’எலிப்பந்தயத்தில்’ கிலியோடு ஓடிக்கொண்டிருக்கும் ஏமாளியான நான் , புலி பற்றியும் பதிவிடுவது வயிற்றில் புளியைக் கரைக்கிறது! - ஆபிதீன்
***
அன்புள்ள ஆபிதீனுக்கு
இரண்டு வாரங்களாக இருமல், தடுமல் அவ்வப்போது காய்ச்சல் எல்லாம் வந்து விடமாட்டேன் என்கிறது. ஆபிதீன் பக்கங்களை புரட்டி விட்டு மூடிவிடுவதுதான். பேப்பூர் சுல்தானின் ராஜ்யமாக உங்கள் பக்கங்களில் நீண்ட நாட்கள் மேதை பஷீர் ஹாஜியார் ஆக்கிரமித்திருந்தார். காக்காவுக்கு வலு சந்தோஷம்.
தப்லாவைக் கேட்க வேண்டும். ஆறுதலாகத்தான் அதுபற்றி எழுதுவேன். 10 நாட்கள் நாகர்கோவிலில் நின்றும் 'கவர்னர் பெத்தா' மீரா மைதீனைக் காணக் கிடைக்கவில்லை. ரோசம்மா பீவி படித்த நாள் தொடக்கம் மீராமைதீனை விசாரித்துக் கொண்டிருக்கிறேன். அவரின் 'ஓதியறியப்படாத முட்டைகள்' நாவலில் அவருடைய கைபேசி இலக்கம் கிடக்கிறது. இன்று எப்படியாவது ஆளைப் பிடித்து விடுவேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரைப் போன்ற இளைஞர்களை நம்பித்தான் என்னைப் போன்ற மூத்த வாசகர்கள் காலந்தள்ளுகிறோம். அவரின் நாவலைப் பற்றி உங்கள் பக்கத்தில் கூடிய சீக்கிரம் எழுதுவதற்கு அல்லாஹ் தன்னுடைய கஜானாவிலிருந்து நேரத்தை எனக்கு அருள வேண்டும்.
அன்புடன்
ஹனீபா காக்கா / Fri, Feb 24, 2012 at 4:11 PM
நான் , புலி , நினைவுகள் 1
**
நான் , புலி , நினைவுகள் 2
எஸ்.எல்.எம். ஹனிபா
ஐயா அதிகம் பேசத் தேவையில்லை.
1989 நவம்பர் மாதத்தில் ஒரு நாள், எனது குடும்பம் ஊரிலிருந்து 60 கி.மீ. தொலைவிலிருந்த பொலன்னறுவை மாவட்டத்தில். அவ்வப்போது ஓட்டமாவடிக்கு வந்து போவேன், கஞ்சா வியாபாரி போல் அல்லது கடத்தல்காரன் போல். நான் வருவதும் போவதும் பரம ரகசியம்.
60 கி.மீ. பயணம், ஏழு சோதனைச் சாவடிகள், ஆங்காங்கே நேரடி மோதல், எறிகணை வீச்சுகள், பஸ்ஸுக்குள் குப்புறப் படுத்தல் என எல்லாம் நிகழும். ஐந்து கி.மீ. பயணிக்க ஒரு மணி நேரமாகும்.
ஊரிலிருந்து 20ஆவது கி.மீ. தொலைவில் மட்டக்களப்பு, பொலன்னறுவை எல்லைக்கிராமம் 'மாக்குப்பை'. அங்கு புலிகளின் முக்கிய முகாமொன்றிருந்தது. வாகனக் கடத்தல், கப்பம் பறித்தல், மாற்றுக் கருத்துக்காரர்களை மண்டையில் போட்டல் என்று நாளாந்தப் பணிகள், பெரும் பேர் பெற்ற முகாம்.
அந்த நாட்களில் புலிகளின் மரண தண்டனைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், தமிழர் பார்வையில் அவர் துரோகியாகவும், முஸ்லிம்கள் மனத்தில் அவர் தியாகியாகவும் மதிக்கப்படுவார்.
