Saturday, December 22, 2012

இதோ வருகிறார் இன்னொரு சூஃபி!

’மஞ்சக்கொல்லை சூப்பி’யான மாண்புமிகு ஜாஃபர்நானாவுக்குத்தான் அவருடைய மகத்துவமெல்லாம் புரியும். அருட்கொடையாளர்களின் தொடர்ச்சியாக எழுதுகிறார், ஆபிதீன் பக்கங்களை ‘அலங்காரம்’ செய்ய. நன்றி நானா!

***

அருட்கொடையாளர் - 12  :  அப்துல் ரஹ்மான் இப்னு அல் சூஃபி 

ஹமீது ஜாஃபர்

கோடை விடுமுறைகளில் பெரும்பாலும் இரவு நேரங்களில் பள்ளிவாசல் மகிழ மரத்தடி இல்லையெனில் வீட்டு மொட்டை மாடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்குவதுண்டு. காரணம் இயற்கையான நல்ல காற்று, அப்போதல்லாம் மழை காலம் தவிர மற்ற காலங்களில் கொசுக்களின் தாலாட்டு கிடையாது. தூக்கம் வராத இரவுகளில் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். நிலா வெளிச்சம் இல்லாதபோது நட்சத்திரக் கூட்டங்களையே பார்த்து ரசிப்பது வழக்கம். ஆகா எத்தனை நட்சத்திரங்கள்? கோடிக்கணக்கில் இறைந்து கிடப்பதைப் பார்க்கும்போது அதில் ஒரு சுகம் கிடைப்பதை உணர்ந்தேன். ஆம் எத்தனை எத்தனை நட்சத்திரங்கள். அவைகளில் சில அருகில், சில தூரத்தில், சில வெகு தூரத்தில், இன்னும் சில ஒரு சிறிய புள்ளிபோல் வெகு வெகு தூரத்தில் எத்தனை அழகு? சில பல வர்ணங்களில் மின்னுகின்றன, சில மின்னாமல் ஒரே மாதிரியான வர்ணத்தில் ஒளிர்கின்றன; அவற்றுள்தான் சில மங்கலான வெளிச்சம், சில பிரகாசமான வெளிச்சம், சில வெள்ளை ஒளி, வேறு சில சிகப்பு நிறம், சில மஞ்சள் நிறம். கருப்பு நிற சேலையில் வைரக் கற்கள் பதித்தது போல் வர்ணஜாலம் காட்டும் வானத்தை ரசித்துக்கொண்டே அதனை ஊடுருவிப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அவைகளின் தூரம், பரப்பளவு எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது-அல்லா எங்கே இருக்கிறான் என்ற கேள்வி மட்டும் குறியாக(?) தெரிந்தது. ஒன்று இரண்டு என்று ஏழு வானம் சொல்கிறார்களே! இந்த வானமெல்லாம் எங்கே இருக்கிறது? அல்லா எங்கே இருக்கிறான்? கேள்விதான் தோன்றியதே தவிர யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. ஒரு வேளை யாரிடமாவது கேட்டிருந்தால்...? வா காட்டுகிறேன் என்று.... நினைக்கவே பயமாக இருக்கிறது.

