Saturday, April 19, 2014

அறிவின் எழுச்சியும் வீழ்ச்சியும் 2 - ஹமீது ஜாஃபர்

ஆவ்வ்வ்...! முதல் பகுதி இங்கே :  http://abedheen.blogspot.com/2013/12/blog-post_12.html

**


பாக்தாதில் தோன்றிய அராபிய அறிவின் எழுச்சியும் வீழ்ச்சியும்                      
The Raise and Fall of Arabian Wisdom in Baghdad.


பாகம் - 2
அப்பாஸிய கலிஃபாக்கள் மலர்ச்சி


நீண்ட காலமாகவே உமையாக்களின் ஆட்சியை விரும்பாதிருந்தனர் ஒரு பகுதியினர். அவர்களது விருப்பமெல்லாம் அலி(ரலி) வழிதோன்றல்களின் ஆட்சி நடக்கவேண்டும் என்பதே. காரிஜிக்கள் மோசூலில் கிளர்ச்சி செய்யத்தொடங்கினர். இதை கட்டுப்படுத்த உமையா கலிஃபா இரண்டாம் மார்வானால் முடியவில்லை. இதற்கிடையில் அரேபியாவிலும் காரிஜிக்களின் கிளர்ச்சி தொடங்கியதால் அதனைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சிரியா பாதுகாப்பானதாக இல்லை. இன்னொரு பக்கம் ஷியாக்கள்  கொரஸானில் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். கலிஃபாவால் இதனையும் கட்டுப்படுத்த முடியவில்லை. முடிவில் ஜெப் நதிக்கரையில் நடந்த சண்டையில் ஹாஷிமி வம்சத்தை சேர்ந்த அபுல் அப்பாஸிடம் தோல்வியுற்றார். இந்த சண்டையில் 300 க்கும் மேற்பட்ட உமையா வம்சத்தினர் கொல்லப்பட்டு உமையாக்கள் ஆட்சி முடிவுற்று அப்பாஸிய ஆட்சி தொடங்கியது. இச்சண்டையில் தப்பித்த வாரிசுகளான உபைதுல்லா மற்றும் அப்துல்லா எத்தியோப்பியாவுக்குத் தப்பிச் சென்றனர். அப்துல் ரஹ்மான் ஸ்பெயினுக்குத் தப்பிச்சென்று அங்கு உமையாக்கள் ஆட்சியை உருவாக்கினார்.

உமையா வம்சத்தின் தோல்வி இஸ்லாமிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை எனலாம். அப்பாஸியர்கள் பாரசீகத்தினருடன் ஒன்றினைந்திருந்தனர். அவர்கள் அங்கு திருமண உறவுகள் ஏற்படுத்திக் கொண்டிருந்ததால்  கல்வி, கலாச்சாரம் பாரசீகத்துடன் இணைந்துக்கொண்டது. அப்பாஸிய ஆட்சி மலர பாரசீகர்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. எனவே ஆட்சி பொறுப்பில் முக்கிய பங்கு வகுத்தனர் என்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள்.

பாக்தாதின் தோற்றம்

மார்வானை வென்றபின் முதல் அப்பாஸிய கலிஃபா அபுல் அப்பாஸ் யூப்ரட்டீஸ் நதிக்கரையிலிருந்த அல் அன்பார் என்ற இடத்தில் தலைநகரை அமைத்தார். அவருக்குப் பின் வந்த அவரது சகோதரர் அல்மன்சூர் தலைநகர் அமைக்கப் பல இடங்களை ஆய்வு மேற்கொண்டபின் பாபிலோனியர்களின்  பழமை நகரமான 'இறைவனின் தோட்டம்' என்று பாரசீக மொழியில் பொருள்தரும் பக்-தா-து என்றழைக்கப்பட்ட இடத்தை தெரிவு செய்தார். மந்திரியாய் பணிபுரிந்த காலித் பின் பர்மக் என்ற பாரசீகரின் ஆலோசனைப்படி அடிக்கல் நட்டுவதற்கான இடமும், நேரமும் தெரிவு செய்ய  நவ்பக் என்ற பாரசீகரும்,  மஷல்லா பின் அதரி என்ற பாரசீக யூத சோதிடரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடைய ஆலோசனைப்படி கலிஃபா அல் மன்சூர் அவர்களால் தலைநகருக்கான அடிக்கல் கிபி. 762 இறுதியில் நாட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் அது ஒரு வணிக நகரமாக உருவாகியது. கூஃபா, பஸரா, மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ளவர்கள் இங்கு குடியேறினர்.

