Tuesday, April 3, 2012

இப்னு பதூதா (நிறைவு) - ஹமீது ஜாஃபர்


'இப்னு பதுதா'வை நான் தொடங்கியபோது ஒரே பதிவில் முடித்துவிடலாம் என்றுதான் எண்ணினேன், ஆனால் எழுத எழுத நீண்டுகொண்டே போனது.  ஒரு வழியாக நான்கு பாகங்களில் முடிவு பெற்றதென்றாலும் நிறைவானதல்ல. இதை எழுதும்போது என்னுள் ஓர் நப்பு+ஆசை தோன்றியது, நாம் ஏன்  அவரது காலகட்டத்தில் பிறக்கவில்லை என்று. ஒரு வேலை பிறந்திருந்தால் பக்கத்திற்கு இரண்டு (மனைவிகள்) போததற்கு எண்ணற்ற அடிமைப் பெண்கள் என்று ராஜபோகத்தில் வழ்ந்திருக்கலாமே என்று. அதே நேரம் வேறொரு ஆதங்கம், கல்யாணமே ஆகாமல், அந்த மகிழ்வான இனிமையை,
சுவைக்காமல் புறப்பட்டு விட்டாரே என்று. ஆனால் அது நீடிக்கவில்லை தூனிஸில் தொடங்கி சென்ற இடங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திருமணம் செய்து கொண்டார், அல்ஹம்து லில்லாஹ். இப்போது அவரது வாரிசுகள் எங்கெங்கே இருக்கின்றனரோ யாருக்குத் தெரியும்? சிலர் பெருமைப் பட்டுக்கொள்வார்கள், நாங்கள் நவாப் பரம்பரை; நாங்கள் மொகலாயப் பரம்பரை; நாங்கள் ஷேக் வம்சம்; நாங்கள் செய்யது வம்சம் என்று. (இப்னு) பதூதா வம்சம் என்று சொல்பவர்கள் யார் இருக்கிறார்கள்? அப்படி இருப்பவர்கள் நிச்சயமாகப் பெருமைக்குரியவர்கள். - ஹமீது ஜாஃபர்.

***இப்னு பதூதா முதல் பகுதி : http://abedheen.wordpress.com/2011/12/22/ibn-battuta/
இரண்டாம் பகுதி : http://abedheen.blogspot.com/2012/01/2.html
மூன்றாம் பகுதி : http://abedheen.blogspot.com/2012/02/3.html
***

இப்னு பதூதா பாகம் 4  (நிறைவு) :   (அருட்கொடையாளர் - 10/4)

சபத்தாவில் மூன்று மாதங்கள் நோயால் அவதிப்பட்டு இறைவன் அருளால் சுகமாகிய பின் சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தபோது எல்லைப் பகுதியில் சண்டை ஏற்பட்டதால் ஜிஹாத் உணர்வோடு கலந்துக்கொள்ள புறப்பட்டேன். சபத்தாவிலிருந்து கடல் மார்க்கமாக அந்துலூசியாவை  (ஸ்பெயின்) அடைந்தேன். அங்கு அதிக அளவில் குடியேறியவர்கள் இருந்ததால் எதிரிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இது, பத்து மாதங்கள் வரை ஜபலை (Gibraltar) தன் பிடியில் வைத்திருந்த அத்ஃபுனுஸ் (Alphonso XI) இறந்தபின் நிகழ்ந்தது. அந்துலுசியாவின் முதல் பகுதி என்று சொல்லப்படும் 'வெற்றிக்கொள்ளப்பட்ட மலையை (ஜிப்ரால்டர்) அடைந்தபின் எங்கள் மன்னர் மறைந்த அபுல் ஹஸன் அவர்கள் கட்டிய பாதுகாப்புகள் அமைந்த அழகிய கோட்டையைப் பார்த்தேன். அந்துலூசியாவில் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டப்பின் தாரிக் பின் ஜாயித் முதலில் 711ல் அடைந்தபின் அம்மலை 'ஜபல் தாரிக்' என்றே அழைக்கப்பட்டு வருகிறது. பின்பு அது கிருஸ்துவர்கள் கைவசமானது.

கிருஸ்துவர்களிடமிருந்து 'ஜபல் தாரிக்'ஐ (ஜிப்ரால்டர்) மீட்டெடுத்த எங்கள் மாமன்னர் மறைந்த அபுல் ஹஸன் பெரிய கோட்டையைக் கட்டி தன்
பொறுப்பில் இருபதாண்டுகளுக்கு மேலாக வைத்திருந்தார். பின் தன் மகன் மதிப்புமிகுந்த இளவரசர் அபு மாலிக்கை அனுப்பி சக்திவாய்ந்த ராணுவத்தை நிறுவினார். அதல்லாமல் எங்கள் மரியாதைக்குரிய ஷெய்கு அபு இனான் அவர்கள் அதை அழகு படுத்தி அங்கு அனைத்து வசதிகளையும் செய்தார். அங்கிருந்து ரோண்டா நகருக்குச் சென்றேன். அதுவும் மிக அழகிய நகரம், அங்கு எனது உறவினர் நீதிபதியாக இருந்தார். அங்கு நான் ஐந்து நாட்கள் தங்கிவிட்டு மார்பலா (Marbella) நகருக்குச் சென்றேன். சிறிய விவசாய நகரம் என்றாலும் செல்லும் பாதை மிகவும் கரடுமுரடானது, அங்கிருந்து மலாகா (Malaqa/malaga) செல்ல எண்ணி  பயணப்பட்டேன், வழியில் குதிரை ஒன்றும், மனிதன் ஒருவனும் இறந்து கிடந்ததைப் பார்த்தபோது அங்கு எதோ சண்டை நடந்த அறிகுறி தென்பட்டதால் தாமதப்படுத்தினேன். நான் நினைத்ததுபோல் அங்கே சண்டை நடந்திருக்கிறது, ஒரு கிருஸ்துவரும் ஒரு மீனவரும் கொல்லப்பட்டனர், பத்துபேர் சிறை பிடிக்கப்பட்டனர், ஒருவர் தப்பித்துவிட்டார். ஓரு இரவை அங்கேயே கழித்துவிட்டு மறுநாள் பயணத்தைத் தொடர்ந்தேன்.

