Sunday, August 7, 2016

கடை (குறுநாவல்) - ஆபிதீன்

கணையாழி (October 1985) தி.ஜானகிராமன் குறுநாவல் திட்டத்தில் தேர்வு பெற்று பிரசுரமானது. ஓவியம் : ஆபிதீன்
*

கந்தூரி முதல்நாள் இந்தக் கடை திறப்போமா என்கிற சந்தேகம் இருந்தது. வழக்கம்போலவே கடைசி நேரத்தில் படபடவென்று வேலை பார்த்து, பத்து மணிக்கு கொடி ஏறியதும் அப்துல் பாஸித்தின் 'கிரா-அத்'தைக் கொஞ்ச நேரம் போட்ட பின்பு 'அல்லாஹ் உன் கருணை' என்று துவங்கும் டி.எம்.யாகூப் பாட்டை 'சன்சுய்' ஆம்ப்ளிஃபேருக்குத் தொடர்புள்ள, பார்க்கப் படு அழகாக இருக்கும் 'அகாய்' 'டெக்'கில் அலற வைத்தார் மாமா.

கடை ஆரம்பமாகி விட்டது.

கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை அல்லது காரைக்காலில் தனி ரிகார்டிங் சென்டர் திறக்கிற என் விருப்பத்தை லத்தீஃப் மாமா ஏற்றுக் கொண்டாலும் அது ஆரம்பிக்கும் வரை, நாகூரிலே -பெரிய மளிகைக்கடைக்கு எதிரில் ஏழெட்டு வருடமாகச் சும்மாவே பூட்டிக் கிடக்கிற, கந்தூரிக்கு கந்தூரி வாடகைக்கு விடப் பயன்படுகிற , எங்களின் இரண்டு கடைகளில் ஒன்றை ரிகார்டிங் சென்டராக அமைத்துத் தருகிறேன் என்றார். நாகூரில் தனியாக ரிகார்டிங் சென்டர் ஒன்றும் இல்லை. தர்கா லைன் பஜாரில் வெளிநாட்டுப் பொருள்கள் விற்கும் கடைகளோடு சேர்ந்தாற்போல் 'டெக்னிக்', 'டச் சவுண்ட்' என்று ரிகார்டிங் செய்கிற கடைகள் இருந்தன. தவிர, தர்கா லைன் பஜாரில் இருக்கும் லத்தீஃப் மாமாவின் கடை இப்போது சிங்கப்பூர் பொருட்கள் விற்கிற கடையாக மாறி விட்டது. மாமாவிற்கு திடீரென செல்வச் செழிப்போ கஸ்டம்ஸ்காரர்களுக்குப் பயப்படாத துணிச்சலோ வந்து விடவில்லை. அவருடைய நண்பன் மஞ்ச மரைக்கான், சங்கு மார்க் கைலி ஏஜெண்ட்டுக்குச் சொந்தமான கடை ஒன்றில் ஒரு சின்ன ராக்கை போட்டு ஓரமாக சிங்கப்பூர், சிலோன் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வழக்கமாகக் கந்தூரியில் சங்கு கைலிக் கம்பெனிக்காரர்கள் அந்த  இடத்தில் பிரம்மாண்டமான ஸ்டால் போடுவார்கள். அந்த அசுர ஸ்டால் அவன் கடையைத் தூக்கி எறிந்தது. லத்தீஃப் மாமா செய்கிற, சற்று நேரம் கடையில் உட்கார்ந்தால் பைத்தியம் பிடிக்க வைக்கிற , 'ரொடேஷனு'க்கு அவ்வப்போது ஆயிரம் ஐநூறு கொடுத்து உதவுகிற மஞ்ச மரைக்கானுக்கு இந்த நிலை ஏற்பட்டது மாமாவின் மனதை வருத்தியிருக்க வேண்டும். தவிர, எத்தனை நாள்தான் தர்கா லைன் பஜாரிலுள்ள கடைகளிலேயே பெரிதாக, பார்வைக்கு எடுப்பாக இருக்கிற தன் கடை ( இதற்கு, பக்கத்திலுள்ள ப்ரூக் பாண்ட் கிடங்கு எப்போதும் மூடிக்கிடப்பதும் ஒரு காரணம். எப்போதாவது ப்ரூக் பாண்ட் ஐயர் , காரில் சர்ரென்று வந்து இறங்குவார். சரக்குகளை விநியோகம் செய்து விட்டுப் போய் விடுவார். உதிரியல்ல. பெரிய பெரிய கேஸ் பெட்டிகள். அந்த ஓரிரு மணி நேரம்தான் அந்த இடம் பர...பர... மற்ற நேரங்களில் மூப்பின் சுமை தாங்க முடியாமல் விழுந்து கிடக்கிற ஒரு கிழவி போல பேச்சு மூச்சின்றி இருக்கும்.) ஜனங்களின் பார்வைக்கு 'டக்'கென்று படுகிற தன் கடை ஒளியிழந்து கிடப்பது ? இதை இட்டு நிரப்பலாமென்றால் குறைந்தது ஐம்பது பெரிய நோட்டு வேண்டும். யாரிடம் இருக்கிறது ? மஞ்ச மரைக்கான் கடைக்கு வந்தான்.

மாமாவிற்கும் மஞ்ச மரைக்கானுக்கும் என்ன ஒப்பந்தமோ தெரியவில்லை. ஆனால் பஜாரில், கௌஸூக்கு சமமாக லைனில் சாமான்கள் எடுக்கிற அவன், கடையில் நிறையவே உரிமை எடுத்துக் கொள்கிறான். மஞ்ச மரைக்கான் நெட்டையாக, கூன் முதுகுடன், அசமந்தத் தனம் விரவியிருக்கிற முகத்துடன் ஒரு ஒட்டகம் போலவே இருப்பான். ஒட்டகம் , அரபியின் கூடாரத்தில் காலடி எடுத்து வைக்கிறதா என்ன? லத்தீஃப் மாமா தன் கடைக்குக் கீழே ஒரு ஐந்தடிக் கடை-வந்தா வரத்தான் கடை மாதிரி-போட்டு வியாபாரம் பண்ணினார். சொந்தக்காரனான கஞ்சா மடையன் கௌஸ் வேறு பிரச்னையை உண்டு பண்ணினான். 'மச்சான்.. மச்சான்' என்று வாய் ஒயாமல் சொன்னவன், லத்தீஃப் கடை  இப்போது ஏகப்பட்ட சிங்கப்பூர் சாமான்களோடு ஜொலிக்க ஆரம்பித்ததும் எரிந்து ரகளை செய்ய ஆரம்பித்தான். குடிவெறி வேறு. தினமும் திட்டித் தீர்த்தான் வாய் ஓயாமல். எந்தப் பாட்டு போட்டாலும் அதற்கு எதிராக ஒரு கமெண்ட். 'இல்லை எனும் சொல்லே இனி எந்தன் வாழ்வில் இல்லை' என்று போட்டால் 'டேய் ங்காத்தால ஓலி...இல்லையா? ஒன்னய இல்லாமயே ஆக்கிப்புடுறேண்டா ..பால்.' என்பான். தன் வீட்டு 'டெக்'கை எடுத்து வந்து மாமா கடையில் போடும் பாட்டுகள் கேட்க விடாமல் அலற வைத்தான். அவன் ஒரு பாட்டு போட்டால் இங்கே ஒரு பாட்டு என்று போட்டி வந்தால் சங்கடமில்லை. போட்டுப் பார்த்து விடலாம். ஆனால் பஜாரில், ஆபாசமாகக் குடும்பத்தையெல்லாம் இழுக்க ஆரம்பித்தால் ?

மாமாவின் தர்கா லைன் கடையில் மஞ்ச மரைக்கான் புகுந்த பிறகு 'ஸ்டீரியோ சீசன்' தனியாக இங்கே வந்து விட்டது. இந்தக் கடையின் முழுப் பொறுப்பும் என்னுடையது. சின்னக் கடைதான். டீஸண்டான கடை. 'கிக்கிரி பிக்கிரி' என்றெல்லாம் கலர் அடிக்காமல் பளிச்சென்று, ஸ்னோ ஒயிட் பெயிண்ட். ரிகார்ட் கவர்களையெல்லாம் ஒரேயடியாக இடைவெளி தெரியாத அளவுக்கு ஒட்டாமல் இடைவெளி விட்டு ஒட்டியிருக்கிறேன்.  தர்காவிற்குப் போகிறவர்களுக்குப் பார்வையாக. ஜியாரத் செய்து விட்டு திரும்புகிறவர்கள் கண்ணில் ராக்கையில் வரிசையாக வைத்திருக்கிற கேஸ்ஸட்டுகள் படும். நின்று, கடையை நேராகப் பார்ப்பவர்கள் படு அலம்பலான டெக், ஆம்ப்ளிஃபேர், பாக்ஸ்-ஐப் பார்ப்பார்கள். டிஸ்கோ லைட்டையும் அதை பிரதிபலிக்க வைக்கிற, இந்தப் பக்கத்தில் யாரிடமும் இல்லாத (சென்னையில் இருக்கிறது) Reflecting Plates-ன் பல மாடலையும் பார்ப்பார்கள். டிஸ்கோ லைட்தான் பந்தா. ட்ராஃபிக் ஜாம் ஆகி விட்டது. போலீஸ் வந்து அதை எரிய விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளுமளவிற்கு. இருந்தாலும் அவ்வப்போது கூட்டத்தைக் கவர 'ஜிங்..ஜிங்'கென்று ஒரு பாட்டைப் போட்டு டிஸ்கோ லைட். எதிரில் மளிகைக் கடைக்குப் பக்கத்தில் பெரிய கடலைக் கடை. எங்கள் கடையின் பூட்டிக் கிடக்கும் அடுத்த பாகத்திற்கு முன் ஒரு சின்ன மேடையில் பூக்கடை. வழக்கமாக அதிராம்பட்டினம் வீரிய புஷ்டி அல்வாக்காரனுக்குத்தான் கடையை வாடகைக்கு விடுவது. அவன் வந்தால் கடையில் பாதிதான் இப்போது கிடைத்திருக்கும். பூக்கடை நாறியிருக்கும். ஆனால் இம்முறை மிகவும் கெஞ்சினார் பூக்கடைக்காரர். ('தம்பி..வேறே எடம் ஒண்ணும் எனக்கு பொலப்படலே.. நீங்கதான் பாத்து ஏதாச்சும் செய்யனும்') ஒரு வருடமாக வாசலில் சும்மா கடை வைத்திருக்கிறார். வாடகை கிடையாது. அவ்வப்போது ஓரிரண்டு ரோஜா மலர்கள் தருவார். நாம் முகர்ந்து கொள்ள வேண்டும். ரோஜா மணக்கும். மாமா சரி சொல்லி விட்டார்.

