21 வருசங்களுக்கு முன்பு ஒரு கறுப்பு டைரியில் எழுதிவைத்த ஆன்மீகக் குறிப்புகளை - பெயர்களை மட்டும் மாற்றி - இங்கே பகிர்கிறேன். மதிப்பிற்குரிய எங்கள் ஹஜ்ரத் மர்ஹூம் அப்துல் வஹாப் பாக்கவி அவர்கள் சொல்வதுபோல , இது கறி போட்ட ஸ்பெஷல் மசால் வடை! - AB
----------------
சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள்
----------------
சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள்
ஆபிதீன்
***
'காரியம் நடப்பதற்கு இரண்டு வழி : 1. திரும்பத் திரும்ப நினை , 2. குருவிடம் கேள்' - சர்க்கார்
***
அத்தியாயம் 01
நமக்குப் புலப்படும் மூன்று நான்கு தீர்வுகளில் எது நன்மையைக் கொடுக்க வல்லது (Right Choice) என்று 'கிரிஸ்டல் க்ளீயராக'த் தெரிய இப்படிச் செய்யவேண்டுமாம்: தலையை சாய்த்துக்கொண்டு, வலது நெற்றிப்பொட்டில் சுட்டுவிரலும் முகவாயில் பெருவிரலும் வைத்தபடி , மூன்றுமுறை 'சுபுஹானக்க லா இல்மலனா இல்லாமா அல்லம்தனா இன்னக அந்த்தல் அலீமுல் ஹகீம்' (1) என்று ஓதவேண்டும்.
இந்த டைரி எழுதுவதைக் கூட அப்படித்தான் முடிவெடுத்தேனோ?
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடத்தும் ஒரு 'செஷன்'(Session)-ல் சர்க்கார் அதைச் சொன்னபோது 'சர்க்கார்.. இதை 'ஒலு'வோடுதான் ஓதனுமா?' என்று ஒரு சீடர் கேட்டார். ' பீ பேண்டுட்டு சூத்து கழுவாம கூட ஓதலாம். என்னா ஒண்ணு, பிசுபிசுங்கும்; மாஞ்சா போட்ட கயிறு மாதிரி ஒட்டும்' என்றார்கள் சர்க்கார். 'S' என்றும் மரியாதையாக நாங்கள் குறிப்பிடுவோம்.
அவர்களின் 'வெடை'க்கு ஈடு இணையே கிடையாது. 'யாராவது பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும்போது அதைப் பார்க்ககூடாது' என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மனோதத்துவம் தெரிந்த சீடர் ஒருவர் குறுக்கிட்டார். 'பணத்தை திருப்பி வச்சும் எண்ணக்கூடாது' என்று. 'S' சொன்னார்கள் : 'ஆமா, பணத்தை 'குப்பி'யடிக்கக் கூடாது'. 'குப்பி' என்றால் ஓரினப்புணர்ச்சி. 'பையன் வேலை' என்று ஊரில் சொல்வார்கள். குலுங்கும் பிருஷ்டங்களுடன் சிறுபையன்கள் போனால் 'நெய்சூத்து' என்று சப்புகொட்டும் வேடிக்கையான ஊர். நாக்கூர்.
'செயல் செய்யும்போது அந்தக் காரியம் செய்வதாக நினை' என்று போகும் ஒரு சமயம். தூங்கி வழியும் சீடர்கள் தூக்கத்திலேயே சிரிக்கிறார் போலவும் போகும். ஆனால் சிரிப்பு ஒரு நிமிடம்தான் நிலவ வேண்டும். அடுத்த நிமிடம், 'இதற்கு மேல் மாற்றவே முடியாத - இம்ப்ரூவ் செய்யவே இயலாத - விஷயம்/பொருள் என்ன?'வென்று கேள்வி பறந்து வரும். 'இல்முல் ஹக்' (கணிதம்) என்பதுதான் பதில். 1+1=2தான். அதற்கு மேல் எப்படி மாற்ற முடியும்? ஆனால் 'அல்லாஹ்' என்று சொல்லி ஒருவர் செமையாக மாட்டினார். எங்களைப்போலவே ஒரு 'மழுங்கனி'. பயங்கரமாகத் திட்டு விழுந்தது, அல்லாஹ்வுக்கும் சேர்த்து.
'செஷன்'ல் சேர்வதற்கு முன் , சென்றவருட அக்டோபரில்தான் 'பட்டை'க்கு உட்கார்ந்திருந்தேன். வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும் சடங்கு. மார்ச்சும் அக்டோபரும். கெட்டியான , வண்ணம்பூசிய ஒரு சிறிய காகிதம்தான் 'பட்டை'. ஓதிக் கொடுப்பார்கள். அதை வைத்திருக்கும் நாம் - தினமும் 'இஸ்மு' எனப்படும் மந்திரத்தை - 'S' சொல்லிக் கொடுத்தபடி- ஓதிவர வேண்டும். ரொம்பவும் அன்புபூண்ட சீடர்கள் , 'இத மூணு முறை ஓதனும்; பொறவு , ஒரு 'மிஸ்கினுக்கு சாப்பாடு' என்று சேர்த்தே ஓதுவார்களாம். நான் அப்படிச் செய்யமாட்டேன் என்று நம்பிக்கையிருந்தது. கொமஞ்சான் புகைக்கு நடுவே கண்மூடி 'சலவாத்' சொல்லிக் கொண்டிருக்கும்போது உடம்பு பறந்து கொண்டிருந்தது, மனசுக்கேற்ப. இது அத்தனையையும் முன்பு கிண்டல் செய்து கொண்டிருந்த நான் மாறிப்போயிருந்தேன்.
ஓதிமுடித்ததும் தர்ஹாவிற்கு போய் 'ஜியாரத்' செய்துவிட்டு , வீட்டுக்குப் போகவேண்டும் என்பது விதி. குழுவாகப் போகக் கூடாது, யாருடனும் பேசக்கூடாது என்று உத்தரவு. 'யாரோடயும் பேசக்கூடாதுண்டு 'S' சொன்னாஹலாமே..' என்று ரவூஃப் கேட்டுக்கொண்டே வந்தான். 'ஆமா...ஸ்...பேசாதே..' என்று சொல்லிக்கொண்டே வந்தேன்.
தர்ஹாவில் அடங்கியுள்ள - பெரியஎஜமான்' என்று அழைக்கப்படும் - ஷாஹுல் ஹமீது பாதுஷாவை 'ஃபோகஸ்' பண்ணித்தான் ஆரம்ப பயிற்சிகள் எல்லாமே. பாதுஷாவின் ஹத்தத்தின் போது அதிகாலையில் (4: 10 a.m ) அவர்கள் 'வஃபாத்'தான நேரம் ஓதியது:
சலவாத் ('அல்லாஹும்ம சல்லிவசல்லி வபாரிக் அலைஹி') - 11 முறை
'அஸ்ஸலாமு அலைக்கும் யா ஷாஹுல் ஹமீது ஐனுல்லா' - 500 முறை
சலவாத் - 11 முறை
'S' எனக்கு 'Secret Symbol' (சுருக்கமாக , 'SS') பயிற்சி செய்ய அனுமதி கொடுத்தது சென்றவருட ஹத்தத்தின்போதுதான்.
