Wednesday, July 2, 2014

காதர்பாய் டீ கடை - (ஜாலியான) தாஜ்பாய்

'டீக்கடை' என்றே சிராஜ் என்ற சகோதரர் ஒரு தளம் வைத்திருப்பதை இன்றுதான் பார்த்தேன்.  'மார்க்கமும் வரம்பு மீறா நகைச்சுவையும்' உள்ள தளம் அது. நம் தளம் அப்படியல்லவே... வம்பு செய்யாத கவிஞர்கள் கூட வரம்பின்றி கதை ஆத்தலாம் இங்கே! கதையில் வரும், 'பிறமதச் சகோதர்களை, இஸ்லாமிய இளைஞர்கள் 'மாப்ள, மச்சான், அண்ணன்' என்கிற அடைமொழி கொண்டு இணக்கம் காட்டியே பேசுவார்கள்.. ஆனால், இவர்கள் தங்களுக்குள் ஒரு நாளும் அத்தகைய  இணக்கத்தையோ ஒற்றுமையோ காட்டிக் கொள்ள மாட்டார்கள். எப்பவும் வாடா போடாதான், முரண்தான்.' என்ற கிண்டலை மிகவும் ரசித்தேன். பின்னே வெட்டித்தனமாக இதற்குமா சண்டை போடுவார்கள், அதுவும் நோம்பு நேரத்தில்? 'தங்கல் அமீர்' குறுநாவலை சிரத்தைக் கொண்டு எழுதினேன்; வாசகர்களிடம் எதிரொலிப்பு இல்லை. அதனால் இப்படி வலியற்று எழுதுவோம் என்று எழுதி இருக்கிறேன்' என்கிறார் தாஜ். அதற்காக , வாசகர்களுக்கு வயிற்றுவலி உண்டு பண்ணலாமா கவிஞரே? -  ஆபிதீன்
**

காதர்பாய் டீ கடை

தாஜ்
-------

ஊர் பெரிய பள்ளிவாசல் எதிரே உள்ள கடைத் தொகுப்பொன்றில் டீக்கடை போட்டிருந்த காதர்பாயிக்கு வியாபாரம் அவ்வளவு சுகமில்லை. சௌதியில் இருந்து 'ஒன்வே'யில் திரும்பியவர், வீட்டில் உட்காரப் பிடிக்காமல் இந்தக் கடையை வைத்தார். அது அவரை ரொம்பவும் சோதித்தது. பள்ளிவாசலுக்கு எதிரே டீக்கடை இருந்தபடியால், தொழப்போகும் பெரியவர்களில் சிலர் 'காதர் சக்கரை கம்மியா ஒரு டீ' என்றளவில் அங்கு வந்து போனார்களே தவிர, மற்றவர்களின் வருகை சொல்லும்படி இல்லை. குறிப்பாய் இளைஞர்களின் வருகை ரொம்பவும் கம்மி. கடைக்கு பெரியவர்கள் வந்து போய்கொண்டிருப்பது இளைஞர்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கலாம். தவிர, பிற மதத்தவர்களின் வருகையும் கூட சகஜமாக இல்லை. எல்லா தரப்பு மக்களும் வந்து போகிறமாதிரி ஓர் இடம் பார்த்து கடையை மாற்றணும் என்கிற தீர்மானம் சில மாதங்களாகவே காதர்பாயிக்கு இருந்தது. இடம் தேடி காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார்...   

