ஜோ டி குரூஸ் (Joe D Cruz) எழுதிய ‘அஸ்தினாபுரம்’ நாவலின் ஆறாம் அத்தியாயம் இது. நன்றியுடன் பகிர்கிறேன். - AB
**
எனதருமை மனைவி ஆனந்திக்கு, உன் அன்புக் கணவன் அமுதன் தோகாவிலிருந்து எழுதுவது. நான் இங்கு நலமே போல் நீயும் அங்கு நலமாய் இருப்பாய் என்று நம்புகிறேன். உண்மையைச் சொல்வதானால் நான் இங்கு நலமாகவே இல்லை . எப்படி இருக்க முடியும், ஆனந்தி? பொழுது போக்கென்றால் அது சாப்பிங் மட்டும்தான், நண்பர்கள் லுலு சூப்பர் மார்கெட்டுக்குள் சென்றிருக்கிறார்கள், நான் இங்கே ஒரு ஈச்சமரத்தடியிலமர்ந்து உனக்குக் கடிதம் எழுதுகிறேன்.'என்னடா எல்லோரையும் போலதான எனக்கும் திருமணம் நடந்திச்சி, இங்க இருந்தப்ப பொழுதன்னைக்கும் போலிசு, கேசுன்னு அலைஞ்சாரு, நிம்மதியான கஞ்சி ஒருநாள் கூட இல்லிய, ஒவ்வொரு நாளும் இன்னக்கி என்ன நடக்குமோன்னு பதட்டம், இந்த ஓட்டத்துக்கு எடையிலயும் வயித்துல குழந்த ஆயிப்போச்சி. சரி, இப்பவாவது நம்மளோட இருப்பார்ன்னு பாத்தா கண் காணாத இடத்துல இருந்து சம்பாதிக்கிறாராம். எத்தன நாள் ராயபுரத்துக்காரி கூட குப்ப கொட்ட, சாப்பாட்டுக்கு பணம் குடுக்குறோம் ஆனாலும் கட்டுன புருசனோட கூடயோ , குறையோ இருக்குறத சாப்புட்டுட்டு வாழ்றதுதான வாழ்க்க..... உன் மனவோட்டம் எனக்குப் புரியாமலில்லை.
இவையெல்லாம் எனக்கும் வரும் எண்ணங்கள். என்னடா வாழ்க்கையென்று சில சமயங்களில் சோர்ந்துவிடுகிறேன், மறுகணமே எழுந்து நின்று விடுகிறேன். காரணம், நான் வெல்லாத கோட்டைகளை வெல்ல என் மகன் வருவான் என்ற நம்பிக்கை என்னில் துளிர் விட்டிருக்கிறது. நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆவேன் என்று கனவில் கூட நினைத்தவனல்ல. வாழ்வே சூன்யமாகிப் போயிருந்தது, நீ என் வாழ்வில் புது வசந்தம் ஆனந்தி.
இந்த வெளிநாட்டு வாழ்க்கைகூட இறைவன் கொடுத்த பாதுகாப்பாக இருக்கலாம், யோசித்துப் பார் அங்கு இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்குமோ ! ஆனால் என்ன, என் மனைவியின் அருகில் நான் இல்லை . கடவுள் எல்லாவற்றையும் எப்போதும் ஒருசேரத் தந்ததில்லை. எது எப்போது தேவையோ அதை அவ்வப்போது வாய்க்கப் பண்ணுகிறான். இங்கே மரத்தடியில் கிடந்த இரு பேரீச்சம் பழங்களை எடுத்துச் சாப்பிட்டேன். பழங்கள் வாயில் மாவாய்க் கரைந்து தேனாய் இனிக்கின்றன. இந்த மரத்தின் பழம் இன்று நான் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது ஊழ்...
அந்தக் காலத்துல நம்ம கொற்கையப் போல கத்தாரும் முத்துக் குளித்துறையா இருந்திருக்கு, 1940ல கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் இந்த நாட்ட செழிப்பா மாத்திருச்சி. ரெம்ப நாளுக்கு முன்னால பகரின் ஷேக்குகள் இந்தப் பகுதி ஆண்டாங்களாம், பின்னால கத்தாரோட அல்தானி குடும்பம் வெள்ளைக்காரங்க தயவுல ஆட்சிய பிடிச்சிருக்காங்க. 1995ல பழமைவாதியான தகப்பனார சத்தமில்லாம தூக்கி எறிஞ்சி ஆட்சியக் கைப்பற்றுன கமது பின் காலிஃப் அல் தானி, பரவலான முன்னேற்றத்த இந்த நாட்டுக்கு கொண்டு வந்திருக்கார். புதுசா அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகுறதா சொல்லுறாங்க, எந்த அளவுக்கு ஜனநாயகம் வருமின்னு தெரியில.
