Saturday, December 1, 2012

அராபிய தத்துவமேதை அல் கிந்தி - ஹமீது ஜாஃபர் கட்டுரை

பாகம் - 2

அருட்கொடையாளர் - 11
 
முதல் பாகத்தின் அருட்கொடையாளர் வரிசையில்  இறுதியாக இப்னு பதூதாவின் பயண நிகழ்வுகளின் கடைசி இரண்டு பகுதிகளும் மிகவும் நெருக்கடியான சூழலில் எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆம், தாயாருக்கு  விபத்து ஏற்பட்டு தஞ்சை ரோகிணி மருத்துவமனையில் ஒருமாத சிகிச்சை, எனக்கு எதுவுமே தோன்றவில்லை. ஒரு பக்கம் தாயாரின் உடல்நிலைக் குறித்து கவலை, மறுபக்கம் தொடர் கட்டுரையை நிறைவு செய்யமுடியுமா என்ற சந்தேகம்.
 
மனக்கவலைக்கு மருந்தாக அறிவுபூர்வமான ஆலோசனை சொல்பவர் எங்கள் ஜஃபருல்லா நானா. அச்சமயத்தில் அவரது தாயாரும் இறைவனடி சேர்ந்தார்கள். இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ளமுடியாமல் என் தாயாரின் அருகில் இருக்கவேண்டிய நிலை. இப்படி ஒருசேர பரிதவிப்புக்கிடையில்  அருகில் இல்லாவிட்டாலும் மூவாயிரம் மைல்களுக்கப்பால் துபையிலிருந்துக்கொண்டு ஆபிதீன் கொடுத்த ஆறுதல் எனக்கு தெம்பூட்டியது. வீட்டிற்கு வந்தபிறகு பாதியிலேயே நிற்கின்ற கட்டுரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்து நிறைவு செய்தேன். அதன்பிறகு எழுதவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. தமிழுலத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களை வெளிப்படுத்திவிட்டோம், இது போதும் என்றே தோன்றியது.
 
நண்பர் தாஜுடன் பேசும்போதெல்லாம் "நானா எழுதுங்கள், இன்னும் எழுதுங்கள், அரசியலைப் பற்றி எழுதுங்கள், சமுதாயத்தைப் பற்றி எழுதுங்கள் ஆன்மீகத்தைத் தொடுங்கள்" என்று சொல்லிக்கொண்டே வந்தார். "நானா,  வெறும் இஸ்லாமிய அறிஞர்களை மட்டும் எழுதாமல் மற்ற அறிஞர்களையும் எழுதுங்கள்" - இது ஆபிதீன். "இது உங்களுக்கல்ல பின்னால் வரும் சமுதாயத்துக்கு" - இது ஜஃபருல்லாஹ் நானா. இப்படி ஒவ்வொருவரும் ஊக்கமூட்டினார்கள்.
 
அரசியல் மீது கொண்ட காதல் முறிந்து நாற்பது வருடங்களாகிவிட்டன; இருபத்திரண்டு குண்டு போட்டபிறகு "அங்கே என்ன பொகையுது" என்று கேட்டானாம் ஒரு செவிடன், அதுதான் சமுதாயம். நான் சொல்லும் ஆன்மீகம் 'ஹக்கீகத்துல் ஹக்கியா (உண்மையின் உண்மை)' நிச்சயமாக அது செரிக்காது; மலையாளத்தில் சொல்வது மாதிரி ’வடி(கம்பு) கொடுத்து அடி வேடிக்க(வாங்க) வேண்டிவரும்’. ஆகவேதான் இது. மற்ற அறிஞர்களைப் பற்றி எழுதும் முன் இவ்வுலகிற்கு பல்வேறு அறிவுகளை வெளிப்படுத்திய இஸ்லாமிய அறிஞர்கள் மறைக்கப்பட்டு அவர்களின் ஆய்வுகளில் தங்கள் பெயரை இணைத்துக்கொண்ட மேலை நாட்டவர்தான் இன்று ஒளிர்ந்துக்கொண்டிருக்கின்றர் என்பது திண்ணம். எனவே மறைக்கப்பட்ட / மறக்கப்பட்ட இன்னும் பலரை வெளிக்கொணர வேண்டும் என்ற உறுத்தல் நீண்டகாலமாக இருந்துகொண்டிருந்தது, அதன் வெளிப்பாடாக இதனைத் தொடர்கிறேன். ஆங்காங்கே சில தவறுகள் இருக்கலாம், கண்ணுறுபவர்கள் சுட்டிக்காண்பிக்க வேண்டுகிறேன்.
 
