Monday, April 28, 2025

மரண அறிவிப்புக்குப் பின்னேயும் மத நல்லிணக்கம் - ராமச்சந்திர வைத்தியநாத்


சாதாரணமாக இன்றைய தினம் ஒரு வெற்றுச் செய்தியாக இருக்கககூடியது காலப்போக்கில் வரலாறாக மாற்றமடைகிறது.    சில நாளிதழ்கள் இதை அப்படியே அல்லது சற்று உருமாற்றி தங்களின் முழக்கமாக கொள்வதும் இருந்து வருகிறது.  ஆயின் இன்றைய செய்தி நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவும் அமைகிறது.  முந்தியகால நிகழ்வுகளை அறிந்த அல்லது தெரிந்தோருக்கு இது சுலபமாகவே சாத்தியப்படும்.  

பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும்  “இரங்கலும், நினைவுகூறலும்” என்றொரு  விளம்பரப் பத்தியினை வெளியிட்டு வருகிறது.  குறிப்பிட்ட நபரின் மரணச் அறிவிப்பினை  அனைவருக்கும் தெரிவிக்க முடியாத நிலையில் இத்தகைய பத்தி அறியக்கூடிய  ஒரு வாய்ப்பாகவே இருக்கிறது.  இவ்வறிப்புகளின் பின்னே தகவல் மட்டுமின்றி வரலாறும் ஒளிந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடும் இருக்கிறது.  சமீபத்தில் 2025 ஏப்ரல் 18 வெள்ளியன்று  வெளியான இந்து ஆங்கில நாளிதழின் 9ம் பக்கத்தில் வெளியான இரங்கலும் நினைவுகூறலும் பத்தியில் இதுபோன்ற அனுபவமொன்று நிகழ்ந்தது.  

தமிழ்கூறும் நல்லுகில் உள்ளோருக்கு  கடையம் என்றவுடனே நினைவுக்கு வருவது மகாகவி பாரதியைத்தான்.  அதே போன்று அறுபது எழுபது வயதைக் கடந்தோருக்கு கடையநல்லூர் என்றாலே ஜனசமூகத்தில் நன்கறியப்பட்ட இருவர் நினைவுக்கு வருவது என்பது தவிர்க்க முடியாதது.  இந்த இருவரும் ஒரே பெயரினால் அறியப்பட்டவர்கள்தாம்.  காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் மஜீத்.  சங்கரன் கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கடையநல்லூர்க்காரர்தான்.  கடையநல்லூரில் மற்றொரு மஜீத்தும் புகழ்பெற்றவராக  விளங்கி வந்தார்.  இவர் அரசியலில் ஈடுபட்டவர் அல்ல.  மாறாக இறை இசைப்பாடல்கள் வழியே தமிழகம் முழுமையிலும் அறியப்பட்டவர்.  இந்துக் கடவுளர்களை குறிப்பாக முருகனைப் பற்றிய இவரது பாடல்கள் அன்னாளில் பட்டிதொட்டியெங்கிலும் ஒலித்தது என்றே கூறலாம்.  பிறப்பால் இஸ்லாமியராக இருப்பினும் கர்நாடக இசையில் நன்கு பயிற்சி பெற்று கச்சேரிகளை நிகழ்த்தி வந்தவர்.  இவரது இசைக் கோர்வைகளின் பதிவுகள் இன்றும் இருந்து வருகிறது.  பக்திரச பாடல்கள் எனும் தொகுப்பில் அவர் எழுதி பாடிய பாடல்கள் சிறப்பானவை. குறிப்பாக  நாராயணணை அன்றி பாராயணம் செய்ய ஓர் நாமம் இருக்கிறதா,   கொண்டோடி வா மயிலே முருகனை இங்கு கொண்டோடி வா, திருத்தணிகாஜலத்திலிருக்கும் முருகனை போய் தரிசிக்க வாராய் போன்ற வசீகரமான  பாடல்கள் இசைக்கு அப்பாற்பட்டவர்களையும் சற்றே நின்று கேட்கச்  செய்திடும்.   அறுபது எழுபதுகளில் தென்மாவட்ட கோயில் திருவிழாக்களில் மஜீத்தின் இசையை கேளாத மக்கள் மட்டுமின்றி மூலவர்களும் உற்சவ மூர்த்திகளும் இருந்திருக்கவே முடியாது. 

