Wednesday, July 9, 2025

துபாய் முழுக்க ராஜுக்களும் லக்ஷ்மிகளும் - நஸீமா ரஸாக்

’மெட்ராஸ் பேப்பர்’ இதழில் வெளியான சகோதரி நஸீமாவின் இந்தக் கட்டுரையை நன்றியுடன் பகிர்ந்துகொள்கிறேன் - ஆபி
*
துபாய் முழுக்க ராஜுக்களும் லக்ஷ்மிகளும் - நஸீமா ரஸாக்

அமீரகத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாள்களை விநியோகிப்பதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு, வாரத்திற்கு ஒரு முறை, அல்லது மாதம் முழுக்க என்று தேவைக்கு ஏற்றார் போல் அழைத்துக் கொள்ளலாம்.

இந்த நிறுவனங்களில் இந்தியா, நைஜீரியா, நேபாளம், பிலிபைன், பங்களாதேஷ் போன்ற பல நாடுகளிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பலர் வேலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட நிறுவனங்களிலிருந்து வேலைக்கு ஆள் எடுக்கும் போது குறைந்தபட்சம் ஆயிரம் திர்ஹாமாவது (இந்திய மதிப்பில் இருபத்தி இரண்டாயிரம் முதல் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வரை) செலவழிக்க வேண்டி வரும்.

இன்னும் சிலர், கிட்டத்தட்ட பத்தாயிரம் திர்ஹாமை (இரண்டு இலட்சம் ரூபாய்), செலவு செய்து சொந்த நாட்டிலிருந்து பணியாளைக் கொண்டு வருவார்கள். அப்படி வருபவர்கள் இரண்டு வருடங்களாவது அழைத்து வருபவர்களின் வீட்டோடு இருக்க வேண்டும். தெரிந்த ஊர் மக்களை அழைத்து வருவதால் நிம்மதியும் நம்பிக்கையும் இருக்கும். அப்படியும் சிலர் பிடிக்காமல் சென்றுவிடுவதும் உண்டு.

அரேபியர்கள் வீட்டுக் கதை வேறு. வீட்டோடு வேலை செய்ய, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள எப்போதும் இரண்டு மூன்று வேலை ஆள்கள் இருப்பார்கள். இது அவர்களின் வாழ்க்கை முறை. பத்துப் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களைப் பார்த்துக் கொள்ள, சமைக்க என்று தனிப் பணியாள்களுண்டு.

இன்னும் சிலருக்கு ஆயிரம் திர்ஹாம் கொடுத்து நிறுவனங்களிடமிருந்து பணியாளை வைத்துக் கொள்வது செலவை அதிகரிக்கும். ஊரிலிருந்து அழைத்து வருவது எல்லாம் எட்டாக் கனியாக இருக்கும். இருந்தாலும் அவ்வப்போது யாராவது வந்து உதவி செய்தால் தேவலை என்று இருக்குமல்லவா? அவர்களுக்காக ஆபத்பாந்தவனாக வருபவர்களும் உண்டு.
இவர்கள் எல்லா நாட்டிலிருந்தும் வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவிலிருந்து வருபவர்களில் மற்ற மாநிலங்களை விட ஆந்திராவிலிருந்தும் தெலுங்கானாவிலிருந்து வருபவர்கள் அதிகம். அவர்களின் உண்மையான பெயர் எதுவாக இருந்தாலும், ஆண்கள் ராஜு என்ற பெயரை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் லக்ஷ்மியை விடமாட்டார்கள்.

இவர்கள் பணியாள்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் உதவியோடு வருவதில்லை. அல்லது யாரும் இவர்களைப் பணம் கட்டி சொந்தச் செலவில் அழைத்து வருவதில்லை.

