கோடுகள் பாடுகள் அல்லது why bad things happen to good people ?
நேற்று ஒரு புதிய நண்பர் போன் செய்து அறிமுகப்படுத்திக்கொண்டு ''சார் நாங்க ஒரு சிறு பத்திரிக்கை கொண்டுவரோம் .உங்க கதையோ கவிதையோ தாங்க''என்றார் நான் வழக்கமாக சரி என்று சொல்லிவிட்டு மறந்துவிடுவேன் .அல்லது அடுத்த நிமிடமே எழுபது பக்கத்துக்கு போகும் ஒரு கதையை அனுப்பி 'இதை உங்க பத்திரிகைல போடலாமான்னு பாருங்க'என்பேன்.அவர்கள் பத்திரிகையே முன் அட்டை பின்னட்டையில் ''படிச்சே செத்தே!'என்று வெருட்டும் வாசகங்களுடன் ஸ்பான்சர்களின் 'எஸ் மாணிக்கம் நாடார் பலசரக்கு மாளிகை .எங்களிடம் சமையலுக்குத் தேவையான நயமான பருப்புவகைகள் உட்பட எல்லாம் சகாயவிலையில் கிடைக்கும்.கறவை மாடுகளுக்கான மாட்டுத் தீவனமும் உண்டு 'விளம்பரங்களுக்குப் போக (மறுபக்கம் மங்கலாய் தெரிதாவின் ஒரு mugshot கமலாதாஸின் கண்ணிடுங்கிய புன்னகை )நாற்பது பக்கங்கள்தான் வரும்.அன்றைக்கு என்ன திதியின் எந்த பாதத்தில் இருந்தேனோ ''உங்க பத்திரிகையின் கோட்பாடு என்ன ?''என்று கேட்டுவிட்டேன்.(கோட்பாடு என்பது சிக்கன்குனியாவை விட மோசமான வைரஸ்.ஒருதடவை ரத்தத்தில் ஏறிவிட்டால் அது ஆயுசுக்கும் போகாது என்று எனது நண்பர் சொன்னது உண்மைதான் போல )
நண்பர் ''சார் ?'என்றார்
நான் ''கோட்பாடு கோட்பாடு ?''என்றேன் ''ஐடியாலஜி ?இலக்கியப் பார்வை ?உலகப் பார்வை ?''
மறுமுனை சற்று அமைதியாக இருந்தது .நான் ''ஹலோ?''
''இருக்கேன் சார் சொல்றேன்''என்றார் அவர்.''அதாவது பார்த்தீங்கன்னா நான் மார்க்சிய பின்னணில வளர்ந்தேன் ''
''ஓ சரி இடதுசாரியா நீங்க ''
''இல்லே சார் அப்படி வளர்ந்தாலும் பிறகு வளர்ந்தபிறகு மார்க்ஸ்கிட்டே ஒரு போதாமை இருக்குன்னு தோணுச்சு .பெரியாரைப் படிச்சேன்.வர்க்க நீதி மாதிரியே சமூக நீதின்னு ஒண்ணு இருக்கில்லே? ''
''உண்மை உண்மை ''
''அதுல தீவிரமா இருந்தேன்.இந்த சின்னக் குத்தூசி இருக்கார் இல்லீங்க அவர்கிட்டே கூட ஏறக்குறைய ஒரு சீடன் மாதிரி இருந்தேன் ''
''ஓ ரொம்ப நல்லது.அவரு பெரிய தலையாச்சே ?''
''ஆமா ஆனா அப்படிப் பெரியார் படிச்சிகிட்டே வரும்போதுதான் எனக்கு ஒரு ஆக்சிடன்ட் ஆகுது ''
''ஓ சாரி என்னாச்சி ''
''ஒரு டிராக்டர் என் கால்லே ஏறிடுச்சு''
''டிராக்டர் ?''
''ஆமா ''
நான் மிக வியந்து ''டிராக்டர் மெதுவாதானே வரும்?"'என்றேன் ''அது எப்படி உங்க கால்ல ஏறுச்சு ?"'
''அது மெதுவாத்தான் வந்திருக்கும்.எனக்குத் தெரியலை .நான் மயக்கமா கிடந்தேன் ''
''ஏன் ?''