 
**
 
 
 
ஆல்கஹால் இன்று உலகத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற பொருள்களில் ஒன்று. ஆல்கஹால் என்ற ஆங்கில வார்த்தை அரபு மொழியிலிருந்து எடுக்கப்பட்டது, எனவே ஆல்கஹால் அரபுலகத்திடம் நெருங்கிய தொடர்புள்ளது என கொள்ளலாம். இன்று நெருங்கிய அல்லது நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும் மறைமுகமான தொடர்பு இன்றும் உள்ளது. போதை தரும் பொருளாக இல்லாவிட்டாலும் மருந்தாக, வாசனைப் பொருளாக, ஆராய்ச்சிப் பொருளாக இப்படி பல பரிமாணங்களில் அனைவரிடமும் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டது. ஆக அரபுலகம், அரபல்லாத உலகம், முஸ்லிம் உலகம், முஸ்லிமல்லாத உலகம் என்ற பாகுபாடில்லாமல் வலம் வந்துக்கொண்டிருக்கும் இதனை, இதன் தன்மையை சற்றேறக்குறைய பத்து நூற்றாண்டுகளுக்கு முன் அரபுலகத்தைச் சார்ந்த ஒருவர் ஆராய்ந்தார். அதன் பயன் இன்று ஆலமரமாக விரிந்து பரந்து கிடக்கின்றது என்றால் மிகையாகாது.
 
இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களின் மாணக்கராகிய ஜாபிர் பின் ஹைய்யான்  அவர்களின் வேதியல் ஆய்வுகளால் உந்தப்பட்டு அதனை ஆராய்ந்த  இவரின் முழுப் பெயர் அபு யூசுப் யாக்கூப் இப்னு இஸ்ஹாக் அல் கிந்தி. இவரது பிறந்த வருடம் தெளிவாக இல்லை என்றாலும் கலிஃபா ஹாரூன் ரஷீத்  அவர்களின் ஆட்சி காலத்தில் இவரது தந்தை கூஃபாவின் கவர்னராக இருந்த காலத்தை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கி.பி 800ல் பிறந்திருக்கலாம் என்று யூகிக்கின்றனர். 
 
வழித்தோன்றல்
 
இவரது தந்தையைப் போலவே இவரது பாட்டனாரும் கூஃபாவின் கவர்னராக இருந்திருக்கிறார். இவரது வழிமுறை சவுதி அரேபியாவைச் சார்ந்த 'கிந்தா' (Royal Kindah tribe) என்ற உயர்குலப் பிரிவாகும். பல பிரிவுகளை ஒருங்கிணைத்த இப் பிரிவினர் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர். ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் வலிமை இழந்தாலும் அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்புக்களில் இருந்தனர். அவ்வகையில் இவரது பரம்பரையினர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில் வியப்பில்லை. 
 
