Saturday, March 29, 2014

பெருந்தலைவரின் நினைவு - கவிஞர் தாஜ்

'ஒரு கோயில் திறந்தால்  இந்துக்களுக்கு மகிழ்ச்சி; ஒரு சர்ச் திறந்தால் கிறிஸ்துவர்களுக்கு மகிழ்ச்சி; ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி; ஒரு நூலகம் திறந்தால் புத்திசாலிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி; ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மை படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி' என்று கூறிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் (நன்றி சாதிக் , FB) ,  'சிகரெட் கடை திறந்தால் சீர்காழிக்காரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி' என்று சொல்லும் நம் கவிஞருக்கு எத்தனை நெருக்கமாக இருந்திருக்கிறார் என்று கூறும் பதிவு இது.  எழுதியவர் அதே தாஜ்தான். எனவே உரைவீச்சு வடிவில் கட்டுரை நம்மை வெட்டி வீழ்த்தும். பயப்படவேண்டாம்,  சகலருக்கும் சங்கடம் தரும் இந்த 'ஸ்டைலில்' எழுதப்போவது தெரிந்திருந்தால் பெருந்தலைவர் அன்றே கவிஞரை விரட்டியடித்திருப்பார்' என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வாசியுங்கள். தாஜுக்கு...
ன்
றி!

***


பெருந்தலைவரின் நினைவு:

1972 -ல் நடந்த
தமிழக சட்டமன்ற பொது தேர்தலில்
காமராஜ்,
ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து
போட்டியிட்டும்
தி.மு.க. கூட்டணியிடம்
அவர் தோல்வியைத் தழுவினார்.

அது சாதாரண தோல்வியல்ல.
அவரை ஒன்றுமில்லாதாக்கிய
படுதோல்வி அது.

என்றாலும்,
அத்தருணத்தில்
அவருக்குப் பின்னால்
அணிவகுத்த மாணவர்களின் கூட்டம்
சொல்லி மாளாது.
அந்த அணிவகுப்பில்
நானும் இருந்தேன் என்பதை
இன்றைக்கு நினைத்தாலும்
சந்தோஷமாகவே இருக்கிறது.

காமராஜ்
எனக்கு அரசில் தலைவர் மட்டுமல்ல...
அதையும் தாண்டி..
அவரை நான்
என் தாத்தாவாகவே
வரித்துக் கொண்டிருந்தேன்.
அத்தனைப் பாசம்.

அந்தக் காலக்கட்டத்தில்
அவரைப் பார்க்காத மாதமே இருக்காதெனக்கு.
எங்கள் பக்கமாக அவர் வராது போனாலும்
சென்னைச் சென்று
அவர் தங்கி இருந்த
திருமாலைப் பிள்ளை தெரு வீட்டில் வைத்து
கண்டு வர தவறமாட்டேன்.

அவர்
என்னோடு சகஜமாக பேசியது மாதிரி
கோபித்துக் கொண்டும் பேசியிருக்கிறார்.
வா, உட்கார் என்ற மாதிரியே
போ வெளியே என்றும் சொல்லி இருக்கிறார்.
என்னுடைய இணக்கமான பதில்களும்
தாறுமாறான பதில்களுமே
அதற்கு அடிப்படை என்றால்
அது சரியாக இருக்கும்.

என்னை
பெயர் கூறி அழைக்கும் அளவில்
அவரிடம் நெருக்கமாக இருந்தேன் என்பதுதான்
இங்கே மிக முக்கியமான செய்தி.

அவர் இறப்பதற்கு முன்
நடந்த பிறந்த தின விழாவிற்கு
நான்
அவரைக் காண சென்றிருந்தேன்.

அவர் உடல்நலமற்று இந்த போது
நடந்தேறிய விழா அது.
பலரும் அந்தப் பிறந்தநாளை
அவரது கடைசி பிறந்தநாளாக
கணித்தார்களோ என்னவோ...
அன்று அவருக்கு வாழ்த்து கூற
ஏகப்பட்ட பெரிய தலைகள்!
ஏகப்பட்ட கூட்டம்!
நானோ
அப்படியெல்லாம் நினைத்து
அங்கே செல்லவில்லை.
சென்ற பிறகே
சூழ்நிலை அப்படியென உணர்த்து
பதறியது மனம்.

தலைவருக்கு வாழ்த்துக் கூற
நின்ற கூட்டத்தினரை
அரைமணி நேரம் அனுமதித்தால்
அடுத்த அரைமணி நேரம் இல்லை.
இடையிடையே
அவர் கட்டாயம்
ஓய்வு எடுக்க வேண்டும் என்பதாக
டாக்டரின் உத்தரவாம்!

எனக்கு முன்னால்
திமுக மாறன் நின்றிருந்தார்.
கியூ முறைப்படியே
அவருக்குப் பின்னே நான் போனேன்.
உள்ளே ஐயாவை கண்டதும்
அவரது காலைத் தொட்டு
ஆசீர்வாதம் பெற முயன்ற போது
அதை அவர் தடுத்தார்.
அவரைக் காண நான் போகும் போதெல்லாம்
இப்படித்தான் நடக்கும்.
நான் ஆசீர்வாதம் வாங்க
அவரது காலடிதொட முனைவேன்,
அவர் தடுப்பார்.
அதுவே முதல் சர்ச்சையாகிப் போகும்.