அதே மெயின்ரோட்டில் வடக்கில் நாலு தெரு தள்ளி, புதிய தெரு ஒன்றின் முனையில் கடை கிடைக்க, தன் கடையை அந்த இடத்திற்கு மாற்றினார். பழைய கடையில் இருந்த டீ மேஜை, புரோட்டா மேஜை, வடை போண்டாக்களை சுட்டு அடுக்கிவைக்கும் கண்ணாடி ஸ்டால் ஆகியவற்றை இடம் மாற்றுவதென்பதுதான் புதிய கடை நிர்ணயிப்பின் பெரிய வேலை! மத்தப்படி கடைக்கு வேண்டிய அடுப்பு என்பதெல்லாம் இடம்கண்ட இடத்தில் சேற்றாலும் செங்கல்லாலும் வேண்டிய உயரம் தூக்கி மேலே மூன்று குமிழ் வைக்கும் சங்கதி! அரைநாள் வேலை!..மற்றப்படி, பழைய கடையில் இருந்து எடுத்துவரப்பட்ட ஏழெட்டு பிளாஸ்டிக் ஸ்டூல், ஒடிந்து ஆணி அறைந்து சரிசெய்யப்பட்ட மூன்று விசுப்பலகை, (கடைக்கு வெளியே போட அதில் ஒன்று கட்டாயம்) மேலே பொக்கை கண்ட இடங்களில் கீற்று அடுக்கு!. அவ்வளவுதான். டீக்கடை ரெடி

புதிய இடத்தில் நாலு தெருவின் இளைஞர்களும் தாராளமாக வந்தார்கள். காலை ஆறரை மணி தொடங்கி அங்கு வந்து கூடும் இளைஞர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்கள்! அவர்கள். எட்டு எட்டரை வரை 'வாடா போடா' போட்டு சுதந்திரமாய் பேச்சோ பேச்சென்று பேசி, இடையிடையே தங்களது அரசியலையும், ஊர் நடப்பையும் தீர அலசித் தீர்ப்பார்கள் கட்டாயம் ஆளாளுக்கு இரண்டு மூன்று டீயும், வடையும் சாப்பிட்டு, 'தம்' அடித்து புகை பரப்பியபடி பேச்சில் சுவாரசியம் கொள்வார்கள். இந்த இளைஞர்கள் வருவார்கள் பேசுவார்கள் என்றாலும் குழுக் குழுவாகத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். சமீப காலமாய் இஸ்லாத்தில் பல்வேறு அரசியல் மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள் வளர்ந்துவிட்டபடியால், இப்படியான பிரிவுகளும் அவசியமென ஆகிப்போனது. .ஏந்தவொரு இயக்கமும் இல்லாத அசலான 'ஈமாந்தாரிகளான' தப்லிக்காரர் கூட இங்கே டீ குடிக்க வருகிற போது இன்னொரு தப்லிக்காரரைத் தேடிப் பார்த்தே அமர்ந்து பேசவே நினைப்பார்... . 

காதர்பாயின் புதிய கடையை ஒட்டிய இறக்கத்தில் கார் பழுதுபார்க்கும் நாலு மெக்கானிக் ஒர்க் ஷாப் இருந்தது. அங்கே வேலை செய்பவர்கள் மட்டுமில்லாது, ஒர்க்‌ஷாப்பில் பழுதுபார்க்க வாகனங்களை விடவும் எடுத்துச் செல்லவும் வருபவர்கள் இந்த டீ கடைக்கு எந்நேரமும் வருவதும் போவதுமாக இருந்தபடியால் கடையின் வியாபாரம் குறைவில்லாமல் இருந்தது..அதனால்தான் என்னவோ காலையில் கடைக்கு வந்து, அங்கேயும் இங்கேயும் நின்றபடிக்கும் உட்கார்ந்தபடிக்கும் கண்டதையும் பேசும் தனது இன இளைஞர்களை காதர்பாய் கண்டு கொள்வதில்லை. பொதுவாக அவர் சுபாவமும் அப்படித்தான்!

ஒர்க் ‌ஷாப்பில் இருந்தும் இன்னும் பல இடங்களிலிருந்தும் அங்கே வருகிற பிறமதச் சகோதர்களை, இஸ்லாமிய இளைஞர்கள் 'மாப்ள, மச்சான், அண்ணன்' என்கிற அடைமொழி கொண்டு இணக்கம் காட்டியே பேசுவார்கள்.. ஆனால், இவர்கள் தங்களுக்குள் ஒரு நாளும் அத்தகைய  இணக்கத்தையோ ஒற்றுமையோ காட்டிக் கொள்ள மாட்டார்கள். எப்பவும் வாடா போடாதான், முரண்தான்.