இசைவழி இறைப்பணியை அவருக்குப் பின்னர் அவரது மகனும் மகளும்  தொடர்ந்து வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வியப்பினை அளிக்கக்கூடியது.  கலைமாமணி எம்.ஏ.மஜீத் சபையெனும் அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டுதோறும் திருத்தணியில் நடைபெறக்கூடிய படி உற்சவத்தில் எம்.ஏ.மஜீத் மற்றும் எம்.ராஜேஸ்வரி ஆகியோரின் வாரிசுகள் உஷாவும் குருநாயகமும் பங்கேற்று நடத்தி வந்திருக்கிறார்கள்.  சென்ற ஆண்டில் எம்.ஏ.எம்.குருநாயகம் இறந்திருக்கிறார்.  அதையொட்டிய முன்கூறப்பட்ட நினைவுகூறல் அறிவிப்புதான் இந்து நாளிதழில் வெளியானது. அது அறிவிப்பு மட்டுமல்ல  தங்கள் தனித்துவத்தை இழக்காது இந்து இஸ்லாமிய இணைப்பின் அடையாளமாய்  இக்குடும்பம் விளங்குவதோடன்றி இறைப்பணிகளை தொடர்வது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகும் என்பதையும் அறிவிக்கிறது. போற்றலுக்குரிய மத நல்லிணக்கத்தை, வழிபாட்டு ஜனநாயகத்தை ஒரு  நினைவுகூறல் விளம்பரம்  வெளிப்படுத்துவது என்பது எந்த அளவில் அன்றாட நடப்பில், மக்கள் ஜனசமூகத்தில் பரஸ்பரம் புரிதலோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்துகிறது. இத்தருணத்தில் இது போன்ற மற்றொரு செய்தியும் முக்கியத்துவம் வாய்ந்தது.  18ம் நூற்றாண்டில் வாழ்ந்த  இஸ்லாமியரான ஜவ்வாதுப் புலவர் ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள மேலகொடுமலூரில் உள்ள முருகன் பெயரில்  குமாரபதிகத்தை இயற்றி அர்ப்பணித்திருக்கிறார்.  மத நல்லிணக்கத்தின் சின்னமாக திகழும் ஜவ்வாது புலவரை கௌரவிக்கும் வகையில் அவ்வூரில் அமைந்துள்ள முருகன் கோயில் கோபுரத்தில் அவரது உருவச்சிலையும் இடம் பெற்றிருக்கிறது.  இத்தோடன்றி அவர் இயற்றிய பதினோரு பாடல்களைக் கொண்ட குமார பதிகத்தையும்  ஆலயத்தின் உள்ளே  பளிங்குக் கற்களில் பொறித்து வைத்திருக்கின்றனர். தவிர அருணகிரிநாதரே முருகனை ராவுத்தனே என்று  விளித்துப் பாடியதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது. 

இந்து நாளிதழின் அன்றைய அதே பத்தியில் திவான்பகதூர் ஷண்முக முதலியாரின் பேத்தி பிரமீளா ஷண்முகம் என்பவரின் மரண அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. சென்னை நகர வரலாற்றோடு இணைந்த ஷண்முக முதலியார் துபாஷாக தன் பணிகளைத் துவக்கி பின்னாளில் இம்பீரியல் பேங்கில் நிர்வாக சபையில் மட்டுமின்றி பச்சையப்பன் அறக்கட்டளை ஜிம்கானா கிளப் போன்றவற்றிலும் உறுப்பினராக இருந்தவர். அவரது தோட்ட வீடு அஜ்மீர் சென்னை பூந்தமல்லி சாலையில் ஸ்பர் டாங்க்குக்கு எதிராக ஈகா திரையரங்கிற்கு அருகாமையில் அமைந்திருந்தது.    அறுபதுகளில் நான் பச்சையப்பனில் பயின்ற காலங்களில் ஷண்முக முதலியாரின் பேரனும் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தவருமான  டி.கே.சிங்காரம் இந்த வளாகத்தில்தான் வசித்து வந்தார். அவரது மகள்கூட இதே கல்லூரியில் அறிவியல் துறையில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.   தற்பொது அஜ்மீர் அடுக்கு மாடி வளாகமாக மாறி பெயரை இழந்த போதிலும்   சண்முக முதலியாரை நினைவுகூறும் விதமாக  அயன்புரத்தில் தெருவொன்று இன்றும் இருந்து வருகிறது. 