''அது முந்தின நாள் ஒரு இலக்கியக் கூட்டம் அதுல கொஞ்சம் சரக்கு போட்டிருந்தேன் ''
"'ஓ ''என்றேன் பிறகு மெதுவாக பெரியாருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தேன்
''ஒரு மூணு மாசம் உங்க ஊர் ஆஸ்பத்திரிலதான் கிடந்தேன் காலெல்லாம் நட்டு போல்ட்டு போட்டு முறுக்கி வச்சிருந்தாங்க ''
''அய்யோ வலி.''
''பயங்கர வலி .புண்ணு குணமே ஆக மாட்டேங்குது.கைக்காசெல்லாம் போயிடிச்சு.ரொம்ப உடைஞ்சி போயிட்டேன்.அப்போதான் அவங்க வந்தாங்க ''
''யாரு ''
''ஏசுவும் கன்னி மேரியும் ''
''யாரு ?''
''ஏசுவும் அன்னை மேரியும் ''
''எப்படி வந்தாங்க''
அவர் அசராமல் ''கார்லதான் ''என்றார் ''ஒரு வெள்ளை பிரீமியர் பத்மினி .''என்றவர் ''நோயாளிகளுக்கு பிரேயர் பண்றவங்க''
நான் சற்று ஆசுவாசமடைந்து ''தயவு செஞ்சு படிமங்கள்ல பேசாதீங்க எனக்கு நெஞ்சுவலி வருது 'என்று சொல்லலாமா என்று யோசித்தேன்.ஆனால் ஒரு சிறு பத்திரிகையாளரை அவ்விதம் சொல்வது பெரும் வன்முறையாகும் என்று நான் உணர்ந்தேன்
''அவங்க என் கால்ல கைவச்சி பிரார்த்தனை பண்ணாங்க .நம்புவீங்களா அடுத்த வாரமே எனக்கு நடக்க வந்திருச்சு''
''சரி ''என்றேன்
''இது பாருங்க எனக்கு பெரிய தத்துவச் சிக்கலை உண்டு பண்ணிருச்சு.பெரியார் கடவுள் இல்லைன்னு சொல்றார் .ஆனா இதை எப்படி விளக்கமுடியும் ?''
''அப்போ பெரியார் தப்புன்னு சொல்றீங்க ''
''அப்படில்ல .பெரியார் மட்டுமே சரின்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன் ''
நான் சற்று ஆசுவாசமடைந்து 'அப்ப நீங்க ஒரு ஆன்மீகவாதி மனம் திரும்பிய கிறித்துவர் இப்போ இல்லையா ?''
அவர் இரக்கமே இன்றி ''இல்லை ''என்றார்
நான் ''ஏன் ?''என்றேன்
''ஆனா நீங்க சொன்னது போல ஒரு தீவிரமான கிறித்துவராத்தான் அதுக்குப் பிறகு இருந்தேன் .நிறைய ஊர்ல போய் பொதுக் கூட்டங்கள்ல ரத்த சாட்சி சொல்லிருக்கேன்.மார்த்தாண்டம்,குளச்சல்.வெள்ளறடை,புன்னம்புரா ..ஆண்டவர் தினம்தோறும் என்கிட்டே ராத்திரி பேசிக்கிட்டிருந்தார் ''
''பேசிக்கிட்டிருந்தார்னா ......?" நான் தயக்கத்துடன் கேட்டேன்
''ஒரு வெளிச்சம்.ஒரு உஷ்ணம் .நீங்க படுத்துக்கிட்டிருக்கும்போதே உங்களை நெருங்கி வரும்.அதை உங்களால உணரமுடியும்''
''ஓ ''
''அப்போ நீங்க இலக்கியமெல்லாம் விட்டுட்டீங்க இல்லையா ''
''ஏன் விடணும்?அது எனது மூச்சுக்காத்து தோழர்.அதை எப்படி நானா விட முடியும் ?எனது நம்பிக்கைக்கு உட்பட்டு எழுத்திட்டிருந்தேன்.ஆர் எஸ் ஜாக்கப் அப்போ கிறித்துவ வாலிபன்னு ஒரு பத்திரிக்கை நடத்திட்டிருந்தார் .அதுல 'யாத்திரீகன்'ன்னு பேர்ல நிறைய எழுதினேன் ''
''ஓ நல்லது நான் ஜாக்கப் படிச்சிருக்கேன் எனக்கு பிடிக்கும் ''
''அப்புறம் பாருங்க ஒரு மூணுவருசம் கழிச்சி எனக்கு இன்னொரு ஆக்சிடன்ட் ஆயிடுச்சி''
நான் ''ரோட் ரோலர் ?''