கல்வியும் வாழ்க்கையும்
 
ஆரம்பக் கல்வியை கூஃபாவில் முடித்தபின் உயர் கல்வியை பக்தாதில் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் மாணவப் பருவத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தினார். கி பி 813ல் பாக்தாதில் ஏற்பட்ட அரசியல் புரட்சியின் விளைவாக தனது சகோதர் அல் அமீனை வீழ்த்திவிட்டு பதவிக்கு வந்த கலிஃபா மாமூன்  பல மாறுதல்களைச் செய்யத் தொடங்கினார். அறிவுத் தாகம் கொண்ட கலிஃபா பக்தாதில் தந்தை ஹாரூன் அல் ரஷீது நிறுவிய அறிவாலயத்தில் (House of Wisdom)  பல்வேறு அறிஞர்களை வரவழைத்து பல முன்னேற்றங்கள் செய்யத் தொடங்கினார்.  அல் கிந்தியின் அசாத்தியத் திறமையைக் கேள்வியுற்ற கலிஃபா, குவாரிஜ்மி, அபு மூசா சகோதரர்கள் போன்ற அறிஞர்களுடன் பணியில் அமர்த்தினார். அங்கு முக்கியப் பணிகளில் ஒன்று பைசாந்திய கிரேக்க தத்துவ நூற்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்வது. மொழிபெயர்ப்பு இரண்டு பிரிவாக நடைபெற்றது. ஒன்று குவாரிஜ்மி தலைமையிலும் மற்றொன்று ஹுனைன் பின் இஸ்ஹாக் தலைமையிலும். மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் சிரிய கிருஸ்துவர்களாக இருந்ததால் தவறு நிகழ்ந்துவிடாமல் இருக்க அராபிய அறிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடையே பாலமாக இருந்தார் என்று சில ஆய்வாளர்களும், கிரேக்க மொழி அறிந்திருந்தாலும் இவரால் படிக்கத்தெரியாது என்பதால் மொழிபெயர்ப்பு பணிகளுக்கு மேற்பார்வையாளராக இருந்தார் என வேறு சில ஆய்வாளர்களும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பேரறிஞர்களான அல்குவாரிஜ்மி, இப்னு மூசா சகோதரர்கள், ஹுனைன் பின் இஸ்ஹாக், தாபித் பின் குர்றா போன்றோருடன் பணியாற்றிருக்கிறார் என்பது தெளிவு.
 
833-ல் மாமுன் இறந்தபின் அவரது சகோதரர் அல் முஃதாசிம் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவருடைய ஆட்சி காலத்தில் முஃதாசிமின் மகன் அஹமதுக்கு கல்வி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 842-ல் முஃதசிம் இறந்தபின் அல் வத்திக்கும் 847-ல் அல் முத்தவக்கிலும் ஆட்சிப் பொறுப்பேற்றனர்.
 
இப்போது போலவே அப்போதும் ஆட்சியாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்துக்கொண்டேதான் இருந்தது, ஒரு சில மன்னர்களைத் தவிர. அந்த வகையில் கடைசி இரண்டு கலிஃபாக்கள் காலத்தில் அல் கிந்தி சரியாக நடத்தப்படவில்லை. மார்க்க ரீதியான முரண்பட்ட கண்ணோட்டம் அல்லது அறிவாலயத்தின்(house of wisdom) அறிஞர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவைகள் காரணமாக இருக்கலாம் ஆனால் தெளிவான ஆதரமில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கலிஃபா முத்தவக்கிலுகும் அல்கிந்திக்குமிடையே மனக்கசப்பு அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அரபி சித்திர எழுத்து (Calligraphy) பணிகளை இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அல்கிந்தி தண்டிக்கப்பட்டு அவருடைய நூல்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு பின் அவை அனைத்தும் திருப்பி அளிக்கப்பட்டதாக வறலாறு இயம்புகின்றது என்றாலும் இதன் பின்னனியாக இவருடைய தத்துவ நூற்களால் பனுமூஸா மற்றும் அபு மஃஷருக்கும் இவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கலிஃபாவிடமிருந்த உறவு பாதிக்கப்பட காரணமாயிருந்தது என்கின்றனர்  ஜெ. ஜெ. ஒகானெர் மற்றும் இ. எப். ராபர்சன். ஹென்றி கோர்பின் கூற்றுபடி கடைசி காலத்தில் தனிமையில் வாழ்ந்த அல்கிந்தி அல் முஃதமித் (ஆட்சி-870-892) ஆட்சிகாலத்தில் கி பி 873 -ல் பாக்தாதில் இறைவனடி சேர்ந்தார்.
 
 
 
ஆக்கங்கள்
 
பல்கலை வித்தகரான இவர், பிரசித்திப் பெற்ற  இஸ்லாமிய தத்துவ அறிஞர்களில் ஒருவராகவும் மத்தியகால பண்ணிரண்டு அறிஞர் பெருமக்களில் ஒருவராக இருந்தார் எனவும் இத்தாலிய ஆய்வாளரான ஜெரலொமோ கர்டனொ(1501-1575) கூறுகிறார். மற்றொரு அறிஞர் இப்னு அல் நதீம்  கூற்றுபடி அல்கிந்தி 260 நூற்கள் எழுதியிருப்பதாகவும் அவைகளில் ஜியோமிதி 32 நூற்கள், எண்கணிதம்(Arthmetic) 11,  வானவியல் 16, மருத்துவ இயல்(medicine) 22, தத்துவம் 22, தர்க்கம் 9, இயற்பியல் 12, உளவியல் 5, கலை மற்றும் இசை 7 இதல்லாமல் tides, astronomical instruments, rocks, precious stones etc.  இவர் எழுதிய நூற்கள் பல, காலத்தால் அல்லது மங்கோலியர்களின் ஊடுறுவலினால் அழிந்தன. சிலவற்றை இத்தாலிய அறிஞர் ஜெரார்டு (Gerard of Cremona) லத்தீனில் மொழிபெயர்த்தார். இருபத்தி நான்கு வகையான நூற்கள் துருக்கி நூலகத்தில் காணப்படுகின்றன.
 
