Sunday, July 28, 2013

மோடி பிரதமர்: மண்ணால் மாளிகை கட்டுகிறார்கள் - தாஜ்

என்ன ஆச்சரியம், 'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?' என்று நான் பயங்கரமான முகபாவத்துடன் (அதாவது ,இயல்பாக) ஒருவரை நினைத்து பாடிக்கொண்டிருக்கும்போது அவரிடமிருந்தே கட்டுரை வந்தது...! - ஆபிதீன்

***
அன்பு ஆபிதீன்...
இது அரசியல் கட்டுரை.
நான் இன்னும் திருந்தவில்லை என்பதற்கு
நிதர்சனமான சாட்சி!
- தாஜ்
***

Image Courtesy : indiatimes.com

மோடி பிரதமர்:
மண்ணால் மாளிகை கட்டுகிறார்கள்


-தாஜ்

'யார் பிரதமர்...
கருத்து கணிப்பில் மோடி முன்னிலை!'
-தினமலர் - 27.7.2013

*
ஒரு டி.வி. சேனலும்,
ஓர் ஆங்கில பத்திரிகையும்
சேர்ந்து எடுத்த சர்வேயில்
மோடி முன்னிலையாம்!

குறிப்பிட்ட டி.வி. சேனலின் பெயரையோ
அந்த ஆங்கில பத்திரிகையின் பெயரையோ
தினமலர் வெளியிடவில்லை.

*
இது
'அரசியல் சித்து விளையாட்டின்
அரிச்சுவடிப் பாடம்.'
விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

மூன்றாம் தரமான
'சகுனி' என்கிற ஓர் தமிழ்ப் படத்தை
சமீபத்தில் பார்த்தேன்.
அதில்
இப்படியான சித்து விளையாட்டு அரசியல்களை
இன்னும்கூட
மேலாக காண்பித்திருக்கிறார்கள்!

*
ரிலையன்ஸ் மாதிரியான
குஜராத் தொழில் நிறுவன முதலாளிகள்
மோடியால்
கோடி கோடியாக பலன் பெற்றவர்கள்.
பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்!
அவர்கள் மோடிக்கு காட்டும்
பிரதி உபகாரம்தான் இது.
மோடியின் விருப்பம் அறித்து
அவரை பிரதமராக ஆக்கிப் பார்க்க
ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய தொழில் நிறுவன
முதலாளிகளிடம் விளம்பரம் பெறும்
அத்தனை இந்திய இதழ்களும்
டி.வி. மீடியாக்களும்
அந்த நிறுவனத்தார்கள் இடும் ஆணையை
சிரமேல் கொள்கிறார்கள்.
அதனால்தான்...
தேர்தல் வர
இன்னும் ஒரு வருஷ காலம் இருக்கிற போதே
ஜனங்களிடம் விற்கும் பொருள் மாதிரி
அவர்களின் மனதில் மோடியை பதிக்கவும்
ஏற்றுக் கொள்ள வைக்கவும்
M.B.A.
'வியாபார' நுணுக்கத்தோடு
அதிகத்திற்கும் அதிகமான
விளம்பரங்கள்
நித்தம் நித்தம் பல வழிகளில்
வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த வகையில் வந்திருப்பதுதான்
தினமலரில்
இந்தக் கருத்து கணிப்பு வெளியீடு!

வழிமுறையாக
அப்பப்ப செய்திகள் தந்து செயல்படுபவர்கள்
மோடிக்கு
கிட்டட்ட
செங்கோட்டையில்
அவருக்கு சிம்மாசன எழுப்பி
கிரீடமும் தரித்துப் பார்த்துவிட்டார்கள்.
ஆனால், மக்கள்தான் அது குறித்த
புரிந்த உணர்வை
வெளிப்படுத மாட்டேன் என்கிறார்கள்!
அதனால்தாலும்தான்
இப்படி திரும்பத் திரும்ப
வித விதமான விளம்பர யுக்திகளை
அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

பச்சை மணலால்
அவர்கள் கட்டும் மாளிகையை குறித்து
யார்தான் என்ன சொல்ல முடியும்?
எதிர் காற்றின் வேகம் அறியாத
சின்னக் குழந்தைகள் அவர்கள்.

