Thursday, April 4, 2013

மருத்துவ இளவரசர் இப்னு சீனா - இரண்டாம் பகுதி

மஞ்சக்கொல்லை மன்னர் ஹமீதுஜாஃபரின் தொகுப்பில்...

முதல் பகுதி : http://abedheen.blogspot.com/2013/04/blog-post.html

***

மருத்துவ இளவரசர் இப்னு சீனா - 2


Medicine and Biology
 
பொதுவாகவே கிரேக்க தத்துவம் மட்டுமல்ல மருத்துவமும் அன்றைய இஸ்லாமிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அனேக கிரேக்க நூல்கள் அரபி மொழிக்கு மாற்றப்பட்டிருந்தன. ஹிப்போகிரட்ஸ், கேலன், அரிஸ்டாட்டிலின் மருத்துவக் கொள்கைகளைப் பின்பற்றி இப்னு சீனாவின் நூல்கள் இருந்தன. மேலும் கானூன் ஃபில் தீப் கேலனின் மருத்துவக் கொள்கையிலிருந்து புதிதாக எதுவும் சொல்லாவிட்டாலும் ஐயத்திற்கு இடமில்லாத சிறப்பான விளக்கத்தை அளிக்கிறது. இப்னு சீனாவுக்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹுனைன் பின் இஸ்ஹாக் , அலி பின் ரப்பான் தாப்ரி, முஹம்மது பின் ஜக்கரியா ராஜி போன்றோர்கள் முறையாகவும் மதிநுட்பத்துடனும் மருத்துவத்தைப் பற்றி விளக்கியுள்ளனர் என்று The Encyclopaedia of Iranica குறிப்பிடுகிறது.
 
மருத்துவத்துறையைப் பொருத்தவரை இப்னு சீனா இரண்டு முக்கிய நூல்களை அளித்துள்ளார். ஒன்று கானூன் ஃபில் தீப் (The Law  of Medicine) மற்றொன்று கித்தாப் அல் ஷிஃபா (The Book of Healing). 1015 க்கு முன்பே கானூனை எழுதத் தொடங்கிவிட்டார்.
 
 
இது 5  பெரும் பாகங்களைக் கொண்டது.  பாகம் 1, மருத்துவ விஞ்ஞானம் பற்றியது. இதனுள் நான்கு உட்பிரிவுகள். (முதல் பிரிவில் உடற்கூறு, அது உருவாக்கப்பட்ட four elements-நீர், நெருப்பு, காற்று, மண்; Four Humors- இரத்தம், சளி, மஞ்சள்பித்தம், கரும்பித்தம்; உடல் உள் வெளி உறுப்புக்கள் அமைப்பு (சதை, எலும்பு, நரம்பு, தமணி) அவைகளின் செயல்பாடு முதலானவை; பிரிவு 2, நோய்களின் காரணமும் அறிகுறியும்; பிரிவு 3, உடல்நலம் பேணல் மற்றும் preventive medicine; பிரிவு 4, சிகிட்சை மற்று உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை விரிவாக்கியிருக்கிறார்.)  பாகம் 2,  அரபு எண்கணித வரிசையில் (அப்ஜத்- د ج ب ا) 800க்கும் மேற்பட்ட மருந்துகள் (mostly of vegetable origin but with many animal and mineral substances). பாகம் 3, உச்சி முதல் பாதம் வரையிலான நோய்கள் பற்றி முறையாகப் பேசப்படுகிறது. பாகம் 4, நோயின் விளைவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள் (care of the hair, skin, nails, body odor and treatment of overweight/underweight) மற்றும் மஸாஜ் உடற்பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள். பாகம் 5, மருந்துக் குறிப்பு அட்டவணை (The Formulary  which contains some 650 compound prescriptions - theriacs, elctuaries, potions, syrups etc, ).
 
ஒரு மருத்துவர் தனது தொழிலில் எந்த அளவு கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதை தனது மருத்துவ நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
 
• மருந்து தற்செயலாகக்கூட புறச்சார்புடையதாக இருக்கக்கூடாது.
• சிக்கலில்லாமல் எளிமையாக உபயோகிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
• இரு எதிர்நிலையான நோய்களை குணப்படுத்துமா என்பதை சோதித்தறிந்திருக்கவேண்டும். ஏனென்றால் ஒரு நோயை குணப்படுத்தும் வேளையில் மற்றொரு புதிய நோயை உருவாக்கக்கூடாது.
• நோயின் தன்மையைப் பொருத்து மருந்தின் வீரியம் இருக்கவேண்டும். ஏனென்றால் அது வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும்.
• கொடுக்கக்கூடிய மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
• சோதனைகளை மனித உடம்பில்தான் நடத்தவேண்டுமே ஒழிய குதிரை, சிங்கம் போன்ற விலங்கினத்தின்மீது நடத்தக்கூடாது. காரணம் அம்மருந்து மனிதனுக்கு பலனளிக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
 
