ஒரு படைப்பாளியாக அவரால் சோதிக்க முடிந்தவற்றையெல்லாம் சோதித்திருக்கிறார். நாடகமே உலகம். இறந்தவனின் குறிப்புகள் என்ற இரண்டும் உலக நடப்புகளைக் கறாராக விமர்சிக்கின்றன.
இவ்விரண்டு நாவல்களிலும் அவருடைய படைப்பாற்றல் மிகப்பெரும் உயரத்தை எட்டியிருப்பதை ஒவ்வொரு வரியிலும் வாசித்துணரலாம்.
நாடகமே உலகம் கற்பனையையும் யதார்த்த நிகழ்வுகளையும் ஒன்றோடொன்று மோதவிட்டுப் பார்க்கிறது. கற்பனை எப்போதுமே அழகானதுதான்; கலையின் இயக்கம் இந்தக் கற்பனைக்கு வலுவூட்டும்போது நாம் கற்பனைக்குள் இருக்கிறோமா நிசத்திற்குள் நிற்கிறோமா என்கிற மயக்கம் ஏற்படுகிறது. இந்த மயக்கம் ஏற்பட வேண்டுமென படைப்பாளி விரும்பியிருக்கிறார். ஆனால்
அதற்கான படைப்பு நுட்பம் அவ்வளவு சுலபமாக வாய்க்க முடியுமா? இங்கு அது அப்படி வாய்த்திருப்பதை என்னவென்று சொல்ல? ஒரு படைப்பு ஒரே சமயத்தில் குழந்தைகளையும் பெரியவர்களையும் சரிசமமான அளவில் பாதிப்பது மிகவும் அபூர்வமான விடயமாகும்.
நாடக உலகம் நாடகமாக நிகழும்போதே பல சிக்கல்கள் அதனுள்ளே உருவாகிவிடுகின்றன. அது ஒரே சமயத்தில் நாடகமாகவும் நிகழ வேண்டும்; பார்வையாளர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கும் வாய்க்காலகள் அமைக்க வேண்டும். எழுதப்பட்ட பிரதியும் தன் இறுக்கத்தை நெகிழ்விக்க வேண்டும். இப்படியான பல நோய்களுக்கு ஒரே ஒரு மாத்திரை கொடுப்பது எவ்வாறு சரியாகும்? நாடகத்தில் நிகழக் கூடியன நமக்கு வாய்த்தால் அதைப் போன்ற பொன்னுலகம் வேறொன்றுமில்லை. மனிதர்களின் அன்பும் கருணையும் முழுமையான மனிதத்தை அருளும்போது எவ்வுயிர்க்கும் சொர்க்கம் வேறில்லை என்றாகும். ஒரே சம்பவத்தை அதன் அன்பான நகர்வாகவும் வேறுபாடான நகர்வாகவும் ஒரு நாடகம் பரிசோதிக்கிறது. இந்தச் சுழலுக்குள் மனிதர்கள் என்னவாகிறார்கள் என நாடகம் நம்மிடம் கேள்வியெழுப்புகிறது.
நாடகப் பிரதிக்குள் சுகுணாவை எமிலியாகப் பார்க்க நேருவதும் கானை வின்செண்ட்டாகப் பார்க்க நேருவதும் விசித்திரமான சமூக விளையாட்டு. இதை விதியின் விளையாட்டு என்று கூறி மானுடத்தின் மேன்மையை இழிவுசெய்ய முடியாது. ஆனால் அதைச் செய்யத்தான் நாம் முயல்கிறோம். நம்முடைய மனத்துக்குள் கிடக்கின்ற ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு மகளிர்கள் விலை செலுத்த வேண்டியதாகிறது. இது ஆணாதிக்கம் வரைய விரும்பும் விதி. மகளிர்க்கான தனியுலகமோ தனிச் சுதந்திரமோ இல்லை. எல்லோரும் சர்கார் சையத் அலி முகம்மது கான் திப்புவாக மாறினால் எமிலியை சுகுணாவாக ஆக்கிவிட இயலும். இப்படித்தான் மகளிர் சுதந்திரம் மதிப்பு பெறுகிறது. முகம்மது கான் திப்புவை நாடக மேடையிலிருந்து இழுத்துப் போட்டால் அவனும் இன்னொரு வின்செண்ட்டாகவே இருப்பான். இங்கே மதம், நாகரிகம், கல்வி, அந்தஸ்து, சமூக உணர்வு என்பனவெல்லாம் அர்த்தமற்றவையாகிவிடுகின்றன. எல்லா புனித நூல்களும் உயிர்ப்பற்று அது தோன்றிய காலத்திய ஜடமாகவே கிடந்துவிடுகின்றன. பார்வையாளனும் கலைஞனும் குவிகிற மையப்புள்ளியில் இவையெல்லாமும் கரைந்தோ கலந்தோ சேறாகிவிடுகின்றன. மகளிரின் செயல்கள் மனத்துக்கு உவப்பாக இல்லையெனில் அவர்களைக் கொல்வதில் தவறே இல்லை என்கிற நோக்கத்தைத்தான் கலைஞனும் பார்வையாளனும் கொள்கிறார்களெனில் அடிப்படையான சமூக இயக்கம் கேலிக்கூத்தாகவே இருக்கும்.