இது சூடான பிரதேசம், இங்கும் மனிதர்கள் சந்தோசமாகவே வாழ்கிறார்கள். எல்லோருமே ஒரு விதத்தில் குடும்பத்திற்காக தியாகம் பண்ணுகிறவர்களாகவே இருக்கிறார்கள். எண்ணி இரண்டு வருடங்கள் கண்ணிமைப்பது போல் போய் விடும். கடனும் போய் விடுமே ஆனந்தி. என் மகன் என்னை அப்பா எனத் தேடும்போது நிச்சயமாக அவனருகே நான் இருப்பேன்.
ஆமந்துறையில் அனைவரையும் விசாரித்ததாகச் சொல். ஊருக்கு நான் கடிதம் எழுத முடியாது, காரணம் நான் வெளியே இருக்கிறேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாமென்று பார்க்கிறேன். முதலில் வெளிநாட்டு வேலைக்கு போங்க என்ற அருண் இப்போது வந்துவிடுங்கள் என்று உயிரை வாங்குகிறான். அவனுடைய இமெயில்களைத் திறந்தால் எப்போதும் 'வந்தருளும் ஸ்வாமி வந்தருளும்' என்று ஜெபிக்கிறான். எனக்கும் நிறைமாத கர்ப்பிணியான உன்னை பக்கத்திலிருந்து பார்க்க வேண்டும் போலிருக்கிறது. எப்போதும் உன் வயிற்றில் வளரும் நம் பிள்ளை பற்றிய கனவு. என் பிள்ளைக்குக் கண் வந்திருக்குமா, கை கால் முளைத்திருக்குமா. என்னைப் போலிருக்குமா உன்னைப் போலிருக்குமா. ஆண்மையில்லையோ என உறவே கை கொட்டிச் சிரித்ததே, உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அந்தச் சாபம் நீக்க வரும் என் செல்லத்தை, அதன் பிறப்பை நான் அருகிருந்து பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஊரில் எத்தனையோ வழக்குகள், எல்லாமே பொய்வழக்குகள், நான் வந்த பிறகே அத்தனையும் பைசலாகும். பொய் கேஸ்களை முடிக்க வேண்டுமென்றால் கட்டுக்கட்டாகப் பணம் வேண்டுமே... அனுப்புகிற பணத்தையெல்லாம் கடன் அடைக்கிறேன் என்கிறாள் ஆத்தா, உண்மையிலேயே அடைக்கிறாளா என்று இப்போதெல்லாம் சந்தேகம் வந்துவிடுகிறது.
இங்கு காலையில் ஐந்தரை மணிக்கு எழும்பி பல் தேய்த்து உடனே குளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் குழாய் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். காலையில் ஏழு மணிக்கே வேலைக்கும் கிளம்பியாக வேண்டும். ஒரு மலையாளி கடையில் இட்டிலியும் சாம்பாரும் கிடைக்கிறது. அங்கேயே மதியமும் இரவும் சாப்பிடுகிறேன்.
உன்னுடைய கைப்பக்குவத்தில் சாப்பிட்ட எனக்கு இந்தச் சாப்பாடு சப்பென்றிருக்கிறது. ஏழரை மணிக்கு அலுவலகம், சரியாய் பனிரண்டரை மணிக்கு மதியச் சாப்பாட்டுக்காய் கிளம்பி விடுவோம், குளிரூட்டப்பட்ட அலுவலக அறைக்குள்ளிருந்து வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் காருக்குள் வந்து அமர்ந்தால் அப்படியே அடுப்புக்குள் தூக்கிவைத்தது போல் இருக்கும், வியர்த்து ஊற்றும். உடம்பு தளர்ச்சியாகி விடுகிறது. வெப்பம் அதிகமென்பதால் மூன்றரைவரை ஓய்வு, ஒரு குட்டித் தூக்கம் கிடைக்கும். திரும்ப அலுவலகம் ஆறரைவரை இருக்கும், எனக்கு எப்போதும் போலவே வேலை கொஞ்சம் அதிகம். சிலவேளைகளில் ஒன்பது மணிவரைகூட இருக்க வேண்டி வருகிறது.
