Saturday, July 5, 2014

தென்றல் மறந்த கதை - சு.மு.அகமது

"ஏய் கெளவி அந்த சக்கரமில்லு பாய்க்கு தோப்ப உட்டு கீது.பத்து மணிக்கு பாய் வந்து தோப்ப  பாக்கப்போறானாம்.எங்கியும் பூடாதே”.சொல்லிட்டு போயிட்டாரு மாணிக்கம்.

கெளவி மாணிக்கத்துக்கு தூரத்து சொந்தம் தான்.ஊருல நாயக்கர்களும் மந்திரிமார்களும் ரொம்பப்பேர் இருந்தாங்க.எல்லாம் ஆண்டு அனுபவிச்சி ஆய்ஞ்சி ஓய்ஞ்சிப்போன கட்டைங்க.இப்போ எங்க இருக்குது அந்த படோடபமெல்லாம்.மைனர் செயின் மரிக்கொழுந்து அத்தர் ஜவ்வாது சந்தனம் ஜிப்பா எல்லாம் பூடுச்சி.இப்போ இன்னாமோ புஸ்ஸூ புஸ்ஸூன்னு அடிச்சிக்கிறானுங்க நாத்தம் புடுச்ச சென்ட்டுன்னுப்புட்டு.பாயிங்க கட்டிக்கிற லுங்கியத்தான் இவனுங்களும் 
கட்டிக்கிறானுங்க. சிங்கப்பூரு சிலோனு பாலியஸ்டர் லுங்கின்றாங்க.இடுப்புல நிக்கலன்னாலும் பில்ட்டு போட்டு கட்டிக்கினு சுத்தறானுங்க.

ஆங்...யாரோ பாய்யாமேன்னதும் கெளவி ஏதோ கைலி கட்டிக்கினு தொப்பிய போட்டுக்கினு வருவான்னு நெனச்சிட்டா.ஆனா குட்குட்டாவுலே கோணிப்பை மாதிரி கலர்ல கனம்மா பேண்ட்டும் புச்சர்ட்டும் போட்டுக்கினு சேப்பா வந்து எறங்கினவன பாத்தப்புறம் உலகம் சுற்றும் வாலிபன் வாத்யார பாத்த மாதிரி நெஞ்செல்லாம் ரொம்பிப்புடுச்சி கெளவிக்கு.இன்னாத்த சொல்றது இன்னா பண்றதுன்னு புரியாம கொஞ்ச நேரம் கல்லு மாதிரியே நின்னுபுட்டா.

“ஏம்மா நீங்க தான் தோப்புல இருக்குறதா”ன்னுட்டு பாய் கேட்டப்புறம் தான் அகலிகையா திரும்புனா.

”ஆமா எஜ்மான்” என்றாள்.லுங்கி கட்டிக்கினு தொப்பி போட்டுக்கினு இருந்தா பாய்ன்றது.கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா இல்ல பேண்ட் சர்ட்டோ போட்டுக்கினு இருந்தா எஞ்மான்றது.சாயபுமார்களுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையுண்டு.

‘ஏம்மா தோப்புல எத்தினி மரம் கீது.காப்பு எப்டி.தோப்புக்காரன் எத்தினி ராசி மரம் வச்சிக்கினு இர்க்கான்”கேள்வி மேல கேள்வியா பாய் கேடக கெளவி எதுக்கு மொதல்ல பதில் சொல்றதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் கம்முன்னு இருந்துட்டு,

“எஜ்மான் ஆயிரத்துக்கு கொறயாது.நல்லா காப்பு காச்சிக்கினு இர்க்குற மரங்க தான்.ஒரு வெட்டு தள்ளி போட்டாக்கா நல்லா இர்க்கும்.இதோ பம்ப்பு செட்டுகிட்ட இர்க்குற ரெண்டு மரந்தான் ராசிக்குன்னு மந்திரி வச்சிக்கினு கீறாரு”என்றாள்.

மெதுவாக பாயின் பின்னாலேயே நடந்துகிட்டு வந்த கெளவி பாய் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கினு வந்தா.அந்த தென்னந்தோப்பு ஞானமலை அடிவாரத்திலே மலையை ஒட்டியே இருந்தது.

பாய் திடீர்னு ”ஏம் பாட்டி அது இன்னா எல்லா மரமும் நல்லா வளந்து காப்பு காச்சிக்கினு கீது. ஷெட்ரூம் பக்கத்துல கீற மரம் மட்டும் பட்டுப்போன மாதிரி காப்பும் இல்லாம கழிசலுமில்லாம நிக்குதே.அது இன்னா எப்பவும் அப்புடிதானா.இல்ல எந்த தேவாங்காவது மருந்து கிருந்து வெச்சிபுட்டானுங்களா” என்றான்.