சிம்பலில் 'பிரமிட்' வரைக்கும்தான் இதுவரை எனக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. நான் தாமதமாக 'செஷன்'ல் சேர்ந்ததால், தொடர்ந்து 'செஷன்'க்கு வர இயலாத 'சபர்'ஆல், மிகவும் எளிமையாக்கித் தந்தார்கள், பிரத்தியேகமாக. அதன்படி பயிற்சியும் செய்து வந்தேன். பயணம் புறப்படும் அன்று கீழுள்ள வட்டத்திற்கான அனுமதியைக் கேட்டேன். பிறகு சொல்கிறேன் என்று சொன்னார்கள். காத்துக் கொண்டிருக்கிறேன், பயிற்சியை இங்கும் விடாமல். அவர்களின் நெருக்கம் பயிற்சியை மேலும் தீவிரப்படுத்தியிருக்கும். ஆனால்... அவர்களைப் பிரியும்போதுதான் எப்படி அழுகை உடைத்துக்கொண்டு வந்தது! பிள்ளைகளைப் பிரியும்போதுகூட அப்படி இல்லை. மகளார் அஸ்ராவோடு இந்தமுறை மகன் அனீஸும் சேர்ந்திருக்க எனக்கு வழக்கமான இதயவலி வந்திருக்க வேண்டும். அன்றும் வெள்ளி. 'ஓதிவிட்டுப் போங்க' என்று சொல்லியிருந்தார்கள். சேத்தபொண்ணின் 'முடிவு' பண்ணுகிற சடங்கை முடித்துவிட்டுப் போயிருந்தேன். கொஞ்சநேரம் உட்கார்ந்துவிட்டு , அவர்கள் ஓதி ஊதியதும் வந்தேன். காலையின் அழுகை இப்போது இல்லை. தெளிவாக இருந்தது மனது. இப்போது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தெரிந்தது.
'S'ஐ அவர்களின் பழைய கால்மாட்டுத்தெரு வீட்டுக்கு போய்ப் பார்த்தது 1989 கடைசியில். மாமாவின் ரிகார்டிங் கடையில் வேலைபார்த்த முபாரக் அலிதான் காரணம். சர்க்காரை வரைந்து தாருங்கள் என்று அவன் நச்சரிக்க, வரைந்து கொடுத்துவிட்டு , அது நன்றாக அமையவே , திமிரையெல்லாம் ஒழித்துவிட்டு , நாமும் பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று கிளம்பிப்போய் , அதில் அவர்களின் கையெழுத்து வாங்கிவிட்டு கூடவே அன்பையும் பெற்று வந்தேன். 'நீங்கள்லாம் எப்பவோ வரவேண்டியது' என்று மட்டும் சொன்னார்கள். இப்போது 'செட்'டுப்பிள்ளையாகி விட்டேன். காரணம் , நண்பன் ரவூஃப். 'ரஜ்னீஸ் புகழ்' ரவூஃப். இப்போது சர்க்காரே கதி என்று அவன் கிடப்பதின் ஆச்சரியம், சர்க்காரைக் கண்டு , செஷனில் உட்கார்ந்து, அந்த மிகச்சரியான கோர்வை கொண்ட - விஞ்ஞானமும் ஆன்மீகமும் இணைந்த - பேச்சைக் கேட்டபிறகுதான் நீங்கியது. நன்றி முபாரக் அலிக்கா அல்லது ரவூஃபுக்கா? கீழே விழுந்து கிடக்கும்போது திடீரென்று சுற்றிக் கூடும் கூட்டத்தில் ஒருவர் சோடா வாங்கி வருகிறார், ஒருவர் கை தூக்கி விடுகிறார். நிதானமாய் எழுந்து பார்த்தால் அவர்களெல்லாம் போய்விட்டிருப்பார்கள். அவர்கள் வந்தது நாம் விழுந்ததால்தான் என்று உணர்கிற மாதிரிதான். பிறகு எனக்குத்தான் நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும். நான், ரவூஃப் எல்லாம் சர்க்காரைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தது ஒரு காலம். லா.ச.ரா, குலாம் அலி, சேகுவேரா எல்லாம் எங்களுக்காகத்தான் பிறந்திருந்தார்கள், இவர்களுக்கு முன் சர்க்காராவது! எங்களுக்கும் சைக்காலஜி தெரியுமாக்கும்! ரவூஃப் சற்று துணிச்சலானவன். சர்க்கார் வீட்டிற்குப் போய் ரஜ்னீஷின் 'Blank Mind' பற்றி புளகாங்கிதம் அடைய, சர்க்கார் அவனைக் கிழித்திருக்கிறார்கள். அப்போதும் கிண்டலாகப் பேசிய ரவூஃபை , 'ரவூஃப்.. நான் இங்கேயேதான் இருப்பேன். நீ ஏழெட்டு வருசத்துலெ என் காலடியிலெ கெடப்பா' என்று சொன்னார்களாம். அப்போதே ரவூஃப் சொன்னான் இதை. சரியாக ஏழெட்டு வருஷம். ஆனால் ரவூஃப் சமாதானமடைய ஒரு வழி இருக்கிறது. சர்க்கார் அங்கேயே இருப்பதாகச் சொன்னார்கள். இப்போது கஃபூர்ஷா தெருவுக்கு - புது வீட்டுக்கு - அல்லவா மாறி வந்து விட்டார்கள் !
*
ஞாபகமறதிக்கு (போக்க!) :
a. யாரிடமும் தன் ஞாபகமறதியைப் (புகழ்ந்து) சொல்ல வேண்டாம்.
b. இரவில் படுக்கப்போகுமுன் அன்றைய நிகழ்ச்சிகளை , வரிசையாக, ருசியோடு , அசைபோட்டு எண்ணுக. முழித்ததும் அதன் தொடர்ச்சி நினைவுக்கு வருமானால் பயிற்சி வெற்றி. 'ஃபோட்டோகிராஃபிக் மெமரி' வந்துவிட்டது என்று அர்த்தம்.
c. காலையில் முழித்ததும் - விழிப்பு வந்த நிலையில் - கண்களை மூடிக்கொண்டு - உடலின் பாகங்களை ஒவ்வொன்றாக உணர்ந்துகொள்ள முயல வேண்டும்.
மேலே உள்ளதை முதலிலேயே எழுதலாம் என்று நினைத்திருந்தேன்!
