Wednesday, August 1, 2012

நான் கண்ட நாலு பேய்கள் - 1 : மஜீத்

கொழுந்து விட்டெரிகிறது சிரியா; கூடவே ’தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ தீ - இன்னும். இந்தக் கொடுமையில் , பேய் கட்டுரையை அனுப்பி ’காட்டுங்க நானா’ என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் வேண்டும்! மஜீதுக்கு அது இருக்கிறது. பயப்படவே மாட்டார். 'ஆச்சி' என்றால் மட்டும் அச்சமோ அச்சம். இருக்கும்தானே...

இன்னொரு வேடிக்கை செய்தார். நண்பர் பேயோன் குறிப்பிட்ட ‘பன்னிரு விழிகளிலே’ பாடல் வேண்டும் என்று நான் கேட்டதற்காக,  தேடியெடுத்து  சுட்டி கொடுத்தவர், ‘ரமலான் சேவை!’ என்று தலைப்போடு அனுப்புகிறார்.  என் அப்பனே முருகா, காரைக்குடி மஜீதை மட்டும் காப்பாத்துப்பா!. .

சரி.  “பேய் .. இருக்கிறதா ? இல்லையா” என்று கொத்தமங்கலம் சுப்பு கேட்டதற்குப் “பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது, அது மட்டும் உண்மை” என்று புதுமைப்பித்தன் கூறினாராம். புதுமைப்பித்தன் சிறிதுகாலம் காரைக்குடியில் - மஜீத்விட்டுப் பக்கம் - வேலைபார்த்தது உண்மை என்று இதன்மூலம் தெரிகிறது.  நானும் புதுமைப்பித்தன் ரகம்தான். அய்யய்யோ, எழுத்தில் அல்ல, பயத்தில். இதை ‘தஹிரியமா’ எங்கேயும் சொல்வேன். 

பேய்க்கு முன்னுரை வழங்க பிசாசுதான் சரியான ஆள் என்பதால் தாஜை இங்கே இழுக்கிறேன். ஃபேஸ்புக்கில் நம்ம கவிஞர் கேட்ட கேள்வியால்தான் நண்பர் கிரிதரனிடமிடமிருந்து சுவாரஸ்யமான பதில் கிடைத்தது. ‘மானுடராகிய நாம் சிந்திக்கின்றோம். அவற்றால் அவ்விதம் சிந்திக்க முடிவதில்லை. சிந்திப்பதால் இருப்பு பற்றிய அச்சம், மரணம் பற்றிய அச்சம் எம்மைக் கற்பனை செய்ய வைக்கின்றது. விளைவு: ஆலமரத்து முனி, இரத்தக்காட்டேரி போன்ற பல்வகைப் பேய்கள். இவ்விதமெல்லாம் கூறுகின்றேனேயென்று, என்னை யாமத்தில் மயானத்துக்குச் செல்லும்படி மட்டும் சவாலுக்கு அழைத்து விடாதீர்கள்!’ என்று சொல்லியிருந்தார். (முழுதாக பிறகு பதிவிடுகிறேன்). இந்தக் கட்டுரையும் கிடைத்தது. இலக்கியக் கட்டுரை அல்ல என்பதால் பயமில்லாமல் வாசித்தேன்; பதிவிடவும் முன்வந்தேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பேய் பிடித்தாட்டுகிறது. எனக்கு Blogபேய், மஜீதுக்கு Facebook பேய். தாஜுக்கு கவிதைப் பேய். அஸ்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் நான்தான் அசல் பேய்! எப்படி விரட்டுவது? சொல்லுங்களேன். - ஆபிதீன்


***


முதலில் பிசாசின் பாராட்டு மெயிலைப் பாருங்கள் :

மஜீத்...
ரொம்ப அருமை.
எழுத்திலே ஒரு புதையல் எடுத்திருக்கே.

நீ கண்ட காட்சிபற்றி
என் கருத்து.