இங்கு விசா விற்க சில நிறுவனங்கள் உண்டு. இது சட்டவிரோதமான செயல். அவர்கள் ஒரு விசாவை இரண்டு இலட்சம் என்று விற்பார்கள். கடன் வாங்கி, அல்லது நிலத்தை விற்று முகவர் மூலம் பணம் கட்டி பல லட்சம் பேர் இங்கு வந்திறங்குகிறார்கள். இதில் வீட்டு வேலைக்கு என்று வருபவர்களும் உண்டு. இவர்கள் பலம், ஏற்கனவே சொந்தக்காரரோ, தெருக்காரரோ இங்கு இருப்பார். வந்திறங்கி விசா அடித்தவுடன், முதல் வேலையாக மிதிவண்டியை வாங்கிக் கொள்வார்கள்.

ஊர்க்காரனோடு அதே அறையில் தங்குவார்கள். ஐந்து பேருக்கே இடம் போதாத அந்த அறையில் அவரையும் சேர்த்துக் குறைந்தது பத்துப் பேர் இருப்பார்கள். ஒன்றாகச் சமைத்து, சுத்தம் செய்து பிழைப்பு நடக்கும்.

ஒரு வீட்டுக்கு வாரத்திற்கு ஐந்து அல்லது ஆறு நாள், ஒன்றரை மணி நேரம் வேலைக்குச் சென்றால் மாதம் ஐந்நூறு திர்ஹாம் கிடைக்கும். அதுவும் இரண்டு அறைகள் கொண்ட வீடு என்றால் இந்தக் கணக்கு. ஒரே ஓர் அறை என்றால் குறையும். மூன்று அறைகள்  என்றால் நூறு திர்ஹாம் அதிகமாகும்.

அதுவே வாரம் மூன்று முறை என்றால் முந்நூற்று ஐம்பது திர்ஹாம். வாரத்திற்கு ஒரு முறை என்றால் நூற்று ஐம்பது கிடைக்கும். அதிக வருடங்கள் இங்கிருந்து வேலை செய்துவிட்டு சொந்தநாட்டுக்கு விடுமுறைக்குச் செல்லும் போதுதான், சில ராஜுக்கள் புதிய ராஜுக்களை வரவழைப்பார்கள். திரும்பி வரும் வரை தான் வேலை செய்யும் வீடுகளில் வேலைக்குச் சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு இது நடக்கும்.

ஆறு மாதத்தில் அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலிருந்து பத்துக் கிலோமீட்டர் வட்டத்திற்குள் எப்படியும் ஐந்து வீடுகளில் வேலை கிடைத்துவிடும். அதாவது மாதம் குறைந்தபட்சம் இரண்டாயிரத்து ஐந்நூறு திர்ஹாம் வருமானம் கிடைத்துவிடும். வாடகை, சாப்பாட்டுச் செலவு, வைஃபை என்று எல்லாம் சென்றாலும் ஆயிரத்து ஐந்நூறு திர்ஹாம் முதல் ஆயிரத்து எழுநூறு திர்ஹாம் கையில் இருக்க வேண்டும். ஊரில் உள்ள குடும்பத்திற்கு இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் முதல் முப்பதாயிரத்திற்கு மேல் கூட அனுப்பும் வாய்ப்புண்டு.

பெண்கள் அரசுப் பேருந்துகளில் வேலைக்குச் செல்வார்கள். பக்கத்திலிருந்தால் மெட்ரோ. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, சமைப்பது என்று அதற்காக மட்டும் கூட இவர்கள் செல்வதுண்டு.

ஆண் பணியாள்கள் பேருந்துகளில் செல்வதில்லை. மிதிவண்டியே துணை. உயிரை எடுக்கும் வெயில் என்றாலும், எலும்பை உருக்கம் குளிர் என்றாலும் அவர்களின் அன்றாடம், ஐந்து மணிக்கு ஆரம்பித்துவிடும். இது எல்லாம் அவர்கள் விசா வாங்கின நிறுவனம் சரியாக இருக்கும் பட்சத்தில் நடக்கும். அதாவது வந்து இறங்கி விசா அடித்த பின்னர் இரண்டு வருடங்களுக்கு அவர்கள் தொல்லை இருக்காது. மீண்டும் விசாவை நீட்டிக்கப் பணம் கட்டினால் போதும்.

