Monday, February 1, 2016

கே.ஜி.ஜார்ஜின் ஸ்வப்னாடனம் - அய்யனார் விஸ்வநாத்

கே.ஜி.ஜார்ஜின் முதல் படமான ஸ்வப்னாடனத்தை நேற்றுதான் பார்த்தேன். 1976 இல் வெளியான கருப்பு வெள்ளைத் திரைப்படம். மனித மனதின் அடியாழம் வரை சென்று அலசி இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதை நம்பவே கடினமாக இருந்தது. இதுவே கே.ஜி.ஜார்ஜின் மாஸ்டர் பீஸ் எனவும் தோன்றியது. ஆனால் இவரின் எல்லாப் படங்களையும் பார்த்து முடித்த பின்பு இந்த எண்ணம்  தோன்றுவது இயல்புதான். அவரின் எல்லாப் படங்களுமே மாஸ்டர் பீஸ் தான்.

நிகழ்திரை தொகுப்பில் சேர்க்க நினைத்து விடுபட்டுப் போன பெயர் கே.ஜி. ஜார்ஜ். அப்போது அவரின் யவனிகா, மட்டோராள், இறகள் ஆகிய மூன்று படங்களை மட்டுமே பார்த்திருந்தேன். அம்மூன்று படங்களும் கடத்திய உணர்வுகளிலிருந்து வெளியேறவே இயலாத காலமாகவும் அது இருந்தது. மேலும் கே.ஜி. ஜார்ஜை ஒரு கட்டுரைக்குள் சுருக்கி எழுதிவிட என்னால் முடியாது எனவும் தோன்றியது. எப்படி அகிராவின் பிரம்மாண்டம் என்னை எழுத விடாமல் செய்கிறதோ அதே திகைப்பைத் தரும் இன்னொரு ஆளுமை  கே.ஜி. ஜார்ஜ்.

ஸ்வப்னாடனம் திருமணம் என்கிற அமைப்பையும் கணவன் மனைவி உறவையும் சில கதாபாத்திரங்கள் வழியாக தீவிர விசாரணைக்கு உட்படுத்துகிறது. இந்த விசாரணை அகம் வழியாக, கனவுகள் வழியாக, நனவிலி மனம் வழியாக ஆழ்ந்து ஆழ்ந்து செல்கிறது. ஒரு கட்டத்தில் திரையில் பார்த்துக் கொண்டிருப்பது என் ஆழ் மனத்தைத்தானோ என்கிற சந்தேகமும் எழுந்து, சற்று நேரம் படத்தை நிறுத்திவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று.

தனக்குள் மூழ்கிப் போகிற, பெரிதாய் எதுவும் தேவைப்படாத, முதற் காதலை இழந்த ஒரு ஆணும் - சராசரி பெண்ணின் அத்தனை ஆசைகளையும், வசதியான பின்புலத்தையும் கொண்ட பெண்ணும் உறவு நிமித்தம், செய்நன்றிக்கடன் நிமித்தம் திருமண பந்தத்திற்குள் நுழையும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை ஸ்வப்னாடனம் திரைப்படம் முன் வைக்கிறது. இது வெறும் குடும்பக் கதையாக மட்டும் சுருங்கி விடாமல் எல்லா தரப்பு நியாயங்களையும் (நனவிலி மனம் உட்பட) பேசுகிறது. மேலும் மிக அபூர்வமான காட்சிப் படிமங்களாலும் அசாதரணக் கனவுக் காட்சிகளாலும் கோர்க்கப்பட்ட திரைக்கதை அமைப்பு பார்வையாளர்களை திக்கு முக்காட வைக்கிறது.

கருப்பு வெள்ளையில் வரும் ஆழ் மனக் கனவுக் காட்சிகள் இங்க்மர் பெர்க்மென் படங்களின் தனியம்சம். அவை அவ்வளவு ஆழத்தையும் குரூரத்தையும் கொண்டிருக்கும். பெர்க்மன் உருவாக்கிய நனவிலிச் சித்திரங்களுக்கு சற்றும் குறைந்திடாத படிமங்களை கே.ஜி.ஜார்ஜ் இத்திரைப்படத்தில் உருவாக்கியிருக்கிறார். 

மனச் சிதைவுக்கு உள்ளாகும் பிரதான கதாபாத்திரமான மருத்துவர் கோபி நார்கோடிக் டெஸ்ட் மூலம் தன் பழைய நினைவுகளைச் சொல்வதாக இத்திரைக்கதை விரிகிறது. சுமித்ரா கதாபாத்திரத்தில் ராணி சந்திரா. பத்ரகாளி திரைப்படம் நினைவிருக்கிறதா அல்லது தேன் சிந்துதே வானம் பாடல் காட்சி? அவரேதான் விளக்குமாறால் விருட் விருட் டென்று பெருக்கும் ராணி சந்திரா இதில் சுமித்ரா வாக வாழ்ந்திருப்பார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதும் இத்திரைப்படத்திற்காக அவருக்கு கிடைத்தது. அதே ஆண்டில் அநியாயமாக ஒரு விமான விபத்தில் குடும்பத்தோடு மரித்துப் போனார். பிரதான கதாபாத்திரத்தில் நடித்த டாக்டர் மோகன் தாஸ் பின்புலம் தெரியவில்லை. விட்டேத்தியான கதாபாத்திரத்திற்கு இவர் முகம் அப்படிப் பொருந்திப் போயிருக்கும். ராணி சந்திராவின் தோழி ரோஸி கதாபாத்திரத்தில் மல்லிகா சுகுமாரன். சில காட்சிகள் வந்தாலும் அழுத்தமான கதாபாத்திரம். 

