*
பயணங்கள்
ஒரு பயணம் நட்புகளையும் உறவுகளையும் வலுவாக்கக்கூடும். சில நட்புகளையும் உறவுகளையும் விலக்கிவிடக்கூடும்.
சில இறப்புகளையும், சில விபத்துகளையும், சில இணைப்புகளையும் சில பிறப்புகளையும் அறிமுகம் செய்யக்கூடும்.
ரயிலில் ஏறும்போது உங்களோடு முட்டி மோதிய அதே நபர் பயணத்தின் இடையில் இட்டிலியோ பிஸ்கட்டோ உங்களோடு பகிரக்கூடும்.
அறிமுகமில்லாத ஊரில் வழிகேட்டபோது நிதானமாக உங்களுக்கு வழிகாட்டிய நபர், பேருந்தில் உங்களுக்கு அமர்வதற்கு இடம்தர மனமின்றி சற்றே அசைந்து கொடுத்த அதேநபராக இருக்கக்கூடும்.
பேருந்து நிறுத்தத்தில் பொம்மை ஸ்டிக்கர் பட்டையை விற்றுக்கொண்டு வந்த சிறுமியிடம் உங்கள் மகளின் ஜாடை இருக்கக்கூடும்.
ஊர்க் குப்பைகளை எல்லாம் சாக்குப்பைக்குள் அடக்கிக்கொண்டு சடைமுடியுடன் திரியும் பைத்தியம் உங்கள் ஊரில் திரியும் பைத்தியத்தை நினைவூட்டக்கூடும்.
சில்லறை தராததற்காகக் கடிந்து முகம் கோணிய அதே கண்டக்டர்தான் உங்கள் பெட்டிகளை இறக்குவதில் உதவியவராக இருக்கக்கூடும்.
முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவரின் தலைமுடி பாணி உங்களுக்கு அறிமுகமான எவரையோ நினைவூட்டி அடிக்கடி அவரைப் பார்க்கச்செய்யக்கூடும்.
சன்னல்வழி நுழைந்து முகத்தில் படபடவென அறையும் காற்று முன்னர் என்றோ நீங்கள் வெளிவிட்ட மூச்சுக் காற்றாகவும் இருக்கக்கூடும்.
வாசிக்க எடுத்துச்சென்ற புத்தகம் சில பக்கங்கள்கூடப் புரட்டப்படாதிருக்கக்கூடும், பார்க்க எண்ணிய திரைப்படம் தவறிப்போகக்கூடும்.
எல்லாப் பேருந்துகளும் நிரம்பி வழிகிறதே, இத்தனை ஜனங்களும் எங்கேதான் போவார்களோ என உங்கள் மனதில் எழுந்த கேள்வியே மற்றவர்களின் மனதிலும் இருக்கக்கூடும்.
சிலருக்கு பயணங்களின் நோக்கம் இலக்கை அடைவதாக இருக்கவும், வேறு சிலருக்கு பயணங்களே இலக்காகவும் இருக்கக்கூடும்.
*
நன்றி : ‘புதியவன்’ ஷாஜஹான் | http://www.facebook.com/shahjahanr
நிதர்சனமான வரிகள்.அருமை.
ReplyDelete