இஸ்லாமிய உலகில் இது ஒரு சிறந்த தலைநகராக வேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருந்தார். அறிஞர்கள், குர்ஆன் விற்பன்னர்கள், ஹதீஸ் நிபுனர்கள், இலக்கிய மேதைகள், சொற்பொழிவாளர்கள் என பல்வேறு கல்வியாளர்கள் பஸரா மற்றும் கூஃபாவிலிருந்து  வரவழைக்கப்பட்டு குர்ஆன், ஹதீஸ், மற்றும் கலாச்சார அறிவுகள் போதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் சில பழமைவாதிகள், இன உணர்வு கொண்டவர்கள் எதிர்க்கவும் செய்தனர்.

 அப்பாஸிய புரட்சியில்  பாரசீகர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தனர். பின்னர் அவர்கள் மேற்கே குடியேறி ஆட்சி பொறுப்பில் பங்கேற்றனர்.  அவர்களில் பர்மகி குடும்பத்தைச் சேர்ந்த காலித் பின் பர்மக் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார், பின்னர் மெஸபடோமியாவின் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரது மகன் யஹ்யா, கலிஃபா மஹ்திக்கு (775-85) நம்பிக்கைக்குரியவராகவும், அர்மேனியாவின் கவர்னராகவும் இருந்தார்.

பர்மிகிட் இனம் கிரேக்க அறிவில் அதிக ஆர்வம் கொண்டிருந்தது ஒருபக்கம் இருந்தாலும் நெஸ்தோரியர்கள் கிரேக்க ஞானத்தில் சிறந்து விளங்கினர். கலிஃபா மன்சூரின் இறுதி காலத்தில் ஜுந்திஷாப்பூரிலிருந்து ஜிர்ஜிஸ் பின் புக்தியிஷு என்ற நெஸ்தோரிய மருத்துவர் வரவழைக்கப்பட்டு பின் அரசு வைத்தியராக இருந்தார். இது அப்பாசியர்களிடம் கிரேக்க அறிவு புக ஒரு காரணமாக இருந்தது.

ஹாரூன் அல் ரஷீத் ( 786-809)

762ல் பாக்தாத் நிறுவப்பட்ட பிறகு 786ல் ஹாரூன் அல் ரஷீத் பதவி ஏற்றார். யஹ்யாவிடம் பயின்ற கல்வி பாரசீக முறையில் அமைந்திருந்ததால் அவர் பாரசீக சிந்தனை உடையவராக இருந்தார். பதவி ஏற்றபின் யஹ்யாவுக்கு பிரதமர் பொறுப்பையும் அனைத்து அதிகாரங்களையும் வழங்கினார். யஹ்யாவின் மகன்களில் ஒருவரான ஃபஜல் குரஸானிலும் பின்னர் எகிப்திலும் கவர்னராக நியமிக்கப்பட்டார். மற்றொரு மகன் ஜாஃபர் தந்தைக்குப் பின் அவரது பதவியை வகித்தார். அன்றைய காலகட்டத்தில் செல்வத்திலும், அதிகாரத்திலும் உச்சத்திலிருந்த யஹ்யா 806ல் சிறையில் மரணமடைந்தார் என்ற தகவல் மட்டுமே கிடைக்கிறது காரணத்திற்கான தெளிவு இல்லை.

ஹாரூன் அல் ரஷீதின் பங்கு
ஹாரூன் ரஷீத் சிறந்த ஆட்சியாளராக மட்டும் இருக்கவில்லை, அறிவியலிலும் இலக்கியத்திலும் பேரார்வம் கொண்டிருந்தார். சிறந்த அறிவாளிகளை ஊக்குவிக்கவும் செய்தார். அறிஞர்களை அனுப்பி ரோமப் பேரரசிலிருந்து கிரேக்க நூல்களை வாங்கிவரச் செய்து அவற்றை மொழிபெயர்க்கச் செய்தார். ஜுந்திஷாப்பூர் மருத்துவர்களுக்கு சிரியாக் மொழியில் வல்லுனர்களாக இருந்தமையால் மருத்துவ நூல்கள் ஆரம்பத்தில் சிரியாக்கில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. மார்க்கம், அறிவியல், கலாச்சாரம், கலை, இசை முதலான அறிவுகள் மலரத் தொடங்கின. சிந்துபாத், அலிபாபாவும் 40 திருடர்களும், அலாவுதீனும் அற்புதவிளக்கும் அடங்கிய ஆயிரத்தோர் இரவு  கதைகளும் இவர்காலத்தில் எழுதப்பட்டது.