கணிதம்
 
கணிதவியலைப் பொருத்தவரை இன்று அரபிய எண்கள் என்று சொல்லப்படும் இந்திய எண்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியதிலும் வானவியல் கணிதத்திலும் அல் குவாரிஜ்மியின் பங்கு மகத்தானது என்றாலும் அல்கிந்தியின் பங்களிப்பும் அதில் பொருந்தியிருக்கிறது. எண்களின் இணக்கம், பெருக்கல் வழிமுறை, கால அளவீட்டில் எண்களின் பயன்பாடு, எண்களை ஒழுங்கு படுத்தலும் நீக்கலும் முதலானவற்றை தெளிவுப் படுத்தியவர் அல்கிந்தியாகும். இவர் எழுதிய நான்கு பாகங்கள் கொண்ட 'கித்தாப் ஃபி இஸ்திமால் அல் அதத் அல்-ஹிந்தி (On the Use of the Indian Numerals ) என்ற நூல் மத்திய கிழக்கிலும் மேற்கிலும் இந்திய எண்களின் பயன்பாட்டை பரப்பியதில் பெரும் பங்கு வகுத்தது. ஜியோமிதியில் இணைகோடுகளின் கோட்பாட்டையும் ஒளி இயலில்(optic) ஜியோமிதியின் பங்கையும்  விவரித்துள்ளார்.
 
வானவியல்
 
அல்கிந்தியின் வானவியல் கொள்கை தாலமியைப் பின்பற்றியதாகவே இருந்தது. பூமியை மையமாகக் கொண்டு சூரியன் முதல் அனைத்து கோளங்களும் சுற்றி வருகின்றன என்பது தாலமியின்  கொள்கை. இக்கோளங்களின் சுழற்சி இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது இவரது அறிவார்ந்த கொள்கைகளில் ஒன்று. கோளங்கள் குறிப்பாக சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் இடப்பெயற்சியால் பூமியில் காலமாற்றம் ஏற்படுகிறது, இடத்துக்கு இடம் மாறுபடும் பருவநிலை வித்தியாசம் அவ்விடங்களுக்கும் கோளங்களின் நிலைக்குமுள்ள வித்தியாசத்தால் ஆகும். இத்தன்மையினால் பூமியில் அனைத்துப் பொருட்களை உண்டாக்குகின்ற நான்கு மூலகங்களான நீர், நெருப்பு, காற்று, மண் இவைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
 
வேதியியல்
 
ரசவாதம் முடியாத ஒன்று, ஒரு மூலகத்திலிருந்து வேறொரு மூலகத்தை உருவாக்க முடியாது  எனவே தாழ்வான உலோகத்தை தங்கமாக மாற்ற முடியாது, ஒரு பொருள் அதன் மூலப்பொருளிலிருந்தே (base metal) உருவாக்கமுடியும் என்கிறார். வேதியலைப் பொருத்தவரை  ஜாபர் பின் ஹைய்யானின் அல்கமி கொள்கைகளின் பலவற்றில் மாறுபட்டு நின்றாலும் ஆர்வம் நிறைந்தவராகவே இருந்தார். ஒயினில் எந்த வேதிப் பொருள் போதைத் தருகிறது என்பதைக் கண்டறிய பலமுறை காய்ச்சி வடித்தலின் (Distillation) மூலம் ஆல்கஹாலை (pure alchohol) தூய்மைப் படுத்தும் முறையை முதலில் கண்டறிந்தார். மேலும் மலரிலிருந்து பல்வேறு முறைகளில் அத்தர் தயாரிப்பு முறையும் கண்டுபிடித்தார். மருத்துவத்தைப் பொருத்தவரை இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நோய்க்கான மருந்தின் அளவீடு எப்படி இருக்கவேண்டும், நோயாளிக்கு எவ்வளவு மருந்து எப்போதெல்லாம் கொடுக்கவேண்டும் என்பதை வரையறுத்தார். இதனால் மற்ற மருத்துவர்களுக்கும் இவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
 
