Wednesday, April 10, 2013

மலர்மன்னன் எழுதிய கடைசி நூல் - அசோகமித்திரன்


முதலில் தாஜ்-ன் அஞ்சலி...
 
மறைந்த எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் எனக்கு விசேசமானவர். பிரியத்திற்குரியவர்! எழுபதுகளில் அவர் சிறுபத்திரிகைகள் நடத்தியதோ, நாவல்கள் எழுதியதோ, தேர்ந்த எழுத்தாளர் என்கிற ஆகிருதி கொண்டு பல வாராந்தரிகளில் மதிப்புடன் வலம் வந்தவர் என்பதோ, அறிஞர் அண்ணா 1967-தேர்தலின் போது மூதறிஞர் ராஜாஜியோடு கூட்டணி அமைத்த போது மலர்மன்னன் அண்ணாவை கொண்டாடியவர் என்பதோ, அண்ணாவின் மதிப்பையும் பெற்றவர் என்பதோ... நான் அவரை எதிர்கொண்ட தருணத்தில் அறிந்தவன் இல்லை. அதனையெல்லாம் அவரோடு நட்பு கொண்ட பின்னாட்களில் அறியவந்தது.
 
 
நான் அறியவந்தபோது அறிய வந்ததெல்லாம், அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ராஜாஜிக்குப் பிறகு தமிழகத்தில் இழந்துவிட்ட பிராமண ஆதிக்கத்தை மீட்க நினைத்தவர், பெரியாரால் தனது குலத்தின் மீது படிந்த கறைகளை நிவர்த்தி செய்ய முனைந்தவர், இஸ்லாமியர்களின் எதிரான குரலுக்கு வலு சேர்த்தவர், பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைய தன் முழு நேர உழைப்பையும் தந்தவர்... என்பன போன்றவைகள்தான்.
 
 
1998-ல் இண்டர்நெட் உபயோகத்திற்கு வந்த போது, தமிழ் வலைத் தளங்கள் சில சிறிதும் பெரிதுமாக அதில் அரங்கேறின. அந்த வகையில் மிக பெரிய அளவிலான, அழகிய வடிவமைப்போடு கூடிய வலைத்தளமாக 'திண்ணை' நெட்டில்  வலம்வர ஆரம்பித்தது. 'திண்ணை' அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சிலரால் வெளிவந்தது. அதன் ஆசிரியர், அவரது இளமைப் பருவத்தில் இடதுசாரி சார்ந்தவராக அறியவரப்பட்டாலும்... திண்ணை அப்படி இல்லை. எல்லா கருத்துக்களுக்கும் திண்ணை இடம் கொடுத்தது. அதில் கூடுதலான இடத்தை தமிழ் ஆர்.எஸ்.எஸ். உயர் ஜாதி நண்பர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மேலே பாரதிய ஜனதா அரசு அமைய வேண்டும் என்பதில் அழுத்தம் கொண்ட எண்ணம் இருந்தது.
 
 
அந்தக் காலக்கட்டத்தில் பாரதிய ஜனதா முன் நிறுத்திய முதல் அரசியல் எதிரி முஸ்லிம்கள்தான். அது ஏன் என்று இன்றுவரை நான் சரியாக அறிய முடியவில்லை. அதனால் என்னவோ, வாராவாரம் வந்த திண்ணையில் எழுதிய உயர் ஜாதி நண்பர்கள் இஸ்லாமியர்களை பலவித விமர்சனங்களின் வழியே சீண்டிக் கொண்டே இருந்தனர். அல்லது எதிர்த்துக் கொண்டே இருந்தனர்.

2003 தொட்டு நான் திண்ணையை வாசிக்க தொடங்கியிருந்தாலும், 2004-ல்தான் அதில் நான் எழுதத் தொடங்கினேன். கவிதை / கட்டுரை / விவாதம் / விமர்சனம் / சிறுகதை என்று பலவற்றையும் அதில் நான் எழுதினேன். இதற்கிடையில், உயர் வகுப்பினரின் இஸ்லாமிய எதிர்ப்பு விமர்சனங்களும், இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பும், கேலியும் கிண்டலும் சகிக்க முடியாத அளவுக்கு அதில் போய் கொண்டிருந்தது.
 
