Sunday, October 20, 2013

துப்பாக்கி பற்றிய கவிதைகள் - எம். ஏ. நுஃமான்




துப்பாக்கி பற்றிய கவிதைகள்

எம். ஏ. நுஃமான்

***
துப்பாக்கிக்கு மூளை இல்லை

துப்பாக்கிக்கு மூளை இல்லை
இதயமும் இல்லை
விரல் அதன் விசை அழுத்த வெடிக்கும்
உயிர் குடிக்கும்
கருவில் இருக்கும் குழந்தையின் எனினும்

விரலே என் விரலே
மூளையும் இதயமும் உள்ள என் விரலே
ஒரு கணம் யோசி
மீண்டும் ஒருகணம்
குறிசரியா என திரும்பவும் யோசி

இன்னும் நூறு ஆண்டுகள் போயினும்
உன்குறி சரி என
மக்கள் கூறும் திசையினில் மட்டுமே
விசையினை அழுத்து

அன்றேல்
‘நீயும் ஓர் கொலைகாரன்’ என
வரலாறு என் நெற்றியில் எழுதும்

1988

***

உனது போர்

தோழனே
யாருடன் பொருதினாய் நீ
யாரிடம் தோற்றாய் இறுதியில்

உன் துப்பாக்கி
உன் கண் ஒன்றைக் குறிபார்த்துச் சுட்டது
நீ அரைக் குருடானாய்

உன் துப்பாக்கி
உன் காது ஒன்றைக் குறிபார்த்துச் சுட்டது
நீ அரைச் செவிடானாய்

உன் கை ஒன்றையும் துளைத்துச் சென்றது
உன் துப்பாக்கிக் குண்டு
நீ ஒரு சொத்தியன் ஆனாய்

உன் கால் ஒன்றும் பலியாயிற்று
உன் துப்பாக்கிக் குண்டுக்கு
நீ முடவனும் ஆனாய்

தோழனே
நீ உன்னுடனே பொருதினாய்
உன்னிடமே தோல்வியுற்றாய்
உனது உடலும் ஊனமுற்றது
உனது போரும் தோல்வியுற்றது.

1995

***

பதிலீடு

இரண்டு துப்பாக்கிகள்
மாடிப்படி ஏறி
என் வாயிலைத் தட்டின

சன்னல் இடுக்கால் எட்டிப் பார்த்தேன்
இரண்டு துப்பாக்கிகள்
மரணப் பசியுடன்
வாயிலைத் தட்டின

உயிராசை துரத்த
ஓடினேன் பின்கதவால்
உயிர் என் கைப்பிடியில்

மனைவி தாழ்திறக்க
தள்ளித் திறந்தன துப்பாக்கிகள்
‘அப்பா இல்லை’ என்றான் மகன்
‘நீ இருக்கிறாய்தானே வாடா வெளியே’
துப்பாக்கிகள் அவனைக் கவ்விச் சென்றன

என் இளம்தளிர்
என் விந்தில் விளைந்த குருத்து
இளங்காலையில்
தெருவோரம்
இரத்தம் உறைந்த தரையில் கிடந்தது
கருகி

1988

***

பிணமலைப் பிரசங்கம்

பின்னர்
அவர் பிணமலையை நோக்கிச் சென்றார்
பிணங்கள் விழுந்து கிடந்த தெருக்களில்
இடறி விழுந்தவாறு
அகதிகள் அவரைத் தொடர்ந்தனர்

புதைப்பதற்கு இடமின்றியும்
எரிப்பதற்கு விறகு இன்றியும்
குவிந்து கிடந்த பிணமலையில்
அவர் ஏறினார்

அகதிகளைப் பார்த்து
அவர் பின்னர் பேசினார்

பொறுமை இழந்தவர்கள் என்னுடன் வாருங்கள்
அடிபணிய மறுத்தவர்கள் என்னுடன் வாருங்கள்
துப்பாக்கியின் எதிரிகள் என்னுடன் வாருங்கள்
வாழ்க்கையின் ரசத்தை உங்களுக்குப் பருகத் தருகிறேன்
பூலோக சுவர்க்கத்தை உங்களுக்குக் காட்டுகிறேன்

உங்கள் கழுத்தில் மிதித்துக்கொண்டு
உங்கள் விடுதலைக்காகப் போரிடுவோரை
நம்பாதீர்கள்

பிறரின் உரிமையைப் பறித்தவனுக்கு ஏது உரிமை
பிறரின் சுதந்திரத்தை மதியாதவனுக்கு ஏது சுதந்திரம்
பிறரின் சமத்தவத்தை மறுத்தவனுக்கு ஏது சமத்துவம்

துப்பாக்கிக் குழாயிலிருந்துதான்
அரசியல் அதிகாரம் பிறக்கிறது
என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
அதே குழாயிலிருந்துதான்
அடிமைத்தனமும் பிறக்கிறது
வன்முறைதான் விடுதலையின் மருத்துவச்சி
என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
விடுதலையின் கருச்சிதைவும் அதுதான்