வெளியே போடப்பட்டிருக்கும் பெஞ்சில் வந்தமர்ந்து, டீ குடித்தபடி இளைஞர்களின் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஊர் நாட்டாண்மைகளில் ஒருவரான ஹசன்பாய் எந்தவோர் பிரச்சனையிலும் தலையிடாத சாது என்று பெயர் போட்டவர். தினமும் காலையில் இந்த டீக்கடை அமர்வில் வந்தமரும் வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். அரசியல் பேசும் இளைஞர்கள் இவரது வாயைக் கிளறுவதில் குறியாக இருப்பார்கள். அவர்கள் பேசும் அரசியல் சர்ச்சைகளுக்கு இவரிடம் நியாயம் கேட்பார்கள். ஊர் பஞ்சாயத்துலேயே வாய்திறக்காத ஹசன்பாய் இங்கே மட்டும் வாய்திறந்துவிடுவாரா என்ன? ஆனால் யார் எந்தவோர் அபிப்ராயம் கேட்டாலும் வாய்விட்டு சிரிக்கத் தவறமாட்டார். பதில்தான் பெயராது. அவர்கள் ஏதும் கேட்காவிட்டாலும் கூட சிரிக்கக் கூடியவராகவே இருப்பார். நாட்டு நடப்பும், தம் இளைஞர்களின் போக்கும் அவருக்கு சிரிப்பாக போய்விட்டதோ என்னவோ. அப்படி தீரவும் சொல்லிவிட முடியாது, அப்பப்ப இரண்டொரு வார்த்தைகள் பேசவும் பேசுவார்..
  
சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் - 2014 முடிந்து, புதிய ஆட்சி அமைந்த நேரம் அது! அங்கே கூடும் அந்த இளைஞர்களின் விவாதப் பொருள் அதுவாகவே இருந்தது. அவர்களின் மொக்கை விவாதங்கள் எப்பவும் சூடு கொண்டது. ஹசன்பாய் வழக்கத்தைவிட இன்றைய விவாதங்களை கேட்டு பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தார்.

'அம்மா' கட்சியில் இருக்கும் ஆதம்ஷா தே.மு.தி.க. கட்சிக்காரனான அனீஸிடம் சப்தமாக கேட்டான். "முடியாது முடியாதுன்னிங்களே, இப்ப அம்மா ஓஹோன்னு ஜெய்த்துட்டாங்க பாரு! இப்ப என்னடா சொல்றீங்க?" 

"இந்தப் பாருடா, எங்கத் தலைவர் பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்துவிட்டதாலே முஸ்லிம்களின் ஓட்டு எங்களுக்கு விழலை. நாங்களும் முஸ்லிம்களிடம் ஓட்டு கேட்க முடியலை. ஓட்டு குறைஞ்சு போச்சு தோற்று போயிட்டோம்."

"பெரிய கூட்டணி அமைச்சிருக்கோம், இந்தியா பூராவும் 'மோடி அலை' அடிக்குதுன்னு நீங்கதானாடா சொன்னீங்க?"

"ஆமாம் சொன்னோம். வடக்கே பூரா மோடி அலை அடித்ததா இல்லையா? அவர் ஆட்சியில் அமர்ந்தாரா இல்லையா? நீங்க என்னவோ அம்மாவ அடுத்த  பிரதமராக்கப் போறத சொல்லிக்கிட்டு திரிஞ்சிங்களே... என்ன ஆச்சு இப்ப அது? மூச்சு விடமாட்டேங்கிறீங்க?"  

ஹசன்பாய் இப்போது வேகமாக சிரித்தார். "ஏன் ஆதம்ஷா.., அனீஸு கேட்கிறது சரிதானேடா?" 

"என்னங்க ஹஸன்பாய், அவன்தான் அவுங்க தலைவர் மாதிரி அரசியல் புரியாம பேசுறானா நீங்களும் சேர்ந்துகிட்டு பேசுறீங்களே! பொறுத்து இருந்து பாருங்க. மேலே குழப்பம் வருதா இல்லையான்னு. அப்போ தெரியும் நாங்க சொன்னதின் அர்த்தம். ஆனானப்பட்ட தி.மு.க.வையே சைபராக்கி மூளையில் உட்கார வச்சிருக்கிறவங்க நாங்க!"

