Thursday, September 14, 2017

காட்சிகள் - ஜே.எம். சாலியின் முத்திரைக் கதை

1980-ல் ஆனந்தவிகடனில் பிரசுரமான இச்சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் பரிசைப் பெற்றது.
*

இன்றைக்கு பத்தாம் நாள் இரவு. பந்தலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

எந்நேரமானாலும் இருந்து இறுதி வரை கதையைக் கேட்டுவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற தீர்மானத்துடன் வசதியாக இடம் பிடித்து உட்கார்ந்திருந்தான் வேணுகோபால். தாமதித்து வீட்டுக்குப் போனாலும் கேட்பதற்கு ஆளில்லை. ரூபா, தாய் வீட்டுக்குப் போயிருக்கிறாள். ரகு இவனை எதிர்பார்க்கமாட்டான். இரண்டு பேரிடமும் பத்து நாட்களுக்கு முன்பே உபந்நியாசம் கேட்க 'பர்மிஷன்' வாங்கியாயிற்று

புலவர் நீலமேகம் 'சரணாகதி சாஸ்திரம்' என்ற தலைப்பில் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

'அனுமனுடைய செயல்கள் ஒப்புயர்வற்றவை. வேறு யாராலும் செய்ய முடியாதவை. இதன் காரணமாகத்தான் அனுமனை உலகம் தலைசிறந்த இராம பக்தனாகவும் இராமனுடைய தொண்டனாகவும் சேவகனாகவும் கொண்டாடுகிறது, போற்றுகிறது, புகழ்கிறது..'

நீலமேகம் மிக எடுப்பான குரலில் சொற்சித்திரம் வரைந்து அனுமனைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். வேணுகோபாலுக்கு மெய்சிலிர்க்கிறது. கதையில் ஒன்றிப் போனாலும் காட்சிகள் மாறி மாறி மனத்தில் வருகின்றன. இரட்டை ரயில் பாதையில் ஏக காலத்தில் இரண்டு வண்டிகள் ஓடுவதைப்போல எண்ணங்கள் இரண்டாகக் கிளைத்து மிதமான கதியில் ஓடுகின்றன. ஒரு பக்கம் கதை; இன்னொரு பக்கம் யதார்த்தம்.

"வேணு,,, உன்னை மாதிரி இன்னொருத்தன் எனக்கு இத்தனை விசுவாசத்தோட உதவி ஒத்தாசை செய்ய முடியாதுப்பா.. இந்த ஜன்மத்திலே உன்னைப்போல ஒருத்தனை நான் பார்க்க முடியாது!" -எத்தனை முறை திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறான் ரகு!

"அப்படியெல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்தாதீங்கோ!"

"நான் சொல்லணும் வேணு. சொல்லாம இருந்தா நான் உன்னை ஒதுக்கி வக்கிற மாதிரி ஆயிடுமோன்னு உள்ளுக்குள்ளே எனக்குப் பயம்!" என்பான் ரகு.

இரண்டு பேரும் அதிகமாகவே பேசினார்கள். அதாவது, ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு, படிப்படியாக அது குறைந்துகொண்டு வந்திருக்கிறது.  அதில் குறையோ தவறோ இல்லைதான். பரஸ்பர அன்பும் மரியாதையும் வாய் வார்த்தைகளிலும், வெளித்தோற்றத்திலுமா இருக்கின்றன? இல்லை, அடிமனத்தில்தான் இருக்கிறது என்பது போல் ஆரவாரமெல்லாம் அடங்கிவிட்டன இருவரின் உறவில்.

பத்து வருஷம் இருக்கலாம். ரகு இளம் பட்டதாரியாகப் பத்மநாபன் ஏஜென்ஸியில் பயிற்சியாளனாகச் சேர்ந்திருந்த சமயம். அப்பொழுதுதான் முதல் முறையாக ரகுவை ஏற இறங்கப் பார்த்தான் வேணுகோபால். சம வயது இருக்கும்... படிப்பு இல்லாததால் பத்மநாபனின் டிரைவராக இருந்தான் அவன். ஒரு வாரத்திற்குள் ரகுவும் வேணுவும் பழகிவிட்டார்கள். ரகு வெளியே போகிற சமயங்களில் வேணுதான் சாரதி.

"உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா.."

"என்ன வேணு? சும்மா சொல்லு!" - ரகு தூண்டினான்.

"உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. சிநேகம் வச்சிக்கிற அளவுக்குப் படிப்பு இல்லே, அந்தஸ்து இல்லே, இருந்தா நான் ஒரு நல்ல நண்பனா இருப்பேன்.."

"இப்ப மாத்திரம் என்ன வேணு? நீ எனக்கு நண்பன்தான். சிநேகத்துக்குப் படிப்பும், பணமும் தடையில்லே. சொல்லப்போனா நான் பரம ஏழை. எப்படியோ ஒரு டிகிரி மட்டும் வாங்கிட்டேன். அவ்வளவுதான்!"

“வருங்காலத்திலே இது மாதிரி ஒரு ஏஜென்ஸியில் எக்ஸிகியூடிவ் ஆகப் போறீங்க.. அது நிச்சயம்.. அப்பவும் கூட நான் டிரைவாகவேதான் இருப்பேன்.”

"இது மாதிரி காம்ப்ளெக்ஸ் இருக்கக்கூடாது வேணு. இப்பத்தான் வேலையிலே சேர்ந்திருக்கேன். எக்ஸிகியூடிவ் ஆகணுங்கிற கனவெல்லாம் இப்ப எனக்கு இல்லே. எது எப்படி ஆனாலும் சரி, நீ என்னோட சகஜமா பழகணும். நண்பனா நினைக்கணும். சரிதானே?"

சம்மதப் புன்னகை.

இரண்டு வருஷம்கூட ஆகியிருக்காது. பதற்றத்தோடு வேணுகோபாலைக் கூப்பிட்டான் ரகு.

"வேணு, இந்த பத்மநாபன்கிட்டே என்னாலே வேலை பார்க்க முடியாது. இனிமே அதுக்கு சாத்தியமில்லே.." என்றான் ரகு. படபடப்பு அடங்கவில்லை.

நெற்றியைச் சுருக்கிக் கொண்டான் வேணு.

"மிஸஸ் பத்மநாபன்?" என்று ஒரே சொல்லிலேயே கேள்வியையும் முடக்கினான்.

"ஆமாம், வேணு! பயமா இருக்கு.. ரசாபாசமா அயிடுமோன்னு..!"

சூசகமாகவே பேசிக்கொண்டார்கள். மிஸஸ் பத்மநாபனின் பலவீனம் வேணுகோபாலுக்குத் தெரியாததல்ல. 

ரகுவைப் போல் எடுப்பான பட்டதாரி இளைஞன் எதிரில் நடமாடும்போது அந்தப் பெண்மணி சபலப்படாமல் இருப்பாளா? பத்மநாபன் அவளை விட இருபது வயது பெரியவர். இது ஒரு காரணம்.

"இதுக்குப் பயந்தா எக்ஸிகியூடிவ் ஆகறது எப்படி?" என்று விஷமமாகக் கேட்டான் வேணுகோபால்.

"அநாயவசியமா நான் எதுக்குப் பழிக்கு ஆளாகணும்? இந்தப் பரீட்சையெல்லாம்ம் எனக்கு வேண்டாம்..."

சொன்னபடியே செய்துவிட்டான் ரகு. அடுத்த மாதம் வேணுகோபால் தனியனாகிவிட்டான். வேறொரு ஏஜென்சியில் சேர்ந்தபிறகுஅவனுக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தான் ரகு.

'இராமனுடைய தொண்டன், அடிமை என்பதைத் தவிர வேறு எந்தவிதமான உறவையும் இராமனோடு கொள்ளாதவன் அனுமன். அத்தகைய அனுமனை இராமன் எப்படி நடத்தினான், அவனிடம் இராமனின் மனப்போக்கு எப்படி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்."

புலவர் நீலமேகம் கம்பீரமாகக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். சரணாகதி தத்துவம் சதிராட்டம் போடுகிறது.

மறுபடியும் வேணுகோபாலின் எண்ண ஓட்டம்...

ரகுவைப் போலவே வேணுவும் பத்மநாபன் ஏஜென்ஸி வேலையை உதறிவிட்டு வேலையின்றி அலைந்து திரிந்துகொண்டிருந்த நேரத்தில் தற்செயலாக ரகுவைச் சந்தித்தபோது - 

காரிலிருந்து இறங்கிய ரகு, "என்ன பாக்கறே, வேணூ? இப்ப நான் ஒரு எக்ஸிகியூடிவ். ஏறு வண்டியில்!" என்று கையைப்பிடித்து இழுத்தான்.