இல்லை, பயிற்சி பிரமாதமான பலன்களைத் தந்துகொண்டிருக்கிறது. மறந்துபோனவைகளை ஒரு வெறியோடு தூசுதட்டி கைவிட்டுக் குடைந்து எடுத்துப் போடுகிறது மனசு. இந்த முயற்சியே முதலில் இல்லாமல் இருந்தது. முயற்சியே வெற்றிதான். அப்படித்தான் 'ஜம்'மில் நான் பல தவறுகளைச் செய்கிறேன்' என்றேன் ரவூஃபிடம். 'இப்படி தெரியிறதே ஒசத்திதான்' என்றான். கண்ட்ரோல் இல்லையே என்று நினைப்பதே நமக்கு கண்ட்ரோல் வருகிறது என்பதைச் சொல்வதாகச் சொன்னான். கண்ட்ரோலோடுதான் சொல்கிறானா இதை? அப்படித்தான். சர்க்கார் முதலில் எனக்கு ஒருமணிநேரம்தான் 'ஜம்'முக்கு அனுமதி தந்தார்கள். பிறகு நான் விரும்பிக் கேட்கவே இரண்டு மணி நேரமானது. பயணத்தன்று 3 மணி நேரம் கிடைத்தது - ஸ்பெஷல் பயிற்சிகளோடு.
'ஜம்' என்றால் சர்க்கார் நமக்கு பக்கத்திலிருந்தால் எப்படி ஒரு காரியத்தை செய்வோமோ அப்படி செய்வது.
*
'இது மாதிரி ஒரு அற்புதமான குரு யாருக்கும் கிடைக்காது' என்றேன் ரவூஃபின் நண்பர் பரமசிவத்திடம். அவருக்கு நெஞ்சு நிறைய பெருமிதம். 'ஆனா, நம்மள மாதிரி மட்டமான சீடர்கள் சர்க்காருக்கும் கிடைக்காது' என்றதுமே பரமசிவம் தர்ஹா குளத்தில் என்னைத் தள்ளிவிடப் பார்த்தார்!
பரமசிவத்தை மறக்க முடியவில்லை. ரவூஃபுக்கு ஓம்பூரில் கண் தெரியாத பிரச்சனை திடீரென்று ஏற்பட்டபோது (மாணவர்களின் 'பதுவா'வோ?) நாக்கூர் சர்க்காரை நாக்கூர் ரவூஃபுக்கு நாக்கூரில் காட்டியவர் அவர். ரவூஃபுக்கு கண் திறந்து விட்டது!. பல தத்துவ, மத போதகர்களின் பேச்சிலும் எழுத்திலும் குழம்பி , விடையை சர்க்காரிடம் தெரிந்து கொண்டிருக்கிறார் பரமசிவம் எனும் கணிதப் பேராசிரியர் . 1+1=2.... அவரது பயத்தையும் பவ்யத்தையும் பார்த்தால் நாம் வெட்கப்பட வேண்டும். சர்க்காரின் பாதங்களை தன் இரு உள்ளங்கைகளாலும் அழுத்திப் பிடித்து தன் கண்களில் மெல்ல ஒற்றிக்கொண்டு , பின் அவர்களுக்கு நேராக விறைத்தபடி உட்கார்ந்து, தன் கண்களை மூக்குக் கண்ணாடிக்கு வெளியே தள்ளிவிடுவார். சர்க்கார் சொல்லும் விஷயத்தின் நாடியை தவறவிட்டுவிட்டு , மிகச்சரியாக செய்யவேண்டுமே என்கிற பயத்தில் அவர் குழம்புவதுதான் வேடிக்கை.
பரமசிவம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வரும்போதும் செஷனுக்கு வருகிற மற்ற மாணவர்களிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருப்பார். மூணு அடியா, மூணரை அடியா? சரி, வட்டம் தரையிலிருந்து எத்தனை அடி தூரத்திற்கு சுவற்றில் இருக்க வேண்டும்? வட்டம் வரைவதற்குள்ள சதுர அட்டையின் அளவென்ன? சீக்ரெட் சிம்பலுக்கான பயிற்சியில் Astral Body சுற்றிவரும் தூரம் குறித்தும் இம்மாதிரிதான் சந்தேகங்கள். இப்போது அவர் குழப்பம் தீர்ந்திருக்கக் கூடும். வட்டம் பார்ப்பதை விட்டு விட்டிருப்பார் !
*
'சர்க்கார் போல கோவப்படாம இக்கினும்டு பாக்குறேன்' - உள்வட்டத்தில் ஒருவர்
'சர்க்கார் கோவப்பட உடமாட்டாஹலேண்டு நெனைக்கனும்' - சர்க்கார்
*
தனது கோபம் பற்றி சர்க்கார் ஒருமுறை சொன்னார்கள் : 'பயங்கரமான முன்கோபியா இருந்தேன் ஆபிதீன். கோவம் வந்தா கொல்லுகொல்லூண்டு கொல்லுவேன் , கண்ணுமண்ணு தெரியாம. வர்ற ஜனங்கள்ட்டெயும் முதல்ல எல்லாம் 'சுள்'ளுண்டு எரிஞ்சு வுளுவேன் - அஹலுவ தப்பு பண்ணும்போது. இப்ப கோவப்படுறதேயில்ல ஜனங்கள்ட்டெ. வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறாஹா? புத்தியில இல்லே, தப்பா பேசத்தோணுது, நடக்கத் தோணுது. கோவிச்சிக்கிட்டு காலணாவுக்கு புண்ணியம் இல்லேயே..'
*
'நீ நானாக மாறுவரை என்னைச் சேர்ந்தவனல்ல' - சர்க்கார் அடிக்கடி சொல்வது. அவர்களாக மாறுவதென்பது அவர்களின் நெகடிவ் தன்மைகள் (உம். Chain Smoking) நீங்கி. ஞானி ஹாஜாமெய்தீன் சிஷ்தி ரஹ்மத்துல்லாஹி சொல்வார்களாம் அப்படி.
'இது கஷ்டமல்ல, But worth having to try' என்பார்கள். எதிலும் பாசிடிவ் அப்ரோச்..'அப்படீன்னா... 'ஸ்மோக்' பண்ணமாட்டேன் என்று நினைப்பதை விட 'ஸ்மோக்' பண்ணாம இக்கிற நெலைய நெனைச்சிப் பாக்கனும். அதான் பாசிடிவ் அப்ரோச். ' - சர்க்கார். மேலும் சொல்வார்கள் : 'Life & Knowledge must be organized . கோர்க்கப்பட்டதா இருக்கணும். எண்ண ஓட்டத்தை மாறுபட்டு ஓட்டப்பழகனும். நினைப்பது கடந்த கால வெற்றியாக இருக்கணும். தோல்வியை , அது எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாக இருந்தா மட்டும்நெனைக்கலாம். இல்லேன்னா அது வீண்.'
சுருக்கமாக , இப்போதைய ஆபிதீனாக இருக்கக் கூடாது! சொற்பப் பணத்தை - பேங்கிலிருந்து எடுப்பதுபோன்ற மனோபாவத்துடன் -ஆபிதீன் கடன் வாங்கினால் பிறகு அவனுக்கு கடனே வராது! தான் புதுவீடு கட்டும்போதுகூட தன் பேங்க் பேலன்ஸ் அப்படியே இருந்ததாக சர்க்கார் சொன்னார்கள். கடன்தான். ஆனால் சொந்தப் பணம் என்பதாக நினைப்பு வேண்டும். அப்போதுதான் கடனே கிடைக்குமாம். தீர்க்க முடியும் என்கிற Positive Approach...
