Monday, January 14, 2013

ஆர்மோனியச் சக்கரவர்த்தி காதர் பாட்ஷா



விரலாலும் குரலாலும் வித்தை - ஆர்மோனியச் சக்கரவர்த்தி என்ற அதிசய மனிதர்

தினகரன் வசந்தம் . 13.1.2013

ஸ்வரக்கட்டைகளில் நர்த்தனமாடும் விரல்கள்.. காற்றில் மிதந்தலையும் அதன் இசையோடு கலந்து வரும் கம்பீரமான குரல்.. உள்ளத்தை உருக்கும் இசையில் மெய்மறந்து கிடக்கும் ரசிகர்கள்... அப்படி ஓர் அற்புத நிகழ்வை நிகழ்த்திக் காட்டியவர் ஆர்மோனியம் காதர் பாட்ஷா!

திரைப்படம் தமிழகத்தில் கால் பதிக்காத காலம் அது. இசைத்தட்டுகளின் வருகைக்குப் பிறகு பாடகர்களையும் நாடக நடிகர்களையும் மேடையில் பார்க்க நாடகைக் கொட்டகைகளை தேனீக்களைப் போல மொய்த்தார்கள் ரசிகர்கள். அப்படிப்பட்ட காலத்தில் புகழ்பெற்ற நாடகநடிகர், நடிகைகளுக்கு இணையாக மக்களால் ரசிக்கப்பட்டவர் ஆர்மோனியம் காதர் பாட்ஷா. தமிழ் நாட்டில் முதன்முதலில் மக்கள் மத்தியில் பிரபலமான ஆர்மோனியக் கலைஞர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்.

“ கே.எஸ். தேவுடு அய்யர், கே.எஸ். செல்லப்பா அய்யர், எஸ்.ஜி. கிட்டப்பா, டி.எம். மருதப்பா, பி.எம்.ரத்னா பாய், ஸ்த்ரீபார்ட் எஸ்.எஸ். சாரதாம்பாள், கே.பி. சுந்தராம்பாள் போன்றோர் வாய்ப்பாட்டில் சாதனை படைத்துக்கொண்டிருந்த காலத்தில் கையாலும் காலாலும் இசைக்கக்கூடிய ஆர்மோனியம்தான் இவர்வாத்தியம். அதீதமான உயரம், திடகாத்திரமான உருவம், முறுக்கிய மீசை.. இப்படி ஒரு இசைக்கலைஞனுக்கு தொடர்பே இல்லாத தோற்றத்துடன் இருந்தார் காதர் பாட்ஷா. அவர் பிறந்த ஆண்டு பற்றிய தகவல் இல்லை. பிறந்த இடம்: திருச்சியில் உள்ள உறையூர். திருச்சியும் தஞ்சாவூரும் அப்போதெல்லாம் நாடகத்தின் சொர்க்கபூமி. அந்த பூமியின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் காதர்பாட்ஷா. அவரது பெயருக்கு முன்னால் குறிப்பிடப்படும் ‘சக்கரவர்த்தி’ என்ற பட்டப் பெயரும் கடைசி வரை இருந்தது.

நாடகங்களில் ஆர்மோனியம் வாசிப்பவர்கள் மேடையின் ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள். அவர்களை மறைத்து கீற்றுத்தட்டி கட்டி வைத்திருப்பார்கள். அதனால் அந்தக் கலைஞர்கள் மக்களுக்கு தெரியாமலேயே போனார்கள். முதன்முறையாக கீற்றுத்தட்டிக்கு வெளியே வந்த ஆர்மோனிய கலைஞர் காதர் பாட்ஷா. ஒலிபெருக்கி இல்லாத காலத்திலேயே ஐந்தரை கட்டையில் இவர் பாடும் பாட்டும் ஆர்மோனிய இசையும் அரங்கத்தின் கடைசி வரிசையில் இருப்பவருக்கும் தெளிவாகக் கேட்கும். அப்போது புகழ்பெற்றிருந்த இசைக்குழுக்கள் எல்லாம் காதர் பாட்ஷாவின் ஆர்மோனியத்துக்காக காத்திருந்தன. அவர் இடம் பெற்றால் ‘சக்கரவர்த்தி காதர் பாட்ஷாவின் ஆர்மோனிய இசையுடன்...’ என்று விளம்பரம் செய்வார்கள். அதற்காகவே கூட்டம் கூடும்!

