Saturday, September 14, 2013

'கோவிந்த’னுக்கு (நாவல்) கே. டானியல் எழுதிய முன்னுரை

நாவலை தரவிறக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். மூன்று வகை எழுத்து பற்றி சொல்கிறார் கடைசியில். முக்கியமாக அதை முதலில் படியுங்கள்! - ஆபிதீன்
***
எனது இலக்கியக் கோட்பாட்டினை வாசகர்கள் நன்கறிவர். நூலுருவம் பெற்ற எனது படைப்புகளில் “கோவிந்தன்” என்ற நாவல் ஐந்தாவதாகும். ஏறக்குறைய அறுபது ஆண்டுகால யாழ்ப்பாணப் பிரதேசத்து வாழ்க்கையின் பொது அம்சங்கள் சிலவற்றை இந்த நாவல் அறிய வைக்கிறது.

கிராமப் பகுதிகளை அப்படியே காண வைத்து, அதைக் குலைக்காமல், நலுங்காமல் நகரவும் வைத்து, அந்த நகர்வுகளுக்கேற்றதான கதை ஒன்றினையும் கண்டடைந்து, சாமுத்திரிகா இலட்சணங்களும் பொருந்திய தலைவன், தலைவியையும் , “வில்லன்”, “வில்லி”களையும், நடுநிலையாளர்களையும் உலாவவிட்டு, அந்தப் படைப்புக்குட்பட்ட கதாமாந்தர்கள் பாரம்பரிய சம்பிரதாய உறவு முறைகளை மீறி விடாமல் பக்குவமாகப் பாதுகாத்து சுபம் சொல்லி முடிக்கும் ‘சோலி சுறட்டற்ற’ இலக்கியக்காரனாக என்னால் இருக்க முடியவில்லை.

கோவிந்தனில் கிராமப்புறங்களைப் பார்ப்பதுடன் கிராமப்புறங்களின் இயல்பான பேச்சுக்களையும் வாசகர்கள் கேட்பார்கள். அத்துடன், சாதியால் - மதத்தால், வேறு பல சிக்கல்களால் முரண்பட்டு பிளவுபட்டு நிற்கும் சாதாரண மக்கள் உலக வியாபகமான வர்க்க ஐக்கியத்துள் தங்களையும் அறியாமலே இணைத்து வழிநடக்கும் வரலாற்று உண்மையினையும் காண்பார்கள்.

இந்த நாவலை படிக்கும்போது வழமைக்கும் அதிகமாகச் சிலர் முகம் சுளித்துக் கொள்வார்கள் என்பதும் , பெருவாரியான கிராமப்புற மக்களும், பின்தங்கியவர்களும், பின் தள்ளப்பட்டவர்களும் தங்கள் வாழ்க்கையினைத் தாங்களே காண்பது போன்ற உணர்வினைப் பெறுவார்களென்பதும் எனக்குத் தெரியும்.

தூரத்தேயிருந்து மனதால் மேலோட்டமாகக் கிராமத்தைப் பார்த்து, பேச்சுவாக்கில் அறிந்தவைகளையும்., ஊகிப்பவைகளையும் வைத்துக்கொண்டு புனைந்த கதைகளையும், நாடோடிப் பாடல்களைத் தேடிப்பிடித்து, தேடியவற்றுள் காமரசம் சொட்டும் பகுதிகளை மட்டும் தெரிவு செய்து தரப்பட்ட நாடோடிப் பாடல் திரட்டுக்களையுந்தான் கிராமிய இலக்கியங்கள் என்று தமிழ் வாசர்கர்கள் கண்டிருக்கின்றனர். இந்த மட்டங்களில் நின்றுகொண்டேதான் இவைகளுக்கானவிமர்சனங்களும் தரப்பட்டுள்ளன. இதனால் கிராமிய இலக்கியங்கள் எனப்பட்டவை கிராமப்புற வாசகர்களாலேயே விரும்பப் படாதவை ஆகியிருந்தன.