''இல்லே ஸ்கூட்டர்.ஆனா இந்த தடவை எனக்கு ஒன்னும் ஆகலை ''
நான் 'கர்த்தருக்கு தோத்திரம் ''என்றேன்
''ஆனா பாருங்க என் ஸ்கூட்டர்ல மாட்டி ஒரு கிழவி மண்டையை போட்டிருச்சி ''
எனக்கு கடும்கோபம் வந்தது அடக்கிக்கொண்டு ''அப்போ ஆக்சிடன்ட் ஆனது அவங்களுக்குத்தான் உங்களுக்கில்லை ''
''ஆமா.அதுல பாருங்க அந்த கிழவியோட ஆளுங்க எல்லாம் என் மேல கேஸ் போட்டாங்க ரூபா கேட்டு மிரட்டினாங்க .எல்லோருமே விளிம்பு நிலை மக்கள்.எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் .ஏன்னா நான் ஜீனே , அமைப்பியல் ,தமிழவன்,சாறு நிவேதிதா எல்லாம் படிச்சிருக்கேனே ''
''அது சரி.பிறகென்ன ?''
''ஆனா அவங்க அதெல்லாம் படிக்கலையே ?''என்றார் அவர் ''அது ஒரு வருஷம் போச்சு.கோர்ட்டு,கேசு,கட்டப் பஞ்சாயத்து ,அடிதடி காசு விரயம்னு .எனக்கு ஒரு விரக்தி வந்துடுச்சி.இது ஏன் எனக்கு நிகழுது ?உண்மையில நான் இந்த விபத்தை தானா நிகழ்த்தலை.அது முழுக்க ஒரு அபத்தமான விபத்து ''
நான் ''எல்லா விபத்துகளுமே அப்படித்தானே ?''
''இல்லை அதுல ஒரு சயின்ஸ் இருக்கு .''என்றார் ''எனக்கு பெரிய அதிர்ச்சியா அது இருந்தது .ஏறக்குறைய ஒரு தவசி மாதிரி ஆண்டவரின் வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருந்த எனக்கு இது எப்படி நிகழ்ந்தது ?ஆண்டவர் இப்படி இதை நிகழ அனுமதிச்சார் ?ஒரு முன்னறிவிப்பு கூட ஏன் கொடுக்கலை ?இவ்வளவுக்கும் அதுக்கு முந்தின நாள் ராத்திரி கூட என் கூட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார்.ஏறக்குறைய அதே சமயத்துலதான் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எவாஞ்சலிஸ்ட் குடும்பத்த்திலேயும் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்து சில பேரு இறந்துட்டாங்க.எனக்கு முழுமையாவே நம்பிக்கை உடைஞ்சிடுச்சி ''என்றவர் சற்று அமைதிக்குப் பிறகு ''அப்போதான் நான் இருத்தலியல் என்கிற விசயத்துக்கு பக்கத்தில போறேன் .அப்படித்தான் சார்த்தர் என் வாழ்க்கைல வந்தார் ''
''அப்போ நீங்க ஒரு இருத்தலியல் வாதின்னு சொல்லுங்க.ஆனா சார்த்தரை பூக்கோ எப்பவோ காலி பண்ணிட்டாரே ''
அவர் ''அங்கேதான் வரேன் ''என்றார்.''இந்த பிரச்சினைக்கு நடுவில எனக்கு ஒரு காதல் வந்தது.அந்தக் கிழவி கேஸை எடுத்து வாதாடின வக்கீல்தான் அது ''
''ஓ ''என்றேன் ''புரியுது ''உண்மையில் எனக்குப் புரியவில்லை
''எங்களுக்கு திருமங்கலத்துல வச்சி கல்யாணம் நடந்தது .நாலே நாலு பேர்.நான் அவ.அவளோட சீனியர்.நான் வழக்கமா முடிவெட்டிக்கிற கடைப் பையன் ''
