வண்ணநிலவனின் கவிதையான ’எதையேனும் சார்ந்திரு’வைப் போன்று
பாஸ்கரன் பொதுவல் சார்ந்திருப்பது தன் பிடிவாதத்தின் மேல். நவீன ரக விஞ்ஞான
உபயோகங்களின் மேல் ஆர்வங்கொள்ளாதவர். வயதேற ஏற தன்னால் இறுக்கமாகவும்,
உறுதியாகவும் இருக்க முடியுமென்று நம்புபவர்.
படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தும், தந்தையை பார்த்துக்கொள்ள
சரியான ஆள் கிடைக்காததால் வீட்டிலேயே சுற்றி வரும் சுப்பிரமணியன்
நண்பர்களின் கேலி மற்றும் தூண்டுதலால் ரஷ்யாவிற்கு வேலைக்கு செல்கிறார்.
வீட்டில் தங்கி பாஸ்கரனைப் பார்த்துக்கொள்ள வரும் செவிலியர்களும்,
பாஸ்கரனின் செயல்களால் உடன்பட இயலாமையால், தனிமை பாஸ்கரனை தாக்குகிறது.
ஆனாலும் அவரது பிடிவாதம் தனிமையைத் தாங்குகிறது.
தனியே சிரமப்படும் தந்தையின் உதவிக்காக தான் பணிபுரியும்
நிறுவனத்தில் இருக்கும் அதி நவீன ரோபோ ஒன்றை தந்தையின் துணைக்குத்
தருகின்றார் சுப்பிரமணியம். நவீன விஞ்ஞான உலகுடன் ஒத்துவராது சிரமப்படும்
பாஸ்கரனுக்கும் ரோபோவிற்கும் இடையே உருவாகும் பிணைப்பும், பிணைப்பு முற்றி
அதன் மேல் பாஸ்கரன் பித்துக்கொள்வதும் அதன் முடிவுமாய் நிறைவுகிறது
இத்திரைப்படம்.
வயதானவர்கள் பெரும்பாலும் தங்கள் கால்களை வலிக்கு
நீவிக்கொண்டு அதனுடன் பேசிக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதிக தூரம்
நடந்துவிட இயலாத நீளவாக்கில் வெம்பிய பழமாய் சுருக்கங்களைக் கொண்ட
தோல்களுடைய கால்கள். வயதானவர்களின் அற்புதமான துணை அவர்களின் கால்கள்
அன்றி வேறேது? அதனாலேயே படுக்கையில் வீழ்ந்து கிடத்தலை மறுதலிப்பவர்களாக
உள்ளனர். அவர்களின் கோபம் கால்களின் மேல் திரும்புகிறது. பாஸ்கரனும்
அப்படியே. தனியே இருப்பதாலேயே எல்லாவற்றையும் தன்னால் செய்துவிட
முடியுமென்று நம்புபவராக இருக்கிறார். அந்த நம்பிக்கையே அவரது வாழ்வை
நகர்த்தும் காரணியாகவும், மற்றவர்களின் முன் வீண் பிடிவாதக்காரராகவும்
முன்நிறுத்துகின்றன.
ஆண்ட்ராய்ட் ரோபோ பாஸ்கரனின் தனிமைக்கு நல்ல துணையாக
இருக்கிறது. பாஸ்கரன் பேசுவதைக் கேட்கிறது. இளமையில் விரும்பிய பெண்ணுடன்
ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்படுத்தி தருகிறது. ரோபோட் தனக்கு விதிக்கப்பட்ட
எல்லைகளை மீறாமல் தனக்குரிய அம்சத்துடன் இருக்கிறது. படத்தின் துவக்கத்தில்
காட்டப்படும், பாதுகாப்பு என்ற அம்சத்தில் குறிப்பிட்ட செயலி தவறாக
உபயோகப்படுத்தப்பட்டு பெரியவரின் உயிருக்கு ஏதும் கேடு விளைவிக்குமோ என்ற
அச்சம் அவ்வப்போது எழுந்து அடங்கியது.
இறுதியில் மகனைவிட அதிகமாக நேசிப்பை கைக்கொள்ளும் பாஸ்கரனின்
குஞ்சப்பன் என்ற பெயர் கொண்ட ரோபோவின் மீதான பிரியத்தை எதனுடன்
வரையறுப்பது. சிறு குழந்தை கை கொண்ட துண்டின் முனையாகவா? மற்றவர்களுடன்
பகிர மறுக்கும் பிடித்த பொம்மையாகவா? வயதானால் குழந்தை போலாகிவிடும்
மனதென்பதால் ரோபோவுடன் ஊர் நீங்க விரும்புகிறானா? உடைந்த பொம்மைக்காக அழும்
குழந்தையாக இருக்கிறதா அந்த அழுகை! தனது விருப்பம் நொறுங்குவதைக் கண்டு
மனம் நொறுங்கிய பாஸ்கரனின் அழுகை இத்தனைக் காலம் தான் கொண்டாடிக்
கொண்டிருந்த பிடிவாதம்தானோ!
*
நன்றி : சென்ஷி
Nice write up சென்ஷி மச்சான்.
ReplyDeleteஆபீதீன் & ஆசிப் அண்ணன் அவர்களுக்கு சலாம்.
தளபதி முஸ்தபா
அலைக்கும் ஸலாம். ஃபேஸ்புக் வாங்க தம்பி. நம்ம G+ நண்பர்கள் எல்லாம் அங்கேதான் இருக்காங்க.
Delete