வாழும் சமூகம் பற்றிய  பிரக்ஞையினை இரங்கற் குறிப்புகளும் நினைவுகூறுல்களும்  ஏற்படுத்துவதில்லை.  வாழ்ந்த மனிதர்களின் செயல்பாடுகள்தான் இத்தகைய செய்திகளை நமக்கு அறிவுறுத்துகிறது. மஜீத்தின் மத நல்லிணக்கமும் ஷண்முக முதலியாரின் கல்விக்கான வழிகாட்டலும் இதைத்தான் உறுதி செய்கிறது. 

*

நன்றி : ராமச்சந்திர வைத்தியநாத் | veeorr52@gmail.com
*
தொடர்புடையவை : 

1. 'நாராயணனையன்றி...’ - கடையநல்லூர் ஏம் ஏ மஜீத்
Thanks to : yogesh digital raja

2. கடையநல்லூர் ஏம் ஏ மஜீத் அவர்களின் நாடக மேடை பாடல்கள் 
*
3. நாடாக்காரர்கள் - சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதை

Thursday, April 3, 2025

மழையும், ரயிலும் - ஷம்ஸ் இப்ராஹிம்

சுவாரஸ்யமான ‘கடையநல்லூர் புராணம்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து, பகிர்கிறேன். இந்த நூல் பற்றி, ’எளிய மனிதர்களிடத்தில் நிறைந்த வாழ்வும் ஒப்பனையற்று ததும்பும் கதைகளுமிருக்கின்றன. கதையின் மனிதர்களும் இதன் வட்டார சொற்களும் புதிய அனுபவமாகிறது. கதைகள் வெட்டவெளியில் தடுப்பாரின்றி வீசும் காற்றுபோல பரவுவதை எனது வாசிப்பில் உணர்ந்தேன்’ என்கிறார் நண்பர் மீரான் மைதீன். 

நன்றி.

**

மழையும், ரயிலும் - ஷம்ஸ் இப்ராஹிம்

விடுமுறை நாட்களில் வெள்ளனே எழ நேர்ந்தால் விளக்கிய கையோடு சாயாவைக் குடித்து விட்டுத்தான் வாசலுக்கு வருவேன். எல்லோர் வீட்டிலும் முதலாவதாக எழுந்து விடும் ம்மாக்களை போன்று ஐஸாம்மாவும் வெள்ளனே எழுந்து விடும். அது எப்படி ம்மாக்களுக்கு மட்டும் 'அலாரமே' இல்லாமல் எழும்ப முடிகிறது என நான் பலமுறை யோசித்ததுண்டு. ம்மா சொன்னாள், “பஜர் பாங்கு சொல்லும் பொழுதே எனக்கு முழிப்புத் தட்டி விடும், வாப்பா தொழுதுவிட்டு வரும் வரை சும்மா படுத்துக் கிடப்பேன்”.

காலை எழுந்ததும் வாப்பாவிற்குச் சாயா போடுவதில் ஆரம்பமாகிறது ம்மாவின் விடியல். நாஷ்டா என்ன செய்யலாம் என யோசித்தவாறு வாசலில் துப்புரவுப் பணியாளர் விசில் சத்தம் கேட்கும் முன்பே, ஒருபக்க கதவின் மேல் தாழ்ப்பாளைத் திறந்து கதவில் தொங்கும் திரைச் சீலையால் கதவை இறுக்கி மூடச் செய்து, குப்பைத் தொட்டியுடன் வாசலில் போய் உட்காரும் ஐஸாம்மா. என் நல்லம்மா அடிக்கடி என்னைப்பற்றிச் சொல்வாள், 'உறங்கினால் நீ ஜகடி முண்டம்'. (ஜகடி முண்டம் என்றால் முண்டமான பேய். உடல் முழுதும் தீப்பற்றி எரிய, தெருவில் கிழக்கும் மேற்கும் உருளுமாம்) அதனால் எந்தப் பக்கம் படுத்தாலும் அநேக நேரங்களில் வாசல் நேராகவே என் காலை புலரும். சில சமயம் ஒழுங்காக அடைபடாத கதவு பாதியளவு திறந்து விடுவதால் காலையிலேயே எனக்கும், ம்மாவிற்கும் வாக்குவாதம் நடக்கும்.