ஒரு நோன்பு மாதம் வால் நட்சத்திரம் தோன்றியது. சரியாக அதிகாலை நான்கு மணிக்கு சுபுஹுக்கு பாங்கு சொல்லும்போது தோன்றும், கீழ் வானம் வெளுக்கும்போது இருக்காது மறைந்துவிடும். பத்திரிக்கைகளில் பெரிதாக பீற்றி எழுதியிருந்தார்கள். விஞ்ஞான ஆசிரியர் ஸ்பெஷல் கிளாஸில் அதனை விளக்கினார். வால் நட்சத்திரம் வால் பகுதி எப்போதும் சூரியனுக்கு எதிராக இருக்கும் அது பல நூறு வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும். இது ஒன்று மட்டுமல்ல இதுபோல் பல நட்சத்திரங்கள் இருக்கின்றன, அதன் வால் பகுதி வாயு நிறைந்திருப்பதால் நமக்கு வால் போன்று தெரிகிறது என்றார். அதை தொடர்ந்து ‘பிரபஞ்சமும் ஐன்ஸ்டீனும்’ என்ற புத்தகத்தைப்  படித்தபோதுதான் ஒவ்வொரு நட்சத்திரமும் பல கோடி மைல் தூரத்தில் இருக்கிறது, அவை பூமியைவிட பெரிதானவை, சில சுய ஒளி உள்ளவை, சில சந்திரனைப் போல் சூரியனிடமிருந்து ஒளியை கடன்வாங்கி தருகிறது, தூரத்தை மைல் கணக்கில் சொல்வதில்லை அப்படி சொல்லப்போனால் ஒன்றுக்குப் பக்கத்தில் பல சைபர்கள் போடவேண்டியிருக்கும் எனவே ஒளிவருடம் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு ஒளிவருடம் என்பது ஒளி தொடர்ந்து ஒருவருடம் பயணம் செய்யும் தூரம். மிக அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரம் பத்து ஒளிவருட தூரம் என்றெல்லாம் எழுதியிருந்ததைப் பார்த்தபின்தான் எனக்கு இதனைப் பற்றிய அறிவு சிறிதளவு கிடைத்தது. அப்படியானால் அல்லா ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்தில் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தேன்.

பெற்ற அறிவு போதவில்லை, கூடவே ஆர்வக்கோளாறு, இருக்கவே இருக்கிறார் நம்ம குரு, ஷ்டேஷன் மாஸ்டர் ஜீவராஜ் சார். அவருக்குப் பிடித்தது எலக்ட்ரிக் அண்டு எலக்ட்ரானிக் என்றாலும்கூட இதையும் கொஞ்சம் விளக்கினார். அதன்பிறகுதான் தெரிந்தது பிரகாசிக்கும் சில நட்சத்திரங்களை இணைக்கும்போது சில உருவங்கள் கிடைக்கின்றன என்று. கயித்துக் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு நானும் இணைத்துப் பார்த்தேன் டபிள்யு என்ற ஆங்கில எழுத்து கிடைத்தது. வேறு உருவம் கிடைக்கவில்லை. என் அறிவு அவ்வளவுதான். இப்படி இணைத்து முற்காலத்தில் இரவு நேரக் கடல் பயணம் செய்திருக்கின்றனர். ஏன் இப்போதும் போர்பந்தர், மும்பை, கோழிக்கோடுவிலிருந்து மரத் தோணிகளில் அராபிய வளைகுடா வரும் இந்திய மாலுமிகள், ஈராக்கிலிருந்து இந்தியா மட்டும் திரும்பாமல் ஆப்ரிக்க நாடான ஜான்ஜிபார், செக்கத்திரா தீவுகளுக்கும் சென்று திரும்புகின்றனர். அவர்களிடம் என்ன ஜிபிஎஸ் (Global Positioning System) இருக்கிறதா? இல்லை ஆட்டோ பைலட்டிங் இருக்கிறதா? பேருக்கு ஒரு ராடார். இல்லாவிட்டால் லைசன்ஸ் கிடைக்காது. ஆயிரமாண்டுகளுக்கு முன்னுள்ள அந்த காலத்து அறிவுதானே இப்போதும் கைகொடுக்கிறது. அந்த அறிவை கைவல்யப் படுத்தினார் ஒரு சூஃபி.