ஆக பெண்களின் பார்வையில் படுகிற கடை. தவிர, இந்த முறை கடையிலேயே உட்கார்ந்து விட்டதால் வெளியில் நகரவே இயலவில்லை. இதற்கு 24 மணி நேரமும் 'ஜே..ஜே' என்று கடையில் கூட்டமிருந்தது என்பது அர்த்தமல்ல. புதிதாக ஏற்றுக் கொண்ட பொறுப்பு. அதை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் என்றுதான். ' வேற கடை தொறக்குற வரைக்கும் இங்கேயெ இருந்துக்க..முன்னூறு நானூறு எடுத்துக்க மாசம்..' என்று சொல்லிய மாமாவிற்கு ஏமாற்றத்தை அளிக்க விரும்பவில்லை. நிரந்தரமாகவே இங்கே கடை வைக்கத் திட்டம்.

'கந்தூரிக்குச் சரி, வியாபாரம் நடக்கும். மத்த நேரத்துலெ? சரிப்பட்டு வருமா? அந்த பஜார் மாதிரியில்ல இது. அங்க வர்றவனுவ சிங்கப்பூர் சாமானுவள பாத்த ஒன்னயே 'ஆ'ண்டு வுளுந்து வாங்குவான். இந்தப் பக்கம் அப்படியா?'

மாமா இடைமறித்தார். 'அதெல்லாம் வரும். ரிகார்டிங் சென்டருண்டு ஒண்ணும் இல்லப்பா நம்ம ஊருலெ. ரீடெய்லுக்கு விக்கக்கூட வாணாம்பா. நமக்கு ஆர்டர் வந்தாவே போதும்.'

'வருமா?'

'வரும். அட, ஒரு நாளக்கி - ஹந்திரி முடிஞ்சவொன்னெ - ரெண்டு வந்தாக் கூட போதுமே'

'ரெண்டு போதுமா?'

'என்னாப்பா நீ ஒண்ணு.. ஒரு பேச்சுக்கு ரெண்டுண்டு சொல்றேன். ஏற்கனவே நமக்கு ரொம்ப நல்ல பேரு இக்கிது. நம்மட்ட இக்கிற சாமானுவள்லாம் சமானியமல்ல. ஒனக்குத் தெரியாதா? அதனாலெ, நான் சொல்றேன்; ஆர்டர் நல்லா வரும்'

நம்பிக்கையோடு சொன்னார் மாமா. மேலும் ஏதாவது கேட்டால் கோபமுறுவார் போல முகம். சரியென்றேன். மேலும், கடையிலிருப்பதால் அனுபவமும் கிடைக்கும். இது எனக்கு நிச்சயமாக வித்யாசமான அனுபவம். காலை ஒன்பதரை மணியிலிருந்து ஒரு மணி வரை. பின் மூணரையிலிருந்து ஏழு. அப்புறம் ஏழரையிலிருந்து பதினோரு மணி வரை. முக்கியமான நாட்களில் இரவு ஒரு மணி வரை கடை. ஹத்தத்திற்கு விடிகடை.

இன்னும் ஓரிரு மாதங்கள் இந்தக் கடையில் இருக்கலாம். இதற்குள் வரி..வரி..என்று வரும் அரசு அதிகாரிகளைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். பரவாயில்லை. எனக்கு நன்றாகவே நடிக்க வருகிறது. ஒருநாள் பந்தலுக்கு வரி என்று ஒருவன் வந்தான். முப்பது ரூபாயாம் வருடத்திற்கு. 'ஹீ..ஹீ..ஹீ..' என்று இளித்துக் கொண்டே அடுத்த நாள் வரச் சொன்னேன். அடுத்த நாள் வரும்போது ஒரு பத்துப் பதினைத்து வருடம் தன் நாயகனைப் பிரிந்து, இப்போது அவனை வரவேற்கிற, ஒரு கற்புக்கரசி மார்க் மனைவியின் முகபாவம் எனக்கு இருந்தது. அன்று ஹீ..ஹீ..பலனளித்தது. அவன் வந்தவுடனேயே முதல் அடி. நன்னாரி சர்பத் இரண்டு! விழுந்து விட்டான். எல்லாக் கடைகளிலும் வசூலித்ததை விட பத்து ருபாய் குறைவாக வாங்கிக் கொண்டு போனான். அவனுக்கு சினிமா பாட்டெல்லாம் பிடிக்காதாம். பக்திப் பாட்டுகள்தானாம். 'திருமுருகன் தேனிசை' ஒரு கேஸ்ஸட்டில் போட்டு வேண்டுமென்று சொல்லி விட்டுப் போனான். சேல்ஸ் டாக்ஸ் ஐயரும் என்னிடம் விழுந்தார். அவருக்கும் பக்திப் பாட்டுகள்தான் பிடிக்குமாம். அதென்னமோ அரசு அதிகாரிகள் பெரும்பாலோர் இப்படித்தான் பக்தியில் திளைக்கிறார்கள். கடவுள் வாழ்க !

கடைக்கு வரும் கஸ்டமர்களிடம் நான் சிரித்துப் பேசுவது கூடப் பிஸாதாகி விட்டது. ஒரு கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதியாக ஒரு வருடம் சென்னையில் இருந்தபோது அலைந்த அலைச்சல், இப்போது நினைத்தாலும் கசப்புத் திரவத்தை நெஞ்சில் நிரப்பும் அந்த அனுபவம், எனக்கு தாராளமாகச் சிரிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது- கடைந்தெடுத்த தேவடியாள் போல. அந்தப் 'பக்குவம்' எனக்கு இங்கே கை கொடுக்கிறது. அதற்கும் பிஸாது!

'பெத்தயா ஓலி..எப்படித் திமிராப் போவான். கடெ வச்ச ஒன்னெ கொழஞ்சி கொழஞ்சி பேசுறான். நாக்காலி எடுத்துப் போடுறான்..டீங்கிறான்..சர்பத்துங்குறான்' - தினகரன் சொன்னான். அவன் நண்பர்கள் சொன்னார்களாம் இப்படி. கடை வைத்தவன் கஸ்டமர்களிடம் பின் எப்படிப் பழகுவது? 

சம்பந்தமில்லாத ஆட்களுடன் நான் எதற்காகப் பேச வேண்டும்? 'ஒலகத்திலேயே தாந்தான் பெரிய அறிவாளி போல திமிரு.. நடை..ங்காத்தா' என்றார்களாம். அறிவாளிக்கென்று ஒரு தனி நடையா? வானம் பார்க்கும் புருவந்தூக்கிகளின் நடையா? 'அறிவாளி நடை கற்றுக் கொடுக்கப்படும்' என்று தொங்கும் போர்டுகள் எங்கேயிருக்கிறது? அப்படிப் பார்த்தால் நான் பழகும் ஆட்களெல்லாம் அறிவாளிகளா? தினகரனும் , பெரியம்மா மகன் தாரிக்கும் , என் மாமாவும் , என் குடும்பத்தார்களும்... அறிவாளிகளா? அனைவரும் உலகத்தை மாற்றிவிடக் கூடியவர்களா?

ஏற்றுக் கொண்ட பொறுப்பை அருமையாக  நிறைவேற்றிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். கந்தூரியில் நல்ல வியாபாரம்தான்- தர்கா லைன் கடையை விட. வழக்கம்போலவே இந்த வருடமும் .எம்.யாகூப்தான் ஹீரோ. சும்மா பிய்த்துக் கொண்டு போனது. பணம் நிறைய இருந்திருந்தால் டி.எம்.யாகூப் லேட்டஸ்ட் பாகம் 9ஐ இன்னும் நிறையப் போட்டு ஆயிரம் ரெண்டாயிரம் கூடச் சம்பாதித்திருக்க முடியும். எல்லாம் முடிந்தபின்தானே நமக்குப் புத்தியே வரும்!

டி.எம்.யாகூப் ஒருநாள் இந்தக் கடைக்கு 'விஸிட்' பண்ணினார். பெரிய கூட்டமே சேர்ந்துவிட்டது. கடைக்கு இதைவிட ஒரு விளம்பரம் வேண்டுமா? யாகூப் காக்கா வரும் செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பே தெரியுமாதலால் 'மதீனா மகிமை' ரிகார்டு கவர், யாகூப் காக்கா பாடிய கேஸ்ஸட்டுகள் ( முக்கியமாக டி..எம்.யாகூப்பின் சிவந்த முகம் கொண்ட inlay card உடன்) முழுமையாகக் கடையை ஆக்கிரமித்தது. இவரை வைத்து பிஸினஸ் செய்கிறோம்; இது கூடப் பண்ணவில்லையென்றால்?

