உலகப் புகழ்பெற்ற பதிமூன்று முஸ்லீம் விஞ்ஞானிகளைக்கிடையே இருக்கும் முக்கியமான ஒற்றுமையை ஒருவர் (வேறு யார், இன்னொரு 'முஸ்லீம்'தான்!) கண்டுபிடித்துச் சொல்லியிருந்தார் மெயிலில், பவர்பாயிண்ட் ஸ்லைடுடன் : 'ஜஜகல்லாஹ், எல்லாருக்கும் தாடியும் தலைப்பாகையும் இருக்கிறது!' என்று. அப்பேர்ப்பட்டவர்களுக்கு ('மெக்காவில் மழை பெய்தால் மண்ணடியில் குடைப் பிடிக்கும் நபர்கள்' - KN) அரபு இலக்கியத்தை எத்திவைக்கும் நண்பர் எச். பீர் முஹம்மதின் நூலை அறிமுகப்படுத்துகிறார் கொள்ளு நதீம் வாழ்க! - ஆபிதீன்
***
விமர்சனம் - கொள்ளு நதீம் :
இறைவனிடமிருந்து வேத வெளிப்பாடு அருளப்பட தொடங்கிய முதல் வசனமாக முஸ்லிம்கள் நம்புவது திருக்குர்ஆனின் 96வது அத்தியாயம். “தூதரே! அனைத்தையும் படைத்த உங்கள் இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக” என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இக்ரஃ என்ற மூலச் சொல்லை “வாசி” என புதிய பொருள் கொள்ள வேண்டும் என்று பின்நவீனத்துவ (முஸ்லிம்) செயல்பாட்டாளர்கள் கோரி வருகின்றனர். அதை வெகுமக்கள் தளத்தில் ஆங்காங்கே சமீபகால நிகழ்வுகளில் கேட்க நேருவது நல்லதொரு மாற்றம். தினசரி நாளிதழ் படிப்பது ஹராம் என சொல்லிக் கொண்டிருக்கும் அக்ரஹாரத்து குரல் என்னமோ இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதை மீறி காலம் முன்னோக்கி சென்று கொண்டிருக்க கடந்த மாத புத்தக கண்காட்சியின் போது இஸ்லாம் குறித்த 25 ஆண்டுகால வாசிப்பு அனுபவத்தில் எனக்கு மனநிறைவை தந்த பிரதி எழுதியவர் அதிர்ச்சியை கொடுத்தார். பொதுவாக சென்னை புத்தக கண்காட்சியின் ஏறக்குறைய எல்லா நாட்களையும் அங்கேயே கழிப்பது இளம் பருவ காதலை போல எனக்கு என்றுமே மகிழ்ச்சியை தருபவை.
ஒவ்வொரு ஸ்டாலாக ஏறி இறங்கி களைத்து போய் இருந்த போது தலைக்கு ஸ்கார்ப் போட்ட இளம் சகோதரி ஒருவர் சில ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கினார். முஸ்லிம் அல்லாத உடல், உடை தோற்றத்துடன் கூட நின்று கொண்டிருந்த நடுத்தர வயது மனிதர் அதற்குரிய பணத்தை கொடுத்தார். பிறர் அந்தரங்கத்தில் தலையிடாத போக்கை மேற்கத்தியர்களின் நேரடி பயிற்சியில் இருந்த வருடங்களில் கற்றுக் கொண்ட நெறி கட்டுப்படுத்தி வைத்திருந்த போதிலும், எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் என்கிற இந்திய மனம் அலைபாய்ந்தது. உடன் இருந்த எழுத்தாள நண்பர் கேட்டே விட்டார்.
