***
04
மச்சிக்குப் பேரு செய்னம்பு. மாமியப் போல சரியான வெள்ளெ. ராத்தாவும் வெள்ளெதான். எங்கட குடும்பத்தில நான் மட்டுந்தான் கறுப்பு. வாப்பாட வாப்பா போல எண்டு மரியெம் மாமி செல்லுவா. மச்சிக்கு நல்லா நீஞ்சத் தெரியும். உசன் மச்சான்தான் அவள நீச்சல் பழக்கின. ராத்தாக்கு மச்சிதான் நீச்சலக் காட்டிக் குடுத்தா.
ரெண்டு மூணு தரம் தண்ணிக்குள்ள தியாமுட்டி தியாமுட்டி… பார்த்திருக்கக்கொள கைய நீட்டி நீட்டி ஓடைய பின்னுக்கிழுத்து – பின்னங்களால் ரெண்டும் தண்ணிய உதைச்சி உதைச்சி….
ஒரு நாளைய கூத்து – ராத்தாக்கும் நீஞ்சத் தெரியும்… இன்னும் ரெண்டு வருசத்திலெ நானும் நீஞ்சப் பழகிருவென்.
மச்சியும் ராத்தாவும் போட்டி போட்டு நீச்சலடிப்பாங்கெ.
மாமிர ஊட்டுக் கரையிலெ சின்ன ஓடெ. ஓடைக்கு மேலால ரெண்டு தென்ன மரங்கள் கரையில் கையைக் குத்தி தண்ணிக்கு மேலால சாஞ்சி படுக்குது. இருந்தாப்போல வானத்தப் பார்த்து தலெ விரிச்சு ஆடும்.
ராத்தாவும் மச்சியும் மரத்திலெயிருந்து குதிரெ ஓடுவாங்கெ. ஓடையத் தொட்டுத் தொட்டு தென்ன மரங்கள் ஊஞ்சலாடும்.
மரவட்டுக்குள்ள மைனாக் குஞ்சுகள். பயந்து பயந்து – கேவிக்கேவி சிறகடிச்சி மாயும். பாவம்.
மச்சிக்கும் ராத்தாக்கும் பயமேயில்லெ. ஆளுக்கொரு மரத்தில போட்டிப் போட்டு ஏறுவாங்கெ.
தென்னெ மரத்திர உச்சிக்குப் போய் வாளெ மீனெப் போலெ தலெக்குத்தின குதிப்பாங்கெ. குதிச்சா குதிச்சதுதான்.
அப்பிடியே கொஞ்சத்தூரம் சுழியோடிப் போய், ஓடெத் தொங்கலில உடும்பப் போலெ தலெயத் தூக்கி சடாரெனத் தாண்டு போவாள் மச்சி. ராத்தாக்கு சுழியோடத் தெரியாது. நீஞ்ச மட்டுந்தான் தெரியும்.
நான் இடுப்பு மட்டுத் தண்ணிலெ – சிரட்டையாலெ தண்ணிய அள்ளி அள்ளி தலெயில ஊத்திக்கிட்டு பயத்திலெ நிப்பென். அந்த நேரம் பார்த்து எனக்குத் தெரியாமெ விலாங்கு மீனப் போலெ வந்து – என்ட கவட்டுக்குள்ளால பூந்து சுழியோடிப் பெய்த்திருவாள் மச்சி. நான் பயத்திலெ தண்ணிக்குள்ள தாண்டு தாண்டு தியாமுட்டுவென்.
கண்ணாலெயும் மூக்காலெயும் தண்ணி புரெயேரி சிரசிலடிக்கும். உசிரு போறாப்போலெ இருக்கும். மச்சியோடெ செரியான கோவம் வரும்.
ஆத்துக்கு வீசப்போன மாமாவும் உசன்மச்சானும் கரையேறி வந்தா – ராத்தாவும் மறெஞ்சி மறெஞ்சி கரையேறி புன்னெ மரத்திலெ மறைஞ்சிருவா. ராத்தாக்கு மச்சானெக் கண்டா செரியான வெக்கம்.
மச்சி மட்டும் பொழுது உச்சிக்கு வந்தும் கரையேறெ மாட்டாள். தண்ணிலெயே மிதப்பாள்.
குட்டிக்குட்டி அலெயெல்லாம் மச்சிர தொடெய தொட்டுத் தொட்டு விளையாடும்.