நாட்டின் பெரும்பான்மையினர் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். இந்த மக்கள் அன்றாடம் சந்திப்பவைகள், சமூக அமைப்பு; சமூக அமைப்பு முறையினால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பெரும் பளுக்களைத் தூக்கி வீச அவர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், கிராமிய இயல்புகளோடு ஒட்டிய போராட்டங்கள்; அப்போராட்டங்கள் ஒரு தனி மனிதனுக்கு மேலாக அல்லாமல் அவன் உள்ளடங்கி நிற்கும் வர்க்கத்திற்கெதிராகப் பரிணமித்து வருதல் ஆகிய உண்மைகள் புறக்கணிக்கப்பட்டுப் படைக்கப்படும் எந்த இலக்கியமும் உண்மையான கிராமிய இலக்கியம் ஆகிவிட முடியாது.

எமது நாட்டில் இதுவரை வெளியான சிருட்டி இலக்கியங்களுள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில , கிராமப்புற மக்களின் வாழ்வினைப் பிரதிபலித்துள்ளன. அவ்வப்போது அவைகள் கிராமப்புற மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும் உள்ளன.

அந்த வேளைகளில் மௌனம் சாதித்த மெத்தப்படித்தவர்கள் சிலர் இப்போது அந்தச் சிருட்டிகள் மீளாய்வு செய்யப்படவேண்டுமென்று குரல் வைக்கின்றனர். இப்போது இந்தக் குரல் எழுவதற்கான காரணங்கள் என்ன? இந்தக் குரலை வைப்பவர்கள் திடுதிப்பென்று கிராமங்களில் குதித்து, அங்கு செவ்வனே காலூன்றி நின்று, கிராமங்களையும், கிராம மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறைகளையும் படித்திருக்க வேண்டும். அல்லது கிராமப்புற மக்களைத் தங்கள் விருப்பபடியெல்லாம் பிரித்து வைத்து, வேண்டியபோதெல்லாம் அவர்களை ‘ஆடாய்க் கட்டித் தோலாயுரித்து’ அவர்களில் குருதி, தசை, நீர், நிணம் ஆகியவைகளைச் சுவைத்துப் பெருவாழ்வு கண்டு மடிந்து போய்விட்டவர்களின் மண்டைஓடுகளைத் தேடி எடுத்து விஞ்ஞான ரீதியான ஆய்வு நடத்தி, அவரக்ளின் அந்த அசுர வாழ்க்கை நடப்புக்கான காரணம் காரியங்களைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. பதிலுக்கு இந்தக் குரலை எழுப்புபவர்கள் கிராமப்புற மக்களை விட்டுத் தூரத்தூரப் போவதையே காணக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் இப்போது நேருக்கு நேராகவே கோவிந்தனுக்கு மேலாக ஒரு போர் தொடுப்பர் என்பது தெரிந்ததே.

நலிந்தவர்களின் வாழ்க்கையோ, அந்த நலிவிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளோ இதுவரை தமிழ் இலக்கியத்தில் நவீன கால வரலாற்று அந்தஸ்தினைப் பெற்றதில்லை. ஆனால், கோவிந்தனைப் படிக்கும் மக்கள் அந்த அந்தஸ்தினை இதற்குத் தருவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களோடு பாத்திரங்களாக இரண்டு நாய்களை வாசகர்கள் பார்ப்பார்கள். அவைகளின் நடவடிக்கைகளைக் கூர்மையாக அவதானிப்பவர்கள் உலக வியாபகமாகிவிட்ட வர்க்கம் சார்ந்த ஒரு உண்மையினை இந்த இரண்டு ஜீவன்களும் வெளிப்படுத்தி, மதைத் தொடும் மானிட அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டதைக் காண்பார்கள்.

“உயிரினங்கள் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை அந்த உயிரினங்களில் உயந்ததான மனித இனத்தோடு சேர்ந்தாப்போல வளர்ச்சி அடைந்து வந்த ஒன்றே ஒன்று காதல் மட்டும்தான். அதனால் “காதல் இல்லாத இலக்கியங்கள் - முதன்மைப் படுத்தாத படைப்புகள் - மனித நாகரீகத்தை வளப்படுத்தத் தகுதியற்ற முண்டங்கள்” என்ற விதத்தில் இந்தக் காதலுக்கு தெய்வீக அந்தஸ்துக் கொடுப்பது மரபாகிவிட்டது. இந்த நாவலில் இந்த மரபு மீறப்படுகிறது. இந்தக் காதல் என்ற ‘இது’ மனிதனின் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்ப நீண்டும் நெளிந்தும் வளைந்தும், கூனியும் குறுகியும் வரக்கூடிய ஒன்றே அன்றி. அதற்கு மேல் அந்த ‘இது’வுக்கு எந்தவித தனி அந்தஸ்தும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை என்பதனை இந்த நாவலைப் படிக்கும்போது தங்களைச் சூழ உள்ள இயல்பான நடைமுறைகளோடு வாசகர்கள் இதனை ஒப்பிட்டுப்பார்த்தால் ஒப்புக்கொள்வர்.

