Sunday, August 24, 2014

நானும் தேனும் - எஸ்.எல்.எம். ஹனிபா

'When a male honey bee climaxes during sex, his testicles explode and he dies' என்று Unbelievable facts -ல் பார்த்த கணத்தில் காக்காவிடமிருந்த 'தேன்' சுரந்து விட்டது! - ஆபிதீன்
***
எஸ்.எல்.எம். ஹனிபா எழுதுகிறார்...

இது ஒரு சுத்தமான தேனின் கதை. நல்ல தேன், தேனீ வளர்ப்பு பற்றி இங்கு எழுதப் போகிறேன்.

தேனீ வளர்ப்பு இன்று நேற்று தோன்றியதல்ல, ஆதி மனிதன் தீயைத் தொடர்ந்து தேனையும் கண்டு பிடித்தான். தனது உணவுகளை (மாமிசம்) தேனைச் சிறந்த ஔடதமாகப் பயன்படுத்தினான்.

ஆரம்பத்தில் தேன் கூடு இருக்குமிடத்தை நாடிச் சென்று தேனைப் பெற்றுக் கொண்ட மனிதன் இன்று நினைத்த இடத்தில் தேன் கூடுகளை அமைத்து இருந்த இடத்திலேயே தேனைப் பெற்றுக் கொள்ள தகவமைத்துக் கொண்டான்.

முன்னோர் தேனீக்களையும் அழித்து தேன் கூட்டையும் அழித்தே தேனை எடுத்தார்கள். இன்று அழகான அடுக்கு மாடிக் கட்டடத்தில் (தேனீ வளர்ப்புப் பெட்டிகள்) வளர்க்கக் கற்றுக் கொண்டார்கள். தேனீக்களுக்குப் பாதகமில்லாமலும் தேன் கூடுகளை அழிக்காமலும் நம்மால் தேனை உற்பத்தி செய்து பெற முடியும்.

தேனீ பற்றிய எனது அனுபவங்களை எழுத, 200 பக்கங்களாவது தேவைப்படும். சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

1970களில் தம்பன்கடவை கால்நடை அபிவிருத்தித் திட்டத்தில் ஒரு செயற்கை முறைச் சினைப்படுத்துனராகக் கடமையாற்றிய பொழுதுதான், மரப்பொந்துகளில் தேனெடுக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டேன். எனது குருநாதர் ஏறாவூரைச் சேர்ந்தவர். மாவிலாறின் கரைகளில் புகையிலைத் தோட்டம் செய்பவர்களில் ஒருவர். பெயரென்னவோ அச்சி முகம்மது என்றாலும், அவரை அச்சி மாமி என்றே எல்லோரும் அழைப்பார்கள். இன்று திருநங்கையர் என்று அழைப்போமே அவர்களில் ஒருவர்.

எங்களூரிலும் அவரைப் போன்றொருவர் அகமது காக்கா என்ற பெயரில் உலா வந்தார். நடை, உடை, பாவனை அனைத்திலும் பெண்களின் சாயல் குடிகொண்டிருக்கும்.

(சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டீவியில் திருநங்கையரின் சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெற்றது. பார்த்தவர்கள் பாக்கியவான்கள்)

காலையில் எனது கடமை முடிந்ததும், பொங்கி நுரைத்தெழும்பும் மகாவெலி ஆற்றைக் கடந்து அச்சி மாமியின் வாடிக்குச் செல்வேன். அவர் அங்கு தயிரும், சோறும், தேனும் வைத்திருப்பார். சாப்பிட்டு முடிந்ததும் காலை 10 மணியளவில் நானும் மாமியும் காட்டில் இறங்குவோம். காடென்றால், நம்மில் பலருக்கும் மரங்கள்தான் நினைவுக்கு வரும். நானும் மாமியும் புழங்கிய காடு அப்படியில்லை. ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எத்தனை வகையான ஜீவராசிகள் வாழும் பிரபஞ்சம்.

மாவிலாற்றின் கரைகளில் பெரும் மரக்கூட்டங்கள். (நாசமாய்ப் போன கடைசி ஈழப்போர் ஆரம்பமான பிரதேசம். அப்போதெல்லாம் அங்கு வயலுமில்லை, மனிதர்களுமில்லை. திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் செழியன், தண்ணீரை விடாது வேளாண்மையைச் சாகடித்து உலகிற்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தெரியப்படுத்துவதாக பிபிசிக்கு நேர்காணல் வழங்கினார். அந்த இடம்)

மாமி, பூக்களிலிருந்து மகரந்த மணிகளைக் காவிச் செல்லும் தேனீக்களைப் பின்தொடர்ந்து செல்வார். திடீரென்று நடை தவிக்க, அவரின் காது மடல்கள் விடைத்து நிற்க, எதிரே நிற்கும் பிரம்மாண்டமான மரத்தைக் கூர்ந்து பார்ப்பார். குறுநகையொன்று அவரின் இதழ்க் கடையிலிருந்து குறுக்கு வெட்டாகும். தன்னுடைய வலது பக்கக் காதை மரத்தில் இணைத்து ஒலியைக் கேட்டறிவார். மாமி தலையை ஆட்டி மகிழ்ச்சியோடு மரத்திலேறுவார். எல்லாவற்றையும் நோட்டம் பார்த்து மரத்திலிருந்து இறங்கியவர், மரத்தில் இரண்டடி உயரத்தில் கோடரியால்  குழி பறிப்பார். இலட்சக்கணக்கான தேன் பூச்சிகளின் கிடுகிடுவென்று பேரிரைச்சல். மாமி ஏதோ மந்திரம் சொல்வார்.