கர்நாட்டா (Granada)

மலாகா, இது அந்துலுசியாவின் மிக அழகிய ஒரு நகரங்களில் ஒன்று. இங்கு கிடைக்கும் பழங்களும் உணவுப் பொருட்களும் மிக சுவையுள்ளதாக இருக்கிறது. திராட்சை மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவதைப் பார்த்தேன், மாதுளையும், பதாம் பருப்பும், அத்திப் பழமும் நிறையவே கிடைக்கின்றன. இதல்லாமல் மினுமினுக்கும் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன, அவைகள் பல பாகங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு பெரிய பள்ளிவாசலும் இருக்கிறது. அங்கிருந்து இருபத்தி நான்கு மைல் தூரத்திலுள்ள பல்லாஷ் (Velez) நகரை அடைந்தேன். அங்கேயும் மலாகாவில் கிடைப்பதுபோல் பழவகைகள் கிடைக்கின்றன, ஓர் அழகிய பள்ளிவாசலும் இருந்தது. பின் அங்கிருந்து ஒரு மைல் தூரத்திலுள்ள அல்-ஹம்மா (Alhama) நகரத்தை அடைந்தேன். அங்கு ஓர் வெண்ணீர் ஊற்று நதியோரம் இருப்பதால் அந்நகருக்கு அப்பெயர் வந்தது.  பின் அங்கிருந்து அந்துலுசியாவின் முக்கிய நகரான கர்நாட்டாவை (Granada) அடைந்தேன். சுற்றுச்சூழல் தூய்மையாக அமைந்துள்ள ஓர் அருமையான நகர், அந்நகர் நாற்பது மைல் வரை விரிவாக்கப்பட்டிருந்தது. ஷன்னில் (Xenil) நதியின் செழிப்பால் தோட்டங்களும், பூங்காக்களும், அழகிய கட்டிடங்களும், flowery meads, wine yards இருந்தன. நான் அங்கே சென்றிருந்தபோது கர்நாட்டாவின் அரசர் சுல்தான் ஹஜ்ஜாஜ் யுசுஃப் சுகவீனப்பட்டிருந்ததால் அவரை சந்திக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அவரது தாயார் தங்க தீனார்கள் எனக்களித்தார். அங்கு பல சூஃபியாக்களை சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. அவர்களில் ஒருவர் சமர்கந்திலிருந்தும், ஒருவர் தப்ரிஜிலிருந்தும், ஒருவர் குனியா(Konia)விலிருந்தும், ஒருவர் குரஸானிலிருந்தும், இருவர் இந்தியாவிலிருந்தும் வந்திருந்தவர்கள். அவர்கள் என்னை சிறப்பு படுத்தினார்கள். பின் அங்கிருந்து அல் ஹம்மா, பல்லாஷ், மலக்கா என வந்த வழியாக சப்தா (Ceuta) திரும்பினேன்.

மேற்கு ஆப்ரிக்கா / சஹாராவில் பயணம்

சபத்தாவிலிருந்து அசிலாவை அடைந்து அங்கு சிலமாதங்கள் தங்கிருந்துவிட்டு மிக அழகிய நகரான மர்றாகுஷை அடைந்தேன். மிக அழகிய மினாராவையுடைய பள்ளிவாசலும் அதனைச் சார்ந்த புத்தகசாலையும் ஒருங்கே இருந்தன. எங்கள் மன்னர் அபுல் ஹசன் அவர்களால் கட்டப்பட்ட கல்லூரியும் இருந்தது. பின்பு அங்கிருந்து நீக்ரோதேசமான சிஜில்மாஸாவை அடைந்தேன். அங்கு விளையும் பேரீச்சை மிகவும் சுவையுள்ளது. நான் சீனாவில் சந்தித்த கையுமுதீன் அல் புஷ்ரியுடைய சகோதரர் அபு முஹம்மது அல் புஷ்ரியுடன் தங்கியிருந்தேன். அங்கு சில ஒட்டகங்களும் நான்கு மாதத்திற்கு தேவையான உணவுகளும் வாங்கிக்கொண்டு வணிகக்கூட்டத்தாருடன் 753 முஹர்ரம் முதல் தேதி (18-2-1352) புறப்பட்டேன். இருபத்தைந்து நாட்கள் பயணத்துக்குப் பின் டகாஜா என்ற கிராமத்தை அடைந்தோம். அது எதுவுமே கிடைக்காத கிராமம்.