கச்சேரி மேடைகளில் stereo season மைக்கைக் கண்டாலே புதுப்பாட்டு பாடும் யோசனையைக் கைவிட்டு விடுவார். ஒரு பெரிய ரிகார்ட் தயாரிக்கும் கம்பெனியே அவரைப் பிடிக்கனும் என்றால் ஐயாயிரம் பத்தாயிரம் கொடுக்க வேண்டும். நமக்கு, அவ்வளவு சுலபத்தில் மசிந்து விடுவாரா? இருந்தாலும் அவ்வப்போது புதிதாகப் பாடுவதை 'டக்'கென்று பிடித்து மாமா, பெயரைத் தட்டிக் கொண்டு விடுவார். உபசரணை பண்ணினேன். பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என் முகத்தை அருகில் இழுத்து , தன் குவித்த வாயை விறைத்த வலது கையினால் மறைத்துக் காதோரம் ஏதோ சொல்லப் போனார். ஐயையோ..! வழக்கமாக இப்படித்தான் தன் கச்சேரிகளில் வாத்தியக்காரர்களைத் திட்டுவார். பார்ப்பவர்களுக்கு அவர் சிரித்தவாறே ஏதோ சொல்வதுபோல் தோன்றும். ஆனால் நாக்கைப் பிடுங்குகிறார்போல் திட்டுவார். எல்லோரும் இதைச் சொல்வார்கள் என்றாலும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டதில்லை. கடைக்கு வருகிற , யாகூப் காக்காவிடம் வாசிக்கும் ஆட்களே சொல்வார்கள். சாஸ்திரீய முறைப்படி பிரமாதமாகத் தப்லா வாசிக்கும் பாவாஜியே சொல்வான்: 'டொண்டணக்குப் பாட்டு பாடுறவனுக்குலாம் வாசிக்கிற விதி எனக்கு...நொண்டிக்கை மாதிரி ஆக்கிப்புட்டான்..இந்த லட்சணத்துலெ தாறுமாறா ஏசுறான் மேடையிலேயே. ஹராமுலெ பொறந்தவன்' என்று. ஆனால் நேரிடையாக நானே கேட்டேன். KKசாபு ஏற்பாடு செய்த கச்சேரிக்கு ரிகார்டிங் செய்ய மாமாவுடன் சென்றபோது அப்படி அவர் புனித மொழிகளால் திட்டியதைக் கேட்டபோதுதான் நம்பிக்கை வந்தது. எழுதினால், நல்லவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் வெட்கம் கொள்ளுமளவு திட்டினார். அருளிசை அரசரான அவருடைய பாடல்களை விட அவருடைய அந்த வசவுகள் நன்றாக இருந்ததாகப் பட்டது அப்போது.

தயக்கத்துடன் காதைக் கொடுத்தேன்.

'அந்த 'மதினா மகிமை' ரிகார்டை ஒரு TDK டேப்புலெ போட்டு - ஒங்க மாமாவெ ரிகார்ட் பண்ணச் சொல்லுங்க- வூட்டுக்கு அனுப்பி வைங்க.' என்றார். சென்றார். 

யாகூப் காக்காவுடன் நெருக்கமாகப் பேசிய, மனித குலத்திலேயே உயர்ந்த பிறவி!  - கூட்டம் என்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்தது பெரிய சங்கடமாக இருந்தது.

கடையில் உட்கார்ந்ததால் வழக்கமாய் அனுபவிக்கிற சந்தோஷம் போயிற்று. மினாராவில் ஏற முடியவில்லை. நானும் பெரியம்மா மகன் தாரிக்கும்தான் கடையில். இருவரைத் தவிர வேறு ஆட்கள் 'கல்லா' அருகே இருந்தால் பிரச்னை எழும் என்று இந்த ஏற்பாடு. நான் மட்டும் பெரிய மினாராவில் ஏறிக் கொல்லைக்கு வரும் பெண்களை நோட்டமிட்டால் (இயற்கையின் அழகில் மனதைப் பறி கொடுத்தால்!) அவனுக்குப் பற்றிக் கொண்டல்லவா வரும்? அதனால் போகவில்லை. இருப்பினும் எட்டாம் இரவு - வாண வேடிக்கை நடக்கும் அன்று-அவன் வேடிக்கை பார்க்கப் போவதாகவும், பீரோட்டம் அன்று கடற்கரைக்கு நான் போவதாகவும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படி சென்றோம். மற்றபடி ஊஹூம்..கொடிஊர்வலம் வரும்போது வீட்டு வாயிலின் அருகே நிற்க முடியவில்லை. எதிர்வீட்டு முத்துக் கனியிடம் நான் வருவதாக தகவல் அனுப்பியிருந்தேன். கொண்டை, எம்.எஸ், ஜூபி வந்திருப்பார்கள்..போயிற்று..கொடி ஏறும்போது கிப்ஸ் கைலி ஸ்டால் அருகே நின்று புதிதாக எதையும் ஒப்பேற்ற முடியவில்லை. சீராணி வழங்குகிற சாக்கில் கையின் பதத்தை அறிய முடியாமல் போயிற்று. எட்டாம் இரவும் இப்படித்தான். எனது வாணம் சீறிப் பாயவில்லை. மருந்து திணிக்க நேரமில்லாத பிஸி! தூரத்திலிருந்து பார்த்தேன் - கடைக்கு வெளியில் நின்று கொண்டு சற்று நேரம். தலைகள்தான் தெரிந்தது.

திட்டமிட்டுச் சென்ற பீரோட்டம் கோபத்தைத்தான் தந்தது. ஒடுக்கத்து புதன் கடற்கரையின் அழகைப் போலில்லை. இப்போது வெளியூர் ஜனங்கள் மூச்சு முட்டுகிற மாதிரி கூடினார்கள். ஒன்றும் சுகமில்லை. இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைப்பு வையேன் என்று நண்பன் கேட்டபோது 'கூளங்கள்' என்றே என்னால் சொல்ல முடிந்தது. சரியான உடம்புகள் காணாத ஏமாற்றமா அல்லது அன்று கடற்கரைக்கு வருவதாக தகவல் அனுப்பிய ஜொஹரா வராத எரிச்சலா அல்லது வேறு ஒன்றா என்று தெரியவில்லை. எனக்கு மனது சரியில்லை. பீர்சாபு வரும்போது அல்லாவைப் பார்த்தமாதிரி ஜனங்கள் வெறிகொண்டு அவரைப் பார்க்க ஓடி வந்து குவிந்தது எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. பீராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..! ஒரு எலுமிச்சம் பழத்தை எவ்வளவு விலைக்கு விற்று விடலாம்..! எலுமிச்சம் பழத்தினுள் பீரினுடைய 'சாறு' இருப்பதாக நம்பும் பெண்களை எவ்வளவு சுலபமாக வசப்படுத்திவிட முடியும்..! வாழ்க்கை எவ்வளவு வன்ணமயமானது..! தலையில் பச்சைப் பேட்டாவைச் சுற்றிய ஆபிதீனைக் கற்பனை பண்ணினேன். எப்படியோதான் இருந்தது. ஆனால் பழக்கமாகினால் சரியாகிவிடும்.

கந்தூரியின் பதினாலு நாளில் எங்களின் அரிப்பு ஓரளவிற்குத் தணிந்தது ஹத்தம் அன்றுதான். அன்று விடிகடை. சந்தனக் கூடு எங்கள் தெருவிற்கு வர அதிகாலை நாலு மணியாகியது. ஒரு மணியிலிருந்து மூணறை வரை தாரிக் ரிகார்டிங் ரூமுக்குள்ளேயே போய் தூங்கி விட்டான். அவனை எழுப்பிக் கடையில் உட்கார வைத்து விட்டு வீட்டிற்கு தூங்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு, பெண்கள் விஷயத்தில் ஜாலி பண்ணுவதற்காகவே M.Com பரீட்சைக்கான ஸ்டடி லீவில் வாண வேடிக்கை நடக்கும் எட்டாம் இரவு ஊர் வந்த , என் துணை இல்லாமல் தவித்துப் போன , ஹமீதை இழுத்துக் கொண்டு கூட்டத்தை நெருக்கித் தள்ளியவாறு எங்கள் தெருவை அடைந்தோம். கூட்டு ஃபாத்திஹா கட்டிடத்திலிருந்து கூடு வந்து கொண்டிருக்கும் செய்தி கேட்டவுடனே நாங்கள் தெருவில் நுழைந்து விட்டோம். தெரு நிறைந்திருந்தது. கூடு வரும் முக்கியமான தெருக்களில் எங்கள் தெரு ஒன்றாதலால் பெண்கள், குழந்தைகள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கூட்டம்கூட்டமாக இருந்தார்கள். தெருவில் மல்லிகைப் பூ விற்பவர்களும் தப்ஸ் அடிக்கும் பாவாக்களும் நிறைய இருந்தார்கள். தெருவெங்கும் ஜர்தா சோறு மணத்தது. கூடு வருவதை எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். வீட்டுக்குப் பக்கத்திலுள்ள திண்ணையில் நிற்கும் பெண்களின் தொடைகள் தலையில் படுமாறு நின்று கொண்டோம். கடைத் தெருவிலிருந்து தெருவுக்குள் ஊர்வலம் நுழைந்தது. ஊர்வலம் தெரிய ஆரம்பித்ததுமே நெரிசல் அதிகமானது. என் தலையை இரு கைகள் இறுக்கமாகப் பிடித்து அழுத்திக் கொண்டன. தேரடித்தெரு பஸ்ரியா!

கூட்டிற்கு முன்னால் தஞ்சாவூர் ஆல்பர்ட் பார்ட்டியின் கச்சேரி ஒரு அலங்கார வண்டியில் வந்தது. கூடு எங்களருகில் வந்தது. கூட்டம் தள்ளிய தள்ளில் பெண்களோடு பெண்களாக திண்ணை மேல் பஸ்ரியாவோடு நிற்க வேண்டி வந்தது. மிகப் பக்கத்தில், அடுத்த வீட்டு வாசலில் என் உம்மா! கூட்டம் எல்லாவற்றையும் அடித்து விடுகிறது.

