Monday, September 22, 2014

250 : பெரியார் சொன்ன 'கெட்டிக்காரன் கதை'

விந்தன் எழுதிய 'எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்' நூலில் பெரியார் பற்றி நடிகவேள் எம்.ஆர். ராதா சொல்கிறார் (பக் : 130-131) :

'பெரியார் அடிக்கடி சொல்வார் 'எனக்குக் கெட்டிக்காரனுங்க வேணாம், முட்டாளுங்கதான் வேணும்'னு. ஒருநாள் அவர் அப்படிச் சொன்னப்போ, 'ஏன் அப்படிச் சொல்றீங்க?'ன்னு அவரை ஒருத்தர் கேட்டார். அதுக்குப் பெரியார் சொன்னார் : 'எனக்குப் பா.வே. மாணிக்க நாயக்கர்னு ஒரு நண்பர்; என்ஜினியர். அவரை வைச்சி நான் ஒரு சமயம் ஈரோடிலே வீடு ஒண்ணு கட்டினேன், சுற்றுச் சுவரெல்லாம் எழுப்பியாச்சு. 'இனிமே மரம் வந்துதான் மேலே வேலையை ஆரம்பிக்கணும்; நாளைக்கு நீங்க மரம் வாங்கி வையுங்க, நான் வரேன்'ன்னு சொல்லிட்டு அவர் வீட்டுக்குப் போயிட்டார், மறுநாள் வந்து, 'என்ன, மரம் வாங்க ஆள் போயாச்சா?'ன்னார். 'போயாச்சு, நல்ல கெட்டிக்காரத் தச்சனுங்களாப் பார்த்து ரெண்டுபேரை அனுப்பி வைச்சிருக்கேன்'ன்னேன். 'கெட்டிக்காரனுங்களையா அனுப்புனீங்க? அப்போ மரம் வந்து சேராது'ன்னார். 'ஏன்?'னு கேட்டேன். 'அதை நான் ஏன் சொல்லணும், நீங்களாகவே தெரிஞ்சிக்குவீங்க'ன்னார். 'சரி'ன்னு அந்தக் கெட்டிக்காரனுங்க வர வரையிலே காத்திருந்தோம். காலையிலே போன அவனுங்க, சாயங்காலம் மூணு மணிக்கு மேலே வந்தானுங்க. வந்தவனுங்க மரத்தோடும் வரல்லே, வெறுங்கையோடு வந்து நின்னானுங்க. 'எங்கே மரம்?'னேன். 'இந்தக் கொட்டாப்புளி பிடிக்கத் தெரியாத பயலைக் கேளுங்க, நான் நல்ல மரமா பொறுக்கி எடுத்தா, இவன்தான் அதை வேணாம்னு சொல்லிட்டான்'னான் ஒருத்தன்; இன்னொருத்தனோ, 'இந்தத் தொரப்பணம் போடத் தெரியாத பயலைக் கேளுங்க, நான் நல்ல மரமா எடுத்துக் காட்டினா, இவன்தான் அதை வேணாம்னு சொல்லிட்டான்'னான். ஆக, மாணிக்க நாயக்கர் சொன்னது சரியாப் போச்சு. ரெண்டு பேரும் 'யார் கெட்டிக்காரன்'கிறதிலே போட்டி போட்டுக்கிட்டதுதான் மிச்சம், காரியம் நடக்கலே.  நாயக்கர் சொன்னார், 'இனிமேலாவது தெரிஞ்சுக்குங்க, வழி காட்டத்தான் கெட்டிக்காரன் வேணும்; அந்த வழிப்படி காரியம் நடக்கணும்னா முட்டாளுங்கதான் வேணும்னு. அது எனக்கு ரொம்பச் சரியாப் பட்டது. அன்னியிலேருந்துதான் 'எனக்குக் கெட்டிக்காரனுங்க வேணாம், முட்டாளுங்களே போதும்'னு சொல்லிக்கிட்டு வரேன்'ன்னார். எப்படியிருக்கிறது, கதை?"
Download PDF
**
தொடர்புடைய பதிவு :
பா.வே.மாணிக்க நாயக்கர் 1871- 1931 - விடுதலை
**

நன்றி : பாரதி புத்தகாலயம்
& ஷார்ஜா சிறைவாசிகள்!

No comments:

Post a Comment