நாம் உணரும் காட்சிகள்
கண்ணே பார்த்தாலும்
மூளைதான் காண்கிறது.
பாமரர்கள் இந்த நிலையை சட்டென ஒப்ப மாட்டார்கள்.

நாம் காணும் காட்சிகள்
ஒவ்வொருவருக்கும்
சின்னச் சின்ன வித்தியாசத்தில் தெரியும் என்பதுதான் உண்மை.
ஒருவன் விழுந்து விழுந்து ரசிக்கும் பெண்
இன்னொருவன் பார்வையில் ஒன்றுமில்லை என்று ஆவதும் கூட இதனால்தான்!

தவிர,
இந்தப் பார்வை இரண்டு நிலைப்பட்டது.
ஒன்று,
நாம் கண்களால் காணும்போதே மூளை நமக்கு விரித்துக் காட்டுவது.

இரண்டு,

நம் மூளை நமக்கு நம் உணர்வுகளுக்கு ஒப்ப காட்சிகளை விரித்துக் காட்டுவது.

இது கண்களை திறந்திருக்கும்போதும் நடக்கும், கண்களை மூடிக் கொண்டிருக்கும்போதும், தூங்கும்போதும் நடக்கும். கலைஞன், கண்களைத் திறந்துக் கொண்டோ, மூடிக் கொண்டோ ஒரு காட்சியை ’விஸுவலாக’ டெவலப் செய்து பார்ப்பது இப்படித்தான்! நாம் தூங்கும் போதும் கனவு காண்பது இப்படித்தான். ஆக, நம் கண்ணுக்கு காட்சி தெரிந்தது என்பதை பேயைக் கண்டேன் என்கிற நிலையோடு குழப்பிக்கொண்டு பார்ப்பது அத்தனைக்கு சரியாக இருக்காது.

இங்கே நீ அந்த தவறை செய்யவில்லை. குழந்தைப் பருவத்தில் கண்ட மிரட்சியை மிரட்சியாக மட்டுமே எழுதி இருக்கிறாய். மேலும் நீ சொல்லாமல் விட்டதைத்தான்  உனக்கு எழுதி இருக்கிறேன்.

குறிப்பாய் குழந்தைகள் டார்ச் அடித்து விளையாட்டை நீ தொட்டுக் காமித்திருப்பதில் சொக்கிப் போனேன். அப்படியான டார்ச் லைட் அத்துப் போன இன்றைய காலகட்டத்தில், இந்த உன் வர்ணனை ஓர் ஆவணம்.
வாழ்த்துக்கள்.

-தாஜ்

***


நான் கண்ட நாலு பேய்கள் - 1 : மஜீத்

நான் பேயை வெகு அருகில் கண்டவன். கிட்டத்தட்ட மூன்றடி தூரத்துக்குள். நான் பேய்ப்பயம் காட்டப்பட்டு வளர்க்கப்படவில்லை. குழந்தைப்பருவ பயமுறுத்துதல்கள் கூட  ‘களவாணி‘ வந்து புடிச்சுக்கிட்டுப் போய்ருவான் என்றுதான் இருக்கும். பூச்சாண்டி மாக்காண்டியெல்லாம் தெருப்பயலுக சொல்லித்தான் தெரியும். என் களவாணியின் கற்பனை உருவம் தெரியுமா? உடலெல்லாம் பச்சிலைபோன்ற வஸ்துவால் பூசிக்கொண்டிருக்கும் ஒல்லியான, கையில்  ‘ஏதோ‘ ஆயுதம் வைத்திருக்கும் ஒரு மனிதன் (வெட்டும்புலி தீப்பெட்டியில் இருப்பவர் போல)

சில வருடங்களுக்குப் பிறகு சாதாரண மனிதர்கள்தான் களவானிகள் என்பதைத் தெரிந்தும், கண்கூடாக அறிந்தும், நம்ப சிரமப்பட்டவன் நான். அப்போ பேயைக் கற்பனை செய்தவர்கள் பாடு?

அதிருஷ்டவசமாக பயம் காட்டாமல் வளர்க்கப்பட்டவன் நான். அதைவிட அதிர்ஷ்டம் நான் பயப்படுவேனோ என்று என் தந்தை பயப்படாதது.