கித்தாப் அல் தீப் Andrea Alpago(d. 1520) வால் இத்தாலியில் மொழிபெயர்க்கப் பட்டது. 1593ல் ரோமில்  அரபி பதிப்பு கிடைத்தது. 1491ல் நேபிள்ஸில் ஹீப்ரு பதிப்பு வெளியானது. 12ம் நூற்றாண்டில் Gerard of Cremona வால்  லத்தீனில் மொழிபெயர்க்கப் பட்டது. 15ம் நூற்றாண்டில் முப்பது வருடங்களில் பதினாறு முறை பதிப்பிக்கப்பட்டது. 16ம் நூற்றாண்டில் இருபதுக்கு மேற்பட்ட பதிப்புகள் வெளியாயின. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இந்நூல் பிரசுரிக்கப்பட்டது. Lonvain University யில் 18ம் நூற்றாண்டு வரை பாடபுத்தகமாக வைக்கப்பட்டிருந்தது. அனேக ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ் பல்கலைக் கழகங்களில் பல நூற்றாண்டுகள் மருத்துவ பாடமாக போதிக்கப்பட்டது.
 
கித்தாப் அல் ஷிஃபா الشفاء کتاب(The Book of Healing)
 
இப்னு சீனாவின் புகழ் பெற்ற நூல்களின் ஒன்றான கித்தாப் அல் ஷிஃபா 1014 ல் தொடங்கி 1020 வாக்கில் முடித்ததாகவும் 1027ல் வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதில்  தர்க்கம், இயற்கை அறிவியல், கணிதம், இறைமெய்இயல் (metaphysics)  ஆகிய நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டது. கணிதத்தை  quadrivium of arithmetic, geometry, astronomy and music என நான்கு பிரிவுகளாகப் பிரித்து அவற்றில் ஒவ்வொன்றையும் பல உட்பிரிவுகளாக பிரித்திருக்கிறார். வரைகணிதத்தை(Geometry)  geodesy, statics, kinmatics, hydrostatics, optics எனவும்; வான்இயலை astronomical & geographical tables, calendar எனவும்; Arithemetic ஐ அல்ஜிப்ரா, இந்திய கூட்டல் கழித்தல் எனவும்; இசையை இசைக் கருவிகள் என உட்பிரிவுகளாக பிரித்திருக்கிறார்.
 
யூக்லிடின் eliments ஐ பின்பற்றி இப்னு சீனாவின் வரைகணிதம் (geometry) இருந்தது. முன் வந்த இஸ்லாமிய அறிஞர்களின் கோட்பாட்டை பின்பற்றியே இவரது வரைகணிதம் இருந்தாலும்  பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கோடு, இணைகோடு, கோணம், முக்கோணம், areas of parallograms and triangles, geometric algebra, regular polygons, proportions relating to area of polygons, volumes of polyhedral and the sphere என அனைத்தையும் வரைகணிதத்தில் விவரித்துள்ளார்.
 
'கித்தாப் அல் தபியியாத்' என்ற பகுதியில் ஆறு அத்தியாயங்களில் கனிமம் மற்றும் உலோகவியல் கட்டுரையில் மலைகள் உருவான முறை, மேகங்கள் உண்டாவதில் மலைகளின் பங்கு, நீர் ஆதாரங்கள், பூகம்பம் எழுமிடங்கள், கனிமங்கள் உருவாகும் விதம் மற்றும் நிலப்பரப்பின் பன்முகத்தன்மை ஆகியவற்றை விரிவாக எழுதியுள்ளார். இதன் ஆதாரங்களாக இரு கொள்கைகளை முன் வைக்கிறார். முதலாவதாக பல்வேறு உலோகங்கள் உருவாக உறைந்த ஆவிகள் (condensed vepors) முக்கிய பங்கு வகுக்கிறது என்ற அரிஸ்டாட்டிலின் தத்துவம்.  இரண்டாவதாக Mercury-Sulphur ன் பங்கும் தன்மைகளைப் பற்றி கூறும்போது ஜாபிர் பின் ஹையானின்  அல்கெமிக் கொள்கை.
 
கனிமம், தாவரம், விலங்கின உலகினை ஓர் ஒழுங்குமுறையோடு ஒருங்கிணைத்து கூறியுள்ளது பின்னர் புவிஇயல் மற்றும் கனிமங்களின் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது. மேலும் விண்கற்களின் (meteor)அமைப்பு, படிவுப்பாறை(sedimentary rock) உருவாக்கம், மலைகள் உண்டாக பூகம்பத்தின் பங்களிப்பையும் விளக்கியுள்ளதோடு கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தொல்படிமங்கள்(fossils) எப்படி மலையுச்சியில் கிடைக்கின்றன என்பதையும் துல்லியமாக விளக்கியுள்ளார்.
 