தத்துவம்
 
அன்றைய காலக்கட்டத்தில் அரபுலக தத்துவார்த்த சிந்தனைகளை மேம்படுத்தும் அகராதியாக விளங்கினார். அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை சார்ந்து இவரது தத்துவக் கோட்பாடும் இருந்தது. அதே சமயம் ப்ளாட்டோ, ப்ரோக்ளஸ்  போன்ற தத்துவ ஞானிகளும் அங்காங்கே வந்துப்போனார்கள். எனவே முன் சொன்ன  அறிஞர்களிடமிருந்து எல்லாம் பெறப்பட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் தாக்கம் இருந்தது. என்றாலும் அவரது சொந்தக் கோட்பாடே  என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 
இவரது கோட்பாடு அக்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.  ஒரு சாரார் இஸ்லாத்துக்கு எதிரானது என்றனர். இக்கோட்பாடு எந்த வகையிலும் இஸ்லாத்தின் பழமை மரபுக்கு (orthodox islam) முற்றிலும் எதிரானதல்ல என்றார் அல்கிந்தி.  இந்த தத்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் முற்றிலும் இசைவான தொடர்பு பல வகைகளில் வெளிப்படையானது என்று வாதிட்டார். விளைவு , அபுமூஸா சகோதரர்கள் மற்றும் வானவியலார் அபுமஃஷருடைய பகைமையை சம்பாதித்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் வாத விவாதங்களும் ஏற்பட்டன. இது இமாம் கஜ்ஜாலி (1058-1111) அவர்களின் காலம்வரை நீடித்தது. இமாம் அவர்களே முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். 
 
மூலதத்துவம் (Metaphysics)
 
இவரது சிறந்த நூலான 'ஃபி அல்-ஃபல்சஃபா அல்-உலா'வில் (on first philosophy) அரிஸ்டாட்டிலின் கோட்பாடு ஒரு சில காணப்பட்டாலும் மற்றவை மாறுபடுகிறது. உதாரணமாக உலகத் தோற்றத்தை பற்றிய கோட்பாடு இருவருக்கும் மாறுபடுகிறது. உலகம் முடிவற்றது என அரிஸ்டாட்டிலும் அவரைப் பின் தொடர்ந்து மற்ற கிரேக்க தத்துவஞானிகளும் போதிக்கின்றனர். அல் கிந்தி, இன்மையிலிருந்து (ex nihilo) உலகம் தோன்றியது என முன்வைக்கிறார். மேலும் அந்நூல் மூலம் அவர் வெளிப்படுத்துவது முதல் தத்துவம்; அதாவது முதல் உண்மை. அது தன்னுள் எதனையும் கொள்ளவில்லை; தன்மையோ, பன்மையோ, குணமோ, பண்போ எதிலும் கட்டுப்பாடற்றது; எதனுடனும் அதனை ஒப்பிடவோ, குறிப்பாகவோ, குறிப்பற்றோ விளக்கமுடியாது; அதிலிருந்தே மற்ற உண்மைகள் வெளிப்பட்டன. முதல் உண்மைக்கு மறு பெயர் இறைவன் என்கிறார். அதன் சக்தி, இல்லாமையிலிருந்து உள்ளமையாக்குவது (மூலமே இல்லாமல் படைப்பது;. அது முடிவற்றது; முன் பின் என  எல்லையற்றது; மாறமுடியாதது; மாற்றமுடியாத்து; அழிவற்றது). மனிதன் என்பது வாழ்க்கை முழுவதும் ஆன்மாவைக் கொண்டு பயணிப்பது. ஆன்மா உடம்பைவிட்டு பிரிவதே மரணம். ஆன்மாவின் இருப்பிடம் அறிவு. அறிவை மனிதன்  சடஉலகிலிருந்து பெறவேண்டும்.
 
