Monday, September 17, 2012

மடலில் பூத்த மனம் - இப்னு ஹம்துன்

'என்'ணங்கள் - 3 

காலத்தின் கரங்களில்..... என்று ஒரு கவிதை எழுதியிருந்தேன். ஒரு வருடமாகப் போகிறது. முரட்டுக் கோபம் கொண்ட, நேரடியாகக் கேட்டுத் தெளிய விரும்பாத உறவினர் ஒருவருக்கான சங்கேதம் அது. அதற்கு வந்த மறுமொழிகளும், விமர்சனங்களும் மகிழ்வளித்தபடியிருக்க.... ஒரேஒரு விமர்சனம் தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில் இஸ்லாமும் முஸ்லிம்களும் கவிதைக்கு எதிரானவர்கள் என்கிற அபத்தப் புரிதலை அந்த விமர்சனம் எழுப்பியது. எழுதியவர் சற்றே அறிமுகமான ஒரு சகோதரர், மாநிலந் தழுவிய அமைப்பொன்றில் மாவட்டப் பொறுப்பில் இருந்தவர் என்பதால் அவருக்குப் புரிந்துணர்வுடன் விளக்க நினைத்தேன். ஒரு மடல் வடித்தேன்.

அம்மடல்.........
    ...............கவிஞர்கள் வழிகேடர்கள் என்ற திருமறை கூற்று இன்றும் மெய் படுத்திக்கொண்டிருக்கின்றது.
    இறை மறை கவியை தவிர்த்து மற்ற ஏதும் மனசு விட்டு படிச்சா புரியும் என்பதற்கோ மனசு தெளியும் என்பதற்கோ இடமில்லை.
    இதை யார் மனதும் புண்படுத்துவதற்கு எழுதவில்லை. உண்மை நிலை இதுதான்.

அன்பின் .........................,

மேற்கண்ட கருத்து உங்களிடமிருந்து வந்ததாக எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தனிநபர் தாக்குதலில்லாத, தரக்குறைவற்ற விமர்சனங்களைத் தவிர, பொதுவாக, கருத்துரிமையை மறிக்கவோ, பறிக்கவோ செய்வதில்லை என்பது எந்தன் கொள்கை. ஆனால் உங்களுடைய மேற்கண்ட கருத்தில் பொத்தாம் பொதுவாக, ஒட்டுமொத்தக் கவிஞர்களையும் சாடியுள்ளதால், கவிஞர்களில் எத்தனையோ உத்தமமான நபித்தோழர்கள், இறையடியார்களும் உள்ளனர் என்பதால், உங்களின் விளக்கத்தினைப் பெறும் நோக்கத்தில் உங்களின் இக்கருத்தை வெளியிடுவதைத் தாமதம் செய்யக் கேட்டிருக்கிறேன். உங்களின் விளக்கத்தைப் பொறுத்து அது வெளியிடப்படலாம்.

குர்ஆன், ஹதீஸை கற்றறிந்தவராக, பொதுஅறிவு மிக்கவராகக் கருதப்படும் உங்களிடமிருந்து இப்படியொரு கருத்தா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

நீங்கள் குறிப்பிடும் அல்குர்ஆனின் வசனத்தில், 'கவிஞர்கள்' என்ற தலைப்பில் அமைந்த அல்குர் ஆனின் 26ஆவது அத்தியாயம், இலக்கியம் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது:

"ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை (நபியே) உமக்கு அறிவிக்கட்டுமா?" "இட்டுக் கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும்" "ஒட்டுக் கேட்கும் அவர்கள் பெரும்பாலும் பொய்யர்களே!" "மேலும் கவிஞர்களை வழிகேடர்தாம் பின்பற்றுவர்." "நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலாகத் தட்டழிந்து திரிவதை நீர் பார்க்கவில்லயா?" "நிச்சயமாக அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுகின்றனர்" "(அவர்களுள்) நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, அநீதி இழைக்கப்பட்ட பின்னர் பழி தீர்த்துக் கொண்டோரைத் தவிர (மற்றோர் குற்றவாளிகளே!) தாங்கள் செல்லுமிடம் எதுவென அநீதி இழைத்தவர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். -அல்குர்ஆன் 026:221-227.