''ரொம்ப புரட்சிகரமான திருமணமா இருக்குதே ''
''ஆமா.அவங்க அது அப்படித்தான் நடக்கணும்னு சொன்னாங்க.அவங்க ஒரு பெமினிஸ்ட ''என்றார்
நான் ''எந்தப் பள்ளி ?''என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன்
''பாருங்க அதுவும் ஒரு பிரச்சினைலதான் முடிஞ்சுது '
நான் ''எப்படி ''என்று இம்முறை கேட்கவில்லை .எனக்கே அது அப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தது
''அவங்களுக்கு சார்த்தரைப் பிடிக்கவே இல்லை.ஒரு கட்டத்துல அவரை ரொம்ப அபியூஸ் பண்ண ஆரமிச்சாங்க .நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்.ஒரு கட்டத்துல டிவோர்சுக்குப் போயிடுச்சி ''
நான் நம்ப முடியாமல் ''தோழர் ?ழீன் பால் சார்த்தருக்காகவா விவாகரத்து பண்ணிக்கிட்டீங்க!''என்றேன்
அவர் 'மெயினா அவருக்காகத்தான்.கூடவே நான் வேலைக்குப் போக மாட்டேங்கிறேன் .காலைல பனிரெண்டு மணிக்கு எந்திரிக்கிறேன்.குடிக்கிறேன்னு சில சில்லரைக் காரணங்கள் ''என்கிறார் ''ஒரு தத்துவத்தை எப்படி விட்டுக் கொடுக்கறது தோழர் ?''
நான் ''கஷ்டம்தான் ''என்றேன்
''அது ஒரு MESSY DIVORCE .அவ ஒரு வக்கீல் வேற இல்லியா .என் மேல இல்லாத கேஸெல்லாம் போட்டு பதினஞ்சு நாள் மதுரை ஜெயில்ல இருந்தேன் மிகத் துயரமான நாட்கள் .அய்யய்யோ .அவ என்கிட்டே ஜீவனாம்சம் எல்லாம் கேட்டு ரொம்ப சித்திரவதை பண்ணா .நானே வேலை இல்லாம சிறுபத்திரிகை நடத்திட்டு இருக்கேன்.எங்கிருந்து கொடுப்பேன் ?''
''பிறகு என்ன பண்ணீங்க ?''
''என்னோட குடும்ப வீடு இருந்தது அதை வித்து கொடுத்தேன்.எங்க அம்மாவுக்கு அதுல ரொம்ப வருத்தம்.கடைசிவரை என்னை சாபம் கொடுத்துகிட்டே இருந்துச்சு.ஒருநா பழனிக்குப் போறேன்னு போச்சு வரவே இல்லை திரும்பி''
''அய்யோ நீங்க தேடலியா ''
''ஏன் தேடாம?காசி வரைக்குப் போயி தேடுனேன் .கிடைக்கலை.''என்றவர் சற்று மவுனமாக இருந்தார் ''அப்போதான் நான் காசில இந்த ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவி ஒருத்தரைச் சந்திச்சேன் ''
நான் இப்போது அவசரமாக ''உங்க ஈமெயில் ஐடி கொடுங்க தோழர் ''என்றேன்
''அவரு சொன்னாரு ..''
''நான் நிச்சயமாக உங்களுக்கு கதை தாரேன் ''
''ஒரு புத்தகம் இருக்கு ஒரு யூதப் பாதிரி எழுதினது ..''
''நிச்சயமா அனுப்பறேன் தோழர்.அனுப்பிட்டு உங்களுக்கு செய்தி அனுப்பறேன்"
''புத்தகத்தோடு பேரு ..Why bad things happen to good people?''
''அதுல என்னன்னா பாதிரியாரோட பையனுக்கு ஒரு வினோத நோய் ...''
