வயசுக்கேத்த போடா போடுறாரு நம்ம நானா? அழிச்சாட்டியம் தாங்கலே... அருட்கொடையும் எழுதுறார், அநியாயமா குடைவதையும் எழுதுறார். எழுதட்டும், எழுதட்டும். எப்படியாவது இலக்கியம் ஒழிந்தால் சரி.
இந்தக் கதைட்டுரையில் ஒரு சம்பவம் வருகிறது. சஃபர் புறப்படும் நானாவைப் பார்த்து அவர் மனைவி , 'மச்சான் , தெரிஞ்சோ தெரியாமலோ தப்புத் தவறு பண்ணியிருந்தா மன்னிச்சுக்குங்க' என்று சொல்வதாக. இதேபோல் அஸ்மாவும் சொன்னாள் என்னிடம் ஒருமுறை . 'அப்படிலாம் சொல்லாதே புள்ளே' என்று தேற்றியதற்கு 'வூட்டுல சொல்லச் சொன்னாஹா மச்சான்' என்றாள் அப்பாவியாக! - ஆபிதீன்
***
கிளுகிளு கீலரும் அசரத்தும்
ஹமீது ஜாஃபர்
அறுபதுகளில் பிரிட்டிஷ் அரசியலை ஒரு கலக்கு கலக்கிய அழகிய நங்கை, அதாவது மோனிகா லவன்ஸ்கியோட லாத்தா(அக்கா), மர்லின்மன்றோவுடைய தங்கச்சி. முழு பெயர் கிருஸ்டைன் கீலர். அவர்களை இங்கே சொடுக்கி பார்த்துக்கொள்ளவும். அப்ப அகில உலக பத்திரிக்கை அனைத்திலும் தலைப்பு செய்தியில் வலம் வந்த ரம்பை. ஏற்கனவே கிழிஞ்சது நல்லா கிழிஞ்சு ரொம்ப நாள் தெரியாமெ இருந்துச்சு. அப்புறம் சொச்சமிருந்ததையும் பத்திரிக்கைக்காரங்க கிழிகிழின்னு கிழிச்சு எடுத்துட்டாங்க. அதை நான் கொஞ்சம் தச்சுப்பார்த்தேன் முடியலெ!
இவ்வளவு காலமில்லாமல் இப்ப ஏன் எழுதுறேண்டு கேட்டா, ஊருக்கு போயிட்டு வந்ததுலேந்து மனசு சரியில்லை. பரக்கத்தா அஞ்சு மாசம் தங்கியிருந்தேன், எல்லாம் எதிர்பாராமல் வந்த சுனாமி, முழுசா இல்லாவிட்டாலும் 90% ஜெயிச்சுட்டுத்தான் வந்திருக்கேன். ஏகப்பட்ட பணசெலவு; விட்டதையெல்லாம் சேர்க்க வந்திருக்கேன்.
அஞ்சு மாசமும், அஞ்சு நாள் மாதிரி ஓடிடுச்சு, வர்றதுக்கு மனசே இல்லை. என்ன செய்வது? 'பூவா'வுக்கு வழி செய்யணுமே! இதுக்கிடையிலே ஆபிதீன் வேறே, "நானா எப்ப வருவீங்க? சிரிக்க ஆளில்லை!" என்பார். அவர் சொன்னது வாஸ்தவம்தான். அவருக்கு இங்கே ஆளில்லை எனக்கு ஊரில் ஆளில்லை; எங்க ஃப்ரேஸாலஜியிலெ கருத்து பரிமாற்றத்துக்கு ஆபிதீன் மாதிரி ஆள் இல்லைதான். இப்பவும் இருக்காங்க ஊர்லெ. ஆனா, நொண்டியும் மொடமுமா வூட்டோட அடஞ்சி கிடக்கறவன்கிட்டே சிரிச்சுப் பேசமுடியாது. எனக்கும் சிரிக்க மனசு வரலை.