இஸ்லாம் இலக்கியங்களை ஐயந்திரிபற ஏற்றுக் கொள்கிறது; வரவேற்கிறது. உண்மையை, யதார்த்தத்தை அழகுறப்பாடி, வாழ்க்கை இலட்சியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. மாறாக, உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்மை அல்லது அளவுக்கு மீறிய கற்பனை என்னும் சவுரிமுடியை வைத்து, பொய்க் கற்பனைச் செய்திகளையே அதிகமாக நீட்டிப்பின்னிடும் நச்சிலக்கியங்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. இப்படிப்பட்ட நச்சுக் கவிஞர்களையே - பொய்யர்களையே - அல்குர்ஆன், 'ஷைத்தான்கள்' என்றே அடையாளம் காட்டுகின்றதே தவிர, உண்மைக் கவிஞர்களை அது இழித்துரைக்கவில்லை.

கவிதைக்குப் பொய் அழகு என்று வைரமுத்துத்தனமாகச் சொல்லப்பட்ட வறட்சியான தத்துவத்தை அறிந்த அளவுக்குக் கூட நம்மில் பலரும்,
''நிச்சயமாக கவிதையிலும் ஹிக்மத் - ஞானம் உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6145) என்ற ஹதீஸை, நபிமொழியை அறிந்திருக்கவில்லையே என்பது தான்  எனக்கு வியப்பு.

கவிதைக்குப் பொய் அழகாய் இருக்கலாம். அது கலையும் ஒப்பனை. ஆனால் உண்மை தான் அதன் ஆன்மாவாயிருக்கவேண்டும். ஆகவே தான், ஒரு முஸ்லிம் கவிஞன் கூறினான்: கவிதையில் உண்மையைத்தான் சொல்ல வேண்டும். பொய்போல சொல்லவேண்டும். என்னுடைய கவிதைகளில் நான் இந்த மேற்கோளையே கவனம் கொள்கிறேன். 'கண்'டதையும் எழுதும் கவிஞர்களிடமிருந்து வாழ்வியல் உண்மைகளை எழுதும் நாங்கள் நிச்சயம்  வேறுபட்டவர்கள்.

அவசர கோலத்தில், அறியாமையால் முற்றிலுமாகக் கவிதையை வெறுப்போர், தமது கருத்தாடலுக்குச் சான்றாக, திருக்குர்ஆனின் 26:224 வசனத்தை மேற்கோள்  காட்டுகின்றனர்.  ஆனால், அதனைத் தொடர்ந்துள்ள மூன்று வசனங்களைப் பற்றி சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்.  அவ்வசனத்திற்கும் அதனையடுத்துள்ள மூன்று வசனங்களுக்கும் விளக்கமளிக்கும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தமது ‘ஃபத்ஹுல் பாரீ’ எனும் நூலில் குறிப்பிடுவதாவது:

“இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கவிஞர்கள், இணை வைப்போராக இருந்துகொண்டு, நல்லவர்களையும் அறநெறிகளையும் தாக்கிக் கவிதை பாடி வந்தவர்களாவர். அப்துல்லாஹ் இப்னு சப்அரீ, ஹுபைரா பின் அபீ வஹப், முஸாபிஉ பின் அப்தி மனாஃப், அம்ர் பின் அப்தில்லாஹ், உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.  அதே நேரத்தில், உண்மைக்காகக் குரல் கொடுத்து, நல்லதே பேசிவந்த கவிஞர்களும் இருந்துள்ளனர்.  இறைவனையும் இறைத்தூதரையும் புகழ்ந்து பாடி, இறை மார்க்கத்துக்கு வலு சேர்த்து வந்தனர்.  அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, ஹஸ்ஸான் இப்னு தாபித், கஅப் இப்னு மாலிக், கஅப் இப்னு சுஹைர் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.  ஆக, பொய்யும் போலிப் புகழ்ச்சியும் வசையும் இல்லாத, நல்ல கருத்துகளைக் கூறும் கவிதைகள் அனுமதிக்கப்பட்டவை ஆகும்.  இத்தகைய கவிதைகளை நபி (ஸல்) அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.” (சஹீஹுல் புகாரீ, பாகம் ஆறு, பக்கம் 646)

ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) என்கிற கவிஞருக்காக பள்ளியிலேயே மேடை அமைத்துக் கொடுத்து கவிபாடச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.

