிறாங்க, 'fooo...'ன்னு
ஊதிட்டுப் போறதுலெ என்ன கொறஞ்சு போவுது? அவநம்பிக்கை, தன்னால் ஒன்னும் ஆகாதுன்னு அவநம்பிக்கை.

அந்த ஊர் முஸ்லிம்கள் என்னை ஒரு மாதிரியா பார்ப்பாங்க ஏன்னா எனக்கு உருது தெரியாது. உருது பேசுறவங்கதான் அசல்னு அவங்க நெனப்பு, என்னமோ அவங்க பேசுறது லக்னொ உருது மாதிரி. 'வாளிமே பாணி லாக்கே... வாசமேலே ரக்கொ' உருது. அங்கேயும் ஒரு பள்ளப்பட்டிக்காரர் ஜவுளிக்கடை வச்சிருந்தாரு அதுலெ சேல்ஸ்மேனா இருந்த
ராமநாதபுரத்துக்காரர்தான் நமக்கு தோஸ்து. அந்த பள்ளிவாசல் இமாம் ஒருமுறை "இதர் நல்ல பொன்னு இருக்குங்கோ கண்ணாலம் பண்ணிக்குங்கோ" ன்னு சொன்னாரு, வெளங்கிடும்னு நெனச்சுக்கிட்டேன்.

ஆயிரம் தடவை சீர்காழி வழியா போயிருக்கேன், தாஜ் என்கிற மகா புருஷன் அறிமுகமில்லாமல் போயிட்டாரு. அவரு மட்டும் கெடச்சிருந்தால் கங்காராமை வேறு எடம் பார்க்க சொல்லிட்டு பக்கத்துலெ அவர் வூட்டுலெ உட்காரவச்சிருப்பேன். கூடவே கோமுகி டேமுக்கும் அழைச்சுப் போயிருப்பேன். கொடுப்புனை இல்லை.

பதினைஞ்சு இருபது கிலோமீட்டர் அந்தாண்டை உள்ள கோமுகி டேமைப் பார்க்க சாம்ராஜும் தமிழரசனும் மாரியப்பனும் வந்தாங்க. வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு வதக் வதக்குன்னு மிதிச்சிக்கிட்டுப் போய் தண்ணி இல்லாத டேமைப் பார்த்து வெறுத்துப்போனதுதான் மிச்சம். கல்வராயன் மலையிலெ மழை பேஞ்சாதானெ இங்கே தண்ணி வரும்.

சாம்ராஜ் நல்ல மனுசன், திருநெல்வேலி ஜில்லா தாழையூத்து அல்லது சாத்தான்குளம்னு நினைக்கிறேன், சரியா ஞாபகமில்லை. எங்க மில்லிலெ பாய்லர் ஆபரேட்டர். எக்ஸ் நேவி,இந்தியாவின் முதல் aircraft carrier INS VIKRANT லெ பாய்லர்மேனா இருந்தாராம். இங்லாந்திலேந்து கப்பலை டெலிவரி எடுத்துவந்த கூட்டத்துலெ இவரும் ஒருத்தர். கப்பலைப் பத்தி
தெரியாத எங்களை கப்பல் கதையா சொல்லி அசத்திக்கிட்டிருந்தாரு. கப்பல்லெயே ஊறின எனக்கு இப்ப மாதிரி இருந்தா போங்கனின்னு சொல்லிருப்பேன். 

சம்பளம் வாங்கின அன்னைக்கு செய்யிற ஃபர்ளான காரியம் சினிமாவுக்குப் போவது. அதுவும் சிவாஜி படம்னா உயிரு. அவரோட நடிப்பு மனசுலெ ஓடிக்கிட்டே இருக்கும். தெய்வ மகனைப் பார்த்துட்டு வழிஞ்ச கண்ணீரை யாருக்கும் தெரியாமெ  தொடச்சதை தமிழரசன் பார்த்துட்டு கங்காராமிடம் சொல்லி மானத்தை வாங்கிட்டான். உணர்ச்சி வசப்படுறது சிவாஜி

