Wednesday, July 17, 2013

'தனிமையின் நூறு ஆண்டுகள்’ ஏன் படிக்க வேண்டும்? - கே.என்.சிவராமன்

இதென்ன கேள்வி , இங்கே ஒரு பதிவு போடத்தான்! தமாஷ் இருக்கட்டும்.. -தினகரன் வசந்தத்தில் 14-7-2013 அன்று வெளியான நண்பர் சிவராமனின் இந்த முக்கியமான கட்டுரையை தட்டச்சு செய்து அனுப்பியிருக்கிறார் தாஜ். கதையின் சில மையப் பகுதிகள் அவருடைய 'இறந்தவன் காலம்' குறு நாவலை நினைவுறுத்துவதாக இருந்ததாம்.  சரி, இனி  தாஜ்க்கேஸ் என்று அழைத்துவிடுவோம் அவரை. 

சிறிய சைஸில் தனது கட்டுரையை ஸ்கேன் செய்து வெளியிட்டு  , ‘நண்பர்கள் பக்கங்களை சரிவர படிக்க முடியவில்லை என்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. ;-( ’ என்று வருந்தும் நம்  சிவராமனுக்கும் இது உதவக்கூடுமென்பதால் உடன் வெளியிடுகிறேன். நன்றி. - ஆபிதீன்

***
click to enlarge the image


தனிமையின் நூறு ஆண்டுகள்
காலச்சுவடு வெளியீடு:

ஏன் இந்த நாவலை படிக்க வேண்டும்?

கே.என்.சிவராமன்

நல்ல கேள்விதான் இல்லையா? தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களை படிக்கவே நேரமில்லாமல் தவிக்கும்போது ஸ்பானிய மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலை எதற்காக வேலை மெனக்கெட்டு வாசிக்க வேண்டும்?

காரணமிருக்கிறது. 1967-ல், ஸ்பானிஷ் மொழியில் வெளியான இந்த நாவலின் பெயர், 'Cien años de soledad' எழுதியவர் கார்சியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marquez). தென் அமெரிக்க நாடுகளில் சக்கைப் போடு போட்ட இந்த நாவல், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 'One Hundred Years of Solitude' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்தது.

அதற்கு பிறகு இன்றுவரை ஏறக்குறைய 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த புதினம், இதுவரை 20 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. இது அதிகாரப்பூர்வமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை. இது தவிர, திருட்டுத்தனமாக பல மொழிகளில் இந்த நாவல் வந்திருக்கிறது. இந்த 'கள்ளக் கடத்தலில்' இருந்து இந்தியாவும் தப்பவில்லை.

யெஸ், மலையாளத்திலும், இந்தியிலும் மட்டுமே ரைட்ஸ் வாங்கி இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்கள். வங்காள மொழியில் அப்படி செய்யவில்லை. காதும் காதும் வைத்தது போல கமுக்கமாக மொழிபெயர்த்து ரிலீஸ் செய்துவிட்டார்கள். நாவலும் ஜோராக விற்றது. இந்த மொழிபெயர்ப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு வங்காள இயக்குனர், மெய்மறந்து இந்தப் புதினத்தை படமாக்க ஆரம்பித்துவிட்டார். பிடித்தது சனி. தகவல் மார்க்கேஸின் காதுகளுக்கு போனது. உடனே வழக்கு தொடரப்பட்டது. இதெல்லாம் பழங்கதை.


இப்படியான அசம்பாவிதம் எதுவும் தமிழ் மொழி பெயர்ப்புக்கு ஏற்படவில்லை. 'பாண்ட்' பேப்பரில் கையெழுத்திட்டு முறைப்படி உரிமை வாங்கிதான் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

ரைட், இதற்காகத்தான் இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டுமா? இல்லை. இதெல்லாம் சும்மா ஸ்நாக்ஸ்தான். ஆரோக்கியமான டிஷ், உண்மையில் வேறு. அது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் வலு சேர்ப்பது என்பதுதான் இதிலுள்ள ஸ்பெஷல்.

என்று நாவலும், சிறுகதைகளும் தமிழில் எழுதப்பட ஆரம்பித்ததோ, அன்று முதல் பிற மொழி எழுத்தாளர்களின் தாக்கம் அல்லது சாயல் பாலில் கலந்த தண்ணீராக நம் மொழியில் உடன் பயணிக்கிறது. இதை தவறென்று சொல்ல
முடியாது. காரணம், யாரும் 'காப்பி' அடிக்கவில்லை. பதிலாக பிற மொழி எழுத்தாளர்களின் படைப்பில் 'இன்ஸ்பையர்' ஆகியிருக்கிறார்கள்.

சிறு பத்திரிகை இலக்கியத்தை குத்துமதிப்பாக புதுமைப்பித்தனிடமிருந்து தொடங்குவோம். இவரிடம் மாப்பஸான், ஓ ஹென்றியின் தாக்கம் உண்டு. இவருக்கு பின் வந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் செகாவ், டால்ஸ்டாய்,
தாஸ்தாவெஸ்கி, காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோரின் பாதிப்பை சர்வ நிச்சயமாக காணலாம்.