*
சர்க்கார் ஒரு கோப்பையில் ஏதோ ஸ்வீட் வைத்துக்கொண்டு தாஹாவை கூப்பிட்டார்கள்: 'தாஹா , ஒரு ஸ்பூன் கொண்டு வா'
தாஹா ஓடிப்போய் பவ்யமாய் எடுத்துக் கொடுத்தார். உள்ள ஸ்பூன்களிலேயே மிகச் சிறியது அது.
'தாஹா..அந்த கப்-போர்ட்லெ காது குடையிற கும்பி இக்கிது, எடுத்துட்டு வாயேன்'
அனைவரின் சிரிப்பையும் புரியாமல் அவரும் எடுக்கப் போனார்.
பள்ளிக்கூடத்தையும் கடைத்தெருவையும் தன் ஹராமித்தனங்களால் கலகலக்க வைத்த, வைக்கிற தாஹா இப்போது எப்படி மாறிப் போனார். எனக்கு 'MKT' நஸ்ருதீன் நினைப்பு வந்தது.
நஸ்ருதீனின் தம்பி ஜலால் , அவர் முதலாளி தங்கியிருந்த ஃப்ளாட்டுக்கு அடுத்த ஃப்ளாட்டில் நடந்த 'ஹவாலா' விவகாரத்தால் - துண்டுதுண்டாகி இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒருவரைப் பார்த்ததிலிருந்து - ஷைத்தான் கோளாறால் கடுமையாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஜலாலை சர்க்கார்தான் குணப்படுத்தினார்கள். அவ்வப்போது , இறந்த ஷைத்தானை தன் கட்டுப்பாடற்ற தனத்தால் புதுப்பித்துக்கொண்டிருந்த ஜலாலுக்கு எப்பவும் சர்க்காரின் பார்வை தேவைப்படுவதின் காரணமாகவோ என்னவோ அண்ணன் நஸ்ருதீன் பயந்து சாவார் , சர்க்காருக்கு. பள்ளிக்கூட காலத்திலிருந்தே பயங்கர ஹராமி நஸ்ருதீன். இப்போது இருக்கிற கம்பெனியிலும்தான். சேல்ஸ்மேன் சையதுபாயோடு ஒருமுறை பேசிக்கொண்டிருந்தார் சுவாரஸ்யமாக - சையதுபாயின் பின்புறம் நின்றுகொண்டு, இடுப்புவரை கைலியை வழித்துக்கொண்டு, வழக்கம்போல ஜட்டியும் போடாமல்! இப்போதும் இப்படியா என்று நான் பயந்தே போனேன். அப்படி பயமுறுத்துகிற நஸ்ருதீனுக்கு சர்க்கார் என்றால் அத்தனை பக்தி. அவருக்கு போனவருடம் ஆண்குழந்தை பிறந்தது. ஒவ்வொரு ஆளிடமும் நல்லபெயர் சொல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் சர்க்கார் வைத்ததாக ஒரு பெயரைச் சொன்னார். அது அத்தனை இனிமையாக இல்லை. 'என்ன இது' என்று முகம் சுளித்துக் கேட்டேன். 'அப்படித்தான். 'செவன்-அப்'புண்டு சர்க்கார் வைக்கச் சொன்னாக்கூட அதத்தான் வைப்பேன்' என்றார். இதைக் கேள்விப்பட்ட தம்பி மஸ்தான் மரைக்கான் கூட அவரைப் பார்க்கும் சமயங்களில் 'செவன்-அப் நல்லாயிருக்காஹலா?' என்றுதான் நலம் விசாரிப்பான். 'பட்டை'க்காக தினமும் ஓதுகிற விஷயம் , அவரது மகாமட்டமான கம்பெனியின் வேலைநேரத்திற்கு ஒத்துவராமல் பெரும்பாலும் போகும். அப்போது அவர் முகம் காட்டுகிற வேதனை... 'ஒரே ஜபம் பண்ணுற கூட்டமா பொய்டுச்சி' என்ற நக்கல் பேச்சை வேறு கேட்க வேண்டும் , அப்படியே ஒதினாலும். அந்த கோபக்காரர் எப்படித்தான் பொறுத்துக்கொண்டு இப்படி சர்க்கார் செய்யச் சொன்ன ஒன்றுக்கு தன் சக்திக்கு இயன்றவரை செய்யப்பார்க்கிறாரோ என்று ஆச்சரியம்தான் வரும். எனக்கும் அப்படித்தான் இருக்கிறது இப்போது. ஓதாமலிருந்துவிட்டால் அன்று எதையோ இழந்த மாதிரி இருக்கிறது. ஓதுகையில் உடலில் திரள்கிற சக்தி - அதைக் கையில் கொண்டுவந்து , தானாக தூக்க வைக்கிறபோது 'ஒரு விரலசைத்தால் உலகமே அசைய வேண்டும்' என்று சர்க்கார் சொல்கிற சக்தியை உணர்கிறேன். படுத்துக்கொண்டு, உடலின் அத்தனை பரபரப்பையும் அசைவுகளையும் நீக்கி ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு கை தூக்க முயற்சித்தது ஆரம்பத்தில் தோல்விகளைத் தந்தாலும் இப்போது சரியாக வந்து கொண்டிருக்கிறது. அப்போது திரள்கிற எண்ணத்தின் வலிமை அதை வெற்றிகரமாக முடித்துவைக்கும் சக்தியைக் கொண்டது என்பார்கள் சர்க்கார். இந்த சமயத்தில் கொடுக்கிற Auto Suggestion வலிமையானது.
'Chain of Thought' (எண்ண ஓட்டம்) சரியாக வந்தா உதிப்பு உருவாகும், அதன்படி நடந்தா வெற்றி நிச்சயம்'- சர்க்கார்
*
'S' சொன்னது:
01) இன்னொருவரை பார்ப்பது என்பது நம்மை சரிப்படுத்திக் கொள்ளத்தான். 02) 'வளரவேண்டும் அவன்' என்று ஒருவனைப்பற்றி நினைத்தால் அவனுக்கு நாம் சொல்லும் யோசனை என்னவாக இருக்க வேண்டும்? உற்றுப் பார்க்கச் சொல் தன்னை. நீயும் உற்றுப்பார். 03) உணர்ச்சிகளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே -optஆக வை. காரியம் முடியும். 04) 'வாழ்வில் என்ன வேண்டும், அல்லது, எதற்காக இந்த வாழ்வு?' என்று ஆண்டவன் நேரில் வந்து கேட்டால் என்ன சொல்வாய்? விரலசைத்தால் அண்ட சராசரங்களும் அசைவதுபோல எதையும் முடிக்கக்கூடிய சக்தியா? அல்ல. என்னை உணர வழி செய் என்று கேள். அழுக்கை நீக்கத்தான் பயிற்சியெல்லாம். Know Thyelf. உன்னை உணர். 05) எட்டு பண்புகள் வாழ்வில் முக்கியம்: பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, உணர்வது, சிந்தனை,நினைவாற்றல், கோர்த்துப்பிரித்தல், பின்னால் வருவதை முன்னால் நினைப்பது. 06) Quick Decision மிக அவசியம். Quick Decision எடுத்து தோல்வியைத் தழுவுவதை விட Quick Decision எடுக்காமல் இருப்பது முட்டாள்தனம். 07) Nothing is accidental. Everything have reason. 08) 'What do you want out of your life?' என்பது சுத்தமாகத் தெரிய வேண்டும். Major Aim என்பது நாம் எல்லாவற்றையும் தியாகம் செய்து அடையக்கூடிய மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 08) சாதிக்க வேண்டுமானால் ஆசைப்படு. ஆசை என்பது Intensified பிரார்த்தனைக்கு மறுபெயர். குறிப்பிட்ட எண்ணத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நினைத்தால் அந்த எண்ணம் செயலாகும். வீடு கட்ட வேண்டுமா? பணத்தை நினைக்காதே. அதை எப்படிக் கட்டலாம் என்று அதன் அலங்காரங்களை நினை (கற்பனை செய்).
