Monday, October 7, 2013

விட்டல் ராவின் உன்னதங்கள் - எஸ்.எல்.எம். ஹனீபா

அன்புள்ள ஆபிதீன், 

வெய்யில் நெருப்பாகக் கொதிக்கிறது. இந்த வருட ஆரம்பத்தில் காய்த்த தென்னை மரங்கள் தலைக்காயுடனேயே தலையெழுத்தை முடித்துக் கொள்ளும் போல் தெரிகிறது. மனத்தில் இன்றெல்லாம் பெரும் வலி. கடந்த ஏழு வருடங்களில் இவ்வருடத்து வறட்சி மிகக் கொடுமையானது. விட்டல் ராவின் நூலைப் பார்த்தீர்களோ நானறியேன். நானும் மகன் ஸபீர் ஹாபிஸும் இதை டைப் பண்ணி அனுப்புகிறோம். 

அன்புடன்
ஹனீபாக்கா 
***


வாழ்வின் சில உன்னதங்கள்

1970களில் வீறு  கொண்ட நவீன தமிழ் கலை இலக்கிய முன்னோடிகளில் விட்டல் ராவ் முக்கியமான ஆளுமை. நல்ல சிறுகதையாளராக மட்டுமல்லாமல், போக்கிடம், நதிமூலம், வண்ணமுகங்கள் போன்ற அவரின் நாவல்களால் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். 

நூற்றாண்டைக் கடந்து விட்ட தமிழ் நாவல்களின் வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் நிச்சயமாக போக்கிடம் அதிலொன்றாக இருக்கும். அது மட்டுமல்ல, நல்ல புகைப்படக் கலைஞர், ஓவியர், வரலாற்று ஆர்வலர் என்று அவர் செயல்பாடு நீள்கிறது. 

இன்று தான் வாழ்ந்த காலத்தினூடே பார்த்துப் பழகிப் படித்துப் பரவசமடைந்த எழுத்தின் மீதும் மனிதர்கள் மீதும் கொண்ட பற்றுதல் காரணமாக தன் வாழ்வின் உன்னத தருணங்களை அவர் நமக்கு அளித்திருக்கும் அருமையான கட்டுரைகளின் தொகுப்புத்தான் "வாழ்வின் சில உன்னதங்கள்" என்ற நூலாகும். 

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விஜய் ரி.வி. விருது விழாவில் பங்கேற்கச் சென்ற மதிப்புமிகு கவிஞர் அனார் வசம், பாரத தேசத்தில் எனது பிள்ளையாக நான் கொண்டாடும் என்னருமை ஷாஜி (எழுத்தாளர், இசை விமர்சகர், நடிகர் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)) எனக்கு அன்புடன் வாங்கியனுப்பிய நூலும் இதுவே. 

இந்த புத்தகம் பற்றி இன்னுமொரு சிறப்பான தகவல். பாரத தேசத்தில் தேசியளவில் கலைஞர்களை கௌரவிக்கும் "குசுமாஞ்சலி விருது" இவ்வாண்டின் தொடக்கத்தில் திரு விட்டல் ராவ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நமது வாழ்த்துக்கள். சிறப்பான அந்த நூலிலிருந்து நம் சமூகத்தின் கண்ணியத்திற்குரிய இளமையில் நமக்கெல்லாம் தன்னம்பிக்கையூட்டிய பன்னூலாசிரியர் அவர்களுக்கும் விட்டல் ராவ் அவர்களுக்குமான உறவின் ஒரு பத்தியை ஆபிதீன் பக்க நேயர்களுக்காக இங்கு பதிவேற்றம் செய்கிறேன். 

-------------------

"இன்னா வோணும்?" கேட்டார் பாய். 

"மத்தியானம் வந்திருந்தப்ப போஸ்ட் பத்திரிகைகள் கொஞ்சமிருந்திச்சி. பார்த்து வச்சிட்டு, இதோ போயிட்டு வர்ரேனு போனேன். இப்ப அதைக் காணோம்"

"அவ்ளோதான், வித்துப் போச்சி."