படம் மட்டும்தான். நம்ம எம்ஜியார் படம் நல்லா பொழுது போகும். அவரு சரோஜாதேவிக்கிட்ட செய்யிற சில்மிஷத்தை ரொம்ப ரசிப்பேன். கை அங்கே படுதோ இல்லையோ அங்கே படுறமாதிரி கேமராவின் ஆங்கிளும் சரோஜாதேவியோட முக இம்ப்ரஷனும் ஆண்டையோட நமட்டு சிரிப்பும் எனக்கு ரொம்ப இஷ்டம். இந்த மனுசன் சிவாஜி, பல படங்கள்லெ 
செத்துப்போறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கும் ஆனால் நம்ம அண்ணாத்தெ ஒரு படத்துலெக்கூட சாவமாட்டாரு. ஒரேயொரு படத்துலெ மட்டும் செத்துடுவாரு, அது ராஜா தேசிங்கு படம். என்ன செய்யிறது வரலாற்றை மாத்தமுடியதே! பிற்காலத்துலெ தன் பேருலெ ஒரு சினிமா வரும்னு தெரிஞ்சிருந்தா ஒரிஜினல் செத்திருக்கமாட்டாரு, தப்பிச்சுப் போயிருப்பாரு.

ஹெவி வெதர் (காத்தும் மழையுமா) இருக்கும்போது ப்ளேனை லேண்டிங் பண்றது ரொம்ப கஷ்டமாம். ஆட்டோ லேண்டிங் இல்லாமல் மேனுவல்லெதான் இறக்கணுமாம். அப்பொ பைலட்டோட நாடி நரம்பு அத்தனையும் வேலை செய்யுமாம். அந்த மாதிரி எனக்கு ஒரு நாள் இருந்துச்சு. அங்கே வாப்பா வந்த நாள். எவனோ ஊரோட சிறப்பை வச்சுக்கொடுத்துட்டான்
போலிருக்கு திடுதிப்புன்னு வாரேன்னு லட்டர் போட்டாஹ. நானும் அதுக்கு தகுந்தமாதிரி தயார் பண்ணிக்கிட்டு எந்த பஸ்ஸுலெ ஏறி எப்படி வரணும்னு தகவல் கொடுத்துட்டேன். நான் சொன்னபடியே கரெக்டா காலை பத்து மணிக்கு வந்து சேரும் பஸ்ஸில் வந்தாக. பஸ் ஸ்டாண்டுலேந்து பக்குவமா அழைச்சிக்கிட்டு ரூமுக்கு வந்துட்டேன். ஊரை சுத்திக்காமிச்சு, மில்லை சுத்திக்காமிச்சு, ஒரு இரவு தங்கிவிட்டு மறுநாள் புறப்படும் வரை வாலை சுருட்டி சுத்த சூஃபியாய் நடக்கவேண்டியதாயிடுச்சுன்னு சொன்னா பத்தாது. என்னுடைய அட்மாஸ்ஃபியரையே மாத்தி, வீட்டுக்காரர் கங்காராமை பாதுகாப்பா வச்சு சந்தேகப்படுற அளவுக்கு எதுவுமில்லைன்னு நம்பவைக்கிறதுன்னா சாதாரண காரியமா? 

ரெண்டு வருஷம் தண்ணி இல்லா காட்டுலெ இல்லே காடுன்னு சொல்லப்டாது சொர்க்கபூமியிலெ இருந்தபோது காசு கொஞ்சம் சேர்ந்துச்சு. வாங்குற சம்பளம் 180 லெ ரூமுக்கும் சாப்பட்டுக்கும் அறுபது அறுபத்தஞ்சு போயிடும், வூட்டுக்கு கொஞ்சம் அனுப்பினாலும் துண்டா அறுபது எழுபது மிஞ்சும். 'நண்டு கொழுத்தா வலையில் தங்காது' ன்னு எங்கப்பக்கம் ஒரு
பழமொழி உண்டு. சிங்கப்பூர் போகனும்கிற ஆசை ஊற ஆரம்பிச்சிடுச்சு. அந்த நேரம் பார்த்து சிங்கப்பூர்லெ இருந்த தாய்மாமா பிஸினஸ் ஆசையைக் காட்டினாரு. அதான் சாக்குன்னு ஐயா, தாயோடு புள்ளையா வந்துட்டாரு.