கழுத்து மணிக் கோர்வையிலெ, கால் கொலுசில பொழுதிட பார்வெ பட்டு பச்செ, சிவப்பு, நீலமெண்டு சொலிக்கும்.
அப்படியே அவள் தண்ணிலெ மினுங்குவாள். இருந்தாப்லெ பெரிய அலெயொண்டு மச்சிட துண்டுப் புடெவெய உருவியெடுத்திட்டு ஓடெயிலெ ஓடும்.
மச்சியும் சுழியோடிப் போய் துண்டுப் புடெவெயெ எட்டிப் புடிச்சி … எழுந்து நிற்கெ … நான் அவள்றத்தெ…
மச்சிட தொடெயும் காலும் எப்பிடி வெள்ளெ…. முத்திப் பழுத்தெ பிலாச்சுழெ போலெ.
மச்சி துண்டுப் புடெவெயெ உரிஞ்சி உரிஞ்சி உடுப்பாள். நான் அவளக் கடெக்கண்ணாலெ பாப்பென். அவளும் என்னப் பாத்திடுவாள்.
“குட்டியான் செரியான ஹராங்குட்டிடி”
ராத்தா கைகொட்டிச் சிரிப்பாள்.
பொழுது உச்சாலெ கெளியும் மட்டும் ஓடெயும் நாங்களும் பட்டதுபாடுதான். குளிச்சி முடிச்செ கையோடெ என்னெயும் ராத்தாவெயும் மச்சிட தோணியிலெ ஏத்திக்கிட்டு பெரியெ ஓடெக்குக் கொண்டு போவாள். மச்சிர கையிலெ சவள். நான் முன்னணியித்திலெ ராத்தா நடுத்தோணியிலெ.
கொண்டெக் காத்தில தோணி தொடுக்காமலே பெரியோடெப் பக்கம் போகும். எங்களோடெ பந்துக்கா, பூக்கள், புச்சித்தேங்கா, அடிமட்டெ எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு ஊர்வலமா வரும். அப்பிடியே உப்பாத்துக்குப் போய் முகத்துவாரத்தாலெ கடலுக்கெ போயிடுமாம்.
பெரியோடெ மேட்டுலதான் வண்ணாரக் குடியெல்லாம் இரிக்காங்கெ. எங்களுக்கு உடுப்பு வெளிக்கிற பெரிய வண்ணாத்திர ஊடும் அங்கெதான். ஓடெக்கரெய ஒட்டினாப்லெ நீள நீளமான புடவெக் கொடிகள். வருசக் கூலிக்கு உடுப்பு வெளிக்கிற, அஞ்சு மரெக்கா நெல்லுக்கு ஒரு குடும்பத்திக்கு ஒரு வரிசம் பூரா வெளிக்கெணும்.
மோகினிப் பட்டிச் சோமன், பன்றுட்டிச் சேலெ, பச்செ வடம், சுங்காவடிச்சேலெ எண்டு வண்ணார வெட்டெயில நெறெஞ்சி கிடக்கும். மணச்சாமான் போட்டு வெளுத்த உடுப்புகள் காத்திலெ மணக்கும்.
நானும் மச்சியும் ராத்தாவும் புடவெக் கொடில புடவைகளெ மோந்து மோந்து பாப்பெம்.
காத்தும் மணந்தான், ஓடெயும் மணந்தான்.
எங்கடெ ஊரு வண்ணார ஆக்களெல்லாம் நல்லெ மனிசர். பத்தெட்டுக் குடிதான். நல்லெ ஒத்துமெ. அவங்கட கதெயச் சொல்லப் போனா அதுக்கொரு யுகம் வேணும்.
வண்ணாரெ ஆக்களெண்டாலும் மானம் மரியாதெயோடெ வாழ்ந்த மனிசர். எங்கடெ ஆக்கள் அவங்கள்ளெ செரியான அன்பு. அவங்களுக்கும் எங்கட ஆக்கள்ளெ செரியான மதிப்பும் மரியாதெயும்.
எங்கடெ பெரிய வண்ணாதி எங்கடெ உம்மாவ ராத்தாண்டு கூப்பிடுவா. இப்பெல்லாம் அந்தக் கனிவோடெ கூப்பிர்ர மனிசரக் காணேலாது.
“தங்கச்சியோ… உம்மா சோறு திங்க வரட்டாம்”
உசன் மச்சான்ட சத்தம் ஓடெக்கரெயெல்லாம் காத்திலெ அள்ளிட்டு… காதில புகுந்தது.