அதே போல வெகுஜன எழுத்தாளர்களில் கல்கியிடம், அலெக்சாண்டர் டூமாஸின் சாயல் உண்டு. அதன் பின்னர் எழுத ஆரம்பித்தவர்கள் எந்தெந்த பிறமொழி எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்டார்கள் என்பதை அகதா கிறிஸ்டியில் தொடங்கி, சிட்னி ஷெல்டனில் மையம் கொண்டு, இன்றைய டான் பிரவுன் வரை ரூம் போட்டு ஆராயலாம்.

அந்த வகையில் 1990க்கு பிறகு வந்த சிறுபத்திரிகை எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களிடம் இருவரின் தாக்கம் உண்டு. ஒருவர், போர்ஹே. அடுத்தவர் மார்க்கேஸ். இவர்களில் மார்க்கேஸ், சம்திங் ஸ்பெஷல். ஏனெனில், மேஜிக்கல் ரியலிசம்' எனப்படும் மாய யதார்த்தவாத படைப்புகளின் முன்னோடி இவர்தான். அதாவது, கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் துவைத்த துணிகளை வரிசையாக கொடியில் உலர்த்துவதாக கொள்வோம். ஒரு கட்டத்தில் உலர்த்தப்படும் துணி, விண்ணுலகம் நோக்கி சென்று விடும்! இதைத்தான் மேஜிக்கல் ரியலிஸம் என்கிறார்கள்.

ஆனால், மார்க்கேஸ், 'நான் யதார்த்த பாணியில்தான் எழுதுகிறேன். அது உங்களுக்கு மாய யதார்த்தமாக தெரிகிறது. கரீபியன் பகுதி மக்கள் எப்படி பேசுகிறார்களோ, எந்த உவமைகளை சொல்கிறார்களோ அதைத்தான் எழுத்தாக வடிக்கிறேன்' என்கிறார்.

இது உண்மையும் கூட. அடிப்படையில் மார்க்கேஸ் பத்திரிகையாளர். எனவே மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர், இருப்பவர். அவர்களது எதிர்பார்ப்பும், தேவைகளும் மற்றவர்களைவிட இவருக்கு நன்றாகவே தெரியும். 'ElEspectador'
பத்திரிகையில் இவர் பணிபுரிந்த காலத்தில், சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நிறைய எழுதியிருக்கிறார். அவை சர்ச்சையையும் கிளப்பியிருக்கின்றன. தடை செய்யப்பட்டும் இருக்கின்றன.

எனவே மறை பொருளாக சமூக அவலங்களை சொல்ல நினைத்தவருக்கு நாவலின் பக்கம் கவனம் திரும்பியது. 1948ல், 'லீஃப் ஸ்ட்ராம்' (Leaf Storm) என்ற தன் முதல் நாவலை எழுதினார். ஆனால், அது பிரசுரமாக ஏழு ஆண்டுகள் பிடித்தது. அதன் பின்னர் தன் தாய்வழி தாத்தா பாட்டியின் வீட்டை மையமாக வைத்து ஒரு புதினத்தை எழுத விரும்பினார்.

ஆனால், எவ்வளவு யோசித்தும் நாவலின் எழுத்து நடை கை கூடவே இல்லை. இந் நிலையில் ஒரு நாள் தன் மனைவி, குழந்தைகளுடன் காரில் பிக்னிக் சென்றார். பாதிவழியில் அதுநாள்வரை இவர் தேடிக் கொண்டிருந்த எழுத்து நடை மின்னலென தாக்கியது. பாட்டியின் கதை சொல்லும் பாணி...

உடனே பிக்னிக் கேன்சல் என்று அறிவித்துவிட்டு காரை திருப்பி வீட்டுக்கு வந்தார். கையோடு தன் ராஜினாமா கடிதத்தை பத்திரிகைக்கு அனுப்பினார். இருந்த காரை விற்று வந்த பணத்தை தன் மனைவியிடம் கொடுத்தார். 'எனது அறையில் தங்கி ஒரு நாவலை எழுதப் போகிறேன். கண்டிப்பாக அது உலகளவில் பேசப்படும். என்னை நம்பு. நாவல் எழுதி முடிக்கும் வரை வீட்டுச் செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக் கொள்...'

மார்க்கேஸின் மனைவி மெர்சிடஸ் பர்ஷா (Mercedes Barcha) இதற்கு தடையேதும் சொல்லவில்லை. காதலித்து மணந்தவருக்கு கணவரின் அருமை பெருமை தெரியாதா என்ன?

அறையே கதியென்று கிடந்தார் மார்க்கேஸ். மடமடவென எழுதினார். எழுதியதை கிழித்துப் போட்டார். மீண்டும் எழுதினார். அதை அடித்துத் திருத்தினார். வேளாவேளைக்கு உணவு தேடி வந்தது. கேட்டபோதெல்லாம் காபி கிடைத்தது. ஒரு வழியாக பதினெட்டு மாதங்களுக்கு பிறகு விரும்பியபடி நாவலை எழுதி முடித்தார்.