ஒண்ணா தேஞ்ச கூட்டாளி ஒருத்தன் பத்து வருசமா கால் கட்டைவெரல் புண்ணுக்கு, கட்டுப் போட்டுக்கிட்டிருந்தான். இப்பவும் அந்த வெரல்லெ கட்டுதான். நல்லா இருந்த அடுத்த கால் கட்டை வெரல் அழுகி வெட்ட வேண்டியதாகிவிட்டது. இப்ப வெரலை எடுத்துட்டு ஊட்டு வாசல்லெ உட்கார்ந்துக்கிட்டிருக்கான். எல்லாம் சேலு(செயல்)?. இனிப்பு நீரின் மகிமை, வாயைக் கட்டுனாத்தானே! விருந்துக்குப் போனா ஃபிர்ணி கஞ்சியைக்கூட விடுவதில்லை. நடப்பு மாறாமெ அது மாறுமா? அது மட்டுமா? தொணைக்கு யாராச்சும் வேணும்.
ஒரு தடவை கிராமத்துக்கு அவனோட போயிருந்தப்ப 'பெரியய்யா வந்துட்டாரு, நாட்டக்காரு ஐயா வந்துட்டாரு'ன்னு ஏக தடபுடலான வரவேற்பு. ஐயாவை கண்டதும் கயித்துக்கட்டுலை எடுத்துப் போட்டு உட்காரவச்சு, குடிக்க எளனி வெட்டிக்கிட்டு வந்துட்டாங்க. சிறுசு பெருசுன்னு எல்லா பொண்ணுங்களும் மட்டு மருவாதையா சுத்தி நின்னுக்கிட்டு ஐயாவோட அருள் வாக்குக்காக காத்திக்கிட்டுருந்ததை இன்னும் மறக்கமுடியலெ.
சும்மா இருக்கமுடியாம நான், "ஏண்டா, அந்த காலத்துலெ வாப்பா விவசாயம் பார்த்தப்போ நீ பண்ணையாள்கிட்டெ டூயட் பாடிக்கிட்டிருந்ததை இன்னுமா விடலெ?" ன்னு கேட்டப்பொ "டேய் சத்தம்போட்டு மானத்தை வாங்காம வேடிக்கைப் பாரு" ண்டு சொன்னான். கொஞ்ச நாள் முந்திவரை ஒரு ராசம்மாதான் செகரட்டரியா இருந்தாகன்னு கேள்விப்பட்டேன், ஆனால் இப்பொ அவ இல்லை. கேட்டதற்கு அதெல்லாம் போயிடுச்சுடான்னு வருத்தமா சொல்றான்.
இதெல்லாம் பரம்பரை சொத்து. இவரு ஒரு சாம்பிள். இதுக்கு முந்தி கிராமங்கள்லெ பல மிட்டா மிராசு தொப்பிவாப்பாக்கள் இப்படிதான் இருந்திருக்காக. ஜாலா ஜோலிக்கென்றே ஒரு குட்டி பங்களா கிராமத்துலெ இருக்கும். கலர் மாறி யாராவது இருந்தா அது நம்மாளோட கைங்காரியமாத்தான் இருக்கும்னு யூகிச்சிக்க வேண்டியதுதான். சிலருக்கு முகச்சாயல் காட்டிக்கொடுக்கும், ஆனா அதைப்பத்தி அவங்களுக்கு கவலை கிடையாது இன்னும் சொல்லப்போனால் அது அவகளுக்கு கிரடிட்.