'சூஃபி' இந்த வார்த்தையைக் கேட்டாலே என்னைப் பொருத்தவரை  நினைவுக்கு வருவது ஆன்மீகம். சூஃபி என்ற வார்த்தைக்கு மொழியியல் வித்தகர்கள் நீண்ட விளக்கமளிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் சூஃபி என்று சொன்னாலே இறை வழியில் தன் சிந்தனைகளை செலுத்தி எண்ணம், சொல், செயல் அனைத்தையுமே இறைவனிடம் சமர்ப்பித்துவிடும் ஞானிகள் என்ற எண்ணம்தான் தோன்றும். இவர்களை இருசாரார்களாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் இறைக் காதலில் தன்னைப் பறிகொடுத்து அந்த இன்பத்திலேயே மதிமயங்கி இருப்பவர்கள். மறு சாரார் 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என தான் பெற்றதை அள்ளிக் கொடுத்து மக்களை நேர்வழி படுத்துபவர்கள். இதல்லாமல் வேறொரு வகையினர் இருக்கின்றனர், சூஃபி என்ற சொல்லை தன் பெயராக வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக்கொண்டு திரிபவர்கள். இவர்களுக்கும் சூஃபிஸத்துக்கும் எந்த பொருத்தமும் இருக்காது, இருந்ததாகவும் தெரியவில்லை.

இதற்கெல்லாம் மாறுபட்டு முன்னொரு காலத்தில் ஒரு சூஃபி இருந்தார். தான் மேற்கொண்ட காரியத்தில் வெற்றி கண்ட வித்தகர். விஞ்ஞான உலகத்துக்கு விளக்கேற்றியவர். ஆம் வான் வெளியில் மின் மினிப் பூச்சிகளாய் ஜாலம் காட்டி கோலம் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். தந்தை சூஃபி என்றாலும் அரபிய வழக்கப்படி தன் பெயருடன் தந்தையிலிருந்து மூன்று நான்கு தலைமுறைப் பெயர்களை இணைத்துக்கொள்வதால் அவரும் சூஃபி என்றே உலகில் அறியப்படுகிறார்.  என்றாலும் சூஃபி என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர் என்றால் அது மிகையாகாது.

The Great Arabian Astronomer

அப்துல் ரஹ்மான் இப்னு அல் சூஃபி (AZOPHY 903 - 986)

அப்துல் ரஹ்மான் அபுல் ஹுசைன் இபுன் உமர் இபுன் முஹம்மத் அல் ராஜி அல் சூஃபி என்ற நீண்டபெயருடைய இவரை மேற்குலகில், லத்தீன் மொழியில் அறியப்படுவது AZOPHY என்று.  பாரசீகத்தில் பிறந்த இவரைப் பற்றி , பிறப்பு 7 டிசம்பர் 903 லும் இறப்பு 25 மே 986 லும் என்று குறிப்பு ஓர் தளத்தில் கிடைத்தபோது வேறொரு தளத்தில் இவர், இன்றைய ஈரானின் தலைநகராக இருக்கும் டெஹ்ரானின் புறநகர் பகுதியில் (பாரசீக மொழியில் புறநகர் பகுதிக்கு ரேய் என்றழைக்கப்படுகிறது) பிறந்தார் என்ற தகவல் கிடைக்கிறது (இங்குதான் ஜெக்கரியா ராஜி 864ல் பிறந்தார்). அமீர் அப்துல் தவ்லாவின் ஆட்சியில் இஸ்ஃபஹான்ல் வாழ்ந்தார். பின்னர் ஷிராஜில் சில காலமும் பின்னர் பாக்தாதிலும் வாழ்ந்திருக்கிறார் என்ற தகவலும் கிடைக்கிறது. என்றாலும் தனது வாழ்நாளில் பெரும்பகுதி இஸ்ஃபஹானுக்கும் ஃபார்ஸுக்கும் இடையே கழிந்ததாக தனது நூலின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

வான சாஸ்திரம்

எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே பாக்தாதில் அறிவு மறுமலர்ச்சி களைகட்டத் தொடங்கியது. கிரேக்க மொழியிலிருந்த அனேக நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. குறிப்பாக தாலமி, ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்களின் தத்துவம், அரசியல், அறிவியல்  கோட்பாடுகள் அரபிக்கு வந்தன. தலமியின் Almagest  ஐ அடிப்படையாக வைத்து வான் வெளி ஆய்வுகளை இதற்குமுன் பலர் நடத்தியிருந்தாலும் அல் சூஃபியுடைய ஆய்வு மிகத் துல்லியமாக இருந்தது.

