Saturday, March 10, 2012

என்டெ ரப்பே! (நான் புலி நினைவுகள் - 03 ) - எஸ்.எல்.எம்.ஹனிபா

நான் , புலி , நினைவுகள் 1

நான் , புலி , நினைவுகள் 2

***

நான் புலி நினைவுகள் - 03

எஸ்.எல்.எம்.ஹனிபா

என்டெ ரப்பே!

புலிகளின் மாக்குப்பை முகாமில் இறக்கியெடுத்த முக்கியஸ்தர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா டேனியல் ஜெயரட்ண ராஜா அவர்களும் இருந்தார்கள். நடராஜா சைவத் தமிழர். காதலுக்காக கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியது மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி, மட்டக்களப்பு கிரான் கிராமத்தில் வந்தேறு குடியாக வாழ்ந்து வந்தார். கிரான் விடுதலைப் புலிகளின் தானைத்தளபதி கருணா அம்மானின் ஜென்ம பூமி.

டேனியல் எமது பகுதியில் Forest Officer (வட்டவன அதிகாரி) பெரும்பாலும் முஸ்லிம் கிராமங்களிலேயே இவரின் நடமாட்டம் அதிகம் காணப்படும். காரணம், எமது கிராமங்களின் தீனோர்கள் மரங்கடத்தும் பாரிய புண்ணிய கைங்கரியத்தில் பெயர்பெற்றவர்கள்.

என்னை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்த புலிகள், அவரை வேறிடத்திற்குக் கொண்டு செல்ல ஆயத்தமானார்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், எனது நண்பர் யூனுஸ் போடியார் அவர்கள், திருகோணமடு கிராமத்திலிருந்து என்னைக் காண வந்தார்கள். {திருகோணமடு விடுதலைப் புலிகளை முடிவுக்குக் கொண்டு வந்த மாவிலாறு கிராமத்தின் மறுகரையில் அமைந்த அழகிய முஸ்லிம் கிராமம்}

அன்றிரவு நாங்களிருவரும் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு படுக்கைக்குப் போகும் நேரம், யூனுஸ் போடியார் "மச்சான் அனிபா! உங்களோட கடத்தப்பட்ட டேனியல் ஐயாவ எங்கட ஊர்லாண்டா மச்சான் புலிகள் போட்டுத் தள்ளினாங்க. நம்மட பாடசால மைதானத்தில அவர் கையாலயே குழிய வெட்டி, மைதானத்தச் சுற்றி வர நம்மட சனங்களையெல்லாம் பார்வையாளர்களா நிறுத்தி, குழிக்கருகில் அவரக் கொண்டு வந்து, ஒரு பதினைஞ்சு வயசுப் பொடியன் அவர்ர புடரில பலங்கொண்ட மட்டும் மண் வெட்டிப் புடியால ஒரே அடிடா மச்சான். குற உசிரா குழியில உழுந்தவர அப்படியே மண்ணப் போட்டு மூடி... சனங்களெல்லாம் கத்திக் கதறி வீடு வாசலுக்கு ஓடிட்டுதுகள். அன்றிரவு ஏராளம் சிறுவர்களும் படுக்கைய நனெச்சிப் போட்டுதுகள்....

"மச்சான்! மெய்தான், அவர் செஞ்ச குத்தம் என்ன உங்களுக்குத் தெரியாதா?"
"அது, அவர்ர புள்ளெகள்ள ஒண்டு இந்திய இராணுவத்தோட கொஞ்சம் உறவாம்" நான் கதையை முடிவுக்கு கொண்டு வர, யூனுஸ் போடியார்,

"என்டெ ரப்பே! அதென்ன அநியாயம்டா மச்சான்"

(தொடரும்)

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com )

3 comments:

  1. ஹனிபாக்கா என்னென்னவோ
    சொல்ல எத்தனிக்கிறார்
    ஆனாலும்
    சொல்ல வாய்க்கவில்லை

    நகைச்சுவை ததும்ப
    குசும்பாக எழுதத்தெரிந்தவர் அவர்.
    கைகள் கட்டப்பட்ட நிலையில் எழுதுகிறார்.

    1985-ல்தான்
    அங்கே பெரும் பயம்
    விளைந்துக் கிடந்தது என்றால்..
    இன்றைக்கும்
    அதுவேதான் நிலையோ?
    கஷ்டம்.
    -தாஜ்

    ReplyDelete
  2. கொடூரம் என்பது இதுதான் போல....

    ஹனிபாக்கா இதை எழுதும்போது
    அவர் மனம் துடித்ததையும்
    எழுத்தில் வடித்திருக்கிறார்

    இந்த நினைவை
    இத்துடன் முடித்துக்கொண்டதும்
    மிகச் சரி
    அத்தனைக்குக் கொடூரம்

    அடுத்த நினைவை எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  3. மனதில் புதைத்து வைத்திருந்த உண்மைகளை எழுதி ஹனிஃபா காக்காவுக்கு நன்றி. ஒரே இரவில் மொத்த முஸ்லீம்களையும் வெளியில் துரத்திய புண்ணியவான்கள் தான் யாழ்ப்பான புலிகள்.

    ReplyDelete