இறந்தவனின் குறிப்புகள் படைப்பாளிகளின் ஒரு பக்கத்தைத் தோலுரிக்கின்றன. இதுவும் கற்பனையை முன்வைத்துச் சமூக யதார்த்தத்தை அலசுகிறது. இருவேறு காலப் பரிமாணங்களில் ஒரு சமூகம் கொள்ளும் அரசியல் என்னவாக இருக்கும் என்கிற இலக்கை அலச முனைகின்றது. எப்போதும் பதவியும் அதிகாரமும் இணைந்தே இருக்கின்றன. ஒன்றில்லாமல் பிறிதொன்றில்லை. நாகரிக வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் வளர்ந்துவரும் காலத்தோடு ஒன்றிணைய முடியவில்லை. இதை உரசிப்பார்ப்பதற்காகவே ‘தி பெக்கர்’ என்ற நாவலும் அதன் படைப்பாளி காஸிமோவும் உள்ளே நுழைகின்றார்கள். இது கூடவே இருக்கின்ற எழுத்தாளனின் பொய்ம்மை முகத்தை அம்பலப்படுத்துகின்றது. இறந்தவன் என்றும் கடிதம் எழுதப்போவதில்லை. ஆனால் கதையில் வரும் இறந்தவனோடுதான் பிறந்தவன் உரையாடிக்கொண்டிருக்கிறான். இறந்தவன் என்பது ஒரு படிமமாகக் காலத்தோடு இசைய முடியாத ஒரு படைப்பாளியை விமர்சிப்பதாகத் தோன்றுகிறது. இருவேறு காலங்களை முடிச்சுப்போடும்போடுகிற இழை பலவீனமாக இருக்கின்றது. ஆனால் அதற்கான நியாயம் குறைவுபடவில்லை. ஆதிகாலம் தொட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அதை எதிரிகளை ஒழித்துக்கட்டஅப் பயன்படுவதுமாக சதுரங்கக் காய்கள் உயிர்ப்புடனேயே இருந்துவருகின்றன.
தாஜின் மனத்துக்குள் அதிகார எதிர்ப்பு கனன்றுகொண்டே இருக்கின்றது. அது தன் சமூகத்திற்கு வெளியே மட்டும் என்றில்லை; உள்ளேயும் இதர மூன்று குறுநாவல்களுமே சொந்தச் சமூகத்தின் நடப்புகள், சிந்தனைகள், செயல்பாடுகளை விமர்சிப்பதாகவும் பகடி செய்வதாகவும் அமைகின்றன. தங்ஙள் அமீர் காணப்படும் நிகழ்வுகளில் அவருடைய அரும்பெரும் சாதனைகளாக எதுவும் காணக் கிடைப்பதில்லை. பிறரின் நோக்குகள், கணிப்புகளிலிருந்து இன்னொருவரின் அற்புதம் கணிக்கப்படுவதும் அதைச் சூழ்ந்து தம் இருப்புக்கு ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சிகளும் நமக்கு விசித்திரமானவையாகத் தோன்றுகின்றன. அதே சமயத்தில் அவர்களின் துயரங்களுக்கு முடிவு கிட்டிவிடாதா என்ற ஏக்கமும் நம்மைச் சற்றே வதைக்கின்றது. ’........’ யார் யார் எந்தெந்த மதத்திற்குள் இருந்தாலும் அவ்வவ் மண்ணின் இயல்புகளிலிருந்து துண்டித்து வெளியேறிவிட அவர்களால் முடியாது என்பதைக் காட்டுகிறது.