அதனை அவர் விரும்பவில்லை என்பதை
நான் அறிவேன் என்றாலும்,
அவரை காண முற்படும் போதெல்லாம்
என் சிரம் தாழவே செய்யும்.
நான் கொஞ்சம் படித்திருக்கிறேன் என்றால்
அது, அவர் இட்ட பிச்சையல்லவா?

கியூ பிரகாரம்
அவரது அறைக்குள்
நானும் என் நண்பனும் நுழைந்தோம்.
என்னைக் கண்டதும்
தலைவர் முகத்தில் புன்முறுவல்.
'இப்படி பின்னே வந்து நின்றுகொள்' என்றார்.
அப்படியே அவரது பின்னே போய்
நான்
என் நண்பனோடு போய்
நின்று கொண்டேன் என்றாலும்
உடல் பதற்றமாகவே இருந்தது.
அடுத்த அரைமணிக்கான ஓய்வுக்கு
வாயில் கதவை அடைத்துவிட்டார்கள்.

நான் உள்ளே நுழைந்த போதே
அங்கே இருவர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் ஆங்கில இதழில் இருந்து
அவரை பேட்டியெடுக்க வந்த
நிருபர்கள் அவர்கள் என
சற்றைய நாழியில் அறியவந்தேன்.
அந்த வீட்டின்
முன் அறையில் நாங்கள் என்றால்
வீட்டின் உள் ஹாலில்
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்,
குமரி ஆனந்தன் மாதிரியான
பேச்சாளர்கள் போன்றோர்
இருந்த இருப்பை உணர்ந்தேன்.
அவர்களது இடைவிடாதப் பேச்சும்
மெல்ல கேட்ட அவர்களது சிரிப்பும்
அதை எனக்கு உணர்த்தியது.

கடவு அடைக்கப்பட்டப் பிறகு
ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களின்
பேட்டி தொடர்ந்தது.
எமர்ஜென்சியை பற்றி கேட்டார்கள்.
'அது இன்னும் கொஞ்ச காலம்
தொடர்ந்தால் நல்லது என்றும்
மக்களுக்கு இப்போதுதான்
சுதந்திரமென்றால் என்னவென்றும்
எழுத்துரிமை...
பேச்சுரிமை..
என்றால் என்னவென்றும்
பிடிபட ஆரம்பித்திருக்கிறது' என்றும் சொன்னார்.
அது, அவரது விரக்தியில்
வெளிப்பட்ட வார்த்தைகளென
சட்டென புரியவே செய்தது.

அத்தனை வெளிச்சமில்லாத அந்த அறையில்
நான் சிலையாக நின்றேன்.
நான் அழைத்து போன என் நண்பன்
தி.மு.க.வை சேர்ந்தவன்.
தான் காமராஜுக்குப் பின்னால் நிற்பதையே
அவனால் நம்பமுடியாமல் நின்றான்.
'தாஜுக்கு அவர் தலைவரிடம்
இத்தனை செல்வாக்கா?' என்று
மலைத்தவனாக நிலைகொள்ளாது நின்றான்.

இடையே என் பக்கம் திரும்பி,
'நலமா? என்றும்
ஊரில்
கட்சிவேலை நடக்கிறதா?' என்றும் கேட்டார்.
மாடுமாதிரி தலையாட்டிவைத்தேன்.
எனக்கென்னவோ
அப்போது அவரை பார்த்த போது
உடல்நலம் குன்றியவராக தெரியவில்லை.
சேர்வாக இருப்பதாக மட்டுமே தெரிந்தது.

அரைமணி கழிந்து
மீண்டும் கதவு திறக்கப்பட்ட போது
புறப்பட துரிதப்பட்டேன்.
அப்பவும் 'நில்லேன்' என்றார்.
'இல்லையா...' என்றுவிட்டு வெளிப்பட்டேன்.
அதுதான் என் தலைவனோடு
கடைசியாக பேசிய நிகழ்வு.
பின்னர்
அவர் இறந்து
ராஜாஜிஹாலில் அவரை
கிடத்தி வைக்கப்பட்டிருந்த போதுதான்
அந்த நிலையில்தான்
பார்க்கக் கிடைத்தது.
***
satajdeen@gmail.com

6 comments:

  1. //'சிகரெட் கடை திறந்தால்..... மகிழ்ச்சி' //
    வன்மையாக இதை மறுக்கிறேன்.
    சிகரெட் ஹோல்செல்கடை திறந்தால்..... மகிழ்ச்சின்னு
    இருந்திருக்கணும்.
    -தாஜ்

    ReplyDelete
    Replies
    1. யோவ், கஞ்சான்னு போட்டா காமராஜ்ஐயா அடிப்பார்னுதான் வெண்சுருட்டை சேர்த்தேன் :))

      Delete
  2. உங்களுக்கு தெரியுமா ஆபிதீன்
    காமராஜ் புகைப்பிடித்தும்
    அவர் ஆங்கில பேப்பர்
    படித்தும் கண்டிருக்கிறேன்.