புறவத்திலெரிந்த மச்சி கொல்லாப் பக்கம் சவளப் போட்டு மெதுவாகத் தோணியெத் திருப்பி விட்டாள்.
“தங்கச்சியோ… உம்மா சோறு திங்க வரட்டாம்”
**
05
அழகான ஆட்டுக்கால. வாப்பாவும் நானும் கட்டிப்போட்டம். ஆமையர் மூத்தப்பாட்ட போய் ஆடும் வாங்கி வந்திட்டம்.
“வெள்ளெச்சிம்மா” ராத்தாதான் பேர் செல்லித் தந்தவ.
எந்தக் காட்டுலெ நிண்டாலும், வெள்ளெச்சிண்டு ஒரு சத்தம் வெச்சாப் போதும். காலுக்குள்ளெ வந்து வெள்ளெச்சி நிக்கும்.
ஆலங்கொத்து, தவிட்டங்கொத்து, இத்திக் கொத்தெண்டு ராப்பகலா சாப்பாடுதான். வெள்ளெச்சிர வவுறும் மத்ரசாவிலெ ஓதித்தாறெ லெவ்வெட வவுறும் ஒண்டுதான். முட்டி வவுறு.
குட்டித்தாச்சி வெள்ளெச்சி.
எனக்கி லெவ்வெண்டாச் செரியான பயம். ஓதித் தரக்கொள்ள ரெண்டு அடி போடாட்டி அவருக்குப் பத்தியமில்லெ. ஊரிலெ கஞ்சா புடிக்க வாற பொலிசெண்டாலும் பயந்தான். பள்ளி வளவுக்குள்ள மையத்திப் புட்டில நிக்கிற பேய்க்கும் பயந்தான். பேயெ நான் இன்னும் கண்ணால காணல்லெ. மத்தப்படி வேறொண்டுக்கும் பயமில்லெ.
ஆமையரப்பாவும் பேய்க்கு ஊதிப் பாப்பாரு. செய்த்தானுக்கும் ஊதிப் பாப்பாரு….
ஆமையரப்பாவெ நினைக்க நினைக்க…. அவர்ர புட்டிக்கெ ஆடு வாங்கப் போன நாளெ எனக்கி மறக்க ஏலாது. இந்த வயசுக்குள்ள அப்படியொரு காச்சியெ நான் காணல்லெ. ஆடு வாங்கிவர ஆமையரப்பாட்ட போன அண்டுத்தான் எங்கட ஊரெச் சுத்தி கடலுக்குப் போற பெரியாத்தெ முழுசாத் தெரியும்.
வாப்பா கரைல நிண்டு “மாமா”ண்டு சத்தம் வெச்சாரு… வாப்பாட சத்தம் ஆத்தங்கரெ, கண்ணாக்காடுண்டு இரெஞ்சிட்டுப் போய் – மா… மா.. மா… மா ண்டு எண்டெ காதெ சுத்திச் சுத்திக் கேட்டது.
நானும் திருப்பி, மா.. மா.. ண்டென். எனக்கிப் புறத்தாலெ ஆறும் கண்ணாக்காடும் மா… மா… ண்டது. எனக்குச் செரியான கொண்டாட்டாந்தான். அதெப்படிண்டு எனக்குச் செல்லத் தெரியெல்லெ.
எங்கடெ சத்தம் கேட்டவுடனெ அக்கரெயிலரிந்து ஆமையரப்பா தோணியெடுத்திட்டு வந்தாரு.
அப்பா புறவத்திலரிந்து தொடுக்க, நானும் வாப்பாவும் முன்னணியத்தில… வாப்பாட மடிக்குள நானிருந்தென்.
நாங்கெ போன நேரம் பொழுது அசரால சாஞ்சிட்டு.
தோணி கரெ தட்டிட்டு. புட்டிக்குள கால் வெச்சாந் தெரியும், கிடுகிடெண்டு ஒரே இரெச்சல்….
வக்கா, சாம்பல் கொக்கு, தாக்கத்தியான், மொட்டத் தலையான், அடெசல் மான் ண்டு ஒண்டெ ஒண்டு திரத்தி திரத்தி ஒண்டெ ஒண்டு கொத்திக் கொத்தி சண்டெ போட்டு, அது பெரிய களறி.
