Thursday, May 10, 2018

நான் பட்ட பாடு - மஜீத்

எங்கே சென்டர் போட்டா என்ன... படிக்கிற பசங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமான்னு பேசற குரூப்பு எதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். சனியனுக கெடக்கட்டும். ஒரு காலத்துல பேஸ்புக்குலயே கிடந்த மஜீத் , கூகுள் ப்ளஸ்ல இந்தப் பதிவைப் போட்டிருந்தார். படிச்சுப் பாருங்க. - முகநூலில் ஷாஜஹான் 
*

நீட் படுத்தும் பாடு
கிருஷ்ணசாமி மரணம்
இதெல்லாம் இப்பதான் எல்லாருக்கும் தெரியுது

நான் பட்ட பாடு 
இன்னும் என்னென்னவோ உங்களுக்கு புரியவைக்கும்..
கிருஷ்ணசாமியோட மரணம் என்னை எவ்வளவு பாதிச்சிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க....

2008

சின்னமகன் +2 முடிச்சவொடனே ஃப்ரெண்ட்ஸ்லாம் சேந்து, முடிஞ்சவரைக்கும் எல்லா மெடிகல் காலேஜ், ஆல்இண்டியா கோட்டா, என்ஆர்ஐ கோட்டா எல்லாத்துக்கும் அப்ளை பண்ணிருந்தானுக... (அதுல முக்கியமா ஆல் இண்டியா கோட்டாங்கிறது, எல்லா மாநிலத்துல இருக்குற அரசு மெடிக்கல் காலேஜ்லயும் இருக்குற மொத்த சீட்ல 10% மத்திய அரசுக்கு தந்துரனும். அதுக்கு ஆல் இண்டியா மெடிகல் கவுன்சில் எக்ஸாம் வைக்கும். தமிழ்நாட்ல வடமாநில மாணவர்கள் படிக்கிறது இப்டிதான். இதுக்கு எக்ஸாம் சென்டர் நம்ம பையங்களுக்கு சென்னைலகூட தரமாட்டாங்க.. சீட் கெடச்சாலும் டெல்லி, சிக்கிம்னு தருவானுக... ஆனா பரிச்சை மட்டும் வேற மாநிலத்துல எழுதனும்.. அவனுகளுக்கு மட்டும் அவங்க ஊர்லயே எழுதிருக்கிறலாம்)

விஷயத்துக்கு வர்றேன்.. மகனுக்கு பெங்களுர்ல செண்டர் போட்ருந்தாய்ங்க...

சரியா எக்ஸாம் சமயத்துல காவிரிப் பிரச்னை, கலவரம், தமிழர்களை தாக்குறதுன்னு இருந்துச்சு நெலவரம்.. பயந்து நானும் கெளம்பிட்டேன் கூட்டிக்கிட்டு.. மொதநாளே ட்ரெய்ன்ல போய் ஹோட்டல்ல தங்கி, எக்ஸாம் சென்டர் எங்க இருக்குன்னு விசாரிச்சு, 40 நிமிசத்துல போய்ரலாம்னு தெரிஞ்சுக்கிட்டு, அடுத்தநாள் ஒரு ஆட்டோல (டாக்ஸி லேட்டாகும், ஆட்டோலதான் ட்ராஃபிக்கா இருந்தாலும் சீக்கிரமா போகமுடியும்னு உள்ளூர்க்காரர்கள் ஐடியா. 9:30க்கு எக்ஸாம். 9மணிக்கு கேட் க்ளோஸ்.) 7 மணிக்கு கெளம்பினோம். ஆட்டோ ட்ரைவரும் அந்த ஸ்கூல் தெரியும்னு சொன்னாரு. 7:50க்கு போய் சேந்தோம்.