09) 'ஒரு ஊட்டுக்குப் போயிருந்தேன். அங்கெ என்னட பெரிய ஃபோட்டோ ஒண்ணு இருந்திச்சி. நான் சொன்னேன், 'இத விட பெரிய ஃபோட்டோ - கலரு - என்னட்டெ இக்கிது. அதை தர்றேன். மாட்டுங்க. ஒங்களாலெ ஃப்ரேம் போடுறவனாச்சும் புத்திசாலியா பொழைக்கட்டும்டு. சர்க்கார் இங்கெ இருந்தா இந்த பிரச்சனைக்கு எப்படி முடிவு சொல்வாஹாண்டு யோசிச்சி செய்ங்க. அதுக்கு வேணுண்டா ஃபோட்டோ தேவைப்படலாம், பத்தி கொளுத்துறதுக்கு இல்லே!'
10) 'சொல்றதையிலாம் எழுதி எழுதி என்னா புண்ணியம்? நடக்கப் பாருங்க!'
*
சர்க்கார் சொல்லும் கற்பனை, அதன் வலிமை பற்றி ஒரு யூதப் பெண்மணியின் கூற்றை ஜுனியர்விகடன் (07.01.1996) இதழில் எதேச்சையாகப் படித்து ஆச்சரியம். Mrs லாரா, கிரானைட் தொழிலதிபரிடம் சொல்கிறாள் : 'குழந்தைகளை கனவு காண்பது ஸாஃப்ட்வேர்.அவர்கள் உருவம் ஹார்ட்வேர். பிறகு அவர்கள் லட்சியம் நிறைவேறும்போது அதே ப்ரோக்ராம்கள் ப்ரிண்ட்-அவுட்டாக வெளிப்படுகின்றன'
*
சீக்ரெட் சிம்பலுக்கான பயிற்சியின் அனுமதி கிடைப்பதற்கு முதல்நாள் எனக்கு ஒரு கனவு வந்தது. (தர்ஹாவிலுள்ள) 'குளுந்த மண்டபம்' பக்கத்திலிருந்து வெளியில் நோக்குகிறேன். அலங்கார வாசலுக்கும் பெரியமினாராவுக்கும் நடுவில் ஒரு மிகப்பெரிய மலைத்தொடர் இருக்கிறது. பெரியமினாரா அதனுள் இருக்கிறதா அதை மீறி வெளியில் எழும்பி நிற்கிறதா? சரியாகத் தெரியவில்லை. மலைத்தொடர்களில் கசியும் ஊற்றுகள் தெரிகின்றன. எவ்வளவு அழகாக இருக்கிறது! அனால், இதென்ன..ஓ..அது நிஜமான மலைத்தொடரே அல்ல. அட்டை. சரிந்து விழுகிறது! பெரியமினாரா கூட அட்டைதான். அதனுட்புறமெல்லாம் தட்டியைத் தூக்கி வைக்கிற கம்புகள். அதுவும் நிலைகுலைகிறது.
உச்சியினின்றும் சரிந்துவிழுகிற கனவைக் கண்டபோதெல்லாம் உண்மையிலேயே சரிந்திருக்கிறேன். இந்தக் கனவு பயத்தைத் தருகிறது. அதுவும் சர்க்கார் அவர்களின் தொடர்பு ஆழமான பிறகு - 'ஜம்'மெல்லாம் பண்ணிக்கொண்டு வரும்போது - இப்படி தடம் புரண்டு விழுகிற கனவு எதற்காக? மறுநாள் சர்க்காரிடம் கேட்டேன். என் பயத்தையும் சொன்னேன். 'மற்றவர்களுக்கு கனவைக்கேட்டு விளக்கம் சொல்கிறதுபோல நமது 'ரியாலத்'தில் உள்ள பிள்ளைகளின் கனவை சொல்லமுடியாது. நமது ரியாலத்தே 'பெரிய எஜமானை' நோக்கித்தான். நீங்க தர்ஹாவில் இருந்திருக்கீங்க. போதும். இது கெட்ட கனவல்ல' என்றார்கள்.
அன்று இரவுதான் எனக்கு அனுமதி கிடைத்தது.
*
நண்பர் ஃபரீது சந்தோசமாக இருந்தார். 'என்னா ஃபரீது..ஒரே 'ஜெதப்'பா இக்கிறியுமே..!' என்று கேட்டேன். 'நேத்து 'திக்ர்' பண்ணிக்கிட்டிருந்தேன். மனசு பூரா வாப்பாவ பாக்கனும்டு நெனைப்பு தாங்கலே..'என்னா ஆண்டவனே.. காட்டவே மாட்டேங்குறியே'ண்டு மனமுருகி கேட்டேன். அல்ஹம்துலில்லாஹ் , ராவு அளகான கனவு, வாப்பா வந்தாஹா..' என்றார். 'நல்ல விஷயம்தான். சில பேருக்கு முகம் வேறமாதிரி - டிராகுலா மாதிரி - மாறியிருக்கும். பாத்த உடனேயே நாம நல்லா தெரிஞ்சிக்கலாம் , அஹ வாப்பா கனவுல வந்திக்கிறாஹாண்டு. நம்ம நம்ம புள்ளையிலுவ மொஹம் இப்படித்தான் இக்கிம்' என்றேன்.
'அட நீ ஒண்ணு, நபுஸு புடிச்சஹதான் கனவுல வருவாஹா' என்றான் மஸ்தான் மரைக்கான்.
'அப்ப Daily ஒம்மட மவன் ஒம்ம கனவுல பாப்பான்' - ஃபரீது
நாம் இறந்தபிறகுதான் தெரியும், வாழ்ந்தது ஒரு நீண்ட கனவென்று சர்க்கார் சொல்வார்கள்.