முதல்பேய்:

மருத்துவரான என் அத்தா ஆகாசவாணியில் 11 மணிவரை கர்னாடக சங்கீதம் - ரேடியோ சங்கீத சம்மேளனம் – (சங்கீதம்லாம் தெரியாது; இருந்தும் விரும்பிக்கேட்பார்) கேட்டுவிட்டுத் தூங்கும் பழக்கமுள்ளவர். சில சமயங்களில் நடு இரவில் திடீரென்று சிகரெட் (ஒருநாளைக்கு குறைந்தது 5 பாக்கெட் வரைக்கும் புகைப்பார் அப்போது) இல்லையென்று செகன்ட்ஷோ நடக்கும் டூரிங் டாக்கீசுக்குப் போய் வாங்கிவருவார். எனக்கு ஏழுவயதிருக்கலாம் அப்போது. ஒரு நாள் நடுஇரவில் விழித்தேன். தூக்கம் கலைந்துவிட புரண்டு புரண்டு படுக்க, என்னடா தம்பி தூங்கலையா நீன்னு கேட்டார். இல்லைன்னு நான் சொல்ல, அப்பன்னா கடைக்குப் போய் டீ வாங்கிட்டு வர்றியான்னு கேட்டவுடனேயே, சடாரென்று எழுந்துவிட்டேன். (எப்படியும் இரவு 12 மணிக்குமேல்தான் இருந்திருக்கும்)

அவரும் எழுந்து, அவர் வைத்திருந்த, ‘தெர்மோஸ்‘ ஃப்ளாஸ்க்கையும் ரென்டுகட்டை வின்ச்செஸ்டர் டார்ச்சையும் எடுத்துத் தந்தார், ஃப்ளாஸ்கை அதில் மாட்டியிருந்த தோல் வாரால் என் தோளில் குறுக்காக அணிவித்து, கடையில்போய்தான் கழட்டவேண்டும். அங்கு வெந்நீர் ஊற்றிக் கழுவிவிட்டு டீ போட சொல்லவேண்டும் என்று வழிமுறை சொன்னார். பிற்பாடு அப்படி மாட்டிக்கொண்டு போவது மிகவும் பிடித்த ஒன்றாகிப் போனது.

எல்லா வீட்டிலும் மின்சாரம்  பரவலாகாத நேரம் அது. எங்கள் வீட்டிலும் மின்சாரம் இல்லை அப்போது. அந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்ப்பது பரவசமானது., வட்டமான பித்தளைப் பட்டனை அழுத்துவது, கீழுள்ள பட்டனைத்தள்ளி தொடர்ச்சியாக எரியச்செய்வது, கையால் மூடி ரத்தம் பார்ப்பது, வானில் அடித்து எவ்வளவு தூரம் வெளிச்சம் போகிறது, அது எங்கே முடிகிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்வது என்று தேவையே இல்லாமல் எரித்து பேட்டரியை முடித்துவிடுவதால் சிறுவர்களிடம் அது கிடைக்காது. இப்போது சுதந்திரமாக உபயோகிக்க தகுதி வந்துவிட்டதால், பெரியமனிதராகி விட்ட தோரணையில் பயமோ இரவு எத்தனை மணி என்ற சிந்தனையோ எங்கிருந்து வரும்?

ஆனால் முதல்நாள் அனுபவம் ரொம்ப வித்தியாசமாக அமைந்து விட்டது;