அதற்கு அவர்கள் தான் மேலாளராக பணிபுரிவதாகவும், என் பெயர் இது என இன்னுமொரு மத பெயருடன் அறிமுகப்படுத்தி, தன்னுடன் நிற்கும் இந்த சிறுமி “எல்லா புகழும் இறைவனுக்கே” என மொழியையும், நெறியையும் பதிவு செய்த நம் சமகால மகத்தான கலைஞனின் மகள் என்றும் கூறினார். கிடைத்த வாய்ப்பை விடுவாரா முஸ்லிம் பெந்தகோஸ்தே! நன்மையை ஏவி, தீமையை தடுப்பதற்காக இறைவனால்(?) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லவா? புடலங்காய்! பண்பாட்டு பாதுகாவலர் கடமையுணர்ச்சியுடன் அவர்கள் வேறொரு கடையில் இருந்து எடுத்து வந்திருந்த புத்தகங்களை உரிமையுடன் வாங்கி பிரித்து பார்த்தார். காணக் கூடாத ஒன்றை கண்ட பதற்றம் இவருக்கு. ஏன் – இந்த புத்தகங்களை எல்லாம் வாங்கினீங்க, ஃபிரீயாக கொடுத்தால் கூட வாங்கக் கூடாத விஷம் இவை! நீங்கள் இதை கொண்டு போக வேண்டாம், என்னிடமே கொடுத்து விடுங்கள், எங்காவது வெளியே வீசி விடுகிறேன் என நிர்பந்தித்தார். (புத்தகங்களை குப்பை தொட்டியில் வீசி செல்ல நெஞ்சழுத்தம் மட்டும் அல்ல, மோடிய மனமும் கொண்டிருக்க வேண்டும், உண்மையில் குஜ்ராத்தில் வால்மீகி பற்றிய ஒரு நூல் திரும்ப பெறப்பட்டுள்ளது) அந்த இளம் சிறுமிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என் எதிர்ப்பை அனைவர் முன்னிலையிலும் பதிவு செய்தேன். தன்னைப் போல் அல்லாத “மற்றமை” மீதான சகிப்பின்மை, சுய தணிக்கைக்கு கட்டாயப்படுத்தும் பச்சை பாசிசம் இது என்றேன். மனுஷன் எதையும் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அதிகாரத்திற்கு கண்ணும் தெரியாது, காதும் கேட்காது, இருப்பது ஒன்றும் மட்டும் தான் – அது வாய் என்பார்கள். உண்மை தான் போலிருக்கிறது. பாவம் அந்த பெண், எதற்கு பிரச்சனை என்று அந்த புத்தக கட்டுக்களை இவரிடமே விட்டு விட்டு வேகமாக விலகிச் சென்றதை நினைத்து பார்க்கும் பொழுது இப்பொழுதும் உறுத்தலாகவும், நெருடலாகவும் உள்ளது. சுயதெரிவை நிராகரிக்கும், நம் தேர்வை மாற்றிப் போடும் சர்வாதிகார திணிப்பல்லவா? இது அநாகரிகமாக தெரியவில்லையா? புத்தகங்களை தடை செய்யக் கோருவதை விட அபாயகரமானது அல்லவா? நானும் சம்பந்தப்பட்ட புத்தக விற்பனையாளர், பபாசியிடம் முறையிடலாமா என நினைத்தேன். பயனில்லை! இது ஒரு மனநோய். 80-களுக்கு பிறகு தமிழக முஸ்லிம்களிடம் உருவாகி, இன்றைக்கு புரையோடிப் போய் இருக்கும் கொள்ளை நோய். நம் பாட்டன்மார்கள் வாழ்ந்த காலம் எவ்வளவு மகோன்னதமானது. ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் வேர் பிடித்து அன்னியோன்னமாக கழிந்த நூற்றாண்டுகள் அவை. திருக்குர்ஆனின் 68வது அத்தியாய தலைப்பே எழுதுகோல் (அல்கலம்) என்பதாகும். சிந்திப்பீராக!, யோசிப்பீராக என பல நூறு முறை திரும்பத் திரும்ப திருக்குர்ஆனில் உள்ளதை வாசகர்கள் காண முடியும். மெக்காவில் மழை பெய்தால் மண்ணடியில் குடைப் பிடிக்கும் பைத்தியங்கள் நிறைந்த காலத்தில் வாழ சபிக்கப்பட்டு இருக்கிறோம். நொந்துக் கொள்வது அத்துடன் நின்று விடுமா என்ன? எப்பொழுதுமே வீங்கி கிடக்கும் கட்டை விரலில் மீண்டும் தடுக்கி விழுவதைப் போல இன்னுமொரு அடி கொடுத்தார்.