நண்பர் ஃபரீது , ஜோல்பேட் ஹஜ்ரத்தின் சீடர். ஜோல்பேட் ஹஜ்ரத் ஒரு தனி அரசாங்கமே நடத்தி வருகிறார். சில அரசாங்கத்திற்கு சில செயல்பாடுகள் முடியாமல் போகின்றன. ஃபரீது என் சர்க்காரை நாடினார். ஃபரீது தன் நாக்கூர் நண்பர் ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார் - வெவ்வேறு சமயங்களில். வாங்கிய நபரோ நல்லவர்தான். ஆனால் ஒரு லட்சம் ரூபாய்தான் தான் வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது அவருக்கு. அப்படியாயின் அவர் நல்லவராகத்தான் இருக்கவேண்டும். தனக்கு இன்ன இன்ன தேதியில் பணம் கொடுத்த விபரம் சரியாக நினைவில் தெரிய வேண்டும் என்பதாக சர்க்காரிடம் சொன்னாராம். நாக்கூர், மிக சுலபம்...ஒரு 3 நாள் கழித்து வாருங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதற்குள் ஃபரீதை துபாய் இழுத்து விட்டது. எனவே என்னிடம் கடிதம் எழுதிக் கேட்கச் சொன்னார். நானும் கடிதம் எழுதியிருக்கிறேன் - சர்க்காரின் மருமகன் தாவுதுகுட்டிக்கு - சர்க்காரைக் கேளுங்கள், இப்போது என்ன செய்யலாம் என்று. பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சர்க்காரால் முடிகிற விஷயம்தான் சாதாரணமாக. 35 வயது நபரை 38 வருடங்களுக்கு பின் அழைத்துச் சென்று அவர் என்னவாக அல்லது அது என்னவாக இருந்தது என்று அறிவதெல்லாம் சுலபம்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். அற்புதங்கள் சாதாரணமானவை என்பது அவர்களின் கருத்து. வெகுதொலைவில் உள்ளவர்களின் குரலைக் கேட்பது (clairaudience), Crystal Ball மூலமாகப் பார்ப்பது என்பதெல்லாம் தகுந்த பயிற்சிகள் மூலம் யார் வேண்டுமானாலும் செய்கிற ஒன்று என்பார்கள். எல்லாம் சும்மா சொல்வதுதானா? அவர்கள் ஏதும் செய்ததில்லையா? ஏன் இல்லை, நான் இதை எழுதிக் கொண்டிருப்பதே சாட்சி!
சர்க்காரைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த காலங்களில் கலிஃபுல்லா நானா சொன்ன செய்திகள் ஓரிரண்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு. கலிஃபுல்லா நானா என்ற குதர்க்கத் திலகத்தை அடித்துப்போட்டு விடுவதுதான் சாதாரண விஷயமா என்ன? அவர் குதர்க்கத்திற்கு ஒரு உதாரணம்: கலிஃபுல்லா ஒரு நோன்பு சமயத்தில் கடுமையாக 'செண்ட்' அடித்துக்கொண்டு வெளியில் வந்திருக்கிறார். 'தவ்பா... தவ்பா..! நோம்புலையா! தனக்கு எது அதிகமா பிடிக்கிறதோ அத வுடுறதுக்கு பயிற்சிதான் நோம்பு' என்றிருக்கிறார் அவர் நண்பர்.
'அப்படியா? எனக்கு நோம்பு பிடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். வுட்டுடவா?' - கலிஃபுல்லா.
கடுமையான பயம் இருந்தால் ஓதுவதற்கு ஒரு 'இஸ்மு' கிடைத்திருக்கிறது அவருக்கு - சர்க்காரிடமிருந்து. கலிஃபுல்லா ஊட்டி மலைப்பாதையில் நடு இரவில் மாட்டியிருக்கிறார். கார் ரிப்பேர். பக்கத்தில் ஏதேனும் Workshop இருக்கிறதா என்று பார்க்கப் போயிருக்கிறான் டிரைவர் . போனவன் ஒருமணி நேரம் காணவில்லை. கரிய இருளும், தனிமையும் கடுமையாக அவரை பயமுறுத்தி இருக்கிறது. பேய்களுக்கும் அவரைப் பார்த்து அப்படித்தானிருக்கும். கலிஃபுல்லாவிற்கு திடீரென்று அந்த 'இஸ்மு' ஞாபகம் வந்திருக்கிறது. ஓதியிருக்கிறார். அப்புறம் என்ன நடந்ததென்று அவருக்குத் தெரியாது. காலையில் அவர் நண்பர் வீட்டில் கண் விழித்ததுதான் தெரியும். இதைச் சொல்ல நாக்கூருக்கு வந்து சர்க்காரின் வீட்டிற்குள் நுழைந்தால் சர்க்கார் அவரைப் பார்த்து சத்தம் போடுகிறார்களாம், 'ஏம்ப்பா.. இந்த இந்த நேரத்துலதான் தொந்தரவு பண்ணுறதுண்டு இல்லையா?
'என்ன சொல்றீங்க சர்க்கார்?'
'முந்தா நாள் ராத்திரி ஒன்றரை மணிக்கு என்னைக் கூப்புட்டத சொல்றேன்' - சர்க்கார்.
இன்னொரு சம்பவம். கலிஃபுல்லா நானாவும் அவர் நண்பரும் சர்க்காரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நண்பரை சர்க்கார் டீ வாங்கி வரச் சொல்கிறார்கள். அவர் போகிறார். சற்று நேரத்தில் கதவு தட்டப்படுகிறது. டீ வாங்கப் போனவர்தான் வந்திருக்கிறார். கதவைத் திறந்து அவரைப் பார்த்த கலிஃபுல்லாவை சர்க்கார் வேறொரு இடத்தைப் பார்க்கச் சொல்கிறார்கள். டீ வாங்கப்போவதற்கு முன்பு இருந்த நண்பர் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தாராம்! இரண்டு வெவ்வேறு இடங்களில், நிலைகளில், ஒருவரைப் பார்த்த கலிஃபுல்லாவின் திகைப்பு , சர்க்கார் சொன்னபிறகுதான் நீங்குகிறது. உட்கார்ந்திருந்த நபர் உண்மையல்ல, அது ரிகார்டு. பதிவு. சென்றவர் பதிந்துவிட்டுப் போன ரிகார்ட்.
clear
use life index name
do while not eof()
mname=space(10)
@10,15 say 'Believe' get mname valid ! empty (mname)
read
seek mname
if found()
wait wind+'Record of &mname'
else
exit
endif
enddo
use
retu
கலிஃபுல்லாநானாவின் தம்பி ஹாஜித்தம்பிக்கு சர்க்காரைக் கட்டோடு பிடிக்காது. 'சர்க்கார் சொல்லித்தான் நானா என் உம்மாவோட சரியான உறவா இல்லே.. ஆனா , சர்க்கார்ட்டெ என்னமோ இக்கெத்தான் செய்யிது' என்பார். அவர் நானா கலிஃபுல்லா ஒருமுறை தன் உள்ளங்கையைப் பார்க்கச் சொன்னபோது, மிகச் சுத்தமாக தன் லாத்தா (அக்கா) வீட்டுக்கொல்லையில் குளித்துக் கொண்டிருந்தது தெரிந்ததே !