இறங்குனவொடனே பாத்தா காம்பவுண்டுக்கு வெளியெ மரத்தடிகள்ல புள்ளைங்க, பெத்தவங்க கூட்டம்.. ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டதுல ஒரு உள்ளூர்க்காரர் ஹால்டிக்கெட்டை வாங்கிப் பாத்துட்டு, உங்க செண்டர் இந்த ஸ்கூல் இல்லைன்னு சொன்னாரு.. பதறிட்டோம்.. ஸ்கூல் பேரெல்லாம் சரியா இருந்துச்சு, கடேசி வார்த்தை ஏரியா பேராம். அந்த ஏரியா சிட்டியோட அடுத்த மூலைல இருக்காம். அப்டியே ப்ளாங்க் ஆயிட்டேன். அங்க போய்ச்சேரமுடியுமான்னு விசாரிச்சா சிரமம், 1 மணி நேரத்துக்கு குறையாம ஆகும்.. ட்ராஃபிக் இருந்தா முடியாதுன்னாங்க.. அந்த நேரத்துல கார்ல வந்து மகனை இறக்கிவிட்டுட்டு கெளம்புனவரு, ஒரு செகண்டு நின்னு விசயத்தைக் கேட்டுட்டு, உங்களுக்கு நெறைய சான்ஸ் இருக்கு. கெளம்புங்கன்னு சொன்னாரு... காரு சரியா வராது, ஆட்டோதான் வசதி, எங்கூட வாங்க ஆட்டோல ஏத்திவிடுறேன்னு சொல்லிட்டு, 5 நிமிசத்துல ஆட்டோக்காரர்ட்ட விசயத்தை சொல்லி ஏத்திவிட்டார். அந்த 5 நிமிசத்துலயும், நான் நேரா அங்கெ கொண்டுபோய்விட்டா, நிச்சயம் டயத்துக்கு போகமுடியாது ஆட்டோதான் நல்லதுன்னு சமாதானம் சொன்னார்.

சொன்னதுமாதிரியே ஆட்டோக்காரர் ஒவ்வொரு சிக்னல்லயும் நொழஞ்சு நொழஞ்சு போய் மொத ஆளா நின்னு, போய்க்கிட்டே இருந்தாரு. காரா இருந்திருந்தா கொறைஞ்சது முக்கால் மணிநேரம் கூடுதலாயிருக்கும்.. சரியா 9 மணிக்கு போய் சேந்தோம்.. சின்ன கேட்டை அப்பதான் பூட்டிட்டுப் போனாங்களாம்.. தூரத்துல, சுமாரா 500மீட்டராச்சும் இருக்கும், ஹாலுக்குள்ள புள்ளைங்க போய்க்கிட்ருந்தது தெரிஞ்சிச்சு.
என்னோட குறுக்குபுத்தி வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு.. கதவுப்பக்கம் லைட்டா நோட்டம் விட்டேன்.. சும்மா கொண்டிதான் மாட்டிருந்தாய்ங்கெ.. நமக்குதான் கை நீளமா, உள்ளவிட்டு தொறந்துட்டு, நீ போ, கேட்டா கதவு சும்மாதான் சாத்திருந்துச்சு தள்ளிவிட்டுட்டு வந்தேன்னு சொல்லச்சொல்லி அனுப்பிவிட்டேன்.. (இல்லைனா கடேசி முயற்சியா கேட்ல ஏறிக்குதிக்க ஒரு ப்ளான் பி யும் வச்சிருந்தேன்) அவனும் ஒரே ஓட்டமா ஓடி சேந்தான்... உள்ள விட்டுட்டாய்ங்கெ. அவன் உள்ளபோன அடுத்த நிமிசம் ஒரு பியூன் ஒரு பெரிய பூட்டோட ஓடியாந்து, நான் சும்மா சாத்திவச்ச கதவை பூட்டிட்டுப் போனாரு.

இப்பதான் முக்கியமான எபிசோடு ஆரம்பிச்சிச்சு..

இறங்கும்போதே ஆட்டோக்காரர்ட்ட கொஞ்சம் இருங்க போகவேணாம், பணம்வந்து தர்றேன், ஹோட்டலுக்கு போகவேண்டிவந்தாலும் வரும்னு சொன்னேன் அவரும் சரின்னு வெய்ட் பண்ணாரு.. என்னோட களேபரத்தை பத்தி கவலைப்படாம, நான் கம்பிநீட்டிருவனோன்னு சந்தேகப்படாம, கண்ணைமூடிக்கிட்டு, தியானத்துக்குப் போய்ட்டார். இப்ப எனக்குதான் ஆட்டோ அடையாளம் தெரியலை.