பின்னர், கொஞ்சம் காய்ந்த சருகுகளைக் கொண்டு காற்று வலம் பார்த்து, அடி மரத்தில் புகை மூட்டி, அந்தப் புகையை மரப்பொந்துக்குள் அனுப்பிய மறுகணம், பல்லாயிரம் பூச்சிகளும் மேலெழுந்து வட்டமடிக்கும். மரப்பொந்தைப் பார்த்தால், தேன் வதைகள் அடுக்கடுக்காக அறைகளில் குடியிருக்கும். அந்தக் காட்சி, தேனீக்களின் அற்புதமான மாளிகை, அதன் அழகு, அதைச் சொல்ல வார்த்தையின்றி பின்னடைகிறேன்.

புசுபுசுவென்று தேன் வதைகளைக் கழற்றிக் கழற்றி மாமி வாளியில் குவிப்பார். நான் புகையடித்துக் கொண்டிருப்பேன். புழு நிலையிலிருக்கும் தேனீக்களின் குஞ்சுகளுக்கோ அல்லது இளம் ராணிக்கோ எந்தத் தீங்கும் நோவுமில்லாமல் இந்தக் கருமத்தை அவர் செய்வார். அவர் செயலில் அறம் இருக்கும்.

கொட்டும் வேலைக்காரத் தேனீயிலிருந்து தப்பிப்பதும், இராணித் தேனீயை அச்சொட்டாக அறிந்து பிடிப்பதும், பிற பூச்சிகள் பல்லிகள் எலிகள் கடும் குளிர், வெப்பம், காற்று, பெரும் மழை என்ற அனர்த்தங்களிலிருந்து தேனீக்களையும் பெட்டிகளையும் பாதுகாப்பதும் பெரும் சிரமம் என உணர்ந்த மனிதன், நாளடைவில் சீனி மூலம் தேன் உற்பத்தி செய்யும் நுகர்வுக் கலாசாரத்தின் நுட்பங்களையும் கைக்கொண்டான்.

தேன் உற்பத்தியில் உலகிலேயே அமெரிக்காவும் கனடாவும்தான் அன்றும் இன்றும் கொடி கட்டிப் பறக்கிறது. (அமெரிக்கர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள்) அப்படியிருந்தும் தேன் காய்ச்சும் சிறு கைத்தொழிலில் நமது நாடு பல வருடங்களாக முன்னணியில் திகழ்கிறது. அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தேன் காய்ச்சும் தொழிலில் பேரும் புகழும் பெற்றது. காத்தான்குடி தேன் காய்ச்சுபவர்கள், தமக்கான விற்பனை முகவர்களை நியமித்திருக்கிறார்கள். இந்த முகவர்கள் தங்கள் கடைக்கு முன்னால், ஒரேயொரு போத்தலை மட்டும் ஸ்டூலில் வைப்பார்கள். வாங்க வருபவர்கள் அபூர்வமாக ஒரேயொரு போத்தல்? முண்டியடித்துக் கொண்டு பாய்ந்து வாங்குவார்கள். வாடிக்கையாளர் கடையை விட்டுச் சென்ற அடுத்த கணம் மறு போத்தல் வந்து ஸ்டூலில் அமர்ந்து விடும்.

நல்ல தேனை எப்படி அறிந்து கொள்வது?

இது ரொம்பச் சிக்கலான விடயம் என்றாலும், அவசரமில்லாமல் ஆறுதலாக நல்ல தேனை அறிந்து கொள்ளலாம். தேன் பல நிறங்களில் தென்படும். மீனாட்சியம் பூ, பாலைப்பூ, இலுப்பைப்பூ காலங்களில் உற்பத்தியாகும் தேன், நல்ல தேநீரின் நிறத்திலிருக்கும். தாமரைப்பூ, வீரப்பூ, மருதம்பூ காலங்களில் உற்பத்தியாகும் தேன், வெளிறிய மஞ்சள் நிறத்திலிருக்கும். அன்று வெட்டிய தேனை போத்தலில் ஊற்றும் போது, போத்தலின் கழுத்துப் பாகத்தில் நுரை நிரம்பி, மூடியையும் தள்ளிக் கொண்டு வெளியேறும். சில போத்தல்கள் வெடித்தும் சிதறும். தேனின் அடிப்பாகத்திலிருந்து மேல் நோக்கி படிந்து செல்லும். அதாவது, அடிப்பாகத்தில் வெளிறிய நிறத்திலும், அடியிலிருந்து கழுத்து நோக்கிச் செல்லும் பொழுது நிறம் அதிகரித்துக் கொண்டு செல்லும். இன்னும் போத்தலின் அடியில் தேன் பூச்சிகளின் உடைந்த இறகுகள், கால் கைகள், மரப்பட்டைகளின் சிறு துணிக்கைகள், சிராய்ப்புகள் என்று அடியில் ஒரு சிறு படலம் உறைந்து கிடக்கும். எல்லா போத்தல்களிலும் இதைக் காண முடியாது. ஒரு பத்து போத்தல் தேன் இருக்குமிடத்தில் ஓரிரு போத்தல்களில் இந்த அடையாளங்களைக் கண்டால் அது சுத்தமான தேன் என்பதற்கான அறிகுறிகளாகும்.