*
'செஷன்' முடிந்து 'தப்ருக்' என்ற பெயரில் ஒரு அலம்பலான விருந்தும் நடந்தது. சர்க்கார் ரிலாக்ஸாக இருக்கும்போது ரவூஃப் மெல்லக் கேட்டான். 'மாமா..அந்த Crystal Ball ஒண்ணயாச்சும் கொடுங்க'
'எதுக்கு? என் வூட்டுக்கு முன்னாலெ இன்னொரு கடை போடவா?'
ரவூஃப் தலையைச் சொறிந்தான். அடுத்து , தண்ணீரில் நடக்கும் வித்தையைக் கேட்கலாமென்றிருக்கும்போது..! 'அட, அதெல்லாம் ஒண்ணும் வாணாம்ப்பா, இந்த 'SS'ஐ மட்டும் ஒழுங்கா பண்ணிக்கிட்டு வா. எல்லாம் இதுலெ அடக்கம்' என்றார்கள் சர்க்கார்.
*
அற்புதங்களால் என்ன பிடுங்க முடியும்? பசிக்கும் ஏழைக்கு சோறு போட முடியுமா என்று என் புரட்சி நண்பன் கேட்பான். அவனுடைய சமீபத்திய புரட்சி என் கடிதங்களை அவன் பெயரில் சிறுகதையாக , குறுநாவலாக , 'இந்தியா டுடே', குமுதத்தில் போட்டது. நான் அவனை செருப்பால் அடிக்கக்கூடாத அற்புதத்தை மறந்து இதென்ன பேச்சு? குறைந்தது பத்து ஏழைகளின் வயிறாவது சர்க்காரால் தினம் நிரம்புகிறது. சர்க்கார் சொல்லும் பரிகாரங்களில் இதுவும் ஒன்று, சரி சோறு போடலாம், ஏழ்மையை ஒழிக்க முடியுமா? ஒ, முடியுமே.. இன்னொருவனின் எழுத்தை தன் எழுத்து என்று சொல்லி சம்பாதிக்கலாமே அன்பழகன்..
ஒரேயொரு வித்தையை தெரிந்துகொண்டு கோடீஸ்வரனாக கொழிக்கிற மகான் பரட்டைக்கு - அட, சாய்பாபாதான் - முன்னால் சர்க்கார்தான் எவ்வளவு எளிமை! ஒரு ஈஸி சேர், கால்வைத்துக்கொள்ள ஒரு ஓட்டை முக்காலி, தேவையான எலெக்ட்ரிக் , எலக்ட்ரானிக் சாமான்கள் சுற்றிவர இருந்தாலும் சர்க்கார் தனியாக , அந்த இடத்தில் எளிமையாக , ஒரு சாதாரண வெள்ளைக் கைலி (பழுத்திருக்கிறது), கைவைத்த வெள்ளை பனியனுடன் தெரிகிறார்கள். கால்மாட்டுத்தெருவை விட இப்போது - ஏசி உள்ள கஃபூர்ஷாதெரு வீட்டில் எளிமை இன்னும் தூக்கலாக இருக்கிறது. 22 வருடங்கள் வாழ்ந்த வாடகை வீட்டை திடீரென காலி பண்ணச் சொன்னதற்கு அனுபவ பாத்தியதையெல்லாம் கொண்டாடித் திண்டாட வைக்காமல், 'என்னால் முடியும்' என்று காட்ட இந்தப் புதுவீடு. எட்டு லட்சரூபாய் ஆகியிருக்கிறது. கடன் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பேங்க் பேலன்ஸ் இன்னும் குறையவில்லை. ஒரு வருடத்தில் கடனை அடைத்துவிடுவேன் என்று சொல்கிறார்கள்.
ஒரு கேஸட்டில் சொல்கிறார்கள்.. ஒரு இளவயசுப் பையன் வந்தானாம். அவனுக்கு ஒரு 'அதிசய' சக்தி தேவைப்பட்டிருக்கிறது. என்ன அது? எந்தப் பொருளையும் ஊடுருவிப் போக வேண்டும். ஒரு இரும்புக் கதவா? அவன் கைபடும்போது கை சுலபமாக உள்ளே போய்விட வேண்டும். இரும்புக் கதவென்கிறான்.. ஆனால் பணமோ நகையோ வைக்கிற இரும்புப் பெட்டகம்தான். சர்க்கார் அவனிடம் கேட்டார்களாம் , 'அதை வச்சிக்கிட்டு என்ன மசுர புடுங்கப் போறா?'. 'அற்ப ஆசை..' - சர்க்கார் முனுமுனுக்கிறார்கள். வாழச் சொல்கிற சர்க்கார் அற்புதமன்றி வேறென்ன? பேசிக் ப்ரோக்ராமிங்கில் சந்தேகம் கேட்கலாம்.. 'ஷரீஅத்' பற்றிக் கேட்கலாம். 'தரீக்கா'வைக் கேட்கலாம் வைத்தியம் கேட்கலாம்...மனோதத்துவம் படிக்கலாம்...இன்ஜினீரிங், மெடிகல் ஃபீல்டில் உள்ள புது கண்டுபிடிப்புகளின் குறை நிறைகளைக் கேட்கலாம். பொருளாதாரத்தை, அரசியலை, சமுதாய வாழ்வை வினவலாம், வியாபார வெற்றிக்கான வழிகளை, ஒரு நவீன சூஃபிஸத்தை - சங்கரரையும் மன்சூர் ரலியல்லாஹுஅன்ஹுவையும் தாண்டி - அறியலாம்.
வெவ்வேறு ஃபீல்டுகளில் உள்ள தலைசிறந்த மண்டைகள் இந்த ஒரு மண்டைக்குள் எப்படி வருகிறது? மிகச் சுலபம்தான். அதாவது, சர்க்காருக்கு. ஒரு பெரிய குளத்தின் நடுவில் ஒரு கம்பை ஊன்றி ஒரு சிலந்தியை மேலே வைத்தால் தன் வலையைப் பின்ன இழையைப் பறக்க விடுமாம் , வெவ்வேறு திசைகளில். அப்படிப் பறக்கவிட்டு பிடித்துக் கொள்வதுதான் அத்தனை விஷயங்களும் என்றார்கள் ஒருமுறை. வலைவிரிக்கிறேன் என்று உடுத்தியிருக்கிற கைலியை நான் அவிழ்த்து வீசிப் பிடித்தால்? காற்றில் கைலியும் அவிழ்ந்து விடுகிறது! அது போகட்டும், ஊடுருவும் சக்தி அந்தப் பையனுக்கு கிடைத்திருந்தால் தன் பெண்டாட்டியை எப்படிச் செய்வான் என்று கற்பனை ஓடுகிறது..'பெண்ணே...உன் கதி இதுதானா?' என்று சிதம்பரம் ஜெயராமன் வேறு ஊடுருவுகிறான்!