பஸ்ரியா என் கையில் மல்லிகைப் பூவைக் கொடுத்து அழுத்தினாள். 'பெரீய பதுவுஸூ மயிரா இருப்பியே..இந்தப் போடு போடுறியே..ஒரு நாளைக்கி ஒன்னய....கச்சடா..' என்று அவளிடம் கிசுகிசுத்தவாறே பூவைக் கூட்டின்மேல் எறிந்தேன். கூடு இந்த வருடம் மிகப் பிரமாதம்! மனதை அள்ளியது. அந்த அதிகாலை நேரமும் ஊர்வலம் சோபையுறக் காரணம் என்று பட்டது.

பூப்பல்லாக்கு , செட்டிப்பல்லாக்கு போய் தாஜ்மஹால் பீடி வண்டிகள் மியான் தெருவில் நுழையும் வரை கூட்டம் தாள முடியாமல் இருந்தது. போதும் என்று உடம்பு சொல்லிற்று. அசந்து ரூமில் படுத்தவன் அடுத்த நாள் காலை பத்து மணிக்குத்தான் எழுந்தேன்.

இந்த ஒருநாள்தான். மற்றபடி எங்களின் உடம்பிற்கு வேறு தீனி போட முடியவில்லை. ஆசரஹான் அருகே நடந்த கச்சேரிகள், தான்சேன் இசையரங்கில் நடந்த கச்சேரிகளை அனுபவிக்க முடியவில்லை. கடை மூடத் தினம் இரவு ஒரு மணியானது. அதற்கு மேல் சென்றால் கச்சேரிகளில் அவ்வளவு கூட்டம் இருக்காது. கால்மாட்டுத் தெருவிலும் பெண்கள் கூட்டம் போயிருக்கும். இந்த வருடம் சில தெரிந்த பையன்கள் அந்தப் பக்கத்தில் புடவைக்கடை, சர்பத் கடை வைத்திருந்தும் பிரயோசனமில்லை. தூக்கத்திற்கு கண்கள் கெஞ்சும் நேரத்தில் என்ன செய்வது? கந்தூரி முடிந்தபின் இரவு பத்து மணிக்கெல்லாம் கடையை மாமா மூடச் சொல்லிவிடலாம். ஆனால் எட்டு மணிக்குச் சாப்பிட்டுவிட்டு பாலத்தடிக்குப் போய் ஆற்றைப் பார்த்துக் கொண்டே ஹமீதுடன் இரவு பத்து மணி வரை பேச முடியாது. பத்து மணிக்கு மேல் சாதாரண நாளில் ஹமீது வரமாட்டான்.

ஒருவகையில் பார்த்தால் இதெல்லாம் நல்லதென்றுதான் தோன்றிற்று. சின்னப் பிள்ளையா இன்னும்? சம்பாதிக்க வேண்டிய வயதில், வீட்டாரின் வெறுப்புமிழும் பார்வையைத் தவிர்த்துக் கொள்கிற வயதில் இந்த மாதிரி வயசின் அரிப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இருந்தால்தான் கடையில் உட்காரப் பொறுமை வரும் என்று தோன்றியது.

வேலை கிடைக்காமல் வெட்டிப் பயலாகச் சுற்றுகிற நேரத்தில் ஏற்படுகிற அவமானங்களுக்கு மாற்றாகத்தான் நான் அளவு கடந்து பெண்களை இச்சிக்கிறேனா? தெரியவில்லை. கூட்டத்தில் ஆண்களைத் தொட்டு 'ஸ்..ஆ..' என்று சிலிர்த்துக் கொள்ளும் ஆண்களுக்கு நான் எவ்வளவோ தேவலை என்று என்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறேன்..வெளியில் சுற்றினால்தான் பெண் கிடைப்பாளா? கடையில் உட்கார்ந்தால் யாரையும் தேற்ற முடியாதா? சொல்லப் போனால் வெறிநாய் மாதிரி அலையாமல் நிதானமாகவே 'கோழி' பிடிக்கலாமே! கடையில் உட்காருவதில் இந்த விஷயத்தில் வசதியே இல்லையென்று சொல்ல முடியாதுதான்.

தர்கா லைன் பஜார் மாதிரியல்ல இந்தப் பஜார். அங்கே எவ்வளவு சத்தமாக  வேண்டுமானாலும் பாட்டுப் போடலாம். அவ்வப்போது 'சத்தமா வைய்யி லத்திஃபு.' என்று நேயர் விருப்பம் வேறு.! பெரும்பாலும் கவாலிப் பாடல்கள்தான் கேட்பார்கள். ஆனால் பாங்கு சொல்லும் நேரத்தில் மட்டும் பாட்டுச் சத்தம் கேட்டால் அடக்கச் சொல்லி எல்லாத் திசைகளிலிருந்தும் குரல்கள் சீறிப் பாயும். சத்தம் போட்டு விட்டு, 'செல்லா வீட்டுல இக்கிற குட்டி பெருசாயிட்டா போட்டு மாட்டனும்பா..'என்று மாசு மருவற்ற உள்ளத்தோடு பேசிக் கொண்டிருப்பார்களென்றாலும், அந்தச் சமயத்தில் பாட்டு மட்டும் போடக் கூடாது என்பதில் கண்டிப்புத்தான். பாங்குக்கு இடைஞ்சலோ இல்லையோ, செல்லா வீட்டுக் குட்டிக்கு இடைஞ்சல் வரக்கூடாதே!

இந்தப் பஜாரில் ஹிந்துக்களின் கடை கணிசமாக இருப்பதாலா, பாங்கு சரியாகக் கேட்காத தூரத்தாலா என்பது தெரியவில்லை..அந்தச் சமயத்தில் பாட்டுப் போடலாம். கண்டிப்பு கிடையாது. எப்போதாவது, பஜாரில் போகும் ஆட்கள் கையால் தர்காவைச் சுட்டிக்காட்டிப் பிறகு பாங்கு சொல்வது போல சைகை செய்து 'அடக்குங்க' என்று சத்தம் போடாமல் சொல்லிவிட்டுப் போகிறார்கள். 'ஹொத்துவா' நடக்கிற நேரத்திலும் இப்படித்தான். 

இந்தப் பஜாரிலுள்ள சங்கடம், பாட்டுகளைச் சத்தமாக வைக்கக் கூடாது. தர்கா லைன் போல அகலம் இல்லாமல் ஒடுக்கமாக இருப்பதால் 80 வாட் சக்தி உள்ள ஆம்ப்ளிஃபயரின் உதவியுடன் இரண்டு ஸ்டீரியோ பாக்ஸ்கள் அலறும்போது வியாபாரம் செய்ய முடியாதுதான். முதலில் கடலைக்கடை லிங்கம்தான் ஆட்சேபணை எழுப்பினான்.'ங்கும்மாலெ... அவனுக்கென்னா? கடலை மல்லாக்கொட்டையா குமிச்சி வச்சிக்கிறான்..பாத்தவன் வாங்கிட்டுப் போவான். நமக்கு? சத்தம் போட்டத்தானே வியாபாரம்..?' என்று ரிகார்டிங் செய்கிற பிலால் சத்தம் போட்டார் என்னிடம். லிங்கம் நேரிடையாக ஆட்சேபணை எழுப்பவில்லை. ஜக்கரியா பாயிடம் சொல்லி லத்திஃப் மாமாவிடம் சொல்லச் சொன்னான். 'கொஞ்சம் கொறச்சி வச்சிக்கப்பா..மத்தஹலுக்கு வியாபாரம் செய்ய முடியாம போவுதுல்லெ..' என்றார் மாமா. பாக்ஸை கடையினுள் வைத்தது மட்டுமல்லாமல் 80 வாட் சன்ஸூய் ஆம்ப்ளிஃபயர் இருந்த இடத்தில் 10 வாட் சக்தி உள்ள ஒரு மகா மட்டமான மோனோ ஆம்ப்ளிஃபயரை வைத்தார். ஒரு இரண்டு நாள் பூனை கத்துவது போல சத்தம் வெளி வந்தது. வியாபாரம் பாதித்தது. ஆனால் இந்தச் சத்தமும் தங்களின் வியாபாரத்தைப் பாதிப்பதாகக் கடைத்தெருப் பெரிய மனிதன்கள் ஒன்றுகூடித் தீர்மானித்து இந்த ஊர் சப்-இன்ஸ்பெக்டருக்கு பெட்டிஷன் கொடுக்கப்போவதாக மாமா கேள்விப் பட்டதும் கோபமடைந்தார். சன்ஸூய் மறுபடியும் வெளிவந்தது. 'கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கிறது'தான் வியாபாரம். எல்லோருடைய காதையும் செவிடாக்க வேண்டுமென்றோ மற்றவர்களின் வியாபாரத்தைக் கெடுப்பதோ 'ஸ்டீரியோ சீச'னின் நோக்கமல்ல. அப்படி சத்தம் வெளி வந்தால் அடக்கச் சொல்லி இலேசாகச் சைகை காண்பித்து, தங்களின் பிளாட்டின நேரத்தில் ஒரு நொடியை-ஒரே ஒரு நொடியை-இந்தப் பெரிய மனிதர்கள் செலவழித்தால் குறைந்து விடுமா? இளைஞர்களின் உற்சாகம் இந்தப் பெரியவர்களுக்குப் பிடிப்பதில்லை எப்போதும். மனதிற்குப் பிடிக்காமல் போனால் காரணம் கிடைக்கும்- குறை சொல்ல. அப்போது பக்கத்து கடை ஹலீம் பாயின் ஊதுபத்தி கடையில் ஒரு ஊதுபத்தி எரிவதே எனக்கு பேரிடியாய்த் தோணலாம். எவர்சில்வர் கடை சுலைமான் காக்காவின் பெயர் பொறிக்கும் மெஷின் இயங்கும்போது, ஜக்கரியா பாயின் அலுமினியப் பாத்திரக் கடையில் பாத்திரம் ஒன்றோடு ஒன்று உருளும்போது மலை சரிந்து மேலே விழுவது போல உணரலாம். லிங்கம் கடலை வறுப்பது கூட ஆயிரம் நயாகரா ஒன்றாகக் கொட்டுவதுபோல இருக்கலாம். 