இவன் மட்டும்தான் கூட்டாளி இல்லை, இன்னும் பலபேர் இருக்காங்க. அவங்கள்லாம் பழசை மூட்டைக்கட்டி வச்சுட்டு வக்து தவறாம பள்ளிவாசல்னு மறுமைக்கு சேர்த்துக்கிட்டிருக்கிறதா சொல்றாங்க. இதுலெ எனக்கு நம்பிக்கை இல்லை. மறுமை என்னன்னு தெரியாது. தெரியாத ஒன்றுக்கு எதுக்காக சேர்க்கணும்? எங்க ஹஜ்ரத் சொல்லிருக்காக , இரண்டு கோல்டன் டைம். 'what you are in today in the result of what you were in yesterday(ie. past)' இது முதல் கோல்டன் டைம். அடுத்தது 'what you will be in tomarrow in the result of what you are in today". நேற்றைய எண்ணம், கற்பனை, செயல் இவைகளின் மலர்ச்சி இன்று நீ இப்படி இருப்பதற்கு காரணமாயிருக்கும்போது நாளைய வாழ்வுக்கு இன்று ஒழுங்காக இருந்தாலே போதுமானதாயிற்றே. இது மறுமைக்கும் தொடருமல்லவா? அப்படி இருக்கும்போது மறுமைக்கென்று தனியா சேர்க்கிறேன் என்கிறது ஏமாற்று வேலை என்பது என் சித்தாந்தம். இருந்தாலும் யாருக்கும் சொல்வதில்லை. அதது அவங்கவங்க சொந்த விருப்பு வெறுப்பு.
ஒருவகையா ஊர்லேந்து புறப்படுமுன், "மச்சான் தெரிஞ்சோ தெரியாமலோ தப்புத் தவறு பண்ணியிருந்தா மன்னிச்சுக்கங்க" அப்டீன்னாள் என் தர்ம பத்தினி ஜல்மா. எனக்கு எகிறுனிச்சு. "அதென்ன தெரிஞ்சோ தெரியாமலோ? புருஷன் பொண்டாட்டின்னா சகலமும் இருக்கத்தான் செய்யும். சில நேரங்களில் கோபம் இருக்கும் சில சமயம் சந்தோஷம் இருக்கும். எப்போதுமே ஒரே மாதிரி இருந்தா அது வாழ்க்கையே அல்ல அதுக்குப் பேரு மல்லாகொட்டை (உப்பு சப்பு இல்லாதது). சில நேரத்துலெ உனக்கு கோபம் இருக்கும் , சில நேரத்துலெ எனக்கு இருக்கும் சில நேரங்கள்லே நான் உனக்கு தொல்லை கொடுத்திருப்பேன், பல நேரங்களில் நீ எனக்கு தொல்லைக் கொடுத்துக்கிட்டிருப்பாய் இப்படி எல்லாம் கலந்திருந்தாதான் வாழ்க்கை" அப்டீன்னு ஒரு பெரிய அட்வைஸை கொடுத்துக்கிட்டுருக்கும்போது , "நான் என்ன உங்களுக்கு தொல்லைக் கொடுத்துக்கிட்டிருக்கேன், இந்த எடக்குத்துதானே வாணாங்கிறது" என்று ஒரு மாதிரியாப் பார்த்தாள். "சும்மா ஒரு இதுக்கு சொன்னேன்" என்று சமாதானப்படுத்திவிட்டு விட்டு புறப்பட்டேன்.
ப்ளேன் இறங்குறப்பொ பார்க்கும்போது ஒரு வித வெறுப்பு; பச்சைப்பசேல்னு இருந்த பூமியை விட்டுட்டு பசுமையே இல்லாத ஒட்டக பூமிக்கு வர்றோமேன்னு. ஒட்டகத்தோட ஒட்டகமா முப்பது வருசத்துக்கு மேலா இருந்தாச்சு, இனி எப்போ மனுசனா இருக்கப்போறோமோ தெரியலெ? ம்... வந்தாச்சு? மூட்டைப்பூச்சிகளை பொறிச்சு திண்டுக்கிட்டு காலத்தை ஓட்டவேண்டியதுதான்.