மேலும், உமையத் இபுனு அபிஸல்த்து என்கிற முஸ்லிமல்லாதவராக இருந்தவரின்  கவிதையைப் பற்றி அதன் உண்மைத் தன்மையைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் சீரா (வரலாறு) நமக்குச் சான்று பகர்ந்துகொண்டிருக்கிறது. அதுபோலவே, குர்ஆன் சுன்னாவுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருக்கிற, வெறுமே பொய்யும் புனைவுமான  கவிதைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் கவிஞனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட சீழ் சலத்தால் நிறைந்திருப்பது எவ்வளவோ மேல் என்ற கருத்தைச் சொல்லிக் கண்டிக்கிறது இஸ்லாம். அவ்வாறான கவிதைகளையும், கவிஞர்களையும் விட்டு நாமும் விலகிக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும், உங்களுக்கும், வேறெந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.

என் மதிப்புக்குரிய மார்க்கச் சகோதரர்களில் ஒருவராக இருக்கும் நீங்கள், நான் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டித் திருத்த முனைவதை வரவேற்று, அதனை  ஏற்றுத் திருத்திக்கொள்பவனாகவே என்னைக் காண்பீர்கள் இன்ஷா அல்லாஹ். ஆனால், அவை முழுமையாக குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பது ஒன்று தான் அதற்கு அடிப்படை நிபந்தனை.

நேர்மறையான, சரியான  விமர்சனங்களை நட்சத்திர திசைக் காட்டிகளாகக் கருதி வழி அறியவும், சரி செய்துகொள்ளவும் விரும்புகிற அதேவேளை, எதிர்மறை உணர்ச்சிகளால் உந்தப்பட்டு செய்யப்படுகிற விமர்சனங்களை பறவையின் சிறகசைப்பில் பறக்கும் சருகுகளாகக் கருதிப் புறக்கணித்துப் போவதென் பழக்கம். இருந்தும் நீங்கள் என் மதிப்பிற்குரியவர் என்பதால் இந்த விளக்கம் - அடையாத காதல் தோல்விக்கு, செயற்கையானத் துக்கக் கவிதை எழுதும் சாராசரி கவிஞனாக, பொதுபுத்தி வாயிலாக, என்னை நீங்கள் கருதியிருந்தால்  தயவு செய்து அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற விண்ணப்பத்தோடு!

இந்த விளக்கத்திற்குப் பின்னும் உங்கள் கருத்தே சரி என்று நீங்கள் பிடி'வாதம்' பிடித்தால், என் எழுத்துகளில் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இன்ஷா அல்லாஹ், நிச்சயம் திருத்திக்கொள்வேன், அச்சுட்டல்கள் பொருத்தமாக இருக்குமென்றால். அல்லது யாரையோ 'வாதத்தில்' வெல்லும் பொருட்டே உங்களால் இக்கருத்து சொல்லப்பட்டதாக இருந்தால், நல்லது, நான் இப்போது விடை பெற்றுக்கொள்கிறேன்.காலம் கனிந்து நிற்கும் 'அந்த நாளில்' இறைமன்றத்தில் இதற்கான விடையைப் பெற்றுக்கொள்கிறேன்.

பி.கு: குர்ஆன் ஹதீஸை உங்கள் கருத்துகளில் மேற்கோள் காட்ட நேரிடுகையில், அதை முழுமையாக எடுத்து வைக்கவும். பொருள் மாறுபாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு இவ்வேண்டுகோள்.
நன்றி. வஸ்ஸலாம்.
.
என்று எழுதியிருந்தேன்.