''நல்லது தோழர்.வணக்கம் ''
''இந்த கர்மக் கோட்பாடு இருக்கில்லையா ..அது பற்றி அவர் சொன்னார்.கிறித்துவத்துல யூதத்துல இஸ்லாமிலே இந்தக் கர்மக் கோட்பாடு இல்லே .அதான் அவங்க ஒரு பிரச்சினைக்கு நோய்க்கு இது யார் பாவம் ?அப்பா பாவமா பிள்ளை பாவமா ?இந்த துன்பத்தை கொடுத்தது கடவுளா சாத்தானா ன்னு எல்லாம் கேட்டுகிட்டு அலையுறாங்க.உண்மைல நாமதான் நாம படற துன்பத்துக்குக் காரணம் .நல்லது தீயதுக்கு நடுவில சமன்வயம்னு ஒன்னு இருக்கு வேதாந்தம் அதைத்தான் சொல்லுது ''
''தோழர் நான் ஆபிசுக்குப் போணுமே ?
''அவரு எனக்கு குண்டலினி யோகம் கத்துத் தந்தாரு.கிரியா யோகா பள்ளி.பிஹார் ஸ்கூல் ஒப் யோகா இருக்கில்லையா ?"'
''தோழர்...''
''இமயமலைல இரண்டுவருசம் இருந்தேன்.சிவானந்தா ஆசிரமம் இருக்கில்லே அங்கே கொஞ்ச நாள் ..''
''அது வந்து ....''
''ஆனா அதுவும் நிலைக்கலை .குண்டலினி யோகத்தை அதிகமா பண்ணி என் உடல் பழுதாயிடுச்சி.திடீர்னு எனக்கு ரத்த பேதியா போக ஆரம்பிச்சுது.நிக்கவே இல்லை.ஆசிரமத்துல கொஞ்ச நாள் பார்த்தாங்க.அப்புறம் நீங்க கீழே போய் உடம்பு சரி பண்ணிட்டு வாங்கன்னு அனுப்பிட்டாங்க '
''நான் சாயங்கலாமா ..''
''எப்படியோ கீழிறங்கி முகல்சராய் ரயில் நிலையத்துல கிடந்தேன்.காசில போய்ச் செத்துடலாம்னு தோணிடுச்சு.கையில காசு இல்லை.உடம்பில வலு இல்லை .ஒரு நாள் ..ஒரு வெள்ளிக்கிழமை அது அரை மயக்கமா கிடந்தப்போதான் அது நிகழ்ந்தது .எங்கியோ பாங்கு விளிக்கற சத்தம் கேக்குது யாரோ என்னைத் தொட்டு எழுப்பினாங்க ''
''யாரு ?"
''முழுக்க பர்தா போட்டுக்கிட்டு ஒரு பாயம்மா ''
''ஓ ''
''அவங்க எனக்கு சாப்பிட ரொட்டி கொடுத்தாங்க .அவங்க யாருன்னு நினைக்கறீங்க ?"
நான் 'அன்னை மேரியோ ?'என்று சொல்ல நினைத்து இல்லியே பர்தா போட்டிருக்கிற பாயம்மா என்கிறாரே?அன்னை கதீஜாவா ?
''நீங்களே சொல்லுங்க''
''எங்கம்மா ''
நான் ''பாயம்மா 'என்று திருத்தினேன்
''இல்லே எங்கம்மாதான் பாயம்மா.அவங்க மார்க்கம் மாறிட்டிருக்காங்க ''
நான் சட்டென்று அவசரமாக போனை வைத்துவிட்டு சுவரை வெறிப்பது பார்த்துவிட்டு மனைவி கவலையுற்று அருகில் வந்து ''என்னாச்சு ?காலங்காத்தாலியே வேர்க்க விறுவிறுக்க என்ன போன் ?ஆபிசுக்குப் போகலே ?"என்றாள்
நான் ''இல்லே எனக்கு ஒருபடியா வருது கூடவே வயத்தையும் வலிக்கி ''என்றேன்.
பாத்ரூமுக்குள் பாய்ந்து நுழைந்துவிட்டு திரும்ப வந்து ''நான் மெடிக்கல் லீவ் போடணும்னு நினைக்கறேன் .ரத்த பேதி போலத் தெரியுது '' என்றேன்
*
Thanks to : Bogan Sankar
No comments:
Post a Comment