கெளவி பாய் காமிச்ச மரத்த கொஞ்ச நேரம் கண் கொட்டாம பாத்துக்கினே இர்ந்தவ கண்ணுல தண்ணீ வர ஆரம்பிச்ச நெலமைல,
“இல்லீங்க எஜ்மான் அது பெரீய்ய கதன்னு” ராகத்தோட ஆரம்பிச்சா.

ஏதோ விசயம் மட்டும் இர்க்குற மாதிரி பாய்க்கும் பட்டுச்சி.அதனாலே கெளவி இன்னாத்த தான் சொல்றான்னு காது குடுத்து கேக்க ஆரம்பிச்சான்.

மலச்சரிவிலேர்ந்து சரிஞ்சி வந்த காத்து தென்ன மரத்துங்க மேல மோதி வலுவில்லாம மறுபடியும் தென்னமரத்துலேர்ந்தே தென்றல் காத்தா மாறி பாயின் ஒடம்ப தொட்டப்ப சிலுசிலுப்பா இர்ஞ்சி பாய்க்கு.கெளவியைவே வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கினு இர்ந்தான்.

புதுப்பாளையின் நுனி கண்ணுக்கு தெரிஞ்ச்சி.பச்சையுமில்லாம சாம்பலுமில்லாம ஒரு கலரு.நங்கூரம் பாச்சிட்டு நெலையா நிக்குற பாய்மரக்கப்பலின் ஒரு முனையாட்டம் கூராய் நீட்டிக்கினு இர்ந்தத கண்ணம்மா பல்லு வெளக்க வேப்பங்குச்சி ஒடைக்க போறப்ப தான் கவனிச்சா.ஒடனே மஞ்சள கொழச்சி தென்ன மரத்து அடிக்கால்ல வட்டமா வட்டம் போட்டு குங்குமப்பொட்டு எல்லாம் வெச்சிட்டு தேங்காய ரெண்டா சரிபாதியா ஒடச்சி வச்சிட்டு கற்பூரத்தை கொளுத்திபுட்டு உளுந்து உளுந்து கும்பிட்டுக்கினா.மரத்துக்கு வேப்பில பாவாடை கட்டி வச்சிட்டு ரவிக்க மட்டும் போட  மறந்துட்டா.உரிமை மறுக்கப்பட்ட பொம்பள மாதிரி தலைய குனிஞ்சிக்கினு இர்ந்துச்சி அந்த தென்ன மரம். அஞ்சு வருசத்துக்கு  முன்னாடி ஆம்பூர்ல வெள்ளிக்கெழம சந்தையில வாங்கியாந்து அடுத்த நாளு நல்லால்லைன்னு நாள் பாத்து ஒன்றைக்கு ஒன்றை குழிவெட்டி ஆத்து மணல்ல கல்லு உப்பு கலந்து போட்டு அந்த தென்னங்கன்ன நட்டது வெள்ளையன் தான்.

”அஞ்சு வருசத்துல காப்பு காய்க்கும்னு சொல்லிக்கீறான்”நம்பிக்க தெரிஞ்சிச்சி அவன் சொன்னதில.இவெ மட்டும் அப்புராணி மாதிரி,“உப்பு போட்டு நட்டுக்கிறீயே கரிக்காதான்னு’’கேட்டப்ப தான் இவனுக்கு சிரிப்பா வந்திடுச்சி.

“எல்லாம் பாலாத்துல ஒரு வாட்டி தண்ணீ வந்திச்சின்னா உப்பு கிப்பு எல்லாம் கரிஞ்சிபுடுது”ன்னான் இவனும்.ஏதோ பாலாத்துல வெள்ளம் வந்தாக்கா ஒரு கிலோமீட்டர் தூரத்துல இவன் நட்டுக்கீற தென்னமரத்துக்கு நேரா தண்ணீ வந்துபுடுற மாதிரி நெனப்பு அவனுக்கு.