இன்னும் சிலர் போலி நிறுவனங்களாலும், முகவர்களாலும் ஏமாற்றப்படுவார்கள். அவர்களுக்கு இருக்க இடமும், உணவும் இல்லாமல் அவதிப்படுவார்கள். ஒன்று சிறைக்குச் செல்லும் நிலை அல்லது தன்னார்வலர்கள் மூலம் நாடு வந்து சேர்வார்கள். அப்படியெல்லாம் நடக்காமல் வீட்டு வேலை கிடைத்து எல்லாம் நல்லபடியாகச் சென்றால், வருபவர்கள் சில மாதத்தில் கடனை அடைத்துவிடுவார்கள். மாமன் மச்சான் என்று மற்ற உறவுக்காரரையும் அழைத்துக் கொள்வார்கள். வரும் சவால்களைப் பங்கிட்டுக் கொண்டு வாழ்வாதாரத்துக்கு வழி தேடும் இவர்களுக்கு அவ்வப்போது எதிர்பாராத சோதனைகளும் வருவதுண்டு.

உதாரணத்திற்கு, சாலையில் எப்போதாவது மிதிவண்டியை ஓட்டும் போது அணிய வேண்டிய ரேடியம் நிறத்தில் இருக்கும் மேற்சட்டை அல்லது தலைக்கவசம் போடவில்லை என்றால், காவல்துறையினரின் வண்டி நிற்கும். ஒன்று அவர்கள் மிதிவண்டியை எடுத்துச் சென்று விடுவார்கள். விதிகளை மதிக்கும் வரை அமீரகம் நிம்மதியைத் தரும். விதிகளை விட்டு அகன்றால் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும். தெம்பும் தைரியமும் இருந்தால், “சார், இனி தலைக்கவசம் இல்லாமல் ஓட்டமாட்டேன், விதிகளை மதிப்பேன்” என்று சொல்லி மிதி வண்டியை மீட்டு வரலாம். ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை.

காவலர்கள் சோதனை செய்யும் போது, விசா சரியாக இல்லை அல்லது விசா கொடுத்த நிறுவனம் சரியில்லை என்றால் சிறையில் போட்டு ஊருக்கு அனுப்பிவிடுவார்கள். மீண்டும் அவர்கள் எப்போதும் அமீரகம் வர இயலாது. இது எதுவும் நடக்கவில்லை, மிதி வண்டி மட்டும் போனால் ஒரு பாதகமும் இல்லை. இருநூறு திர்ஹாமுக்கு புது மிதிவண்டியை வாங்கிக் கொள்வார்கள்.

பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் ராஜுக்களுக்கு பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று ஆசை. அப்படி ஒரு ராஜுவை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. மகன்கள் இருவரும் பள்ளி படிப்பை முடிக்கும் நிலையில் இருப்பது முன்பே எனக்குத் தெரியும். ஆனால் பத்தாவது படிக்கும் மகன் தன்னிடம் பேசி இரண்டு மாதங்களாகிறது என்று கஷ்டப்பட்டார். காரணம் அவனுக்குச் சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை. பதினெட்டு வயது நிரம்பாத அவன் வயதைக் கூட்டி ஒரு கடவுச்சீட்டும் எடுத்து அவன் வரப் போகும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். இரு மகன் ராஜுக்களும் வந்த பிறகு பத்து வருடம் உழைத்த அப்பா ராஜுவுக்கு ஓய்வு கிடைக்கும் என்று வீட்டார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் போல ஒவ்வொரு ராஜுவுக்குப் பின்னாலும் சில விதி மீறல்களும் பல தியாகங்களும் நிச்சயமற்ற வாழ்க்கையும் உண்டு. சட்டத்தின் பார்வையில் சிக்காதவரை இவர்களுடைய பிழைப்பு ஓடும். சிக்கிவிட்டால் சின்னாபின்னம்.
*
நஸீமா ரஸாக் | writernaseema@gmail.com
*

No comments:

Post a Comment