அப்போது எங்கள் ஊரில் விளக்குக் கம்பங்கள் நிறைய இருந்தாலும் அவற்றில் ஏதாவது ஒன்றிரண்டில் அவ்வப்போது விளக்குகள் எரியவும் செய்யும்! இப்போது மிஷன் ஸ்டார்ட்; வீட்டிலிருந்து கிளம்பி, தெருவைத்தாண்டி, மஞ்சச்சந்து முக்கத்தில் ஒரு ட்யூப்லைட் எரிந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. இருட்டாக இருந்தால்தானே டார்ச் லைட் அடிக்கலாம்! மஞ்சசந்து முழுதும் வெளிச்சம் தெரிந்தது. மெயின்ரோட்டில் திரும்பியதும் இருட்டு. டார்ச் லைட்டுக்கு வேலை, உபயோககரமாய், என் மூலம் முதன்முதலாய், ஹா... அப்படியே சென்றேன். காசிக்காரச்செட்டியார் வீட்டருகே, ரோட்டின் குறுக்காக ஓடிய வயரில் ஒரு குண்டுபல்பு லைட். டார்ச்சை அணைத்தேன். பிறகு மீண்டும் கொஞ்ச தூரத்தில் இருட்டு. டார்ச் லைட். பிறகு சந்தைப்பேட்டைத் தெரு குறுக்கிடும்போது மறுபடி ஒரு தெருவிளக்கு. பிறகு மீண்டும் இருட்டு. பஹார்ராவுத்தர் வீட்டருகே ஒரு ட்யூலைட். அதன் பிறகு சிறிது இருட்டு. அப்போதே கொஞ்ச தூரத்தில் நைட்டுக்கடையான காளியம்மாள் டீஸ்டால் தெரிந்தது. கடையின் வெளிச்சம் தெரியும் வரை டார்ச்லைட். பிறகு சமத்தாக அணைத்துவிட்டு கடையை அடைந்தேன்,

ஃப்ளாஸ்க்கில் எப்படி டீ போடவேண்டும் என்று டீ போட்டவருக்குப் பாடம் நடத்திவிட்டு, இடையில் கிடைத்த பாராட்டுகளை வானத்தில் மிதந்து வாங்கிக்கொண்டு (பையன் யாரு? ராத்திரியில் பயப்படாம வந்திருக்கானே? ஓ, நம்ம டாக்டர் பையனா? சின்னப்புள்ளயா இருந்தாலும் எப்டி பத்தரமா தெர்மாஸ கொண்ட்டு வந்துருக்கான் பாத்தியளா? புள்ளைனா இப்டித்தான் இருக்கணும்), திரும்பிப் போகும் வழியில் எங்கெங்கே லைட்டு இருக்கு, எங்கு டார்ச் அடிக்கணும்னு யோசனையோடு டீயையும் வாங்கிக்கொண்டு, கிளம்பினேன்.

கடையிலிருந்து கொஞ்சதூரத்தில் ஆரம்பித்து பஹார்ராவுத்தர் வீடுவரை டார்ச், சந்தைப்பேட்டைத் தெரு லைட், காசிக்காரச்செட்டியார் வீட்டு குண்டுபல்பு வெளிச்சங்களில் அணைத்துவிட்டு வந்துகொண்டிருந்தேன். இப்போது குண்டுபல்பு வெளிச்சத்தால் என் நிழல் நீண்டுகொண்டேபோவதை கவனித்துக்கொண்டே அடுத்து இருட்டானவுடன் டார்ச் அடிக்கணும் என்ற திட்டமும் மனதில் வந்தது. எப்போது இருட்டாகும் என்ற ஆவலில் நடந்தேன்.

திடீரென்று ஒரு அதிர்வு. பதட்டம். மனது வெறுமையான உணர்வோடு விவரிக்க இயலாத பயம். சரேலென்று எல்லாம் நடந்ததுபோல எனக்கு முன்னால் தரையிலிருந்து வானம்வரைக்கும் சுமார் 3 அல்லது 4 அடி அகலத்துக்கு ஒரே வெள்ளையாக ஏதோ ஒன்று நிற்கிறது. இப்போதும் அந்தத் தோற்றம் ஞாபகம் இருக்கிறது. திடுக்கென்று உடல் தூக்கிப் போட்டால் போன்ற ஒரு உணர்வு. சப்தநாடியும் அடங்கிப்போக வினாடிகளில்  ‘பயலுக‘ சொன்ன எல்லாப் பேய்க்கதைகளும் ஞாபகத்தில் வந்து செல்ல, லேசாக கண்கள் இருட்ட, அடுத்து என்ன என்ற பயமும் எதிர்பார்ப்பும் - இத்தனையும் வினாடிகளுக்குள் - நடந்தேறியது. பிறகு திடீரென்று சுயஉணர்வு வந்ததுபோல் தோன்ற, மூளை எனக்கிட்ட முதல் கட்டளை: டார்ச்சை அடி. அடித்தேன்
என் எதிரில் நின்றது எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரிந்த, அதீத சாதுவான, எண்ணெய்க் கடைக்காரரால் பிள்ளையார் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட தூய வெள்ளைநிற, கோயில்மாடு. எனக்கு சுமார் 4 அடி தூரத்தில் நின்றது. அதற்கு மேல் – வானம் வரை - ஒன்றுமே இல்லை.

