Sunday, September 22, 2013

சுரேஷ் கண்ணன் சொன்ன சூப்பர் கதை!

நண்பர் சுரேஷின் அனுமதியின்றி பதிவிடுகிறேன் - உரிமை எடுத்துக்கொண்டு. 'மோடி இந்திய பிரதரமானால் (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) அனந்தமூர்த்தி மாத்திரமல்ல, வெண்ணிறஆடை மூர்த்தி கூட இந்தியாவில் வாழ முடியாத சூழல்தான் நேரப்போகிறது. ' என்று ஃபேஸ்புக்கில் சுரேஷ் போட்ட ஸ்டேட்டஸுக்கும் இந்தக் கதைக்கும்  சத்தியமாக எந்த சம்பந்தமும் இல்லை!  - ஆபிதீன்
 *

சுரேஷ் கண்ணன் :
ஒரு கதை சொல்கிறேன்.. அது கதையா இல்லையா என்பதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்... சரியா?

நாங்கள் வாழும் பகுதியில் கபாலி என்றொரு ரவுடி இருந்தான். மன்னிக்க இருந்தார். நான் அவரை ரவுடி எனக்குறிப்பிடுவதே ஆபத்தானது. ஏனெனில் இப்போது அவர் இருக்கும் நிலையில் ரவுடி என்கிற அடிமட்ட வார்த்தையால் இப்போது அவரை நான் குறிப்பிடுகிறேன் என்று தெரிந்தாலே என்னை வெட்டிப் போட பலர் தயாராய் இருக்கிறார்கள்....

சிறிய அளவில் ரவுடித் தொழில் (?!) செய்து வந்துக் கொண்டிருந்த கபாலி தனது தனித்திறமையாலும் குயுக்திகளாலும் மற்ற ரவுடிகளைக் கடந்து தலைமைப் பொறுப்பிற்கு வந்தான்...மற்ற சில்லறை ரவுடிகளுக்குக்கூட கபாலி என்றாலே காப்ராதான். .. ஏன் காவல்துறையே...அவன் உத்தரவிற்கு மறைமுகமாக காத்திருந்தது. மொத்தத்தில் அந்தப் பகுதியே கபாலியின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது.. சரியா,.

அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் கபாலியின் வளர்ச்சியால் மகிழ்ச்சியே... ஏனெனில் பல சில்லறை ரவுடிகளை, காவல்துறை அதிகாரிகளை தனித்தனியாக பணம் கொடுத்து சமாளிப்பதை விட மூலவரான கபாலியை மாத்திரம் சந்தித்து லம்ப்பாக ஒரு தொகையை கொடுத்து விட்டால் அவர்களுக்கு பிரச்சினையே இல்லை. அந்தவகையில் அவர்களுக்கு நிம்மதி... இதனால் தொழில்கள் நன்றாக நடந்தன. அதனால் பல வேலை வாய்ப்புகள் பல ஏற்பட்டதில் பொதுமக்களும் வேலைக்கான திண்டாட்டங்கள் அன்றி..மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். கபாலி செய்த, செய்துக் கொண்டிருக்கும் வன்முறைகள், கொலைகள் பற்றியெல்லாம் அவர்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களுக்குத் தேவையான ரொட்டி சரியாக கிடைக்கும் போது அவர்களும் இதைக் கண்டும் காணாமலும் விட்டு விட்டார்கள்.. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அதுதான் யதார்த்தமும் கூட...

இதுவரை சொன்னதை வைத்து... நீங்கள் கபாலியை, ராபின்ஹீட் போல ஏழைப்பங்காளன்.. ந்ல்லவனுக்கு நல்லவன் என்றெல்லாம் நினைத்து விடக்கூடாது...அதெல்லாம் வேலுநாயக்கர் சினிமாக்களில் மாத்திரமே சாத்தியம்... தமிழ் சினிமாக்களில் உள்ள பிரச்சினை, எதிர்மறையான குணாதிசயங்கள் கொண்டவனை ஹீரோவாக்க முடிவு செய்து விட்டால் அதற்கேற்ப சம்பவங்களை கச்சிதமாக உருவாக்கி விடுவார்கள்.. அவனைப் போல நல்லவன் போல உண்டா.. என..

அதாவது நம் ஊடகங்கள் நினைத்தால் எப்படி ஒருவனை திருவுருவாக்க முடியுமோ அப்படியே சினிமாக்களும் தங்களுக்கான கதைகளை உருவாக்கி விடும். வரவர மக்களுக்கும் ராமனை விட ராவணணைத்தானே அதிகம் பிடிக்கிறது... எதிர்அறம்..

ஆக.. ஒருவன் யாரும் எதிர்க்கவியலாத தாதாவாக இருக்கவேண்டுமெனில் அடிப்படையான விஷயமே சினிமாக்களில் காட்டுவது போல் நல்லவனாக இருக்க முடியாது. மனச்சாட்சிக்கு விரோதமாகத்தான் எல்லா அட்டூழியங்களையும் செய்தாக வேண்டும்.. ஆக கபாலியும் அப்படியே...

விவேக் ஒரு படத்தில் சொல்வது பத்திருபது ரவுடிகளை வைத்து மெயிடெயிண்ட் செய்ய வேண்டுமானால் எத்தனை செலவாகும்.. வெறுமனே தர்மகாரியங்கள் செய்ய முடியாது. 

சரியா...