                     
அறிவின் மலர்ச்சி  

அறிவின் பயணத்துக்கு நூலகம் தேவைப்பட்டது. அதன் காரணமாக  பைத் அல் ஹிக்மா என்ற பெயரில் நூலகம் ஹாரூன் ரஷீது காலத்தில் தொடங்கப்பட்டாலும் அவர் மகன் கலிஃபா மாமூன் (813-833) காலத்தில் முழு வேகத்தில் செயல்படத் தொடங்கியது. (பைத் அல் ஹிக்மா கலிஃபா மாஃமூனால் நிறுவப்பட்டதாக சிலரின் கூற்று) பாக்தாதில் நிறுவப்பட்ட பைத் அல் ஹிக்மா 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டுவரை பல அறிஞர்களை உருவாக்கியது, பல்வேறு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன, பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள், புதிய கொள்கைகள் வெளிவரத்தொடங்கின.

அரிஸ்டாட்டிலிய தத்துவம் சிரியாக்கில் மொழியாக்கப்பட்டிருந்தது. ஹாரூன் அல் ரஷீதின் மரணத்திற்கு சில காலத்துக்குப் பின்னரே அறிஞர்களின் கடும் முயற்சியால் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. கணிதமும், வானவியலும் கிரேக்க மொழியிலிருந்து நேரடியாக அரபிக்கு கொண்டுவரப்பட்டதாக அறியமுடிகிறது. சில காலத்துக்கு முன்பே 'சிந்துஹிந்த்' என்ற இந்திய ஆய்விலிருந்து வானவியலுடன் சேர்ந்த கணிதமும் அரபிக்கு வந்திருந்தது. ஒருவேலை இது பார்ஸியிலிருந்துகூட வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை இப்றாஹிம் அல் ஃபஜரி மற்றும் யாக்கூப் பின் தாரிக்  என்ற இரு அறிஞர்களால் அரபிக்கு கொண்டுவரப்பட்டது. இப்றாஹிம் அல் ஃபஜரி வான்வெளிஇயல், நட்சத்திரம், சோதிடம் ஆகியவைப் பற்றிய ஆய்வுக்  கவிதைகளும் அதன் பயனால் கலிஃபா மன்சூரின் நட்பும் குறிப்பிடத்தக்கது என்கிறார் அவரது நண்பர் மசூதி. Astrolabe உருவாக்கிய  முதல் இஸ்லாமியர் என்று மேலும் குறிப்பிடுகிறார். அவரது மகன் முஹம்மது இப்னு இப்றாஹிம் அல் ஃபஜரி, தானும் மொழிபெயர்ப்பு செய்ததுடன் தந்தைக்கும் உதவியாக இருந்திருக்கிறார். ஆனால் அதன் விவரம் ஒன்றும் கிடைக்கவில்லை

யாக்கூப் பின் தாரிக் தலைச்சிறந்த கணிதவியலார். ஆர்கிமிடிஸ், வட்டத்தை 96 அலகுகளாகப் பிரித்திருந்ததைப் பின்பற்றி கணித அட்டவணையும் sphere, arc பற்றி ஆய்வை வெளியிட்டார். சிந்த்ஹிந்த், கலிஃபா மன்சூர் காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது  ஐயப்பாடுள்ள செய்தி, ஆனால் ஐம்பதாண்டுகளுக்குப் பின் அதனை ஆதாரமாக வைத்து கணித அட்டவணையை உருவாக்கிய  அல் குவாரிஜிமி நன்றாக புரிந்துவைத்திருந்தார் என்ற செய்தியும் கிடைக்கிறது. என்றாலும் கலிஃபா மஃமூன் காலத்தில் அறிஞர்கள் குழு மொழிபெயர்ப்பில் ஈடுபட்டனர் என்பது மறுக்கமுடியாத செய்தி.