என்ன இருந்தாலும் அந்த காலத்துப் பசுமை திரும்ப வருமா? பள்ளிக்கூடம் லீவு விட்டாலும் சரி, கோடை விடுமுறையானாலும் சரி, அது தனி களைகட்டும். ராத்திரியிலெ வேட்டைக்குப்போவது. அதாவது ரோட்டோரம் இருக்குக்கிற தென்னை மரத்துலெ இளனி பறிப்பது, குளத்துலெ மீன் பிடிப்பது. குத்தகை எடுத்த குளத்துலெ ராத்திரியிலே மீன் பிடிப்பதை திருட்டுண்டு அசிங்கப்படுத்தக்கூடாது. அதனால்தான் பிடிப்பது என்று நாகரீகமா சொல்கிறேன். மழை காலமா இருந்தா ஏர்கன், கேட்டாபில்ட், சுங்குத்தான் என சகிதமா கொக்கு மடையான், குயில் வேட்டைக்கு செல்வது. இல்லேன்னா வலை வச்சு மீன் பிடிக்கிறது. மழையிலெ பொடி மீன் நிறைய விழும். தோசைக்கு ரொம்ப சோக்கா இருக்கும்.
"ஆத்து மீனு சேத்து நாத்தம் சோத்துக்காகாது பெண்களே சோத்துக்காகாது" என நாகூர்காரர் ஒருத்தர் பாடினார். தின்று பார்த்திருந்தாலல்ல தெரியும் ஆகுமா ஆகாதென்று. அதன் ருசியே தனியாச்சே!
அப்ப எங்க ஊர்லெ இருந்த கூட்டாளி அசரத் சில நல்ல ஐடியாவுல்லாம் சொல்லிக்கொடுப்பாரு. பேரு அப்துல் ஷுக்கூர், நாங்க ஷுக்கூர் பாய்ன்னுதான் கூப்பிடுவோம். எல்லார்கிட்டையும் ஃப்ரண்ட்லியா பழகினதாலெ கூட்டாளி அசரத்துன்னு சொல்றேன். தொழுவிச்சு கொடுப்பதற்காக ஊர் அவரை அப்பாயிண்ட்மெண்ட் செஞ்சிருந்தாலும் அவருக்கு டூட்டி இரண்டாவது பதினஞ்சு நாள்தான். முதல் பதினஞ்சு நாள் ஆஸ்தான இமாம் தொழுவிப்பார். ஆனால் தினமும் காலையிலெ சுமார் இரண்டு மணி நேரம் பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக்கொடுப்பார். புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிட்டா முழு நாளும் ரெஸ்ட். பள்ளிவாசலை ஒட்டி மதரஸா. ஜாகை அங்கேதான். எங்களுக்குப் பொழுது போகலைன்னா அவர்கிட்டேபோய் அரட்டை அடிப்பது. காலை நாஸ்டாவை முடிச்சிட்டு மதரஸா பெரிய தூண்லெ சாஞ்சிக்கிட்டு சொக்கலால் ராம் சேட் பீடியை திண்ணுக்கிட்டு இருப்பார். நாம போனா ரெண்டு பீடியெ கொடுத்து நல்லா இழுத்து விடுங்க ஃப்ரஷாயிடுவீங்க என்பார்.