ஊருக்கு வந்திருந்த மாமா இனிக்கப் பேசி ஆசைக் காட்டியதோடு சரி, சிங்கப்பூர் போனபிறகு தன்னுடைய கூட பொறந்த அக்கச்சியா மவனை ஏத்திக்கிட்டவரு நம்ம விசயத்தில் சீனன் சாடை.  தண்ணி காமிக்கிறாருன்னு தெரிஞ்சபிறகு ஒட்டன் நாய்போல காத்திருக்காமல் மறுபடியும் வேலை தேடும் படலம்... இருந்த காசெல்லாம் போயிடுச்சு, சிங்கிள் டீக்கு சிங்கி
அடிக்கிற நிலமை, கல்லக்குறிச்சி போனால் கிடைக்கும் ஆனால் செல்ல மனமில்லை. எதிர்வீட்டு அமீருதீன் மூலமா மதுரையிலெ ஒரு வேலை கிடைச்சுது, பள்ளப்பட்டி ஹாஜியார் ஜவுளிக் கடையிலெ வேலை. சம்பளம் பெருசா இருக்காதுன்னு தெரியும். என்ன செய்யிறது? கௌரவத்தைப் பாத்தா காய வேண்டியதுதான், ஒப்புக்கொண்டேன்.

பாண்டியத் தலைநகரில் மூணுவருஷம், காலத்தைத் தள்ளிக்கிட்டிருந்தேன். பெருநாள், தீபாவளி பொங்கல் எல்லாம் அங்கேதான். பெருநாளன்று கடை ஸ்டாஃபுகளுக்குப் போடும் பகைர்கோஷ்(கறி இல்லாத) பிரியாணியை இன்னும் மறக்க முடியலை. ஒவ்வொரு பெருநாள் மதிய விருந்து அவர் வூட்டுலெதான். பூதக்கண்ணாடி வச்சு தேடினாலும் ஒரு துக்கடா கறி
கிடைக்காது. தங்கவேலு சொல்ற மாதிரி கறியை எவனோ லாவிக்கிட்டுப் போயிட்டான். ஹாஜியாரே லாவினாலும் லாவியிருப்பாரு ஒண்ணும் சொல்லமுடியாது.

மாமாவோட மெஹ்ருபாணி, அவர் போட்ட புள்ளையார் சுழி - ஏற்கனவே துளிர்விட்ட பயண ஆசை வைராக்கியமா மாறிடுச்சு. சிங்கப்பூர் இல்லாவிட்டாலும் வேறு நாட்டுக்குப் போயே ஆகணும், தொடர் முயற்சி கடைசியா பம்பாயில் மூணு மாசம் நாய் படாத பாடுபட்டு பெட்ரோலியத்தில் அரபியத்தில் முத்தஹிதாவுக்கு வந்து சேர்ந்தேன்.

நான் கல்லfக்குறிச்சியை விட்டு வந்தபிறகு இந்தப் பய தமிழரசன் அம்மா அப்பா பேச்சை கேட்காமல் அந்த சரஸ்வதியை கல்யாணம் பண்ணிக்கிட்டான். கல்யாணம் பண்ணியபிறகு தபால் போட்டான். அதன்பிறகு அவனை சந்திக்கவே இல்லை. இப்போது எப்படி இருக்கிறான் - தெரியாது. எமர்சன்ஞ்சி (emergency) வந்தபிறகு பல ஐயாமார்கள் கவர்மெண்டு

விருந்தாளியாக போனாக அதுலெ நம்ம ஏகேடி ஐயாவும் ஒண்ணுன்னு பின்னாலெ தெரிய வந்துச்சு. இனிப்புநீர், பிரஷர் அது இதுன்னு ஏகப்பட்ட செல்வங்களை கைவசம் வச்சிருந்ததாலெ போய் சேர்ந்துட்டாராம். இப்ப அந்த ஊருலெ அவரு பேராலெ காலேஜ் ஸ்கூல் எல்லாம் இருக்காம். நமபர் ஒன் அவர் காலேஜுதான்னு ஒரு கல்லக்குறிச்சிக்காரர் சொல்றாரு. இன்னும் அவர் பெயர் விளங்கிக்கொண்டுதான் இருக்கு.