நின்ன ஒவ்வொரு ஆட்டோடிரைவரையும் உத்துப்பாத்து எங்காளைக் கண்டுபுடிச்ச நொடில, எனக்கு என்னவோ பண்றமாதிரி இருந்துச்சு.. நெஞ்செல்லாம் கனமா இருந்தமாதிரி இருந்துச்சு.. கண் லேசா சொருகுச்சு..மூச்சு விட சிரமமா இருந்துச்சு...வேர்க்க ஆரம்பிச்சிருச்சு.. லைட்டா பயம் வந்துச்சு.. என்ன பண்றதுன்னு தெரியலை... ஆட்டோ டிரைவர்ட்ட விசயத்தை சொல்லி, இங்க பக்கத்துல ஏதாவது ஆஸ்பிடல் இருக்கானு கேட்டா, அவரு எனக்கு இந்த ஏரியா சுத்தமா தெரியாது, நீங்க ஏறுன இடம்தான் என் ஏரியா.. ஆனா ஒரு ரவுண்டு அடிச்சி கண்டுபுடிப்போம்னு சொன்னாரு.. ஒரு 7-8 நிமிசத்துல லெஃப்ட் சைடுல நாந்தான் கண்டுபுடிச்சேன்.. ஹாஸ்பிடல்னு போட்ருந்துச்சு.. அவரு ரைட் சைட்ல பாத்துக்கிட்டு ரோட்டையும் பாத்துக்கிட்டு ஓட்டுனாரு.. யூட்டர்ன் அடிக்கிறதுக்கே, 3 கிமீ போய்ட்டு வரவேண்டிருந்துச்சு வந்துசேந்தா, ஆஸ்பிடல் வாசலை கண்டுபுடிக்கிறதுக்கு சுத்தி சுத்தி வரவேண்டியதாப் போச்சு.. பெரிய்ய்ய்ய காம்பவுண்டு....ஆட்டோ டிரைவர்ட்ட சொன்னேன்.. நீங்க கூடவே இருங்க.. இப்ப எம்பையனையும் அவன் எக்ஸாம் எழுதுற இடத்தையும் தெரிஞ்ச ஒரே ஆள் நீங்கதான். அதனால கூடவே இருங்க.. சார்ஜ் எவ்வளவு ஆனாலும் தந்துர்றேன்னு சொன்னேன்.. சரின்னு கேட்டுக்கிட்டு வாசல்ல நின்னுக்கிட்டார்.. அப்ப எங்கிட்ட இருந்த ஃபோன் Sony S500.. wifi கிடையாது.. ஏர்டெல் டேட்டா ரோமிங் இல்லை.. லாக் இல்லை.. ஸ்லைட் பண்ணுனா ஓப்பன் ஆயிரும்.. ஒய்ஃப் நம்பரை டயல் பண்ணி, கான்டாக்ட்ல Wife னு மாத்திட்டேன்..

உள்ள யாரை விசாரிச்சேன், எப்டி போனேன்னு இப்பவரைக்கும் தெரியாது. எனக்கு நெனைப்பு இருக்குறதெல்லாம், ரெண்டு இடத்துக்கு போனேன், தொப்பலா வேர்த்து இருந்தேன், ரெண்டு டாக்டர் வந்து பாத்தாங்க, ரெண்டாவது இடம் ஒரு சின்ன அறை, ரெண்டாவது பாத்த டாக்டர் முகம் நெனப்பு இருக்கு.. சில ப்ளட் டெஸ்டு, ஒரு ஈசிஜி எல்லாம் எடுத்துப் பாத்தாரு.. என்னாச்சுன்னு கேட்டாரு.. ஒரு மணிநேரக்கதையை ஒரு நிமிசத்துல சொன்னேன்.. டோன்ட் ஒர்ரின்னு சொல்லிட்டு, ஒரு ஊசியும் போட்டுட்டு போனாரு. ரொம்பநேரம் தூங்கவேண்டிவருமா? பையன் வெளிய வந்து தேடுவான்.. நான் வேணா ஆட்டோ டிரைவரை அனுப்பிவைக்கவா? எக்சாம் முடிஞ்சதும் அவனை கூட்டிட்டு வரச்சொல்லின்னு கேக்கவும்.. மறுபடியும் டோன்ட் ஒர்ரி சொல்லிட்டு, தூக்கம்லாம் வராது.. கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க, தூக்கம் வந்தா தூங்குங்க, நான் ஒரு ஒருமணிநேரத்துல எழுப்பிவிடுறேன்.. டோன்ட் ஒர்ரின்னு மூனாவது தடவையும் சொன்னாரு

10 நிமிசத்துல திரும்பி பிளட் ரிசல்ட், ஈசிஜி யெல்லாம் எடுத்துட்டு வந்து, நத்திங் சீரியஸ்... சம் சார்ட் ஆஃப் மைனர் ஷாக், ஃபார்ச்சுனேட்லி இட் வாஸ் நாட் சோ பேட்.. நீங்க இப்பவே கூட போகலாம்.. எப்டியும் இன்னும் ஒன்றை மணிநேரம் இருக்கு எக்ஸாம் முடிய.. அதுவரைக்கும் நீங்க இங்கயே ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னபிறகுதான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு.

தேங்க்யு, வெளில ஆட்டோடிரைவர்ட்ட தகவல் சொல்லிட்டு வந்து படுத்துக்கிறலாமான்னு கேட்டதுக்கு, தாராளமான்னு சொன்னாரு..