முதல் வான் இயல் ஆய்வாளர்


வான் இயல் ஆய்வில் ஆர்வம் கொண்ட அல் சூஃபி , தாலமியின் அல்மாகெஸ்டில் அனேக தவறுகள் இருப்பதைக் கண்டறிந்து அவைகளைத் திருத்தம் செய்தார். நெபுலா என்று சொல்லக்கூடிய மேகமூட்டம் போல தோற்றமளிக்கும் விண்மீன்கூட்டத்தை ஆய்வு செய்து அதன் தன்மையை வெளிப்படுத்தினார். அக்கூட்டத்தின் தெற்குப் பகுதிக்கு 'அல் பக்கரல் அபியத் - White Bull எனப் பெயரிட்டார். இது மலாய் தீவுக்கூட்டப் பகுதிகளில் செல்லும் அராபிய மாலுமிகளுக்கு 'அல் பக்கரல் அபியத் - White Bull பெரிதும் உதவியது. இப்போது அவற்றை Nubecula Major (the greater Magellanic Cloud) என்று அழைக்கப்படுகிறது.  (He identified the Large Magellanic Cloud, which is visible from Yemen, though not from Isfahan; it was not seen by Europeans until Magellan's voyage in the 16th century - Wikipedia)

சாதாரண கண்களால் காணக்கூடிய பால்வழி விண்மீன்களை (milkyway galaxy) கிபி 905 க்கு முன்பே இஸ்ஃபஹான் வானவியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டாலும் அல் சூஃபி, தான் கண்டறிந்த விண்மீன் கூட்டங்களை மிக கவனமாக அட்டவணைப் படுத்தி அவைகளின் பரிமாணங்களை (magnitudes) நிர்ணயித்தார்.  தான் ஆய்வு செய்தவற்றை 'சுவாரல் கவாகிப் அல்தமானிய்ய வ அல் அரபயீன்' என்ற நூலாக வெளியிட்டார். The Forty Eight  Constellations என்பது மருவி 'கித்தாப் அல் கவாகிப் அல் தாபித்' (The Book of the constellation of the Fixed Star ) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. This is a masterpiece on stellar astronomy.          

இன்று பெயரிடப்பட்டுள்ள Andromeda Nebula  M31 (describing as a "small cloud") விண்மீன்களை துல்லியமாக வரைபடத்துடன் இதில் விளக்கியுள்ளார். இவரது விளக்கமோ அல்லது இவ்விண்மீன்கள் கூட்டத்தைப் பற்றியோ டெலஸ்கோப் கண்டுபிடிக்கும் வரை ஐரோப்பிய நாடுகளுக்குதெரியாமலிருந்தது, 1612ல் சைமன் மாரியஸ் டெலஸ்கோப்பின் உதவியால் கண்டறியப்பட்டப்  பின்பே உலகுக்கு தெரியவந்தது.

தவிர , தாலமியினால் கூறப்பட்ட 48 நட்சத்திரக் கூட்டத்தைப் (constellation) பற்றிய தவறான விளக்கத்தைத் திருத்தி , அவற்றுக்கு அரபு பெயர்கள் இட்டு , அவற்றின் நிலை, பரிமாணம், அட்டவணை (Location, Magnitude and Tables of Stars) உட்பட அனைத்தையும் வரைபடத்துடன் விளக்கியுள்ளார். ஏறக்குறைய 1018 நட்சத்திரத்தின் ஒளி, நிறம், நிலை (Brightness, Colour, Position) களை விளக்கியுள்ளார். இது 17ம் நூற்றாண்டு வரை பின்னால் வந்த அரபு வானவெளி ஆய்வாளர்களுக்கும் ஐரோப்பிய ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாயிற்று.