*
மோடி பிரதமராகுவதற்கான
வாய்ப்புகள்தான் என்னென்ன?

எந்தெந்த மக்களிடம்
நீங்கள் அபிப்ராயம் கேட்டீர்கள்?

நாடு தழுவியா?
அல்லது
குஜராத்தில் மட்டுமா?

- இப்படியெல்லாம்
நீங்கள் சகஜமாக கேட்கும்பட்சம்
அந்த மீடியாக்காரர்களும் சரி...
பி.ஜே.பி.காரர்களும் சரி கோபப்படுவார்கள்.
இந்த பி.ஜே.பி.காரர்களின் கோபம்
கொஞ்சம் கூடுதலாகவே தெறிக்கும்.
அவர்களிடம்
அது எப்பவுமே ஸ்பெஷலானது.
வானுக்கும் மண்ணுக்கும்
தாண்டவமாடக் கூடியது.

தாண்டவமாடட்டும் பரவாயில்லை.
அதன் பின்னராவது தெளிவு செய்வார்களா?
மாட்டார்கள்.
"ஏக இந்திய வாக்காளர்களும்
மோடிக்கு ஓட்டளிக்க
துடியாய் துடித்துக் கொண்டிருக்கிற போது...
இது என்ன அற்பக் கேள்வி?"
கேள்வியோடு விட்டுவிட மாட்டார்கள்...
பார்வையால் நம்மை எரித்துவிடவும் பார்ப்பார்கள்.

உங்களுக்கு தெரியுமா...?
பி.ஜே.பி.காரர்களின் கோபம்
உலகப் பிரசித்தம்.
"இது எங்கள் நாடு.
காலச் சூழலில்
பவித்திரம் அற்ற அபிஷ்டுக்களிடம்
இந்நாடு சிக்கிக் கொண்டிருக்க...
எப்படி நீங்கள்
இப்படி கேள்வி கேட்கலாம்?' என்பதுதான்
அவர்களின் உடன் பதிலாக இருக்கும்.

உயர் ஜாதி மக்களின் கட்சியாயிற்றே
அவர்களும் அவர்கள் கட்சியும்!
நாமும் அவர்களை நோக்கி
கேள்விகளை வைப்பதும்
ஒருவகையில் தவறுதானே?

*
ஒரு எம்.பி., இரண்டு எம்.பி.கள் கொண்ட
வடகிழக்கு மாகாணங்கள்/ தீவு பிரதேசங்கள்/
பாண்டி/ கோவா/ டெல்லி.. போன்ற
சிறிய மாநிலங்களை தவிர்த்து
பெரிய மாநிலங்களாக கருதப்படும்
சுமார் 25-ல்
பி.ஜே.பி.க்கென்று நம்பகமான
ஓட்டு கிட்டும் மாநிலமாக கருதக் கூடியது
ஒரே ஒரு மாநிலம்தான்.
அது குஜராத்!
நான் சொல்லாவிட்டாலும்
உங்களுக்கே விளங்க வரகூடிய ஒன்று.

பிற அத்தனை மாநிலங்களிலும்
பி.ஜே.பி.க்கு அத்தனை செல்வாக்கு இல்லை,
மத்தியப் பிரதேசம்,
குஜராத் அளவில் அவர்களுக்கு சாதகமான
மாநிலமே என்றாலும்...
இன்றைய அரசியல் போக்கின் படிக்கு
மோடியை
அந்த மாநில முதல்வர் 100 சதவிகிதம்
ஏற்பதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில்
நடைபெற போகும்
சட்டசபை தேர்தலில்
மோடியின் புகைப்படமில்லாத போஸ்டர்களை
உபயோகிக்க இருப்பதாகவும் செய்தி!