மனதிற்குப் பிடிக்கிற மனிதர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நிசப்தம், சப்தத்தில் பிறக்கிறதென்று ஒரு தியரி உருவாக்கலாம். 

வால்யூம் லெவல் ஒரு குறிப்பிட்ட எண்ணிலேயே இருக்குமாறு 'டெக்'கில் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது சுலபமானதல்ல. பாகவதரை ரசிப்பவருக்கு டி.எம்.எஸ்ஸை மிகக் குறைந்த சத்தத்தில் வைத்தாலும் எரிச்சல் வரலாம். 

ஒரு பெரிய மனிதர். இதய நோயாளியாம். ஜக்கரியா பாய்தான். சப்தம் அவருக்கு மரணத்தை கொடுத்து விடுமாம். இந்த எழுபது வயதில் , கடைத்தெருவில்தான் இயற்கையன்னை நிசப்தமாக , நிச்சலனமாக அரசாட்சி செய்வதாக இவருக்குத் தோன்றியிருக்கிறது.

இந்தத் தொந்தரவெல்லாம் நீங்க வழியுண்டு. இரவு பத்து மணி வரை கடையைத் திறந்து வைத்திருப்பது. ஆனால் துரதிர்ஷ்டமாக மனிதர்கள் இந்த நேரத்தில் தூங்கி விடுகிறார்கள். பேய்கள் வியாபாரம் செய்யலாம். இந்த சினிமாப் பாட்டுகள் பேய்களுக்கு மிகவும் பிடிக்கக் கூடியவை.

என்ன செய்யலாம்?

கண்ணாடிக் கதவு போட்டு சத்தம் வெளியாகாமல் பண்ணலாம். வியாபாரம் நடக்காது; அவ்வளவுதான்.

விரோதம் என்று வளர்ந்தால் வேண்டுமென்றே ரிகார்டிங் சென்டரை மூடிவிட்டு அந்த இடத்தில் ஒரு கொத்துப் புறாட்டா கடையைப் போடலாம். சும்மாவேணும் தவ்வாவைக் காது கிழிவது போல ஓசைப்படுத்திக் கொண்டிருக்கலாம். புகையை மூச்சு முட்டுவது போல கிளப்பலாம் - கொத்துப் புறாட்டாவை வேறு வகையில் தயாரிப்பது கண்டுபிடிக்கப்படாத வரையில். ஆனால் விரோதம் வியாபாரத்திற்கு ஆகாது. ஆகவே நான் கடைத்தெருவோடு இணக்கமாக நடந்து கொண்டேன். லிங்கம் கடைக்கு வந்தால் சிரித்துப் பேசினேன். தாரிக் எரிச்சலடைவான். 'ஊரு வுட்டு ஊரு வந்திருக்கிற தம்பலப் பய... யாகூப் காக்கா பாட்டு போட்டாவே இவன்ற மூஞ்சி பண்டி மாதிரி போய்டுது...R.S.S __மவன், பயந்துகிட்டுத்தான் நேரடியா நம்மள்ட்டெ சொல்லாம ஜக்கரியா __மவன்ட்டெ சொல்லிவுட்டுட்டான். நேரா சொல்லிந்தா ஏறிடுவேன்.. நம்ம ஊர்ல இவன்ற பாச்சாவெ காமிச்சாண்டா நம்ம செட்டை வச்சி நாறடிச்சிடுவேன்..' என்று ஆத்திரமாய் பொருமுவான்.

லிங்கம் வசதி வாய்ந்தவன். வீட்டில் அருமையான 'நாகமுச்சி டெக்' வைத்திருப்பவன். நாகப்பட்டினத்தில் இரண்டு மூன்று ரிகார்டிங் சென்டர் இருந்தாலும் சீசன் கிளையில்தான் கொடுப்பான். மாதம் குறைந்தது பத்துமேக்ஸல் 90 கேஸ்ஸட். நூற்றைம்பது, இருநூறு ரூபாய் என்று மாதாமாதம் துண்டாக அவனிடமிருந்து வருகிறது. அதைக் கெடுத்துக் கொள்வது எனக்கு உசிதமாகப் படவில்லை.

பாட்டுப் போட்டால், அதுவும் இஸ்லாமியப் பாடல்கள் போட்டால் லிங்கம் முறைத்து முறைத்துப் பார்க்கிறான் என்று சொல்லி, R.S.Sஐத் திட்டிய பின், லிங்கத்தின் கடையை கொளுத்த வேண்டும் என்பான் தாரிக். 'ங்காத்தா..ங்காத்தா..' என்று மூச்சுக்கு நூறு முறை ஏசுவான். லிங்கம் முறைக்கவெல்லாம் இல்லை. அவன் பார்வையே அப்படித்தான். அடிக்கடி பல்லைக் கடித்துக் கொண்டு 'ஸ்..' என்று ஒரு சப்தம். ஒருவேளை அன்பாகப் பார்க்க வேண்டும் என்று அவன் நினைத்திருக்கலாம். அது முறைப்பதுபோல பட்டிருக்கலாம் தாரிக்கிற்கு. R.S.S என்றாலே அடி உதை என்று இந்த 17 வயதிலேயே வெறியோடு நினைக்கிற அவனுக்கு அப்படிப் படும்தான். லிங்கம் R.S.Sகாரன் என்று பரவலான பேச்சுதான். இதனாலேயே தெற்குத்தெரு ஜமா, அவன் கடையில் ஏதும் வாங்காமல் பக்கத்தில் இக்கனூண்டு கடை வைத்திருக்கிற ராஜாபிள்ளையிடம் வாங்குவார்கள்.

ஒருநாள் லிங்கம் , 'தம்பி..அரிசி குத்தும் அக்கா மகளே..'ண்டு அடிக்கடி போடுவீங்களே..என்னா படம் அது?.ஆங்..மண்வாசனை. அதெ கொஞ்சம் குத்த வுடுங்களேன்' என்று எதிர்க்கடையிலிருந்து குரல் கொடுத்தான். 
'போடாதீங்க நானா' என்று விரலால் இடுப்பில் குத்திக் கிசுகிசுத்தான் தாரிக். ஆனாலும் நான் அந்தப் பாட்டைப் போட்டேன்.

அந்தப் பாட்டில் 'நான் குத்தும்போது' என்று ஒரு இடம். சொல்லிவிட்டுச் சற்று மௌனம். பின்பு 'அரிசி குத்தும்போது வலிக்கவில்லையா?' என்று முடியும்.  'ஆஹா!' என்று , உயந்த குரலில் அந்தப் பாட்டின் உயர்ந்த கருத்துக் குறித்துப் புளகாங்கிதமடைந்து கும்மாளமிட்ட அவனைப் பார்க்கப் பார்க்க தாரிக்கிற்கு வெறி ஏறியது. நான் இருக்கும்போதாவது கட்டுப்படுத்திக் கொள்வான். ஆனால் நான் சாப்பிடப்போகும் நேரத்தில் 'டெக்'ஐ அலறவைத்து லிங்கத்திற்கு வெறியுண்டாக்குவான் என்று நினைத்ததால் அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடி வர வேண்டியிருந்தது.

கூட்டம் வரும் நேரத்தில், குறைந்த பட்சம் சத்தம் வெளியில் வருவது மாதிரியாவது பாட்டுப் போட்டால்தான் விற்பனையாகும் என்ற நிலையில், தெரிந்தவர்கள் வந்து பேச்சுக் கொடுத்துவிடுவது வேறு எரிச்சலான விஷயமாக இருந்தது. கஸ்டமர்கள் என்றால் எப்படியாவது இழுத்துப் பிடித்தால் வாங்கிக்கொண்டு போவார்கள். போஸ்ட் ஆபீஸில் கூடப் பேரம் பேசி ஸ்டாம்ப், கவர் எல்லாம் குறைந்த விலையில் வாங்கி வந்து விடுகிற சாமர்த்தியசாலிகளைச் சமாளிப்பது கஷ்டம். எரிச்சல் தரக் கூடிய விஷயம். இருந்தாலும் ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு வகை என்று நம்மைத் தேற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் Customer is always right. (B.B.A படித்திருக்கிறேனே..!) ஆனால் பிஸினஸ் செய்கிற நேரத்தில் சும்மா பேசுவதற்காகத் தெரிந்தவர்கள் வந்து கழுத்தறுப்பது வேதனை, நண்பன் ஷஹரியரின் மாமா சும்மா கடைத் தெருப்பக்கம் தனது 68வது வயதில் பிறந்த 2 வயது மகனுடன் போய் கொண்டிருந்தார். சிறுவன் என்னைப் பார்த்திருக்கிறான். 'தோ..மாமா..' என்று கை நீட்டிக் காண்பித்து தன் வாப்பாவை இழுத்துக் கொண்டு வந்து விட்டான். டிஸ்கோ லைட் அவனைக் கவர்ந்திருக்க வேண்டும். எட்டாம் இரவு வாணவேடிக்கை நடந்து முடிந்து ஜனங்கள் திரளாகத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். யாகூபையோ ஹனிஃபாவையோ அல்லது ஷேக் முஹம்மதையோ கத்த வைத்தால் (நாம் 'டெக்'கில் கேஸ்ஸட்டை போட்டாலே போதும். அவர்களே கத்த ஆரம்பித்து விடுவார்கள். 'ப்ளே' பட்டனைக் கூட நாம் போடத் தேவையில்லை!) கேஸ்ஸட்டுகள் விற்பனையாகும். கொடி ஏற்றிய இரவன்று இருபது முப்பது கேஸ்ஸட்டுகள் விற்றதுதான். அதற்குப் பிறகு ஏழாம் இரவு வரை வியாபாரம் ஒன்றும் சுகமில்லை. எல்லா வியாபாரிகளுக்கும்தான். எட்டிலிருந்துதான் கூட்டம் வழக்கமாகச் சேரும். எட்டாம் இரவு முக்கியமான நேரத்தில் இவர்!