ஆத்துக்கு நடுவுல பென்னம்பெரிய புட்டி. புட்டி நிறைய கண்ணாக்காடு. கண்ணாக்காட்டுக்கு நடுவுலான் அப்பாட ஊடும் ஆட்டுக்காலெயும். கொஞ்சந் தள்ளி கொட்டுக் கிணறும்.
அந்தப் பக்கம் வீசப் போற எல்லாத் தோணிகளும் அப்பாட புட்டியெச் சுத்திச் சுத்தி வலம் வருவாங்க. மக்காவுக்குப் போன மூத்தம்மா எனக்கிட்ட சென்னா, அல்லாட பள்ளியெ சுத்திச் சுத்தி ஓர்ரதா. அப்படித்தான் ஆமையரப்பாட புட்டியெ சுத்தி வீசப் போற ஆக்களெல்லாம் தோணியெ ஓட்டுறாங்க. அவ்வளவு சங்கெ ஆமையரப்பாக்கு.
“மாமா! இவனெ கூட்டிட்டுப் போங்க. நான் கறிப்பாட்டுக்கு நாலு தூண்டல் போட்டுப் பாக்கென்”.
வாப்பா வந்த தோணிலரிந்து தூண்டல் போடத் தொடங்கிட்டாரு.
அப்பாட ஊட்டுக்கு முன்னால கறித்தட்டு போல வரம்பு போட்ட நாலு வரவெ. ரெண்டு மரெக்கால் விதைக்குமெண்டு வாப்பாக்கிட்ட அடிக்கொரு தரம் செல்லுவாரு.
அப்பாட ஊடு வளவெச் சுத்தி பத்துப் பதினெஞ்சு தென்ன மரங்கள், வானத்தெத் தொட்டாப் போல. குலெ குலெயா இளநியும் தேங்காயும்.
பழுத்த தேங்காயெல்லாம் வரவெக்குள்ள சிதறிக் கிடந்தது. ஊட்டெண்டா தேங்க உழுந்தெ கையோட நான் போய்ப் புறக்கிடுவென்.
இஞ்செண்டா எல்லா வேலெயும் அப்பாட கையக் காத்துக் கிடக்கும் போல. அப்பாட மூத்தம்மாக்கு ஒரு புள்ளெதான். அதுவும் பொம்பளப் புள்ளெ. சின்ன வயசிலெ நாலு நாள் வாந்தி பேதி வந்து மௌத்தாப் பெய்த்தா. அதுக்குப் புறவு புள்ளப் பூச்சில்லெ. புள்ளெ மௌத்தாப்போன கையோட ஊரெ விட்டு வந்து புட்டிக்குள்ள குடிலொண்டக் கட்டிக்கிட்டு வந்தவர்தான் ஆமையரப்பா. நாப்பது வருசமா இந்தப் புட்டிக்கு அவர்தான் ராசா.
ஆமையரப்பாவும் அவர்ர ராசதானியும்.
கொக்குகளும் நீர்க்காகங்களும் உலகத்தில உள்ள அத்தனெ பறவெ பக்கிசாரங்களும் அவர்ர மக்கள். அது எத்தெனயோ சாதி. அப்பாட அனுமதியோடெதான் அவங்கள்ளாம் புட்டிக்கெ நுழையணும்.
புட்டியெ வளெச்சி அப்பா எனக்குக் காட்டினாரு. கண்ணாப் பத்தெயில, கைக்கெட்டின தூரத்திலெ பறவைகள்ற கூடுகள். கூட்டுக்குள்ளெ மஞ்சள், கறுப்பு, பழுப்பு நிறங்கள்ளெ முட்டைகள்.
“இது நத்தை கொத்திர முட்டெ. இது தாக்கத்தி கொக்குட முட்டெ. இது நீர்க் காகத்திட முட்டெ. இது இளநீலம், அண்டக் காகத்திட முட்டெ”.
அப்பா செல்லித் தந்தாரு. “ஒரு முட்டெயையும் கையால தொடப் போடாதுரா மனெ”. இது அப்பாட கண்டிப்பான உத்தரவு. முட்டெய அளெஞ்சா தாய்ப்பறவை கூட்டெ உட்டு அப்புறப்படுத்திடுமாம்.
அநியாயம். இந்தக் கொக்கு குருவிகளாலாம் நம்மடெ ஊரில மீனும் இறாலும் பெருகி வழியுது. இதுகள்ற எச்சிலத் திண்டு திண்டுதான் மீன்களெல்லாம் கொழுத்து பெரிய பெரிய சினையும் வெச்சி….