'போஸ்டரில் சுஷ்மா சுவராஜ்
போன்றவர்களின் படங்கள் இருக்கும் போது...
ஏன் மோடியின் புகைப் படத்தை
உபயோகிக்கவில்லை என்பதற்கு?'
ஏகதேசமாய் ஏதோ ஓர் காரணம் சொல்கிறார்
மத்தியப் பிரதேச பி.ஜே.பி. முதல்வர்...
சிவராஜ்சிங் சவுகான்!

பி.ஜே.பி.யின்
உத்திரப் பிதேசத்தின் நிலை..
சாட்சாத் தமிழகத்து பி.ஜே.பி.யின் நிலைதான்!
அத்தனைக்கு பாவம்.
கூட்டணிக்கு கட்சிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்!
இங்கே...
வி'ச'யகாந்தையும் / மருத்துவ மேதையையும்/
ஈழம் பெற்றுத் தந்த பேச்சாளர் சிங்கத்தையும்
கூட்டணிக்கு பி.ஜே..பி. நாடிக் கொண்டிருப்பது மாதிரி.

பீகார் முதல்வர் நிதீஷ்குமார்...
கடந்த குஜராத் கலவரத்திற்குப் பிறகு
மோடியை
அவர் ஏற்பதே இல்லை.
சோஷலிஸ்ட் வழி வந்தவரிடம்
கொஞ்சம் சுரணையும் இருக்கிறது.

ஒரிசா...
அப்படியும் இப்படியுமான நிலை.

ராஜஸ்தான்...
ஒரு காலத்தில் பி.ஜே.பியின்
கோட்டையாக இருந்தது நிஜமென்றாலும்...
போன பாராளுமன்ற தேர்தலோடு
அந்த அதிர்ஷ்டம்
அவர்களை விட்டு போய்விட்டது.

ஹரியான...
இரண்டு கூட்டணிக்கும் சம அளவில்
கை கொடுக்கலாம்.

மேற்கு வங்கத்தைப் பற்றி...
பி.ஜே.பி. கனவு கூட காணமுடியாது.
காங்கிரஸ் மாதிரி தேர்தலை
வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.
இருந்தும்
பி.ஜே.பி.யைவிட காங்கிரஸ் அங்கே மேல்.

பஞ்சாப்பில்...
அகாலிதளத்தின் ஆதிக்கம்தான் எப்பவும்
அவர்களே இப்பவும் வெல்ல வாய்ப்புண்டு.
அகாலி தளம் பி.ஜே.பி.யின்
நிரந்தர கூட்டணி நண்பன் என்பதால்
பி.ஜே.பி. மார்தட்டிக் கொள்ள முடியும்.

மகாராஷ்டிராவில்..
அவர்களது ஆர்த்மார்த்தமான
'சிங்கிடி முங்கிடி' தோழமையான
சிவசேனா இரண்டாக
உடைந்து போய்விட்டநிலையில்
முன்பு பெற்ற தொகுதிகளைக் கூட
அவர்கள் இம்முறை வெல்ல முடியாது.
தவிர, மகாராஸ்டிரா
காங்கிரஸின் சீதன பூமி.

தெற்கில் உள்ள நான்கு மாநிலங்களிலும்
பி.ஜே.பி. கூட்டணி
10 -15 எம்.பி.தொகுதிகளை பெற்றாலே அதிகம்.
தெற்கிற்கும் பி.ஜே.பி.க்கும் ஆகாது.
கர்நாடக மக்கள் திடுமென அவர்களை
தலையில் வைத்து கூத்தாடி வேகத்திலேயே
போட்டும் உடைத்துவிட்டார்கள்!