இப்ப...தென்ன மரத்துல கூட பூ பூத்திடுச்சி.ஆனா பாலாத்துல தண்ணீயே வரல.பத்தாததுக்கு கெணத்துல கீற தண்ணீ கூட உப்பு மாதிரி கரிச்சிக்கினு இர்க்குது.இன்னாமோ ’இப்புளாயிண்ட்’ன்றான்ங்கோ.தோல் ஷாப்புல தோல களுவி ஆத்துல அப்புடியே உட்றான்களாம்.அது அப்பிடியே கீள போயி கெனத்துல கீற தண்ணீ கூட கனிஷன் பண்ணிக்கினு உப்பாயிக்கினே வர்துன்றாங்கோ.இன்னாமோ போ...சலிச்சிக்கினு தான் வாழ்க்கைய ஓட்டிக்கினு கீறா கண்ணம்மா.

வெள்ளையன் ஆம்பூர் சந்தைக்கி போய்ட்டு வந்தாலே எதாவது புது விசயத்தோட தான் வருவான்.நேத்து கூட இன்னாமோ வந்து சொல்லிக்கினு இர்ந்தான்.ஏதோ சோலூர்ல டேனரியாம்.கச்சரா தண்ணீய சேரிப்பக்கமா திருப்பி உட்டுர்றாங்களாம்.கம்பெனி காம்பவுண்ட்டுக்கு பக்கத்துலேயே ஊடுங்க இருக்குறதால கச்சரா தண்ணீயெல்லாம் சேந்து கச்சரா தொட்டி மாதிரி ஆயி அதுலயிருந்து கொசு பிசு எல்லாந் சேந்துக்கினு கடிச்சி ரெண்டு பசங்களுக்கு காலே பூட்ச்சாம்.இன்னாமோ ’போலியா’வாம்.

ஒலக விசயமெல்லாம் தெரிஞ்சிக்கினு கீது.ஆனா என் வவுத்த ரொப்புற விசயம் மட்டும் தெரியாம பூட்ச்சி அதுக்கு.இல்லேன்னா இந்நேரத்துக்கு ஒண்ணோ ரெண்டோ ஓடிக்கினு ஓடியாந்துக்கினு இர்க்கும்.பெர்ஸ்ஸா ஒரு பெருமூச்சு உட்டதுதான் மீஞ்ச்சி கண்ணம்மாவுக்கு.

வயசுக்கு வந்து இன்னா ஏதுன்னு தெரியறதுக்கு முன்னாடியே வெள்ளையனுக்கு புட்ச்சி கட்டி வச்சுபுட்டானுங்க.அதான் ஒன்னுந்தெர்ல.ஒரு பொண்ணு பெரியவளா ஆனா ஒரு ஓரமா குந்தவச்சி புதுசா பாக்காதத பாத்துப்புட்ட மாதிரி இன்னா இன்னாமோ செஞ்சிபுடறாங்க.அது பாவம் பயிந்து போயி அரக்க பரக்க முழிச்சிக்கினு இர்க்கும் பாருங்க,ரொம்ப கோடூரமா இர்க்கும்.அதே கொஞ்சம் ஜாஸ்தியாயி பொண்ணு பேசாம கம்முனு இர்ஞ்சின்னா இன்னாமோ காத்தோ கருப்போ அடிச்சிப்புடுச்சிடான்னு அலட்டிக்கினு கொட்டாங்குச்சியில உப்பு புளி காஞ்ச மொளகா எல்லாம்  வச்சி அவ தலைய சுத்தி ஒடம்ப சுத்தி ‘அந்த கண்ணு இந்த கண்ணு’அது இதுன்னு எதாவது பெணாத்திபுட்டு கடேசில அத்தயெல்லாம் அடுப்புல போட்டு கொளுத்திப்புடுவாங்க.அது டப்டிப்ன்னு வெடிக்குறத பாத்து,“பாரு எவ்ளோ கண்ணு திஷ்டி பட்டுக்கீது.அதான் புள்ள பெணாத்துதுன்னு”ப்புட்டு பச்ச ஓல மறப்புல வேப்பங்கொழுந்து மாங்கொழுந்து எல்லா கொழுந்தும் கட்டிப்புடுவாங்க.போற போக்குல ‘புள்ள ஒடம்ப தேத்துங்கடி”ன்னு ஒரு கெழசு சொல்லிப்புட்டு போயிடும்.அவ்ளோ தான்.ஒரே வாரத்துல அந்த பொண்ணு பாக்காதத எல்லாம் திண்ணாதத எல்லாம் குடுத்து குடுத்து அது ஒம்பாம வாந்தியெடுத்து ஒடம்பே எளச்சிடும்.அப்ப கூட கொஞ்ச நஞ்சம் ஒடம்புக்கு ஒத்துக்கினு ஒடம்பு பூசிப்புடும்.