அறிவின் வளர்ச்சியில் பைத் அல் ஹிக்மா வின் பங்கு

கலிஃபா ஹாரூன் அல் ரஷீதினால் தொடங்கப்பட்டாலும் அவருக்குப் பின் பட்டத்துக்கு வந்த கலிஃபா மாஃமூன் பின் ரஷீது காலத்தில் பொலிவுப்பெற்றது. 9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை அதன் பங்களிப்பு மகத்தானது. இஸ்லாமிய அறிஞர்களுடன் பாரசீகர்கள், கிறுஸ்துவர்கள், நெஸ்தோரியர்கள் என பல்வேறு தரப்பு அறிஞர்கள் பணியாற்றினர். அறிவியல் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், வரலாற்றாசிரியர், வேத விற்பன்னர், எழுத்தர்(scribes), நகல் எடுப்பவர் என பல அறிஞர்கள் பணிபுரிந்தனர். கூடவே பல்வேறு பாடங்கள், கையெழுத்துப் பிரதிகள் பற்றிய கலந்தாய்வுகளும் நடந்தேறின.

இது ஆய்வு சாலையாக மட்டுமில்லாமல், கல்விக்கூடமாகவும், சிறந்த நூலகமாகவும் விளங்கியது. கலிஃபா மாமூன் காலத்தில் ஈடற்ற கல்வி மையமாக விளங்கியது. கணிதம், வான்இயல், மருத்துவம், வேதியல், ரசவாதம்(alchemy), விலங்கியல், புவிஇயல், வரைபடஇயல் (cartography), இந்திய ஓவியக்கலை, இன்னும் பல்வேறு அறிவியல் துறைகள் ஆய்வு செய்யப்பட்டன.     

பைத் அல் ஹிக்மாவுக்கு தினமும் வருவதும் அங்குள்ள அறிஞர்கள் குழுவுடன் கலந்துரையாடுவது அவர்களின் பணி எவ்வகையில் நடக்கிறது என்பதை கேட்டறிவதும் கலிஃபா மஃமூனின் தினசரி பணியாக இருந்தது. அறிவின் வளர்ச்சிக்கு தன்னையே தியாகம் செய்தார் என்றுகூட சொல்லலாம். சிசிலியில் பெரிய நூலகம் இருப்பதை கேள்வியுற்ற கலிஃபா, சிசிலி மன்னருக்கு ஓலை அனுப்பி நூல்களின் விபரம் அறிந்தார். பைசாந்திய பேரரசருக்கு தகவல் அனுப்பி அங்கிருக்கும் நூல்களில் சிலவற்றை மொழிபெயர்ப்பதற்காக அறிஞர்கள் சிலரை அனுப்ப அனுமதி கோறியிருந்தார். சாதகமான பதில் கிடைத்ததும் இங்கிருந்து ஹஜ்ஜாஜ் இப்னு மத்தார், இப்னு அல் பத்ரீக், சஹல் பின் ஹாரூன், யஹுன்னா பின் மஸாவிஹ், ஹுனைன் பின் இஸ்ஹாக் ஆகிய அறிஞர்கள் குழுவை அனுப்பி அங்கிருந்த கிரேக்க நூல்களை மொழிபெயர்த்து கொண்டுவரச் செய்தார். கொராஸானிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட  ஒட்டகங்களில் நூல்களை தருவித்தார்.

கலிஃபா மாஃமூன் அரபியிலும் பார்சியிலும் (தாயார் பாரசீகர், குரஸானை சேர்ந்தவர்) புலமைப் பெற்றிருந்ததால் அறிஞர்கள் மத்தியில் பல்வேறு பிரிவுகளில் விவாதங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தினார். முந்தைய கலிஃபாக்கள் சேகரித்திருந்த நூல்களை அவரவர்கள் பெயரில் தனித்தனி நூலகமாகப் பிரித்துவைத்திருந்தார்.

பாரசீகப் புலவரும் சோதிட நிபுணருமான சஹல் பின் ஹாரூன் என்பவர் பைத் அல் ஹிக்மாவின் தலமை நூலகத்தராக இருந்தார். ஹுனைன் பின் இஸ்ஹாக் மொழி பெயர்ப்பு (திவான் அல் தர்ஜுமா) பிரிவின் தலைவராக இருந்தார். அல் குவாரிஜ்மி, ஜரிர் பின் அல் தாப்ரி, மஸூதி, அபுமூஸா சகோதர்கள், தாபித் பின் குர்றா என பல்வேறு  துறை சார்ந்த அறிஞர்கள் குழு அங்கு பணியாற்றியது. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் உலகின் மிகப் பெரிய புத்தகக் களஞ்சியமாக பைத் அல் ஹிக்மா விளங்கியது. தவிர கிரேக்க ரோமானிய அறிஞர்களின் நூல்கள் நேரடியாக அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஏற்கனவே சிரியாக், ஹிப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட  நூல்களும் அரபிக்கு கொண்டுவரப்பட்டன. இந்திய தத்துவங்களும் கணிதமும் சமஸ்கிருதத்திலிருந்து அரபிக்கு வந்தன. கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் அங்கு தங்கி கற்கவும், ஆய்வு செய்யவும், நூல்களை நகல் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர். 