இப்னு சீனாவின் பங்களிப்பைப் பற்றி Stephen Toulmin  , மற்றும் Goodfield கூறும்போது கி.பி 1000 ல் இப்னு சீனாவின் மலைத்தொடர்கள் பற்றிய அனுமானம், 800 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடிப்படைக்கூற்றை  கிருஸ்துவ உலகம் கண்டறியப்படவேண்டியிருந்தது என்கின்றனர்.
 
உளவியல்
 
அரிஸ்டாட்டிலின் உளவியல் கொள்கையைச் சார்ந்தே இவரது கொள்கையும் அமைந்துள்ளது. ஆன்மா(soul) நிறைநிலை பெற்றது(entelechy) என்கிறார் அரிஸ்டாட்டில். கப்பலின் மாலுமி போன்றது என்கிறார் இப்னு சீனா. அது உடம்பை விட்டும் தன்னிலையான இருப்பைக் (existence) கொண்டது என விளக்கம் அளிக்கிறார்.
 
மனமும் அதன் இருப்பும்(existence), மனதிற்கும் உடம்பிற்குமுள்ள தொடர்பு, உணர்வு(sensation), புலனுணர்வு(perception) முதலானவற்றை கித்தாப் அல் ஷிஃபாவில் விளக்கும்போது, மனம் தன் ஆதிக்கத்தை உடம்பின்மீது செலுத்துவது சாதாரண நிகழ்வாகும். எனவே மனத்தின் விருப்பப்படி உடம்பு செயல்படுகிறது. இது முதல் நிலை. இரண்டாம் நிலையில் மனவெழுச்சியிலும்(emotion) மன உறுதியிலும் (will) தன் செல்வாக்கை செலுத்துகிறது. ஆழமான பள்ளம்(chasm) அல்லது உயரமான இரு கோபுரங்களின் இடையே பாலம் போல் போடப்பட்ட குறுகிய பலகையை ஒருவன் கடக்கும்போது ஒரு பிடிமானம் தேவைப்படுவதின் காரணம் பயம் ஏற்படுவதால் என்பதை  இங்கே உதாரணமாகக் காண்பித்துவிட்டு எதிர்மறை மனவெழுச்சி(negative emotion) மரணத்தையும் விளைவிக்கும் என்கிறார்.  அறிதுயில் (hypnosis-al wahm al amil) நிலையைப் பற்றி விளக்கமளிக்கும்போது செய்யப்படுபவரின் இசைவு இருந்தால் மாத்திரமே செய்யமுடியும் என்கிறார்.
 
உடல் உள நோய்களை எப்போதுமே ஒன்றாக இணைத்தே பார்க்கிறார். உளச்சோர்வு (மன அழுத்தம்-depression) ஒரு வகையான mood disorder, அது சந்தேகத்தையும் ஒரு வித பயத்தையும்(phobias)  ஏற்படுத்திவிடும். உளச்சோர்விலிருந்து(melancholia) பைத்தியத்தனம்(mania) வரை கோப உணர்வு கொண்டுச்செல்லும் என்று விளக்கம் அளிக்கும் இப்னு சீனா தலையினுள் இருக்கும் ஈரத்தன்மை (humidity inside the head) mood disorder ஆவதற்கு ஒரு வகையில் உறுதுணையாக இருக்கிறது, ஒரு மனிதன் அதீத மகிழ்ச்சியில் இருக்கும்போது அதிக அளவு காற்றை சுவாசிக்கிறான். அக்காற்றில் இருக்கும் ஈரம்(moisture) மூளையை சென்றடைகிறது, அதன் அளவு மூளை ஏற்றுக்கொள்ளும் அளவைவிட அதிகப்படும்போது மூளை தன் விவேகத்தை (rationality) இழந்து mental disorder நிலைக்கு இழுத்துச்செல்கிறது என்கிறார். மேலும் நினைவாற்றல் குறைவு, காக்காய் வலிப்பு, கெட்டகனவு(nightmare) இவைகளுக்கான அறிகுறிகளும் அதற்கான சிகிட்சை  முறைகளையும் எழுதியுள்ளார்.
 
