ஆட்சிக் கட்டிலில்
ஏறவேண்டும் என்ற
ஆசை நெருப்பில்
அரசியல் கட்சிகளாய்
எண்ணெய் கொதிக்க...
ஆக்ரோஷப்படும்
பேச்சாளர்களாம்
கடுகுகள் குதிக்க..
வறுமைக் கோட்டுக்குள்
வாடும் வாக்காளர்களாய்
கண்ணீர்விட்டு
வெங்காயம்
வதங்கித் தவிக்க
இறுதியில் -
தலைமை சமையற்காரர்
"கறிவேப்பிலை எங்கே ?"
என -
என்னைத் தேடுகையில்
என் காது குளிரும்...!
கொத்தாய் இருந்த நானும்
அந்தக் கொப்பறையில்
உறவுக் காம்புகள் கிள்ளப்பட்டு விடுவேன்..
ஒரு தொண்டனாய்...!
எனினும் -
நானின்று
தேர்தல் தாளிப்பு நடக்குமா ?
இப்படி -
எனக்குள்ளே ஒரு இறுமாப்பு
தலை தூக்கும்...!
இறுதியில் எல்லாம் முடிந்து
பதவிப் பந்தி பரிமாறப்படுகையில்
எல்லோராலும்
தூக்கியெறியப் படுவேன்..!
சமைக்கும் தலைவர் மட்டுமே
எப்போதும்போல சன்மானம் பெறுவார்..!
வாசம் சேர்க்கும் என்னை -
விருந்தில் -
வீசி எறிபவர்கள்
என் - மருத்துவ மகத்துவத்தை
எனோ -
மறந்துவிடுகிறார்கள்...!
ஆமாம்..!
அரசியல் கட்சிகளின்
அடிமட்டத் தொண்டனுக்கு
அழகான உதாரணம் நான்...!
***
10-12-95
***
நன்றி : இஜட். ஜபருல்லா
No comments:
Post a Comment