அன்றும் அப்படித் திறந்து போட்டுப் போனதும் இரண்டு முறை ம்மாவை அழைத்தேன். ம்மா வாசலில் இல்லையென்று தெரிந்தது. மெல்ல எழுந்தேன். கதவடைக்க வரும் பொழுது தெருவைப் பார்த்தேன். வெளியே தூவானம்! மழை காரணமாக மூன்று நாட்களுக்குப் பள்ளிக்கூடமும், மதரஸாவும் 'லீவு' விட்டிருந்தார்கள். மேற்கு வானெல்லாம் பீடிப் புகை மண்டியது போலாக ஆங்காங்கே கருப்பாய் குழுமியிருந்தது. சூட்டைத் தணிப்பதல்ல, அதிகாலை பெய்யும் மழைக்கு மண்ணை சந்தித்தல் மட்டுமே பணி. வழியிலேயே சூரியனைச் சிறை பிடித்து விடும் மேகங்கள் மழையையும், நிலத்தையும் தனியாகச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து உபகாரம் செய்கின்றன.

எதிர் வீட்டு ஹாஜா வாப்பாவும், என் சேக்காளி மம்மதும் வாசலில் நின்று கிழக்கே பார்த்து என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல மம்மதும் பனியனுடன் வெளியே நின்றிருந்தான். சூர்யோதயமே காணாத இவன் வந்து நிற்பதில் ஏதோ சம்பவம்தான் என்று யோசித்துக் கொண்டே நானும் வாசலில் வந்து கிழக்கே பார்த்தேன். கீழக் கடைசி வீட்டு செய்யதலி பாத்திமா ம்மா வீட்டின் முன், பெண்கள் கூட்டம் கூடி நின்றது. ஐஸாம்மாவும் அங்கேதான் நின்றாள். எங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டியைக் காக்கா ஒன்றிரண்டு முறை கிளறிவிட்டு மீன் கழிவு சுற்றி வைத்த 'பாலித்தீன்' உறையைத் தூக்கிக் கொண்டு சற்று தூரமாகப் போய் பிரித்துக் கொண்டிருந்தது. அது கிளறிவிட்டுப் போனதால் தெரு முழுக்க இலேசாக மீன் நாற்றம் வீசியது. மழையில் நனைந்த சில காக்கைகள், கரண்ட் கம்பிக்கு மேல் நின்று கூர் அலகினால் தத்தமது உடலை சிக் எடுத்துக் கொண்டிருந்தன.

ஐஸாம்மாவை பார்த்துவிட்டுத் திரும்பும் போது மம்மதிடம், “என்ன?” என்று கேட்டேன்.

"தெரியல! சத்தமா கிடக்குன்னு வந்தேன். வாப்பா! என்னப்பா?” என்றான்.

"தண்டவாளத்துல யாரோ ஆக்சிடெண்ட் ஆகிட்டாங்களாம்” என்று ஹாஜா வாப்பா சொன்னார்.

"மச்சான்! வரியா? போய் பாத்துட்டு வரலாமா?” என்று அவன் என்னிடம் கேட்டான்.

மம்மதைப் பார்த்து "என்னத்துக்குல அங்க? இப்போ போலீஸ் வருவான். பேசாம போய் படு” என்று அதட்டி விட்டார் ஹாஜா வாப்பா.