அங்கு வீடுகளும் பள்ளிவாசலும் உப்புக்கற்களால் சுவர்களும் ஒட்டகைத் தோலால் கூரையும் வேயப்பட்டிருந்தன, மருந்துக்குக்கூட ஒரு மரம் இல்லை, எங்கு பார்த்தாலும் மணல்வெளியும் உப்புக் குழிகளுமே இருந்தன.

உப்புத்தொழில் புரியும் மஸூஃபா பழங்குடியினரின் அடிமைகளைத் தவிர வேறு யாரும் வசிக்கவில்லை. உணவு வெளியிலிருந்தே வருகின்றன. நீக்ரோக்கள் இங்கிருந்து உப்பை வாங்கிச்செல்கின்றனர். அங்கிருந்து புறப்பட்ட எங்கள் காரவான் பத்து நாட்களுக்குமேல் கடும் தாகத்தில் பயணம் செய்யவேண்டியிருந்தது. வழியில் எங்கும் தண்ணீர் இல்லை, அப்படி கிடைத்தாலும் அது உப்புகரிப்பாகவும், அசுத்தமாகவும், ஈக்கள் மொய்த்துக்கொண்டும் இருந்தது. இடையிடையே விஷப் பூச்சிகளின் கூட்டம்; சோதனையான பயணத்தினிடையே ஓரிடத்தில் தேங்கிக்கிடந்த தூய்மையான மழை நீரில் எங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு துணிகளை சுத்தம் செய்துகொண்டு தாசரஹ்லா என்ற இடத்தில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு இவாலாதான் (Watala) என்ற நகரை அடைந்தோம். இது சிஜில்மாஸிலிருந்து இரண்டு மாதப் பயண தூரம்.

இவாலாதான் (Watala)

நீக்ரோக்களின் கடைசி வடக்குப் பகுதி. எங்களுடையப் பொருட்களை திறந்தவெளி அரங்கில் வைத்தோம், அவைகளை கருப்பர்கள் பாதுகாத்தனர். அங்கு வரும் வணிகர்கள் அந்நகர கவர்னர் முன் ஆஜராகவேண்டும். அவர் மொழிபெயர்ப்பாளர் துணையால் வணிகர்ர்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்துகொள்வார். எங்களிடம் அவர் கௌரவக்குறைவாக நடந்துக்கொண்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை, தவிர வெள்ளை நிறத்தவர்களை வெறுத்தனர்.  முடிவில் எங்களுக்கு விருந்து வைத்தனர். திணை கலந்த தேனும் பாலும் ஒரு பெரிய குடுவையில் கொடுத்தனர். இது எனக்குப் பிடிக்கவில்லை;  இது அவர்களுடைய உபசரிப்பு முறை என என்னுடன் வந்தவர்கள் கூறியதால் வெறுப்புடன் ஏற்றுக்கொண்டேன். மொத்தத்தில் எனக்குப் பிடிக்காமல் மொராக்கொ திரும்ப எத்தனித்தபோது அவர்களின் அரசரை தலைநகர் மாலியில் சந்தித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. எண்ணத்தின் விளைவு ஐம்பது நாட்கள் அங்கேயே தங்கினேன். அங்குள்ள மக்கள் எனக்கு மரியாதை செலுத்தியது எனக்குப் பிடித்தது. மிகவும் உஷ்ணமான பிரதேசம். மிக உயர்வான பேரீச்சை மரங்கள் இருந்தன, தர்பூசுப் பழங்களும் கிடைத்தன. நிறைய இறைச்சி கிடைத்தது; எகிப்து நாட்டு
துணிகளை அணிந்தனர்.

பெண்கள் அழகிய தோற்றமுடையவர்களாகவும் ஆண்களைவிட அதிக மரியாதை செலுத்தும் குணமுடையவர்களாக இருந்தனர். ஆண்களிடம் பொறாமை குணத்தை காணமுடியவில்லை. ஆனால் அவர்களிடம் ஒரு வினோத பழக்கம் இருந்தது; தன் தந்தையிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லை மாறாக தாயின் சகோதரரிடமிருந்து வாரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்; அதுபோல் தன் சொந்த பிள்ளைகளை வாரிசுதாரர்களாக ஆவதில்லை சகோதரியின் பிள்ளைகளே வாரிசுதாரர்களாக பாவிக்கப்படுகின்றனர். இத்தகைய வினோதப் பழக்கத்தை மலபாரைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை. இம்மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தனர்; தொழுகையில் நேரம் தவறுவதில்லை, சட்டம் படிப்பதிலும், குர்ஆனை மனனம் செய்வதிலும் ஆர்வம் காட்டினர். என்றாலும் பெண்கள், ஆண்கள் முன் நாணத்தை வெளிப்படுத்துவதில்லை, முகத்தையும் மூடுவதில்லை. தொழுகையில் மட்டும் ஆர்வமுடையவர்களாக இருந்தனர். ஒருவர் அப்பெண்களை மணந்துகொள்ள விரும்பினால் மணக்கலாம் ஆனால் தன்னுடன் மனைவியை அழைத்துச் செல்ல முடியாது, பெண்
விரும்பினாலும் குடும்பத்தவர் அனுமதிப்பதில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தன் குடும்பத்தவர் அல்லாது வேறு நண்பர்களும், தோழர்,
தோழியரும் ("friends" and "companions") இருந்தனர். ஒருமுறை இலாவதான் காஜி (நீதிபதி) வீட்டிற்கு சென்றேன். அனுமதி பெற்று வீட்டினுள் நுழைந்தபோது நான் கண்ட காட்சி என்னை திக்குமுக்காட வைத்தது. நான் திரும்பியபோது அங்கிருந்த பெண் என்னைப் பார்த்து வெட்கப்படாமல்
சிரித்தாள், "ஏன் போகிறாய்? அவள் என் தோழி" என்று காஜி சொன்னார். ஒரு காஜி, இஸ்லாமிய சட்டம் தெரிந்தவர், மற்றவர்களுக்கு
வழிகாட்டக்கூடியவர் இருந்த கோலம் என்னை வியப்படையச் செய்தது.