டீ மேஜைக்கிட்டே டீ குடித்துக் கொண்டிருந்த தாவூத் சீறினான். "ஓட்டுக்கு பெரிய நோட்டு கொடுத்து ஜெய்ச்சவனெல்லாம் தங்களது வெற்றியை பற்றி பெரிசா பேசவந்துட்டானுங்க." 

"இவரு பெரிய தி.மு.க. வஸ்தாது! கோபம் வந்துடுச்சு. நீங்க மட்டும் ஓட்டுக்கு நோட்டு நோட்டா கொடுத்ததில்லை? ஒரு தொகுதி விடாம தோத்துட்டு என்ன வேண்டி கிடக்கு ரோஷம்?"

ஹசன்பாய் இப்ப குறுக்கே வந்தார், "ஏய்.. தாவூது, அவனுங்க டெய்லி பேசுற பேச்சைத்தான் இன்னைக்கும் பேசுறானுங்க, அது புரியாம நீ ஏன் கோபப்படுற?" 

"இல்லை பாய், எங்க கூட கூட்டணி வைத்துக் கொண்ட த.மு.மு.க. இந்த தொகுதியில் தோத்து போச்சுதானே? அந்தக் கட்சி தோக்கிற தொகுதியா பாய் இது? ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் முஸ்லிம்கள் ஓட்டு சாலிடா இருக்கிற தொகுதி பாய் இது! அப்புறம்...தி.மு.க., விடுதலைச் சிறுத்தைங்க ஓட்டுண்ணு ஏகப்பட்ட ஓட்டு வேற!. இவ்வளவு ஓட்டு இருந்தும் பின்னே எப்படி த.மு.மு.க. தோத்துச்சி? சொல்லுங்க பாய்? இவனுங்க கட்சி, கடைசி நேரத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்ததால்தான் எங்க வெற்றி வாய்ப்பு தலைகீழா மாறிடுச்சு! மயிலாடுதுறைக்கு ஸ்டாலின் வந்தப்போ என்ன கூட்டம் தெரியுமா பாய்?"

"கடைசி மூணு நாளுக்கு முந்தி, இதான் எங்க சின்னமுன்னு மக்ககிட்ட காட்டுனா... எப்படி மக்களுக்கு சின்னம் பிடிப்படும்? ரெட்டை மெழகுவர்த்தியாம்!   அதுவும் அணைந்து போன மெழகு வார்த்தி!. எப்புடீ... ஜெயிக்கும்?" என்று இடித்துரைத்தான் ஆதம்ஷா.

கடையின் உள்பகுதியில் தன் ஆட்களோடு பேசிக்கொண்டிருந்த த.மு.மு.க.காரரான அகம்மது சுல்தான் வெளியே வந்து, "இந்தப் பாரு ஆதம்ஷா, பேசத்தெரியும் என்பதற்காக எதுவேணு முன்னாலும் பேசாதே. நேற்று இங்கே சொன்னதைதான் இன்னைக்கும் சொல்றேன். இந்த தொகுதியில, அம்மா கட்சி, ஓட்டுக்கு பணத்தை தாராளமா கொடுத்தது என்பதும், எங்க சின்னம் புது சின்னம் என்பதும் அதனால வெற்றி தட்டிப் போச்சுங்கிறதெல்லாம் உண்மைதான். ஆனா, நாங்க தோற்றதுக்கு பெரிய காரணம் வேற. இந்தத் தொகுதியில் உள்ள ஒரு லட்சத்து அறுபதினாயிரம் முஸ்லிம் ஓட்டுக்களில் கால்வாசிகூட எங்களுக்கு விழலை! அதாவது இஸ்லாமியனுக்கு இஸ்லாமியன் ஓட்டு போடலைங்கிறதுதான் மாபெரும் நிஜம்." 