நான் வேகமாக சட்டையைப் போட்டுவிட்டு கிழக்கே தண்டவாளம் நோக்கிச் சென்றேன். மேற்கு நோக்கி வந்த ஐஸாம்மா 'மழைத்துளி விழுது வீட்டுக்குப் போ!' என்று என்னை விரட்டி விட்டாள். நான் போவதைப் பார்த்து மம்மதும் செருப்பைப் போட்டுவிட்டு சட்டையைப் பூட்டியவாறு, எனக்குப் பின்னால் தொங்கோட்டமாய் ஓடி வந்தான். அவன் வாப்பா சத்தம் கொடுத்ததை இரண்டு பேருமே காதில் வாங்கவில்லை. ஐஸாம்மா என்னோடு சேர்த்து, அவனையும் வீட்டுக்குப் போகச் சொல்லி விரட்டியதும் "மேல ஏற மாட்டோம் ஐஸாம்மா, இங்கே நின்னு பாத்துட்டு வந்துடறோம்” என்று எனக்கும் சேர்த்து சிபாரிசு செய்தான். ஐஸாம்மா வாசலுக்குப் போனதால் இனி நாங்கள் கண் பார்வைக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஏனெனில், கடையநல்லூர் தெருக்களின் கட்டிட அமைப்பே வித்தியாசமானது. ரயில் பெட்டியைச் செங்குத்து வரிசையில் அடுக்கி வைத்தார் போல், ஒன்றுக்கொன்று பொதுச்சுவர் கொண்டு அமையப் பெற்றிருக்கும். தெருவின் முனை மேற்கே மெயின் ரோட்டில் தொடங்கி, கிழக்கே தண்டவாளத்தருகே முற்றுப்பெறும். முன்பெல்லாம் மேற்குத் தெருவில் நின்று கொண்டு கிழக்கே பார்த்தால் ரயிலைக் காண முடியும். ஆனால் இப்பொழுது எல்லா வீட்டின் வாசலையும் இஷ்டம் போலத் தெருவுக்குள் கொண்டு வந்து பாதையை ஆக்கிரமிப்பு செய்தபடியால் கிழக்கு நோக்கி வர வர வீட்டின் வாசற்படிகள் வரிசையில் இருக்காது. அதனால் ரயில் பார்க்கும் கொடுப்பினையெல்லாம் மேற்குத் தெரு அப்பா புள்ளைகளுக்கு (குழந்தைகள்) வாய்த்து விடவில்லை.

நானும், மம்மதும் தண்டவாளம் மேலேறினோம். பருத்த மழைத் துளி ஒன்று என் உச்சந்தலையில் பட்டு விரிகையில் நாங்கள் நடக்கத் தொடங்கி இருந்தோம். குளிரும், மண் சுகந்தமும் சேர்ந்து தண்டவாளமெங்கும் ஈரப்பசை. திடீரென எங்கிருந்தோ வந்த 'உஹ்ப்' என்ற வாடைக் காற்று என் உடம்பிற்குள் ஊடுருவி மறுபக்கம் வெளியேறிப் போனது. தண்டவாள ஜல்லிகளுக்கிடையே இரண்டு மூக்குத்திச் செடிகள் காற்றுக்கு இசைந்தாடிய வண்ணம் ஆடிக் கொண்டிருந்தன. தெருக்களையெல்லாம் தாண்டி 'ஐஸ் வாட்டர்' கிணற்றுக்குப் பக்கத்தில் இருக்கும் தென்னந்தோப்பருகே அந்தச் சம்பவம் நடந்துள்ளதைக் கண்டு கொண்டோம். செல்ல வேண்டிய இடம் தூரம்தான். தண்டவாளத்தின் மேலும் கீழும் மக்கள் கூட்டம் கணிசமாய் தென்பட்டது. பக்கத்துத் தெருக்காரர்கள் சிலர் விபத்துக்குள்ளான உடலைப் பார்த்து விட்டு தண்டவாளத்திலிருந்து கீழிறங்கிப் போனது தெரிந்தது. எங்கள் தெருக்காரர்கள் சிலர் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். 'மழை கூடும் முன் பார்த்து விட்டு வரலாம்' என்று மம்மது ஓட்டம் எடுத்தான்.