ஏதோ பேச்சுக் கொடுத்தார். 'டெக்'ஐ ஆஃப் பண்ணுவதைத் தவிர வழியில்லை. வியாபார நேரத்தை உணர்ந்து கொண்டவராகத் தெரியவில்லை. அவரிடம் எடுத்துச் சொல்லவும் முடியவில்லை. தப்பாக எடுத்துக் கொண்டு விடுவாரோ என்று தயக்கமாக இருந்தது. (ஒருவேளை அவரிடமிருந்தும் ஏதும் ஆர்டர் கிடைக்கலாம் என்று நினைத்தேனோ என்னவோ!) அவராகக் கொஞ்ச நேரம் பேசி விட்டுப் போய் விடுவார் என்று நம்பிக்கை படர்ந்த நேரத்தில் பிலால் அதைக் குட்டிச் சுவராக்கினார். 'மாமா..கொடி ஊர்வலம் அன்னக்கி நீங்க ஷோக்கா பாடினீங்க' என்று. போச்சு! கேலிக்குத்தான் அப்படிச் சொன்னார். அவ்வளவுதான்; ஷஹரியரின் மாமனாருக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டு போனது. ஆயிரத்தோராவது தடவையாகச் சொல்ல ஆரம்பித்தார். இருபத்தைந்து வருடமாகத் தான் இப்படி நாகையிலிருந்து வரும் கொடி ஊர்வலத்தில் ஒரு கப்பலில் அமர்ந்து பாடி வருவதை, வயிற்றுவலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் காதர் ஒலி பாவாவிடம், வயிற்று வலி குணமாகினால் வருடா வருடம் கந்தூரியில் கப்பலில் அமர்ந்து பாடி வருவதாக நேர்ந்து கொண்டு, அதன்படியே வருவதை, வற்ற வற்றக் குறையாத தன் உணர்ச்சிகரமான குரலில் சொன்னார். வயிற்றுவலியின்போது தான் துடித்ததை அப்படியே நடித்துக் காட்டினார். இப்போது டிஸ்கோலைட் போட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். இடையில் இரண்டு மூன்று வருடம் பாடாமல் விட்டு விட்டதாகவும், காதர் ஒலி பாவா அவரது கனவில் தோன்றி பாட உத்தரவிட்டதாகவும் சொன்னார். இவருடைய மச்சான் யாசின் காக்கா இதற்காக இவரை நன்றாக வெடைப்பார். 'ஆமா..பெரீய்ய படே குலாம் அலிகான்..நீம்பரு பாடித்தான் ஆவனும்ண்டு பாதுஷா நாயஹம் ஒத்தக் கால்லெ நிண்டாஹலாக்கும்..' என்று. இவருக்கு வயிற்று வலி போயிற்று. ஆனால் எத்தனை பேருக்கு இதனால் தலைவலி..!

சாதாரண சமயமாக இருந்தால் குள்ள மச்சானை - ஷஹரியரின் மாமானாருடைய பட்டப் பெயர்தான் இது- பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவருடைய 'இங்கிலிபீஸ்' அப்படி. M.A  ஆங்கில இலக்கியம் படித்த தன் மருமகனுக்குச் சமதையாகப் பேச வேண்டாமா?

'ஹார்ட் அட்டாக்' வந்து மீண்ட உறவினர் ஒருவருக்குக் குள்ள மச்சானின் ஆலோசனை இது : 'கொழுப்பு சாமான்லாம் சேக்கக் கூடாது..அப்பத்தான் ஹார்ட் அட்டாக்கு 'பிக்-அப்' ஆகும்..'

'ரொம்ப நல்ல மனிதர்' என்று சொல்ல வேண்டும். குள்ள மச்சான் சொல்வார்: 'அவரா..ரொம்ப காமன்ஸான ஆளாச்சே..!'. 'கொஞ்சம் கண்டிப்பான ஆள்' என்று சொல்ல மாட்டார். 'தம்பி...அவரு ஒரு ஸ்கெட்ச்சான ஆளு' என்பார். அடிக்கடி கிரிப், லெவல், செட்-அப் என்று சம்பந்தமில்லாத இடத்தில் இங்லிபீஸ் பிரமாதமாக, பிரவாகமாக வந்து விழும். இவரது ஊரில் இவரை மாப்பிள்ளை என்றுதான் கூப்பிடுவார்கள். நாகையிலிருந்து வவ்வாலடி வந்து கல்யாணம் முடித்ததால் நாகை மாப்பிள்ளை என்பது மருவி 'மாப்பிள்ளை'யாயிற்று. ஒரு சமயம் இரவு ஒரு மணிக்குத் தன் நண்பரின் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டிய சமயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் பெண்டாட்டிக்கு நோக்காடு. உதவிக்கு இன்னொரு பெண் வேண்டும்.

'யாரது நடு ஜாமத்துலெ?' - நண்பரின் மனைவி தூக்கத்திலிருந்து எழுந்த எரிச்சலில் கேட்டது.

'நாந்தான்..மாப்புளெ வந்திக்கிறேன்!'

தன் மாப்பிள்ளையா? சபரிலிருக்கிற மனுஷன் திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் திடுதிடுப்பென்று வந்து நிற்க வேண்டிய அவசியம்? அந்தப் பெண்மனி அலறியடித்துக் கொண்டு கதவைத் திறந்தால், குள்ள மச்சான் !

'அட,... கழிச்சல்ல போவான்..!' - ஒரே கலாட்டா.

குள்ள மச்சான் ஒரு மணி நேரத்திற்குள் சுருக்கமாகப் பேச்சை முடித்து விட்டுப் போனது விந்தைதான். நாசூக்காகவெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஊஹூம். அவர் இஷ்டப்படித்தான் வெளியில் போனார். கூட்டம் முக்கால் வாசி கலைந்த பின்பு என்னத்தைப் பண்ணிக் கிழிப்பது? குறைந்தது பத்துக் கேஸட்கள் விற்றிருக்காதா? 10X25=250. லாபம் நூற்றைம்பது ரூபாய்.

நல்ல வேளையாக மாமா அந்தச் சமயத்தில் இல்லை. ஆனால் மாமா இருக்கும் நேரத்தில்- மிக முக்கியமான வியாபார நேரத்தில்-ஹத்தம் அன்று- தெரிந்தவர்கள் என்கூடப் பேச வந்து விடுவது ஒரு துரதிர்ஷ்டம். என் நெருங்கிய நண்பனான சுந்தரின் நண்பர் பாண்டியன். கத்தாரிலிருந்து இவர் எப்போது வந்தார்...?! ஆள் முன்னைப்போல தொளதொளவென்றில்லாமல் மெலிந்து அழகாக இருந்தார். ஒவ்வொரு ஆளும் சௌதி போய் இரண்டு மூன்று ஆட்களுக்கு உள்ள உடம்பைச் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இவர் இப்படி மெலிந்து போய் வந்திருக்கிறாரே..

திடீரென்று என் பெயரை (இனிஷியலோடு) ஒரு தாளில் எழுதச் சொல்லிக் கையெழுத்தையும் போடச் சொன்னார்.

'தெரியும் பாண்டியன்.. நியூமராலஜியா? ரெண்டு வருஷத்துக்கு முன்னால அதுபடி மாத்தி வச்சேன். எனக்கு இப்பல்லாம் அதுல நம்பிக்கையில்லெ'

'அட, சும்மா எழுதுங்க சொல்றேன்'

'பெயரை எழுதினேன். H. Abedheen

'நீங்க சரியான நாலு. அதுவும் ஒங்க டேட் ஆஃப் பர்த் 13.03.1958. சுந்தர் சொல்லியிருக்கிறான். அப்ப கரெக்ட்தான். கூட்டுனா சூடபிளா நம்பர் ஒண்ணு வர்ர மாதிரி வச்சிக்கிறிங்க..கையெழுத்துப் போடுங்க..பார்ப்போம்'

போட்டேன். 'என்னா இது?' என்றார்.

'கையெழுத்து'

'இதா? ஒண்ணுமே புரியலையே..'

'அதனாலெ என்னா?'

'ஆ..இப்பத்தான் தப்பு பண்ணுறீங்க..கையெழுத்து புரியிற மாதிரி இருக்கனும். ஒங்க பெயர்ல வர்ர எழுத்துலாம் தெரியனும். அப்பத்தான் நம்பருக்கு 'பவர்' இருக்கும்.

'அப்ப..டைப் அடிச்சிடனும்'

'கேலியா? சரி, இப்ப என் கையெழுத்தெப் பாருங்க.' போட்டார். பார்த்தேன். 'ஒரு எழுத்தும் எனக்குப் புரியவில்லை' என்றேன்.

'நீங்க குதர்க்கம் பண்றீங்க'

'இல்லே பாண்டியன்..நெஜமாவே எனக்குப் புரியலே. தவிர, எல்லோருக்கும் ஒரே மாதிரி ஒண்ணு எப்படித் தோணும்? அப்ப 'பவர்'ங்கிறதை தீர்மானிக்கிறது யாரு? பெரிய நிலைமையில் இருக்கிறவங்கண்டு நீங்க சொல்ற ஆளுங்களோட கையெழுத்து அவ்வளவும், எல்லாருக்கும் புரிஞ்சிடுமா?'