மாலி

இவாலதானிலிருந்து புறப்பட்ட எங்கள் கூட்டம் பத்து நாள் பயணத்துக்குப் பின் ஜகாரி என்ற கிராமத்தை அடைந்தோம். அது நீக்ரோ வணிகர்கள்
வாழும் கிராமம், கூடவே இபாதி இனத்தவர்களான வெள்ளை நிறத்தவரும் இருந்தனர். இங்கிருந்துதான் இலாவதானுக்கு தானியம்
கொண்டுசெல்லப்படுகிறது. பல கிராமங்களைக் கடந்து நைல் (River Niger) நதி அருகே வந்தபோது முதலையை முதன் முதலாகப் பார்த்தேன், அது
ஒரு சிறிய படகு போன்றிருந்தது. ஒரு நாள் நதிக்கரையோரம் சென்றபோது  ஒரு கருப்பு மனிதன் அநாகரீகமாக  என் குறுக்கே நின்றான். நான் விசனமடைந்தேன். அவன் சொன்னான், "உன்னை முதலையிடமிருந்து காப்பாற்ற நிற்கிறேன்" என்றான். பின்பு பத்து மைல் தூரத்திலுள்ள சன்சாரா நதிக்கரையோரமுள்ள கர்சாகு (Karsakhu) என்ற நகரை அடைந்தேன். அனுமதி இல்லாமல் யாரும் மாலியினுள் நுழைந்துவிடமுடியாது, இது அவர்கள் கடைபிடித்துவரும் கொள்கை. நான் ஏற்கனவே அங்கு வாழும் வெள்ளை இனத்தவருக்கு கடிதம் எழுதி எனக்காக ஒரு வீடு வாடகைக்கு எடுக்கும்படி அறிவித்திருந்தேன், அதனால் எந்த சிரமமில்லாமல் நதியைக் கடந்து கருப்பர்களின் தலை நகரான மாலியை அடைந்தேன். அங்கு முஹம்மது இப்னு அல்-ஃபக்கி எனக்காக வீடு பிடித்திருந்தார். அவருடன் மாலி காஜி அப்துர்றஹ்மானை சந்தித்தேன், உயர்வான குணமுள்ள கருப்பு இனத்தவர் அவர் உதவியால் அவர்களின் மொழியான 'டுகா' மொழி பெயர்ப்பாளர் கிடைத்தார். அவர்கள் எல்லோரும் என்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்கள் அளித்த ஒருவகையான  உணவு எங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை, நான் உட்பட எங்களில் ஆறு பேர் நோய்வாய்பட்டோம், ஒருவர் இறந்தும் விட்டார். நோய் கடுமையாகிக்கொண்டிருந்தது,  இரண்டு மாதம் அவதிப்பட்டேன்.  எகிப்தியர் ஒருவர் ஒருவகை வேரிலிருந்து கஷாயம் தயாரித்துக் கொடுத்தார், அதை அருந்தியபிறகு இறைவன்
அருளால் சுகமானோம்.

மாலி சுல்தான்

அந்நாட்டு அரசர் பெயர் மன்ஸா சுலைமான். மன்ஸா என்றால் அவர்கள் மொழியில் சுல்தான் என்று பொருள். அவர் ஒரு கஞ்சப் பிரபு, பரிசுப்
பொருளை எதிர்பார்க்க முடியாது. நோயினால் இரண்டுமாதம் வரை அவரை சந்திக்கமுடியவில்லை. ஒரு நாள் எங்கள் மறைந்த மன்னர் அபுல் ஹசன் நினைவாக ஒரு நிகழ்ச்சி வைத்திருந்தார். அதற்கு மார்க்க அறிஞர்கள் அழைக்கப்பட்டனர், நானும் சென்றேன் நிகழ்ச்சி முடிந்தபிறகு இப்னு ஃபக்கி அவர்களால் நான் மன்னரிடம் அறிமுகம் செய்யப்பட்டேன்.
நாங்கள் விடைபெற்று வந்தபிறகு மன்னரிடமிருந்து பரிசுப் பொருட்கள் காஜியிடம் வந்து அது பின் இப்னு ஃபக்கி மூலமாக என்னிடம் வந்தது. அதில் சில மேலாடைகளும், சிறிது பணமும், மூன்று கேக்கும், ஒரு ரொட்டித் துண்டும், வறுத்த கறியும், கொஞ்சம் தயிரும் இருந்தன. அதைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு வந்தது. இரண்டு மாதத்திற்குப் பின் வந்த பரிசுப் பொருள் இதுதானா என்ற என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். இது மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டு என்னை அழைத்து விசாரித்தார். என்னுடையப் பயணக்கதைகளை விவரித்தேன். பின் நான் தங்குவதற்கு வீடும் மேலும் வசதிகளும் செய்து தந்தார். அது ரமலான் மாதம், பிறை 27ல் மார்க்க அறிஞர்களுக்கும் எனக்கும் நிறையப் பொருட்களும், தங்கக் காசுகளும், பணமுமாக 'ஜக்காத்' தந்தார்.