"இங்க பாரு அகம்மது" ன்னு பேசத் தொடங்கினார் நாட்டாண்மை ஹசன்பாய். "இந்தத் தொகுதி பூராவும் இருக்கிறவனெல்லாம் சுன்னத்து ஜமாத்த சேர்ந்தவங்க. நீங்க தவ்ஹீத் அமைப்பை சேர்ந்தவங்க இல்லை என்றாலும், நீங்களும் தொப்பி போட்டு தொழமாட்டேன், மார்ல கையை வச்சுகிட்டுதான் தொழுதுக்குவேன், விரல ஆட்டிக்கிட்டேதான் தொழுதுக்குவேன் என்கிற ஆட்கள்தான். பின்னே எப்படி நீங்க சுன்னத்து ஜமாத் ஓட்டை எதிர்ப்பார்க்கலாம்? குற்றம் சொல்லலாம்? சொல்லுப்பா. உங்களுக்கு தவ்ஹீது ஜமாத்தே ஓட்டுப்போட மாட்டேமுன்னு அறிக்கைவிடுறப்ப, சுன்னத்து ஜமாத்து எப்படி ஓட்டுப் போடும்? இதை யோசிக்காம  நீ எப்படி எங்களை குறை சொல்லுற?"  என்றார்.

அந்தப் பக்கமா பைக்கில் வந்த பெரியவர் ஜியாவுதீன் வண்டியை ஓரமா நிறுத்திட்டு டீக்கடையைப் பார்க்க வந்தார். சப்தம் திடுதிப்புன்னு ஓய்ந்து போனது.. ஜியாவுதீனுக்கென்று இந்த ஆக்கூரில் ஒரு மரியாதை இருக்கிறது. எல்லா இன மக்களும் விரும்பி அழைத்து பேசக் கூடியவராக அவர் இருந்தார். ஊரில் ஒரு காலக்கட்டத்தில் அரசியல், அடிதடி என்று இருந்தவர். ஊர் நிர்வாகப் பதவியில் இருந்தவர். பையன்கள் தலையெடுத்ததுக்குப் பிறகு எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு பெற்றமாதிரி கடந்த பத்து பன்னிரெண்டு வருஷமாய் தான் உண்டு தன் தொழில் உண்டு என்றிருக்கிறார். பையன்களையும் அப்படியே பழக்கி வைத்திருக்கிறார். இந்த டீ கடை வைத்திருக்கும் காதர்பாயும் அவரது செட்டுதான்!. .        

"இங்க உட்காருண்ணே என்று நாட்டாண்மை ஹசன் எழுந்து நிற்க, ஹசனது தோளில் கை போட்டபடி "வேண்டாம்டா" என்றார்.

"வா ஜியாபு, ஏது இந்தப் பக்கம்?" என்று காதர் கேட்க....

"செட்டியார் தாமேதரன் நம்ம கடையில புண்ணாக்கும் எண்ணையும் எடுத்து போயி ஒரு மாசத்து மேலே ஆகுது. பணம் வரலை. அதான் அவரை பார்த்துட்டு வரேன். நீ இங்கே கடையை மாற்றி இருக்கிறதா சொன்னாங்க, அப்படியே பார்த்துப் போகலாமுன்னுதான் நிறுத்தினேன். என்றார் ஜியாபு.  

"ஓ... சரி சரி  இந்தா ஜியாபு டீயைக் குடி" என்று அன்பு ததும்ப டீயை அவர் கையில் கொடுத்தார் காதர்.  

"இங்கே புள்ளிங்க வாதம் பண்ணிக்கிற சப்தம் நான் வர வழியிலேயே கேட்குது. நீ ஒண்ணும் சொல்ல மாட்டியா காதர்?" என்று ஜியாபு கேட்கவும் எல்லா பிள்ளைகளும் சிரித்தார்கள்.

"சும்மாதான் இப்படி சத்தம் போட்டு பேசிக்குவாங்க. வம்புதும்பெல்லாம் கிடையாது. தினைக்கும் காலைவேளையில் இங்கே நடக்கிற சங்கதிதான் இது." என்று தன் கடையின் சிறப்புகளில் ஒன்றாக காதர் சொல்லவும், மறுபடியும் பிள்ளைகள் சிரித்தார்கள்.

