Thursday, October 2, 2014

'அஜ்னபி'யும் அழகான ஹஜ் கதையும்

அற்புதமாக எழுதும் நண்பர் மீரான் மைதீனின் 'அஜ்னபி' நாவலிலிருந்து சீரியஸான விசயத்தைப் பதிவிடுகிறேன் (சிரிப்பான ஒரு விசயம் என் ப்ளஸ்ஸில் இருக்கிறது லிங்க் இதுவல்ல!). இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்! - ஆபிதீன்
**
துன்னூன் மிஷிரி ஒருமுறை ஹஜ் செய்யப்போனார்.. அப்போது அவர் அரஃபாத் பெருவெளியில் பகலை முடித்துக்கொண்டு இரவு முஸ்தலிஃபாவில் தங்கியிருந்தபோது இரவு முழுவதும் இறை வணக்கத்தில் சிரத்தையோடு ஈடுபட்டிருந்தார். அப்படி தங்கியபோது ஒரு காட்சியைக் கண்டார் அல்லது அவருக்கு காண்பிக்கப்பட்டது. அந்த காட்சியில் ஷாம் நாட்டின் தலைநகரான தமாஸ்கஸைச் சார்ந்த அஹமது என்கிற ஒரு செருப்பு வணிகரின் முகத்தைக் கண்டார். அந்த ஆண்டில் அவருடைய ஹஜ்தான் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் ஹஜ்ஜாகும். எனினும் அஹமது இந்த ஆண்டு ஹஜ் செய்ய மக்காவுக்கு வர முடியவில்லை என்றும் காட்சியில் அவருக்குச் சொல்லப்பட்டுள்ளது.  முஸ்தலிஃபாவின் மலைக் குன்றுகளுக்கிடையேயான பரந்த பெருவெளியெங்கும் இஃகராம் ஆடை அணிந்த மனிதர்களின் கூட்டத்தில் துன்னூன் எதுவும் புரியாமல் பிரம்மை பிடித்தவரைப் போல பிரார்த்திக்கொண்டே இருந்தார். ஹஜ்ஜின் கடமைகளில் ஏதேனும் ஒன்றைத் தவறுதலாகவோ மறதியாகவோ விட்டுவிட்டாலே ஹஜ் நிறைவேறாது. ஒரு மனிதனால் மக்காவுக்கு வராமலே அரஃபாத் பெருவெளியில் முஸ்தலிஃபாவில் தங்காமல் தவாபு செய்யாமல் எப்படி ஹஜ்ஜை நிறைவேற்ற இயலும். அதுவும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் ஹஜ் காட்சியுனூடே ஒலித்த குரலில் கேட்டதை நினைத்து நினைத்து மலைப்பு இன்னும் துன்னூனுக்கு அதிகப்பட்டுப் போயிருந்தது.

துன்னூனுக்கு மனம் பொறுக்கவில்லை.. ஹஜ்ஜை முடித்துக்கொண்டு முதல் வேலையாக தமாஸ்கஸ் புறப்பட்டுப் போய் செருப்பு வணிகர் அஹமதுவைத் தேடிப் பிடித்து சந்தித்துக் கொண்டார். யாரோ ஒரு ஞானி தன்னைத் தேடி வந்திருப்பதைக் கண்ட ஏழையான செருப்பு வணிகர் அஹ்மது துன்னுனை ஸலாம் கூறி வரவேற்று உபசரித்து அன்பாக நடந்துகொண்ட நாளின் அந்த இரவில் துன்னூன் மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்.

"இந்த வருடம் நீங்கள் ஹஜ் செய்ய வந்தீர்களா?" என்ற துன்னூனின் சாதாரணமான கேள்விக்கு "வர வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன்.. ஆனால் என்னால் வர முடியாமல் போய்விட்டது" என்றார் ஏழை அஹ்மது. புன்னகைத்துக்கொண்டே துன்னூன் தனது மனதில் தோன்றி மறைந்த காட்சியும் ஒலியும் விலக்கப்பட்ட சாத்தானின் புறத்திலிருந்து ஏற்பட்டதாக இருக்கும் என்று கருதிக்கொண்டே "ஹஜ் செய்ய பேராவல் கொண்டிருந்த நீங்கள்.. ஏன் வரவில்லை?" என ஆவலோடு கேட்டார்.

"அது ஒரு பெரிய கதை.."

"என்ன கதை என்பதை நீங்கள் விரும்பினால் நான் அறிந்து கொள்ளலாமா..?"