சமூகமும் அதுசார்ந்த உணர்வுகளும் நாம் சிலாகிக்கும் கருத்துகளுக்கு வெளியேயும் ஜீவிக்கும். அதில் தாம், பிறர் என்கிற விலகல்கள் பேரளவில் இருப்பதில்லை; ஒருவேளை அப்படியிருந்தாலும் தம்முடைய தேடல்களுக்கு எதெதெல்லாம் கைகொடுக்குமோ அதையெல்லாம் பக்குவமாகப் பயன்படுத்திக்கொள்ளவே விழையவும் செய்கிறோம். இப்படைப்புகளில் மேலோங்கி நிற்பது படைப்பாளியின் நுட்பமான பார்வைகள். இது இல்லாமல் படைப்புகளைச் செழுமைப்படுத்திவிட முடியாது. ’பெருநாள் காலை’யில் அவர் குறிப்பிடும் ஒரு காட்சி, “அப்பல்லாம் பெருநாள்னா, இரவு இரண்டுமணிக்கே அடுப்பாங்கரையில் பாத்திரங்களின் சலசலப்புச் சப்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். விடிய இருக்கிற பெருநாளை அந்தச் சப்தங்கள்தான் வடிவமைத்துக் கொண்டிருப்பது மாதிரி!” இத்தகைய காட்சிகளை ஒவ்வொருவரும் கண்டிருப்போம் - சப்தங்களையும் கேட்டிருப்போம் அவரவர் பண்டிகை நாள்களில். ஆனால் இந்தச் சப்தங்கள்தான் அவற்றை வடிவமைத்துக்கொண்டிருந்தன என்கிற மறைபொருளை நாம் கவனிக்கவில்லை. படைப்பின் தன்மைக்கு இத்தகைய அம்சங்களே ஊன்றுகோலாகின்றன. கூடவே நம்முடைய மத விவகாரங்களில் நாம் எவ்வளவு பெரிய கில்லாடிகளாக இருந்தாலும் அதற்கும் மேற்பட்ட கில்லாடிகள் நம்மிடையே இருப்பார்களெனவும் அவர்கள் ஒருகட்டத்தில் நம்மை வழிநடத்தக்கூடியவர்களாகத் திகழ்வார்களெனவும் அறிந்துகொள்கிறோம்.
தம் சமூகத்தைப் பரிசீலனைக்கு உட்படுத்துவது ஒரு படைப்பாளியின் மிகப்பெரும் கடமை. படைப்பின் வழியே சமூகமும் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். இவையிரண்டும் இல்லாத சூழலில் சமூகம் அசைவற்றுத் தேங்கிப் போய்விடும். இதில் சொந்த அபிமானங்களுக்கு வேலையில்லை. இருப்பதில் திருப்திகண்டுவிடவும் கூடாது. உலகம் முழுவதிலும் இச்சமூகத்திற்கு நேர்ந்திருக்கும் அவலங்களிலிருந்து மீள்வதற்கு இத்தகைய படைப்புகள் கைகொடுக்கும். அவ்வகையில் இக்குறுநாவல்கள் முஸ்லிம் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் பல. அவற்றைப் பதில்களாக்க முயல வேண்டும்.
தாஜ் ஓர் எழுத்தாளராகக் காட்டும் உயரம் பரிசீலிக்கத் தூண்டுகிறது. மலைகளின் உயரத்தைக் காற்று தொடாமல் போவதில்லை. காற்றும் மலையும் உறவாடும் இடத்தை, உயிர்ப்பூட்டும் சிந்தனையை இக்கதைகள் காட்டுகின்றன. தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளில் தாஜ் இருக்கிறார் என்கிற செய்தியை ஒரு வாசகனாக நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
*
நன்றி : களந்தை பீர் முகம்மது | காலச்சுவடு பதிப்பகம்
No comments:
Post a Comment