Al Sufi's Cluster

இந்த நட்சத்திரக்கூட்டத்தில் சுமார் 40 நட்சத்திரங்களை அல் சூஃபி கண்டறிந்தார். பின்பு ஹொடிர்னா (1597-1660) என்பவர் மீண்டும் கண்டறிந்தார். இதனை 1920 ல் அமெரிக்காவைச் சேர்ந்த  D.F. Brocchi, என்பவர் (amateur astronomer) வரைபடம் தயாரித்தார் எனவே இதனை Brocchi cluster or Al Sufi Cluster என்று அழைக்கப்படுகிறது.

   
தன்னுடைய நூலில் 55 அட்டவணையும் 48 constellations யும் குறிப்பிட்டிருப்பதோடல்லாமல் ஒவ்வொன்றின் விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார். அல்மாகெஸ்டில் இருக்கும் அட்டவணை முறையையே அல் சூஃபியும் பின்பற்றி மூன்று வகையாக பிரித்திருக்கிறார். முதல் வகையில் 21 northern constellations, இரண்டாம் வகையில் 12 ராசி நட்சத்திரங்களையும் (Zodiac) மூன்றாம் வகையில் 15 Southern Constellation விவரித்துள்ளார்.



அல் சூஃபி கண்டறிந்த 100 மேற்பட்ட புதிய நட்சத்திரங்களில் ஒன்றுகூட அல்மாகஸ்டில் தாலமியோ அல்லது அதற்கு முன்வந்த அறிஞர்களோ குறிப்பிடவில்லை. அல்சூஃபியுடைய பங்கு வானவியல் சரித்திரத்தில் இன்றுவரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

வான்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த ஆட்சியாளர் அப்துல் தவ்லாவுக்கு தான் எழுதிய ஆராய்ச்சி நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். தவிர 880ல் அல் பத்தானியின் அட்டவணையையும் இணைத்துள்ளார். இதல்லாமல் வானவியல் பற்றிய குறிப்பேடு ஒன்றையும் தயாரித்ததாக வரலாற்றில் காணப்பட்டாலும் இப்போது காணப்படவில்லை காலப்போக்கில் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் ஷிராஜில் ஆய்வுகூடம் (observatory) ஒன்றை நிறுவியதாகவும் வரலாறு கூறுகின்றது.

அல் சூஃபியின் ஆய்வை அடிப்படையாக வைத்து பின்னால் வந்த பைரூனி , புகழ்பெற்ற வான் ஆய்வாளர் samarkand இளவரசர் Ulugh Beg (1437), இடுலர்(1809), அர்ஜிலாண்டர்(1843),ஃபுஜிவாரா மற்றும் யமஓஹா(2005) இன்னும் பல ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வுகளை நடத்தியிருக்கின்றனர்.

மேலும் alpha majoris என்ற விண்மீன் கூட்டத்திலுள்ள நட்சத்திரத்தின் நிறம் மாறுவதில்லை என்று அல் சூஃபி சொன்னதை பின்னால் வந்த ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். ரோம் நகரில் அது சிகப்பாகத் தெரிவதாக Seneca என்பவரும், அலக்ஸாந்திரியாவில் சிவந்த(reddish) நிலையில் தெரிவதாக தாலமியும், சில நாட்கள் மஞ்சள் நிறத்திலும் பின் வெள்ளை நிறத்திலும் ஏதென்ஸில் தெரிவதாக Schmidt(1841) என்ற ஜெர்மனிய விஞ்ஞானி கூறுகிறார்.