தனது உறவினரான கல்லூரிப் பேராசிரியை ஒருவரின் பெயர், அவரது கையெழுத்து, ஒருசமயம் விஜயலட்சுமி என்ற அந்தப் பேராசிரியை தன் கையெழுத்தில் கடைசியாக வரும் 'i' என்ற எழுத்தைப் புரியாமல் எழுதி வந்ததால் - தன் ஒரே ஒரு எழுத்து தன் 'பவரை' இழப்பதுபோல எழுதி விட்டதால் - அவருக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள், தான் அந்தப் பேராசிரியையிடம் விளக்கமாக எடுத்துரைத்து நிலைமையை மாற்றியது எல்லாவற்றையும் பாண்டியன் எடுத்துச் சொன்னார்.

என் முகம் அவருக்குச் சலிப்பைத் தந்திருக்க வேண்டும். 'சரி..ஆபிதீன்.. பதிமூணுலெ வந்த நாலுக்கு லைஃப் முழுக்க ஒடம்பு, மனசு எல்லாத்துலெயும் சங்கடம் இந்துகிட்டுதான் இருக்கும்..ஒங்க பேர்லெ கொஞ்சம் 'ஆல்டர்' பண்ணனும். நான் நியூமராலஜிலெ இப்ப 'ரிஸர்ச்' பண்ணிக்கிட்டிருக்கேன். கண்ட கம்மனாட்டிலாம் இந்த ஃபீல்டை ச்சீப்பா ஆக்கிட்டான்... அதனாலெ இதுலெ நெறயப் பேருக்கு பிடிப்பு இல்லாம போச்சி..நான் கம்ப்ளீட்டா வேற சிஸ்டத்துலெ ரிஸர்ச் பண்றேன். உங்களைத் தவிர வேற யார்ட்டெயும் சொல்லக் கூட இல்லே இதை. இப்ப நான் ரொம்ப பிஸி. ஒரு மாசம் போவட்டும். ஒரு நல்ல நேரத்துலெ இதெப் பத்திப் பேசுறேன். அந்த நல்ல நேரத்துலெ ஒங்க பெயரை மாத்தனும்' என்றார்.

நல்ல நேரமா? அது வருமோ இல்லையோ இப்போது கெட்ட நேரம்தான் என்று தோன்றியது. மாமாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சரியான கூட்ட நேரத்தில் இவன் வந்து கழுத்தறுக்கிறானே என்று முகம் சொல்லியது. எனக்குப் பாண்டியனிடம் சொல்லச் சங்கடமாக இருந்தது. பாண்டியன் இன்னும் சற்று நேரம் பேசினார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இங்கே இருப்பதும் அரபுநாட்டில் சம்பாதிப்பதும் ஒன்றுதான் என்றார். ஒன்றுதானா என்று சந்தேகம் வந்தது.

ஒரு பணக்காரரரின் பிள்ளையாக இருந்தும் எந்தக் காரணத்தாலோ வீட்டால் ஒதுக்கப்பட்டு, மூன்று நான்கு வருடங்கள் ஒரு ஜட்டி வாங்கக் கூட காசில்லாமல் , நண்பர்களைப் பார்த்தால் எங்கே டீ வாங்கித் தரக் கேட்டு விடுவார்களோ என்று பயந்து பயந்து ஒதுங்கிய பாண்டியனுக்கு ஊர் வந்து ஒரு வாரமாகியும் நண்பன் சுந்தருக்கு ஒரு லெட்டர் கூட எழுத முடியாத பிஸி. அலட்சியமாகத் தோளில் தொங்கும் 'நிக்கான்' கேமரா, பாக்கெட்டில் Dunhill International, கையில் கோல்டு-ரோலக்ஸ்.. எல்லாம் ஒன்றுதானா?

'எந்தத் தொழில் தனியாக ஆரம்பிக்கவும் பணமில்லை என்று புலம்புகிறீர்கள்; ரிகார்டிங் சென்டர் மட்டும் திறக்கப் போகிறேன் என்கிறீர்கள். எப்படி?' என்று கேட்டார். துபாயிலிருக்கும் நண்பன் ஷரீஃப் உதவுவதாகச் சொல்லியிருக்கிறான் என்றேன். இதிலும் நம்பிக்கையில்லை என்றேன். பாண்டியன் நிறைய 'அட்வைஸ்' பண்ணினார். கத்தாரில் கவர்மெண்ட் தோட்டி என்றால் சும்மாவா? அதுவும் முன்று வருடச் சம்பாத்தியத்திற்குப் பின் வந்திருக்கிறார்.

ஆனால் அவர் நிரந்தரமாகவே தோட்டியாக இருந்து விடப் போகிறாரா என்ன?

முன்னூறு நானூறு ரூபாய் சம்பளமாகக் கொடுக்கிறேன் என்று லத்தீஃப் மாமா சொன்னாலும் நிச்சயமாகக் கொடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அவருக்கிருக்கும் பிரச்னைகள் அப்படி. இதையே வேறு ஆள் செய்தால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் உறவு என்பதை வைத்துக் கொண்டு ஏமாற்றினால் நான் பொறுத்துக் கொண்டிருப்பேனா? மாட்டேன் என்றுதான் பட்டது. அந்த நிலைக்கு லத்தீஃப் மாமா என்னை ஆளாக்குவாரோ இல்லையோ இப்போது ஒரு சிகரெட்டிற்காக ஒரு ரூபாய் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்வதிலேயே எனக்குக் குஷி வந்து விடுகிறது. பாண்டியனுக்கு ஏன் தெம்பு வராது என்று நினைத்தேன். சரிதான்.

பாண்டியன் கொஞ்ச நேரத்தில் போனார்.

'வியாபார நேரத்துலெ ஏம்பா இந்தச் சள்ளையெல்லாம் விலை குடுத்து வாங்குறே' என்றார் மாமா எரிச்சலுடன்.

'நான் கூப்புடலை'

'அவனுவனுக்கே புத்தி இக்கினும்..சரி, இன்னமே வந்தா மூஞ்சிலே அடிச்சாப்புல சொல்லி அனுப்பிடு'

சரி என்றேன். பாண்டியன் பேசிக் கொண்டிருக்கும்போதே சொன்னார்: மூன்று வருஷம் கழித்து வந்து பார்த்தால் ஊரில் நிறைய தெரிந்த மனிதர்கள் செத்துப் போயிருக்கிறார்கள்; அதிர்ச்சியாக இருந்தது என்று. உயிரோடு இருக்கும் தெரிந்த ஆளைப் பார்த்த சந்தோசத்தில் கடையில் நுழைந்து பேசி விட்டுப் போன பாண்டியன் மேல் எனக்கு அவ்வளவாகக் கோபம் ஏற்படவில்லை. டிஸ்கோ லைட்டை ஆஃப் செய்து விட்டு டி.எம்.யாகூபை கொக்கியாகப் போட்டு ஜனங்களை இழுக்காமல் அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் 'ஸிக்ஸ்டியா இந்தா பத்து ரூவா ரிகார்டிங் சார்ஜ். நைன்டியா இந்தா பதினஞ்சி. ஒரு படத்தோட முழுப் பாட்டையும் போட்டாத்தான் இப்படி. 'செலக்ட்' பண்ணுனீங்கண்டா அஞ்சு ரூவா கூட ஆவும். ஆனா இப்ப செலக்டட் சாங்ஸ் எடுக்க முடியாது. ஸாரி, பாய். ஹந்திரி முடிஞ்சி நிதானமா வாங்க. All songsஆ ? இந்தோ ஒரு மணி நேரத்துலெ தந்துடுறேன்..' என்று பேசுவது ஞாபகம் வந்தது. ரிகார்டிங் ஆர்டர்கள் இதுவரை ஐந்து வந்திருக்கலாம். அதற்கு எவ்வளவு ஆகும்? பதிவு செய்த கேஸட்கள் ஒன்று 25ரு வீதம் இதுவரை பத்துப் பதினைந்து விற்றிருக்கலாம். அது எவ்வளவு ஆகும் என்று மனம் கணக்குப் போட்டபோது பாண்டியன் உயிரோடு இருக்கும் ஆளைத்தான் பார்த்துச் சென்றார என்று சந்தேகம் வந்தது எனக்கு.

ஒருவழியாகக் கந்தூரி முடிந்தது. அடுத்த நாள் காலையிலேயே தர்காவில் எல்லா அலங்கார மின் விளக்குகளும் கழற்றப்பட்டுவிட்டன. பீரோட்டம்..அப்புறம் ஆளோட்டம் என்று சொல்வார்கள். ஊரும் ஓய்ந்து போனது.

பதினான்கு நாளும் சரியான தூக்கமில்லாததாலும் ஒரேயடியாக உட்கார்ந்திருந்ததாலும் எனக்கு உடம்பு கொதித்தது. தலை வெள்ளிக் கிழமை வரை கடையைத் திறந்து வைக்கச் சொன்னார் மாமா. ஊரிலுள்ள எல்லாக் கடைகளும் தலை வெள்ளிக்கிழமை முடிந்துதான் லீவு விடுவார்கள் என்றார். இரண்டு மூன்று நாள் இழுத்தடித்தேன். ஒருவழியாகத் தலை வெள்ளிக்கிழமையும் முடிந்தது. அன்று இரவே கந்தூரி வியாபாரத்திற்கான கணக்குகளை சரிபார்த்து மாமாவிடம் ஒப்படைத்தேன். எந்த வருடமும் இல்லாத வியாபாரம்தான். மாமா முகத்திலிருந்த சிரிப்பு நன்றாகத்தான் இருந்தது. அடுத்த வருடமும் இப்படியே இந்த முகம் சிரிக்குமா என்று நினைத்தேன். ஊரிலுள்ள போட்டி ரிகார்டிங் சென்டர் ஆன 'Technic'இன் ஆட்கள் தினமும் இந்தக் கடையைக் கவனித்தவாறே சென்றார்கள்.  'டெக்னிக்' கமாலுதீன் இந்தப் பஜாரில் முன்யோசனையில்லாமல் கடை திறக்காமலிருந்தது பற்றி வயிறெரிந்து கொண்டிருக்கிறான். அடுத்த வருடம் எப்படியும் இந்தப் பஜாரில் ஒரு கடையைப் பிடிப்பான். ஆனால் மறு கந்தூரி வர இன்னும் ஒரு வருடமல்லாவா இருக்கிறது? இதில் எவ்வளவோ நடந்து விடலாம்.