Equlid ன் எலிமெண்ட்டும், தாலமியின் அல்மாகெஸ்ட்டும் (Megále Sýntaxis) நேரடியாக அரபிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. கி பி. 803ல் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் பின் மத்தார்   அரபியில் மொழிபெயர்த்தார். இன்றைய உஸ்பெகிஸ்தானில் பிறந்து இளம் வயதிலேயே பாக்தாதுக்குப் புலம் பெயர்ந்த அல் குவாரிஜ்மி வானவியலிலும், புவிஇயலிலும் சிறந்து விளங்கினாலும் கணிதத் துறையில் ஆற்றிய பங்கு மிக மகத்தானது. பல பிரிவுகள் இவரது அடிப்படைக் கொள்கை (basic concept) மற்ற கணிதவியல் நிபுணர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. கணிதத்தைப் பொறுத்தவரை சில இடங்களில் யூக்கலிட்/ தாலமியின் கொள்கை ஏற்புடையதாக இல்லாததால் இந்திய கணித முறையை இவர் பின்பற்றினார். ஆரியபட்டாவினால் கண்டுபிடிக்கப்பட்ட "0" பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். ((‘The number used throughout the world today as called “Arabic” because they were taken by the Arabs from ancient Indian Sanskrit developed into system and then passed on to the rest of the world.’)) அல்ஜிப்ராவும், அலாகிரிதமும் இவர் பெயரை தன்னுள் அடக்கி இன்றும் பறை சாற்றிக்கொண்டிருக்கின்றன. கணிதத்துறைக்கு அளித்த  ‘அல் கித்தாப் அல் முக்தசர் ஃபி ஹிசாப் அல் ஜபர் வல் முக்காப்லா’ (The Compendius Book on Calculation and Balancing);  கித்தாப் அல் ஜமா வல் தஃப்ரீக் பி ஹிஸாப் அல் ஹிந்த் (“The Book of Addition and Subtraction According to the Hindu Calculation”); zij al-Sindhind (ﺰﻳﺝ “astronomical tables of Sind and Hind”) ஆகியவை நூல்கள் பிரசித்தி வாய்ந்தவை.  பனு மூஸா சகோதரர்களுடன் சேர்ந்து பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பனு மூஸா சகோதரர்கள் அடங்கிய மூத்த கணித அறிஞர்கள் குழுவின் கடும் முயற்சிகளின் மூலம் கிடைத்த பலன் இஸ்லாமிய நாகரிகத்தின் எடுத்துக்காட்டாக இருந்தது. அவர்களின் புகழ் வாய்ந்த ஆய்வான 'கித்தாப் மஃரிஃபா மஸாஹத் அல் அஷ்கால் அல் பஸிதா வல் ஃகுரியா' (The Book of Measurement of Plane and Spherical Figures) என்ற நூல் வருங்கால கணிதத்துறைக்கு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. கலிஃபா மாஃமூனின் வேண்டுகோளுக்கிணங்க மெஸபடோமியாவின் பாலைப் பகுதியை ஆய்வு செய்வதற்காக நில நேர்கோட்டின் அலகை (degree of earth latitude) கண்டுபிடித்ததும், பகுதாதில் காணப்படும் சூரிய, சந்திர நிலைகளை ஆய்வு செய்து ஒரு வருடத்துக்கு 365 நாள் 6 மணி நேரம் என்பதை கண்டறிந்து சாற்றிய பெருமை பனு மூஸா சகோதரர்களை சாரும்.

அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் தாபித் பின் குர்றா ஹெர்ரானில் வாழ்ந்த சாபியின் பிரிவைச் சேர்ந்த இவ்வறிஞரை பைத் அல் ஹிக்மா மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பனு மூஸா சகோதரர்களின் ஒருவரான முஹம்மது பின் மூஸாவை சாரும். கிரேக்க, சிரியாக், அரபி, பார்ஸி மொழிகளில் தேர்ச்சிப் பெற்றிருந்த இவர் ஹுனைன் பின் இஸ்ஹாக்குடன் சேர்ந்து பல நூல்களை அரபிக்கு கொண்டுவந்தார். கேலனுடைய 22 நூல்களை சிரியாக்கில் மொழியிலும் 14 ஆய்வுகளை அரபியிலும் மொழிபெயர்த்தார். சுமார் நூற்றுக்கு மேலான நூல்கள் எழுதியுள்ளதாக இப்னு அல் நதீம் கூறுகிறார். கணிதத்துறையில் இவரது பங்கு மிக குறிப்பிடத்தக்கது. பிதகோரஸ், யுகலிட்ஸுக்குப் பிறகு கணிதவியலின் கண்டுபிடிப்புகள் இவர் வெகுவாக ஆய்வு செய்தார்நேர்ம மெய் எண் (positive real number), ஒருங்கிணைந்த நுண்கணிதம்(integral calculus) கோள கோணவியல் கோட்பாடு (theorem in spherical trigonometry), பகுமுறை வரைகணிதம்(analytic geometry), non-Ecuclidean geometry என கணிதத்துறையிலும், வானவியலில் தாலமியின் முறையை சீரமைவு செய்ததோடு இயந்திரவியலின் நிலைப்பண்பை(static) உருவாக்கினார். ஒரு வருடத்தின் சூரிய நாள் 365 நாள் 6 மணித்துளி என்பதை பனுமூஸா சகோதரர்கள் வெளிப்படுத்தினார்கள் என்றால் அதே காலகட்டத்தில் வாழ்ந்த தாபித் பின் குர்றா 365 நாள், 6 மணி, 12 வினாடி (வித்தியாசம் 2வினாடி) என்று துல்லியமாக வெளிப்படுத்தினார்.

பைத் அல் ஹிக்மாவின் வளர்ச்சியோடு தன் பணியை கலிஃபா மாஃமூன் நிறுத்திக் கொள்ளவில்லை. பாக்தாதில் ஷம்மாசியா என்ற பகுதியில் வான் ஆய்வகம் ஒன்றை நிறுவினார். கலிஃபாவின் பிரத்தியேக வான்வியல் அறிஞரான சானாத் பின் அலி யஹூதி என்பவரை அதன் தலமைப் பொறுப்பாளராக நியமணம் செய்து யஹ்யா பின் அபி மன்சூர் மற்றும் காலித் பின் அப்தில் மலக் என்பார்களை உதவியாளராக நியமித்தார். விளைவாக சானாதின் 'ஜீஜ் - Zeej' (Table of calculated positions of the celestial object at regular intervals throughout a period) என்ற நூல் உலகுக்கு கிடைக்கப்பெற்றது.

கலிஃபா மாஃமூனுக்குப் பிறகு வந்த அவரது சகோதரர் அல் முஃதஸிம் (r.833-842) அவரது மகன் அல்வத்திக் (r.842-847) காலத்தில் பைத் அல் ஹிக்மா பொலிவுபெற்றது. பிறகு வந்த கலிஃபா அல் முத்தவக்கில் (r.847-861) அறிவியல், தத்துவங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை. கிரேக்க தத்துவம் இஸ்லாத்திற்கு புறம்பானது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். மாறாக குர்ஆன், ஹதீஸுக்கு விளக்கம் அளிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார்.c

கலிஃபா மஃமூன் கொரஸானில் பெரிய கல்லூரியை நிறுவி பல பாகங்களிலிருந்தும் சிறந்த கல்வியாளர்களை பணியில் அமர்த்தினார். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த சகோதரர் மகன் கலிஃபா முத்தவக்கில் தொடர்ந்து அப்பணியை செய்துவந்தார். கிபி. 995ல் எகிப்தில் ஆட்சிபுரிந்த ஃபாத்திமியக் கலிஃபா அல் ஹக்கிம் கெய்ரோவில் பைத் அல் ஹிக்மாவைப் போல் மஜ்லிஸ் அல் ஹிக்மா என்ற பெயரில் ஓர் அறிவாலயத்தைத் தொடங்கினார். அங்கு மருத்துவக் கல்லூரி மற்றும் பல பிரிவுகளில் கல்லூரி, வான் ஆய்வகம், நூலகம் இவைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மற்றொரு கலிஃபாவான அஜீஜ் பில்லாஹ் இன்னும் பல கல்விச்சாலைகளை நிறுவி அதன் பணியாளர்களுக்கு மட்டுமல்ல அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கும் ஊதியம் கொடுத்தார் என்கிறார் மவ்லானா ஷிப்லி நுஃமானி.