 
எல்லா மதமாச்சரியங்களையும் நான் அந்நியமாக பார்ப்பவன் என்பதால், அவர்களின் அந்த எதிர்ப்பாளர்களில் இருந்து தள்ளியே போய் கொண்டிருந்தேன். என்றாலும் அவர்கள் பெரியதோர் குழுவாக இணைந்து பல்வேறு கோணத்திலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிக் கொண்டிருந்தார்கள்.

எப்படிப் பார்த்தாலும் இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர்கள்தான். பாரதிய ஜனதா என்கிற அரசியல் கட்சிக்காரர்கள் ஆட்சிக்கு குறிவைத்தால் அவர்கள் முழுமையாக எதிர் கொள்ளவேண்டியது காங்கிரஸ் கட்சியைத்தான்.

ஆனாலும் நாட்டில் இஸ்லாமியர்களின் ஆட்சி நடப்பது மாதிரி இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆங்காங்கே பெரிய பாதிப்புகளைத் தந்து சீண்டிக் கொண்டேயிருக்க, திண்ணையில் எழுதிய அக் கட்சியின் சகபாடிகளும் அதே எதிர்ப்பை எழுத்தில் காட்டினார்கள். அப்படி எழுதிய பெரியதோர் குழுவுக்கு, ஆசான் ஸ்தானத்தில் இயங்கியவர் அண்ணன் மலர்மன்னன் அவர்கள்.

ஒரு கட்டத்தில், எனக்கு இஸ்டமான பெரியாரின் கருத்துக்களை கையில் ஏந்தியப்படிக்கு, இடதுசாரி சிந்தனையோடு, திண்ணையில் இயங்கிய உயர் ஜாதிக்காரர்களின் தீவிர இந்து எழுச்சி எழுத்துக்களை தயவு தாட்சண்யமற்று விமர்சிக்கத் தொடங்கினேன். அந்தப் பக்கத்து முக்கிய நபர்கள் எல்லாம் ஆர்வமாய் என்னை எதிர்க்க, நானும் பயமற்று அவர்களின் எழுத்துக்களின் முரண்பாட்டை எதிர்கொண்டு தீர விமர்சித்தேன். ஒரு எல்லையில் அத்தனை எதிர்ப்பாளர்களுமே நண்பர்களாகிப் போனார்கள். அவர்களின் ஆசான் ஸ்தானம் வகித்த மலர்மன்னன் அவர்கள் கூடுதல் நட்பை முன்வைத்தார்.

திண்ணையில் தொடர்ச்சியாக நான் ஆறு சிறுகதைகள் எழுதினேன். அந்த ஆறு சிறுகதைகளையும் தட்டாது தேர்வு செய்தது மலர்மன்னன் என்பது என் யூகம். அது மட்டுமல்லாது, அந்தச் சிறுகதைகளை உடனுக்கு உடன் பாராட்டி மெயிலும் எழுதுவார். என் கதைகள் குறித்து அதில் சிலாகிக்கவும் செய்தார். பெரிய பத்திரிகைகளில் நான் எழுதணும் என்று வற்புறுத்தினார். 'குடத்திற்குள் எரியும் வெளிச்சமாக இருந்தால் போதாது' என்பார். கலை இலக்கிய உலகில் விபரதாரியான அவரது பாராட்டுகள் எனக்கு உற்சாகத்தையே தந்தது. தொடர்ந்து மலர்மன்னன் அவர்களோடு சில வருஷம் மெயில் தொடர்பில் இருந்தேன்.

திண்ணை இந்து தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி இருப்பதாக, திண்ணையின் நட்பு வட்டத்தைச் சேர்ந்த நண்பர் பி.கே.சிவகுமார், திண்ணையிலேயே திறந்த கடிதமொன்றை எழுதினார். அதில்,  மலர்மன்னன் அவர்களின் திண்ணைஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார்.பரபரப்பை ஏற்படுத்திய திறந்த கடிதம் அது! நான் அக்கடிதத்தை வரவேற்று, பி.கே.சிவகுமார் அவர்களுக்கு ஆதரவாக அவர் எழுதியுள்ள அத்தனை வரிகளும், கால் புள்ளி அரைப் புள்ளி முதலாக அத்தனையும் உண்மை என்று அடுத்த வாரத்தில் திண்ணையில் நான் கருத்து வைத்திருந்தேன். இந்த கருத்தையொட்டி மலர்மன்னன் அவர்கள் மெயில் எழுதி என்னிடம் வருத்தப்பட்டார். நான் நிஜத்தைத்தானே எழுதினேன் என்கிற நிலையில் நின்றேன்.