அவ்வாறுதான் அன்றும் எமது ஊர் எம்.பி.சி.எஸ்ஸுக்குச் சொந்தமான லொறியில் பொலன்னறுவை நோக்கிப் பயணித்த போது, இரண்டு துப்பாக்கிதாரிகளால் நான் பயணம் செய்த வாகனம் இடைமறிக்கப்பட்டு நான் இறக்கியெடுக்கப்பட்டேன்.
"ஐயா, உங்களை விசாரணைக்காக அழைத்து வரச் சொன்னார்கள்" நான் எதுவும் பேசவில்லை.
வீதியை விட்டும் 100.மீ. தூரத்தில் அடர்ந்த காட்டுக்குள் என்னை அழைத்துப் போய் அமர்த்தினார்கள். அங்கு ஏற்கனவே என்னைப் போல் இறக்கியெடுக்கப்பட்ட பலர் இருந்தார்கள். பெரும்பாலும் முஸ்லிம் வர்த்தகர்கள், சில அரச அதிகாரிகள். இவ்வாறு பொறுக்கியெடுத்தவர்களை இன்னுமொரு இடத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கே எமது பகுதியின் இராணுவப் பொறுப்பாளர் ரவி (20) விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். விசாரணை முடிந்ததும் ஒவ்வொருவராக வெளியேறினர். வர்த்தகர்களின் முகங்கள் வரியால் வாடி வதங்கிப் போய்க் கிடந்தன.
எனது முறை வந்தது."ஐயா அதிகம் பேசத் தேவையில்லை. இந்தியாட மாகாண சபையில் உங்களைப் போன்றவர்கள் இருக்கக் கூடாது, நாங்கள் அமைக்கும் தமிழீழத்தில்தான் நீங்கள் உறுப்பினராக வேண்டும். அதுதான் எங்கள் ஆசை. உடன் உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள். எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். உங்களுக்குத் தெரியும், நாங்கள் அண்ணர் அமிர்தலிங்கத்தையே விட்டுவைக்கவில்லை"
கெப்டன் ரவி என்னை மேலும் கீழும் நோட்டமிட்டார்.
'அட அமிர்தலிங்கத்தை இவர்களா...' என்று மனம் ஓலமிட்டது.
நான், "சரி தம்பி, அப்படியே செய்கிறேன்"
1989 டிசம்பரில் நிகழ்ந்த மாகாண சபைக் கூட்டத்திற்குப் பிறகு, நான் ஒரு நாளும் மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை. 1990 மார்ச் மாதத்தில் அந்த மாகாண சபையையே கப்பலில் ஏற்றி பத்திரமாக பாரத தேசம் கொண்டு சேர்த்தனர் இந்திய அமைதிப்படையினர்.
அன்றிரவு எனது கனவில், எங்கள் ஜனாதிபதி மாண்புமிகு ஆர்.பிரேமதாஸ அவர்களும் தமிழீழப் பிதாமகர் வே.பிரபாகரன் அவர்களும் ஆலிங்கணம் செய்வதைப் பார்த்து எனது மதிப்புக்குரிய நண்பரும் வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான எம்.வரதராஜ பெருமாள் அவர்கள் புன்னகைத்தார்கள்
***
நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com )
எலி புலி என்றதும்
ReplyDeleteஎனது பதினைந்தாவது வயதில்
Wounded Cat என்ற தலைப்பில்
நான் எனது டைரியில்
(தொலைந்துவிட்டது)
எழுதிவைத்திருந்த ஒரே
ஆங்கிலக் கவிதையின்
தமிழாக்கம் மட்டும்
நினைவுக்கு வந்தது:
“பூனைப்பந்தயத்தில்
தோற்ற
எலிருசி கண்ட பூனை
உரக்கக் கிரீச்சிட்டது
‘எலிப்பந்தயத்தில் கலந்துகொண்டால்
நீ எலிதானெ’ன்று
புலியிடம்”
10 வயதில் தமிழ் மீடியம் பள்ளியில்
ஆங்கிலப் பாடத்தில் வந்த இந்த "செய்யுள்” தான்
மேற்படி கவிதைக்கு உந்துவிசை!