சகதி கலந்த எங்களின் செருப்புக்கால் மிதிப்பட்டு தண்டவாளக் கற்கள் புரள ‘சலுப்! சலுப்!' என்று இருவரும் ஓடினோம். ஐஸ் வாட்டர் கிணற்றை நெருங்கும் பொழுது “நீ என்னல இங்க வந்த?” என்று என் சாச்சா முறைப்புடன் கேட்டார். சர்க்கார் கேட்டுக் கொண்டதால் அவரும், அவர் சேக்காளி ஆட்டோ பஷீரும் விபத்து விஷயமாகக் குறுக்கு விசாரணை நடத்த வந்திருந்தார்கள்.

"சும்மா பாத்துட்டு போலாம்னு..” என அவரை விட்டு விலகினேன்.

என்னை நெருங்கி லாவகமாய் வந்தவர் நாக்கைத் துருத்தியவாறு, "வேணாம் வா! QUIT!.. அது ரொம்ப அசிங்கமா கிடக்கு” என்று சொல்லிக் கொண்டே என் கையை இழுத்துக் கொண்டு நடக்கலானார். அவரின் பிடியை விட்டு நழுவி விடுவேன் என்பதால், பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கும் குழந்தையை இழுப்பது போல் என் தோள் புஜங்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டார். மழை பெய்யத் தொடங்கியதால் கூட்டம் கொஞ்சம் விலகியது. சாச்சாவோடு நடந்து கொண்டே நான் திரும்பிப் பார்க்கும் பொழுது யாரோ ஒருவன் தண்டவாளத்தின் நடுவே கேட்பாரற்றுக் கிடந்தான். ஓர் உருவம் அதை நோக்கி ஆவேசமாய் ஓடியது.

ஆமாம்!... மம்மது அவனை நெருங்கிப் போய்விட்டான். 

"போலீஸ் வருவான். மேல போகக் கூடாது. இங்க நின்னு பார்” என்று என்னைக் கடைசி வீட்டு செய்யதலி பாத்திமாம்மா வாசலில் நிற்கச் சொல்லிவிட்டு சாச்சா கடந்து போனார். மாவடிக்கால் சாலை வழியே 'ஆம்புலன்ஸ்' வந்து நின்றது. உள்ளிருந்து இறங்கிய இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தண்டவாளம் வழியாக மட்டுமே அங்குப் போக முடியும் என்பதால் உடலை எப்படித் தூக்கிக் கொண்டு போகப் போகிறார்கள் என்று பார்க்கக் கூட்டம் கூடி நின்றது.

தூரலில் நனைந்தவாக்கில் மம்மது அங்கிருந்து ஓடி வந்தான்.

“என்னல?.. பாத்துட்டியா?” என்றேன்.

நான் அப்படிக் கேட்கும் பொழுது ரயில்வே கேட்டுக்கு அருகே இருந்து இரண்டு போலீஸ்காரர்கள்' சிரித்துப் பேசிக் கொண்டே வந்தார்கள். இன்னும் இருவர் அவர்களுக்குப்

பின்னால் ‘ஸ்ட்ரச்சரை' தூக்கிக் கொண்டு தண்டவாளம் மேல் ஓடி வந்தார்கள்.

"ச்ச்ச! உவ்வேக்! தலையே இல்லல. அடிச்ச அடியில தூக்கி வீசி ரயில் அவன் மேல ஏறிப் போயிருக்கு. கால்ல உள்ள சதை இவ்ளோக்கும் தண்டவாளத்துல பிஞ்சி கிடக்குது. மூளையும், கண்ணும் தனியா கிடக்கு. உவ்வேக்! வாந்தி வந்துட்டுன்னு ஓடி வந்துட்டேன்... நல்ல வேளைக்கு நீ பாக்கல...”

இதை அவன் சொல்லும் பொழுது சில பெண்கள் கூட்டமும் அதைக் கேட்டு,  ‘ஷூ!' 'இப்படியா சாவு வரணும்?'

'அய்யோ! எவனாவது வெளியூர்காரனா இருக்குமோ?'

'காது கேக்காத கிழவன் இருப்பானே மாமி.. அவனா இருக்கலாமா?' என ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். 