மக்கள் குறை கேட்பது அரண்மனை மைதானத்தில், அரசர் அமரும் மேடை மரத்தடியில் இருந்தது. அங்கு பட்டுத் துணி விரிக்கப்பட்டு தங்கப் பறவை
போன்ற ஆசனத்தில் மன்னர் அமருமிடத்தின் மேலே நிழலுக்காக குடையும் பிடிக்கப்படுகிறது. அதை 'பிம்ப்பி' என்றழைக்கின்றனர். மக்கள் அங்குள்ள மரத்தடியில் நிற்கவேண்டும். மன்னர் பட்டுத்துணி அங்கி அணிந்து, வில் அம்பு, முதுகில் கேடயத்துடன் வரும்போது தாரைத் தப்பட்டைகள் ஒலிக்கப்படுகின்றன, மக்கள் ''மான்ஸா சுலைமான் கி'' என்று ஒலிக்கின்றனர். ஆனாலும் மன்னரின் பேராசையால் மக்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். தாமதமாகப் போனால் பள்ளியில் இடம் கிடைக்காது. எனவே முன்பாகவே தங்களது அடிமைப் பையன்களிடம் ஈச்ச ஓலையினால் நெய்யப்பட்ட தொழுகைப் பாயை கொடுத்தனுப்பி இடம் பிடிக்கச் செய்கின்றனர். எல்லோருமே வெள்ளை ஆடை அணிந்து வருகின்றனர். இது தவிர இன்னொரு சிறப்பம்சம் அவர்களிடம் இருந்தது. எல்லோரும் குர்ஆனை மனனம் செய்திருந்தனர், தங்கள் குழந்தைகளையும் மனனம் செய்ய வைக்கின்றனர். செய்யத் தவறிய தங்கள் பிள்ளைகளை  மனனம் செய்யும் வரை சங்கிலியால் கட்டிவைக்கின்றனர். இதை காஜி வீட்டிலும் கண்டேன்.

பெண் அடிமைகள் தங்கள் எஜமான் முன்னாள் நிர்வாணமாக செல்லவேண்டும். மன்னர் முன்பும் அப்படியே, ஆனால் தங்கள் தலையிலும் உடம்பிலும் புழுதியும் சாம்பலையும் அப்பிக்கொண்டு ஆடையில்லாமல் மன்னர் முன் செல்லவேண்டும், இது அவர்களின் பண்பாடு. இன்னொமொரு கண்டனத்துக்குரிய செயலைக் கண்டேன். அது இறந்தவற்றின் மாமிசத்தையும், நாய் மற்றும் கழுதைகளையும் அவர்களில் பலர் உண்பது.

மாலியை விட்டு புறப்படுதல்

நான் மாலியை அடைந்தது ஹிஜ்ரி 753, ஜமாத்துல் அவ்வல் 14(28th of June 1352), எட்டு மாதம் தங்கிவிட்டு 22, முஹர்ரம்(27th Feb 1353) அன்று
அபுபக்கர் இப்னு யாக்கூப் என்ற வணிகருடன் மாலியை விட்டுப் புறப்பட்டேன். வழியில் நைல்(River Niger) நதியின் கிளை நதி ஒன்றை
கடக்கவேண்டியிருந்தது. கடக்குமிடம் கொசுக்கள் நிறைந்திருந்தன, எனவே இரவல்லாது வேறு நேரங்களில் யாரும் கடக்கமாட்டார்கள். நாங்கள் இரவு
கவிழ்ந்து சில மணி நேரம் கழித்து அடைந்ததால் நிலா வெளிச்சத்தில் நதியைக் கடந்தோம்.

நாங்கள் நதியை அடையும்போது பதினாறு வினோதமான காட்டு மிருகங்களைக் கண்டேன். குதிரை போன்ற முகம், யானைக்குள்ளது போல் கால்கள், சிறிய வால், பெரிய உடம்பு, தலையைத் தூக்கியவாறு தண்ணீரில் நீந்திச்சென்றன. அவை என்ன என்று கேட்டபோது அவை ஹிப்போபொட்டாமி Hippopotamus) என்றார் அபுபக்கர். படகை கவிழ்த்துவிடும் என்பதால் சற்று தூரத்தே எங்கள் படகு சென்றது.

Cannibals

நாங்கள் ஒரு பெரிய கிராமத்தில் கரை இறங்கினோம், அதன் தலைவர் ஒரு நீக்ரோ, பெயர் ஃபர்பா மாகா (Farba Magha). அவர் மான்சா மூசாவுடன்
வந்தவர். அந்த பகுதி அருகே மனிதனைத் திண்ணும் நீக்ரோக்கள் (cannibals) வாழ்கின்றனர். ஒருமுறை மான்சா மூசாவுடன் (father of present Mansa)
வந்த வெள்ளை நிறமுள்ள காஜி , நான்காயிரம் காசுகளைத் தன்வசப் படுத்த முயற்சித்ததால் அவரை தண்டிக்க எண்ணி அந்த நீக்ரோக்கள் வாழும் பகுதிக்கு அனுப்பிவிட்டார். ஆனால் காஜி அவர்களுடன் நான்காண்டுகள் வாழ்ந்தார், காரணம் காஜி வெள்ளை நிறமாக இருந்ததால் திண்பதற்குத் தகுதியற்றவராம் (they say that the white is indigestible because he is not " ripe," whereas the black man is " ripe" in their opinion). அப்பகுதியில் தங்கச் சுரங்கம் இருந்ததால், ஒருமுறை அவர்களின் தலைவர் ஒருவருடன் அப்பகுதி மக்களை சந்தித்தபோது ஒரு நீக்ரோ அடிமைப்  பெண்ணை பரிசாக அளித்தார். அவளை தின்றுவிட்டு கையின் ஒரு பகுதியை இரத்தத்துடன் எடுத்து வந்து மூசாவுக்கு நன்றி தெரிவித்தனர். பெண்ணின் மார்பகத்தையும் உள்ளங்கையையும் விரும்பி சாப்பிடுவார்கள் என சிலர் சொன்னார்கள்.

