Saturday, June 30, 2012

ஓஷோவின் அரட்டைக் கச்சேரி

ஸென்'னுடன் நடந்து... 'ஸென்'னுடன் அமர்ந்து... நூலிலிருந்து.. (தமிழாக்கம் : சிங்கராயர்)

***

ஓஷோ, எத்தனையோ அழகான பேருரைகளை வழங்க எப்படி உங்களால் இவ்வளவு எளிதாக முடிகிறது?

திவாகர், என்ன பேருரைகள்? இந்த வெற்று அரட்டைக் கச்சேரியை நீ பேருரை என்கிறாயா? பேருரை என்பது சிரத்தைக்குரிய விஷயம்! பேருரை என்பது மதச் சார்பானது. தூய்மையானது. புனிதமானது. அது கோயில்களிலும் சர்சுகளிலுமே வழங்கப்படுவது. இந்த இடமோ சர்ச் அல்ல. இது குடிகாரர் மடம்; கேளிக்கை விடுதி! எது பேருரை? நான் எப்போதும் எந்த பேருரையும் ஆற்றியதில்லை. ஆம் , நான் புறணி (gossip) அளக்கிறேன். அது உண்மையே. ஆனால் அதில் எந்த நற்செய்தியும் (gospel) இல்லை; எந்த நாசூக்கும் இல்லை; எந்த ஒளிவுமறைவும் இல்லை.அது மிகவும் எளியது - என் முறை மிகவும் எளியது.

ஒரு பேரரசன் ஒரு சிற்றூரின் வழியாக போய்க் கொண்டிருந்தான். அவன் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற போர்வீரர்களில் ஒருவன். வில்வித்தை அபிமானி. வில்வித்தையில் மிகச் சிறந்தவர்களை அவன்  போற்றினான். அந்தச் சிற்றூரின் வழியாகப் போகும்போது அவன் பல மரங்களிலும் விளக்குக் கம்பங்களிலும் தோட்ட வேலிகளிலும் வரைந்திருந்த வட்டங்களின் நடுமையத்தில் குறிதவறாமல் அம்புகள் ஏறி இருந்ததைக் கண்டான். இம்மியும் பிசகாமல் வட்டங்களின் மையப்புள்ளியில் அம்புகள் குத்திட்டு நின்றன. ஏராளமான அம்புகள் எங்கு பார்த்தாலும்.. அவன் வியந்து போனான்.

அவன் சொன்னான், 'யார் இந்த மனிதன்? இவ்வளவு செம்மையான வில்லாளியை நான் இதுவரை கண்டதில்லை! அவனது இலக்கு துல்லியமாக இருக்கிறது. ஒரு இடத்திலும் அவன் குறி தப்பவில்லை. ஒரு அங்குலத்தில் ஒரு பிரிவு அளவுகூட பிசகவில்லை. எல்லா இடத்திலும் அம்பு சரியாக மையத்தில் பதிந்துள்ளது. ஒவ்வொரு இலக்கும் அதற்கு சான்றாக உள்ளது.' அவன் தன் தேரை நிறுத்தினான். ஊர் மக்களை அழைத்தான். 'யார் இந்த மனிதன்?' என கேட்டான்.

அதற்கு அவர்கள் எல்லாரும் நகைத்தார்கள். பின் சொன்னார்கள், 'அவனைப்பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள். அவன் ஒரு பித்தன்!'

'பித்தன் என்று எப்படிச் சொல்கிறீர்கள் நீங்கள்? அவன் பித்தனாயிருக்கலாம். ஆனால் நான் பார்த்தவர்களில் அவனே மாபெரும் வில்லாளியாக இருக்கிறான்.'

அவர்கள் சொன்னார்கள், 'அதற்கும் வில் வித்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனுக்கு வில்வித்தை பற்றி ஒன்றுமே தெரியாது.'

அரசன் சொன்னான்,'அப்படியானால் இது ஒரு அற்புதம்தான்! எப்படி இது அவனால் சாத்தியமாகிறது?'

அவர்கள் சொன்னார்கள், 'அது எளிது. முதலில் மரத்தின் மீது அம்பு எய்கிறான். பின் போய் அதைச் சுற்றி ஒரு வரைந்து விடுகிறான்!'

சரியாக அதுதான் என் முறையும்! அது எளிது! எனவே எதைக் குறித்தும் நீங்கள் கேட்க முடியும். ஆனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதையே சொல்கிறேன். முதலில் நான் அம்பு விடுகிறேன். பின் அதைச்சுற்றி ஒரு வட்டம் வரைந்து விடுகிறேன் - இறுதித் திருத்தம் சேர்ப்பதுபோல!

**

நன்றி : கவிதா பப்ளிகேஷன்

No comments:

Post a Comment