மழை இன்னும் வேகம் காட்டியது. உடலை எடுக்கப் போன இருவரும், அதனைச் சுமந்து குலுங்கிக் குலுங்கி ஓடி வந்தார்கள். வெள்ளைத் துணி கொண்டு மூடிய உடலை ரயில்வே கேட்டருகே நின்ற ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். உடல் எங்களைத் தாண்டிப் போகும் பொழுது அது எங்களை அமைதி பேணும்படி கேட்டுக் கொண்டது. அதனால் சடுதியில் எல்லாருமே அமைதியாகினோம். அக்கணம் ஓடும் இருவரால் கற்களின் சலசலப்பு மட்டுமே கேட்டது. பின்னும் சற்று நேரம் வரைக்குமே அதே நிசப்தம். மழையோடு நாங்கள் எல்லோரும் கலைந்து போனோம். 

இரண்டாம் நாள் காலையில்தான் அவன் யாரென்றே அடையாளம் கண்டுபிடித்தார்கள். 'முட்டை வியாபாரியின் மகன் பரிதாபச் சாவு' என்று சார்வாள் வீட்டுக்கு வந்த பேப்பரில் செய்தி இருந்ததாக மம்மதின் வாப்பா சொன்னார். நானும், மம்மதும் போய் பேப்பரைப் பார்த்தோம். அவன் இருபத்தெட்டு வயதைச் சார்ந்தவன் என்றும் அவனின் புகைப்படமும், அதற்குக் கீழே பெரிதாகத் தண்டவாளத்தில் துணியால் மூடிய நிலையில் அவன் உடலும் ஒட்டப்பட்டிருந்தன. காதல் தோல்வியில் தற்கொலை என்று யூகிப்பதாகவும், காவல்துறை விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்தி முடிவு பெற்றிருந்தது. 

ஒரு வாரமும் அவன் ரயிலில் விழுந்து செத்துப் போன கதைதான் எல்லாத் தெருவிலும் ஓடியது. வட்டாரத்துப் பெண்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் மச்சான்களோடு பேச இதுவும் பேசு பொருளானது. செய்யதலி பாத்திமா ம்மா அவனை ஒருநாள் முன்பே தண்டவாளத்தில் வைத்துப் பார்த்ததாகவும், தன் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்ததாகவும் சொன்னாள்.

‘ஏம்லா நிறுத்திட்ட? இரண்டு நாள் தங்கிட்டு கறி சாப்பிட்டுப் போனாம்னும் சொல்லு... உன்ன எவன் கேப்பான்?’ என நல்லம்மா எல்லோரின் பேச்சுக்கும் கேலி செய்தாள். 

அந்த இடத்தைத் தாண்டிப் போனால் மட்டுமே எங்கள் கிரிக்கெட் கிரவுண்டை அடைய முடியும். அப்படி அதனைக் கடந்து போகும் போதெல்லாம் மம்மது சிறிய மரக்குச்சியை எடுத்து வைத்து, 'இங்குதான் உடம்பு கிடந்தது.... இங்குதான் மூளை. இங்குதான் கால்' என்று அடி அங்குலம் மாறாமல் ஆக்சிடண்ட்டைப் பார்க்காத சேக்காளிமார்களுக்கு விளக்கிக் காண்பிப்பான். ஓரிரு நாட்களுக்குப் பின் நடந்ததையெல்லாம் மறந்து விட்டு வழக்கமான இடம் போலாக அங்கே வந்து போய்க் கொள்வோம். எப்போதும் போல் மழையும், ரயிலும் வந்து போய்க் கொண்டிருந்தது.

*

Thanks to IQRA Publication & Asif Meeran




Thursday, March 13, 2025

குஞ்ஞம்மா (மலையாளச் சிறுகதை) - அசோகன் சருவில்

அசோகன் சருவில் எழுதிய 'இரண்டு புத்தகங்கள்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து, நன்றியுடன்..

இந்தச் சிறிய கதை பற்றி எழுத்தாளர் ஷாஜி வியந்து எழுதுகிறார் இப்படி : 

சாதாரண மனிதர்களின் மிகச் சாதாரணமான வாழ்க்கை அனுபவங்களை அவற்றின் முழுவலிமையுடனும் பலவீனங்களுடனும் உள்வாங்கி அசாதாரணமான கதைகளாக மீட்டுருவாக்கம் செய்வதில் அசோகன் சருவிலுக்கு இருக்கும் மேதமையை வெளிப்படுத்தும் கதை 'குஞ்ஞம்மா'. பெண்மை எனும் பெரும் துயரத்தை ஓர் ஏழைப் பெண்ணின் வாழ்க்கை வரலாறாக, மிகக்குறைந்த வார்த்தைகளில் எழுதிச் செல்லும் இந்த அரைப் பக்கக் கதை, நமது இதயத்தை நொறுங்கவைக்கக்கூடியது.