மறைந்த சூஃபி ஞானி இமாம் ஜாஃபர்சாதிக் பற்றி புத்தகம் எழுதிக்கொண்டிருக்கும்போது சர்க்காருக்கு ஏதோ ஒரு சந்தேகம் தெளிவுபடுத்தப்பட வேண்டியிருந்தது. யாரிடம் கேட்பது? யாரிடம் கேட்டாலும் சரிவராது. இமாம் ஜாஃபர்சாதிக் அவர்கள்தான் சொல்ல வேண்டும். அவர்களிடம்தான் கேட்டார்களாம் சர்க்கார். சேக்ஸ்பியரில் சந்தேகமா? சேக்ஸ்பியரிடமே கேட்டு விடுவது!
இது 'கராமத்' என்று கூத்தாட வேண்டியதில்லை நாம். 'கராமத்' பற்றி சர்க்கார் தெளிவாகவே சொல்கிறார்கள்.
'கராமத் நடத்துறவங்க 'அவுலியா'ண்டு சொல்லிவிட முடியாது. நடைமுறைக்கு மாறான செயல். அதுதானே 'கராமத்'ங்குறது? மேஜிசியன் கையைக் காட்டுனா தண்ணி ஊத்துது. இதே வேலையை 'ஒலியுல்லா' செஞ்சா அது 'கராமத்'. இந்த செயல் செய்யிறதுனாலெ லைஃப்லெ எந்த செயல் நமக்கு fulfill ஆகுது? ஒண்ணுமில்லே.. அவன் மேலே ஒரு 'மொஹப்பத்', ஒரு ஆச்சரியம், ஒரு வியப்பு. அவன் மூலமா நீங்க அடிமையா பொய்டுறீங்க. உங்கள வாழ வைக்கிற மாதிரி ஒண்ணுமில்லே அதுலெ..'
'குழப்பி உட்டுடுறாங்க சர்க்கார்' - இதை வைத்து வியாபாரம் பண்ணுகிறவர்களை ஒருவர் குறை கூறுகிறார்.
'குழப்பி உடலே.. குழப்பி வுட்டாலும் திறமைசாலிண்டு அர்த்தம். அவனே குழம்பி கெடக்குறான். அவன்ற குழப்பத்த உங்கள்ட்டெ ஒப்படைச்சுடுவான். அவ்வளவுதான்'
பிழைக்கத் தெரியாத 'கராமத்'தை பண்ணுவது என் சர்க்கார்.
*
நண்பர் ஃபரீது இரண்டு வருடத்துக்கு முன்பு துபாய்க்கு டிரான்ஸிட்-ல் வந்திருந்தார். ஜோல்பேட் ஹஜ்ரத் வந்திருப்பதாக ஒரு நபர் சொன்னவுடன் அவருக்கு புல்லரித்துவிட்டது. எனக்கும் கண்டிப்பாக அரிக்கும் என்று சொல்லி அன்று இரவு கூட்டிக்கொண்டு போனார். 'ஜிப்ஸ்' கைலிக்காரர்கள் வருடத்துக்கு 3 தடவையாவது துபாய்க்கு அவரைக் கூட்டிவந்து விடுகிறார்கள். இந்த முறைதான் போனேன். ஹஜ்ரத்தின் சிஷ்யர்கள் காட்டுகிற அளவுகடந்த மரியாதை, பயம் என்னைக் கவர்ந்தது. அந்த பயம் அளவுக்கு அவர்களின் பேச்சு வசியப்படுத்தவில்லை. ஆனால் , நினைப்பதைத் தெளிவாக கோர்வையாகச் சொல்லத்தெரிகிறது அவருக்கு. 'திக்ரு' நடந்தது. அனைவரும் அல்லாவோடு கலந்து அழுதார்கள். 'திக்ரு' முடிந்த பிறகுதான் அல்லா அழ ஆரம்பித்தான். ஹஜ்ரத், 'பரக்கத் காசு.. எல்லாரும் வாங்கிங்குங்க. என்னெ நெனச்சிப் பாருங்க, என் முகம் தெரியும்' என்றதும் எனக்கும் 'பரக்கத் காசு' கிடைத்தது (வாங்காமல் போனால் 'பரக்கத் அடி' கிடைக்குமே!) இரண்டுநாள் கழித்து திடீரென்று ஹஜ்ரத்தின் நினைப்பு வரவே, அட அந்தக் காசு கூட இன்னும் நம்மிடம் இருக்கிறதே என்று காசை எடுத்துப் பார்த்தேன். துபாயின் ஒரு திர்ஹம் நாணயம். நாணயம்தான் தெரிந்தது திரும்பவும். காசு.. ஜோல்பேட் ஹஜ்ரத் சொன்னது சரிதான், அவர்களின் முகம்தான் அது!
(தொடரும்)
http://abedheen.wordpress.com/
*
குறிப்புகள் :
1 : (இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன் - திருக்குர்ஆன் (2 : 32)
ஒலு - புனித சுத்திகரிப்பு
வெடை - கிண்டல்
சலவாத் - நபிகள் நாயகத்தின் மீது வாழ்த்து சொல்வது
ஜியாரத் - அவுலியாவின் (இறைஞானியின்) சமாதியை தரிசித்தல்
தர்ஹா - அவுலியா அடக்கம் செய்யப்பட்ட இடம்
ஹத்தம் - அவுலியாவின் சமாதிக்கு சந்தனம் பூசும் தினம். பொதுவாக, நினைவு தினத்தில் செய்யப்படும் ஒருசடங்கு
வஃபாத் - இறப்பு
சபர், சஃபர் - பிரயாணம்
'முடிவு' செய்தல் - நிச்சயதார்த்தம்
மிஸ்கீன் - ஏழை
பதுவா - சாபம்
ரியாலத் - பயிற்சி
ஜெதப்பு - குஷி
திக்ர் - இறை நாமங்களை ஜெபித்தல்
அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்
நபுஸு - பேராசை
தவ்பா - மன்னிப்பு
தப்ரூக் - பிரார்த்தனைக்குப் பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு
ஷரீஅத் - மார்க்கச் சட்டம்
தரீக்கா - (ஞானப்) பாதை
கராமத் - அற்புதம்
பரக்கத் - கிருபை, சுபிட்சம்
ஹராமி - துஷ்டன்
மன்சூர் ரலியல்லாஹுஅன்ஹு - 'அனல்ஹக்' (நானே இறைவன்) என்று சொன்னதால் கொல்லப்பட்ட ஞானி.
இந்த கட்டுரையை படித்த உடன் ஞான ஆசிரியரின் மேல் மதிப்பு பன்மடங்கு கூடி விட்டது.
ReplyDeleteஅருமையான பதிவு உங்கள் எழுத்து நடை இறைவன் அளித்த கொடை வாழ்த்துக்கள்.....
அட, யாரோ படிக்கிறாப்போல! நன்றி நன்றி.
ReplyDeleteVery interesting
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு😁
ReplyDeleteBro semma full dairy um padichiten thank u
ReplyDelete