Sunday, January 5, 2020

ஸ்ரீதர் நாராயணனின் கதைநுட்பம் - இரா.முருகன்

சகோதரர் ஸ்ரீதர் நாராயணின் முதல் சிறுகதை தொகுப்பான 'கத்திக்காரன்' நூலுக்கு நண்பர் இரா. முருகன் எழுதிய முன்னுரையைப் பகிர்கிறேன்.
***

எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதி நாவலில்  கிட்டாது. காலமும், களமும், கருப்பொருளும் நடையும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்திருந்தால், வாசிப்பனுபவம் எந்தக் குறையுமின்றிப் பிரவகிக்கும். ஸ்ரீதர் நாராயணனுக்குக் கைவந்த கலையாகச் சிறுகதை ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகிக்கிறது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பு பற்றி அவர் சொல்வது – ”யதார்த்த நிகழ்வுகளை, உண்மையான மனிதர்களை, அவ்வப்போது பெறப்பட்ட அனுபவங்களை, வெவ்வேறு நகரங்களின் துண்டுகளை ஒரு கற்பனைத் தளத்தில் பொருத்தி வைத்துப் பார்க்கும் முயற்சிதான் இந்த புனைவுகள். அந்த கற்பனைக்கு களம்தான் ஜேஸ்டன்வில் எனும், ஒரு சராசரி அமெரிக்க நகரம்”.

கதாசிரியர் கதையினூடே சித்தரிக்கும் அழகான ஜேஸ்டன்வில் இது –
’மலைச்சரிவிடையே, அடர்ந்த புல்வெளிகளும் தடித்த பைன் மரங்களும், மேபிள் மரங்களும் நிறைந்த குடியிருப்பு... புஸுபுஸுவென வாலுடன் ஓடும் அணிற்பிள்ளைகளும், குதித்தோடும் முயல்களும், முகமூடிக் கொள்ளைக்காரன் போன்ற ராகூன்களும், மினுமினுக்கும் கண்களுடைய பூனைகளுமாய் பம்மிய வயிற்றுடன் ஏரியை விட்டு வெளியே வந்து உலாத்தும் வாத்துகளுமாகப் பார்க்க ரம்மியமான சூழல்’.

பெரும்பாலும் ஜேஸ்டன்வில் புனைவு நகரில் நிகழும் இந்தக் கதைகளை ஒற்றை இருப்பில் வாசித்தேன். எங்கும் கதையாடல் உறுத்தாமல், குரலை உயர்த்தாமல், கரிசனம் தென்படக் கதை சொல்லிப் போகிறார் ஸ்ரீதர்.
ஒவ்வொன்றும் நேர்த்தியான கதை நெசவு.

வீடியோ ப்ளேயர்கள் எங்கணும் பரவியிருந்த 1980-களில் ‘தேன் நிலவு’ தமிழ்த் திரைப்படத்தின் வீடியோ கேசட்டை தொடர்ந்து ஓடவிட்டுப் படம் பார்த்தபடி இருந்த ரசிகரின் கதையை ‘திரும்பத் திரும்பத் தேன்நிலவு’ என்ற பெயரில் என் நண்பர் கோரி எழுதியிருந்தார்.  சாமானிய ஆளுமைகளில் சட்டென்று எழும் இது போன்ற வேட்கைகள் மனதின் ஆழத்தில் படிந்த ஏதோ நிறைவேறாத ஆசையை மறைமுகமாகத் தணித்துக் கொள்ள ஆழ்மனம் எடுக்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடும். இந்த வகையில் வருவது ஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன் கதை’. இப்புனைவில், சர்க்கஸ் பார்க்கப் போகிறார் கதைசொல்லி. அங்கே  கத்திகளை வீசி முன்நோக்கி எறியும் ஆணும் அவை ஒன்று கூட மேலே படாமல் தினம் அந்த அபாயத்தின் முனையில் செத்துச் செத்துப் பிழைக்கும் பெண்ணும் கதைசொல்லியின் கவனத்தில் வருகிறார்கள். இந்த ஈர்ப்பு கத்தி வீசும் காட்சியைக் காணத்  தினமும் சர்க்கஸுக்கு அவனைச் செலுத்துகிறது. அப்பெண்  தினசரி தன்னை உயிர்பிழைக்க வைப்பவன் என்று அந்த ஆண்மகன் மேல், கடவுள் மேல் வைப்பது போல் நம்பிக்கை வைத்திருப்பது புலனாகிறது. கத்தியெறியும், நடமாடும் இறைவன் தகுதி பெற அவன் எறியும் கையில் கட்டை விரலையே இழந்தவன் என்று தெரிய, கதைசொல்லிக்குத் தொடர்ந்து இருந்த பிரமிப்பு நீங்குகிறது. அவன் வியப்பும் ஊனமடைந்து சிதைகிறது. நுட்பமான மனித மனத்தின் விழைவுகளையும் அபாயத்தை யாரோ சந்திக்க அக்காட்சியில் தன்னை இழந்து லகரியோடு ஈடுபடுவதின் அத்துகளையும் பற்றிக் கலைநயத்தோடு கதைக்கிறார் ஸ்ரீதர் நாராயணன் இக்கதையில்.