நான் வைத்திருந்த புத்தக பையையும் நோட்டம் விட்டார். எச்.பீர்முஹம்மது கையெழுத்து போட்டு கொடுத்து விட்டுச் சென்ற “நவீன அரபு இலக்கிய(மு)ம்” அதில் இருந்தது. துடிப்பான நடையில் இஸ்லாமிய நூல்களை எழுத ஆரம்பித்து இருக்கும் “அந்த (முஸ்லிம்) எழுத்தாள நண்பரின்” பார்வையில் பட்டது. எடுத்து புரட்டி பார்த்து விட்டு வழக்கம் போலவே உரிமையுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு குறை கூற தொடங்கினார். என்னவென்று பார்த்தால் இந்த நூலில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் அரபு இலக்கியவாதிகள் அனைவரும் இஸ்லாமிய அறபை அதன் உண்மையான திசையிலிருந்து விலகி செல்ல வைத்தவர்கள் என்றெல்லாம் பாடம் எடுத்து விட்டார். அதை விளக்கி கூற முடியுமா என கேட்ட போது (அதாவது) “தூய இஸ்லாம் அல்லாத “புற ஜாதியார்” மாதிரியான வேறு இஸ்லாம் இவர்கள் என்பதாக அடைகுறிப்புக்குள் புரிந்து கொள்ள முடிந்தது. சரி! உங்களின் அளவுகோலில் கச்சிதமாக பொருந்தும் சரியான அரபு இலக்கியவாதிகளின் பட்டியலை தர முடியுமா என கேட்ட போது இப்னு தைமிய்யா, முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப், ஹசனல் பன்னா, ஷேக் அஹ்மத் யாசின், சாலிஹ் அல் உசைமின், அப்துல்லாஹ் பின் பாஜ், அப்துர் ரஹ்மான் அல்ஜிப்ரீன் என ஒரு போடு போட்டார் பாருங்கள், அடேங்கப்பா!
அரபு இலக்கியத்தில் பரிச்சயமில்லாத வாசகர்களின் புரிதலுக்காக மேற்கண்ட பெயர்கள் எல்லாம் இன்றைய ஊடகங்களில் வரும் இந்துமத திருவிழா கதாகளேட்சபம், கிறித்துவ போதகர்களின் உயிர்த்தெழும் கூடுகைகள்,, “இஸ்லாம் - ஒரு இனிய மார்க்கம்” என வெறும் இரைச்சல் சப்தங்களை கொட்டி தீர்க்கும் சுவிசேச பேச்சாளர்களின் தொடக்க புள்ளி அவர் பரிந்துரைத்த பெயர்களில் இருந்து தான் தொடங்குகிறது என்ற அளவில் புரிந்து கொண்டால் போதுமானது. சுருக்கமாக இப்பொழுதைய தொலைக்காட்சி சீரியல்களின் வருகைக்கு முன்னர் நமது குடும்ப பெண்களின் அமோக ஆதரவை 90-களின் ஆரம்ப காலம் வரை பெற்று இருந்த பாக்கெட் நாவலாசிரியர்கள் எழுதியதை எந்த தரவுகளின் அடிப்படையில் இலக்கியம் அல்ல எனப்படுகிறதோ அதை விட பெரிய கூத்து அவர் சொன்ன பெயர்கள். யாருக்கு கெட்ட காலமோ! இன்றைக்கு அவர் நல்லரசு என்று சொல்லும் அதே சவூதியா சகோதரத்துவ கட்சியை தன் நாட்டிலும் தடை செய்திருப்பதோடு, இஃக்வானிய நூல்களையும் பறிமுதல் செய்திருப்பதும், இனி வருங்காலத்தில் எகிப்து போன்ற பிற அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் முடியாதபடிக்கு தடையுத்தரவு (சென்சார்) செய்து விட்டது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது எவ்வளவு தீர்க்கதரிசனம் மிக்க சொல். இன்று உலகமெங்கும் முஸ்லிம் இளைஞர்கள் திசை மாறி வன்முறையின் பக்கம் செல்ல தொடங்கிய பயணம் இவர் குறிப்பிட்ட செய்யித் குதுபிலிருந்து ஆரம்பமாகிறது.