Ten little mice sat down to spin,
Pussy came down, and popped her head in.
What are you doing, my little men?
We're making clothes for gentlemen.
Shall I come in and cut off your threads?
Oh No Miss Pussy, you'll bite off our heads.
ஆபிதீன் பக்க வாசகர்களுக்கு, இந்தப் பந்தியில் 100 கி.மீ. தூரம் என்பதை 100 மீ. எனக் கொள்ளவும்.
ReplyDeleteநன்றியுடன்
எஸ்.எல்.எம். ஹனீபா
மாற்றிவிட்டேன் காக்கா. நன்றி.
Deleteஹனிபாக்காவின் அனுபவம்-2: சிலிர்ப்பூட்டியது. அறிந்த செய்திகளாயினும் மனதை இன்னும் அதிரவைக்கிறது.
ReplyDeleteஉண்மைக்கு எப்போதும் வயது (20)தான்!
//1990 மார்ச் மாதத்தில் அந்த மாகாண சபையையே கப்பலில் ஏற்றி பத்திரமாக பாரத தேசம் கொண்டு சேர்த்தனர் இந்திய அமைதிப்படையினர்//
மிகச்சரி. பிறகு ‘சபை’யைப் பலகாலம் மறைத்து வைத்து ‘காப்பாற்றி’யும் வந்தனர்.
தொடருங்கள் காக்கா.
ஆபிதீன்...
ReplyDeleteஇப்போ
எலிப் பந்தயத்தைப் பற்றி மட்டும் பேசுவோம்.
எலிப் பந்தயத்தை
ஒரு ஓணான் கிண்டல் அடிக்கிறபோது...
அது நிறம் மாறும் வேகத்தை
நாம்
எள்ளி நகையாடுவதும் தகும்.
யோசியுங்கள்.
அடுத்த உயிர்களை
விழுங்கி ஏப்பமிடும்
முதலையின் ஜாடைகள்
இந்த ஓணானுக்கும் இருப்பதுதான்
எத்தனைப் பொருத்தம்.
சுயப் பசி கணும் போதெல்லாம்
மனைவி/ மக்கள்/ நண்பன் என்று
யாரையும் விடாது விழுங்கி
'சுவாகா' செய்யும்
இந்த 'முதலை ஓணானை'
விட்டுவிடவும்தான் வேண்டுமா?
சகாக்களையெல்லாம்
எறும்பென்றும்
எலியென்றும்
இந்த ஓணான் கூறுவதுதான்
வேடிக்கையோ வேடிக்கை!
அது இன்னும் தன்னை
மனிதனாக நினைத்துக் கொண்டிருக்கும்
நினைப்பை முதலில்
சங்கறுக்கணும்
இல்லை...
பாவம் அது...
என்றீர்கள் என்றால்..
குறைந்த பட்சம் அதனை
ஓர் பைத்தியக்கார ஹாஸ்பெட்டலிலோ
பாப்பாவூர் தர்ஹா தூண் ஒன்றிலோ
கட்டிப்போட
கட்டாயம் வழிக்கண்டாகணும்.
உங்களுக்குத் தெரியுமோ என்னவோ,
எங்கப் பக்கமெல்லாம்
ஓணானை அடித்தால்
ஒன்பது நன்மை என்பார்கள்
இந்த ஓணானை அடித்தால்
நன்மை பில்லியனைத் தாண்டும்.
அதனையாவது செய்யவிடுவீர்களா?
-தாஜ்
அருமையான போராளிகள் என நாம் நேசித்த புலிகளின் வீழ்ச்சியின் பிண்ணனியில் எத்தனையோ காரணிகள்!. தொடர்ந்து பதியுங்கள்.உண்மையான பதிவுகள் நாளைய ஏன் இன்றைய தலைமுறைக்கு படிப்பினையாகும் என்பதால் உங்கள் பதிவும் ஓர் அரிய ஆவணமாகும்.
ReplyDelete