காலமும் இயக்கமும் எல்லையற்றது ஒன்றோடொன்று பிணைந்தது என்பது கிரேக்கக் கொள்கை. அல் கிந்தி இதிலிருந்து மாறுபடுகிறார். சடம், காலம், இயக்கம் அனைத்துக்கும் எல்லையும் முடிவும் உண்டு என்கிறார். 'அல் வஹ்தானியா அல்லாஹ் வ துனாஹியா ஜிர்முல் ஆலம் (On the Unity of God and the Limitation of the Body of the World) மற்றும் 'ஃபி கம்மியா குத்துப் அரிஸ்தாதலிஸ் வ மாயஹ்தஜ் இலாஹி ஃபி தஹ்ஸில் அல் ஃபல்சஃபா (The Quantity of the Books of Aristotle and What is Required for the Acquisition of Philosophy)' என்ற இரு நூற்களிலும் விரிவாக விளக்கியிருக்கிறார்.
 
அல் கிந்தி, தனது தத்துவ கோட்பாட்டை இஸ்லாத்துடன் நேர் விவாதம் செய்யாமல் பொதுவாகவே தவிர்த்துக் கொள்கிறார். அதல்லாமல் மதக்கோட்பாட்டுக்கும் பங்கம் விளைவிக்காமல் இணக்கமாகவே கொண்டு செல்கிறார்.
 
ஒழுக்க நெறிமுறை (Ethics)
 
'ஃபி அல்ஹிலா லிதஅஃப் அல் அஹ்ளன் (On the Art of Averting Sorrows) என்ற நூலில் ஒழுக்க நெறிகளையும் நடைமுறை தத்துவத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறார். அல் கிந்தி, Stoic ஐதிகத்தால் வெகுவாகக் கவரப்பட்டிருக்கிறார் குறிப்பாக அன்றைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் சிரிய நாட்டு கிறுஸ்துவ அறிஞர்களுடன் தொடர்பு இருந்ததினால் எபிக்டிட்டஸ்-ன்  சிந்தனை காணப்படுகிறது என்கிறார் ஃபஹ்மி ஜடான் என்ற தத்துவப் பேராசிரியர்.  மற்றவர்களுடைய சுதந்திரத்தை பாதிக்காமலிருப்பதே ஒரு மனிதனுடைய மகிழ்ச்சி என்கிறார் எபிக்டிட்டஸ். அவரது கொள்கையில் முடிவாக, ஒரு மனிதன் இனிமேல் இவ்வுலகில் வாழவேண்டிய அவசியமில்லை என்ற நிலை வரும்போது அவன் தற்கொலை செய்துக்கொள்ள அனுமதிக்கிறார். இந்த முடிவை அல் கிந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதனுடைய உண்மை நிலை அவனது உடம்பில் இல்லை ஆன்மாவில் இருக்கிறது என்கிறார் அல் கிந்தி. பயனில்லா ஒன்றை இவ்வுலகில் நோக்குவதும் கிடைக்காத ஒன்றின் மீது ஆசை கொள்வதும் துன்பத்தை விளைவிப்பதே. எனவே மனம், சமநிலை பாதிக்கப்படும்போது சுயமும் பாதிக்கிறது. ஆகவே உலகியலோடு ஒரு மனிதன் தன்னைப் பொருத்திக்கொள்வதை அல் கிந்தி கடுமையாக எச்சரிக்கிறார்.
 
அறிவுநெறியியல் (Epistemology)
 
இவ்வுலக வாழ்வில்கூட ஆன்மா அல்லது உயிரையும் உடம்பையும் இருவேறாகப் பிரித்துப் பார்க்கிறார் அல் கிந்தி. அவர் இங்கே ஆன்மா என்று குறிப்பிடுவது intellective or rational soul. அது இணையானதென்றாலும் புலனறிவுபோல் புலநுணர்வு தனித்தே செயல்படுகிறது. உணர்ச்சி திரள்வது போல் அறிவாளி தன்னுள் இயல்திறனைத் திரட்டிக்கொள்கிறான். இத்தகையவர் அறிவுசார்ந்த அனைத்தையும் தன்னுள் உள்வாங்கிக்கொள்கிறார். உள்வாங்கியவற்றை வைத்து சிந்திக்கும்போது உண்மையான சிந்தனை வெளிப்படுகிறது, எனவே இது 'உண்மையான அறிவு' என்கிறார் அல் கிந்தி. ஆனால் பின் வந்த தத்துவ வாதியான அல் ஃபராபி அதனை  'முயன்றுபெற்ற அறிவு' என்கிறார்.
 