இந்த நாவலுக்குள்ளே இருப்பவை நான் அறிந்தவை, பார்த்தவை, அனுபவித்தவைகளே! இதைப் படிக்கும் வாசகர்களாலும் இவைகள் அறியப்பட்டவை; பார்க்கப்பட்டவை, அனுபவிக்கப்பட்டவைகளாகவே இருக்கும் என்பது நிச்சயம். இவைகளை எனது இலக்கிய ஆளூகைக்குட்படுத்தி மக்களுக்குத் தந்ததில் எனக்கு எந்தவிதச் சிரமமுமிருக்கவில்லை.

பேனாவைக் கையில் வைத்துக்கொண்டு அந்தப் பேனாவுக்குத் தீனி போட சமூகத்தை மேலாக நோட்டமிட்டு தசை உணர்வுகளைப் பேனா வசப்படுத்தி எழுதுவது ஒரு வகை.

சமூகத்தில் நடமாடும்போது தற்செயலாக அகப்படும் ஒரு சம்பவத்தை, வெறிமாடொன்றைப் பிடிப்பது போன்று பாய்ந்து பிடித்து ஒரு கைக்குள் அடக்கிக்கொண்டு, கால்களை இடறி நிலத்தைப் தடவி பக்கத்தே கிடக்கும் கயிற்றினை எடுத்து அந்த வெறிமாட்டினைக் கட்டிப்போடுவது போன்ற விதத்தில் கையிலிருக்கும் கதையும் கதைப் பின்னலும் மனதிலிருந்து கலைந்து போய்விடுமோ என்ற ஏக்கத்தில் பேனாவை அவசரத்துடனும், ஆவேசத்துடனும் நகர்த்திச் செல்வது இன்னொரு வகை.

சமூகத்தோடு சேர்ந்து மக்களின் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து, அவர்களைப் படித்து, அவர்களிடமிருந்து படித்தவைகளை இலக்கிய ஆளுகைக்குட்படுத்தித் தங்கள் சுமைகளைத் தாங்களாகவே எடுத்தெறியும் போதத்தை அவர்களுக்கு
அளித்து இயல்பான முறையில் அவர்களை நகர்த்திச் செல்ல நிதானமாகப் பேனாவை ஓடவிடல் வேறொரு வகை.

இந்த மூன்று வகைகளுக்கு உட்பட்டவர்களே விமர்சகர்களுமாவார்கள்.

"நாங்கள் விருப்பு வெறுப்புக்கு உட்படாதவர்கள்; நடுநிலையாளர்கள்” என்று விமர்சகர்கள் கூறுவதெல்லாம் வெறும் பொய்யானவை. அரசியலிலோ இலக்கியத்திலோ, வேறெந்த விவாகரங்களிலோ நடுநிலைமை என்பது ஒன்றில்லை. நீதி, அநீதி என்ற இரண்டு புள்ளிகள் ஒன்றோடொன்று முட்டி நெருங்கிக்கொண்டு நிற்கின்றன. இடையே மூன்றாவது ஒரு புள்ளிக்கு இடமேயில்லை. இதனால் கோவிந்தனை விமர்சிக்கப் புகுபவர்கள் ஏதாவது ஒரு பக்கத்தில் நின்று தங்களை வெளிப்படுத்தியே ஆகவேண்டும். (அல்லது இனங்காட்டிக் கொள்ள மனது இடந்தராதபட்சத்தில்) ஒதுங்கிவிட வேண்டும்.

***
நன்றி : அலைகள் வெளியீட்டகம், படிப்பகம், 'தினம் ஒரு மின்நூல்' குழு
***
மேலும் வாசிக்க :

என்கதை - கே. டானியல் (பிறத்தியாள் வலைப்பதிவு)
கே.டானியல் கடிதங்கள்: நூல் விமர்சனம் கானப்பிரபா  (அ.மார்க்ஸ் தளம்)

No comments:

Post a Comment