Monday, April 10, 2023

இனியொரு கோபாலன் - போகன் சங்கர்


நேற்று மாலை குழித்துறை கோபாலன் இறந்துவிட்டான். கோபாலன் இந்தவிடத்துப் பிரசித்தி பெற்ற கோவில் யானை. நிறைய குழந்தைகளின் ஹீரோ. நிறைய பெரியவர்களின் குழந்தை. எதிர்பார்த்த மரணம்தான். கொஞ்ச நாளாகவே அவனுக்கு உடல் நலமில்லை. வயிற்றுப் புண், சர்க்கரை வியாதி என்று என்னென்னவோ சொன்னார்கள்.

‘தேரி ஏறும்போது மூச்சிரைக்குது. இருமறான்' என்றார்கள். "இங்கேயானா எல்லா இடமும் தேரி.' இன்னும் சிலர், 'அதெல்லாம் இல்லை சார். அவனுக்குச் சரியா சாப்பாடில்லை. அவ்ளோதான். ஆனைன்னா அதுக்குள்ள சாப்பாடு தரணும். ஆனையை ஆனையா வச்சிருக்குறது அதோட சாப்பாடுதானே? இவங்க போடற பிச்சை அதோட தும்பிக்கைக்குப் போதாது.’

இதில் ஓரளவு உண்மை உண்டு. இடையில் இது சம்பந்தமாக போராட்டம் எல்லாம் நடத்தப்பட்டு அவனுக்குக் கூடுதலாய் சாப்பாடு வாங்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இன்னும் கொஞ்சம் தென்னம் மட்டைகளும் மரப்பட்டைகளும். ஆனால் எல்லாம் ரொம்பத் தாமதமாக வந்து சேர்ந்தது.

இன்று காலை அடக்கம் என்று சொன்னார்கள். அலுவலில் இருந்து அவசரமாக விடுவித்துக்கொண்டு அவனைப் பார்க்க ஓடினேன். வழியில் அவனுக்கு அஞ்சலி செலுத்திப் பெரிய பெரிய போஸ்டர்கள் இருந்தன. நல்ல கூட்டம். கோவில் யானை என்றாலும் கம்யூனிஸ்டுகளும் ஒரு செவ்வணக்கம் செய்திருந்தார்கள். அவர்களது குழந்தைப் பருவத்திலும் அவன் உண்டு அல்லவா? 

ஆனால் நான் போயிருந்திருக்கக் கூடாது. அங்கே நான் போனபொழுது கோபாலன் இல்லை. அவனது உடல்தான் முழுக்க அக்கக்காய்ப்ப் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக திசைக்கொன்றாக ரத்த விளாரியாகக் கிடந்தது. நான்கு கால்களும் ஒரு இடி விழுந்த கட்டிடத்தின் நான்கு தூண்கள்போலச் சிதறிக் கிடந்தன. மூன்று பேர், வெறும் முண்டு மட்டும் உடுத்திக்கொண்டு வியர்வை வழிய அவனது வயிற்றிலிருந்து ஈரலைக் கயிறு கொண்டு இழுத்து உரிக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.

நான் அதிர்ச்சியடைந்து, ‘என்ன இது?” என்றேன்.

ஒருவர், 'போஸ்ட் மார்ட்டம் என்றார்.

'எதற்கு? கோபாலனை யாராவது கொன்றுவிட்டார்களா?அல்லது அது தற்கொலை செய்துகொண்டுவிட்டதா?'

அவர் என் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, 'வயதான யானைகள் பல விஷமிட்டுக் கொல்லப்படுவதுண்டுதான்' என்றார். பிறகு சிந்தனையுடன், 'நாட்டில் பழக்கப்படுத்தப்பட்டு உலவும் யானைகள் தற்கொலைதான் செய்துகொள்கின்றன என்பது எனது சந்தேகம்.' 

கோபாலன் பல நாட்களாகச் சரியாக உணவெடுக்கவில்லை. அதைத் தற்கொலை என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. 

அந்த நபர் கசப்புடன் சிரித்து, 'இவையெல்லாம் அரசியல்சரியாகச் சொல்லப்படும் காரணங்கள். உண்மையான காரணம் அதோ' என்று காட்டினார்.

