அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா நம்ம ஹனிபாக்காவை? பழைய ஆபிதீன் பக்கங்களின் கடைசி பதிவில் மறுமொழியிட்டிருந்தார் இப்படி : “நான் புலி நினைவுகள்” எனும் மகுடத்தில் கடந்த முப்பதாண்டு கால போர்வாழ்வில் எனக்குக் கிட்டிய அனுபவங்களில் சிலதை பொறுக்கி எழுத திட்டமிட்டு அதில் ஒரு பத்தியை இன்று எழுத வந்தேன். ஆபிதீன், அவருடைய பக்கங்களை ஸலவாத்துடன் முடிப்பதைதை அறிந்து நானும் பின்வாங்குகிறேன். என்னத்தை எழுதிக் கிழிக்க என்ற வழமையான கூண்டுக்குள் புகுந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை’
இப்போது , கூண்டிலிருந்து வெளிவருகிறார் நம் ஹனிபாக்கா. உஷார்...! - ஆபிதீன்
***
நான் , புலி , நினைவுகள் 1
எஸ்.எல்.எம். ஹனிபா
1989 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு அதிகாலைப் பொழுது - சுப்ஹூத் தொழுகை முடியும் தறுவாயில் இந்திய அமைதிப்படையினர் ஊரைச் சுற்றி வளைத்திருந்தனர்.
எனது பகுதி மக்கள் அனைவரையும் (மூவாயிரம் பேரளவில்) ஹிஜ்ரா பாடசாலை வளவினுள் அடைத்து வைத்திருந்தனர். இவை ஒன்றும் எனக்குத் தெரியாது.
காலை ஆறு மணியளவில் எனது வீட்டின் கேற்றில் நின்று ஒருவர் மெதுவான குரலில் என்னை அழைத்தார்.
"சேர்! விசயம் தெரியுமா? நம்மெட ஆக்களையெல்லாம் இந்தியன் அள்ளிக் கொண்டு பள்ளிக்கூடத்திலெ போட்டிருக்கான்"
சொன்னவன் வந்த வழியும் தெரியாது மறைந்து விட்டான்.
நான் அப்பொழுது இந்தியாவின் உதவியால் தமிழ் மக்களுக்குக் கிட்டிய அதிகபட்ச அதிகாரம் கொண்ட வடக்குக் கிழக்கு மாகாண சபையின் (எஸ்எல்எம்சி) உறுப்பினராகயிருந்தேன்.
இந்தியப் படையினர் பார்வையில் நானொரு எம்.எல்.ஏ.சாப்!
உடனடியாக அந்த இடத்திற்கு நான் பிரசன்னமானேன்.
அமைதிப் படையினரால் வீதி நிறைந்து விட்டது.
பாடசாலையின் அரைச்சுவரில் கட்டைக் காற்சட்டை, ரீ சேர்ட் அணிந்தவராக - கெப்டன் தமுழி ஹிந்தியில் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.
என்னைக் கண்டதும் இந்தியப் படையில் நின்று கொண்டிருந்த இந்தியப் படை ஜவானும் தஞ்சாவூர்க்காரரும் நண்பனுமான கந்தசாமி, "வணக்கம் சாப்! இரவு நாங்க உங்க ஆக்கள தூங்க விடல்ல பாருங்க. அப்புறம் இவன் தாயோளி சொல்றான், எல்.ரீ.ரீ.ஈ பசங்க வந்தா - நம்மெ அக்காமாரு அண்ணன்மாரெல்லாம் எங்க கேம்பில வந்து தகவல் கொடுக்கணுமாம். அப்படித் தகவல் தந்தா தம்பிமாரு இவங்கள சுட்ர மாட்டாங்க? யாருமெ சொல்லப்படாது. உங்க உயிருக்கு ஆபத்து. இவன் கிடக்கான்"
கந்தசாமியின் மொழிமாற்றம் கேட்ட ஆண்களும் பெண்களும் 'கொல்'லென்று சிரித்தனர்.