விலகி நடந்து அடுத்த ஐந்தாவது நிமிடம் வீட்டில் இருந்தேன். இவ்வளவும் நினைவில் இருக்கும் எனக்கு, இந்த ஐந்துநிமிடங்களில் நடந்தது நினைவில் இல்லை. சுத்தமாக. வீட்டில் அத்தாவின் பாராட்டு. (தம்பி சீக்கிரமா வாங்கிட்டு வன்ட்டானே) எனக்கும் டீ. அதன்பிறகு கொஞ்சநேரத்தில் தூங்கியும் விட்டேன். அன்று நான் பயத்தில் வியர்த்து மூர்ச்சையடைந்திருந்தாலோ, பயங்கரமாகக் கத்தி ஊரைக்கூட்டியிருந்தாலோ, அல்லது வீட்டுக்குச் சென்றபின் இரண்டுநாளைக்குக் காய்ச்சல் அடித்திருந்தாலோ (பின்குறிப்பு காண்க), இன்றுவரை எனக்குப் பேய்ப் பயம் இருந்திருக்கலாம். பயம் வராத வகையில் நானும் அதிருஷ்டசாலிதான். அதன்பிறகு எத்தனையோ முறை சென்றுவந்திருக்கிறேன் இரவு வேளைகளில். ஒன்றும் தட்டுப்படவில்லை என் கண்களுக்கு.

பி.கு.: என் அத்தாவின் சிறுவயதில் காளையார்கோவிலில் இருக்கும்போது, பக்கத்திலிருந்த சிவல்புஞ்சைக்கு (இடம் விஷயத்தில் தகவல்பிழை இருக்கலாம்) காலைநேரத்தில், வாயால் பிர்ங்ர்ங்ர்ங்ர்ங்ர்ங்ர்ர்ர்ர் என்று காரோட்டிகொண்டே பெரியத்தாவீட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது, ஒத்தியடிப்பாதையில் திடீரென்று  “டேய் நில்ரா“ என்று அதட்டலாக ஒரு சத்தம்கேட்க, இவர் நின்றால் சுமார் 7 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக மிகப்பெரிய முறுக்கு மீசையுடன் ஒரு ஆள் நின்றிருக்க, இவருக்கு  “திடுக்குனு தூக்கிப்போட்ருச்சு“. கண்ணைக்கசக்கிட்டுப் பார்த்திருக்கார். ஒருத்தரையும் காணோம். இவருக்கும் பயமோ, வேறு எதுவுமோ ஒன்றும் தோன்றவில்லையாம். மறுபடியும் பிர்ங்ர்ங்ர்ங்ர்ங்ர்ங்ர்ர்ர்ர். வீட்டுக்குப் போனால் காய்ச்சல் வந்துருச்சாம். கிழவிகள் துருவித்துருவிக் கேட்டபின் நினைவுபடுத்தி நடந்ததைச் சொல்ல  “ஏதோதோ சொன்னுச்சுகளாம், பெருசுக“. இவருக்கு சுத்தமாகப் புரியவில்லையாம்.