பி.கே. சிவகுமாரின் திறந்த கடிதத்திற்குப் பிறகு, திண்ணையில் உயர் ஜாதி இந்து தீவிரவாத அரசியல் சற்று குறையவும் குறைந்தது.

இத்தனைக்குப் பிறகும், சிலமாதங்கள் கழித்து, மலர்மன்னனின் மெயில் எனக்கு வரத் தொடங்கியது. அதில் பெரும்பாலான மெயில் நலம் விசாரிப்பாகவும், நான் படிக்கவேண்டிய புத்தகங்கள் குறித்தும் எழுதிக் கொண்டிருந்தார். அவரை நான், பெரிய அண்ணன் ஸ்தானத்தில் கடைசிவரை மனதில் கொண்டிருந்தேன். ஒரு மூன்று மாதங்களுக்கு முன் கூட, ஒரு பெரிய பத்திரிகைக்கு உன் கதையை அனுப்பிவைக்க சம்மதமா? என்று திரும்பத் திரும்ப மெயில் எழுதிக் கேட்டார். நான் சம்மதம் செய்யவில்லை. அவர் தீவிரமான ஆர்.எஸ்.எஸ். அபிமானி, அவர் குறிப்பிடும் இதழும் அப்படியாகிப் போய்விடுமோ என்கிற ஓர் யோசிப்பில்தான் நான் சம்மதம் செய்யாமல் நழுவினேன். இங்கே நழுவினேன் என்பது, அந்தப் பெரியவருக்கு நான் மெயில் எழுதாது விட்டதைக் குறிப்பிடுகிறேன்.

இன்றைக்கு அவரது மறைவு செய்தியை கணையாழியின் (ஏப்ரல் 2013) வாயிலாகத்தான் அறியவந்தேன். மலர்மன்னன் குறித்து அசோகமித்திரன் எழுத எழுத என் கண்கள் பனித்தன. அவரை நான் நேரில் கண்டதில்லை என்றாலும், அவரோடு பலகாலம் பழகிய நட்பு இறுக்கமாக என்னுள் தங்கி இருக்கிறது.
-தாஜ்

***

அஞ்சலி:



மலர்மன்னன் எழுதிய கடைசி நூல்

அசோகமித்திரன்         

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்கு மலர்மன்னனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிக நெருக்கமாக இருந்த நாங்கள் ஒரு காரணமும் இல்லாமல் தொடர்பே இல்லாமல் போன இடைவேளைகள் உண்டு. அவருடைய முகவரி, தொலைபேசி எண் எல்லாம் மாறியிருக்கும். இந்த முறையும் அப்படித்தான்.

ஆனால் சில மாதங்களாக அவருடைய பெயர் பல பத்திரிகைகளில் காணக் கிடைத்த வண்ணம் இருந்தது. வாழ்க்கை மீதும் சமூகம் மீதும் அவருடைய ஈடுப்பாட்டைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.

அவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். அதே போலத் தொலைபேசியில் அவர் பேசும் போதும் அவர் சிரித்த முகமாகப் பேசுவதை உணரமுடியும். அவருடைய உடல் நிலை சில காலமாகவே சரியில்லை என்று நான் பிற்பாடு அறிந்து  கொண்டேன். ஆனால் அவர் பேச்சில் சிறிதளவு அலுப்புக் கூட இல்லை. பாம்பன் சாமி சமாதி அருகில் தான் ஒரு சாமியார் போல இருப்பதாகச் சொன்னார். அதையும் சிரித்துக் கொண்டே. மறைந்த எழுத்தாளர் தி.ஜ.ரங்கநாதனுடைய குடும்பத்துக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொன்னார்.

அவர் எழுதிய ஒரு நூல் மதிப்புரை எனக்கு நினைவுக்கு வந்தது. மிகவும் நன்றாக இருந்ததாகச் சொன்னேன். அதைவிட நான்கு மாதங்கள் முன்னர் வெளிவந்த அவருடைய ஒரு புது நூலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொன்னார். "இனியும் கையால் எழுதிக் கொண்டிருக்காதீர்கள். கை வலிக்கத் தொடங்கினால் லேசில் சரியாகாது" என்று எனக்கு யோசனை கூறினார். ஆனால் அவரே பிப்ரவரி 9-ஆம் தேதி மறைந்து விட்டார். வயது 73.