இதெல்லாம் அனுபவிக்காமலேயா கண்ணம்மா கண்ணாலம் கட்டிக்கினு வெள்ளையன் கூட வாழ்க்கைய ஒப்பேத்திக்குனு இர்க்குறா.பூசுன ஒடம்பு.செகப்பா இருக்குற மாதிரி தெரியிற கலரு.பாத்தா பாக்கச்சொல்லும்.பேசுனா பேச சொல்லும்.கலரு கம்மியா கீறவங்களுக்கு பொறாமைல பிஞ்சிப்புடும் செருப்பு.என்னா இர்ந்து என்னா.புள்ளக்குட்டிக்கான வலியத்தான் காணோம்.இந்த கோராமையை எங்க போயி சொல்றது.புரியாமத்தான் இவ்ளோ நாளா ஒப்பேத்திக்கினு 
இருக்குது கண்ணம்மா.

வெள்ளையன் மாடு மாதிரி தான் வேலய செய்றான்.ஒடம்பு சும்மா கர்லா கட்ட மாதிரி ‘கன்’னா இர்க்குது.இன்னா இர்ந்து இன்னா.அவனுக்கு இன்னா கொறன்னே தெரிலே.எல்லாந் நல்லாத்தான் கீதுன்றாங்க.ஆம்பூர்ல டாக்டரு பாத்துப்புட்டு, “இன்னாம்மா அவனுக்கு இன்னா நல்லா கீறான்.போம்மா கொஞ்ச நாள்ல சரியா புடும்”ன்னு சொல்லி அனுப்பிபுட்டாரு.

ம்..ஆயி பூட்ச்சே அஞ்சி வருசத்துக்கும் மேல.அவன் வச்ச தென்ன்ங்கன்னு பூத்திடுச்சி.அது பூத்த நேரந் நல்லா இர்ந்து தனக்கு ஏதாவது வயிறு ரொம்புதா பாக்கலாம்ன்னுட்டு ரொம்ப நம்பிக்கப்பட்டு பூட்டா கண்ணம்மா.

இப்பிடி தான் ஏதோ ரோசனைல கண்ணம்மா ஒக்காந்துக்கினு இர்ந்தப்ப வந்து சேர்ந்தான் அந்த ‘பாடாலப்பான்’ கிஸ்ணண்னு பேரு வச்சிக்கினு.எல்லாம் அதே வேலைய்ங்க.வாத்யாரா கீறானாம்.அதோ ஊட்லேர்ந்து பாத்தா தெரியிதே மஞ்சள் கலரு பில்டிங்கி அத்தாங் உஸ்கோலு. தெனிக்கும் வேலூர்லர்ந்து வந்து போறதுக்கு கஸ்டமா கீதுன்னுட்டு இங்க தங்கறதுக்கு ரூம்பு  வாடிகிக்கு வேணும்னு கேட்டுக்கினு தான் நொழஞ்சிச்சு அந்த ஆமே.குள்ளமா இர்ந்தான்.வெள்ளையன் 

கர்லாக்கட்டைன்னா இவன் தமுக்குக்குச்சி மாதிரி.கன்னம் கூட ஒட்டிக்கினு தான் இர்ஞ்ச்சி.பீடி கீடி குடிக்கிறானோ இன்னாவோ.அப்புறந்தான் தெரிஞ்ச்சி  சிசர்ன்னு இன்னாமோ வெள்ள பீடி குடிக்கிறான்னுட்டு.அதில்லாம பட்டை வேற போட்டுக்கினு அவன் ஆடுன ஆட்டம் கீதே,யப்பா போதும்டா சாமி.ஒலகமே காரி துப்பிச்சே. அன்னிக்கி உஸ்கோலு பசங்கயெல்லாம் வந்து பாத்துட்டு பாத்துட்டுப்போச்சிங்க.

எல்லாந் அந்த கொஞ்ச நேர சபலந்தான் காரணமா இர்க்கும்னு நெனக்கிறேன்.

தென்ன மரத்துல பால போட்டுடிச்சிடா சாமி.நேரந் நல்லா இர்க்கும்னு பாத்தா எவன் நொள்ளக்கண்ணு பட்டுச்சோ தெரியில “அரிக்கண்ணு சொறிக்கண்ணு.அம்பன்கண்ணு நொள்ளக்கண்”ணா போன மாதிரி வாழ்க்க மாறி பூட்ச்சி.

