சாதாரணமாக இன்றைய தினம் ஒரு வெற்றுச் செய்தியாக இருக்கககூடியது காலப்போக்கில் வரலாறாக மாற்றமடைகிறது. சில நாளிதழ்கள் இதை அப்படியே அல்லது சற்று உருமாற்றி தங்களின் முழக்கமாக கொள்வதும் இருந்து வருகிறது. ஆயின் இன்றைய செய்தி நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவும் அமைகிறது. முந்தியகால நிகழ்வுகளை அறிந்த அல்லது தெரிந்தோருக்கு இது சுலபமாகவே சாத்தியப்படும்.
பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் “இரங்கலும், நினைவுகூறலும்” என்றொரு விளம்பரப் பத்தியினை வெளியிட்டு வருகிறது. குறிப்பிட்ட நபரின் மரணச் அறிவிப்பினை அனைவருக்கும் தெரிவிக்க முடியாத நிலையில் இத்தகைய பத்தி அறியக்கூடிய ஒரு வாய்ப்பாகவே இருக்கிறது. இவ்வறிப்புகளின் பின்னே தகவல் மட்டுமின்றி வரலாறும் ஒளிந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடும் இருக்கிறது. சமீபத்தில் 2025 ஏப்ரல் 18 வெள்ளியன்று வெளியான இந்து ஆங்கில நாளிதழின் 9ம் பக்கத்தில் வெளியான இரங்கலும் நினைவுகூறலும் பத்தியில் இதுபோன்ற அனுபவமொன்று நிகழ்ந்தது.
தமிழ்கூறும் நல்லுகில் உள்ளோருக்கு கடையம் என்றவுடனே நினைவுக்கு வருவது மகாகவி பாரதியைத்தான். அதே போன்று அறுபது எழுபது வயதைக் கடந்தோருக்கு கடையநல்லூர் என்றாலே ஜனசமூகத்தில் நன்கறியப்பட்ட இருவர் நினைவுக்கு வருவது என்பது தவிர்க்க முடியாதது. இந்த இருவரும் ஒரே பெயரினால் அறியப்பட்டவர்கள்தாம். காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் மஜீத். சங்கரன் கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கடையநல்லூர்க்காரர்தான். கடையநல்லூரில் மற்றொரு மஜீத்தும் புகழ்பெற்றவராக விளங்கி வந்தார். இவர் அரசியலில் ஈடுபட்டவர் அல்ல. மாறாக இறை இசைப்பாடல்கள் வழியே தமிழகம் முழுமையிலும் அறியப்பட்டவர். இந்துக் கடவுளர்களை குறிப்பாக முருகனைப் பற்றிய இவரது பாடல்கள் அன்னாளில் பட்டிதொட்டியெங்கிலும் ஒலித்தது என்றே கூறலாம். பிறப்பால் இஸ்லாமியராக இருப்பினும் கர்நாடக இசையில் நன்கு பயிற்சி பெற்று கச்சேரிகளை நிகழ்த்தி வந்தவர். இவரது இசைக் கோர்வைகளின் பதிவுகள் இன்றும் இருந்து வருகிறது. பக்திரச பாடல்கள் எனும் தொகுப்பில் அவர் எழுதி பாடிய பாடல்கள் சிறப்பானவை. குறிப்பாக நாராயணணை அன்றி பாராயணம் செய்ய ஓர் நாமம் இருக்கிறதா, கொண்டோடி வா மயிலே முருகனை இங்கு கொண்டோடி வா, திருத்தணிகாஜலத்திலிருக்கும் முருகனை போய் தரிசிக்க வாராய் போன்ற வசீகரமான பாடல்கள் இசைக்கு அப்பாற்பட்டவர்களையும் சற்றே நின்று கேட்கச் செய்திடும். அறுபது எழுபதுகளில் தென்மாவட்ட கோயில் திருவிழாக்களில் மஜீத்தின் இசையை கேளாத மக்கள் மட்டுமின்றி மூலவர்களும் உற்சவ மூர்த்திகளும் இருந்திருக்கவே முடியாது.