மன நோயாளிகளைக் குணப்படுத்த இவர் பிரத்தியேக முறையைக் கையாண்டார். பாரசீக இளவரசிக்கு melancholia எனப்படும் உளச்சோர்வு நோயும், மாயமருட்சி அல்லது திரிபுணர்வு எனப்படும் delusion  நோயும் ஒரு சேரத் தாக்கி தன்னை பசுவாக பாவித்து வந்தவளை முற்றிலுமாக குணப்படுத்திய முறையும் சுல்தானுடைய மகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை அசைக்கவே முடியாத நிலையை மனோரீதியான முரட்டு வைத்தியம் செய்து குணப்படுத்தியதும் உதாரணங்களாகும்.
 
இறைமெய்யியல் (Metaphysics)
 
ஆரம்பகால இஸ்லாமிய தத்துவமும், இறைமெய்இயலும் இஸ்லாமிய இறையியலில்(Islamic theology) இரண்டரக் கலந்திருந்தன. இது அரிஸ்டாட்டிலிய சாரம்(essence) மற்றும் இருப்பு(existence) தத்துவத்தின் வித்தியாசத்தைக் காட்டிலும்  தெளிவாக வேறுபடுத்தியது. இப்னு சீனாவின் இருப்பு(existence) சார்ந்த தத்துவம் அல் ஃபராபியின் கொள்கையைச் சார்ந்தே இருக்கிறது.  அல் ஃபராபியைத் தொடர்ந்து இப்னு சீனாவும் உள்ளமை(being) பற்றிய சந்தேகத்திற்கு முழு ஆய்வை மேற்கொண்டு சாரத்திற்கும் (மாஹியத்-essence) இருப்பிற்கும் (உஜூது-existence) இடையிலான சிறப்பை தெளிவு படுத்துகிறார்.
 
இப்னு சீனாவின் நோக்கம் அறிவியல் மற்றும் மதத்திலுள்ள அனைத்து அம்சங்களையும்  இறைமெய்இயலில் (metaphysics) ஒருங்கிணைக்கும் முயற்சியாக இருந்தது. அவரது கண்ணோட்டத்தில் பிரபஞ்சம் உண்டானதைப் பற்றியும் தீமையின் தொல்லை, இறைவணக்கம், இறையருள், முன்னறிவுப்புகள், அற்புதங்கள், அதிசயங்கள் ஆகியவற்றையும் விளக்க முயற்சிப்பதோடு மதச்சட்டம், மனிதனின் இறுதி விதி தொடர்பான விளைவு பற்றியும் இதனுள் அடக்கியிருக்கிறார்.
 
அறிவுநெறிஇயல் (Epistemology)
 
இப்னு சீனாவின் இரண்டாவது செல்வாக்கு மிகுந்த கருத்துருவம் அறிவைப் பற்றிய கோட்பாடு. மனிதனுடைய அறிவு பிறப்பிலேயே ஒரு குறிப்பிட்ட அமைப்பில் அட்டவணைபோல் அமைந்திருக்கிறது. தூய்மையான பேராற்றல் அல்லது திறன் கல்வியின் வழியாகவே உண்மையாக்கப்படுவது தெரியவருகிறது. அனுபவ பரிச்சயத்தை அடிப்படையாகக் கொண்ட பழக்கத்திலிருந்தே உலகிய அறிவு பெறப்படுகிறது. அது வளர்ச்சியுற syllogistic (நேரியல் வாத) முறையே காரணமாயிருந்தது. அவ்வறிவு மூல அறிவாற்றல் (material intellect-அக்ல் அல் ஹயுலானி)லிருந்து வளர்த்துக்கொண்ட நிலையையும், இயக்க அறிவாற்றலில் (active intellect-அக்ல் அல் ஃபால்) இருந்து பெறப்பெற்ற பேராற்றலையும் தன்னுள் தக்கவைத்துக்கொள்கிறது. இவ்விரண்டின் இணைப்பே மனிதன் பெற்ற சரியான புத்திசாலித்தனமான அறிவாகும்.
 
இப்னு சீனாவின் அறிவுநெறிஇயலை(Epistemology) இறையறிவுடன் தொடர்பு படுத்துவது சிக்கலான காரியமாகும். தெய்வீகம் தூய்மையானது, தூலமற்றது எனவே குறிப்பிட்ட விஷயத்தை அதன் நேரடி அறிவுநெறியில் உட்படுத்த முடியாது. இவ்வுலகில் அவிழ்க்கப்படாத விஷயங்களும் உலகலாவிய முறையில் பிரபஞ்ச குணங்களும் என்ன எங்கே என்பதும் இறைவனுக்கே தெரியும் என்ற முடிவுக்கு இப்னு சீனா வந்தார்.
 
(தொடரும்)
 
***
Refer Sources in Part 1
***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

2 comments:

  1. அருமை நானா தொடருங்கள். அமைதியாக மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் அவ்வளவு விஷயங்கள்.

    ReplyDelete