தம்புக்து

பின்பு அங்கிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள தம்புக்து என்ற இடத்திற்கு சென்றேன். அங்கு முஸ்ஸஃபா பழங்குடியினர் வாழ்கின்றனர்,ஒரு
பள்ளிவாசல் இருந்தது, அதை கர்நாட்டா(Granada)வில் பிறந்த அபு இஸ்ஹாக் அல் சஹிலி என்ற புலவரால் கட்டப்பட்டது. 1324ல் அல் சஹிலி மக்காவுக்கு செல்லும் வழியில் மாலி மன்னரை சந்தித்தார். அவருடைய கவிதையில் மயங்கிய மன்னர் மாலிக்கு அழைத்தார், அப்போது தம்புக்து வணிக மையமாக இருந்ததால் அங்கு மான்சாமூசாவின் பெயரால் அரங்கம் ஒன்று கட்டினார். அதை கண்டு மகிழ்ந்த மூசா அவருக்காக அந்துலுசியா பாணியில் ஒரு வீடும் பள்ளிவாசலும் கட்டினார். அவர் வீடு மறைந்துவிட்டாலும் இன்றும் அப்பள்ளிவாசல் அவர் பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது
(Wikipedia).

தம்புக்துவிலிருந்து ஒரே மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட ஒரு சிறிய பட்கில் கடந்து காவ்காவை ( Gawgaw) அடைந்தேன் நைஜர் நதியில் இருக்கும் ஒரு பெரிய நகரம், அங்கு அரிசி, பால், மீன், இனானி என்று சொல்லப்படும் வெள்ளரிக்காய் நிறைய கிடைத்தன.  மாலியைப் போலவே பண்டமாற்று முறையில் வியாபாரம் நடக்கிறது. அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தேன். பின்பு தகாடாவை (Tagadda) நோக்கி ஒரு வணிகக் கூட்டத்தாருடன் பயணமானேன்.

தகாடா (Tagadda)

தகாடாவில் கட்டப்பட்ட வீடுகள் சிவந்த கற்களால் கட்டப்பட்டிருந்தன. தண்ணீர்கூட சிகப்பாகவே இருந்தது, காரணம் செம்புச் சுரங்கத்திலிருந்து ஒழுகி வருவதால். ஆணும் பெண்ணும் செம்புச் சுரங்கத்திலிருந்து மண் எடுத்துவந்து தங்கள் வீடுகளில் காய்ச்சி பட்டைகளாகவும், கம்பிகளாகவும்
வடிவமைத்து விற்கின்றனர். இது அவர்களுக்கு பெரும் செல்வத்தை ஈட்டித் தருகிறது. வேறெதுவும் அங்கே கிடைக்காததால் ஒவ்வோர் ஆண்டும் எகிப்து சென்று தங்களுக்குத் தேவையான உயர்தர துணிகளையும், மற்றுமுள்ள பொருட்களையும் வாங்கி வருகின்றனர். அவர்கள் வாழ்க்கை சுகபோகமாகவும் அடிமைப் பெண்களை வைத்திருப்பதிலும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தனர். பெண்கள் நன்றாக கொழுத்து தடியாகவும் அழகாகவும் இருந்தனர். கல்வி அறிவுள்ள அடிமைப் பெண்களை விலைக்கு வாங்குவது மிகவும் கடினம், விற்கமாட்டார்கள். நான் இதில் முயன்று ஒரு காஜியின் உதவியால் அதிக விலை கொடுத்து வாங்கியும் அவள் உரிமையாளர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சஹாராப் பாலையில் பயணம்

அது 11 ஷஃபான் 754 (செப்டம்பர் 1353), தகடாவிலிருந்து புறப்பட்ட  600 பெண் அடிமைகளை உள்ளடக்கிய பெரிய காரவான் ஒன்றுடன் இணைந்தேன். தண்ணீரே கிடைக்காத பாலையைக் கடக்க பதினைந்து நாட்கள் பிடித்தன. எகிப்துக்கும் தாவாத் என்ற நகருக்கும் பிரியும் பாதையான 'காட்' என்ற இடத்திற்கு வந்தபோது தண்ணீர் கிடைத்தது, ஆனால் அதுவும் இரும்புத் தாதுப் பகுதி வழியாக வந்ததால் பருக லாயக்கற்றது. ஒரு வெள்ளைத் துணியை அத்தண்ணீரில் நனைத்தால் அது கருப்பாகிவிடும். பத்து நாட்களுக்குப் பிறகு ஹக்கார் (Haggar) நாட்டை அடைந்தோம். அங்கு
பெர்பர் இனத்தவர் வழ்கின்றனர். அவர்கள் மூர்க்கர்கள், தங்கள் முகத்தை துணியால் மூடிக்கொள்கின்றனர். எங்கள் கூட்டத்தின் தலைவர் ஒருவரை
பிடித்து வைத்துக்கொண்டு துணியும் வேறு சில பொருட்களும் கொடுத்தால்தான் விடுவோம் என்றனர். அப்போது புனித ரமலான் மாதம் தொடங்கியது,