ஏதோ வாத்தியாச்சே பசங்களுக்கு நல்லது சொல்லி தர்ற பொழப்பாச்சேன்னு பாத்தா அவன் “மாரு வரிக்கும் நனயுமா மாராப்பு நழுவுமா”ன்னு மோப்பம் புடிக்கிற மொசக்குட்டி மாதிரி புசுபுசுன்னு சிலுப்பிக்கினு இர்ப்பான்.அது ஏதோ இவெ செஞ்ச புண்ணியமோ இன்னாமோ ரொம்போ நாள் வரிக்கும் இளுத்துக்கினு வந்துட்டா.

இன்னா தான் இர்ந்தாலும் இவனுக்கு ரூம்பு வாடிகிக்கு குடுத்திருக்கக்கூடாது.வந்து பாத்துட்டு போன மூணாந் நாளே வந்து நொளஞ்சிடிச்சி ஆமே.வீடே வெளங்காம போப்போவுதுன்னு அப்போ தெரியாம பூட்ச்சி.

உஸ்கோல்லர்ந்து வந்ததும் எதாவது ஒரு பொஸ்தகம் எடுத்துக்கினு மாங்காமரத்துக்கு அடிலே போய் ஒக்காந்துபுட்டா வெள்ளை பீடி எரிஞ்சிக்கினே இர்க்கும்.இந்த நாத்தம் தான் இவெ வாழ்க்கையையே நாறடிச்சிட்ச்சி.வெள்ளையன் நாளெல்லாம் ஒளச்சி வேர்வை நாத்தத்தோட தான் வீட்டுக்கே வருவான்.குளிச்சாலும் பாசப்பெணப்பு அதிகமா பூட்ட மாதிரி பின்னிப்பெணஞ்சி புட்டிருக்கும் வாசனை மட்டும்.

தெனிக்கும் ஞானமலைல பொட்டி பாடுற பாட்டு “அத்தரும் ஜவ்வாதும் அள்ளித்தெளித்தும் அங்கம் மணக்கவில்லையே முருகையான்”றது கேட்டுக்கினு தான் இர்க்கும்.இன்னா இர்ந்தாலும் அந்த மாதிரி ரோசனை பண்ணி பொழப்ப நடத்தற புத்தி இன்னும் அவளுக்கு வர்ல.அதாங் வெள்ளை பீடி வாசனை இன்னாமோ பண்ணி புடுச்சி அவள.

அது மட்டுந் தானா...

சக்கர மில்லுல சனிக்கெழம ரோசாப்பூ ரவிக்கைக்காரி பயாஸ்கோப் பாத்துப்புட்டு இப்டி கூட ஒரு பொம்பள இருப்பாளான்னுட்டு காறி துப்பிக்கினே வந்தவ தானே இப்போ தரய்ய கூட பாக்க முடியாம அளுதுக்கினு இருக்கிறா.

பாவம் வெள்ளையன்.அவனுக்கு எப்டி இர்ந்திருக்கும்.அந்த கன்றாவிய பாத்ததும் இடிஞ்சிப்போயி ஒக்காந்துடிச்சே.அதும் மூஞ்சே பாக்கவே தெம்பில்லாமத்தான் ஓரமா ஒக்காந்துக்கினு தரைய பாத்துக்கினு கீறா கண்ணம்மா.

அன்னிக்கு ஞாயித்திக்கெழம.வெள்ளையன் காலையிலேயே கழனிக்கு ‘சால்’ அடிக்க போயிட்டிருந்தான்.இவே எப்பவுமே காலையிலேயே குளிச்சிடறவ.அன்னிக்குன்னு பாத்து வெயிலு ஏறனப்புறம் குளிக்கிறதுக்கு போனா.வானம் பாத்த பாத்ரூமுக்கு ஆறடி ஒசற சுத்துச்சுவரு மட்டுந்தான் தடுப்பு.கையில மொடஞ்ச தென்ன ஓலப்பாயி தன் தடுக்கு தடுப்பெல்லாம்.அது மேல துணிய போட்டுப்புட்டு உள்ளாற போயிட்டா யாரோ குளிக்கிறாங்கன்னு அர்த்தம்.

உள்ள போனவ வெயிலு அதிகமா கீதுன்னுட்டு மொத்த துணியையும் கழட்டிபுட்டு நாலு சொம்பு பச்ச தண்ணிய ஒடம்புக்கு போட்டுக்கினு தலைக்கு போட தலைய தூக்குனப்ப தான் பாத்தா மொட்டை மாடில அந்த கம்முனாட்டி நின்னுன்னு இர்ந்தத.பெதறிப்போயி துணிய இளுத்து மேல போட்டுக்கினு வெளியே ஓடியாந்தவ ரூமுக்குள்ள நொளயறப்ப தான் பாத்தா அவன் இவுளுக்கு முன்னாலயே வந்து அங்க நின்னுகினு இர்க்கான் அரக்கனாட்டோம்.அவன் கண்ணு செவப்பா நெருப்புத்துண்டாட்டம் எரிஞ்சிக்கினு இர்ஞ்ச்சி.