"சொல்லி வச்சிட்டுப் போனனே?"

"சொல்லிட்டுப் போனா, அதே ஞாபகமா எனுக்கு? வியாளக்கெளம தர்கா நாளுக்கூட்டம். எதனாச்சி அட்வான்சு குடுத்திட்டுப் போயிருந்தா ஞாபகமிருந்திருக்கும். ஒத்தரு எப்பவும் வருவாரு நம்போ கடைக்கு. காலேஜு புரொபசரு. கேட்டாரு, குடுத்திட்டேன்"

என் பழம்புத்தகக் கடையனுபவத்தில் ஏற்பட்ட முதல் அனுபவமாக அதை எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். அறை வாசலில் நின்றிருந்த போது அடுத்த அறை வாசலில் வசிக்கும் நண்பர் - இன்னும் அறிமுகமே ஆகாத நிலையில் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது கையில் வைத்திருந்த பத்திரிகைகளைத் தற்செயலாகப் பார்த்தேன். 

சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் பத்திரிகைகள்!

"சார், மன்னிக்கணும், ஒரு நிமிஷம்" என்றேன். 

அவர் தன் அறை வாசலில் நின்றவர், திரும்பிப் பார்த்து முறுவலித்தார். என் பெயரைச் சொல்லிக் கொண்டேன். 

"ஓ, டெலிஃபோன்ஸிலயிருக்கீங்களா? நான் அப்துல் ரஹீம். நியூ காலேஜில் புரொபசராயிருக்கேன். உள்ளே வாங்க" என்றார். 

உள்ளே டெல்லி மோடாக்கள் ஒன்றில் உட்கார்ந்தேன். செட்டென்று கைலிக்கு மாறிக் கொண்டவர், வெகு விரைவில் மண்ணெண்ணெய் ஸ்டவ்வை ஏற்றி தேநீர் தயாரித்து விட்டார். இடைச்சி மார்க் பால் மணம் தேயிலை மணத்தையும் மீறியிருந்தது. என் ஒரு கண் மேஜை மீது அவர் வைத்த போஸ்ட் இதழ்கள் மீதே இருந்தது. 

"இதெல்லாம் பாருங்களேன். வேணுமானா எடுத்திட்டுப் போய் படிச்சிட்டுக் கொண்டாங்க"

"எங்கே வாங்கினது?"

"தர்கா பக்கத்தில, ஒரு கடையில..."

"தெரியும், மத்தியானம், அங்கே இதையெல்லாம் பார்த்து வச்சிட்டு ரூமுக்குப் போய்ட்டு வர்ரேனு சொல்லி வந்தேன். காசையெடுத்திட்டுப் போனா, வித்துப் போச்சினு சொல்லிவிட்டார் அந்தப் பெரியவர்"

"அடடா, நீங்க பாத்து வச்சதா இதெல்லாம்? நா மாமூலா அவர்கிட்டே வாங்கறேன். கேட்டதும் குடுத்திட்டாரு. ஒங்களுக்கு வேணும்னா எடுத்துக்குங்க."

***
எழுத்தாளர்களின் அனுபவங்கள் எத்துணை உன்னதமானது. நமது மனக்கண்ணில் அப்துல் ரஹீமும் விட்டல் ராவும் அப்துல் ரஹீம் தயாரித்த பால் தேநீரும் ஆவி பறக்கும் காட்சியாக அலைபாய்கிறது. 

அண்மைக்காலமாக இப்படியொரு கட்டுரைத் தொகுதியை நான் படிக்கவில்லை. எத்துணை விஷயங்கள் .எத்துணை மனிதர்கள். புத்தகத்தை வாங்கியனுப்பிய ஷாஜிக்கும், பத்திரமாக என்னிடம் கைளயளித்த கவிஞர் அனாருக்கும், இந்த நூலை தேடிப் படிக்கப் போகும் நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 

பழம் புத்தகங்களை வழங்கிய கரீம் பாய் பற்றிய கதையை வரும் நாளில் பதிவேற்றம் செய்கிறேன். 


அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா

No comments:

Post a Comment