அல் சூஃபியின் கணக்கியல் தாலமியின் கணிதத்தைவிட மிகத் துல்லியமாக இருந்தது. The stellar longitudes 1 deg in 66 years rather than the correct value of 1 deg n 71.2 years என பின்னால் வந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.  தூரத்திலுள்ள விண்மீன்களைப் பற்றி மட்டும் ஆராயவில்லை அருகிலிருக்கும் நிலவையும் ஆய்வு செய்து இன்றைய விஞ்ஞானிகளால் வரையப்பட்ட சந்திரப் படத்தின்(Lunar Map) 9ம் பிரிவில்(22°.1'S, 12°.7'E) காணப்படக்கூடிய மலைப்பள்ளம்(mount crater) 47கிமி விட்டமுடையது என்றும் கண்டறிந்தார். அதற்கு அவரின் நினைவாக Moon Crater Azophi என்ற பெயரை இட்டுள்ளனர்.

தன் பணியை வான சாஸ்திரத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை.  astrolabe ஐ பற்றியும் அதனை பல்வேறு வகையில் பயன்படுத்தும் முறை பற்றியும், ஜாதகம், சோதிடம், நேவிகேஷன், சர்வே, கிப்ளா, தொழுகை நேரம் முதலியன பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.

அரபு நாடு மறந்தாலும் - இல்லை , முஸ்லிம் உலகம் மறந்தாலும் - வான்இயல் ஆய்வு உலகம் மறக்கவில்லை என்பது திண்ணம்.  2006ம் ஆண்டிலிருந்து ஈரானில் Astronomy Society of Iran – Amateur Committee (ASIAC) என்ற அமைப்பு சூஃபியின் நினைவாக வான்வெளி ஆய்வு போட்டி நடத்துகிறது. அதில் ஈரான் ஈராக்கை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.



1985ல் , சூஃபியின் நினைவாக வெவ்வேறு மதிப்புகளில் தபால் தலை வெளியிட்டது சோமாலியா.
***
Sources:
http://en.wikipedia.org/wiki/Abd_al-Rahman_al-Sufi
http://messier.seds.org/xtra/ngc/brocchi.html
http://messier.seds.org/m/m031.html
http://books.google.co.uk/books?id=vOUWfhBheDIC&lpg=PA121&ots=Jd8FN9U4tc&dq=Ihsan%20Hafez&pg=PA121#v=onepage&q=Ihsan%20Hafez
http://www.ianridpath.com/startales/alsufi.htm
http://messier.seds.org/xtra/Bios/alsufi.html
http://www.wdl.org/en/item/2484/
http://www.eso.org/gen-fac/pubs/astclim/espas/iran/sufi.html

***


 


நன்றி : ஹமீது ஜாஃபர் | http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com

7 comments:


  1. 'அப்துல் ரஹ்மான் இப்னு அல் சூஃபி'
    பற்றிய தகவல்கள் கொண்ட இக்கட்டுரை
    மிக அற்புதமான ஆய்வின் வெளிப்பாடாக
    சிறந்த மொழி மாற்றமுமாக இருக்கிறது.

    இக்கட்டுரையில்
    எங்க நாநா.. கட்டுரையி தொடக்கத்தில்
    சுட்டியிக்கும்
    இளம்பருவத்து வான் தொடர்பு
    கவிதையாகவே இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பின் குறிப்பு:
    இதனை என் ஃபேஸ்புக்கில் பயன் படுத்தி கொள்ள
    நாநா அனுமதிக்கணும்.
    நன்றி
    -தாஜ்

    ReplyDelete
  2. அன்பு தாஜ், இதெற்கெல்லாம் அனுமதி தேவையா? நீங்க வேறு நான் வேறல்ல.! பேஷா போடுங்கோன்னே.

    ReplyDelete
  3. சுவையான நடையில் அற்புதமான விளக்கங்கள்.அருமை நானா!

    ReplyDelete
  4. மல்லாக்கப் படுத்துக்கொண்டு எதையாவது பார்க்கும் வழக்கத்தை துபாயிலும் விடவில்லை ஜாஃபர்நானா ;-)

    ReplyDelete
  5. நானா இன்னுமா மச்சியோட சமாதானமாகலை?

    ReplyDelete