எம். அப்துற்-றஹீம் அவர்கள் எழுதிய 'வலிமார்கள் வரலாறு' எனும் நூலிலிருந்து (பாகம் 1)..
***
ஷகீக் அல்-பல்கி (ரஹ்) அவர்களிடம் ஏதேனும் எனக்கு அறிவுரை வழங்குங்கள் என்று கலீபா ஹாரூன் அல்ரஷீத் கேட்கிறார். தொடங்குகிறது!
------------------
"தாங்கள் பாலையின் நடுவே தாகவிடாயால் துன்புற்று இறக்கும் நிலையில் ஆகிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது தங்களுக்கு ஒரு முடக்குத் தண்ணீர் கிடைப்பின் அதற்குத் தாங்கள் எவ்வளவு பணம் வழங்குவீர்கள்" என்று வினவினர்.
பதிலிறுத்தனர் கலீபா : "அம்முடக்குத் தண்ணீரை எனக்கு வழங்கும் மனிதன் என்னிடம் என்ன கேட்கிறானோ அதனை நான் அவனுக்கு வழங்குவேன்"
"அவன் அதற்குப் பகரமாக தங்களின் அரசாங்கத்தில் பாதியை வேண்டின் தாங்கள் என்ன செய்வீர்கள்?"
"அதனை நான் அவனுக்கு வழங்குவேன்"
"நல்லது; தாங்கள் அத்தண்ணீரை அருந்துகின்றீர்கள். அது தங்களுக்கு ஒத்துக் கொள்ளாததால் தங்களுக்குச் சிறுநீர் வருவது நின்றுவிடுகிறது. எனவே தாங்கள் இறக்கும் நிலையில் ஆகி விட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது ஒருவன் தங்களிடம் வந்து, 'நான் தங்களுகு சிகிச்சை அளிக்கின்றேன். அதற்குப் பகரமாக தாங்கள் எனக்குத் தங்களின் அரசாங்கத்தில் பாதியைத் தரவேண்டும்' என்று கூறின் தாங்கள் என்ன செய்வீர்கள்?"
'அதனை நான் அவனுக்கு வழங்குவேன்"
"அவ்விதமாயின் தாங்கள் அருந்தும் ஒரு முடக்குத் தண்ணீருக்கு நிகராகவும், சிறுநீராக வெளிவராத ஒரு முடக்குத் தண்ணீருக்கு நிகராகவும் உள்ள தங்களின் மாபெரும் அரசாங்கத்தைப் பற்றித் தாங்கள் ஏன் பெருமையுறுகிறீர்கள்?"
கலீபாவின் கண்களிலிருந்து நீர் தாரைதாரையாக வழிந்தோடியது.
****
நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
**
தொடர்புடைய பதிவு : ஸகீக்-உல்-பல்கியின் கண் திறக்கிறது…
No comments:
Post a Comment