உலக இலக்கிய பேருரை எஸ்.ரா. சொற்பொழிவாற்றியதை கேட்கவென்று இந்தியா வந்து போனதும், குறிப்பாக ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் (டிவிடி) குறுந்தகட்டில் மீண்டும் மீண்டும் கண்மூடி மௌனமாக கேட்பதும் எனக்கு இப்பொழுதும் பாலைவன வெக்கையில் தகிக்கும் உணர்வை தரக் கூடிய மகத்தான அனுபவங்கள். அரபு நாடு ஒன்றில் பணியாற்றியவர் இந்நூலாசிரியர் என்கிற குறிப்போடு எச். பீர்முஹம்மத் அறிமுகமாவதைப் போல தொடர்ந்து வந்த 14 வருட வனவாசம் என் வாழ்க்கையிலும் கடந்து போனது. இந்திய நடுத்தர வர்க்கத்தின் இயல்பான சமுக பொருளாதார தேவைப்பாட்டிற்கு ஆளாகி புலம்பெயர் துயரம் எனக்கும் விதிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் என்னுடன் பணிபுரிந்த சக அரபு தோழர்களால் உரிமையுடன் ஜின்பாபா என பகடி செய்யப்பட்ட கணிணி பொறியாளார் ஜேக்கப், அரபு மொழியில் “ள்-ழ்”
போன்ற ஒலியமைப்பு இல்லாத காரணத்தால் பிள்ளை என்ற மலையாளி டிரைவர் “பில்லை அ பில்லா” என கேலி செய்யப்பட்ட பாலச்சந்திரன் என பலரும் சரளமான அரபு பேசக்கூடிய முஸ்லிம் அல்லாத சாமான்யர்களை நினைத்து பார்க்கிறேன். அதை தவிர்த்து விட்டு அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட பல இலட்சம் மோனாஃபைட் கிறிஸ்துவர்கள் இன்னும் லெபனான், பாலஸ்தீனத்தில் வசிப்பதையும் அவர்களில் பல்லாயிரம் பேர்களுடன் பழகியும் இருக்கிறேன். நாமெல்லாம் அறிந்த சிரியன் கத்தோலிக்க வங்கியும், அதை நிறுவிய கிறித்துவ மூதைதயர் அதன் மூலப்பெயரிலேயே தொக்கி நிற்கும் நதிமூலம் அரபுகள். தமிழ் வேதாகமத்தில் கர்த்தர் என்ற பெயர்ச்சொல்லுக்கு ஈடாக அரபு மொழி பைபிளில் அல்லாஹ் என்கிற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்கூடாக காண முடியும். அரபு மொழி இவர்கள் பிரித்து வைத்திருப்பதை போல தேவ பாஷை ஒன்றும் கிடையாது. அது உழைக்கும் மக்களின் எளிய மொழி. அஸ்கர் அலி இஞ்சினியர் அடிக்கடி எழுதியும், பேசியும் வந்ததை போல ஒட்டகம், தேன் போன்றவற்றை குறிக்க ஆயிரம் சொற்களை சேர்த்து வைத்திருக்கும் இயற்கை மொழி. பயன்பாட்டு தேவையின் பொருட்டு உள்ளூர் அரபிக்காரன் பயன்படுத்தும் சொல்லைக் கொண்டே அதன் தன்மையை உணர்ந்து கொள்ளலாம் என்கிற அளவுக்கு அழகான செம்மொழி அது.
இருபதாண்டுகளுக்கு முன்னர் அம்மா இல்லாத ரம்ஜான் என எழுதப்பட்டு இருந்த கவிதையை அறிமுகப்படுத்தி கடைசி பக்கத்தில் ஒரு பத்தி வந்து இருந்தது. இதை வேறு எந்த ஒரு மதத்தவனும் தனக்கேற்றபடி அம்மா இல்லாத பொங்கல், அம்மா இல்லாத கிறிஸ்துமஸ் என தன் விருப்பப்படி மாற்றி வாசித்தாலும் அதன் இலக்கிய தரத்தில் எந்த குறையும் வந்துவிடப் போவதில்லை, காரணம் அம்மா இல்லாத பண்டிகை நாள் எவருக்குமே வலியை தரக்கூடிய பொதுவான மானுட துக்கம் என்பதாக சுஜாதா சொல்லி இருப்பார். அந்த கணையாழி இதழ் இப்பொழுதும் என் சேமிப்பில் உள்ளது. அதை எழுதியது வேறு யாருமல்ல, “கருத்து ராஜா” மனுஷ்யபுத்திரன் தான்.