வாசியுங்கள். நன்றி!

*


குஞ்ஞம்மா - அசோகன் சருவில்

தமிழில் : சுகானா

--------------

தூரத்தில் மலைப் பாதைகளைக் கடந்து கூட்டம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. ஆட்கள் குறைவுதான் எனினும் விரிந்த குடைகள் கூட்டத்தை அதிகமாக்கிக் காட்டின. வெள்ளிச் சிலுவைகளின் மணியோசைகளோடு கூட்டம் வந்து கொண்டிருந்தது. நீண்ட அங்கி அணிந்த ஒருவர் கனமான புத்தகத்தைப் பார்த்து, ஏதோ வாசிப்பது மாதிரி ஒலியெழுப்பினார்.

கூட்டத்திற்கு நடுவே தள்ளுவண்டியில் காட்டுப் பூக்களுக்கிடையே கதராடையணிந்து, தலையில் வலைவைத்து, கண்கள் மூடி குஞ்ஞம்மா படுத்திருந்தாள். இப்படியான பயணமொன்றும் அவளுக்குப் புதிதல்ல. முப்பது வருடங்களுக்கு முன் பல நாழிகை தூரங்கள் கடந்து அகளி வரை பேருந்தில் வந்தாள். பயணத்திற்கிடையில் வாந்தி எடுத்தாள். கோட்டயத்திலும், திருச்சூரிலும் இறங்கி ஓய்வெடுத்தாள். ஆனால் இன்று வாந்தி எடுக்கவில்லை, பழகிவிட்டது போல.

நன்றாக நினைவிருக்கிறது. குஞ்ஞம்மா எப்போதும் மீனச்சிலாற்றில்தான் குளிப்பாள். அப்படியான ஒரு நாளில் அவளைத் திருமணம் செய்ய ஒருவன் வந்தான். மணம் முடித்தவனோடு ஊரையும் வீட்டையும் விட்டு வெளியேறினாள். மலைப்பாதைகள் வழியே, இருபத்தியெட்டு நாழிகைகள் நடந்து வந்து, மூங்கில் கழிகளை இணைத்து இங்கே ஒரு வீடு கட்டினாள். சுவரில் சிலுவைநாதனை மாட்டி வைத்தாள். வெயிலில் காய்ந்து விவசாயம் செய்தாள். காட்டுப்பன்றி எல்லாவற்றையும் நாசமாக்கியது. பன்றிக்கு வைத்த நாட்டு வெடிவெடித்து அவளுடைய தொடை வெந்து விட்டது. வீட்டிலேயே படுத்து, தின்று, குடித்துக் கொண்டிருந்த வளர்ப்பு பன்றியைக் ‘கணவன்' என்று அழைத்தாள்.

விவசாயம் செய்து பெண்பிள்ளைகளைக் கரையேற்றினாள். மகனை போலீஸ் அடித்தே கொன்று விட்டனர். அதன்பின், நாள் முழுக்க சிலு வைக்குக் கீழேயே ஜெபம் செய்தபடியிருந்தாள். கையும் காலும் காய்ந்து வற்றிவிட்டன. கடைசியில் யாரோ காட்டுப்பூக்கள் கொண்டுவந்தனர். கூடவே, ஊதுவத்தியும் கொண்டு வந்தனர்.

குஞ்ஞம்மா...

மலைக்காற்றை ஏற்றுவாங்கி மணியோசை கேட்டபடி குஞ்ஞம்மா புளாங்கிதமாகப் படுத்திருந்தாள். கூட்டம் அவளை கவனிக்கவேயில்லை. அவரவர்களின் வேலையைப் பார்த்து வந்த வழியே போய்விட்டனர்.

*

நன்றி : வம்சி புக்ஸ் , சுகானா