ஆனால் ரமலான் மாதம் தொடங்கிவிட்டால் யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்கமாட்டார்கள், திருடமாட்டார்கள், பாதையில் பொருட்கள் கிடந்தால் தொடக்கூட மாட்டார்கள். இது அவர்களின் வழக்கமாம். ரமலான் மாதத்திலும் எங்கள் பயணம் தொடர்ந்தது, ஒரு மாத வழித்தடத்தில் சில மரங்களைத் தவிர முழுவதும் பாறைகள் நிறைந்த கடினமானதாக இருந்தது.

தாவாத்தின் முக்கிய கிராமமான புதா'வை (Buda) அடைந்தோம். அங்குள்ள மண்வளம் உப்புத்தன்மையுள்ளதாக இருந்தது. எனவே அங்கு எதுவும்
விளைவதில்லை. ஆலிவ், வெண்ணெய் என எதுவாக இருந்தாலும் மொராக்கோவிலிருந்து இறக்குமதி செய்தனர், பேரீச்சைப் பழம்
சிஜில்மாஸாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது, அதையே அம்மக்கள் விரும்பினர் என்றாலும் அவர்களின் முக்கிய உணவு பேரீச்சைப் பழமும்,
வெட்டுக்கிளியும் (locusts). வெட்டுக்கிளியை பேரீச்சைப் பழத்தைப்போல் பதப்படுத்தி வைத்துக்கொள்கின்றனர். அவற்றை வேட்டையாடுவது சூரிய
உதயத்துக்குமுன், ஏனென்றால் இரவு குளிராக இருப்பதால் அவற்றால் பறக்கமுடியாது.

தாயகத்தை நோக்கி..

புதாவில் சில நாட்கள் தங்கிருந்துவிட்டு சிஜில்மாஸாவுக்குச் செல்லும் காரவானுடன் இணைந்துக்கொண்டேன். அது ஹஜ்ஜு மாதம் (29 Dec1353),
வழி நெடுகிலும் கடுமையான குளிரும் பனிப் பொழிவும். இத்தகையப் பனிப் பொழிவை புக்கரா, சமர்கந்து, குரஸான், துருக்கி நாட்டிலும் பார்த்தேன். ஆனால் அதைவிட மோசமாக உம் ஜுனைபா செல்லும் வழியில் இருந்தது. தார் அல்-தமா என்ற ஊரில் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிவிட்டு எனது மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய சங்கைமிகு ஷெய்கு அவர்கள் வாழும் ஃபாஸ் (Fez) நகரை அடைந்தேன். அதன் பிறகு நான் வேறு எங்கும் போகவில்லை. என் இறுதி நாட்கள்  வரை எங்கள் ஷெய்கின் வழிகாட்டுதலில் வாநாளைக் கழித்தேன். அதுவே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.

***      

ஹமீது ஜாஃபரின் குறிப்புகள் :

29 ஆண்டு காலம் , 73,000 மைல்கள் (117,500km), இன்றைய நவீன உலகின் 44 நாடுகளுக்கு மேலானவற்றை சுற்றிவந்தபின் மொராக்கோ சுல்தான் அபு இனானின் தூண்டுதலால் இப்னு ஜுஜை (Ibn Juzayy) என்ற இளம் அறிஞரின் உதவியால் இப்னு பதூதாவின் பயண அனுபவங்கள் எழுதி ஹிஜ்ரி 756 துல் ஹஜ்ஜு மாதம் பிறை 3 (9th December 1355) அன்று நிறைவு செய்யப்பட்டது. அதன்பின் மொராக்கோவில் சில காலம் நீதிபதியாகப் பணியாற்றிபிறகு 1368/1369 ல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் சொந்த ஊரான தன்ஜிரில் அடக்கம் செய்யப்பட்டது.

பல  நூற்றாண்டுவரை அரபு உலகத்தில் இவரது 'ரிஹலா' யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1830ல் அல்ஜிரியாவை பிரஞ்சு ஆக்ரமித்தபோது ஐந்து கையெழுத்துப் பிரதிகள் கான்ஸ்டண்டைனில் கண்டுபிடிக்கப்பட்டு பாரிஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டு Charles Defrémery and Beniamino Sanguinetti
என்ற பிரஞ்சு அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1853 ல் அரபி விளக்கத்துடன் வெளியிடப்பட்டது. அதன்பின் பல மொழிகளில் எழுதப்பட்டு இன்று நம் கையில் தவழ்கிறது.

இஸ்லாத்தில் பற்றுகொண்ட இவரால் சில நாடுகளின் முஸ்லிம்களின் பண்பாடு பிடிக்கவில்லை. மங்கோலியர்கள், துருக்கியர்களின் வாழ்க்கை முறை ஏற்புடையதாக இல்லை. உதாரணமாக துருக்கிப் பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் தன்னிச்சையாகவும்,  கணவன்மார்கள் தங்களின்
அடிமைகளாகவும் இருக்கவேண்டும் என்ற மனப்பான்மை உடையவர்களாக இருந்தது. அதுபோல் மாலத்தீவு பெண்களும், சில ஆப்ரிக்க சஹாரா பெண்களின் அரை நிர்வாண உடை முறைகளையும் வெறுத்தார்.