அவன் அவள தொட்டப்ப பயந்து ஒதுங்குனவள அப்பிடியே கோழிக்குஞ்ச அமுக்குற மாதிரி அமுக்கி...மேல எதுவும் நடக்குறதுக்குள்ள நல்ல வேளை கண்ணாயிரம் தாத்தா இத்தய பாத்துப்புட்டாரு.

”டோய்...இன்னாடா அக்குறும்பா கீது.வெள்ளையா வெள்ளையா”ன்னு கொரல குடுக்கவும்  வெள்ளையன் சால் அடிச்சிட்டு திரும்பி வந்துக்கினு இர்ந்தவன் வேகமா ஓடியாந்தான்.அலங்கோலமா கண்ணம்மாவையும் கூடவே கிஸ்ணணையும் பாத்த வெள்ளையன் இன்னா செய்யிறதுன்னு புரியாம ஒக்காந்துட்டான்.

கண்ணாயிரம் தாத்தா தான் போயி தகவல நாட்டாமைக்கிட்ட சொல்லியிருக்கனும்.நாட்டாமை கோயிந்தன் வந்து சேர்ந்தான்.ஊரு சனமெல்லாம் வந்தாங்க.கிஸ்ணண தென்னமரத்துல கட்டி வெச்சி நொங்கு நொங்குன்னு நொங்கினாங்க.அப்ப கூட அமைதியா தான் இர்ந்தான்.ஒரே வார்த்த கூட பேசல.உஸ்கோலு பசங்க வந்தானுங்க.பாத்தானுங்க.போனான்ங்க.அவங்க வந்தப்ப தான் தலைய கமுத்திக்கினு கீளயே இன்னாத்தியோ பாத்துக்கினு இர்ந்தான்.சாய்ங்காலம் வரிக்கும் அந்த தென்ன மரத்துலேயே கட்டி வச்சிருந்தாங்க அவனை. 

எல்லாம் பைசல் பண்ணி உஸ்கோல்லேர்ந்து வாத்திய தூக்கிட்டானுங்க.அதுக்கப்புறம் அவன் எங்க போனான் இன்னா ஆனான்னே யாருக்கும் தெரில.கண்ணம்மாவும் வெள்ளையனும் கூட இந்த தோப்ப மந்திரிக்கு வித்துட்டு எங்கேயோ போயிட்டாங்க.

”இப்ப ஏதோ ஆரணி பக்கத்துல இர்க்குறதா சொல்லிக்கிறாங்க”ன்னு கெளவி சொல்லி முடிக்க பாய் எளுந்து குட்குட்டாவை ஸ்டார்ட் பண்ணி கெளம்பவும் சரியா இர்ஞ்சி.

குட்குட்டாவை மெதுவா ஓட்டிக்கினே இஸ்மாயில் அவனுக்கு எடப்பக்கமா மஞ்ச கலர்ல தெரிஞ்ச அந்த உஸ்கோலையே வெச்ச கண்ணு மாறாம பாத்துக்கினே இர்ந்தான்.காவல் கெளவி சொன்ன கத மனசுல இன்னாமோ செஞ்சிச்சு.அது உண்மையா இர்க்குமா.இவன் இந்த உஸ்கோல்லத்தான் படிச்சான்.பத்தாங்கிளாஸ் படிக்கிறப்ப தான் கிஸ்ணண் வாத்தியாரு வந்தாரு.பாரதியாரோட புதுமைப்பெண்,பாரதிதாசன் கவிதைகள்னு எல்லாத்தையும் சொல்லிக்குடுத்தாரு.ரொம்ப நல்லா புரியுற மாதிரி சொல்லிக்குடுப்பாரு.அமைதியா இர்ப்பாரு. 
ஒரு நாள் இவன் பாத்ரூம் பக்கமா போனப்ப இவனப்பாத்ததும் அவசர அவசரமா எதையோ  கீள போட்டு கால்ல நசுக்கினாரு.

“இன்னா தம்பி இன்னும் இண்டர்வெல் விடலியே.நீ ஏன் வந்தே’ன்னாரு பதறின தொனியில்.