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளைக்கு ’மதுரை பாலகான சபா’ என்ற நாடகக் கம்பெனி இருந்தது. இதில்தான் வி.கே.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். திருப்பத்தூரில் யுத்த நிதிக்காக நாடகம் போட்டார்கள். அப்போது அவர்கள் நாடகத்துக்குப் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. அதனால் வி.கே.ராமசாமியும் டி,கே. ராமச்சந்திரனும் திருச்சி சென்று காதர் பாட்ஷாவை சந்தித்தார்கள். நிலைமையச் சொல்லி, ‘நாடகத்துக்கு இடையே உங்கள் ஆர்மோனிய கச்சேரி நடக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். ‘யுத்த நிதிக்காக நடத்துறீங்க..கண்டிப்பா வர்றேன். லாபம் வந்தா சம்பளம் கொடுங்க. இல்லேண்ணா போக்குவரத்து செலவு மட்டும் கொடுங்க’ என்று சொன்னார். அவர் ஒப்புக்கொண்ட பிறகு, ‘நாடகத்தின் இடையில் சக்கரவர்த்தி ஆர்மோனியம் காத பாட்ஷாவின் ஆர்மோனிய இசை நிகழ்ச்சி உண்டு’ என்று விளம்பரம் செய்தார்களாம். இதை வி.கே. ராமசாமி ‘எனது கலைப் பயணம்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

காதர் பாட்ஷாவின் பாடல்களில் தேசபக்தி மிகுந்திருக்கும். இஸ்லாமிய பாடல்களை பாடியிருக்கிறார். இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்து நிறைய பாடியிருக்கிறார். பாஸ்கரதாஸும் சூளை மாணிக்கநாயக்கரும் காதர் பாட்ஷாவுக்குப் பாடல் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். பாடல் எழுதுபவர்களுக்கு சன்மானத்தை பணமாக கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் காதர் பாட்ஷா. ஒரு பாடலுக்கு 10 ரூபாய் சன்மானம் கொடுத்திருக்கிறார். அப்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 6 ரூபாய்!

1930கள் காதர் பாட்ஷாவின் காலம். இவரின் 70 பாடல்களை எச்.எம்.வி. இசைத்தட்டுகளாக வெளியிட்டிருக்கிறது. அவை எதுவும் இப்போது கிடைப்பதில்லை. சில கிராமபோன் தட்டுகள் மட்டும் என்னிடம் பாதுகாப்பாக இருக்கின்றன. இலங்கை, மலேசியா நாடுகளுக்குச் சென்று பாடியிருக்கிறார். flipbooth, youtube இணையதளங்களில் அவர் பாடிய சில பாடல்களைக் கேட்கலாம்.

காதர் பாட்ஷாவின் முழுமையான வாழ்க்கை வரலாறு கிடைக்கவில்லை. அவர் சுதந்திரப் பாடல்களைப் பாடியதால் ஆங்கிலேயே அரசு ஒருமுறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கான அபராதத் தொகையை எஸ்.வி.சுப்பையாவும் எம்.கே. தியாகராஜ பாகவதரும் செலுத்த முன்வந்ததை ஏற்காமல் 6 மாத காலம் சிறையில் இருந்திருக்கிறார்.

காதர் பாட்ஷாவின் கடைசி காலத்தில் அவர் மீது ஆங்கிலேய அரசு கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. வழக்கின் முடிவில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கு பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. அவரை தூக்கில் போடும் முன் அவரது கடைசி ஆசை என்ன என்று சிறை அதிகாரிகள் கேட்க, அவர் தன் ஆர்மோனியத்தை இசைத்துப் பாட விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார், சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவர் பாட ஆரம்பித்ததும் மெய்மறந்து கேட்டிருக்கிறார்கள். இதில் தூக்குக் தண்டனை நிறைவேற்றும் நேரத்தை அதிகாரிகள் தவற விட்டதாகவும், குறிப்பிட்ட நேரம் தவறினால் ஒருவரை தூக்கில் போட முடியாது என்பதால் அவர் விடுதலை அடைந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. கடைசி காலம் வரை சிறையிலேயே கழித்தார் என்ற தகவலும் இருக்கிறது. எது உண்மை என்று தெரியவில்லை. காதர் பாட்ஷா மகத்தான இசைக் கலைஞர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!”
***