ஆக மேலே சொன்ன இரண்டு விஷயங்களுமே அப்படியே விட்டுவிட்டதால் அவை இரண்டும் இன்றளவும் வெறும் சம்பவங்களே. லேசாக இட்டுக்கட்டினாலோ, அல்லது நாங்களே சிறிது சேர்த்து சுவாரஸ்யமாக்கி இருந்தாலோ இரண்டு பேய்கள் அதிகப்படியாக இப்பூவுலகில் உலாவிக் கொண்டிருக்கும்.

இச்சம்பவத்தை சிறிதளவுகூட மிகைப்படுத்தி ஒரு பேய்க்கதையாக நான் சுவாரஸ்யப்படுத்தாதது, இன்றளவும் “நான் என்னைப்பற்றியே“ வியக்கும் ஒரு விஷயம்.

எனவே,

சம்பவங்களும்,
சம்பந்தப்பட்டவர்களின் பயமும்,
சுவாரஸ்யமாக்குவதற்கு அவர்கள் சேர்த்துக்கொள்ளும் பொய்களும்,
தவிர மனத்தில் ஏற்றப்பட்ட மூடநம்பிக்கைகளும்தான்
பேய்கள்.

மற்றபடி அவை பாவம்! விட்டுவிடுங்கள்.
முடிந்தால் என்னிடம் அனுப்பி வையுங்கள்! எனக்கும் கொஞ்சம் டைம்ப்பாஸா இருக்கட்டும்!!

கடவுளும் பேயும் ஒண்ணுதான்.
கற்பிக்கப்பட்டாலொழிய கண்டுணரமுடியாது.

***


நன்றி : பேய்க்கும் பிசாசுக்கும்! 
http://majeedblog.wordpress.com/
amjeed6167@yahoo.com

****

போனஸ் : ஒரு பேய்க்கதை !
பேய் வீடு | யெஸ்.பாலபாரதி

7 comments:

  1. அன்பு வாசக நண்பர்களுக்கு...

    மஜீத் எனக்கு அனுப்பி
    வாசிக்க கிடைத்த
    நான் கண்ட நாலு பேய்கள் குறித்து
    என் அபிப்ராயத்தை மஜீதுக்கு எழுதி இருந்தேன்.
    அதனை,
    என் ஆபிதீன், இங்கே பதிந்தும் வைத்திருக்கிறார்.
    தொடர்ந்து மஜீத்..
    அது குறித்து எனக்கு எழுதிய போது...
    மேலும்,
    சில சங்கதிகளை அவருக்கு எழுதினேன்.

    இதெல்லாம் எத்தனை அர்த்தம் என்று எனக்கு தெரியலை.
    நம்பினதை மறைக்காமல் எழுதினேன்.
    அதனை இங்கே
    'மஜீத் பார்த்த பேயின்' தொடர் கருத்தாக வைக்கிறேன்.
    ஒன்று நிச்சயம்
    யாரையும் வறுத்தணும், புண்படுத்தணும் என்றெல்லாம்
    நான் எழுதேவே இல்லை.
    நம்புங்கள்.
    நன்றி
    -தாஜ்

    ***

    நன்றிண்ணே.
    சிரத்தையெடுத்து பாராட்டிருக்கீங்க
    பயங்கர சந்தோஷமா இருக்கு
    (காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு ரீதியில பாராட்றமாதிரியே இருக்கு எனக்கு.
    அவர்ட்ட சொன்னா, சந்தடி சாக்குல தாஜ காக்கைன்னு சொல்லிட்டியேம்பார்)

    -மஜீத்.

    *
    to Majeed
    அப்படி இல்ல.
    உன் எழுத்தை குறித்து எழுதிய மாதிரி...
    உன் பார்வையின் மயக்கத்தையும்
    எனக்குத் தெரிந்த அளவில் விவரித்திருக்கேன் அல்லவா?
    அதை,
    இன்னும் விரிவா எழுதி இருந்த சரியா இருந்திருக்கும் என்று படுகிறது.