“சார் ஒண்ணுக்கு அவசரமா வந்துச்சி.அதாங் கேட்டுக்கினு வந்துட்டேன்’னு சொன்னவன் கண்ணிலே அந்த சிகரெட் துண்டு பட்டுச்சி.

திரும்பி வரும் போது தான் ஸ்டாப் ரூம்ல வாத்யாரு சேர்ல ஒக்காந்துக்கினு குனிஞ்சி எதோ படிச்சிக்கினு இர்ந்தத பாத்தான்.தூரத்துல சரளா டீச்சரும் ஒக்காந்துக்கினு இர்ந்தாங்க.இவுரு எப்பவுமே டீச்சருங்க கிட்ட கூட பேசறதில்ல.தலைய குனிஞ்சிக்கினு நடந்தார்ன்னா மேல கூட பாக்க மாட்டாரு.

நெனவலைங்க எங்கெங்கேயோ பறந்து போயி திரும்பி வந்தப்ப இஸ்மாயிலுக்கு மனம் கனத்துப்போன மாதிரி இர்ஞ்ச்சி.கெளவி சொன்ன வாத்தியாரும் இவரும் ஒருத்தரா இருக்க முடியுமா.எப்டி நம்புறது.எதுவுமே புரியற வரைக்கும் புரியாத புதிர் தான்.ஒரு வேளை அந்த  தென்னமரந்தான் இதுக்கு சரியான பதில தருமோ என்னமோ.

அடுத்த நாள் அந்த தென்ன மரத்த பாத்தப்போ, தான் ஒரு வன்செயல பாத்துப்புட்டு எதுவுஞ் செய்ய முடியாம போனதால மனம் வெதும்பி பூக்கிறதையும் காய்க்கிறதையும் மறந்து போயிட்டேன் நானுன்னு சொல்ற மாதிரி இர்ஞ்ச்சி அதோட மௌனமொழி.இவனுக்கு மட்டும் அந்த மொழி புரிஞ்சிச்சி.யாருகிட்டயோ தன் பாரத்தை எறக்கி வச்சிட்ட சந்தோஷத்துல மெதுவா தலையசைச்சிச்சி அந்த தென்னமரம்.

லேசாக தென்றல் காற்று இவன தழுவனப்ப தான் மனசு லேசாகி ஏதோ கசிய ஆரம்பிச்சிச்சி இவனுக்குள்ள.
***
நன்றி :  சு.மு.அகமது | https://www.facebook.com/musthaqsyedahmed/
***
மேலும் சில சிறுகதைகள் :
மருதாணிப்பூக்கள் - http://malaigal.com/?p=5226
சிறை பட்ட மேகங்கள் - http://abedheen.blogspot.ae/2014/05/blog-post_26.html

7 comments:

  1. அன்பு கொண்ட முஸ்தாக்
    உங்களது
    'தென்றல் மறந்த கதை'யை
    வாசித்து, திரும்பவும் வாசித்து
    இரண்டு நாட்களாகிறது.
    இன்றெழுதலாம்...
    இன்றெழுதலாம்...என்று
    நாட்கள் கடந்துவிட்டது.

    உங்களது கேரியரில்
    இது வித்தியாசமான கதை..
    அசோகமித்திரன் நடையில்
    லேசாய்
    கதையை நகர்த்துபவர் நீங்கள்,
    இதனின்
    மண்ணின் மணத்தோடு,
    அதன் மொழியோடு,
    சிறக்க எழுதி இருக்கின்றீர்கள்!

    இதில் கதைச் சொல்லி கிழவி
    மிக நேர்த்தியாக
    முன் கதையை சொல்லும்விதம்
    அபாரம்.

    உங்கள் பக்கத்திலுள்ள
    மலைகளையும்
    அதன் இயற்கை வசீகரமாய் கவரும்
    தென்றலையும்
    நீங்கள்
    சொல்லி இருப்பது நேர்த்தி!

    ஆம்பூர் பக்கமுள்ள
    தோல்பதனிடும் தொழிலால்
    சுற்றுச் சூழல் மாசுப்படுவதை
    இன்னும்
    அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
    ஏனோ விட்டு விட்டீர்கள்!

    வாழ்த்துக்கள்.

    - தாஜ்

    ReplyDelete
  2. என்னருமை ஆபிதீன்!

    வெள்ளெயன் கண்ணம்மா, வாழ்வில் ஒரு 'பொட்டு' நிகழ்வெ என்ன அழகாகத்தான் அகமது சொல்லிப்புட்டாரு. இப்படிக் கதெ சொல்ல எத்தன பேருக்கு வரும்.