தேனை உள்ளங்கையில் ஊற்றி, மெதுவாக உறிஞ்சும் போது, சிறிது புரையேறுவதுடன், தொண்டையில் கசப்புடன் கூடிய கமறலும் ஏற்படும். சீனிப் பாணிக்கு ஒருபோதும் இத்தகைய விளைவுகள் ஏற்படாது.

தேனை எவ்வாறு வாங்குவது?

தேன் விற்பவரிடம் செல்லுங்கள். ஒரு போத்தல் தேன் என்ன விலை என்று கேளுங்கள். இன்றைய தேன் விலை 800.00 ஆகும். அவரும் 800 ரூபாவே சொல்லுவார். நீங்கள் மிக ஆறுதலாக பத்து போத்தல் தேன் எடுப்பேன். 500 ரூபா போட முடியாதா என்று கேளுங்கள். தேன் வியாபாரி உங்களை மேலும் கீழும் பார்ப்பார். உங்கள் முகத்தில் ஏதாவது ஒரு அடையாளத்தை அவர் கண்டு பிடித்துக் கொள்வார். உடனே அவர், “ஹாஜியார்! முதலுக்கும் நஷ்டம். என்ன செய்வது, நீங்கள் கேட்கிறீர்கள், தருகிறேன்” என்று தேனைத் தர ஆயத்தமாவார். தயவு செய்து அந்தத் தேனை வாங்காமல் ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லி அந்த இடத்திலிருந்து அகன்று விடுங்கள்.

இந்த நாட்களில் தேன் பரவலாக புழங்குகிறது. 700 ரூபாவுக்குக் குறைய தேன் கிடைக்குமாக இருந்தால், நிச்சயமாக அந்தத் தேன் கலப்படம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில், மஞ்சள் தூளிலிருந்து மார்க்கம் வரையிலும் கலப்படம் ரொம்ப ஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தேனும் இதிலிருந்து நிச்சயமாகத் தப்ப முடியாது. தேன் வாங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.

தேனால் என்ன பிரயோசனம்?

என்னுடைய அனுபவத்தில் இரவில் தூக்கம் வராத சில நாட்களில் இரண்டு மேசைக்கரண்டி தேனும் இரண்டு மேசைக்கரண்டி வெதுவெதுப்பான நீரும் கலந்து குடித்து விட்டுத் தூங்கப் போனால், அழகான தூக்கம் நம்மை ஆட்கொண்டு விடும். எமது வேத நூலாகிய திருக்குர்ஆனில் தேனைப் பற்றி, “அதிலே எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உண்டு” எனக் கூறப்பட்டுள்ளது. கலப்படம் இல்லாத தேனை உற்பத்தி செய்யவும் விற்கவும் வாங்கவும் இறைவன் நமக்கு அருள் புரிவானாக!
***
நன்றி : ஹனிபாக்கா (slmhanifa27@gmail.com)

2 comments:

  1. நன்றி (honey )பா காக்கா !

    ReplyDelete
  2. தேனை எவ்வாறு வாங்குவது?

    "தேன் விற்பவரிடம் செல்லுங்கள். ஒரு போத்தல் தேன் என்ன விலை என்று கேளுங்கள். இன்றைய தேன் விலை 800.00 ஆகும். அவரும் 800 ரூபாவே சொல்லுவார். நீங்கள் மிக ஆறுதலாக பத்து போத்தல் தேன் எடுப்பேன். 500 ரூபா போட முடியாதா என்று கேளுங்கள். தேன் வியாபாரி உங்களை மேலும் கீழும் பார்ப்பார். உங்கள் முகத்தில் ஏதாவது ஒரு அடையாளத்தை அவர் கண்டு பிடித்துக் கொள்வார். உடனே அவர், “ஹாஜியார்! முதலுக்கும் நஷ்டம். என்ன செய்வது, நீங்கள் கேட்கிறீர்கள், தருகிறேன்” என்று தேனைத் தர ஆயத்தமாவார். தயவு செய்து அந்தத் தேனை வாங்காமல் ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லி அந்த இடத்திலிருந்து அகன்று விடுங்கள்.ஏனெனில், மஞ்சள் தூளிலிருந்து மார்க்கம் வரையிலும் கலப்படம் ரொம்ப ஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தேனும் இதிலிருந்து நிச்சயமாகத் தப்ப முடியாது"...!?? நச்...!!தேனுக்கு மட்டும் தான் காவியமா? ‘தேனப்பரு’க்கு வாழ்த்துகள்.

    - சு.மு.அகமது

    ReplyDelete