"நான் ஹஜ்ஜுக்குப் போக வேண்டுமென்று ரொம்ப காலமாக ஆசைப்பட்டு வந்தேன். ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதற்காகப் பணம் சேர்க்க ஆரம்பித்தேன். கடைசியில் ஹஜ் செய்வதற்கான பணம் சேர்வதற்கு எனக்கு நாற்பது வருடங்களாகிவிட்டது. இந்த வருடம்தான் ஹஜ் செய்யலாம் என்று நினைத்தேன். இதுதான் நாற்பதாவது வருடம். இந்த நாற்பதாவது வருடத்தில் என் ஆசையை நிறைவேற்றக் காத்துக்கொண்டிருக்கும்போது  ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. பக்கத்து வீட்டுப் போன என் மகன் அழுதபடி திரும்ப வந்தான்.  நான் ஏனென்று கேட்டபோது பக்கத்து விட்டில் இறைச்சி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களாம். இவன் கொஞ்சம் கேட்டிருக்கிறான். அவர்கள் தராமல் என் மகனை விரட்டியிருக்கிறார்கள்.  என் பிள்ளை அழுதுகொண்டே என்னிடம் வந்து சொன்னபோது... இவர்கள் என்ன மனிதர்கள் சின்னக் குழந்தைக்குக் கொஞ்சம் கூட சமைத்த கறியைக் கொடுக்காமல் விரட்டிவிட்டார்களே என்று என் மனம் வருத்தப்பட்டது. அந்த வருத்தத்தோடு கோபமாக அவர்கள் வீட்டில்போய் மோசமாகக் கத்திவிட்டேன்.  பிறகு என் வார்த்தகளைக் கேட்டு என் பக்கத்துவீட்டுக்காரர் என்னிடம் பரிதாபமாக வந்தார். கலங்கிய கண்களோடு நாங்கள் கடந்த ஒரு வாரமாக சாப்பிடுவதற்கு எதுவுமில்லாமல் உயிர் போய்விடும் அளவிற்கு பட்டினியாகக் இருந்தோம்.. அப்போதுதான் தெருவில் ஒரு செத்த ஆடு கிடைத்தது. அதை எடுத்துவந்து நாங்கள் உணவாக சமைத்து சாப்பிட்டோம். செத்த மிருகங்கள் நமக்கு ஆகுமானதல்ல..அதை உங்கள் மகன் கேட்டதால்தான் அவனை விரட்டினேன்.. அந்த கறியை நாங்கள் சாப்பிடாவிட்டால் செத்துப் போயிருப்போம்.. ஆகையால் அந்த நிலையில் அது எங்களுக்கு ஆகுமானது. ஏனெனில் எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் செத்துப்போன ஆட்டை சமைத்தோம் என்றபோது என் மனம் பதறிவிட்டது. என்னால் தாங்கவில்லை. நான் அழுது கதறிவிட்டேன். என்னால் எனது பக்கத்து விட்டுக்காரனின் வறுமையின் கொடூர துயரத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. என்ன உலகம் இது.. பக்கத்து விட்டில் இப்படி பட்டினியாக ஒரு குடும்பம் இருக்கும்போது நாம் ஹஜ் செய்வதா என்று நான் நாற்பது ஆண்டுகளாக ஹஜ் செய்ய சேர்த்த பணத்தை எல்லாம் அவர்களிடம் கொடுத்து பிழைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். அதனால்தான் இந்த வருடம் என்னால் ஹஜ் செய்ய வர முடியவில்லை.". ஏழை அஹமது சொல்லி முடிக்க,  துன்னூன் கதறி அழ ஆரம்பித்தார்.. துன்னூனுக்கு இறைவன் ஒரு உண்மையை விளங்க வைத்தான். அது அவருக்கு ஹஜ் பற்றிய தெளிவை ஏற்படுத்தியது.

.......

இறைவன் நம் உள்ளங்களைத்தான் பார்க்கிறான். உள்ளத்தை உயர்வானதாக வைத்துக் கொள்ளாதவனின் வணக்கங்கள் எல்லாம் வீணான வேலைதான்.. பார்த்தாயா.. தமாஸ்கஸ் ஏழை அஹ்மது எதன் மூலமாக எதை அடைந்து கொண்டார் என்று. அடையாளங்களை முகத்தில் சூடிக்கொள்வதால் நாம் அதுவாக மாறிவிட முடியாது.. அடையாளம் வெறும் வேஷமாகத்தான் இருக்கும். அகத்தில் சூடிக்கொள்ளும்போதுதான் நாம் அதுவாக மாறிவிட முடியும். மனிதன் இறைவனை நோக்கிப் போகப் பார்க்கிறான். ஆனால்; ஏழை செருப்பு வணிகர் அஹ்மது நோக்கி இறைவன் போய்விடுவான்.
***
அபு ஹூசைன் என்ற அறிவார்ந்த அரபி (வினோதமான காம்பினேஷன்!) , நாயகன் ஃபைஜலிடம் சொல்லும் பகுதி. பக் : 187-189 , முதல் பதிப்பு.
***

No comments:

Post a Comment