    ஒரு குண்டு மல்லிப் பூவளவு கதெ. கெளவி, கிஷ்ணன், கண்ணாயிரம் தாத்தா, மாணிக்கம், பாயி என்று ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு மணம். ஒரு வரியிலேயே கதா மாந்தர்களை அப்படியே தன்ட கதெயில கட்டிப் போட்டாரு. அவருக்குக் கிடெச்ச தருணம் நமக்குக் கிடக்கலியே. எதுவுமே புரியிற வரைக்கும் புரியாத புதிர்தான். கண்ணம்மாட புதிர தென்ன மரந்தான் சொல்லணும்.

    இந்த மாதத்தில ஆபிதீன் பக்கங்களுக்குக் கிடெச்ச அருட்கொடெதான் தம்பி அகமதுட கதெ என்பேன். அகமதுட கையப் புடிச்சி முத்திக்கணும் போல. அவரெப் பத்திய மேலதிக தகவல் ஏதாவது தர முடியுமா?

    அன்புத் தம்பி தாஜ்!

    தோல் தொழில் பற்றி சுப்ரபாரதி மணியன் எழுதாத எதைத்தான் நாம் எழுதப் போகிறோம்! ஒரு மயிராண்டியும் என்னெண்டு கேக்க மாட்டான். பாவப்பட்ட மக்கள் செத்து மடிய வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. என்னயெல்லாம் இப்படி பாராட்ட மாட்டேங்கிறீங்களே காக்கா.. கொடுத்து வைத்தவர்தான் முஸ்தாக். அவரை முகநூலில் பிடித்து 'மொத்துங்கள்'! முகவரி : https://www.facebook.com/musthaqsyedahmed

    ReplyDelete
  4. ஹனீஃபாகா... முகநூலில் உங்களை வலிய நட்பு கொண்டேன். ஏனோ நீங்கள் கிழமைகளில் பதிவிட மாட்டேன் என்கிறீர்கள். சரி. முகநூல் வாருங்கள் பேசுவோம். அல்லது இ..மெயில் முகவரி அனுப்பித் தாருங்கள். நன்றி. -தாஜ்

    ReplyDelete
  5. இரண்டு நாட்களாக கணிணி பக்கமே வரவில்லை.அதற்குள் நிறையவே நிகழ்தேறியிருக்கிறது.
    என்ன சொல்வதென்றே புரியவில்லை.வார்த்தைகள் சிக்காமல் நழுவுகின்றன.மூத்த எழுத்தாளர் எஸ். எல். எம். ஹனீபா அவர்களது பாராட்டும் நண்பர் தாஜின் பின்னூட்டமும் நெகிழ வைத்தன.”காக்கா என்னை இப்படி பாராட்டவில்லையே”என்று நீங்கள் எழுதியதையே உங்களிடம் நானும் கேட்கிறேன்.”ஆபிதீன் வாயால் ...”

    ReplyDelete
  6. சந்தோஷமா இருக்கு அகமது.
    சரியான மரியாதை.
    நவீன இலக்கியத்தை முன்வைத்து
    ஹனிஃபாக்கா நமெக்கெல்லாம் தலைதான்!
    - தாஜ்

    ReplyDelete

  7. அன்பிற்கினிய சகோதரர் ஹனிபா அவர்களுக்கு,
    அஸ் ஸலாமுன் அலைக்கும்.

    ஆபிதீன் பக்கங்களில் எனது சிறுகதையை படித்துவிட்டு நீங்கள் உங்களது கருத்தை
    பதிந்தமை அறிந்தேன்.

    கூடவே உங்களது ‘மக்கத்து சால்வை”யை நான் வாசித்து முடித்ததும்
    சி.சு.செல்லப்பாவின் “வாடிவாசல்’ நினைவுகள் வந்தது.

    எனக்கு வார்த்தைகள் சிக்கலுறும் போது அமைதி காப்பேன்.அதே அமைதி தான் தங்களது
    கீழே கண்ணுறும் பதிவை கண்ட பின்னும் ஏற்பட்டுள்ளது.முதல் கடிதம்.எப்படி
    துவக்கி எப்படி முடிப்பதென்று தெரியவில்லை.இருப்பினும் தொடர்ந்து தொடர்பில்
    இருக்க மட்டும் முழுமனதுடன் முயற்சித்தபடியே இருப்பேன்.

    தாஜ் பாய் உங்கள் அன்புக்கு நன்றி.

    அன்புடன்,
    சு.மு.அகமது (முஸ்தாக்)

    ReplyDelete