பிரமிப்புக் கலையாமல் ரகுவை வெறித்துப் பார்த்தாலும் உள்ளம் தாமரையாக அகன்று விரிந்தது, பூரிப்பில்.

"இப்பவாவது உன்னைக் கண்டுபிடிச்சேனே! இனி உன்னை எங்கேயும் விடமாட்டேன்!' என்றான் ரகு. தன்னுடைய வளர்ச்சியைப் பற்றி அவனிடம் விவரித்தான். பத்மநாபனைவிட்டு வெளியேற நேர்ந்த விவரத்தை வேணுகோபால் சொன்னான்.

"இனிமே நீஎன்னோடவே இருக்கலாம்."

"டிரைவராகவா?"

"அதுக்கும் மேலே!"

"வேற எதுவும் வேண்டாம். டிரைவர் வேலை போதும்."

"சர்ச்சை எதுக்கு...? வா என்னோட..!"

வசதியான வீடு, பங்களா பாணியில். கார் ஷெட், அவுட்ஹவுஸ் வசதிகள்.

"நான் அவுட் ஹவுஸில் தங்கிக்கறேன்."

"நீ எனக்கு டிரைவர் இல்லே.."

"அதுதான் எனக்கும் கௌரவம்."

"உன் இஷ்டம். என்னமோ வித்தியாசமே நீ நெனைக்காம இருந்தா சரிதான்."

ரகுவின் பேரில் வேணுவுக்குப் பக்தி. அது என்ன பக்தி? எப்படி வந்தது? அவதார புருஷனைப் போல ரகுவை மதிக்கத் தோன்றுகிறது அவனுக்கு. முப்பது வயதுக்குள் அபாரமாக வளர்ந்து உயர்ந்துவிட்டான் என்ற பிரமிப்பினாலா?

வேணு எந்தப் பதிலையும் தேடவில்லை. அதற்கெல்லாம் அவசியம் இருப்பதாக அவன் நினைக்கவில்லை.

ரகுவை அடுத்து ரூபா...

"ரூபா! நான் சொல்லிக்கொண்டேயிருப்பேனே, அந்த வேணுகோபால்தான் இதோ, இங்கே.." என்று மனைவியிடம் அறிமுகப்படுத்தினான்.

அடக்கமாக அவளைப் பார்த்துவிட்டு ராமனுக்கேற்ற சீதை என்று உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

பத்மநாபனுக்கு அவனுக்கும் கல்யாணப் பத்திரிகை அனுப்பி வைத்ததைப் பற்றி ரகு சொன்னான். அது, தான் விலகிவிட்ட சமயம் என்பதை வேணு உணர்த்தினான்.

தொண்டனா, தோழனா என்பது புரியாமல், பேதப்படுத்திப் பார்க்க அவசியம் எதுவும் இல்லாமல், ரகுவின் வீட்டில் வேணுவும் ஒரு அங்கமாகி வருஷங்கள் ஓடிவிட்டன.

'அனுமனிடத்தில் இராமன் கொண்டிருந்த அன்பும் நன்றியும் மிகுதிப்பட, அதன் காரணமாக அனுமனை இடைவிடாது திரும்பத் திரும்ப தழுவிக் கொள்கிறான் இராமன். உதவி செய்வதற்கு உன்னையொத்தவர், நீ அல்லாமல், வேறு யார் இருக்கிறார்கள்? நீ செய்த பேருதவிக்கு உன்னைத் தழுவிக்கொள்வதைவிட நான் செய்யக்கூடிய செயல் வேறு எதுவுமில்லை என்கிறான் இராமன்..'

புலவர் நீலமேகம் கூட்டத்தைக் கட்டிப் போட்டுவிட்டார். அவர் பேச்சில் அத்தனை உருக்கம். நெகிழ்ச்சி. 

சரணாகதி தத்துவத்தைச் சாரலாகப் பொழிந்து தள்ளுகிறார்.

வேணுகோபாலின் விழிகள் கலங்கிவிட்டன. இவனுடைய உறவும் இப்படித்தானோ? வேணுவுக்கும் ரகுவுக்குமிடையே வித்தியாசம், முரண், எதுவும் தோன்றவில்லை. விந்தைதான்.

ரகுவும் ரூபாவும் ஏக குரலில் ஒருநாள் அவனை விசாரித்தார்கள்.