இசை
 
இசையை அறிவியல் ரீதியாக அணுகியிருக்கிறார். சப்தங்களின் பிரத்தியேக அமைப்பை தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறார். குறிப்பிட்ட ஸ்வரத்தை (notes) இசைப்பதினால் எப்படி இசைப் பொருத்தம் (harmony) ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். ஒவ்வொரு ஸ்வரத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்து எவை மிகத் தாழ்ந்த அல்லது மிக உச்ச சுருதியில் (very low pitch or very high pitch) இருக்கிறதோ அவற்றில் இசை இணக்கம்(harmony) ஏற்படாது என்பதை கண்டறிந்து ஒவ்வொரு சுருதியையும் எப்படி அமைப்பது என்பதை எழுத்தில் வடித்தார்.
 
 


பல்கலை வித்தகரான அல் கிந்தியின் சிந்தனை பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை ஸ்பெயின், மேற்கத்திய நாடுகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமின் கில்ஸ் என்பவர் அல் கிந்தியின் சிந்தனைகளை குறை கூறினார்.  எப்படி இருந்தாலும் மேற்கத்திய இஸ்லாமிய பண்பாட்டில் அல் கிந்தியின் சிந்தனைகள்  நீடித்தன. சுருக்கமாகச் சொன்னால் பின்னால் வந்த இமாம் கஜ்ஜாலி, இப்னு சினா, அல் ஃபராபி ஆகியோர்களுடய தத்துவக்கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் இவரே என சொல்லலாம்.

Sources:
http://en.wikipedia.org/wiki/Al-Kindi
http://www.muslimphilosophy.com/ip/rep/H029.htm
http://plato.stanford.edu/entries/al-kindi/
http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Al-Kindi.html
http://www.alshindagah.com/septoct2005/kindi.html

மேலும் பார்க்க : அருட்கொடையாளர்கள்

***

 
நன்றி : ஹமீது ஜாஃபர் | http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com

5 comments:

  1. அராபிய தத்துவமேதை அல் கிந்தி
    தனது கண்டுப் பிடிப்புகளாலும்
    வானவியல்/ கணிதங்களின் பங்களிப்பாலும்
    நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
    எதிர்ப்புகள் பல கடந்த
    அவரது சாதனைகள்
    இன்றைய நவீன உலகத்தின் முன்னேற்றத்திற்கு
    உதவிகரமாக இருப்பதை அறிய வருகிற போது
    பெருமையாக இருக்கிறது.

    இவர்களின் வழிவந்த
    இஸ்லாமிய அறிஞர்களின் சந்ததிகளின் சாதனைகள்
    இன்றைக்கு இல்லாமல் போனதை நினைக்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது.

    நாநா ஜஹஃபர் அவர்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.
    அவர் தயக்கம் கொள்ளவில்லை என்றால்...
    வரலாற்று ஆய்வாளர்...
    'மஞ்சை பச்சைத் தங்கம்' ஜெஹஃபர்
    என்றழைக்க விருப்பம்.
    -தாஜ்



    ReplyDelete
    Replies
    1. நன்றி தாஜ்.

      நீங்கள் கொடுத்த ஊக்கம், அதை தொடர்ந்து ஆபிதீன், ஜஃபருல்லா நானா, இன்னும் மனத்தளவில் கொடுத்த நண்பர்களின் ஊக்கம்தான் எழுதத் தூண்டியது என்பது உறுதி. தங்கம் எப்போதும் மஞ்சளாகத்தான் இருக்கும். நானும் அதுபோலவே இருந்துக்கொள்கிறேன். தயவு செய்து பச்சைப் போர்வைப் போர்த்தி 'பச்சை பாவா' வாக ஆக்கிவிடாதீர்கள்.

      Delete
    2. நாநா.
      இந்த அளவில்
      நீங்கள் திடமாக இருப்பது சந்தோஷமே.
      என் தவறை உணர்கிறேன்.
      தொடருங்கள். வாழ்த்துக்கள்.
      -தாஜ்

      Delete
  2. அருமையான தொகுப்பு. தொடருங்கள் உங்கள் சேவையை. அல் கிந்தியின் புத்தகங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கிறதா நானா?

    ReplyDelete
  3. கிடைக்கலாம் ஆனால் எங்கே என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்.

    ReplyDelete