Tuesday, April 10, 2018

சூஃபியின் மிதியடி

கவிஞர் தாஜின் எழுத்துப் பிழைகளை சும்மா கிண்டலடித்துக் கொண்டிருப்பேன். கடுப்பான அவர்,  நண்பர் சஃபி தொகுத்த 'சூஃபி கதைகள்' நூலிலிருந்து (மூலம் : இத்ரிஸ் ஷா) ஒரு பகுதியை தவறின்றி தட்டச்சு செய்து நேற்று எனக்கு அனுப்பிவிட்டார். சஃபி அவர்களே சூஃபி ஞானி ராபியத்துல் அதவியா (பஸ்ரியா) அவர்களின் பெயரை தன் நூலில் 'ராபியா எல் அடாவியா' (L !!) என்று நூலில் குறிப்பிடுகிறாரே.. அப்போ தாஜ் ஓக்கேதான்! G+ ஆசான் வாசுபாலாஜி அவர்களுக்காக அந்தப் பகுதியை இங்கே பகிர்கிறேன். கூடவே , என் பங்காக, சூஃபியின் மிதியடியையும் மிதிக்கிறேன். இயன்றால்,  எனக்குப் பிடித்த 'அறிவு எப்படிப் பெறுவது?' மற்றும் 'தண்ணீர் பழ நகரத்தின் கதை' ஆகியவற்றை பிறகு பகிர்கிறேன், இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்). நன்றி ! - AB
**

இலக்கணவாதியும் சூஃபியும்

ஒருநாள் இரவு ஒரு சூஃபி ஞானி நீரில்லாமல் வற்றிப் போய்க் கிடந்த கிணற்றைக் கடக்க நேரிட்டது. அப்போது கிணற்றனடியிலிருந்து காப்பாற்ற வேண்டி ஒரு அவலக் குரல் கேட்டது.

"என்ன விஷயம்?" என்று சூஃபி கேட்டார்.

"நான் ஒரு இலக்கணவாதி. துரதிர்ஷ்டவசமாக பாதையினைப் பற்றிய அறியாமையினால் இந்தப் பாழுங் கிணற்றடினடியில் விழுந்து விட்டேன். இப்போது அங்குமிங்கும் நகரமுடியாமல் கிடக்கிறேன்" என்று கிணற்றின் கீழிருந்து பதில் வந்தது.

"அப்படியே இருங்கள். நான் போய் கயிறும் ஏணியும் எடுத்து வருகிறேன்" என்று சொன்னார் சூஃபி.

"தயவு செய்து ஒரு நிமிடம் பொறுங்கள். உங்கள் இலக்கணமும், பேசும் முறையும் பிழையாக இருக்கிறது. அந்தப் பிழைகளைத் திருத்தும் முயற்சியில் இறங்கும் நல்லவனாக நீங்கள் இருங்கள்" என்று சொன்னார் இலக்கணவாதி.

"அது அத்தியாவசியங்களை விட மிக முக்கியமானதாகப் பட்டால், நான் சரியாகப் பேசக் கற்றுக்கொண்டு வரும் வரை நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பது சிறந்தது" என்று சூஃபி சொல்லிவிட்டு தன் வழியில் போனார்.

*
இனி மிதியடி !


சுலைமான் ஹலபி என்ற சூஃபி தனது வீட்டு நுழைவாயிலில், எப்போதும் பெரிய புத்தகத்தைப் போட்டு அதை மிதியடியாக உபயோகிப்பது வழக்கம்.

ஒரு கண்டிப்பான ஒழுக்கவாதி சுலைமானின் வழக்கத்தை அறியாமல், சுலைமான் வீட்டுக்குள் நுழைந்தவுடன் பாதை வழியில் கிடந்த புத்தகத்தைக் குனிந்து எடுக்க முற்பட்டார்.

"புத்தகம் அங்கேயே கிடக்கட்டும்" என்றார் ஹலபி.

"புத்தகங்களை இவ்வாறு அவமதிப்பது ஞானவான்களுக்கு அழகல்ல" என்று சொன்னார் ஒழுக்கவாதி.

"ஆனால் ஒருவருக்குப் பயன்படும் புத்தகம் பிறருக்கும் - அது அவருக்குத் தகுமா, இல்லையா என்று யோசிக்காமல் - பொருந்தும் என்று கற்பனை பண்ணுவது நீங்கள் சொல்வதை விடவும் அழகற்ற விஷயமாகும். அதை விடவும் மோசமான விஷயம், அறிவைக் கடத்துவதற்கு - அவை வெளியே எப்படித் தோற்றமளித்தாலும் - வேறு பல வழிகளும் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளாததாகும் " என்றார் சுலைமான்.

*

நன்றி : சஃபி, உயிர்மை, சென்ஷி

மேலும் சில சுட்டிகள் :
நம்மாளு! | தாடி வணக்கம்! | கஷ்டம்

No comments:

Post a Comment