அப்பாட கண் தெரிய ஆரும் கொக்குக் குஞ்சுகளெ எடுக்கேலாது. ராவில கொக்கடிக்கப் போறவங்களுக்கெல்லாம் அப்பா ஒரு சட்டம் போட்டிருக்காரு.
பச்ச மரத்திலெ கூடு கட்டி வாழ்ற பறவைகளெ அடிக்கேலாது. பட்டெ மரத்திலெ வாழ்றத மட்டும் கறிப்பாட்டுக்கு புடிக்கச் செல்லுவாரு.
அவர்ரெ அனுபவத்திலெ பச்செ மரம் கூட்டுக் குடும்பம். பட்டெ மரமெல்லாம் தனிச்சவங்கடெ தங்குமிடம்.
கூட்டிலெ அடெப்படுக்கிற கொக்கு நம்மட அமானிதம் என்பாரு.
புள்ளெ இல்லாத அவருக்கு, இந்தப் பறவைகளும் ஆடுகளுந்தான் அவர்ர சொத்தும் இனசனமும்.
ஆத்தில மீன் நிறெஞ்சி வழியுது. இவனுகள்ற வாய்க்கு கொக்குக் கறி வேணுமாம். ஆமையரப்பா புறுபுறுண்டு கதைக்கிறது எண்டெ காதுக்குக் கேக்குது.
“என்ன பேரன்! ஆட்டுகளெ ஆட்டுக்காலையிலெ ஏத்துவமா?
“தம்பியோவ்… வாங்க”
ஆமையரப்பா வாப்பாக்கு குரல் விட்டாரு. கண்ணாக் காடும் புட்டியும் “தம்பியோவ்….” ண்டு சொல்லிச் சொல்லிக் கரெஞ்சி போனது.
நானும் அப்பாவும்
கால….. கால…. கால…. கால….
ஆடுகள் ஒவ்வொண்டா முன்னங்கால மரக்குத்திலெ தூக்கி வெச்சி ஒரே பாய்ச்சல்லெ புரவாடிக்குள்ள புசுபுசுண்டு ஏறி நிறெஞ்சிட்டு.
“பேரன், உனக்குப் புடிச்செ ஆட்டக் காட்டு பாப்பம்”
நான் வெள்ளெச்சிய காட்ட, அவர்ர கையிலரிந்த கவுத்த வெள்ளெச்சிர கழுத்தில போட்டு,
வெள்ளெச்சி அடம்புடிச்சி அடம்புடிச்சி அலறத் தொடங்கியது. புரெயிலரிந்து மெதுவாகத் தூக்கி நிலத்திலெ விட்டாரு. தோளில கிடந்த துண்டெ எடுத்து தலையிலெ போட்டுக்கிட்டு –
“பிஸ்மில்லா, அல்லாட கிருபையால என்டெ பேரனுக்கு பட்டி பெருகணும்” வானத்தப் பார்த்து – வாப்பாட கைல கொடுத்தாரு.
வாப்பாவும் தோளில கிடந்த துண்ட தலையில போட்டு – பவ்வியமா வாங்கிட்டாரு.
என்டெ கைல களக்கம்பும், மீன் கோர்வையும். வாப்பாட கைல வெள்ளெச்சி.
பயத்திலெ வெள்ளெச்சி தோணிக்குள்ள ஒடுங்கிட்டு. புட்டிலெ பறவெ பக்கிசாரங்களெல்லாம் மேகத்திலரிந்து இறங்கி வந்து கண்ணாக்காடுகளில மிதக்கத் தொடங்கிட்டு.
நடு ஆத்திலரிந்து புட்டியெப் பாத்தென். மரங்கள்ற கைகள்ள பெரிய பெரிய வெள்ளெப் பூக்கள். கொண்டல் காத்தில அசைந்து அசைந்து…
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சாய மயிலே சாய்ந்தாடு
ராத்தா படிச்சித் தாற பாட்டு காதுக்குள்ள வந்து போனது.
கொக்குகளும் பறவைகளும் சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடம்மா சாய மயிலே சாய்ந்தாடு.
எங்கடெ கால்கள் ஊர்க் கரையைத் தொட்ட போது ஆமையரப்பாட புட்டியெ பொழுது நெருப்புத் தண்ணிக்குள்ள போட்டிருந்தது.
***
நன்றி : ஹனீபாக்கா
புதுமை வழிந்தோடும் பசுமை நிறைந்த பழைய நினைவுகள்....
ReplyDelete