துப்பாக்கியை நேசிப்போரை நேசியாதேயுங்கள்
துப்பாக்கியின் பாசையைப் பேசாதேயுங்கள்

அவர் பிரசங்கம் முடியுமுன்
அவரது பிடரியைக் குறிபார்த்து நின்ற
துப்பாக்கி வெடித்தது
பிணமலை இன்னும் ஓர் அடி உயர்ந்தது

1991

***

வெண்புறாவின் வருகைக்காகக்
காத்திருந்தபோது

வெண்புறாவின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருந்தேன்
என் வாசல் முற்றத்தில்

பருந்துதான் வந்தது முதலில்
என் கோழிக் குஞ்சுகளைத் தூக்கிச் சென்றது

பின்னர்
வல்லூறு வந்து குந்தியது
என் முற்றத்துத் தென்னையில்

அது எறிகணை பீய்ச்சியதில்
என் வீடும் வாயிலும்
பிய்ந்து சிதறின
என் உயிர் அழிந்தது
நான் மீண்டும் அகதியானேன்

-1997

**

பயங்கரக் கனவு

பயங்கரக் கனவுகண்டு
அலறி விழித்தேன்
நாக்கு உலர்ந்து
அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
பின்னிரவுக் குளிரிலும்
வியர்த்துக் கொட்டியது
பயங்கரக் கனவுதான்

இரண்டு அரக்கர்கள்
இருவரின் தலைகளும் வானத்துக்கப்பால்
இருவரின் கால்களும் பாதாளத்துக்குக் கீழ்
குரூரம் முகத்தில் தெறிக்க
என் இளம் காதலியை
இழுத்துக்கொண்டிருந்தனர்

இவள் எனக்கு என்றான் ஒருவன்
இல்லை எனக்கு என்றான் மற்றவன்
அவள் விழிகள் பிதுங்கி
கண்ணீர் சிந்தின
கைகள் பிய்ந்துவிடும்போல்
குருதி சிந்திற்று

இல்லை அவளை விடுங்கள்
விட்டுவிடுங்கள்
அவள் எனக்குரியவள் என்று கத்தினேன்

கண் விழித்தாலும்
நாக்கு உலர்ந்து அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
இன்னும் இதயம் பதறியது
இரவுக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது
கனவுதான்
பயங்கரக் கனவு

24.7.97

***


அவர்களும் நீயும்

ஜீப்வண்டியில் வந்தனர்
உன் வீட்டுக் கதவைத் தட்டினர்
விசாரணைக்காக
உன்னை இழுத்துச் சென்றனர்

உன் தாய் அழுதாள்
கதறினாள்
மன்றாடினாள்

அவர்களின் முகாமுக்குச் சென்று
விசாரித்தபோது
இல்லை
நாங்கள் கூட்டிவரவில்லை
என்று மறுத்தார்கள்

உன் தசை பிய்ந்து
எலும்புகள் நொறுங்கி
உன் இரத்தம் மண்ணில் கலந்தது

இப்போது உன்முறை

நீ காட்டுக்குள் இருந்து
கால்நடையாக வந்தாய்
என் வீட்டுக் கதவைத் தட்டி
விசாரணைக்காக என்னை இழுத்துச் சென்றாய்

என்தாய் அழுதாள்
கதறினாள்
மன்றாடினாள்

உன் முகாமுக்கு வந்து
விசாரித்தபோது
இல்லை
நாங்கள் கூட்டிவரவில்லை
என்று மறுத்தாய்

என் தசை பிய்ந்து
எலும்புகள் நொறுங்கி
என் இரத்தமும் மண்ணில் கலந்தது.

-1997

***

மரித்தோரின் ஆன்மா

சிங்கமும் புலியும்
கடித்துக் குதறிய
மனிதத் தசையும்
குருதியும்
எலும்புக் குவியலும்
சிதறிக் கிடக்கின்றன நிலமெங்கும்

தப்பிச் சென்றோரின் உடல் ஊனமுற்றது
இதயம் கிழிந்துபோயிற்று
உணர்வு மரத்துவிட்டது

நீ கேட்கிறாய்
யார் போர்க் குற்றவாளி என்று

கடவுளே
இந்த விலங்குகளிடமிருந்து
எங்களை ஏன் உன்னால்
காப்பாற்ற முடியவில்லை
என்று புலம்புகிகிறது
மரித்தோரின் ஆன்மா

2009

***

நீ தூக்கிய துப்பாக்கி

நீ துப்பாக்கியைத் தூக்கிய பிறகு
மரணத்துடன் விளையாடத் தொடங்குகிறாய்
நீ யுத்தத்தில் இறங்கிய பிறகு
படுகொலையின் நெடுஞ்சாலையில்
நடக்கத் தொடங்குகிறாய்