ஒழுங்கின்மை இல்லாத உலகத்தின் போக்கிலிருந்து சற்றேனும் விலகிச் சிந்தனையிலும் செயலிலும் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க அங்கங்கே சிலராவது எல்லாக் காலங்களிலும் முயல்கிறார்கள். அந்த தேவதைகள் பாடிப் பரவித் துதிக்கப்பட வேண்டியவர்கள். எனில், அவர்கள் அளிக்கும் பரிசுகள் நம்மை களிப்பேருவகையோடு கொண்டாட வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், சிபாரிசு செய்யப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மெல்லப் புறம் தள்ளி நமக்கு எளிதாகத் தோன்றும் வழியில் கடந்து போகவும் நாம் தயங்குவதில்லை. ‘முயல் காதுகள்’ கதையில், ஷூ லேஸ்களை முயல் காதுகள் போல் அழகான தோன்றும்படி கட்ட ஒரு சின்னஞ் சிறுவனுக்குக் கற்பிக்கிறாள் மூதாட்டி ஒருத்தி. அழகுணர்ச்சியின் பாற்பட்ட அறிவுக் கொடை அவள் ஈந்து போவது. எனில், சதா அவிழும் ஷூ லேஸ்கள் தொந்தரவு தரக் கூடியவை. சிறுவனின் தந்தை அழகுணர்ச்சியற்ற ஷூ லேஸ் பிரம்ம முடிச்சு மூலம் அவற்றை அவிழாது செய்கிறான். ஒழுங்கு குறித்த படிமமாகின்றன ஷூ லேஸ்கள். ஜேம்ஸ் ஜாய்சின் டப்ளினர்  சிறுகதை போல் நுணுக்கமாகக் காட்சிச் சித்தரிப்பையும் அர்த்தம் நிறைந்த இடைவரிகளையும் தந்து போகிறார் ஸ்ரீதர் நாராயணன்.

’வானவில்’ மனதைத் தொடும் கதை. அமெரிக்கத் தமிழர்கள் சந்திக்கும் கலாசார இடைவெளி சார்ந்த அதிர்ச்சி குறித்த கதை இது.  தங்களுடைய சிறுமியான மகள் பயிலும் பள்ளியிலிருந்து, ’உடனே சந்திக்கவும்’ என்று அஞ்சல் வர, அங்கே விரையும் தம்பதியிடம், ‘உங்கள் மகளும், அவளுடைய வகுப்புத் தோழனும் ஆபாசமான இணையத் தளத்தை மொபைல் தொலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்’ என்று கரிசனமான புகாரைப் பள்ளி முன்வைக்கிறது. அந்தப் பெண்ணும், பையனும் வகுப்பறைப் பயிற்சி ஒன்றுக்காக இணையத்தில் தகவல் சேகரிக்கும்போது திரையில் வந்த கீழ்த்தரமான வெப்சைட்டை அவர்கள் எந்த மனச் சலனமும் இன்றி சாதாரணமாகப் புறக்கணித்துக் கடந்து போனது மகள் மூலம் தெரியவர, பெற்றோர் அவளுக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள். அடுத்த தலைமுறை மேல் நம்பிக்கையை அழுத்தமாகச் சொல்லும் கதை இது.