குறிப்பாக நம் தமிழகத்தில்...
ஜெயலலிதா அதிக வெல்லும் வாய்ப்பிருக்கிறது.
2-g பணத்தை கலைஞர் குடும்பம்
என்றைக்கு எண்ணத் துவங்கியதோ
அது இன்னும் தீர்ந்தபாடில்லை!
அவ்வளவு பணத்தையும்
அத்தனை எளிதில்
எண்ணித் தீர்த்துவிட முடியுமாயென்ன?
இந்த இடைவெளியில்
ஜெயலலிதாவின் கொடி
விண்ணைத் தாண்டிப் பறக்கிறது.

தமிழகத்து முதல்வர் ஜெயலலிதா
பி.ஜே.பி.க்கு ஆதரவாளராக இருப்பதால்...
அவர் பி.ஜே.பி. கூட்டணியில் சேராவிடினும்
தேர்தலுக்குப் பிறகு
கொல்லைபுறமாக பி.ஜே.பி.க்கு...
அதுவும் நண்பர் நரேந்திர மோடிக்கு மட்டும் 
ஆதரவு தர வாய்ப்புண்டு.

அதுவும்...,
அந்த நேரத்து
குழப்பங்களையும் -
தெளிவுகளையும் பொருத்த விசயமது!
பேசியபடிக்கு,
உதவிப் பிரதமர் பதவியை கௌரவக் குறைவாக கருதி
நேரடியாக 'பிரதமர்'தான் வேண்டுமென்று
கேட்டாலும் உண்டு.

காஷ்மீரில் உள்ள
மாநிலக் கட்சி
பி.ஜே.பி.க்கு ஆதரவு தருவதைவிட
காங்கிரஸுக்கு
அதிகம் கருணைக் காட்ட வாய்ப்பிருக்கிறது.

பொதுவில்....
பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக் கொள்ள
அகாலிதளம் / சிவசேனா நீங்களாக
எந்தவொரு பெரிய மாநில கட்சியும்
ஆர்வம் காட்டவில்லை.
பி.ஜே.பி.யை
ஒரு தீண்டத்தகாத கட்சியாகவே
அவர்கள் கருதுகிறார்கள்.

தேர்தல் வர இருக்கும்
இன்னும் ஒரு வருடத்தில்...
இந்திய அரசியலில் வானில்
எத்தனையோ மாற்றங்கள் வரலாம்.
சுனாமி/ பூகம்பம் கூட நிகழலாம்.
அதாவது...
இதனை யோசிக்கு தருணம்
இன்றைக்கு...
'மோடி பிரதமராக வெல்வார்' என்பது பேதமை!

இது தவிர...
பி.ஜே.பி.யின் உட்கட்சி குழப்பம்
மகா பிரசித்தமாகி கொண்டிருக்கிறது.
அது வெடித்து
அக்னிக் குழம்பை
பெருக்கெடுக்க செய்தாலும் ஆச்சரியமில்லை!

இதுதான்...
யதார்த்த நிலை.
இத்தனையும் ஒன்றுமில்லை என்பது மாதிரி...
அதாவது,
சோற்றில் பூசணிக்காயை மறைப்பது மாதிரி
எல்லாவற்றையும் மறைத்துவிட்டு
"மோடி அடுத்த பிரதமர்...!"
"மோடி அடுத்த பிரதமர்...!"
"மோடி அடுத்த பிரதமர்...!" என்று
நாள் தவறாமல் மக்கள் மத்தியில்
கார் சக்கரத்தில் அடிப்பட்ட
நாய்குட்டியாட்டம்
குய்யோ முய்யோவென கத்துகிறார்கள்.
வலுகட்டாயமாக
செய்திகளையும் பரப்புகிறார்கள்.

அவர்கள் ஆசைப்படிக்கு..
மோடி பிரதமராகுவது
மக்கள் கையில் இருக்கிறது.
அவர்கள் ஓட்டுப் போட வேண்டும்.
மீடியாக்கள் கத்துவதால் நடந்துவிடாது.