நீ உன் எதிரியைக் கொல்ல முனைகையில்
எதிரி உன்னைக் கொல்ல முனைகிறான்
நீ உன் எதிரியின் குடிகளை அழிக்கும்போது
எதிரி உன் குடிகளை அழிக்கிறான்

நீ அவன் கொலைகளைக் கண்டிக்கும்போது
அவன் உன் கொலைகளைக் கண்டிக்கிறான்
உன் நண்பர்கள் உனக்காகக் கொடி பிடிக்கின்றனர்
அவன் நண்பர்கள் அவனுக்காகக் கொடி பிடிக்கின்றனர்

நான் உங்கள் இருவருக்கும் எதிராகக் குரல் உயர்த்துகிறேன்
நான் கூறுவது இதுதான்
நீங்கள் துப்பாக்கியைக் கீNழுவைக்கும் வரை
அது உங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கும்

இனி எப்போது?

இனி
வேறு விசயங்களைப் பற்றி எழுதலாம்
ஆனாலும்
கொலைக் களத்திலிருந்து
மரணத்தின் வாடை இன்னும் வீசுகிறது
குரூரத்தின் நிழல்
என்னைப் பின்தொடர்கிறது
வன்மமும் வெறுப்பும்
என்னை வழிமறித்து நிற்கின்றன
துவேசத்தின் குரல் காற்றில் ஒலிக்கிறது
மேலாதிக்கத்தின் கரங்கள்
என் கழுத்தைச் சுற்றிவளைக்கின்றன

ஜன்னல்களையும் கதவுகளையும்
இறுகச் சாத்தித்
தனி அறைக்குள் இருந்தாலும்
சுவாசிக்கும் காற்றில்
கசப்புக் கரைந்திருக்கிறது

இனி எப்படி வேறு விசயங்களைப்பற்றி எழுதுவது?
அன்பையும் காதலையும் பற்றி
இனி எப்போது எழுதுவது?


சிறுவனின் தோளில் துப்பாக்கி

சிறுவனின் தோளில்
அமர்ந்திருந்தது துப்பாக்கி
அதைக் கண்ட நான்
ஒதுங்கிச் சொன்றேன்

நில், என்றது துப்பாக்கி
யார் நீ, பெயர் என்ன
எங்கிருந்து வருகிறாய்
எங்கு போகிறாய்
காட்டு உன் அடையாள அட்டையை
திற உன் பையை
சரி நீ போ என்றது துப்பாக்கி

சிறுவனின் தோளில்
மீண்டும் அமர்ந்தது துப்பாக்கி
அதன் முகத்தில் விறைப்பு
சிரிப்பே இல்லை


துப்பாக்கி பற்றிய கனவு

துப்பாக்கியைக் கனவுகண்ட
காலம் ஒன்றிருந்தது
அது புரட்சியைக் கொண்டுவரும்
விடுதலைக் கம்பளத்தை
என் வாசல் முற்றத்தில் விரிக்கும்

துப்பாக்கிதான் எத்தனை அழகு
என் காதலியின் தொடைபோல்
அதன் வளவளப்பு
விறைத்த குறிபோல்
அதன் கிளர்ச்சி

துப்பாக்கியைக் கைகளில் ஏந்தி
முகர்ந்து முத்தமிட்டேன்
அது வெடித்தபோது
அந்தோ
என் மூக்கும் முகமும்
பிய்ந்து சிதறின

என் கனவு கலைந்தது


இனி புதிதாக

எல்லாவற்றையும் மறந்துவிட்டு
இனி நாம் புதிதாக வாழத் தொடங்கலாம்

கழுவிவிடு என் இரத்தக்கறைகளை
கழுவுகிறேன் நான் உனதை

உன் பாவங்களுக்காக
நான் பிரார்த்தனை செய்கிறேன்
என் பாவங்களுக்காக
நீ பிரார்த்தனை செய்

இன்று நாம்
சபதம் செய்துகொள்வோம்
நீ என் எல்லைகளையும்
நான் உன் எல்லைகளையும்
தாண்டுவதில்லை என

எல்லாவற்றையும் மறந்துவிட்டு
இனி நாம் புதிதாக வாழத் தொடங்கலாம்

வா
என் கட்டில் உனக்காகக் காத்திருக்கிறது
உன் கட்டிலில்
எனக்காக ஒரு தலையணை
போட்டுவை

21. 12. 2010

***

நன்றி : எம். ஏ. நுஃமான் , எஸ்.எல்.எம். ஹனீபா

1 comment:

  1. ப்ளஸ்-ல் நண்பர் வாசுபாலாஜி :
    சிறுவனின் தோளில் துப்பாக்கி. திரும்பத் திரும்ப படிக்கிறேன். எவ்வளவு எளிமை. அதில் எத்தனை வேதனை. எத்தனை செறிவு. துப்பாக்கி மறைந்து சிறுவன் சிறுவனுக்கு பதில் துப்பாக்கின்னு மாய்மாலம் பண்ணுது.

    ReplyDelete