"தினைக்குமா?" என்று வியந்தவாறு கேட்டார் ஜியாபு.

"தினைக்கும் பொழுது விடியுதுல்ல?" என்றார் காதர். மறுபடியும் சிரிப்பலை.

"நானும் இப்படியெல்லாம் பேசிகிட்டு... அரசியலு, லொட்டு லொசுக்குன்னு திரிஞ்சவன்தான்! கைகாசு செலவு பண்ணிகிட்டு காலத்தை வீணா கழிச்சதுதான் மிச்சம்." நொந்து கொண்டவராக காதரைப்பார்த்து சொன்னார். "எனக்கு தெரியாதா ஜியாபு" என்ற காதர் சிரித்தார்.

நாட்டான்மை ஹசனின் தோளில் கை போட்டப்படி பேசிக்கொண்டிருந்த ஜியாபு, ஹசன் பக்கம் சட்டென திருப்பி "எங்கடா அவன காணோம்?" என்று கேட்டார்.

"அவன்னா யாரை காணோம்கிற?"

"அதான்டா சாமி இல்ல பூதமில்லைன்னு விவாதம் பண்ணுவானே?"

"ஒன் மாமா மகன் சிராஜுதீனை கேட்கிறீயா? அவன் இப்பல்லாம் எங்கேயும் எதையும் பேசுறது கிடையாது. அவனுக்கு அவன் வேலையைப் பார்க்கவே நேரம் போதலை!"

"அதான் அவனை பார்க்கவே முடியலையா!"

"சரி நாட்டாமை, இந்தப் புள்ளைகளுக்காவது ஏதாவது சொல்லக் கூடாதாடா?"

"ஓ சொல்லலாமே" என்று சிரித்துக்கொண்டே "அண்ணனுக்கு இன்னொரு ஸ்பெஷல் டீ குடு காதர்பாய்." என்றார் ஹஸன்பாய். கூடியிருந்த எல்லோருமே சிரித்தார்கள்.

"டேய்... நான் என்ன சொன்னேன்? நீ என்ன சொல்றே?"

"அண்ணே..., சொன்னா கேட்கிற புள்ளவோலா இதுங்க! உங்காலம் எங்கலமெல்லாம் வேற! இன்னிய காலம் வேற! நான் தெனைக்கும் இங்கே வந்து சிரிச்சுகிட்டு உட்கார்திருப்பது எனக்குத்தான் தெரியும்?" என்று நாட்டாண்மை ஹசன் சொல்லவும், காதர்பாய் "ஆமாம்... ஆமாம்" என்று விழுந்து விழுந்து சிரித்தார்.
***

***

தொடர்புடைய ஒரு பதிவு : கடைப் பலகை. -  LKS.Meeran Mohideen

3 comments:

 1. யார் ஜெயித்தார்களோ யார் தோற்றார்களோ, சிராஜுதீன் தோற்றுப்போனார்.
  - ஷாஜஹான்

  ReplyDelete
  Replies
  1. 'தீன்'தான் காரணமாக இருக்கும் :)

   Delete
 2. தொகுதி வாரியாய் பிரித்து மேய வேண்டிய படைப்பு.வேலூரிலும் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் என்றார்கள்.டீக்கடையில் மட்டுமல்ல எல்லா கடைகளிலும் இதே பேச்சு தான்.இருந்தாலும் தோற்றார்கள். மெழுவர்த்திகள் சட்டசபையில் வெற்றி பெற்றாலும் மக்களவையில் தோற்றது எதிர்பார்த்தது தான்.எல்லாவற்றையும் கேட்டு சிரித்துவிட்டு தான் போக வேண்டும் போலிருக்கிறது.நிஜமும் நிழலும் தாஜ் பாயின் எண்ணக்கலவையில்.வாழ்த்துக்கள்.

  - சு.மு.அகமது

  ReplyDelete