அதன் பிறகு அறையைவிட்டு வெளியே வந்தவருக்கு சில உண்மைகள் முகத்தில் அறைந்தன. அதில் முதலாவது, வீட்டு வாடகை ஒன்பது மாதங்கள் பாக்கி. மளிகை கடைக்கு பத்து மாதங்களாக பணம் தரவில்லை. இந்த விஷயம் தெரிந்தால் எங்கே மார்க்கேஸின் எழுத்து பாதிக்கப்பட்டு விடுமோ என்று மறைத்து கடன்காரர்களை தனியாகவே சமாளித்தார் மெர்சிடஸ் பர்ஷா.

இப்படி காதல் மனைவியின் பராமரிப்பில் மார்கேஸ் எழுதிய நாவல்தான், இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் 'தனிமையின் நூறு ஆண்டுகள்'. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்த நாவலின் கதை, ஒரு வகையில் ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளின் வரலாறுதான்.

பத்தொன்பது குடும்பங்களுடன் ஹோசே அர்க்காத்தியோ புயேந்தியா தன் ஊரை விட்டு வெளியேறுகிறார். மரணத்தின் நிழல்படாத 'மகோந்தா' என்னும் புதிய ஊரை அவர்கள் உருவாக்குகிறார்கள். வெளியுலகத்தோடு தொடர்பற்று இருக்கும் இந்த ஊரைத் தேடி ஜிப்சிக்கள் தங்கள் வித்தைகளுடன் வருகிறார்கள். 'மகேந்தா'வின் மக்கள் அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளையும் அவர்கள் வழியாகவே அறிகிறார்கள். உலகின் அறிவியல் பாய்ச்சலுக்கு 'மகோந்தா' ஈடுகொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட புயேந்திரா, வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ள முயன்று இறுதியில் பித்துப்பிடித்து ஒரு மரத்தடியில் மரணமடைகிறார்.

முதல் புயேந்தியாவின் கனவுகள் அவருடைய வாரிசுகளின் காலத்தில் நிறைவேறுகிறது. 'மகோந்தா' நகரத்துக்கு ரயில் வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் நுழைகின்றன. பன்னாட்டு நிறுவனம் வருகிறது. போர் வருகிறது. பசியும், பஞ்சமும், மரணமும் வருகின்றன. தொழிலாளர் புரட்சி வெடிக்கிறது. தேவாலயம் எழுகிறது. துருக்கியர்களும், அராபியர்களும், கருப்பர்களும் வருகிறார்கள். நீதிபதி வருகிறார். ராணுவம் வருகிறது. இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிகின்றன. மெல்ல அந்த ஊர் தன் ஆன்மாவை இழக்கிறது. இயற்கை ஏமாற்றுகிறது. நான்கு வருடங்கள் தொடர்ந்து மழை பெய்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் மழையே இல்லாமல் வறட்சியில் வாடுகிறது. ஒரு கட்டத்தில் மக்களால் கைவிடப்பட்டு, ஒட்டு மொத்தமாக அழிந்து போகிறது 'மகோந்தா...'

இதுதான் இந்த நாவலின் கதை. இதுவேதான் நம் நாட்டின் சரித்திரமும். இப்போது தலைப்பை படித்துவிட்டு முதல் பத்தியில் இருந்து மீண்டும் இந்தக் கட்டுரையை வாசிக்கத் தொடங்குங்கள்.

***

நன்றி: கே.என்.சிவராமன் , தினகரன் ஞாயிறு மலர் (14.7.2013) , தாஜ்

2 comments:

 1. ஃபேஸ்புக்கில் நண்பர் அபிலாஷ்(Abilash Chandran):

  பிக்னிக் போகும் போது அல்ல ஒரு நாள் ஊருக்கு போகும் வழியில் அவருக்கு தான் எழுத வேண்டியது தன் குடும்பத்தின் வரலாறை என தோன்றுகிறது. அது தான் தூண்டுதல். எழுதும் பாணி அல்ல என்ன எழுதுவது என்பது தான் மார்க்வஸின் குழப்பமாக இருந்தது. மேலும் இது வட அமெரிக்கா நவீனத்துவத்தின் பாதைக்கு வருவது பற்றிய, அறிவியல் வளர்ச்சியோடு அவர்கள் போராடுவது, தொடர்ந்து உள்நாட்டு போர்கள் நடத்துவது பற்றின நாவல். இதற்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை. இந்தியா அறிவியலை ஒரு வெறும் தொழில்நுட்பமாக எளிதில் ஏற்றது. இங்கு புரட்சிகளும் நடந்ததில்லை. மற்றபடி இது ஒரு நல்ல கட்டுரை.

  ReplyDelete
 2. மேலும்...

  1. முன் அறிவிக்கப்படாத ஞாபக மரணங்களின் பதிவு - சுகுமாரன்
  http://www.kalachuvadu.com/issue-162/page53.asp

  2. நல்வரவு, மார்க்கேஸ் - சுகுமாரன் உரை
  http://vaalnilam.blogspot.ae/2013/07/blog-post_13.html

  ReplyDelete