இப்பொழுதும் எங்கள் வீட்டு பரணில் கையோடு கொண்டு வந்திருந்த அரபு தினசரி, வார, மாத இதழ், நல்ல இலக்கிய பத்திரிக்கைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இஸ்லாம் என்ற பெயரில் தமிழகத்தில் கடை விரித்து இருக்கும் ”மதனி”களில் எவருக்குமே அந்த அரபு நூல்களில் எழுதப்பட்டு இருக்கும் விஷயங்களை கிரகிக்கும் திறன் இருக்குமா என்கிற கேள்வியெல்லாம் பின்னர் கேட்க வேண்டியது. அதற்கு முன்னர் அவைகளை படித்து அதன் பொருளை அவர்களால் சொல்ல முடியுமா என்பதிலேயே எனக்கு ஐயமுண்டு. ஆரம்ப பள்ளிகூடங்களில் கணக்கு பாடம் சொல்லித் தந்த செல்வராஜ் சாரும், மேல்நிலை வரை அறிவியல் பாடம் எடுத்த இஸ்மாயில் சாரும் உலகின் பெரிய கணித மேதையாகவும், விஞ்ஞானியாகவும் சிறுபிள்ளையாக இருந்த போது நான் நினைத்து இருந்து இருக்கிறேன். பிற்பாடு கல்லூரியில் பட்டம் எல்லாம் வாங்கி(?) வந்து, உண்மையான நிஜ பல்கலைக்கழகமான வாழ்க்கை சொல்லிக் கொடுத்தது. இவர்கள் எல்லாம் வெறும் பாடங்களை நடத்திய சாதாரண வாத்திமார்கள், எடுக்க வேண்டிய (syllabus) பாடங்களை தாண்டி எதுவுமே தெரியாது, விஞ்ஞான மனம் அவர்களுக்கு கிடையாது என்பதை விளங்கி கொண்டேன். இந்த முஸ்லிம் பார்ப்பனர்களும் வெறுமனே இஸ்லாத்தின் மூலப்பிரதியில் உள்ள சில புத்தகங்களை மட்டுமே படித்து விட்டு வந்து உலகின் மிக நெடியதும், வளமான மரபை கொண்ட மொழிகளில் ஒன்றான அரபு மொழியை ”மதம்” பிடித்த மாதிரி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய படைப்பில் மிகப்பெரும் முயற்சிகளையும், பரிமாற்றங்களையும் செய்தவர்கள் அரபு இலக்கியவாதிகள் என எச். பீர்முஹம்மத் சரியாகவே பதிவு செய்து இருப்பதை போல அதை தமிழ் உலகுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டு இருப்பதாகவே நினைக்கிறேன். தமிழீழ போரின் சாதக / பாதகங்களை அலசி கொண்டிருக்கும் இந்த கட்டத்தில் உலகெங்கும் சிதறடிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் மூலம் பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும் தமிழ் குரல் இலக்கியமாக பதிவாகி வருவதை சமீபகால புத்தக சந்தைகள் ஆவணப்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., ப.ராமஸ்வாமி, அப்துற்றஹீம் போன்ற முன் சென்ற தலைமுறை மொழிப்பெயர்ப்பாளர்கள் அதுவும் ஆங்கிலம் ஊடாக தமிழுக்கு மொழியாக்கம் செய்து வந்தனர். ஆனால் இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக பிரெஞ்சு, சீனம், ஜெர்மனி, இலத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க மொழியிலிருந்து நேரடியாக்கம் செய்யும் அளவுக்கு நிலமை முன்னேறி இருக்கிறது.
இன்றைக்கும் இந்திய சினிமாவில் அரபுகள் பாத்திரம் நம்மூர் பாதிரிமார் போடும் நீண்ட அங்கி, குறுந்தாடி, கனத்த உடல், குறைந்தபட்சம் இரண்டு இளம் பெண்களுடன் கிளப்புகளில் எச்சில் ஒழுகி திரியும் காமுகமனாகவே சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு எந்த விதத்திலும் குறை வைக்காத முறையாக உள்ளூர் முஸ்லிம் ஏஜெண்ட்கள் அவர்களை பின்பற்ற தகுந்த முன்மாதிரி மனிதர்களாகவே காட்டி வருகின்றனர். அதற்கு மாற்றாக உள்ளது உள்ளபடியே எச். பீர்முஹம்மதின் இந்த நூல். எழுத்தாளர்கள். கவிஞர்கள், கதை சொல்லி, காட்சிஊடக கலைஞன் என 18 இலக்கியவாதிகளை அடையாளம் காட்டுகிறது. அவர்களில் ஐந்து பெண்களும் உள்ளனர். அதே எண்ணிக்கையில் தனியான நேர்காணல்களும் அடக்கம். சிறுகதை, நாவல், கட்டுரை என கதம்பமாக, கவனமான அரேபிய அறிமுக நூலாக இது வெளியாகி உள்ளது.