நான் இருந்த அறை சூழ்நிலைக்கும், அந்த ஆஸ்பிடல் சைசுக்கும் சம்பந்தமே இல்லை..ஏதோ ஸ்டாஃப்ஸ்க்கு எக்ஸ்ட்ராவா இருந்த ரெஸ்ட் ரூம் மாதிரியே இருந்துச்சு.. ஆட்டோக்காரர்ட்ட இன்ஃபார்ம் பண்ணப்போய்ட்டு வர்றப்பதான் பாத்தேன், ஆஸ்பிடல் பேரு, சைசு எல்லாத்தையும்.. பையன் வெளில வர்றநேரத்துக்கு கெளம்பிட்டேன்.. டாக்டரைக் கேட்டேன்.. கூட்டிட்டு வந்தாங்க, அன்ட்டாசிட் டாப்லெட் மட்டும் எழுதித்தந்துட்டு, ஃபீஸ் எவ்ளொன்னு கேட்டேன்... சொன்னாங்க, நல்லவேளை மறுபடியும் நெஞ்சு அடைக்கலை.. வெறும் 130 ரூபாய்...... நம்பவே முடியலை... ஆர் யு ஷ்யூர் ஆர் யூ ஷ்யூர்னு ரெண்டுமூனு தரம் கேட்டுட்டு கட்டிட்டு வந்து சேந்தேன்.

வீட்ல வந்துதான் ஆஸ்பிடலை நெட்ல தேடி கண்டுபுடிச்சா, நாராயணா ஹிருதாலயா... கார்டியாலஜில ஒன் ஆஃப் த பெஸ்ட் ஹாஸ்பிடல், நெறைய ஃப்ரீ ட்ரீட்மென்ட்லாம் செய்றாங்கன்னு போட்ருந்துச்சு..

அதிர்ச்சி சின்னதா இருந்ததுக்கு டாக்டர் ஃபார்ச்சுனேட்னு சொன்னது மாதிரி, குத்துமதிப்பா நான் அங்கே, அவர்ட்ட போய் சேந்ததுக்கு நானும் இன்னொரு ஃபார்ச்சுனேட் சேத்துக்கிட்டேன்.

அது மட்டும் அன்னிக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்திருந்தா அன்னக்கி எம் பொணம் என்னபாடு பட்ருக்கும்? வெளில வந்த என் பையன் என்ன பாடு பட்ருப்பான்? குடும்பம்?? 

இந்த பதிவும் வந்திருக்காது...

இதெல்லாம் டெல்லில உக்காந்து இருக்குற சில திமிர் புடிச்ச வெறிநாய்கள் வேணும்னே செய்ற அடாவடித்தனம்.. ரொம்ப சிம்பிளா முடிக்கவேண்டிய காரியங்களை, தென்னிந்தியர்கள்னா அதுவும் மதராஸின்னா வன்மத்தோட கர்வம்கட்டி அடிக்கிதுக.. இதுல முக்கிய பங்கு குஜராத்தியான கேதான் தேசாய் (ஆமா, பெட்டுக்கடில தங்ககட்டியா புடிச்சாய்ங்கெல்ல, அந்த வெறிநாய்தான்) அன்னிக்கு இந்தியன் மெடிக்கல் கவுன்சில் சேர்மன்... மாட்டிக்கிட்டதுக்கு அப்புறமா இன்னிக்கு அதைவிட பெரிய போஸ்ட்ல.... யோக்கிய சிகாமனி மோடியின் சாதனை...

என் பையங்க ரெண்டுபேருக்கும் கட்டாஃப் மார்க் சொல்லிவச்சாப்ல 91.6%.. பெரியபையன் அன்னிக்கு (2004) தமிழ்நாடு வச்ச என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல 50%கூட வாங்கமுடியல..

அவனை உக்ரைன்ல மெடிசின் படிக்க வைச்சேன்.. சின்னவனுக்கு கட்டாஃப் பத்தலை..பாண்டிச்சேரில பிரைவேட் காலேஜ்ல படிக்க வைச்சேன்...

அரசுக்கு செலவு வைக்காம, என்னோட சம்பாத்தியத்துல படிச்ச ரெண்டுபேருமே, வெளிநாட்டுக்கு போக விரும்பலை. தமிழ்நாட்டுலயே, அரசு மருத்துவர்களா, எங்க ஏரியாவுலயே (ரூரல்) விரும்பிக்கேட்டு வேலை பாக்குறாங்க...

*

நன்றி : மஜீத்

No comments:

Post a Comment