"வேணு! உனக்கு இப்ப என்ன வயசாச்சுன்னு நெனைக்கிறே?" - ரகுநாதன் கேட்டான்.

"அவசியமான கேள்வியா இது?"

"ஆமாம்.. இன்னும் விளையாட்டுப் பிள்ளைங்கிற நெனைப்பா?" என்று ரூபா குறுக்கிட்டாள்.

இரண்டு பேரும் என்ன பேச நினைக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது.

"உங்களோட நான் இருக்கறது பிடிக்கலேன்னு சொல்லுங்கோ..!"

உன்னோட இன்னொருத்தியும் இங்க இருக்கணும்னு ஆசைப்படுறோம் வேணு.”

“இப்ப அதுக்கு அவசியமில்லே!”

“சரி. கூடிய சீக்கிரம் முடிவுக்கு வந்தா சரிதான்.”

முற்றுப்புள்ளி வைத்தாயிற்று.

பத்து நாட்களுக்கு முன்பு, ரூபா ஊருக்கு கிளம்பியபோது மறுபடியும் நினைவுபடுத்தினாள்.

“கல்யாணத்தைவிட எனக்குக் கடமை முக்கியம்!” என்றான்.

ரூபா விடவில்லை. “கடமைன்னு எதைச் சொல்றே?”

“உங்க ரெண்டு பேருக்கும் சேவை செய்யறதை!”

“அனுமார்னு நெனைப்போ?”

“அப்படித்தான் வச்சிக்கோங்களேன்.”

ரூபா பேச முடியாமல் திணறிப் போனாள். தங்கள் பேரில் இத்தனை பக்தியா என்ற மலைப்பு அவளுக்கு!

‘தன்னையே தன் அடியானுக்குத் தரக்கூடியவன் இராமன். அதனால் அனுமனை அவன் தழுவிக்கொண்டதுமல்லாமல் தன்னை இறுகத் தழுவிக் கொள்ளும்படி சொன்னான், அனுமனுக்கு விடை கொடுக்கும் போது.’

புலவர் நீலமேகம் கதையை முடிக்கும்போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. வெளியே மழை பிசுபிசுத்துக்கொண்டிருந்தது.

வேணுகோபாலின் சிந்தை முழுதும் சரணாகதி சாஸ்திரம் வியாபித்து நின்றது.

ரகுவையும் ரூபாவையும் நினைத்தபடி நடையைப் போட்டான் . முன்பே வீட்டுக்குத் திரும்பியிருப்பான் ரகு. 

இவன் தாமதித்துப் போய்ச் சேர்ந்தாலும் அவன் கேட்கப் போவதில்லை. அவுட் ஹவுஸில் அவசரமில்லாமல் முடங்கப் பொகிறவன்தானே!

ரூபா மட்டும் இப்பொழுது வீட்டில் இருந்தால் இவன் கேட்ட கதையை, காலையில் விவரிக்கச் சொல்லி, கேட்காமல் விட மாட்டாள். ரகுவுக்கு அத்தனை ஆர்வம் கிடையாது. அப்படிக் கேட்டாலும், நன்றிப் பெருக்கில் அனுமனை இராமன் தழுவிக்கொண்ட காட்சியை அவனிடம் வருணித்துச் சொல்லவா முடியும்?

மழைத்துளியாகவும், சாரலாகவும், குமிழாகவும் எண்ணங்கள்.. வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது இடையிடையே மின்னல்கள்.

வாசலில் கார் நிற்பது முதலில் பார்வையில் பட்டது. ரகு அப்பொழுதுதான் வந்திருக்க வேண்டும். அவன் கார் கதவைத் திறக்கும்போது சன்னமாக வெட்டிய மின்னல்களோடு ஒரு பெண்ணை அடையாளம் காட்டியது. நிச்சயமாக அவள் ரூபா இல்லை.

அவள் இறங்கியதும் ரகு கையை நீட்ட, நெருக்கத்துடன் நடந்துபோனார்கள் இருவரும்.

இன்னொரு மின்னல்! அந்தப் பெண்ணின் தோள்களைத் தழுவியபடி கதவைத் திறந்துகொண்டு மறைந்தான் ரகு.

வெளியே நிலைகுத்தி நின்றான் வேணு. எக்ஸிகியூடிவி ரகு, ‘ராமன்’ இல்லையா?

*

நன்றி : ஜே.எம். சாலி, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்ஷி

No comments:

Post a Comment