இசைவழி இறைப்பணியை அவருக்குப் பின்னர் அவரது மகனும் மகளும் தொடர்ந்து வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வியப்பினை அளிக்கக்கூடியது. கலைமாமணி எம்.ஏ.மஜீத் சபையெனும் அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டுதோறும் திருத்தணியில் நடைபெறக்கூடிய படி உற்சவத்தில் எம்.ஏ.மஜீத் மற்றும் எம்.ராஜேஸ்வரி ஆகியோரின் வாரிசுகள் உஷாவும் குருநாயகமும் பங்கேற்று நடத்தி வந்திருக்கிறார்கள். சென்ற ஆண்டில் எம்.ஏ.எம்.குருநாயகம் இறந்திருக்கிறார். அதையொட்டிய முன்கூறப்பட்ட நினைவுகூறல் அறிவிப்புதான் இந்து நாளிதழில் வெளியானது. அது அறிவிப்பு மட்டுமல்ல தங்கள் தனித்துவத்தை இழக்காது இந்து இஸ்லாமிய இணைப்பின் அடையாளமாய் இக்குடும்பம் விளங்குவதோடன்றி இறைப்பணிகளை தொடர்வது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகும் என்பதையும் அறிவிக்கிறது. போற்றலுக்குரிய மத நல்லிணக்கத்தை, வழிபாட்டு ஜனநாயகத்தை ஒரு நினைவுகூறல் விளம்பரம் வெளிப்படுத்துவது என்பது எந்த அளவில் அன்றாட நடப்பில், மக்கள் ஜனசமூகத்தில் பரஸ்பரம் புரிதலோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்துகிறது. இத்தருணத்தில் இது போன்ற மற்றொரு செய்தியும் முக்கியத்துவம் வாய்ந்தது. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியரான ஜவ்வாதுப் புலவர் ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள மேலகொடுமலூரில் உள்ள முருகன் பெயரில் குமாரபதிகத்தை இயற்றி அர்ப்பணித்திருக்கிறார். மத நல்லிணக்கத்தின் சின்னமாக திகழும் ஜவ்வாது புலவரை கௌரவிக்கும் வகையில் அவ்வூரில் அமைந்துள்ள முருகன் கோயில் கோபுரத்தில் அவரது உருவச்சிலையும் இடம் பெற்றிருக்கிறது. இத்தோடன்றி அவர் இயற்றிய பதினோரு பாடல்களைக் கொண்ட குமார பதிகத்தையும் ஆலயத்தின் உள்ளே பளிங்குக் கற்களில் பொறித்து வைத்திருக்கின்றனர். தவிர அருணகிரிநாதரே முருகனை ராவுத்தனே என்று விளித்துப் பாடியதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.
இந்து நாளிதழின் அன்றைய அதே பத்தியில் திவான்பகதூர் ஷண்முக முதலியாரின் பேத்தி பிரமீளா ஷண்முகம் என்பவரின் மரண அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. சென்னை நகர வரலாற்றோடு இணைந்த ஷண்முக முதலியார் துபாஷாக தன் பணிகளைத் துவக்கி பின்னாளில் இம்பீரியல் பேங்கில் நிர்வாக சபையில் மட்டுமின்றி பச்சையப்பன் அறக்கட்டளை ஜிம்கானா கிளப் போன்றவற்றிலும் உறுப்பினராக இருந்தவர். அவரது தோட்ட வீடு அஜ்மீர் சென்னை பூந்தமல்லி சாலையில் ஸ்பர் டாங்க்குக்கு எதிராக ஈகா திரையரங்கிற்கு அருகாமையில் அமைந்திருந்தது. அறுபதுகளில் நான் பச்சையப்பனில் பயின்ற காலங்களில் ஷண்முக முதலியாரின் பேரனும் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தவருமான டி.கே.சிங்காரம் இந்த வளாகத்தில்தான் வசித்து வந்தார். அவரது மகள்கூட இதே கல்லூரியில் அறிவியல் துறையில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். தற்பொது அஜ்மீர் அடுக்கு மாடி வளாகமாக மாறி பெயரை இழந்த போதிலும் சண்முக முதலியாரை நினைவுகூறும் விதமாக அயன்புரத்தில் தெருவொன்று இன்றும் இருந்து வருகிறது.
வாழும் சமூகம் பற்றிய பிரக்ஞையினை இரங்கற் குறிப்புகளும் நினைவுகூறுல்களும் ஏற்படுத்துவதில்லை. வாழ்ந்த மனிதர்களின் செயல்பாடுகள்தான் இத்தகைய செய்திகளை நமக்கு அறிவுறுத்துகிறது. மஜீத்தின் மத நல்லிணக்கமும் ஷண்முக முதலியாரின் கல்விக்கான வழிகாட்டலும் இதைத்தான் உறுதி செய்கிறது.
*
நன்றி : ராமச்சந்திர வைத்தியநாத் | veeorr52@gmail.com
*
தொடர்புடையவை :
1. 'நாராயணனையன்றி...’ - கடையநல்லூர் ஏம் ஏ மஜீத்
Thanks to : yogesh digital raja
2. கடையநல்லூர் ஏம் ஏ மஜீத் அவர்களின் நாடக மேடை பாடல்கள்
*
3. நாடாக்காரர்கள் - சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதை
No comments:
Post a Comment