'தங்கத்திலெ ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ...?' என்று FM ரேடியோவில் ஒலித்த பாடல் வரிகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.

(நினைவுகள் தொடரும்)

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

1 comment:

  1. சமீபத்தில் நான் ரசித்துப் படித்த மிகச் சிறந்த ஆக்கம் இது. மனுஷன், இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கக் கூடாதோன்னு தோணவைத்த 'நிஜத்தின் பிம்பம்!' ஜஹஃபர் இதை சிறுகதையாவோ, குறுநாவலாவோ நிறுத்திவிடக் கூடாது. கட்டாயம் நாவலாக இது மலர வேண்டும். இப்பப் படித்ததே நாவலின் ஓர் அத்தியாயம் மாதிரிதான் இருந்தது.

    இதற்கு ஜஹஃபர் 'அக்னிப் பறவை' என்று பெயரிட்டிருக்கிறார். அவர் இதனை நாவலாக தொடரும் பட்சம், என்னுடைய பெயர் சூட்டலாக 'நான்' என்பதை அவர் ஏற்க வேண்டும்.

    எங்க ஜானகிராமன் இப்படித்தான் உண்மைகளை மறைக்காமல் சொல்வார். இதுவும் அந்தத் திக்கில்தான் இருக்கிறது. அவர் செய்கிற இலக்கிய வித்தைகளும், அனுபவப்பட்ட மொழித்திறனும்தான் இதில் குறைவு. என் கணக்கில் ஜஹஃபருக்கு அது தானாக வரும் என்றுதான் படுகிறது. அத்தனைக்கு சிறப்பு தனங்களை இந்த அக்னிப்பறவை கொண்டிருக்கிறது!

    கல்லக்குறிச்சி AKT-யில் கண்ட பெண்களுக்கு முன்னே அங்கே என்னை மயக்கியது, அந்த ஊரைச்சுற்றித் வட்டவடிவில் தெரிந்த மலைக்காட்சிதான். என் கதையில் (பெருநாள் காலை) நான் எழுத மறந்ததை ஜஹஃபர் கட்டாயம் எழுதுவார் என்றே நினைத்திருந்தேன். கிட்டத்தட்ட அதைத் தொட்டு விட்டு விட்டிருக்கிறார், 'தாஜை' அழைத்துக் கொண்டு டேமுக்கல்லாம் போவதைப்பற்றி எழுத வந்தும், ஏனோ அந்த மலைத் தொடர்களை விட்டுவிட்டார்.

    கள்ளக் குறிச்சி பஸ்டாண்டில் இறங்கியதும், அவர் கண்களில் 'AKT' லாட்ஜ் படுகிறது. அவர் கண்களில் மட்டுமல்ல, அங்கே புதிதாக போய் இறங்கும் எவர் கண்ணிலும் அதுதான் படும். பஸ்டாண்டை ஒட்டிய மூன்றடுக்கு மாடியின் உயரச் சுவரின் பிரமாண்டம் அப்படி! ஆனால் பாருங்கள், நான் அங்கே முதன் முதலில் போனபோது என்கண்ணில் அந்த ஊரைச் சுற்றித் தெரிந்த மலைகள்தான் முதலில் தெரிந்தது. முதல் மலைப்பையும் ஏற்படுத்தியது. பஸ்ஸில் அந்த ஊரை நெருங்க நெருங்க என்னைப் பார் பார் என்று காட்சித் தந்ததே அந்த மலைகள்தானே! எப்படி அதனை தவிர்க்க முடியும். அடுத்த அத்தியாயத்திலாவது ஜஹஃபர் அதனை எழுதுவார் என்று எதிர்பார்ப்போம். 'நான்' வளரட்டும். வாழ்த்துக்கள். எழுதும் எழுத்துக்கு முன்னால் நீங்கள் உண்மையாக இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. அதற்காக என் ஸ்பெஷலான வாழ்த்துக்களும் ஆகட்டும்.

    -தாஜ்

    ReplyDelete