அசரத்துன்னு சொன்னா தறுதலைகளைத் திருத்துறவர்னு பேரு, ஆனால் இவர் எங்களோட சேர்ந்து கெட்டுக்கிட்டிருந்தார். பள்ளிவாசல் ஹவுல்லெ வளர்ந்திருந்த மீனை புடிக்க சொன்னதே அவர்தான். நாங்கதான் குஞ்சு மீனா வாங்கிக்கொண்டுவந்து விடுவோம். அதுக்கு தீணியெல்லாம்கூட போடுவோம், அதுக்காக புடிக்க உரிமை இருக்குன்னு ஃபத்துவா கொடுத்தா எப்படி? கொடுத்துட்டார். நாம அதை கேட்காம இருந்தா...? தப்பல்ல அது! அதனாலெ அன்னைக்கு ராத்திரியே கை வச்சிட்டோம். ஹவுல்லெ புடிக்கிற மீனாக இருந்தாலும் சரி, பள்ளிவாசல் குளத்துலெ புடிக்கிற பாங்கு சத்தம் கேட்ட மீனாக இருந்தாலும் சரி அசரத்துக்கு அன்னைக்கு விருந்து. ஏன்னா ஹலால் சொல்லனுமே! சாப்பிட்ட பிறகு ஒரு துஆ ஓதுவார், 'அல்லாஹும்ம இஃபத்தஹுனா அபுவாபல் பரக்கத்தி, வ அபுவாபர் ரஹ்மத்தி' ன்னு; அதாவது 'இறைவா! வளமையின் வாயிலையும் அருட்கொடையின் வாயிலையும் திறந்து வை' என்று அர்த்தம். ரஹ்மத்துக்குப் பக்கத்திலெ நிசாவையும் சேர்ந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்? கடைசிவரை எந்த சாவி போட்டும் ரஹ்மத்து(நிசா)வுடைய வாசல் திறக்கவே இல்லை.
மீன் புடிக்கமட்டுமல்ல சினிமாவுக்கு போகவும் அசரத்துதான். ராத்திரி செகண்டு ஷோ சினிமாப் பார்க்க சைக்கிள் எடுத்துக்கிட்டு போவோம். துணைக்கு மட்டுமல்ல பொழுதுபோக்கா நல்ல கதை சொல்வார். சுபஹானல்லா அல்ஹம்துலில்லா கதை (லின்க்) மாதிரி பல கதை அவர் கைவசம் இருந்துச்சு. அதனாலெ கூடு கொடியேத்தம்னு எல்லா ஃபங்ஷனுக்கும் அவரை வச்சுக்குவோம். இப்படி ஒரு ஒடுக்கத்து புதனன்று கடற்கரைக்குப் போனோம். ஆணும் பெண்ணும் நல்ல கூட்டம், ஒரே துப்பட்டி மயம். சாயந்திரம் அஞ்சு அஞ்சரை மணி இருக்கும். திடீரென்று பதறிப்போய் "அங்கே பாருங்க 'கீலர்' வாராக" என்றார் நம்ம அசரத்து பாய். (அப்போது கீலருடைய புகழ் எல்லா பத்திரிக்கையிலும் பரவி ஒய்ந்த சமயம்.)
"என்ன கதக்கிறீ..ங்க ப்பாய்" என்றார் பக்கத்திலிருந்த 'அய்புவான்.' (சின்ன வயசுலெ சிலோனுக்கு ஓடிப்போய் வாலிபத்தில் ஊருக்குத் திரும்பியவர். பெயர் அப்துல் வஹாப். அப்பொ திருச்சி ஆகாசவாணியில் சினிமாப் பாட்டெல்லாம் கிடையாது, எப்ப தொறந்தாலும் 'நிலைய வித்வான் வாசிப்பது ஆதி தாளம் _தி மேளம்' னு சொல்லி டொய்ங், டொய்ங்ன்னு ஓடிக்கிட்டிருக்கும். அதனாலெ கேட்பது சிலோன் ரேடியோதான் . இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பும், தேசிய ஒலிபரப்பும்தான் ஃபேமஸ். தேசிய ஒலிபரப்பு கொஞ்ச நேரம் ஓடும் அதன் பிறகு 'அய்புவான், இலங்கா விளது...'ன்டு சிங்களம் ஆரம்பிச்சுடும். அதனாலெ 'அய்புவான்'டு அவருக்கு இந்த அசரத்துதான் பேரு வச்சாரு. அந்த பேருதான் இப்பவும் நிலைச்சிருக்கு.)
"ஓய் கதைக்கவுமில்ல ஒதைக்கவுமில்லை. அங்கே கூலிங்கிளாஸ் கண்ணாடி போட்டுக்கிட்டு வர்றாக, யாருன்னு பாரும்."