இதுவரைக்கும் அரசிடமிருந்த கப்பல் ஏஜென்ஸி தொழிலை இப்போது தனியாருக்குத் திறந்துவிட்டிருக்கிறார்கள். கஸ்டம்ஸ் கிளியரன்ஸா, சரியான பேப்பர்கள் கைவசமிருந்தால் உடனுக்குடன் முடிந்துவிடுகிறது. கத்தாரிகள் சோம்பேறிகள். ஆனாலும் துறைமுகச் செயல்பாடுகளைத் தெளிவாகவே வைத்திருக்கிறார்கள். துறைமுகப் பொறுப்புக் கழகம் பொறுப்போடு செயல்படுகிறது. மேல்மட்டத்தில் மட்டும் கத்தாரிகள் மற்றபடி எல்லா நிலைகளிலும் நம் ஊர் மலையாளிகள். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகக் கப்பல் ஏஜென்சி கம்பெனிகள் இங்கு முளைத்தவண்ணம் இருக்கிறது. மலையாளிகள், இங்குள்ள கத்தாரிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தனியாக கம்பெனி ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுவும் அது போல ஒரு நிறுவனம். எங்களுக்குப் புதிதாய் ஒரு காண்ட்ரெக்ட் கிடைத்திருக்கிறது. அமெரிக்கா, ஈராக் மேல் போர் தொடுக்கப் போகிறதாம், கனடாக்காரர்களுக்கு இந்த நிலைப்பாட்டில் உடன்பாடில்லையாம். கனடா ராணுவத்தைப் பெட்டிப்படுக்கையோடு ஏற்றுமதி செய்து அமெரிக்கா ராணுவத்தைக் கத்தாரில் இறக்குமதி செய்ய வேண்டும்.
தமிழென்றால் நானும் ஈழத்துத் தம்பி ஒருவன் மட்டும்தான். புலிகள் எப்படியும் இலங்கையில் ஈழத்தை உருவாக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்வைக் கடத்துகிறான் இந்த ஈழத்துத் தம்பி. தமிழகத்தின் திராவிட அரசியல் வியாதிகள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறான், அய்யோ பாவம் போலிருக்கிறது.
அண்மையில் நண்பர் ஒருவர் அழைத்ததால் அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்த அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நாலாவது மாடியிலிருக்கிறதே லிஃப்ட்டில் செல்லலாமெனப் போனால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த அரபிக் குழந்தைகள் எங்கள் மீது எச்சில் துப்பி விளையாடுகிறார்கள், பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு முறை இப்படித்தான் காலையில் கார் வரத் தாமதமானதால் பக்கத்திலிருந்த கட்டிடத்தின் வாசலில் அமர்ந்துவிட்டோம். கட்டிடத்தின் உள்ளிருந்து காச் மூச்சென சத்தம் வருகிறதே என எட்டிப் பார்த்தால் கருப்பாய் நெடுநெடுவென ஒரு சூடன்காரன், புரியாத மொழியில் திட்டியபடியே எங்களை அடிப்பதற்காய் ஓடி வருகிறான்.
நிலமையைப் புரிந்துகொண்ட மலையாளி நண்பர் எங்களை அந்தப் படிகளிலிருந்து எழுந்து விடச் சொன்னார். பரிதாபமாய் எழுந்து விலகி நின்றோம். கருப்பர்களும் தீண்டாமை பார்க்கிறார்கள் ஆனந்தி. அதற்கு மேல் அங்கு நின்றிருந்தால் சூடான்காரப் பெண்களை வைத்து எங்கள் மீது வழக்கு போட்டு விடுவார்களாம். அப்படிக் குற்றம் சுமத்திவிட்டால் எங்கள் கதி அதோ கதிதானாம். ஜனத் தொகையில் பார்த்தால் இந்தியர்கள் கத்தாரில் அதிகம், ஆனாலும் அடிமை வாழ்க்கை.