மற்றபடி ஒரு தேர்ந்த எழுத்தாளரின் வார்த்தைகளில் சொல்வதானால் வெறுமனே அங்கிங்கென ஒரு சில மேற்கோள்களை எடுத்துப்போட்டு, பாராட்டி சாதாரண விமர்சனம் அல்லது மரபார்ந்த நூல் அறிமுகம் எழுத எனக்கு விருப்பமில்லை. என்னால் அவ்வாறு செய்யவும் இயலாது. மஹ்மூத் தர்வேஷ், உமர் கய்யாம் போன்ற ஆளுமைகள் தமிழுக்கு பரிச்சயமாகி மாமாங்கமாகி விட்டது. ஆனால் இன்றைய தேதியில் அரபு மொழியை கலக்கி கொண்டிருக்கும் எழுத்தாளர்களை தெரிந்து கொள்ள செய்வதில் எச். பீர்முஹம்மத் நிச்சயம் வெற்றி கொண்டிருக்கிறார் என்பதை சொல்லியாக வேண்டும்.
தற்கால
அரபு இலக்கியத்தை ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் கடையநல்லூர் ஷாஹுல் ஹமீத், வாணியம்பாடி இல்யாஸ் போன்ற சிலர் சுட்டிக் காட்டியதை போல அப்பாஸ் மஹ்மூத் உக்காத், முஸ்தஃபா மன்பூழி, அஹ்மத் அமீன் போன்ற விடுபடல்கள் உள்ளன என்ற போதிலும் அது போன்ற இன்னும் சிலரை மறுபதிப்பு செய்யும் போது சேர்த்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கிறேன். மத்திய கிழக்கு பற்றிய இம்மாதிரியான எழுத்தின் தேவை தமிழ் சூழலில் நிறையவே இருக்கிறது என்பதை வழிமொழிந்தவனாக வெளியீட்டாளர் அனுஷ் கான் பஷீருக்கும் சேர்த்து நன்றி சொல்ல வேண்டும். காரணம் முண்டாசு போட்ட மீசை கவிஞன் பாரதி நூறாண்டுகளுக்கு முன் பாடி விட்டு போனானே…
சென்றிடுவீர் எட்டு திக்கும், கொண்டு வந்து சேர்ப்பீர் கலைச்செல்வம் யாவும்!!
**
நன்றி : கொள்ளு நதீம் (kollunadeemahmed@gmail.com) , எச். பீர் முஹம்மது (http://mohammedpeer.blogspot.com/) , எதிர் வெளியீடு (ethirveliyedu@gmail.com)
**
”இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக பிரெஞ்சு, சீனம், ஜெர்மனி, இலத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க மொழியிலிருந்து நேரடியாக்கம் செய்யும் அளவுக்கு நிலமை முன்னேறி இருக்கிறது”...!
ReplyDeleteஉண்மை தான்.ஆனால் அதை அப்படியே புரியாத பாணியில் எடுத்து வைப்பதால் எந்த லாபமும் இல்லை. நமக்கும் புரியனும் படிக்கிறவங்களுக்கும் தெரியனும்.’ச்சார் தின் கி சந்தினி’யாக இல்லாமல் நாகூர் சலீம் அவர்கள் இயற்றின நாகூர் ஹனிபா அவர்களால் பாடப்பட்டு இன்று அதை வேற்றோரும் ‘அடாப்ட்’செய்து கொண்டுள்ளதை பற்றியும் பேசலாம்.’இறைவனிடம் கையேந்துங்கள்....’
அடுத்து, ”சென்றிடுவீர் எட்டு திக்கும், கொண்டு வந்து சேர்ப்பீர் கலைச்செல்வம் யாவும்”...சொன்னவர் ’கொண்டு வந்து’ சேர்த்ததையே இன்னும் சரிவர அணுகாதிருக்கும் நம்மிடம் கீழைதேசிய சிந்தனைகளை விதைக்க முயற்சிக்கிற உமது நேர்மையை பாராட்டியே ஆக வேண்டும்.
- சு.மு.அகமது