பாரசீகத்தை ஆண்டுக்கொண்டிருந்த துருக்கி சல்ஜிக் வம்ச சுல்தானான மாலிக் ஷா சல்ஜிக்கிடம் பிரதமராக இருந்த நிஜாமுல் முல்க் தூஸி (இயற்பெயர் அபு அலி ஹசன் இப்னு அலி இப்னு இஸ்ஹாக் அல் தூஸி) கிபி. 1066ல் பாக்தாதில் உயர்கல்விக்காக நிஜாமியா மதரஸாவை (பல்கலைக்கழகம்) நிறுவினார். அங்கு திறமைவாய்ந்த ஆசிரியர் குழுக்களும், பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு காண்பிக்கப்படாமல் எல்லா தரப்பு மாணவர்களுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட்டது. ஏழை மாணவர்களின் செலவுகளை மதரஸாவே ஏற்றுக்கொண்டது. அபு இஸ்ஹாக் சிராஜி முதல் முதல்வராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1091 முதல் 95வரை இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் முதல்வராக இருந்தார். இமாம் அவர்கள் மதரஸாவை விட்டு வெளிவரும்போது 3000  மாணவர்கள் பயின்று கொண்டிருந்தனர். இமாம் அவர்களுக்குப் பிறகு முஹம்மது அல் சஹரஸ்தானியும் அவருக்குப் பின் சலாஹுதீன் அய்யூபியின்  வரலாற்றாசிரியரான பஹாவுத்தீனும் முதல்வர்களாக இருந்தனர். பாரசீகக் கவிஞர் சஅதி அவர்கள் இக்கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சார்புள்ள மற்ற கல்வி நிலையங்கள் நிஷாப்பூர், அமுல், மோசூல், ஹெராத், திமிஷ்க், பஸராவில் நிறுவப்பட்டது. அவை தலைசிறந்த கல்வியாளர்களை உருவாக்கின.  பதினொன்றாம் நூற்றாண்டில் இன்றைய ஈரான் முதல் சிரியா வரை கல்வி பரவி நின்றது. இதன் அனைத்து பெருமையும் நிஜாமுல் முல்க்கையே சாரும். மவ்லானா ஷிப்லி நுஃமனி கூற்றுபடி இஸ்லாமிய உலகில் இதுவே உயர்கல்விக்கான முதல் பல்கலைக்கழகமாகும். அதன் பின் அப்பாஸிய கலிஃபா முஸ்தன்சிர் தன் பெயரில் பாக்தாதின் டைக்ரிஸ் நதியின் இடது கரையில் முஸ்தன்சிரியாபல்கலைக்கழகத்தை நிறுவினார். பாக்தாதில் கல்வியின் வளர்ச்சி பதிமூன்றாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை நீடித்திருந்தது.

(இன்னும் வரும்......)

***


நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

4 comments:

  1. செறிவான தகவல்கள். தொடருங்கள்.தொடர்கின்றோம்.

    ReplyDelete
  2. நாநா இந்தப் பகுதியை
    ஃபேஸ்புக்கில் பயன் படுத்திக் கொள்கிறேன்.
    நன்றி:
    ஹமீது ஜாஃபர்
    ஆபிதீன் பக்கங்கள் & ஆபிதீன்

    ReplyDelete
  3. ஒரு வருடத்துக்கு 965 நாள் 6 மணி நேரம் என்பதை கண்டறிந்து சாற்றிய பெருமை பனு மூஸா சகோதரர்களை சாரும்.// ஏதேனும் அச்சுப்பிழையா ?

    ReplyDelete
    Replies
    1. அச்சுப்பிழையல்ல, ஹமீதுஜாஃபர்நானாவின் பிழையும் அல்ல; எடிட் செய்தபோது நான்தான் தவறிழைத்து விட்டேன். மன்னியுங்கள். இப்போது திருத்திவிட்டேன். நன்றி.

      Delete