அலுவலகத்தில் கார் வாங்க வற்புறுத்துகிறார்கள், லோணும் தந்து கார் அலவன்ஸும் தருவார்களாம். யாருக்கு வேண்டும் இந்தக் காரும் பவுசும். நம்ம ஊரைப் போல, இங்கு கார் ஓட்டுவதும் அத்தனை எளிதில்லை. சட்டம் எல்லாமே இங்கே தலை கீழ். வலது கைப் பக்கமே அமர்ந்து ஓட்டிப் பழகிய நமக்கு இடது கைப் பழக்கம் அத்தனை எளிதில் வந்துவிடாது. தலைகுத்தர நின்று லைசென்ஸ் எடுத்து விட்டாலும் பெண்டாட்டி, பிள்ளைகளையும், அய்யா, ஆத்தாவையுமா காரில் ஏற்றிக்கொண்டு போக முடியும். கார் வைத்திருப்பவனெல்லாம் கூப்பாடு போடுகிறான். ஃபயின் கட்டுவதற்கே சம்பளம் பத்தவில்லையாம். இந்த ஊரைப் பார்க்கும்போது நம்ம ஊர் தேரிக்காடு எவ்வளவோ மேல். கடற்கரையா, வயல்வெளியா, வனாந்திரமா, மலைப் பிரதேசமா நம்ம ஊர் சொர்க்கம் ஆனந்தி. மலையாளிகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, எப்படித்தான் இத்தனை அழகான தேசத்தை விட்டுவிட்டு வந்து இப்படி வேணா வெயிலில் கிடந்து மாய்கிறார்களோ தெரியவில்லை. வாழ்ற காலத்த வாழ்க்கைய இந்தப் பாலைவனத்துல தொலைச்சிட்டு, நோய்நொடியோட தன்னோட அந்திம காலத்துல ஊர் வந்து சேருறாங்க.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் எம் நாடேன்னு பாடத் தோணுது ஆனந்தி. படுத்தா, பாண்டி பஜாரிலும், ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும், வண்ணாரப் பேட்டையிலும், மெரினாவிலும் நடந்து திரிவது போல் கனவுகள் வருகிறது. ஆனால் இத்தனை வலியும், அவமானமும் மாதச் சம்பளத்தை முழுதாய்ப் பார்த்தவுடன் சிட்டாய்ப் பறந்துவிடுகிறது.
அங்கு வெளிநாடு போக வேண்டுமென்று பாவம் கனவுகளோடு அலைகிறார்கள், இங்கு வந்து பார்த்தால் நம்ம ஊர் நிழலின் அருமை புரியும். எங்கு பார்த்தாலும் சுட்டெரிக்கும் சூரியனும், சுடுமணலும். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பழுப்பான மண். நம்ம ஊர் வேலிகளில் படர்ந்திருக்கும் கள்ளிச்செடிக்கு இங்கு சீரியல் பல்பெல்லாம் போட்டு அலங்காரம், விட்டால் பொட்டு வைத்து பூவும் வைத்துவிடுவார்கள் போல் தெரிகிறது. வானுயர கட்டிடங்கள் கட்டுகிறார்கள் கீழிருந்து பார்த்தால் எறும்பாய்த் தெரிகிறார்கள் மனிதர்கள். கஷ்டமான வேலைகளைப் பெரும்பாலும் தமிழர்களே செய்கிறார்கள். என் போல் கடன் சுமை அழுத்துவதால் இங்கு வந்திருப்பார்களென்று நினைக்கிறேன். எப்போதும் மனதில் இனம் புரியாத பாரம் அழுத்திக் கொண்டே இருக்கிறது. என்ன பெரிய வேலையாய் இருந்தாலும் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். அது என்னவோ கொத்தடிமையாய் மாட்டிக் கொண்ட உணர்வு. செய்தி பார்த்தேன், அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாராமே! அரசியல், ஆனாலும் இதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும்.
அவ்வப்போது அய்யாவை உன்னை வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறேன். பணம் தருவார்கள், வாங்கிக்கொள். சத்தான உணவாகச் சாப்பிடு, காரணம் நீ உனக்காக மட்டும் சாப்பிடவில்லை, உன் வயிற்றிலிருக்கும் நம் குழந்தைக் காகவும் அதன் நலனுக்காகவும் சாப்பிடுகிறாய். எப்போதும் சந்தோசமாக இரு. நீ இருப்பது உன் அக்கா வீடாக இருந்தாலும் முன்பு போல் இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்யாதே.
அமுதன் தாலி கட்டிய மனைவி நீ, யார் வீட்டிலும் பத்து பாத்திரம் கழுவுவதற்காக நான் உன்னை அங்கு விட்டு வரவில்லை . ஏதோ நேரம் நம்மை பிரித்திருக்கிறது.
அன்புடன் தோகாவிலிருந்து உன் கணவன்,
அமுதன்
25 ஜூலை 2002
நன்றி : ஜோ டி குரூஸ், காக்கை பதிப்பகம், தமிழ்நேசன்
*
தொடர்புடைய ஒரு சுட்டி :
ஆழி சூழ் உலகு
ReplyDelete