***

இப்படியாக கபாலியால் அந்தப் பகுதியே அமைதிப்பூங்காவாகவும் தொழிற்புரட்சிக்களமாகவும் தேனும் பாலும் ஓடும் பகுதியாகவும்...மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது.. ஆமாம்.. அவ்வப்போது சில வன்முறைகள் நிகழத்தான் செய்யும்...அதையெல்லாம் பார்த்தால் முடியுமா, ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டுமெனில் நாலு பேர் செத்தாலும் பரவாயில்லை.. ஒருநாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு கிராமமே செத்தாலும் பரவாயில்லை என்று சாஸ்திரத்திலேயே சொல்லியிருக்கிறது....

சரியா...

இப்படி கபாலி ஒரு ஹீரோ... போல அந்தப் பகுதியில் உலவிக் கொண்டிருக்கும் போது வெட்டியாக அமர்ந்திருந்த மெல்ல ஒரு பெரியவர் ஆரம்பித்தார்...

"நம்ம கபாலியால நம்ம ஏரியாவே இத்தனை மகிழ்ச்சியா இருக்கும் போது.. இந்த நாட்டையே...அவன் கிட்ட ஒப்படைச்சா.. நம்ம மாதிரி எத்தனை பேர் மகிழ்ச்சியா இருப்பாங்க..."

பக்கத்திலிருப்பவரும் இதை பலமாக ஆமோதித்தார். கூடவே "நம்ம ராணுவத்தையே கபாலி கிட்ட ஒப்படைச்சா... மற்ற நாடுங்க கூட பயப்படும்.. நம்ம நாடு வல்லரசாயிடும்''

இந்த உரையாடல் மெல்ல மெல்ல பரவி வலுப்பட்டு மற்ற பகுதிகளுக்கும் தீ போல் பரவியது. நம் ஏரியாவிலும் இப்படியொரு ரவுடி கபாலி இல்லையே .... என்று ஒவ்வொரு ஏரியாக்காரர்களும் நினைத்தார்கள்...அதற்காக ஏங்க ஆரம்பித்தார்கள்...

சரியாக அந்தச் சமயத்தில்தான் தேர்தலும் வந்தது

***

இந்த இடத்தில் கதை முடிகிறது. எனக்கென்னவோ கபாலி, அந்த நாட்டுக்கே அல்ல, செவ்வாய் கிரகத்திற்கும் இணைத்தான தலைமைப் பொறுப்பை அடித்தாவது பிடுங்கி விடுவான் என்று தோன்றுகிறது...ஜகஜ்ஜால கில்லாடி கபாலி...

கபாலி நாமம் வாழ்க...நமோ கபாலி....

5 comments:

  1. கபாலியின் புகழை எனது ஃபேஸ் புக் பக்கத்தில் இதை காப்பி பேஸ்ட் பண்ணி விட்டேன். நன்றி சுரேஷ் கண்ணன், ஆபிதீன் நானா.

    ReplyDelete
    Replies
    1. 'ஊழல்வாத அரசியலை விட மதவாத அரசியல் இன்னமும் அதிக ஆபத்தானது.' என்றும் சொன்னார் சுரேஷ். நமோ கபாலி...!

      Delete
  2. ஃபேஸ்புக்கில் நண்பர் ராஜன்குறை:

    இப்போது மோடி ஆதரவாளர்கள் “மோடியை ஏன் வெறுக்கிறார்கள்?” என்று அப்பாவித்தனமான ஆராய்ச்சியினை தொடங்கி உள்ளார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் மோடியை வெறுக்கவில்லை; எதிர்க்கிறேன். என்னைப்பொறுத்தவரையில் அவரும் ஒரு முகமூடிதான்; அந்த முகமூடியின் பின்னால் இருப்பது பலரும் நினைப்பது போல் இந்துத்துவமோ, பண்பாட்டு தேசியமோ கிடையாது. அவை அந்த முகமூடியின் பருப்பொருள் வடிவம். முகமூடியின் பின்னே இருப்பது உலக முதலீட்டியம். இந்தியாவை சைனாவாக மாற்றவேண்டிய அதன் அவசியம். அதற்காக உருவாக்கவேண்டிய அரசியல் நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள். அதற்காகத்தான் பழமைவாத நோக்கும், பண்பாட்டு தேசியம் என்ற அரசியல் மதமும், பெரும்பான்மை அடையாள அரசியலும், சிறுபான்மையினர் மீதான அச்சமும் கொண்ட ஒரு பாசிசக்கலவை தயார் செய்யப்படுகிறது. இது சுதந்திரவாதத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். அதனால்தான் அமர்த்யா சென் மோடியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெளிவாகச் சொன்னார்.

    https://www.facebook.com/notes/rajan-kurai-krishnan/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/671764019502765

    ReplyDelete
  3. உலகம் போற போக்கைப் பார்த்தால், அடுத்த பிரதமராக மோடி வருவதற்கான அத்தனை லட்சணங்களும் அவருக்குண்டு. இது கொஞ்சம் குமட்டலாகத்தான் இருக்கும். ஆனாலும் ஒவ்வொரு நாளும் உலகம் அட்டூழியங்களுடனேயே விழிக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. எல்லா அறம்களும் நம்மை விட்டுப் போய் விட்டது. அறம்பிழைத்தாருக்கு அரசியலே கதி என்போம்.

    ReplyDelete
    Replies
    1. உலகம் போறபோக்குல (இணைய)உலகத்துக்குவேணா அவர் பிரதமராகலாம் ஹனிபாக்கா... இந்தியாவுக்கு ஆகுறது ரொம்பக் கஷ்டம்...
      ரொம்பநாள் கழிச்சு உங்களைப் படிக்க சந்தோஷமா இருக்கு
      உடல்நலத்தைப் பேணிக்குங்க காக்கா!
      முழு ஆரோக்கியத்தோட நீடூழி வாழ வாழ்த்துக்கள்!!

      Delete