    அவர்
    ஒருமுறை சீர்காழி வந்திருந்த போது
    டிராவலர்ஸ் பங்களாவில்
    தங்கவைக்கப்பட்டார்..
    நான்தான் செக்கியூரிட்டி.
    அவருக்கான உணவாகட்டும், டீயாகட்டும்,
    பார்க்கணும் என்று நிற்கும்
    வி.ஐ.பி.கள் ஆகட்டும்..
    என் அனுமதியோடுதான் அன்றைக்கு!

    சீர்காழி நகர காங்கிரஸ்தலைவராக
    பாலுசாமி நாடார் என்ற ஒரு பெரியமனிதர்
    அப்போது இருந்தார்.
    இப்போது...
    நோமோர்.
    அவர்
    என் மதிப்பிற்கு உறியவரும் கூட!
    ஐயர் கணக்காக வெள்ளையா இருப்பார்.
    நாடார்கள் எல்லாம்
    என் நிறமானப்படியால்
    இவர் அன்றைக்கு என்னில் வியப்பை கூட்டியவர்.
    அந்த ரேஞ்சில்
    இன்னும் சிலரை பிற்காலத்தில் கண்டிருக்கிறேன்.
    உமாவும்
    உமாவின் பெற்றோர்களும் கூட
    அப்படியான வெள்ளை ராகம்தான்!

    'என் தங்கை,
    முஸ்லிம் பெண்கள் கணக்கா
    என்னிலும் சிகப்பு' என்கும் உமா!
    அந்தத் தங்கை இறந்தப் பிறகு
    உமா அப்படி சொன்னதில்
    வியப்பில்லை எனக்கு!

    கிரிப்பிள்ளை
    பிடித்து போய்விட்ட கோழி
    விலாங் விலாங்க
    முட்டையிடும் என்பது
    நம் கிராமிய மரபு!

    விசயத்துக்கு வருகிறேன்.
    அந்த பெரிய மனிதர் பாலுசாமி நாடார்
    என் பர்மிஸனோடுதான்
    அன்றைக்கு
    காமராஜை காண உள்ளேபோனார்.
    என்னிடம் இன்னொரு அனுமதிபெற்று
    போட்டோகிராஃபரை உள்ளே அழைத்து போய்
    ஐயாவோடு புகைப்படம் ஒன்றும்
    எடுத்துக் கொண்டார்.

    எங்கவூரில்
    கடந்த பதினைந்து வருடங்களாக
    ஒரு கல்வி அறக்கட்டளை
    காமராஜின் புகழை முன்நிறுத்தி
    வருடா வருடம்
    பிரமாண்டமான விழாயெடுக்கிறது!
    மாநில அளவில்
    மாணவ மாணவிகளுக்கு
    பரிசுகள் பல கொடுத்துக் கொண்டிருக்கிறது.
    காண்ணுள்ள தமிழர்கள் அனைவரும்
    காணவேண்டிய அரிய நிகழ்ச்சி அது!

    அந்த
    பாலுசாமி நாடார் கல்வி அறக்கட்டளை
    தொட்டதெற்கெல்லாம் பயன்படுத்தும்
    அதன் 'லோகோ'வில்
    பாலுசாமி நாடார் காமராஜோடு கட்சித்தருவார்.
    அந்தப் புகைப்படம்
    என் அனுமதியோடு
    பாலுசாமி நாடார் அன்றைக்கு
    எடுத்துக் கொண்டதாக்கும்!

    இப்படி
    பெருந்தலைவர் குறித்து
    நெடுகயெழுத என்னளவில்
    சின்னதும் பெரிதுமான செய்திகள் பல உண்டு!
    ஆனால்,
    எழுததான் சுணக்கமாக இருக்கிறது!

    -தாஜ்

    ReplyDelete
  3. மன்னிக்கணும்.
    மேலே என் கருத்து பெட்டகத்தில்
    //அப்படியான வெள்ளை ராகம்தான்!//
    இப்படி இருப்பதில்
    'ராகத்தை
    ரகம் என்று....
    அதாவது
    //அப்படியான வெள்ளை ரகம்தான்!//
    என்று வாசிக்கவும்.
    நன்றி.
    -தாஜ்

    ReplyDelete
  4. ஐயாவோடு சேர்ந்து ஒரு புகைப்படம் நீங்கள் எடுத்திருந்தால் எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும். தவறவிட்டுவிட்டீர்களே தாஜ்.. இனி முயற்சிக்க வேண்டாம்!

    ReplyDelete
  5. இருக்கு. அதில இருக்கிற என்னை
    தாஜா ஒப்புக்க மாட்டீங்க!
    (புகைப்படம் எடுக்கத் தெரியாத புகைப்படக்காரன் எடுத்தது.)

    ReplyDelete