உடனடியாக வந்த மறுமொழியில்

தங்களின் விளக்கத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எனது வரிகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். துஆ செய்யுங்கள்.
என்று எழுதியிருந்தார். அல்ஹம்துலில்லாஹ்.

அண்மையில் கூட சில அவைகளில் 'இவர் கவிஞர்; கூட்டிக் குறைத்துச் சொல்வார்' என்று நேரடியாகவே விமர்சனம் செய்யப்பட்டேன். அவ்வப்போது அதற்குரிய விளக்கத்தை அளித்துவிட்டாலும், அந்த விமர்சகர்களுக்கும் விடையளிக்கும் விதமாக இப்பதிவு அமையட்டும்.

***

முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி சாம் பாசில் என்னும் இஸ்ரேலிய யூதனொருவன் 'The Innocence of Muslims' என்கிற பெயரில் திரைப்படம் என்ற போர்வையில் செய்துள்ள மிகக் கேவலமான அவதூறு கடும் வேதனையளிக்கிறது. பொதுவாக, முஸ்லிம்கள் பிறமத புனிதங்கள் மீது எவ்வித  அவதூறும் செய்வதில்லை. இருந்தும், இஸ்லாத்தின் மீதான யூதர்களின் காழ்ப்புணர்ச்சியும் அரசியல் ஆதாய நோக்கும் அருவருப்பாய் இருக்கிறது.  உணர்ச்சிப் பூர்வமாகப் பொங்கும் முஸ்லிம்களின் வன்முறையில் அப்பாவிகள் உயிரையும் உடமைகளையும் இழப்பது மேலும் சொல்லொணா வலியைத் தருகிறது. முஸ்லிம்களின் முரட்டுத்தனம் குறித்த பிம்பத்தையே இந்தப் படபாவிகள் வேண்டி நிற்பது என்பதை விளங்கவேண்டும்.

கொலைவாளேந்தி வந்த கடும் உமரையும் சமரின்றி சாய்த்த சத்திய இஸ்லாம் சாம் பாசில்களையும் தன்னுள் ஈர்க்கும் இன்ஷா அல்லாஹ்.

***
நன்றி : இப்னு ஹம்துன் (பஃக்ருத்தீன்) | fakhrudeen.h@gmail.com

1 comment:

  1. ஒரு வாரத்துக்குப் பிறகு இன்றுதான் இப்னு ஹம்துனின் கட்டுரை வடிவிலான மடலைப் படிக்க நேர்ந்தது. இவ்வளவு தாமதமாகப் படித்ததற்கு எனக்கு நானே வருத்தப்பட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பொதுவாக சொல்லப்படும் விளக்கங்களை தெரிந்துக்கொண்டு அது ஹராம் இது ஹராம் என்று வாதிடுகின்றனரே ஒழிய சற்றும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இது சமீபகாலமாக ஒரு அவமானமச் செயலாக இருந்து வருகிறது. இவர்களெல்லாம் அம்பாக இருக்கிறார்கள். எய்தவன் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான். தான் அம்பு என்று அவர்களுக்கே தெரியவில்லை. அத்தகையவர்களை மன்னிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

    கவிதை ஹராம், கவிஞன் ஹராம் என்றால் அல்லாஹ்வும் குர்ஆனும் ஹராம். இதைவிட சபுர் வேதம் பெரிய ஹராம். ஏனென்றால் சபுர் வேதம் முழுக்க முழுக்க கவிதை வடிவிலேயே அருளப்பட்டது. அதுமட்டுமல்ல உரைநடையை இராகம் சேர்த்துப் படிக்கமுடியாது; ஒன்றிரண்டு பக்கத்தைத் தவிர முழுமையாக மனனம் செய்ய முடியாது. கவிதையை மட்டும்தான் மனனம் செய்யமுடியும் இராகம் சேர்க்கவும் முடியும். எனவே அருள் மிகுந்த புனிதக் குர் ஆனை பல்வேறு இராகங்களில் ஓத முடிகிறது பல்லாயிரம் பேர்களால் மனனம் செய்ய முடிகிறது.

    இந்த அடிப்படையான உண்மையை உணரதவர்களை மன்னிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.

    ReplyDelete