இப்படிதான்...
சென்ற முறை அத்வானியை முன்நிறுத்தி
மஹா கூப்பாடு போட்டார்கள்.
என்ன ஆனது கதை?

இந்த அரசியல் சூழ்ச்சி கொண்ட
பரப்புரைக்கு
படித்தவர்களும்/ விபரம் அறிந்தவர்களும்
எப்படி...
கொஞ்சமும் சிந்திக்காமல்
ஊதுகுழலாக செயல்படுகிறார்கள்
என்பதுதான்...
இன்னொரு புரியாத புதிர்!!!

*
பின்குறிப்பு:

இன்றைய சூழ் நிலையில்
அடுத்த மாத நெருக்கத்தில்
பாராளுமன்ற தேர்தல் வரும் பட்சம்..
காங்கிரஸ் கூட்டணி - 185 to 200
பாரதிய ஜனதா கூட்டணி 90 to 105
அண்ணா தி.மு.க. கூட்டணி 25 to 30
மற்றைய எம்.பி. தொகுதிகளை
கம்யூனிஸ்ட்டுகளும்/ மாநில கட்சிகளும்
பங்குப் போட்டுக் கொள்ளலாம்.

உத்திர பிரதேசத்தில் மாநில கட்சிகள்
இரண்டு தேசிய கட்சிகளை ஒன்றுமில்லை என்றாக்கி
கூடுதலாக எம்.பி. தொகுதிகளை வெல்லும் பட்சம்...
இந்த என் கணிப்பு மாற இடம் உண்டு.

இந்த முறை
பிரதமர் பதவிக்கு
பல தலைகள் குறிவைத்திருப்பதால்...
தேர்தலுக்குப் பிறகு
எம்.பி.களை துரத்திப் பிடிக்கும்
குதிரை வியாபாரம்
டெல்லி மாநகரில் பலமாக இருக்கும்.

***

நன்றி :  (திருந்தாத உள்ளத்துடன்)  தாஜ் | satajdeen@gmail.com

2 comments:

  1. பேஸ்புக்கில் நண்பர் ஷாஜஹான்:

    சிஎன்என்-ஐபிஎன் - ஹிண்டு - சிஎஸ்டிஎஸ் --- இவை மூன்றும் சேர்ந்து நடத்திய கணிப்பாகத்தான் இருக்கும். நேற்று இப்படியொரு தேர்தல் கணிப்பை ஹிண்டு நாளிதழ் வெளியிட்டது. அதுவும்கூட மோடி முன்னிலை என்பது மட்டுமல்ல, குஜராத்தில் முதல்வராக மோடிக்கு இருக்கும் ஆதரவு விகிதத்தை மத்தியப்பிரதேச முதல்வரக்கு இருக்கும் ஆதரவு விகிதம் அதிகம் என்றும் விளக்கியது. மோடியா ராகுலா என்ற கேள்விக்கு மோடி 2 புள்ளிகள் முன்னிலை வகிப்பதாக அது கூறியது. அதைத்தான் மோடி முன்னிலை என்று திரித்திருக்கும் தினமலர்.

    ReplyDelete
  2. ஷாஜஹான்July 28, 2013 at 5:13 PM

    நானும் இப்படி தேர்தல் வெற்றிவாய்ப்பு கணக்குகளைப் போட்டுப் பார்ப்பது உண்டு. ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைச் செய்வது நமக்குச் சரியாக இருக்காது. இப்போதிருந்தே பில்ட்-அப் காட்டுவது அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
    முக்கியமாகக் கவனிக்க வேண்டியது - தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் அல்லது பாஜக என்னவிதமான தந்திரத்தைக் கையாளப் போகிறது என்பதைத்தான். அதைத்தான் நான் அச்சத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஏதேனுமொரு நகரத்தில் தீவிரவாதத் தாக்குதல் என்ற நாடகம் போதும் - அத்தனை கணக்குகளும் பொய்யாகிப் போய்விடும்.

    ReplyDelete