நன்றி : தினகரன், பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன், அசனா மரைக்காயர்

***
'A rare Gramaphone recording of Uraiyur T.M. Khader Batcha. He was a Harmoinium Vidwan and he like many others including K.S. Devudu Iyer, Madurai M.R. Vasavambal, Perur Subrahmania Dikshitar and Alathur Venkatesa Iyer helped establish a place for the harmonium in Carnatic music. However for many, their careers were restricted to the drama stage. The role of the harmonium in Camatic music diminished when the musical theatre went into oblivion' - Lakshminarayanan Sriram

***
Uraiyur Kather Batcha - Saravana Bhava Guhane Vaa



***
'Another good song sung by the great Uraiyur T.M.Kather Batcha. There is Bhakthi in each line as he sings with with devotion asking Muruga for Deliverance.'

 

4 comments:

  1. அற்புதமான பதிவு, தமிழகத்தின் இசை வரலாற்றில் மறந்து போய் விட்ட” சக்கரவர்த்தி காதர் பாட்சா” என்ற ஓர் மாபெரும் இசை மேதையை வெகு கவணமாக மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் அவரின் முயற்சியால் வாசகர்களின் கவணத்துக்கு 13.01.2013 (தினகரன் வசந்தம் இதழில்) கொண்டு வந்த தினகரன் நாளிதழுக்கும் ,இணைய தளத்தில் பதிவேற்றிய ஆபிதீன் பக்கத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 18 வருடங்களுக்கு முன் புதுச்சேரியை சேர்ந்த திரு.ஆசீர்வாதம் என்ற ஹார்மோனிய இசைக்கலைஞர் காதர்பாட்சா அவர்களைப் பற்றியும் அவரது மேதமை பற்றியும் சிலாகித்து கூறுவார். தூக்கு மேடையில், தூக்கு கயிற்றுக்குகீழே அவர் வாசித்த ஹார்மோனிய இசையில் மயங்கிய சிறை அதிகாரிகள் தூக்கு போடுவதையே மறந்து நேரம் தவறியதால் இசை அவரது உயிரை காப்பாற்றிய தகவலை தெரிவித்த போது அதன் முழுமை தெரியவில்லை. ஆசீர்வாதம் அவர்கள் தற்போது இல்லை,நாங்கள் அவருடன் பழகிய் காலங்களில் அவரது வயது 68 க்கி மேல் இருக்கும் 50 வருடங்களுக்கு மேற்பட்ட ஹார்மோனிய அனுபவத்தை கொண்டிருந்தார்.அந்த தகவலை இப்போது அறிந்த போதும், மாமேதை காதர் பாட்சா அவர்களின் இசையையும் கேட்கும் வாய்ப்பும் இந்த தளத்தில் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ராஜராஜன், உங்களின் வருகையும் மறுமொழியும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.

      Delete
    2. அன்புக்குறிய திரு.ஆபிதீன் அவர்களுக்கு, வணக்கம். சக்கரவர்த்தி. காதர் பாட்சா அவர்களின் புகைப்படம் கிடைத்தால் அதனை எனக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன். ஒரு படம் மட்டுமே உங்கள் பதிவில் பார்க்க முடிகிறது , குல்லா அனிந்த படம். அதன் நல்ல காப்பிகிடைத்தால் நல்லது .அதை ஓரளவு சீர்படுத்தி ஓவியமாக் தீட்ட விரும்புகிறேன். மற்றவை உங்கள் பதில் கிடைத்த பின் தொடர்பு கொள்ளுகிறேன். நன்றி. வணக்கம்.

      ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

      Delete
    3. என்னிடம் இல்லை ராஜன் சார். 13.1.2013 தினகரன் வசந்தத்தில் தேடிப்பாருங்கள்.

      Delete