"அது நம்ம காட்றாபாயோட அயிட்டமுள்ள.. ப்பாய்" (முக்கனியை காமிச்சிக்கிட்டுதான் வியாபரம் பண்ணுவாரு, அதனாலெ எல்லா நடவாள்களும் அதெ தரிசிச்சிக்கிட்டுதான் மளிகை சாமான் வாங்கணும். சும்மா சொல்லக்கூடாது XL சைஸிலெத்தான் இருந்துச்சு. அதனாலெ அவருக்கு நாங்க வச்ச பேரு, காட்டுறார் பாய். அது மருவி காட்றாபாய் ஆயிடுச்சு.)
"அகலெத்தான் சொன்னேன்" என்றதும் எல்லோரும் கொல்லென்னு சிரிச்சிட்டோம். சிரிச்சது கண்ணாடிக்கல்ல, நாப்பத்தஞ்சு அம்பது வயசுலே அந்தி சாயிர நேரம் கருப்புக்கண்ணாடியும் மாட்டிக்கிட்டு மேக்கப் சகிதமா அலட்டிக்கிட்டு வந்ததைப் பார்த்து பொருத்தமான பெயரை சொன்னதும் சிரிக்காம என்ன செய்யமுடியும்? அன்னையிலேந்து அஹலுக்கு எங்க கோடுவேர்டு 'கீலர்'. காட்றபாயும் லேசுப்பட்ட ஆளல்ல அந்த வயசுலேயும்(சுமார் 60) தியேட்டருக்கு குறுக்கு வழியா போறதுக்கு மதிலேறி குதிப்பாரு. கீலரும் ஒரு படம் விடாம பார்த்துடுவாக எல்லாம் செகண்டு ஷோதான். என்ன இருந்தாலும் எங்க காட்றாபாயோட குரல் நாகூர் ஹனிபாவுக்கு அடுத்தபடியா இருக்கும். அவர் மவுலிது ஓதினால் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அவ்வளவு இனிமையாவும் கம்பீரமாவும் இருக்கும். இருந்து என்ன செய்ய? தடவுறதுலெ மன்னனாவுல இருந்தாரு. அதுமட்டுமல்ல பள்ளிவாசல் மௌலிது சோத்தை கனிசமா ஒதுக்குவார். இதெ பொருக்கமுடியாம ஒருத்தன் அவர் செருப்பை பெரிய ஆணியை வச்சு தரையோடு தரையா இருக்கிட்டான். மௌலிது சோத்தை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போக செருப்பை மாட்டினால் எப்படி வரும்? தடுப்பு சுவர் இல்லைன்னா மனுசன் குப்புற விழுந்திருப்பார். இருட்டு வேறு சுத்திமுத்தியும் பார்த்தா யாரும் கண்ணுக்குத் தெரியலை, இரண்டுமூனு பேர்மேலே சந்தேகம் ஆனால் யாருன்னு குறிப்பா ஊகிக்கமுடியலை? மறு நாள் சொல்லி சொல்லி ஆத்திரப்பட்டார்.
இப்படியெல்லாம் அல்-சாட்டியம் செஞ்ச காலத்தை நினைக்கும்போது ஒர் ஏக்கம் இருக்கத்தான் செய்யுது. ஆனால் அதனுடைய விளைவுதான் இங்கே ஒட்டகம் மேச்சிக்கிட்டுருக்கோம் போலிருக்கு, எத்தனை பேருடைய எரிச்சலை வாங்கிக் கட்டியிருக்கேனோ தெரியவில்லை. அல்லா என்ன பேயனா? எல்லா பனிஷ்மெண்டையும் இங்கேயே கொடுத்துட்டு டைரக்ட் ஃப்ளைட்டுலெ சொர்க்கத்துக்கு அழைச்சிக்கிட்டு போயிடுவாண்டு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க..........? எப்போன்னு கேட்காதீங்க, ஃப்ளைட் இன்னும் ரெடியாகலையாம்.
***
நன்றி : ஹமீது ஜாஃபர்
http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com
No comments:
Post a Comment