சனி, ஞாயிறு இரண்டு நாள் லீவு விடச் சொன்னார் மாமா. ஆச்சரியம்தான். சனிக்கிழமை முழுதும் தூங்கினேன். அன்று இரவு பத்து மணிக்கு பாட்டியா எழுப்பி விட்டார்கள். சாப்பிட்டு விட்டுப் படுத்தவன் ஞாயிறு காலை எழுந்திருக்கப் பதினோரு மணியாயிற்று. குளித்து, சாப்பிட்டு விட்டுக் கடைக்குச் சென்றேன்.

இந்தக் கடை திறந்ததிலிருந்து யாகூபோ, ஹனிஃபாவோ, ஷேக் முஹம்மதோ, பாலசுப்ரமண்யமோ, அல்லது வேறு எந்தக் கந்தர்வக் குரலோன்களோ சாக்கடைத்தனமான இசையைக் கத்தும்போது ,மலத்தைக் குதப்பிக் குதப்பித் தின்பது போல ஒரு உணர்வு உடலில் ஏற்படும்போது , 'கரெண்ட் கட்' ஏற்பட்டால் சந்தோசம் கொள்ளலாம். ஆனால் இங்கே முடியாது. மாமா சக்தி வாய்ந்த 'இன்வெர்டர்' வைத்திருந்தார். அது பத்து டியூப் லைட்கள், மூன்று ஃபேன்கள், இரண்டு மூன்று மூன்று 'டெக்'குகளைப் பாடவைக்கும் சக்தி வாய்ந்தது. அதில் 'பின்'னைச் சொருகி மறுபடியும் ஜனங்களைக் கவர வேண்டியிருந்தது.

எல்லாப் பாவத்தையும் தொலைத்துத் தலை முழுகுகிற மாதிரி ஒரு பீம்ஷென் ஜோஷியையோ ஜி.என்.பி.யையோ கேட்கும்போது ஏற்படுகிற பரவசத்தைத் தருகிற தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.கஃபூரை இன்று ஒரு இரண்டு மணி நேரமாவது ஹெட்போனில் கேட்க வேண்டும் என்று ஆவலாகப் போனேன். வருடத்திற்கு ஒருநாள் கந்தூரியின் ஏழாம் இரவன்று பெரிய எஜமான் வாசலில் பக்கவாத்தியங்களோடு பாடுவார். 'நீண்ட பெருமூச்சுகளை எழுப்பும்' உயர்ந்த சங்கீதம் அது. இந்த வருடம் நான் போய்க் கேட்க இயலவில்லை. போன வருடம் அவர் பாடியபோது நான் பதிவு செய்த கேஸட்கள் ரிகார்டிங் ரூமில் இருந்தன. அதைப் போட்டுக் கேட்க வேண்டும் என்ற ஆவலோடு சென்றேன்.

அந்த கேஸட்டுகளை ரிகார்டிங் ரூமிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து கடையிலிருந்த டெக்கில் போட்டுவிட்டு ஹெட்போனைக் காதில் வைத்தேன். கன்றாவியாக இருந்தது. அவரது குரலும் பாடும் விதமும் எனக்கு அளவு கடந்த சிரிப்பை ஏற்படுத்தியது. மூன்று TDK MA-90. ஒரு கேஸட்டின் விலை 50 ரூபாய். ரிகார்டிங் சார்ஜோடு 65 ரூபாய் 70 ரூபாயாகும். மூன்று கேஸட்களுக்கு 70x3=210ரூ. டி.எம்.யாகூபைப் போட்டால் ,பக்கா கேஸட்டில்தான் வேண்டும் என்று கேட்டு வரும் பக்கா கஸ்டமர்களுக்கு  250 ரூபாய்க்கு விற்கலாம்.

'பிலால்..இதெ அப்படியே அழிச்சிட்டு மூணுலெயும் யாகூப் காக்கா பாட்டெ போடும்..ரெண்டுலெ முஸ்லீம் பாட்டு..இன்னொன்னுலெ கட்சிப் பாட்டு. நல்லா வெலைக்குப் போவும்' என்று பிலாலிடம் சொல்லி அந்த கேஸட்டுகளைக் கொடுத்துவிட்டு வீட்டிற்குத் தூங்கப் போனேன்.

(முற்றும்)

அருஞ்சொற்பொருள் :

கந்தூரி - அவுலியாக்களின் நினைவுதினத்தில் நடத்தப்படும் விழா  (அவுலியா - இறைநேசர்)
கிராஅத் - திருக் குர்ஆன் வசனங்களை இராகத்துடன் ஓதுதல்
தர்கா - அவுலியா அடக்கம் செய்யப்பட்ட இடம்
ஜியாரத் - அவுலியாவின் சமாதியைத் தரிசித்தல்
பிஸாது - புறம் பேசுதல்
சீராணி - பிரார்த்தனைக்குப் பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு
பீர் - குரு  (கதையில் வரும் பீர் , 'பெரிய எஜமான்'-ன் பிரதான சீடரான முயினுதீனின் ஞான வம்சா வழியினரின் தலைவர்)
ஃபாத்திஹா - இறந்தவர்களுக்காகவும், அவுலியாவை முன்வைத்தும் இறைவனை இறைஞ்சுதல்
ஹத்தம் - கந்தூரியின் முக்கிய நாளான , அவுலியாவின் ரவுளா ஷரீஃபுக்கு (சமாதி) சந்தனம் பூசும் நிகழ்ச்சி
தப்ஸ் - வட்டமான கொட்டு
ஜர்தா சோறு - விசேஷங்களின் போது செய்யப்படும் இனிப்பான சோறு
பதுவுஸூ - பொறுமை
பாங்கு - தொழுகைக்கான அழைப்பொலி
ஹொத்துவா -  குத்பா (கூட்டுத் தொழுகை)
சபர் - பிரயாணம்
சள்ளை - தொந்தரவு
காதர் ஒலி, பாதுஷா நாயஹம் , பெரிய எஜமான் -  'இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் புரவலர் நாதர்' என்று போற்றப்படுபவரும் இஸ்லாமியர்களை விட அதிகமாக இந்துப் பெருமக்களை இன்றும் ஈர்ப்பவருமான இறைநேசர் ஷாஹூல் ஹமீது பாதுஷா (1504 - 1570 A.D.)

2 comments:

  1. 'கடை'
    ஆபிதீனின் இக் குறுநாவலை முதன் முதலில் வாசித்த போது, என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதனை ஒரு எழுதாளன் எழுதியதாகவே நினைக்கத் தோணவில்லை.

    அற்புதம் நிகழ்த்துகிற - அமானுஷ்ய சக்தி கொண்ட ஒருவர்தான் - அதனை எழுதி இருக்க வேண்டும் என நினைத்தேன்.

    இஸ்லாமிய வட்டத்தில் - தொட்டதற்கெல்லாம் பிரச்சனை செய்யும் சகோதரர்கள் மலிந்ததோர் வட்டத்தில் - இக் குறுநாவல், மிகுந்த துணிவுடன் எழுதப்பட்ட ஒன்றாகவே கருதினேன்.

    இக் குறுநாவலை வாசிப்பதற்கு முன் ஆபிதீன் என்பவர் கருப்பா சிவப்பா என்று தெரியாது - இதனை வாசித்தப் பிறகுதான் அந்த அமானுஷ்ய சக்தி கொண்ட ஆத்மாவை பார்க்கணும் என்று கருதினேன்.

    முன்னமே எனக்கு நண்பராகியிருந்த ரஃபி என்கிற நாகூர் ரூமியிடம் (எங்க தாலுக்கா மாப்பிள்ளை..) - அந்த அமானுஷ்யத்தை பார்க்கணுமென ரொம்பவும் கேட்டு - முதன் முதலில் - ஆபிதீனை பாண்டிச்சேரியில் வைத்து - அவரது அன்பு அண்ணன் அறிவழகன் என்கிற, ரவி என்கிற, சாரு நிவேதிதாவுடன் ஒருசேரப் பார்த்தேன்! அப்படி நேரில் பார்த்தபோதும் அவர் எனக்கு ஒரு அமானுஷ்ய சக்தி கொண்டவராகவே தெரிந்தார்! இப்பவும் அப்படித்தான் என்பது வேறுவிசயம்!

    இக் குறுநாவலைப் பற்றி இன்னும் சொல்லலாம் - அதன் மொழி அழகைப் பற்றி ரசிக்க ரசிக்க பேசிக் கொண்டே இருக்கலாம். அப்புறம், என்னை மாதிரியே அக் குறுநாவலை வியந்து - மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் வியப்பைப் பற்றி! (கடந்த 25 - வருஷங்களில் நான் வாசித்த அற்புதமான கதை இது!! - சுஜாதா... )

    இக் குறு நாவலைப் பற்றி பல இடங்களில் பல முறை எழுதி இருக்கிறேன். மீண்டும் கூட முழுமையான வாசிப்பின் உள்வாங்களோடு - இதன் அழகை எழுதிப் பார்க்கணும்.

    - தாஜ்.....

    *

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கு நன்றி தாஜ். திண்ணை தளத்தில் என் 'குழந்தை' கடிதத்திற்கான லிங்க் இன்னும் சரிசெய்யப்படவில்லையாதலால் உங்கள் பக்கத்தையே இங்கே (கதைகள் பகுதியில்) குறிப்பிட்டிருக்கிறேன். : http://tamilpukkal.blogspot.ae/2011/12/blog-post.html

      Delete