ஹிந்தியிலிருந்து மொழிமாற்றம் பெற்ற 'தமிழ்' வார்த்தைகளின் அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர எனக்கு நெடுநேரமெடுத்திற்று
நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com ) , நளீம்
ஒரு தொடர்கதையின் சுவராசியத்தை உள்ளடக்கிய ஆரம்பம் அறியும் ஆவலைத் தூண்டுகிறது. கதையல்ல நிஜம் என்பது கூடுதல் சுவராசியம். சோகத்தை சுவராஸ்யம் என ரசிக்கலாமா? என்ற கேள்வியுடன், அடுத்த தொடரை எதிர்பார்த்தவனாய்.
ReplyDeleteஹனிபாக்கா..
ReplyDeleteசபாஸ்!
புலி
தீர்க்கமான பார்வைக் கொண்டு
களத்தில்
வலம் வருகிற கம்பீரம்..
மிடுக்காக இருக்கிறது.
புலி
தனக்கே உறிய
அபாரப் பாச்சலை நிகழ்த்தும்.
நிகழ்த்த வேண்டும்.
-தாஜ்
ஆரம்பமே அமர்க்களம்.
ReplyDeleteஅமைதிப்படையும் இந்தியும் சம்மந்தப்பட்ட இன்னொரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ரியாதில் இருந்த ஒரு இலங்கைத் தமிழ் நண்பர் ‘ரதி’ சிறிது குள்ளமானவர். நன்றாக இந்தி பேசுவார். உயரத்தில் பாதி அகலம். அதனாலேயே ‘பாடிபில்டர்’ போலிருப்பார். இன்னொரு நண்பருடன் விடுமுறையில் நாடு சென்றார். திரும்பி வந்த நண்பரிடம் ரதி வராத காரணம் கேட்டோம். நானெல்லாம் கொஞ்சம் ‘தலைமறைவாவே’ நாட்களை ஓட்டிவிட்டு வந்துவிட்டேன். அவர் அவ்வாறு இல்லை. எனக்கு இந்தி தெரியும்; அமைதிப்படையிடம் நான் பேசி சமாளித்துக் கொள்வேனென ‘சுதந்திரமாக’ நடமாடினார். ‘மாட்டிய’போது, இவரின் இந்தியையும் உடம்பையும் பார்த்து, அமைதிப்படை இவரைத் தங்கவைத்து கடுமையான உபசரிப்பாம். சில மாதங்கள் கழித்து ‘சுவிஸ்’லிருந்து ஒரு கடிதம் எழுதினார், நண்பர் தாஜுக்கு, நீண்ட ‘போராட்ட’ த்திற்குப் பின் ‘விடுதலை’ ஆனதாக.
எங்களுக்கு அப்போதுதான் சிறிது ஆசுவாசம்.
மஜீத் எழுதியிருக்கும்
Deleteஅத்தனை வரிகளும்
நிஜம்.
-தாஜ்
பின் குறிப்பு:
புலி சார்ந்த ஒருவர்.
பெயர் அல்போன்ஸோ.
அவருக்கு திருமணம் ஆகியதை ஒட்டி
புலிப்படை கழட்டிவிட்ட பேர்வழி.
அவர் என்னோடும்/மஜீதோடும்
உடன் வேலை செய்தவர்.
அன்பு கொண்ட நல்ல உள்ளம் படைத்தவரும் கூட.
உடலால் என்னை மாதிரி இன்னொரு பங்கு பெருத்தவர்.
அவரை அவர் சார்ந்த ஜனங்கள் அழைப்பது
'Big Boy'
அவரோடு நாங்கள் 'கதைத்த' கதைப்புக்கு
அளவே இல்லை.
புலிகளின் அத்தனை ராணுவ ரகசியங்களையும்
கிட்டத்தட்ட உள்வாங்கி இருக்கிறோம்.
இந்திய அமைதிப்படை
ஸ்ரீலங்கா போன போது
ரியத்தில் அல்போஸோ
ஆர்ப்பரித்த ஆர்ப்பரிப்பை
இன்றைக்கும் மறக்க இயலாது.
காலம்: 1987-லாக இருக்கலாம்.
அன்று தொட்டு
இரவுகளில் பி.பி.சி/
கேட்கும் பழக்கம் வெகு ஆண்டு நீடித்தது.
பின்னொரு கலத்தில்
புலிகள்
மனதில் இருந்து வீழ்ந்த போது...
பி.பி.சி. கேட்கும் பழக்கமும்
என்னை விட்டது.
-தாஜ்