    விவேகனந்தர் கடவுளை பார்த்தது,
    இந்த ஆன்மிகவாதிகள் முக்தி அடைஞ்சுட்டேன் என்பது
    அகக்கண் பார்வை என்பது எல்லாம் இந்தவகை சேர்ந்ததுதான்.

    பார்க்கும் கண்ணே காட்சியை காணுவதாக இவர்களுக்கு நினைப்பு.
    மூளையின் பிரமாண்ட பணியை
    இவர்கள் புரிந்துக் கொள்ளாத, அல்லது அது இயலாத நிலையில்தான்...
    இப்படியான காட்சிகளில் மலைத்துவிடுகிறார்கள்.

    வாலி எழுதினப் பாட்டு ஒன்று உண்டு...
    கண்ணை நம்பாதே அது உன்னை ஏமாற்றும் என்பதாக! உண்மையும் அதுதான்.
    இதனை வாலி எழுதியதான் பெரிய ஆச்சரியம்!

    -தாஜ்

    ReplyDelete
  2. மஜீது பாய்,

    நீங்களாவது மாட்டைப் பேயாகப் பார்த்தீங்க. நான் அசல் பேயையே பார்த்து அதைப் பிடிக்கத் தொரத்திக்கொண்டுபோய், என்னைக் கண்டு அது மறைஞ்சிடுச்சு. இது சத்தியம்..! இது சத்தியம்....!! இது சத்தியம்....!!!

    இதுலெ யார் பேயிண்டு இன்னை வரையிலெ எனக்கு கொழப்பமா இருக்கு.

    பி.கு: தயவு செய்து ஆபிதீன் படிக்கவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நிஜமா சொல்றீங்க...?
      சத்தியமெல்லாம் செஞ்சிருக்கிங்களே...
      பின்னே அது பொய்யாவா இருக்கும்!
      பி.கு: தயவு செய்து இதனையும் ஆபிதீன் படிக்கவேண்டாம்.

      Delete
  3. கண்ணை மூடிக்கொண்டுதான் கமெண்ட் பார்த்தேன். அப்படியும் பயம் போகவில்லை. தாஜ், நம்ம மஞ்சக்கொல்லை நானா சொன்னது உண்மைதான். எப்படிப்பட்ட பேயும் அவரைப்பார்த்தால் ஒடித்தான் போகும். எதைக் காட்டினால் ’பொம்பள பேய்’ ஓடும் என்று நானாவுக்கு நல்லாவே தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. நிஜமாலுமா...
      நாநாவின் விசேசம்..
      அத்தனைக்கு மகத்துவமானதா...?
      படைத்தவன்....
      சிலருக்கு அதனை அளவற்று தந்துவிடுகிறான்!
      எல்லாவற்றிக்கும்
      ஒரு கொடுப்பிணை வேண்டும் என்பதும்
      சரிதான் போலிருக்கிறது!
      -தாஜ்

      Delete
  4. இளவயதில் கையில் டார்ச் கிடைத்து அதை அனுபவித்த அனுபவ விவரணையை ரசித்துப் படித்தேன். இந்த நகைச்சுவை உணர்வு மட்டும் நமக்கு இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. எங்க ஏரியால உள்ள வந்ததுக்கு,
    மிக்க நன்றி ஷாஜஹான். சந்தோஷம்.

    ஜாஃபர் நானா, அந்தப்பேயக் கண்டுபுடிச்சா அவசியம் காட்டணும்
    (ஆபிதீன் நானாக்குத் தெரியாமல்)

    தாஜண்ணனுக்கு,

    நான் எழுதியது புனைவல்ல. அக்மார்க் நிஜம்.
    அதற்கு உங்கள் விளக்கம் 100% சரி.
    உண்மை யாரையும் வருத்தினாலோ புண்படுத்தினாலோ
    அது உண்மையின் கூறு
    நமது தவறல்ல

    விரைவில் வரப்போகும் பேய் #2க்கும் இதுமாதிரி
    உளவியல் விளக்கம் தரணும் நீங்க..
    ஏன்னா,
    நானே "பாத்து" அசந்த பேய் அது!

    ReplyDelete