அவர் குறிப்பிட்ட நூல்தான் 'திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்.' அவருடைய முந்தைய நூல்கள் இரண்டைப் படித்திருக்கிறேன். இந்த நூலும் மிகவும் சிறப்பாக மிகுந்த உழைப்புக்குப் பிறகு எழுதப்பட்டிருந்தது. அவருடைய ஆதாரங்களைத் தனியே அடிக்குறிப்புகள், பின்னிணைப்புகள் என்றில்லாமல் நூலிலேயே குறிப்பிட்டு எழுதியிருந்தார். வறட்டு ஆய்வு நூலாகப் போயிருக்கக்கூடியதை கடைசிப் பக்கம் வரை படித்த பிறகே கீழே வைக்கக் கூடிய சுவாரசியமும் பொருள் பொருந்தியதாகவும் ரசாயனம் செய்திருந்தார்.

இதைப் படித்த பிறகுதான் 'திராவிட' என்ற பெயர்ச்சொல் ஆரம்ப முதலே எவ்வளவு குழப்பமாகவே செயல்பட்டிருக்கிறது, இன்றும் செயல்பட்டிருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆதி சங்கரர் காலத்தில், அதாவது குறைந்தது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் காசிப் பண்டிதர்கள் அவரை 'திராவிட சிசு' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்! அதாவது, தெற்கிலிருந்து வந்திருக்கும் சிறுவன். இந்த நூற்றாண்டு 'திராவிட' செயல்பாட்டில் கடைசி வரை தெளிவுடன் இயங்கியவர் எஅடேச முதலியார். ஆனால் அவர் 1937லேயே இறந்து விடுகிறார்.

மலர்மன்னன் நூல் நெருடலே இல்லாமல் விளங்குவதற்கு மறைமுகக் காரணம் அதன் நடையும் பிழையற்ற தயாரிப்பும். சென்னை கிழக்குப் பதிப்பகம் இன்றைய சாத்தியங்களில் நூலைச் சிறப்பான முறையில் தயாரித்திருக்கிறது. பின் அட்டையில் நூலைப் பற்றிய குறிப்பு விரிவாகவே இருக்கிறது. ஆனால் நூலாசிரியர் பற்றி ஒரு தகவலும் இல்லை!

மலர்மன்னன் ஒரு சிறந்த நாவலாசிரியர். நான் படித்த இரு நாவல்களை என்னால் மறக்க முடியாது. ஒன்று 1970 அளவில் அவர் வேலைக்குப்போகும் ஒரு பெண்ணை முன்வைத்து எழுதியது. இரண்டாவது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் நடப்பட்ட பயங்கர சாதிக்கலவரப் பின்னணியில் எழுதப்பட்டது.

எப்போதும் மலர்ச்சியும் உற்சாகமும் கொண்ட ஒரு மனிதரை நாம் இழந்துவிட்டோம். அவருடைய இறுதி நாள்களைப் பந்தங்களைத் துறந்து ஒரு துறவியாக வாழ்ந்திருந்தாலும் அவருடைய சமூக அக்கறையும் எழுத்தாற்றலும் கடைசிவரை நீடித்திருக்கிறது.

***

மேலும்...

அஞ்சலி:
மலர்மன்னன் பற்றி அசோகமித்திரன் (ஆழம்)

மலர்மன்னன் பற்றி வெங்கட் சாமிநாதன்

மலர்மன்னன் பற்றி ஹரன் பிரசன்னா

4 comments:

  1. திண்ணையில் வந்த ஒரு இஸ்லாமிய கவிதைக்காக, அதற்கு மறுப்பு தெரிவித்தல் என்ற போர்வையில் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் திண்ணைக் கும்பல் மலர் மன்னனின் தலைமையில் கக்கிய விசம் கொஞ்ச நஞ்சமல்ல...

    ReplyDelete
  2. ஒ.நூருல் அமீன்April 11, 2013 at 2:08 PM

    /அந்தக் காலக்கட்டத்தில் பாரதிய ஜனதா முன் நிறுத்திய முதல் அரசியல் எதிரி முஸ்லிம்கள்தான். அது ஏன் என்று இன்றுவரை நான் சரியாக அறிய முடியவில்லை./
    தாஜ் சொல்வதை நம்புகின்றோம்!!!!