ஸ்ரீதர் நாராயணனின் கதைநுட்பம் ‘பாரதி என்னும் பற்றுக்கோடு’ கதையில் முழுமையாக வெளிப்படுகிறது. இது பாரதி அன்பரைப் பற்றிய கதை. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் பாரதி அன்பருக்கு அடியாரான, பாரதி என்று பேச ஆரம்பித்தால் தனித் தியான நிலைக்குச் சென்று விடக்கூடிய  அன்பரைப் பற்றிய கதை.  அமெரிக்காவில் அல் க்வய்தா பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காலை நேரத்தில் தொடங்கும் கதையில் அமெரிக்காவுக்கு அலுவலகப் பணி நிமித்தம் போயிருக்கும் கதைசொல்லிக்கு தமிழ்நாட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது.
“அங்கே சிகாகோவில் பாரதி கவிதைகளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு, ’அக்னி அண்ட் அதர் போயம்ஸ்’ நூலின் பிரதி, ஆராய்ச்சி மையத்தில் இருக்கிறதா என்று தேடி, வரும்போது வாங்கிக் கொண்டு வா”.
 உலகமே தீவிரவாதம் விளைவித்த நாசத்தில் விசனம் கொண்டு நிற்க, இங்கே பழைய புத்தகத்தைக் கேட்டு விடாப்பிடியாகத் தொடர்கிறான், பாரதி அறிஞரின் அந்த அணுக்கத் தொண்டன். சுவாரசியமான கதைக்கு ஊடாக பாரதியாரின் செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கடத்தி விடப்பட்டு கதைச் சிறப்புக்கு மேம்பொடி தூவுகின்றன.

இந்தக் கதைகளில் தட்டுப்படும் மனிதர்கள் சுவாரசியமானவர்கள். சம்பவங்கள் அலாதியானவை. விவரணைகள் பிரமிக்க வைப்பவை. சதுரங்கத்தில் ரய் லூபஸ்  ஓபனிங், மானாமதுரை விஸ்வநாதய்யர் என்ற பாரதியின் தம்பி, பாரதி இறந்த பின் அபரக் கிரியைகள் செய்யப்பட்ட பத்தாம் தினமான  ‘பத்து’ அன்று மதுரைக்கு வந்திருந்த மகாத்மா ’ஏழை விவசாயியைப் போல, இனி நான் உடை உடுப்பேன்’ என்று ஏற்படுத்திக் கொண்ட ஆடை சார்ந்த பெரும்  மாற்றம்,  அசெட் மேனேஜ்மெண்ட் பேட்ச் சில சில்லறை செண்ட்கள் டாலி ஆகாததால் நாளிறுதி கம்ப்யூட்டர் நடவடிக்கைகள் ஓட முடியாமல் நிற்பது,   அமெரிக்க எலி ஓடாமல் செய்த ஏசி கம்ப்ரஸர், எந்தவித வித்தியாசமும் தெரியாதவண்ணம் நூறோடு நூற்றியொன்றாக நிற்கும், ஒருகாலத்தில் அறிவியல் மேதை ஐன்ஸ்டின் வாழ்ந்த வீடு,  இந்திய இளைஞருக்கு தவறுதலாக அதிகப் பணம் தரும் கண்பார்வை குறைந்த வங்கிக் காசாளார் என்று ஆளுமைகளும் நிகழ்வுகளுமாக விரையும் கதையோட்டம் ரசிக்க வைக்கிறது.  

புலம் பெயர்ந்த இலக்கியம், நோஸ்டால்ஜியா சுழலிலிருந்து விடுபட்டுப் புகுந்த இடத்தில் மையம் கொள்வதை இந்தக் கதைகளில் ஈர்ப்போடு கவனிக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் ஒரு கதையும் சோடை போகவில்லை. ஒவ்வொரு கதைக்கும் தகவல், களம், நடை என்று உழைத்திருக்கிறார் ஆசிரியர்.  நான் என் கதைகளில் விரும்பிச் செய்வது அது. அவர் இனி வரும் படைப்புகளிலும் வெற்றி பெற்றுப் புதிய உயரங்களைத் தொட்டுத் தொடர வாழ்த்துகிறேன்.

இரா.முருகன்
நவம்பர் 25, 2019

**

No comments:

Post a Comment