இருபத்தோராவது வயதில் தொடங்கி தன்னந்தனியே 73 ஆயிரம் மைல்கள், பல நாடுகள்,  பல்வேறு நாகரீகம் பண்பாட்டுடைய மக்கள், சுகமான அனுபவங்களுக்கிடையே உயிருக்கு உலை வைக்கும் துன்பங்கள் என பல இடர்களை சந்தித்து சாதனை படைத்தது சாதாரணமானதல்ல. சென்ற இடங்களில் தான் பெற்ற பொக்கிஷங்களை இழந்து எப்படி வெறும் கையுடன் புறப்பட்டாரோ அதேபோல் திரும்பினார் என்றாலும் ஒவ்வொரு நாட்டின் செழிப்பையும் நாகரீகத்தையும் அறிய முடிகிறது.  இந்தியாவில் இருந்த ஜாதிப் பாகுபாட்டையும் அதற்கு மாறாக அண்டை நாடான இலங்கையில் வேற்றுமையற்ற நிலை இருந்ததையும் அறியமுடிகிறது. காலம் உருண்டோடியும் இன்னும் நம் நாட்டில் ஜாதி வெறி இருக்கத்தானே செய்கிறது.

மனிதனை இனத்தால், நிறத்தால் வேறுபடுத்தி வைத்தவர்கள் சுகமாக இருக்கின்றனர்; நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மேலை நாட்டவரிடம்கூட நிறவெறி இன்னும் நீங்கவில்லை. இவை என்று நீங்கும்.....?

***

இப்னு பதூதா சென்ற நாடுகளின் பட்டியல்:Arab Maghreb - Tangier, Fes, Marrakech, Tlemcen(Tilimsan), Miliana, Algiers, Djurdjura Mountains, Béjaïa,Constantine - Named as Qusantînah. Annaba - Also called Bona. Tunis - At that time, Abu Yahya (son of Abu Zajaria) was the sultan of Tunis. Sousse - Also called Susah. Sfax, Gabès, Tripoli, Arab Mashriq, Cairo, Alexandria, Damietta, Jerusalem, Bethlehem, Hebron, Damascus, Latakia, Egypt, Syria,

Medina - Visited the tomb of Prophet Muhammad, Jeddah, Mecca - Performed the Hajj pilgrimage to Mecca. Rabigh - City north of Jeddah on the Red Sea.Oman, Dhofar, Hajr (modern-day Riyadh), Bahrain, Al-Hasa, Strait of Hormuz, Yemen, Qatif,

Byzantine Empire and Eastern Europe, Konya, Antalya, Bulgaria, Azov, Kazan, Volga River, Constantinople

Central Asia, Khwarezm and Khorasan (now Uzbekistan, Tajikistan, Balochistan (region) and Afghanistan, Bukhara and Samarqand, Pashtun areas of eastern Afghanistan and northern Pakistan (Pashtunistan),

South Asia, Punjab region (now in Pakistan and northern India), Sindh, Multan, Delhi, Present day Uttar Pradesh, Present day Gujarat, Deccan, Konkan Coast, Kozhikode, Malabar, Coromandal coast, Madurai.
Maldives, Sri Lanka - Known to the Arabs of his time as Serendip. Battuta visited the Jaffna kingdom and Adam's Peak, Colombo.

Bengal (now Bangladesh and West Bengal), Brahmaputra River in Bangladesh,  Meghna River near Dhaka, Sylhet met Sufi Shaikh Hazrat Shah Jalal,  Southeast Asia, Burma (Myanmar), Sumatra Indonesia, Malay Peninsula Malaysia, Viet Nam.

China, Quanzhou - as he called in his book the city of donkeys. Hangzhou — Ibn Battuta referred to this city in his book as "Madinat Alkhansa" مدينة الخنساء. He also mentioned that it was the largest city in the world at that time; it took him three days to walk across the city, Beijing - Ibn
Battuta mentioned in his journey to Beijing how neat the city was.

Ibn Battuta visited the Kingdom of Sultan Tawalisi, Tawi-Tawi, the country's southernmost province, Somalia, Mogadishu, Zeila, Swahili Coast, Kilwa, Mombasa, Mali Empire and West Africa, Timbuktu, Gao, Takedda, Mauritania, Oualata (Walata) Gibralter, Spain, Granada, Valencia,

During most of his journey in the Mali Empire, Ibn Battuta travelled with a retinue that included slaves, most of whom carried goods for trade but would also be traded as slaves. On the return from Takedda to Morocco, his caravan transported 600 female slaves, suggesting that slavery was a substantial part of the commercial activity of the empire.

***

Sources:The Travels of Ibn Battuta - H.A.R. GIBB
http://en.wikipedia.org/wiki/Ibn_Battuta
http://rolfgross.dreamhosters.com/Battuta-Web/Rihla-14.htm
http://www.fordham.edu/halsall/source/1354-ibnbattuta.asp
**


நன்றி : ஹமீது ஜாஃபர் | http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com

1 comment:

  1. மேலும்...
    இபின் பதூதா : சிறகடிக்கும் பயணி - சா.தேவதாஸ் கட்டுரை (தி இந்து) :

    http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%9F
    %E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF/article6406390.ece?homepage=true

    ReplyDelete