    மைனாரிட்டி பிராமணர்கள் எதிர்புணர்வை முன் வைத்து பிராமணரல்லாதாரின் ஓட்டை தன்வயப்படுத்திக் கொண்ட திராவிட கட்சிகளின் அதே ஃபார்முலாவைத் தான் இந்துத்வாவும் கையிலெடுத்தது. இஸ்லாமிய மைனாரிட்டியின் துவேசத்தை முன்வைத்து இந்துக்களின் ஓட்டை பெற முயல்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்தே. ஆனால் திராவிட இயக்கத்தின் பிராமணிய எதிர்ப்பு வெறும் ஓட்டுக்கான யுக்தியல்ல. பல்வேறு காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை பிராமண சமுதாயம் முதலிய உயர் சாதி இந்துக்களுக்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் இழப்பு (Opportunity loss).

    பாதிப்படைந்த பிராமண சமூகம் பிராமணரல்லாதாரின் ‘பிராமண எதிர்புணர்வை’ ‘இந்துத்வா’ எனும் ஆயுதெமெடுத்து ‘இஸ்லாமிய எதிர்புணர்வாக’ மடைமாற்றம் செய்வதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. அதில் மன்னர் மன்னன் போன்றவர்களின் பங்களிப்பும் கணிசமானது என்பது துரதிஷ்டவசமான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. 'மைனாரிட்டி பிராமணர்கள் எதிர்புணர்வை முன் வைத்து பிராமணரல்லாதாரின் ஓட்டை தன்வயப்படுத்திக் கொண்ட திராவிட கட்சிகளின் அதே ஃபார்முலாவைத் தான் இந்துத்வாவும் கையிலெடுத்தது.' என்றிருக்கிறார் நூருல். அவரது பார்வை கிட்டத்தில் சரியே.

      RSS, முஸ்லீம் மைனார்ட்டிகளை எதிரியாக முன் நிறுத்திப் பார்த்த யுக்தியினை தமிழகத்தில் மட்டும் அவர்கள் செய்தார்கள் என்றால், நூருல் அமீனின் கூற்று 100 சதவீதம் சரியாக இருந்திருக்கும். ஆனால், RSSகாரர்கள் முஸ்லீம் மைனார்ட்டிகளிடம் காட்டிய எதிர்ப்பென்பது, இந்தியா முழுமைக்குமானது!

      நூருல் அமீனின் கூற்று சரியென்கும் பட்சம், பெரியாரின் பிராமண எதிர்ப்பை உல்டா செய்து, RSS காரர்கள் வடக்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றே கொள்ள வேண்டியிருக்கும். பெரியாரின் பிராமண எதிர்ப்பின் துவக்கம் 1925. RSS- இயக்கத்தின் தொடக்கம் கிட்டத்தட்ட 1935 என்று நினைக்கிறேன். அப்படியெனில் பெரியாரின் தியரியை உல்டா செய்திருக்கிறார்கள்! நூருல் அமீன் குறிப்பிட்டிருக்கிற மாதிரி, பெரியாரின் பிராமணர்கள் எதிர்ப்பில் அர்த்தமிருந்தது. RSS-சின் இஸ்லாமியர்களின் எதிர்ப்பில் அத்தனைக்கான அழுத்தம் கொண்ட அர்த்தம் ஏதுமில்லை.

      தமிழகத்தில், திமுகவை பெரியாரின் திராவிட கட்சியோடு ஒப்பிட முடியாது. பெரியார்தான் பிராமண எதிர்ப்பை கடைசிவரை நீர்த்துப் போகாமல் செய்தார். திமுக அப்படியல்ல. அவர்கள் முதன் முதலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்த 1967 தேர்தல் கூட்டணியில், தமிழக பிராமணர்களின் ஆகிருதியும், இந்திய முழுமைக்கும் அறியப்பட்ட உயர் ஜாதி இந்துவான மூதறிஞர் ராஜாஜி அங்கம் வகித்தார். அதாவது, பெரியாரிடமில்லாத. ஓர்வித பிராமண இணக்கம் திமுக-விடம் இருந்தது. தவிர, காமராஜை முன் நிறுத்தி காங்கிரஸ் அரசை திமுக விமர்சித்த விதமும் அளவும்... அளவுக்கு அதிகமானது.