ராணி சந்திரா சண்டை போட்டுவிட்டு பிறந்த வீட்டிற்குப் போயிருப்பார். அன்று மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்து தூங்கிவிடும் கோபி, அசாதாரண கனவு கண்டு அலறி இரவு ஒன்பது மணிக்கே விழித்து விடுவார். அந்தக் கனவு முதற் கொண்டு, கடைசியாய் சட்டையை அவிழ்த்தெறிந்துவிட்டு முழு போதையில் மாடிப் படிக்கட்டில் தடுமாறி கீழே விழும் காட்சி வரை ஆண் மனதின் முழுமையான வெளிப்பாடு எந்தப் பூச்சுமில்லாமல் பதிவாகி இருக்கும். உண்மைத் தன்மையின் விஸ்வரூபம் என்றும் கூட இந்த பதினைந்து நிமிடக் காட்சிகளை சொல்லலாம். காமமும் போதையும் வெறுப்பும் குரூரமும் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள விழையும் சாதாரண மனதின் ஆசையும் அவ்வளவு கச்சிதமாக இந்தப் பகுதியில் வெளிப்பட்டிருக்கும். முழுப் போதையில் நெருங்கி வரும் கோபியை, குடி பழகிய ரோஸி மிகச் சாதரணமாக எதிர்கொள்வார் அவ்வளவு திடமான ஒரு பெண் கதாபாத்திரத்தை நம்மவர்களால் உருவாக்கவே முடியாது. ஸ்வப்னாடனத்தின் இறுதிக் காட்சி இன்னும் அபாரம். எல்லாம் முடிந்து வீடு திரும்பும் கோபி, தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு எதிர்காற்றில் இலக்கற்று விரைவார். படம் முழுக்க இறுக்கமாக வரும் அம்முகம் லேசாகப் புன்னகைப்பது போல எனக்குத் தோன்றியது. கே.ஜி.ஜார்ஜின் இன்னும் ஐந்தாறு படங்கள் கிடைக்கவில்லை. அவற்றைத் தேடிப்பிடித்து பார்த்துவிட்டாலே போதும். இந்த வருடம் முழுமைக்கும் செய்து தீர்க்க வேறெந்த சாதனைகளும் வேண்டாம்.
*


*

நன்றி : அய்யனார்

3 comments:

 1. கே.ஜி.ஜார்ஜ்.... கே.ஜி.ஜார்ஜ்... என்று 1983 - ரியாத் - இரவுகளில் நான் புலம்பிய அலைந்த போது, என்னோடு இணைந்து பேச ஒரே ஒரு ஜீவந்தான் அன்றிருந்தார். அது மஜீத். ஜார்ஜால் தகிப்பு கொண்டுவிட்ட எனக்கு, அத்தனையும் கொட்டி அலச ஒரு மஜீத் போதுமா? ஓராயிரம் மஜீத்தும் பத்தாதே! அப்படித்தான் ஆட்டிப்படைத்தார்... கே.ஜி.ஜார்ஜ்! இன்றைக்கு அவரது புகழை அகிராவோடு ஒப்பிட்டு கேட்கிற போது நான் கொண்ட மகிழ்வுக்கு அளவே இல்லை.
  - தாஜ்...

  ReplyDelete
 2. 1988.... லேகாயுட மரணம் ஒரு ஃப்ளாஸ்பேக், யவனிகா இந்த ரென்டு படத்தையும் போட்டுக் காட்டினார் தாஜ்.
  சினிமா, இலக்கியம் பத்தி ஒரு சுக்கும் தெரியாம இருந்த (அப்டியே இருந்திருக்கலாம்) எனக்கு கே.ஜி.ஜார்ஜ் ரொம்ப பிரம்மாண்டமா தெரிஞ்சாரு... நெறையப்பேசி படுத்திருப்பேன்னு நெனைக்கிறேன்... அதான் அண்ணன் இன்னும் மறக்கலை ;-))

  ReplyDelete
 3. தாஜண்ணே, அய்யனாரின் எழுத்தும் ரொம்ப அழுத்தமாக இருக்கும்... அவருடைய குறுநாவல் ஒன்றைத் தொடர்போல அவரது ப்ளாக்கில் எழுதினார். அதுதான் நான் முதன்முதலில் படித்த அய்யனார். பிறகு அவருடைய பதிவுகள்; முக்கியமாக திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள்/கட்டுரைகள். வாய்ப்புக் கிடைத்தால் வாசியுங்கள் (சாதிக்கிடம் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டு) ;-))))))))

  ReplyDelete