அங்கே எப்போதும் ஒரு நடன அசைவுபோல ஆட்டி ஆட்டி நடக்கும் கோபாலனின் தலை தனியாக கிடந்தது. ஒரு வலுத்த ஆள் வியர்வை சொட்ட அதன் தலையைக் கோடாலியால் பிளந்துகொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு தடவை கோடாரியை அடிக்கும்போதும் ஓர் உலோகச் சத்தம் கேட்டது. ஒவ்வொரு தடவை கோடாரியை அடிக்கும்போதும் அந்த அதிர்ச்சியைத் தாங்க மாட்டாற்போல கோபாலனின் மூடியிருந்த கண்கள் திறந்து திறந்து மூடின.

ரமேஷ் பேடி எழுதிய 'யானை: காடுகளின் அரசன்' நூலில் (நேஷனல் புக் ட்ரஸ்ட்) யானைகள் சாவதற்கு, வனத்தில் தனிமையை நாடிப் போய்விடுகின்றன என்கிறார். பொதுவாகவே கூட்டமாய்த் திரியும் குணமுடைய யானை, தான் ஒரு சுமையாகிவிட்டோம் என்று தோன்றுகையில் எல்லாரையும் விட்டுவிட்டு நீர் நிலைகளையோ சதுப்பு நிலங்களையோ நாடிப் போய் விடுகிறது என்கிறார். ஒரு தடவை வேட்டைக்காரார்களால் சுடப்பட்டுத் தப்பிய யானையை நான்கு மாதங்கள் கழித்து ஒரு நதியின் அடியில் கண்டுபிடிக்கிறார். பெரிய எலும்புக்கூடாக. அது ஆற்றில் அமிழ்ந்துகொண்டு உணவு ஒரு பிடிகூட உண்ணாமல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்திருக்கிறது. யானை தான் இறப்பதை மற்றவர்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்கிறார் அவர்.

நான்என்னைச் சுற்றியுள்ள கூட்டம் பெருகுவதைக் கவனித்தேன். 

‘டாக்டர் காலைல ஊசி போட வந்தார். அதால நிக்க முடியலை. கிரேன் வச்சித் தூக்க ட்ரை பண்ணோம். அதுவும் நடக்கலை. பிறகு கோபாலன் தும்பிக்கையால் மூன்று தடவை தரையில் அடித்தான். பிறகு செத்துப்போனான்' என்று விளக்கிக்கொண்டிருந்த பெரிய மனிதரின் பெரிய காதுகளையே நான் பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றிருந்தேன்.

இப்போது காற்றில் மெலிதாக ஒரு வீச்சம் பரவத் தொடங்கியிருந்தது.

‘தந்தங்கள்!' என்றார் அந்த முதல் நபர். 'அதற்காகத்தான் இத்தனை நாடகமும்.'

நான் மிகுந்த தளர்ச்சியாய் உணர்ந்தேன். கோபாலனின் இளமைக் காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க முயன்றேன். அங்கம் அங்கமாக ஒரு விபத்து நடந்ததுபோல இங்கே சிதறிக் கிடக்கும் அவன் எங்கே பிறந்தான்? அவன் எப்போது பிடிக்கப்பட்டான்? இறக்கையில் என்ன நினைத்துக்கொண்டான்?

என் பக்கத்தில் இப்போது இன்னொரு வயதான நபர் தள்ளாடியவாறே வந்து நின்றார். குடித்திருக்கிறார் என்று தெரிந்தது.

"என்ன கெம்பீரமான யானை! கஜ ராஜன் அல்லவா கோபாலன்' என்றார்.

நான், 'அதெல்லாம் இல்லை. அவனொரு அடிமை. அவனது கால் சங்கிலிகளை நீங்கள் பார்த்ததில்லையா' என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன்.

அவர், 'இனியொரு கோபாலன் இனி எங்கு காணாம் பத்தும்?' என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.

‘இனியொரு கோபாலனை நாம் எங்கும் காணண்டாம் பெரியவரே' என்றேன் நான்

*


நன்றி : போகன் சங்கர் & கிழக்கு பதிப்பகம்

No comments:

Post a Comment