      வடக்கே RSSசின் அரசியல் அமைப்பான ஜனசங்கமோ, பின் பெயரை மாற்றிக்கொண்டு பாரதிய ஜனதாவாக பெயர் போட்ட போதோ... அவர்களின் முழு அரசியல் எதிர்ப்பென்பதே முஸ்லீம்கள் மீதானதே. இத்தனைக்கும் முஸ்லிம்கள் இந்தியாவில் 20சதவீதமேயான மைனார்ட்டி மக்கள். அவர்கள் முயன்றால் கூட பத்து எம்.பி.களுக்கு மேல் வர இயலாது! என்றாலும் முஸ்லிம் சிறுபான்மையினரை இம்சிப்பதென்பதை இந்துத்துவாக்கள் ரசனையில் ஒன்றாகவே இருந்தது. அவர்கள் மேடையில் முழங்கிய பிரதான கொள்கையே பாபர் மசூதியை இடிப்பதுதான். ராமருக்கு அங்கே கோவில் கட்டுவதும்தான்!

      திண்ணையில் நான், //பாரதிய ஜனதா முன் நிறுத்திய முதல் அரசியல் எதிரி முஸ்லிம்கள்தான். அது ஏன் என்று இன்றுவரை நான் சரியாக அறிய முடியவில்லை./// நான் குறிப்பிட்டிருப்பதானது கூட, பாபர் மசூதியை அவர்கள் இடித்தப் பிறகான காலகட்டத்திலானது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகும் கூட அவர்களின் வன்மம் குறையவில்லை. சீறிவந்தப்படி இருந்த அந்த முஸ்லிம் எதிப்பைதான் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்று சுட்டி வியந்திருந்தேன்! என் கனக்கு சரியாக இருக்கும் என்றால், அவர்களின் அந்த அதீத சீற்றம் குஜராத்தில் குவிந்து பேயாட்டம் அடி, பல முஸ்லீம் மக்களின் உயிர்களை பலிக் கொண்டே அடங்கியது.
      ,
      இன்றைக்கு, முஸ்லீம்களின் எதிர்ப்பு அரசியலில் அவர்கள் போட்ட கணக்கு தப்பாகிப் போய் எதிர்பார்த்த இந்துக்களின் ஓட்டு குவியவில்லை என்கிற நிலை! மத்தியில் தங்களது அரசு அமைக்க முடியாமல் தட்டிக் கொண்டே போவதென்பது என்பது அடுத்த நிலை! அனுபவப் பூர்வமான மனவலியோடு. இதனையெல்லாம் உணர்ந்தவர்களாகதான், இப்போது இஸ்லாமிய எதிர்ப்பு என்கிற சுருதியை மட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

      எப்படிப் பார்த்தாலும் அடிப்படையில், நூருல் அமீனின் பார்வையை சரியான பார்வைதான்

      Delete
  3. மலர் மன்னனின் மறைவுக்குக்கான தங்களின் அஞ்சலியை படித்ததும் அவர் மீதுள்ள வருத்தம் சற்று குறைந்தது. இறுதி மூச்சுவரை-இந்துத்வ கொள்கையை சுவாசித்துக் தீவிர முஸ்லிம் எதிர்ப்பாளராக - வெறுப்பாளராக ('முகமதிய எதிர்ப்பாளராக') இருந்தே மறைந்துவிட்டார்.அனுபவமும் - ஆற்றலும் வாய்ந்தவர் ஆர்.எஸ்.எஸ் மூளைச்சலவைக்கு அடிமையாகி இந்திய முஸ்லிம்களை 'தேசப்பற்றில்லாதவர்களாக' 'பாக்கிஸ்தான் கைக்கூலிகளாக சித்தரித்தது, மத நம்பிக்கைகளை 'நரகல்'நடையில் நக்கலடித்தது, மனிதநேயம் சிறிதும் இல்லாமல் முஸ்லிம்கள்கள் மீதான அனைத்து வன்முறையையும் அவர் வரவேற்று - ஊக்குவித்து - கொண்டாடியது துரதிருஷ்டவசமானது. அதைவிட துரதிருஷ்டமானது தான் செய்து வந்த தவறை உணராமல் - இறந்துபோனது.

    ReplyDelete